Jan 16, 2007

குரு - மணிரத்னம் மாறவே மாட்டாரா? (16 Jan 2007)

ஆமாங்க, இது மணிரத்னத்தின் சமீபத்திய, அபிஷேக் பச்சன் நடித்துள்ள குரு படத்தின் விமர்சனமேதான்! (இப்படி ஒரு டிஸ்கி விட வேண்டிய கட்டாயம் எல்லாம் பினாத்தலுக்கு மட்டும்தான் வரும்!)

மணிரத்னத்தின் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றுப்படம், டெம்ப்ளேட்டை மாற்றாமல் எடுத்திருக்கிறார்.

முதல் ரீலில் சிறு பையனாக அறிமுகமாகும் நாயகன் பிழைப்புக்காக வெளியூர் (நாடு) செல்கிறார் (சக்திவேலு, ஆனந்தன் வரிசையில் குருகாந்த் தேசாய்)

இரண்டாம் ரீலில் அவர் போன ஊரில் ஒரு குத்துப்பாட்டு பாடுகிறார் (நிலா அது வானத்து மேலே / நான் சிரித்தால் தீபாவளி, ருக்குமணி-ருக்குமணி, அரபிக்கடலோரம்.. வரிசையில் மல்லிகா ஷெராவத் கலக்கியிருக்கும் மய்யா மய்யா)

மூன்றாம் ரீலில் எல்லா மணிரத்னம் படத்திலும் நாயகி அறிமுகமாகும் பாட்டுக்கள் ( ஓஹோ மேகம் வந்ததோ.. சின்னச்சின்ன ஆசை..) வரிசையில் இதிலும் ஐஸ்வர்யா ராய் அறிமுகமாகும் காட்சியில்.. மழை நீர்வீழ்ச்சி என ஜல்ப் பிடிக்கும் அளவிற்கு நனைகிறார்.

பிறகு குருகாந்த் தேசாய் வாழ்க்கைச் சம்பவம் என்ற பெயரில் சிலபல எதிரிகளைப் பந்தாடுகிறார், வெற்றிகள் அடைகிறார், நாய்க்கர் பாவா என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமாகிறார்.. மன்னிக்கவும் இதில் குருபாய் என்று அழைக்கிறார்கள்.

மனைவியுடன் ஒரு பாட்டு பாடுகிறார்,( நீ ஒரு காதல் சங்கீதம்.) குழந்தைகள் பிறந்ததும் இன்னொரு பாட்டு பாடுகிறார். ( குச்சி குச்சி ராக்கம்மா, அந்தி மழை மேகம் வரிசை)

இடைவேளை போடும் நேரத்தில் இவர் கெட்டவராக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் மனதில் விதைக்கப்படுகிறது.

நாயகன் செய்த குற்றங்களை தோலுரித்துக் காட்ட சூளுரைத்துக் கிளம்பும் நாசருக்கு மனைவி நாயகனின் மகள். இங்கே மேற்படி வேலையைச் செய்யவரும் மாதவனுக்கு காதலி மகள்போல பழகும் ஜல்குக்டி வித்யா பாலன்.

"நல்லவரா, கெட்டவரா.. தெரியலையேப்பா" குழந்தையுடன் பேசிய நாயகன், கோர்ட்டில் பேசும் குருபாய்!

என்ன, கடைசியில் சாவதில்லை -- அவ்வளவுதான்.

சீனுக்கு சீன் டெம்ப்ளேட்டில் அடைவதால் அடுத்த காட்சி என்ன என்பதை யோசிக்காமலே சொல்லும் அளவிற்கு திரைக்கதை.

அது மட்டுமல்ல, மணிரத்னத்தின் பிரபலமான ஜல்லியும் லோடு லோடாக உண்டு.

எம்ஜிஆர் கலைஞர் வாழ்க்கையோடு இணைந்த தமிழ்நாட்டு அரசியல் சூழலைத் தொட்டு மட்டுமே சென்று அவர்களுடைய மனைவிகள் (!), காதல் வாழ்க்கையை பெரிதாகக் காட்டிய இருவர்,

மதக்கலவரத்தின் பின்னணி, காரணங்கள், காரணர்கள் எதையும் பற்றி அதிகம் கவலைப்படாமல், காதல் கல்யாணம் குழந்தைகள் என்றே முக்கால் படத்தை ஓட்டிவிட்டு, கைகள் கோர்த்து கலவரத்தை முடித்த பம்பாய்,

ஈழப்பிரச்சினையை ஆயுத வியாபாரிகள் நலன் என்று சுருக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்...

