Jan 4, 2007

அவியல் - ஜனவரி 2007

சில சமயங்கள்ல மேட்டருக்குப் பஞ்சம் வரும்.
சில சமயங்கள்ல நேரத்துக்குப் பஞ்சம் வரும்.

இன்னும் சில சமயங்களிலோ, ரெண்டும் ஓக்கேவா இருந்தாலும், மேட்டரோட அளவு ரொம்பச் சின்னதா இருக்கும். இருந்தாலும் நாட்டு நடப்புல பினாத்தலாரின் கருத்து என்னன்றதை அவருடைய லட்சோபலட்சம் (என்ன கஞ்சத்தனம் - சரி கோடானு கோடி) ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேணாமா?

*************************
மூன்று திரைப்படங்கள்

இரண்டு நாள் இடைவெளியில் மூன்று படங்கள் பார்த்தேன். மூன்றும் மூன்று ஜாதி!

வரலாறு, ஈ, டெரரிஸ்ட்.

வரலாறு கே எஸ் ரவிக்குமாரின் முத்திரை கொண்ட படம். டாஸ்மாக் கடையில் போய் ஓமவாட்டர் கேட்கக்கூடாது. மூன்று வேட அஜித்தை பன்ச் வசனம் பேசாமல் காத்ததில் இருந்தே ரசிகர்கள் மேல் கே எஸ் ஆர் கொண்ட பாசம் தெரிகிறது. திரைக்கதை தூங்கவைக்காமல் ஓடுகிறது.அதற்கு மேல் குறையாகவோ நிறையாகவோ சொல்ல ஒன்றும் இல்லை.

டெரரிஸ்ட் - சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மனித வெடிகுண்டின் பார்வையில் அஸாசினேஷன் பற்றிய படம். படம் பார்த்து முடித்த பின்னும் எது சரி தவறு என்று பார்ப்பவர்களை யோசிக்க வைத்த படம் - அதுதான் நோக்கம் என்றால் நிச்சயமாக நிறைவேறிவிட்டது. நல்ல நடிப்பு, தெளிவான திரைக்கதை, புத்திசாலித்தனமான முடிவு (ஸ்விட்சை அழுத்துகிறாளா இல்லையா எனக்காட்டாமல்), அற்புதமான ஒளிப்பதிவு - இந்தப்படமெல்லாம் ஏன் தியேட்டருக்கு வருவதில்லை?

கொடுமை ஈ தான். இந்தப்பக்கத்திலும் இல்லாமல், அந்தப்பக்கத்திலும் இல்லாமல் தடுமாறுகிறார் இயக்குநர். பயோகெமிக்கல் ஆயுதங்கள் என்று டாகுமெண்டரித்தனமான சில காட்சிகள் தவிர மற்றதெல்லாம் சாதாரண மசாலாப்படம் போலவே. "திருப்பித் தந்தா கைமாத்தி, தராவிட்டால் ஏமாத்து" என்பதுபோல தத்துவம் கலந்த குத்துப்பாடல்கள், கூட்டிக்கொடுக்கவும் கொலை செய்யவும் அஞ்சாத நாயகனுக்கு கற்பில் சிறந்த, கைபடாத ஆனால் காபரே ஆடும் நாயகி (புதுப்பேட்டை போல அமைத்திருந்தால் த.பண்பாடு காற்றில் பறந்துவிடுமா?), "மக்களை நினைடா" என்பது தவிர அழுத்தமான வசனமோ, காட்சிகளோ இல்லாத நெல்லை மணி ஈயைத் திருத்தி நல்வழிப்படுத்துவது -- படம் முடிந்தபின் என்னதான்யா சொல்லவராரு என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. திரிசங்கு!
*******************

நொய்டாவில் தோண்டத் தோண்டப் பிணம்! அநியாயம். சட்டம் வாங்கப்பட்டு விட்ட தைரியமும், குறைந்தபட்ச மனிதாபிமானமும் இல்லாத மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும் என்று உணர்ச்சிவசப்பட்ட மனம் நினைத்தாலும், வழக்கறிஞர்கள் வாதாட மறுப்பது வெறும் விளம்பரம் என்றே மணியன் போல எனக்கும் தோன்றுகிறது. கும்பகோணத்திலும் தீ விபத்துக்குப் பின் வழக்கறிஞர்கள் இவ்வாறு சூளுரைத்ததாக ஞாபகம். வழக்கு என்ன ஆயிற்று? யாரேனும் தண்டனை அடைந்தார்களா? வேறு ஊர் வழக்கறிஞர்கள் வந்து வாதாடவில்லையா?

*************************

தேன்கூடு போட்டியில் எனக்கு ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றி. பரிசு எதிர்பார்த்தேன், ஏமாற்றம்தான் - மறைக்க விரும்பவில்லை. இருந்தாலும் ரசனைகள் பலவிதம், என் ரசனைக்கு நான் படைக்கிறேன், அது எல்லோரையும் கவர்ந்தே ஆகவேண்டுமா என்ன?

*************************


நேராய், குறுஞ்செய்தியாய், பதிவாய், மின்னஞ்சலாய் புத்தாண்டு வாழ்த்து அளித்த அனைவருக்கும் நன்றி, அனைவருக்கும் எனது புத்தாண்டு+பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

*************************

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சுரேஷ்!
வரலாறு;ஈ பார்த்தேன்..மறந்தேன். ரெரறிஸ்ட் ரசித்தேன்.
யோகன் பாரிஸ்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி யோகன்.

நான் என்னவோ சுருக்கமா விமர்சனம் எழுதிட்டேன்னு நெனச்சா அதைவிட ரத்தினச்சுருக்கமா எழுதிட்டீங்க, தூள்!

கதிர் said...

வரலாறு - காமெடின்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!
ஈ - சீரியஸ் படம்னு சொல்லி கொஞ்சமா ஏமாத்திட்டாங்க.
டெரரிஸ்ட் பாக்கவே இல்ல.

இனிமேல் கவலையே படவேணாம். தேன்கூடு போட்டியே நிறுத்திட்டாங்களாம்.

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி,

ஈ - சீரியஸ்ஸும் இல்லாம, மசாலாவும் இல்லாம கொடுமை! மத்தபடி வரலாறையும் ஏத்துக்கலாம், டெரரிஸ்டையும் ஏத்துக்கலாம்.

நிறுத்திட்டா உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்?;-))

Anonymous said...

Thank you for linking to my post .sorry to be writing in english..Had OS reinstalled... so yet to install Baraha..
Deepa from தொடுவானம்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தீபா.

 

blogger templates | Make Money Online