என் பீஹார் வாழ்க்கையில் சந்தித்த இன்னொரு சம்பவம் இது. பெரும்பாலும் உண்மைச்சம்பவத்துடன், கொஞ்சம் கற்பனையும் சேர்க்க வேண்டிவந்ததால் சிறுகதையாக எழுதிவிட்டேன்.
இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் முறைகேடுகள் குறைவு என்றே செய்திகள் வருகின்றன. உண்மையாக இருந்தால், பீஹார் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான முதல் அடி இங்குதான் ஆரம்பிக்கிறது என்பது என் அபிப்பிராயம்.
____________________________________________________________________
மக்களால்..மக்களுக்காக...
பீஹார் ஏழைகளின் ஊர் என்று இந்தக்கட்டடத்தைப் பார்த்தபின்
யாராலும் சொல்ல முடியாது.
நீண்ட தூரம் உயர்ந்திருந்த மதில் சுவரிற்கு நடுவில் இரண்டு
ஆள் உயர கிரில் கேட் ஷர்மாவைப்பார்த்து முறைத்தது.
பளபளக்கும் பித்தளையில்"பரத் யாதவ்" பெயர்ப்பலகை எளிமையாக
அவரின் பண படைபலத்துக்கும் அரசியல் ஆள்பலத்துக்கும் தொடர்பில்லாமல்
இருந்தது.
தலைவரை எத்தனையோ முறை வேறு இடங்களில் பார்த்து இருந்தாலும்
வீட்டில் இதுதான் முதல் முறை. எப்படி அவரை சந்திக்கப்போகிறோம் என்ற
அடிவயிற்றுக்கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன.
நிச்சயம் கோபமாகத்தான் இருப்பார்.
உள்ளே செல்லும் வழியைத் தேடிக்கொண்டிருக்கும்போதே
வாட்ச்மேன் சின்ன வாசல் வழியாக வெளியே வந்து "யாரு" என்றான்.
"சாஹப் வரச்சொல்லியிருந்தாரு. ஷர்மா, சிமெண்ட்டு ஃபேக்டரி
யூனியன் லீடர்"
"உள்ளே போங்க, நேராப்போயி வலதுகைப்பக்கம்"
பங்களாவுக்குள்ளே கார் செல்ல தார் சாலை - நம்
ஊரின் சாதாரணச் சாலை எதுவுமே இந்த அளவு பளபளப்பாய் பார்த்ததில்லை. புங்கமர
நிழலும், பசேலென புல்தரையும் இந்த வெப்ப பூமியை மலை வாசஸ்தலம் போல
ஆக்கிக்கொண்டிருந்தன. ஐந்தே நிமிடங்களில் வெள்ளைச்சட்டை கறுப்பாகிவிடும் தொழிற்சாலை
மாசிலிருந்து இவ்வளவு அருகில் இப்படி ஒரு ரம்யமான சூழல். பணம் இருந்தால் எதையும்
அமைத்துக்கொள்ளலாம்.
மர நிழலில் ஊஞ்சலில் அமர்ந்து
கட்சிக்காரர்களுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த தலைவரைப்பார்த்ததும் பயம்
அதிகமாகிவிட்டது.
"53 ஆம் வார்டு நிலவரம் என்ன?"
"அதைப்பத்தி கவலைப்படாதீங்க அண்ணே. அதெல்லாம் எப்பவும் நம்
கையிலேதான். மேம்பாலம் வருதுன்னு சொன்னதிலேயே அவங்க குஷி ஆயிட்டாங்க. 9 ஆம் தேதி
ராத்திரி கொஞ்சம் செலவு செஞ்சுட்டா அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம். இந்த ஃபேக்டரி
பிரச்சினைய மட்டும் கொஞ்சம் சரி பண்ணிட்டா.."
"இதோ ஷர்மாவே வந்துட்டான் - சாவே இல்லைடா உனக்கு." அவர்
வரவேற்பில் கோபம் தெரியவில்லை.