பொதுவாக, அந்தப் பிரபலத்தைப்பற்றிய படம், இந்தப்பிரபலத்தைப்பற்றிய படம் என்று ஹைப்பைக் கிளறிவிட்டு, கான்ட்ரவர்சியலான எந்த விஷயத்தையும் மேம்போக்காகவே தொட்டுச் சென்று எல்லாருக்கும் நல்லவனாக எடுக்கும் படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

சரியா தவறா என்ற கேள்வியை விடுங்கள், அவரவர்க்கு அவரவர் நிலைப்பாடு. நுஸ்லி வாடியாவுடன் அம்பானியின் வியாபாரப்போட்டியை ஒரு ப்ளாங்க் செக்கில் சுருக்கிவிட்டு, ஏக் லோ ஏக் முப்த் என்று விஸ்தாரமாகப் பாடுவது, அம்பானியின் மகன்களால் சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட குனிவைக் காண்பிக்காமல் அதற்கு முன்னதாகவே முடித்துவிடுவது, லஞ்சம் கொடுத்து, ஏமாற்றி லைசன்ஸ் பெறுவது எல்லாவற்றையும் மேம்போக்காகவும், பாலியஸ்டர் தொழிற்சாலை 1-2-3 எனப் பெருகுவதை விஸ்தாரமாகவும் காட்டி "நல்லவனா-கெட்டவனா" கேள்விக்கு ஒருபுறமான சாட்சிகள் மட்டுமே கொடுப்பது.... மணிரத்னம் மாறவே இல்லை!

அதிலும் அந்த கிளைமாக்ஸ் கோர்ட் காட்சி.. நாலரை நிமிடத்தில் தன் நற்பண்புகளை கோர்ட்டுக்கு விவரித்து, நீதிபதிகள் அதற்கு மயங்கி வெறும் 63.5 லட்சம் அபராதத்துடன் விட்டுவிடுவது (வசனத்தில் 63.5 லட்சம் என்றும் சப்டைடிலில் 6350000 லட்சம் என்றும் வந்தது ஒரு கன்பூசன்:-) காதில் ரீலோ ரீல்.

படம் திராபை என்று சொல்ல வரவில்லை நான். அபிஷேக் பச்சனிடம் இவ்வளவு அபாரமான நடிப்பை எதிர்பார்க்கவில்லை. அப்பன் பேர் கெடுக்க வந்த பிள்ளை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒப்பனை, நடிப்பு, பாடி லேங்குவேஜ் எல்லாவற்றிலும் கொளுத்தியிருக்கிறார். கூடவே வரும் பாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், துருக்கி படாபாய் தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக வருவதில்லை- ஐஸ்வர்யா அழகிருக்கும் அளவிற்கு நடிக்க வரவில்லை. ரஜினி படத்துக்கே நடித்திருக்கலாம் - அங்கே ஹீரோயினுக்கு என்றும் வேலை இருந்ததில்லை.

மிதுன் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் "அச்சா ஹே.." என்று பெங்காலி உச்சரிப்போடு - அச்சா ஹே! மாதவன் நாலைந்து காட்சிக்காக! அவர் வருவதும் போவதும் எந்த பெரிய பாதிப்பையும் உண்டு பண்ணவில்லை. இதில் ஒரு முத்தக்காட்சி வேறு! திணிக்கப்பட்ட மாதிரி.

மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் ஆகியோரைப் பார்ப்பதற்கும், அபிஷேக் பச்சனின் நடிப்பை அனுபவிப்பதற்கும், நல்ல இசை, ஒளிப்பதிவை ரசிப்பதற்கும் போவேன் என்று தீர்மானித்தால் தாராளமாகப் போகலாம் - வேறு எதையும் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். குறிப்பாக "மணிரத்னம் படங்களிலேயே சிறந்த படம்" என்ற விமர்சனங்களையும், பாஸ்டன் பாலாவின் "படம் பார்த்ததும் புது CV தயாரிக்கும் ஆர்வம் வரும்" என்றெல்லாம் எதிர்பார்த்துவிடாதீர்கள்

39 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சுரேஷ், ஒவ்வொரு படத்தையும் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அணுகிறோம். நாம் ஒரு அணுகும் அந்த முறைக்கு நாம் வருவதற்கு பல காரணங்கள் இருக்க முடியும். சினிமா என்றாலே என்னவென்று தெரியாத ஒரு மனிதன் அந்தத் திரைப்படத்தை அணுகுவதற்கும். ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

என்னைப் பொறுத்தவரை, இதற்கெல்லாம் ஆதவன் 'என் பெயர் ராமசேஷனில்' சொல்லியிருப்பார். ராமசேஷனாகவும், அவர் காதலிக்கும் அந்த முதல், இரண்டாவது பெண்களை முன்னிருத்தியும். கைவசம் புத்தகம் இல்லை. வீட்டிற்கு சென்று போடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை ஒரு சினிமா விமர்சனம் என்னளவில் ஒரு தனிப்பட்ட ஒருவரின் மனதைப் பொறுத்தது. நாம் வளர்ந்த சூழ்நிலை, நம்முடைய படிப்பின் அளவு, ஜெனரல் நாலேட்ஜ், என நிறைய விஷயங்களால் நாம் சினிமாவை அணுகும் முறை மாறுபடுவதாகத் தெரிகிறது.

நான் இன்னும் படம் பார்க்கவில்லை, பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் அப்படியே புத்தகக் கண்காட்சிக்கும். இந்த வார விடுமுறையில் தான் பார்க்கவேண்டும். ப்ளெட் டைமண்ட் தான் முதலில் பார்ப்பேன் என்று நினைக்கிறேன். ஒரு விதத்தில் நல்ல விமர்சனம்.

Anonymous said...

நல்லாயிருக்கே கத..

ரத்ன மணிய விட்டா வேற யாராலயும் நிஜத்த கத கட்டி கத விட முடியாது.


இது என் டிஸ்கி

ஜோ/Joe said...

//பாஸ்டன் பாலாவின் "படம் பார்த்ததும் புது CV தயாரிக்கும் ஆர்வம் வரும்" என்றெல்லாம் எதிர்பார்த்துவிடாதீர்கள்//

நீங்க வேற .பாஸ்டன் பாலா போகிற போக்கில் நாயகன் கமலை விட குரு அபிஷேக் சிறப்பாக நடித்திருப்பதாக சொறிந்து விட்டு வேறு போயிருக்கிறார்.

Anonymous said...

இப்பொழுதுதான் வினையூக்கி பதிவில் இந்த படத்தின் மணிரத்னத்தின் cliche -க்கள் நிறைய என்று சொல்லிவிட்டு வந்தால் இங்கே நீங்களும் அதையே சொல்கிறீர்கள். இன்னும் விரிவாக :-)

//அதிலும் அந்த கிளைமாக்ஸ் கோர்ட் காட்சி//
அது கோர்ட் அல்ல... enquiry commission போல்தான் இருந்தது. அதைப் பார்க்கும் பொழுது எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வந்தது...

1) Aviator படத்தில் Hughes address செய்யும் என்கொயரி கமிஷன்.
2) சமீபத்தில் 2004-ல் ரிலையன்ஸ் WML சேவை என்று லைசன்ஸ் வாங்கிவிட்டு call forwarding மூலமாக roaming சேவை வழங்கியதும், அதற்கு இந்திய அரசாங்கம் ரூ 500 கோடி அபராதம் போட்டதும் நினைவிற்கு வந்தது. அதற்கு பிறகுதான் அருன் ஷோரி உபத்தில் unified license என்ற முறை அமலுக்கு வந்தது.

புதிய கதைக் களன், கண்ணுக்கு இனிய காட்சியமைப்புக்கள், நல்ல இசை, license ராஜ்யத்தை பற்றி அறிந்து கொள்ளுதல் என்று இன்னும் நிறைய நல்ல விஷயங்களும் இருக்கின்றன. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான்.

படத்தை தவிர நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களில் சில opinion differences -

//கான்ட்ரவர்சியலான எந்த விஷயத்தையும் மேம்போக்காகவே தொட்டுச் சென்று //

அவர் ஏன் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அவர் எடுப்பது வியாபார சினிமா. பம்பாயோ, கன்னத்தில் முத்தமிட்டாலோ ஒரு பிரச்சினையின் பின்ணனியில் சொல்லப்பட்ட புதிய கதைகள். அவ்வளவே.

//ஈழப்பிரச்சினையை ஆயுத வியாபாரிகள் நலன் என்று சுருக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்...//

அந்த படத்தில் சொல்லப்பட்ட ஒரே ஒரு வசனம். அதுவும் சந்தேகமாக... அதை வைத்து நீங்கள்தான் படத்தை மொத்தமாக சுருக்குகிறீகளோ என்று தோன்றுகிறது...

//அம்பானியின் மகன்களால் சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட குனிவைக் காண்பிக்காமல் //
என்ன தலைகுனிவு? சொல்லப்போனால் அந்த சாம்ராஜ்யம் இப்பொழுது இன்னும் பெரிதாகத்தான் உள்ளது.

Anonymous said...

வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சனம்.

அட எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா

வூட்லெ உக்காந்து யோசிப்பாங்களோ?

பினாத்தல் சுரேஷ் said...

மோகன் தாஸ்,

என் பெயர் ராமசேஷனில் அந்தப் பணக்கார அழகான பெண்ணிற்கும், அறிவான அழகு குறைந்த பெண்ணிற்கும் ராமசேஷன் செய்யும் கம்பாரிஸன் பற்றிச் சொல்கிறீர்களா?