"உக்காரு. என்ன சாப்பிடறே? துக்காராம், இன்னோரு க்ளாஸ்
கொண்டா" - இது கிண்டலா நிஜமா - தெரியவில்லை. பலவருட அரசியல் நடிப்பு அனுபவத்தில்
ஊறிப்போன அவர் முகபாவத்தில் இருந்து என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது
முடியாத காரியம்.
'டேய் ராஜு, ஷர்மாவுக்கு நிலவரத்தை சொல்லுடா."
"ரொம்ப டைட்டாத்தான் இருக்குது பொஸிஷன். போன முறை
ஜெயிச்சப்பவே வித்தியாசம் கம்மிதான். அப்ப ஃபேக்டரி ஓட்டு மொத்தமா நமக்கு
விழுந்துச்சு. மேல் ஓட்டுக்கு அவங்களும் ரெண்டு லாரியிலே ஆள் கொண்டு
வந்திருக்காங்க. என்ன செய்தாலும் ஃபேக்டரி ஓட்டு யாருக்கு விழுதோ அவங்கதான் ஜெயிக்க
முடியும்." ராஜு தலைவரிடம் ரொம்ப நாளாக இருக்கிறான். வேறு யாரும் இவரிடம் இவ்வளவு
நேராக உண்மை பேச முடியாது.
"என்னப்பா சொல்லறாங்க உன் ஃபேக்டரியிலே?" ஷர்மாவிற்கும்
உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
"இந்த முறை ரொம்பக் கஷ்டம்தான் தலைவா. யூனியன்
எலெக்ஷன்லையே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் நான் ஜெயிக்க முடிஞ்சது.அதுவும் தவிர போன
வருஷம் நடந்த ஆக்ஸிடென்டுலே செத்தவங்களுக்கு நிதி வாங்கிக் கொடுக்கறதுலே
எதிர்க்கட்சிக்காரங்க முந்திகிட்டாங்க."
"போன வாரம் நீங்க வந்து போன பிறகு சிந்தாமணி வந்து
ஓட்டுக்கேட்டாரில்ல, அப்போ அவர் தொழிலாளர் நலனுக்குன்னு வாக்குறுதி நெறய சொல்லி ஆசை
காமிச்சுட்டு போயிட்டார்."
"மிஷ்ரா தீவிரமா கேட் மீட்டிங் போட்டு பிரசாரம்
செஞ்சுகிட்டு இருக்கான். வொர்க்கருங்க அந்தப்பக்கம்தான் சாயறாங்க."
"இதெல்லாமா ஒரு பிரச்சினை? ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கணும்
சொல்லு."
"அது இந்தமுறை வேலைக்கு ஆகாது சார். அவனுங்களும் பணத்தை
தண்ணியா செலவு செய்யறாங்க."
"சரிதான் - அப்ப உன்னை நம்பி பிரயோஜனம் இல்லே?"
"மிஷ்ரா கேட் மீட்டிங் போடறான் - நீ என்ன புடுங்கறே? உன்
எலெக்ஷனுக்கு தண்ணியா பணத்தை அள்ளி விட்டேனே? நன்றி விசுவாசம் இருக்கா
உனக்கு?"
"உன் சோம்பேறித்தனத்தாலே நான் தோத்துப் போகப் போறேன்.
அப்படி மட்டும் ஆச்சுன்னா உன்னை சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதே" கோபம்
உச்சிக்குப் போய்விட்டது.
"அந்த பூத்துங்கள்லே நம்ம ஆளுங்களை நுழைக்க முடியுமாடா?
என்றார் ராஜுவைப் பார்த்து.
"கஷ்டம் தலைவா. வொர்க்கருங்க எல்லாம் காலையிலேயே க்யூவிலே
நின்னுடுவானுங்க. நாம நம்ம வேலைய 10 மணிக்கு மேலதான் ஆரம்பிக்கவே
முடியும்"
"அப்ப ஒரே ஒரு வழிதான் இருக்கு. நீ என்ன பண்ணுவியோ
எனக்குத் தெரியாது. எலெக்ஷன் அன்னிக்கு உன் ஃபேக்டரியிலிருந்து ஒரு பய ஓட்டுப் போட
வரக்கூடாது. நான் நம்ம ஆளுங்களை உட்டு கவனிச்சுக்கறேன்."