நம் பார்வை - சினிமா விமர்சனம் என்றில்லாமல் எதைப்பற்றியதாகவும் - நம் அனுபவங்கள், அறிவு, படிப்பு மூலமே உருவாக்கப்படுகிறது, ஒப்புக்கொள்கிறேன்,

படம் பார்த்துவிட்டு வாருங்கள், ஒத்துப்போகும், விலகிப்போகும் புள்ளிகளை விவாதிக்கலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

சென்ஷி

// வேற யாராலும் நிஜத்த கத கட்டி கத விட முடியாது// இது நல்ல காப்ஷனா இருக்கே:-))

பினாத்தல் சுரேஷ் said...

ஜோ,

நாயகனையும் குருவையும் டெம்பிளேட் தவிர வேறு எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. தூத்துக்குடியில் கொலை செய்து திருட்டு ரயிலேறி கடத்தல் செய்து நல்லவரா கெட்டவரா என்று தெரியாத வேலுநாயக்கருக்கும், கிராமத்து பனியா வீட்டில் தொடங்கி கார்ப்பரேட் தாதா ஆகும் குருபாய்க்கும் எந்தப் புள்ளியும் சமம் கிடையாது!

ஆனால் அபிஷேக் பச்சனின் நடிப்பு அருமை என்று சொல்வதில் தயக்கமில்லை. கமலுடன் நான் ஒப்பிட மாட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

என்ன வினையூக்கி, சும்மா சிரிச்சுட்டு போயிருக்கீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் வெங்கட், விரிவான கருத்துக்கு நன்றி.

அது என்கொயரி கமிஷன் என்றுதான் படத்திலும் சொல்லப்படுகிறது. ஆனால் கோர்ட் போன்ற பில்ட் அப்பும் மக்கள் கூட்டமும் நாயகன் கோர்ட் காட்சியை ஒப்பிட வசதியாக இருந்ததால் அப்படியே சொல்லிவிட்டேன் - அவசரத்தில் (தப்பு என்னுதுதான்)

WML சேவை விவகாரம் மட்டுமே தனிப்படமாக்க வாய்ப்பு உள்ள சமாசாரம்.

என் ஆதங்கம் என்னவென்றால், பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞன், திடுதிப்பென்று பாலியஸ்டர் விற்பனைக்குச் செல்கிறான் - அதன் மூலமே சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கிறான் என்ற கதைக்கரு, பாலியஸ்டருக்கு ஏன் சென்றான்? மச்சான் பேச்சை மீற வேண்டும் என்ற ஒரே ஆசையா அல்லது பாலியஸ்டர் மீது காதலால் மார்க்கெட் பற்றி ஏதேனும் தெரிந்து வைத்திருந்தானா? இரண்டாவதற்கே வாய்ப்பு அதிகம் என்னும்போது, அதற்காக ஒரு காட்சி வைப்பதில் என்ன சிரமம் இருந்திருக்க முடியும்? அப்போதுதானே ரசிகனுக்கும் அந்த முடிவின் ஆழம் தெரியும்?

தொழில் ரீதியிலான போட்டிக்காரர்கள், நண்பர்கள் போன்ற பாத்திரங்களை மேலோட்டமாகவே தொடுவது (இத்தனைக்கும் இப்படிப்பட்ட காட்சிகளில் மெலோட்ராமவுக்கும் சுவாரஸ்ய சம்பவங்களுக்கும் அதிக வாய்ப்பு இருந்திருக்கும்) மணிக்கு அந்த லைனில் போக விருப்பமில்லை என்று தோன்றவைக்கிறது. இதே போலத்தான் மற்ற படங்களும் என்றே நான் கருதுகிறேன். கன்னத்தில் முத்தமிட்டால்- பேக்ட்ராப்பாகத் தான் ஈழப்பிரச்சினை பயன்பட்டிருந்தாலும், அந்தப் பிரச்சினை பற்றிப் பேசப்படும் (காட்டப்படும் அல்ல) ஒரே காட்சி அதுதான், நான் சுருக்கியதாக கருதவில்லை.

பிரச்சினைகளுக்கான தீர்வை நான் மணிரத்னத்திடம் தேடவில்லை. பிரச்சினைகளை பின்புலமாக வைத்த கதைகளில் அந்தப்பிரச்சினையின் மூலத்தை ஒழுங்காகக் காட்டினால் புரிதல் அதிகமாகும் என்பதே நான் சொல்ல வருவது. நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கும் படங்களை எடுக்கும்போது நிஜவாழ்வின் முடிவெடுக்கும் காரணிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவர்கள் முடிவை மட்டும் காட்டுவது மேம்போக்கே.

மற்றபடி நாயகன் இறந்தபிறகு நடந்த வாரிசுச்சண்டைகளால் கதையில் டிராமா அதிகமாகி இருந்து படத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கக்கூடும் என்று நினைத்ததால் "சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட குனிவு" என்று எழுதினேன்.

படம் மோசம் என்று நான் சொல்லவில்லை, இசை, ஒளிப்பதிவு, அ ப நடிப்பு எல்லாம் அருமை என்று சொல்லித்தான் இருக்கிறேன்:-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மஞ்சூர் ராஜா. வூட்லே வொக்காந்து யோசிக்கற அளவுக்கெல்லாம் இந்தப்படத்துலெ ஒண்ணும் இல்லை:-)

Anonymous said...

இந்த படம் எப்படி இருந்தாலும் ஹீட் ஆகும் என்று பேசிக்கொள்கின்றார்கள்.பட கதாநாயகியும் நாயகியும் நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக போகின்றனர்.அதற்காவே படம் ஓடினாலும் ஒடும்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.பார்த்தல்தான் தெரியும் நீங்கள் சொல்வதில் என்ன அளவிற்கு உண்மை என்று....விமர்சனதிற்கு நன்றி :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துர்கா.

படம் ஓடலாம் - எதற்காக ஓடுகிறது எனத் தெரியாமல்:-) பல நல்ல அம்சங்கள் இருக்கிறது!

பார்த்துவிட்டு வாருங்கள்!

Boston Bala said...

படம் பார்த்தாச்சா : )

---வசனத்தில் 63.5 லட்சம் என்றும் சப்டைடிலில் 63,50,000 லட்சம்---

துணையெழுத்து மட்டும் படிப்பவர்களுக்கு 'எம்மாடீ... ஆத்தாடீ' போட வைக்கும் தொகை.
மணியின் வசனங்கள் பளிச்சாக இருக்கும் என்றால், விஜய் கிருஷ்ண ஆச்சார்யாவின் கைவரிசை இன்னும் பிரமாதம். இன்னொரு தடவை குறுவட்டில் பார்க்கும்போதுதான் அசை போட வேண்டிய மேற்கோள்களை குறிப்பெடுக்க வேண்டும்.


---பாஸ்டன் பாலாவின் "படம் பார்த்ததும் புது CV தயாரிக்கும் ஆர்வம் வரும்---

சமீபத்தில் படித்தது... உங்களின் வாசிப்புக்கும் :)

noolaham.net: ‘செக்கிழுக்கும் மாடு வண்டி இழுக்காது’. சுதந்திரமான மாடு செக்கும் இழுக்காது, வண்டியும் இழாது. அது தனக்காகவே ஓடும், நடக்கும், நிற்கும், ஓயும்.

பினாத்தல் சுரேஷ் said...

வாஸ்தவம் பாலா. வசனம் பல இடங்களில் ரொம்ப ஷார்ப். கோபத்தில் குறிப்பிட மறந்துவிட்டேன். "நா ஷப்த் சுனாயி நஹி தேத்தா" "சுபே சுபே குஸ்ஸா அச்சா ஹே" "பனியா ஹே னா சாப், ஆவாஸ் பச்சாகே ரக்தா ஹூ" டப்பென்று நினைவில் வரும் வசனங்கள்.

உங்கள் நூலகம் லின்க்கெல்லாம் ஓக்கேதான், படம் பார்த்து இன்ஸ்பயர் ஆவதாகச் சொல்வதுதான்.

பினாத்தல் சுரேஷ் said...

//உங்கள் நூலகம் லின்க்கெல்லாம் ஓக்கேதான், படம் பார்த்து இன்ஸ்பயர் ஆவதாகச் சொல்வதுதான்.//

என்பதை
//உங்கள் நூலகம் லின்க்கெல்லாம் ஓக்கேதான், படம் பார்த்து இன்ஸ்பயர் ஆவதாகச் சொல்வதுதான்:-)))))))))))))))//
என்றும் படிக்கலாம்:-)

nagoreismail said...

நல்ல விமர்சனம், இசை எப்படி இருக்கிறது? பாடல்கள் நன்றாக உள்ளதா? தங்களுக்கு தம்தரதம்தர என்று ஆரம்பமாகுமே அந்த பாடல் பிடித்திருக்கிறதா? நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

சென்ஷியின் கமெண்டை நானும் ரசித்தேன்.

// வேற யாராலும் நிஜத்த கத கட்டி கத விட முடியாது//

அதே போல் இந்த மழைக் காட்சி. அவருக்கு எப்பொழுதுமே மழையை படம் பிடிக்க மிகவும் ஆசைதான் போல. இந்த படத்தில் நிறைய காட்சிகள்.