"ஒரு திட்டம் இருக்கு தலைவரே" ஏற்கனவே மனதுக்குள்
ஒத்திகை செய்திருந்த திட்டத்தை விவரித்தான் ஷர்மா.
பொறுமையாக முழுதும் கேட்ட தலைவர் "சிந்தாமணி சும்மா
விடுவானா?" என்றார்.
"முன்னே நிக்கப் போறது நான் இல்லையே, மிஷ்ராதானே - அவராலே
ஒன்னும் பண்ண முடியாது"
"சரி, இத்தனை பேர் ஓட்டுப்போடவரலைன்னா அது எல்லாருக்கும்
தெரிஞ்சுடாதா?"
"அதுதான் பதினோரு மணிக்கு எல்லாரையும்
விட்டுடறோமே"
"வொர்க்கருங்க ஓட்டு எல்லாம் ஏற்கனவே போட்டிருந்தா
பிரச்சினை பண்ண மாட்டாங்களா?"
"எல்லாரும் பிரச்சினை பண்ண மாட்டாங்க.. மிஷ்ராவோட ஆளுங்க
ஒரு நூறு பேர்தான் தொந்தரவு பண்ணுவாங்க.. அவங்க லிஸ்ட் நான் தர்றேன்.. அதை மட்டும்
விட்டுவைச்சிடச் சொல்லுங்க 10000 ஓட்டுலே ஒரு நூறு ஓட்டு போனாத்தான்
என்ன?"
கொஞ்சம் யோசித்துவிட்டு போனை எடுத்த தலைவர் "டி எஸ் பி எச்
கே சிங் இருக்கானா" என்றார்.
திரும்பி நடக்கும்போது துக்காராம் ஷர்மாவுக்காக க்ளாஸ்
கொண்டுவந்துகொண்டிருந்தான்.
**********************************************************************************************************************************
இன்று தேர்தல். திட்டம் மட்டும் பலன் அளிக்கவில்லை என்றால்
என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. யாதவுக்கு தோற்றால் பதவி
மட்டும்தான் போகும்.
போலீஸ் ஜீப் ஃபேக்டரி வளாகத்துக்குள்ளே நுழைந்ததைப்
பார்த்தான். இப்போது நான் இங்கே இருக்கக்கூடாது. கேண்டீனுக்குள்
சென்றுவிடலாம்.
டீ சாப்பிட்டு முடிப்பதற்குள் வாசலில் ஆரவாரம் தொடங்கி
விட்டது.
"ஷர்மாஜி இங்கே இருக்கார்.. சாஹப், அசெம்பிளி லைன் ஜாவை
போலீஸ் போட்டு அடிக்கரானுங்க"
"இங்கேயா? ஃபேக்டரி காம்பவுண்டுக்குள்ளே போலீஸுக்கு என்ன
வேலை? எவ்வளவு திமிர் இருந்தா நம்ம வொர்க்கரு மேல ஒருத்தன் கை வைப்பான்?" என்று
ஆக்ரோஷத்துடன் நடந்து செல்லும் வழியில் போலீஸ் ஜீப் வேகமாகச்
செல்வதைப்பார்த்தான்.
"எல்லாரும் வேலைய நிறுத்துங்க - ஒரு தொழிலாளியை போலீஸ்
பிடிச்சிகிட்டு போறானுங்க. எல்லாரும் கேட் வாசல்லே கூடணும்"
"என்னய்யா நடந்தது? யாரு பார்த்தவன்?"
"நான் பார்த்தேனுங்க அய்யா." என்று முன்வந்தான் குப்தா.
நல்லதுதான் - இவன் மிஷ்ரா விசுவாசி.
"போலீஸ் அவங்க ஜீப்புக்கு ஜாவை பெட்ரோல் போடச்சொன்னாங்க.
இவன் எஸ்.ஈ சாஹப் கையெழுத்து இல்லாம போட மாட்டேன்னு சொன்னான். அதுக்குள்ளே அவங்க
நாயே உனக்கு இவ்வளவு திமிராடான்னு கேட்டு ஜாதிய கேவலமாப் பேசி திட்டினாங்க,
அப்புறம் அடிச்சு ஜீப்புலே ஏத்துனாங்க"
"நான் போயி ஏன் இவரை பிடிச்சுகிட்டுப் போறீங்கன்னு
கேட்டதுக்கு இவன் கையிலே ஐ டீ கார்டு இல்லே, சேஃப்டி ஷூ போடலே, அதனாலதான் அரெஸ்ட்
செய்யறோம்"னு சொல்லிட்டு வண்டியக் கெளப்பிகிட்டு போயிட்டாங்க."
கூட்டம் கூடிவிட்டது.
"தோழர்களே. போலீஸின் அதிகார வெறி வரம்பில்லாமல்
ஆடத்தொடங்கிவிட்டது. இன்று நம் சக தொழிலாளியை உப்புப்பெறாத, அவர்களுக்கு துளியும்
சம்பந்தமில்லாத காரணங்களைக் காட்டி அடித்து உதைத்து இழுத்துப் போயிருக்கிறது
போலீஸ். இதை நாம் பொறுத்துக்கொண்டு இருக்கத்தான் வேண்டுமா? அவர்களுக்கு அதிகாரம்
பலம் என்றால் நமக்கு ஒற்றுமைதான் பலம். சீருவோம், காவல் நிலையத்தை நோக்கி,
விடுவிப்போம் நம் தொழரை." என்று ஷர்மா முழங்கும்போது அவசரமாக மிஷ்ரா வருவதைப்
பார்த்தான்.
"கொண்ட கொள்கையில் வேறுபாடுகள் இருப்பினும், தொழிலாளர்
நலன் காப்பதில் நானும், தோழர் மிஷ்ராவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல என்பதை
அனைவரும் அறிவீர். போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தலைமை தாங்க
என் சகோதரன் மிஷ்ராவை அழைக்கிறேன்."
ஷர்மாவின் பேச்சு மிஷ்ராவை ஒரு கட்டத்தில் சிக்க
வைத்துவிட்டது. இந்தக்கூட்டத்தின் மனோநிலையில் அவன் வேறு என்ன சொன்னாலும்
எடுபடப்போவதில்லை.
"வாங்க மிஷ்ரா, தொழிலாளர் ஒற்றுமையா, போலீஸ்
அடக்குமுறையான்னு ஒரு கை பார்த்துறலாம்"
"எஸ்.ஈ சாஹப் என்ன சொல்லறாருன்னா" இழுத்தான்
மிஷ்ரா..
"அவருக்குத் தொழிலாளர் வலி எங்கே தெரியப்போகிறது? இப்போது
நீங்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வெறும் சட்ட வழிமுறைகள்
அடிக்கப்பட்ட, ஜாதி பெயர் சொல்லித் திட்டப்பட்ட நம் தோழனுக்கு உதவுமா?
அவர்களுக்கு புரிந்த மொழியில்தான் நாம் பதில் சொல்ல வேண்டும்" ஷர்மாவின் செயற்கையான
மேடைப்பேச்சு மொழி மிஷ்ராவுக்கு நிலவரத்தைப் புரியவைத்துவிட்டது. எந்த
எதிர்ப்பேச்சும் இப்போது செல்லுபடியாகாது.
மிஷ்ரா," தோழர்களே, அமைதியான முறையில் போராடுவோம், நீதி
கேட்போம்" என்று முழங்க "அதுதான் சரி. ஆனால் நம் தோழர் ஜா அங்கு காவல் நிலையத்தில்
என்ன பாடுபடுகின்றாரோ! அதைப் பார்த்தும் உணர்ச்சிவசப்படாமல், கல்நெஞ்சோடா இருக்க
முடியும்" என்றான் ஷர்மா. கூட்டத்தில் இருந்த அவன் ஆட்களுக்கு செய்தி
சென்றடைந்துவிட்டது.