ஒரு movie buff-ஆக எனக்கும் நீங்கள் சொன்ன அனுபவம்தான். மணிரத்னம் மட்டும் அல்ல, நல்ல படங்களை கொடுக்க நினைக்கும் எந்த கலைஞனுமே இப்படி cliche -க்களில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று ஒரு வருத்தமே. ஒரே ஒரு காட்சி அல்லது வசனத்தை வைத்தே கூட சொல்லி விடலாம் இது மணிரத்னத்தின் படம் என்று.

மற்றபடி அபிஷேக் பச்சனின் நடிப்பு... இயல்பாக இருந்தது. அவ்வளவே. நாயகனோடு compare செய்வது எல்லம் 'ஜோ' சொல்வது போல் சொறிந்து கொள்ளும் சமாச்சாரம்தான் (பா. பா. மன்னிப்பாராக) :-))).

நாயகனில் கமல்ஹாசன் என்றவர் ஒரு established artiste என்பதை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய performance-ல் பல புதிய பரிமானங்கள் தெரியும்.

Anonymous said...

நான் இன்னும் குரு படம் பார்க்கவில்லை!!!

அதனால் முழுப்பதிவை+குரு படத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை...

/எம்ஜிஆர் கலைஞர் வாழ்க்கையோடு இணைந்த தமிழ்நாட்டு அரசியல் சூழலைத் தொட்டு மட்டுமே சென்று அவர்களுடைய மனைவிகள் (!), காதல் வாழ்க்கையை பெரிதாகக் காட்டிய இருவர்,

மதக்கலவரத்தின் பின்னணி, காரணங்கள், காரணர்கள் எதையும் பற்றி அதிகம் கவலைப்படாமல், காதல் கல்யாணம் குழந்தைகள் என்றே முக்கால் படத்தை ஓட்டிவிட்டு, கைகள் கோர்த்து கலவரத்தை முடித்த பம்பாய்,

ஈழப்பிரச்சினையை ஆயுத வியாபாரிகள் நலன் என்று சுருக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்...

பொதுவாக, அந்தப் பிரபலத்தைப்பற்றிய படம், இந்தப்பிரபலத்தைப்பற்றிய படம் என்று ஹைப்பைக் கிளறிவிட்டு, கான்ட்ரவர்சியலான எந்த விஷயத்தையும் மேம்போக்காகவே தொட்டுச் சென்று எல்லாருக்கும் நல்லவனாக எடுக்கும் படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று./

இந்த கருத்துக்களில்் முழுதாய் ஒத்துப் போகிறேன்...

பினாத்தல் சுரேஷ் said...

நாகூர் இஸ்மாயில், வருகைக்கு நன்றி. படம் முழுக்கவே இசையாக இழைந்தோடுகிறது அந்தப்பாடல். நல்ல் பீட், படம் முடிந்து வெளியே வரும்போதும் ட்யூன் நாக்கிலேயே ஒட்டிக்கொள்கிறது. மிக நல்ல பாட்டு. இப்போது ஆரம்பித்து விட்டீர்கள்.. இனி இரவு முழுவதும் ஓடும்:-))

ஸ்ரீதர் வெங்கட்,

//நாயகனில் கமல்ஹாசன் என்றவர் ஒரு established artiste என்பதை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய performance-ல் பல புதிய பரிமானங்கள் தெரியும். // உண்மை. உண்மை தவிர வேறில்லை. எப்போதும் நினைவுக்கு வரும் முக்கியமற்ற காட்சி. ஜனகராஜ் "நாம அவனத் தட்டினத பொண்ணு பாத்திடுச்சி" என்று சொல்லும் நொடியில் மாறும் முகபாவங்கள்! Class Apart!

நன்றி அருட்பெருங்கோ. இது அவருக்கு வயக்கபயக்கம்தான்:-))

இலவசக்கொத்தனார் said...

நல்ல வேளை. ஹிந்தி படமெல்லாம் பாக்கறது இல்லை. அதனால இங்க கருத்து எல்லாம் சொல்ல வேண்டிய தேவை இல்லாம போச்சு. :))

பினாத்தல் சுரேஷ் said...

தமிழ்லேயும் டப் ஆயிருக்கு கொத்தனார்.. சூர்யா குரலாமே? தமிழுக்குதான் பலர் விமர்சனம் எழுதியிருக்காங்க, எங்க ஊர்லே தமிழ் டப்பிங் எல்லாம் வராது!

வினையூக்கி said...

I just wanted to say with those smileys, your "vimarsanam" was really good.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வினையூக்கி.

Anonymous said...