கால்பந்து மைதானத்துக்கு உள்ளே அடங்கி இருந்தது காவல்
நிலையம். கூட்டம் மைதானத்தை அடைந்தபோது வழக்கமான காவலர்கள் தவிரவும் தேர்தலுக்காக
வந்திருந்த சிறப்புக் காவல் படையும் தயார் நிலையில் இருந்தது.
"உங்களில் யாராவது ஐந்து பேர் மட்டும் காவல் நிலையத்தின்
உள்ளே வாருங்கள்" என்று போலீஸ் மெகா ஃபோனை வைத்துக் கூவிக்கொண்டிருக்கும்போதே,
தொழிலாளர் பக்கத்திலிருந்து கற்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன..
போலீஸார் கேடயங்களுடனும் லத்தியுடனும் உள்ளே புகுந்து
தாக்க, தொழிலாளர்களும் தங்கள் கையில் இருந்த ஆயுதங்களால் திருப்பித்தாக்க
ஆரம்பித்தனர்.
பொதுவாகவே நிலக்கரியும் சிமெண்ட்டுமாக தூசு பறக்கும்
தொழிற்சாலைப்பகுதியில் அப்போது கலவரத்தின் புழுதியும் சேர்ந்து கண்கள் மறைத்தன.
எப்படி, எப்போது, யாரால் என்று தெரியாத வேளையில் காவல் நிலையத்தின் முன் முகப்பு
தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
அதுவரை கூட்டத்தை அடக்க மட்டும் ஆயுதங்களைப் பிரயோகித்த
போலீஸார் கோபம் கொண்டு தாக்க, தொழிலாளர் பக்கம் வலுவிழக்கத் தொடங்கியது.
ஆத்திரத்துடன் கத்தும் குரல்கள், அடிவாங்கித் துடிக்கும் குரல்கள், அடுத்தவனை
ஆணையிடும் குரல்கள் - எந்தக்குரலும் தனிப்பட்டுத்தெரியாமல் ஒரே கலவர்க்குரலாக
ஒலித்தது.
ஒரு மணி நேரம் கழித்து கலவரம் அடங்கியது. இப்போது
மைதானத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார்.
"நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிடும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்படுவார்கள்" என்றார் டி.எஸ்.பி.
அடிபட்டிருந்த மிஷ்ரா, "இன்று தேர்தல் அல்லவா? நாங்கள்
எப்படி வாக்களிப்பது?"
ஷர்மாவும்,"வாக்களிக்கும் புனிதக் கடமையைத் தடை செய்ய
யாருக்கும் உரிமை இல்லை."
உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வந்த டி.எஸ்.பி,
"உங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 50,
50 பேராகச் சென்று வாக்களித்துவிட்டு வர நடவடிக்கை எடுக்கிறோம்"
என்றார்.ஷர்மாவைப்பார்த்துப் புன்னகைத்தாரா என்ன?
ரத்தம் வழிய அவசரமாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்
செல்லப்படும் ஸ்ட்ரெட்சர்களைப்பார்த்து ஷர்மா மிஷ்ராவிடம்,"த்சொ.. த்சொ.எவ்வளவு
ரத்தம்.. இந்தப் போலீஸ்காரனுங்களுக்கெல்லாம் இரக்கமே
கிடையாதா?"என்றான்.
4 பின்னூட்டங்கள்:
காசு வாங்கிட்டு பாராளுமன்றத்தில கேள்வி கேட்கிறதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அடிப்படையிலேயே எல்லாம் இது மாதிரி புரையோடிப் போயிருக்கு...
நம்ம ஊரு அரசியல் இப்படி நாறிக்கிட்டு இருக்குல்லே?
நன்றி தருமி, துளசி.
Suresh>
Story is good..Please Format it and repost the story. It is very difficult to read.
Post a Comment