இன்னாபா இப்டி சொல்ட. படம் நல்லாதான் இருந்தது. இன்னும் ஒரு டெம்ப்ளேட் படம்னு சொல்றது சரி அல்ல. நடூல அலைபாயுதே, யுவா எல்லாம் டெம்ப்ளேட்2 வா? :)

(perspective changes depending on which version of movie you watched hindi/tamil/telugu. ஜோடி ஜோடி ஜோடிதான் SPB நல்லா பாடி இருந்தாலும், கேக்க முடியல சாமி. ஹிந்தில சூப்பரா இருந்தது அது)

சஸ்பென்ஸ் இல்லாத படம் தான். அடுத்த காட்சி யூகிக்கக் கூடிய கதைக் களம் தான்.
ஆனால், ப்ரெஸண்டேஷன் வாஸ் ஆஸம்!

எனது கூவல்கள் இங்கே - சர்வே-சனின் - குru விமர்சனம்

:)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சர்வே-சன்.

//இன்னாபா இப்டி சொல்ட. படம் நல்லாதான் இருந்தது. இன்னும் ஒரு டெம்ப்ளேட் படம்னு சொல்றது சரி அல்ல. நடூல அலைபாயுதே, யுவா எல்லாம் டெம்ப்ளேட்2 வா? :)//

இந்தப்படம் டெம்ப்ளேட்தான். ரோஜா-பம்பாய்-உயிரேவை அவரே ஒரு டெம்ப்ளேட்னு சொல்லிக்கறார்:-) ட்ரைலாஜியாமே!

நான் ஹிந்திலே பாத்தேன் - வெறெந்த மொழியிலும் பாட்டு கேக்கக்கூட இல்லை. அதனாலே நல்லாவே இருந்துது.

உங்க விமர்சனம் படிச்சிட்டேன். இன் பாக்ட் எல்லா விமர்சனமுமே படிச்சுட்டேன். இருந்தாலும் என் கருத்தைச் சொல்லணும்னு தோன்றவே எழுதினேன்.

ஜோ/Joe said...

///எம்ஜிஆர் கலைஞர் வாழ்க்கையோடு இணைந்த தமிழ்நாட்டு அரசியல் சூழலைத் தொட்டு மட்டுமே சென்று அவர்களுடைய மனைவிகள் (!), காதல் வாழ்க்கையை பெரிதாகக் காட்டிய இருவர்,

மதக்கலவரத்தின் பின்னணி, காரணங்கள், காரணர்கள் எதையும் பற்றி அதிகம் கவலைப்படாமல், காதல் கல்யாணம் குழந்தைகள் என்றே முக்கால் படத்தை ஓட்டிவிட்டு, கைகள் கோர்த்து கலவரத்தை முடித்த பம்பாய்,

ஈழப்பிரச்சினையை ஆயுத வியாபாரிகள் நலன் என்று சுருக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்...

பொதுவாக, அந்தப் பிரபலத்தைப்பற்றிய படம், இந்தப்பிரபலத்தைப்பற்றிய படம் என்று ஹைப்பைக் கிளறிவிட்டு, கான்ட்ரவர்சியலான எந்த விஷயத்தையும் மேம்போக்காகவே தொட்டுச் சென்று எல்லாருக்கும் நல்லவனாக எடுக்கும் படங்கள்/

மணிரத்னம் பற்றிய என் பார்வையும் இது தான்.

வெளிகண்ட நாதர் said...

//நாயகனில் கமல்ஹாசன் என்றவர் ஒரு established artiste என்பதை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய performance-ல் பல புதிய பரிமானங்கள் தெரியும்// இந்த established artiste ஆகத் தான் எத்தனை பிரயத்தனம் பண்ண வேண்டி இருந்திச்சு! அதுக்கப்பறம் என்ன பண்ணுனாலும் கொண்டாட star power வந்துடுமே! ஆனா அதுக்கு முன்னே குரூப் டான்ஸர்களோட ஆடி பாடி காமிச்சாலும், நடிப்பு எட்டாத தூரமா இருந்துச்சே! பழைய காலத்து படங்கள் கொஞ்சம் பாருங்க, இப்ப அவரை நேசிக்கும் என் நண்பர்களே!

தமிழ்நதி said...

"ஈழப்பிரச்சினையை ஆயுத வியாபாரிகள் நலன் என்று சுருக்கிய கன்னத்தில் முத்தமிட்டால்..."

மணிரத்னம் மட்டுமா... சுரேஷ்? ஈழப்பிரச்சினையின் மூலம், ஆழம் தெரியாமல்தான் பலர் படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜோ.

வெளிகண்ட நாதர் - நீங்க "இரு நிலவுகள்" "ஆடு புலி ஆட்டம்" டைமைச் சொல்றீங்கன்னா உங்களோடு ஒத்துப்போகிறேன்:-)

வருத்தமான விஷயம் தமிழ்நதி.

Anonymous said...

/ஆனா அதுக்கு முன்னே குரூப் டான்ஸர்களோட ஆடி பாடி காமிச்சாலும், நடிப்பு எட்டாத தூரமா இருந்துச்சே! பழைய காலத்து படங்கள் கொஞ்சம் பாருங்க, இப்ப அவரை நேசிக்கும் என் நண்பர்களே! //

அது சரி! எந்த படங்களை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் அவரை, குறத்தி மகன், இது சத்தியம், பட்டாம்பூச்சி அப்புறம் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிய குரூப் டான்ஸராக கூட பார்த்திருக்கிறேன்.

பிறகு அவள் அப்படித்தான், தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது போன்ற off-beat படங்களிலும் பார்த்திருக்கிறேன்.

கல்யாணராமன், எனக்குள் ஒருவன், சகலகலா வல்லவன், சட்டம் என் கையில், வெற்றி விழா போன்ற மசாலா படங்களிலும் பார்த்திருக்கின்றேன்.

நாயகன், சத்யா, தேவர்மகன், மகா நதி போன்ற commercial classics-லும் பார்த்திருக்கிறேன்.

ஹே ராம், ஆளவந்தான், பேசும்படம் அன்பே சிவம், போன்ற பரீட்சார்த்த முயற்சி படங்களிலும் பார்த்திருக்கிறேன்.

மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, சிங்கார வேலன் போன்ற comedy படங்களிலும் பார்த்திருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான் ஒன்றை சொல்லிவிடுகிறேன். நான் எல்லா படங்களையும், எல்லா மொழிகளியும் பார்த்து வந்து கொண்டுதானிருக்கிறேன். என்னை பொறுத்தவரை கமல்ஹாசன் பல் வேறு தளங்களை கடந்து சென்று கொண்டேதான் இருக்கிறார். நமது விமர்சனங்களை சட்டை செய்யாமல். அதுதான் அவரது பலம் மற்றும் பலவீனம். பலவீனம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், என்னதான் ஒரு கமர்ஷியல் ஸ்டார்-ஆக தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும், அவருடைய தேடல் அவரை mass audience -இடமிருந்து பிரித்து விடுகிறது.

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் ஏதேதோ பெசிவிட்டேன். பினாத்தலார் மன்னிப்பாராக :-))))

Anonymous said...

I totally agree with this review.

Expecting more debates on the same.

பினாத்தல் சுரேஷ் said...

//என்னை பொறுத்தவரை கமல்ஹாசன் பல் வேறு தளங்களை கடந்து சென்று கொண்டேதான் இருக்கிறார்.//

ஒத்துக்கறேன்.

பதிவு கடத்தப்பட்டா விட்டது? ஸ்லோவா நடந்ததிலே நானே கவனிக்கலைன்னா பாத்துகுங்களேன்;-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செல்வகுமார். விவாதத்தில் நீங்களும் கலந்துக்கலாமே?

NambikkaiRAMA said...

சூப்பரா எழுதி இருக்கீங்க

Anonymous said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் சும்மா சொல்ல கூடாது யெப்பா உங்களது விமர்சம் சூப்பர்.

குரு படத்தின் முழுக்கதையையும் கேட்டுவிட்டேன்.பல தொழர்கள் தோழியர்களின் விமர்சனக்களையும் தெரிந்து விட்டேன். இவையெல்லவற்றில் இருந்தும் தெரிந்து கொள்ளும் உண்மை என்னவெனில் மணிரத்தினம் MB யின் முதலாளிகளுக்கு சலாம் போடும் அற்புதப் படைப்பு இதுவென்பதே.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாஸிடிவ்ராமா.. எங்கே ரொம்ப நாளா பிளாக் பக்கமே காணோம்?

சோமி, நன்றி.
//மணிரத்தினம் MB யின் முதலாளிகளுக்கு சலாம் போடும் அற்புதப் படைப்பு இதுவென்பதே.//

MBA என்று சொல்ல வருகிறீர்களா? இதனுடன் நான் ஒத்துப்போகவில்லை. முழு கன்விக்ஷன் இல்லாமல் வெறும் ஹைப்பாக எடுத்தது மட்டும்தான் என்னை உறுத்துகிறது.

தருமி said...

அந்தக் காலத்தில் பா.ராஜா படம் வந்ததும் பட விமர்சனம் படிக்கிறதுக்கு முந்தி படம் பார்க்கணும்னு நினைப்பேன்; முயற்சிப்பேன். வேறு சில படங்களுக்கும் அப்படி ஆசைப்படுவது உண்டு. ஆனால் மணி படத்துக்கு அப்படி ஆசையே வந்ததில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க தருமி..

ஆமா.. மணிரத்னம் படம் எனக்கும் எந்த எதிர்பார்ப்பையும் உண்டு செய்வதில்லை:((

 

blogger templates | Make Money Online