சஸ்பென்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன? திகில், மர்மம், துப்பறிதல் போன்று பொதுவாகப் புழங்கும் வார்த்தைகள் பொருத்தமான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை. எனவே பரவாயில்லை, சஸ்பென்ஸ் என்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறேன்.
சஸ்பென்ஸ் இலக்கியம் (இதுக்கெல்லாம் திட்ட மாட்டிங்க இல்லை?) வாசகனின் ஈடுபாடு முழுமையாகத் தேவைப்படும் வடிவம். ஒரு சிறந்த சஸ்பென்ஸ் கதை, யோசித்து, துப்பறியத் தேவையான அத்தனை விவரங்களும் வாசகனுக்குத் தரப்பட்டு, அதே விவரங்களை வைத்து கதை நாயகன் எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறான் என்பதை ஒப்புநோக்கி "அடடா" போட வைக்க வேண்டும். அகதா க்றிஸ்டி தெளிவாகவே விவரங்களைச் சொல்லி "இடைவேளை" போட்டு, பின்னால் நாயகன் (நாயகி) துப்பறிதல் என்று பிரித்துக் காட்டி விடுவார். நம் அறிவை பரிசோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு என்பதாலும், வாசகனையும் மூளை உள்ள ஜந்துவாக எழுதுபவன் கருதுவதாலும், எனக்கு இந்த வடிவம் ரொம்பப் பிடிக்கும்.
சரியான வார்த்தை தெரியாதது மட்டுமல்ல, தமிழின் படைப்பாக்கங்களிலும் சஸ்பென்ஸ் பெரிய அளவில் பயன்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கதைகளில் வடுவூர் துரைசாமி ஐயங்காரிலிருந்து, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் வழியாக இந்திரா சவுந்தரராஜன் வரை பலர் முயற்சித்திருந்தாலும், நிர்வாண நகரம் போன்ற ஒன்றிரண்டு கதைகள் தவிர மற்றவை குப்பை என ஒதுக்கத்தக்கதே என்பது எ. தா அ. கதையில் வரும் எல்லா பாத்திரங்களையும் கொலை செய்துவிடும் தொடர்(கொலை)கதைகளையோ, கடைசி அத்தியாயத்தில் உள்ளே நுழையும் புதுக்கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளையோ (உ-ம்: ராமபத்ர வியாசன், கொலையுதிர்காலம், சுஜாதா) நல்ல சஸ்பென்ஸ் கதைகளாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆதித்த கரிகாலனைக்கொன்றது யார் என்பது ஒரு நல்ல சஸ்பென்ஸ்தான் என்றாலும், கதாசிரியருக்கே முடிவு தெரியாததால் அதுவும் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுகிறது.
திரைப்படங்களில் "அந்த நாள்" எனக்குத் தெரிந்த ஒரு நல்ல உதாரணம். "அதே கண்கள்", "யார்" போன்ற சொதப்பல்கள் ஓடினாலும் அவற்றுக்கும் சஸ்பென்ஸுக்கும் உள்ள தொடர்பு மைசூருக்கும் மைசூர் போண்டாவுகும் உள்ள தொடர்பே.
சின்னத்திரையிலும் கூட, மர்மம் என்றாலே அமானுஷ்யம், பேய், பிசாசு, தொடர்கொலைகள் என்று கிட்டே நெருங்க முடியாதவாறு செய்து விடுவார்கள்.
இந்நிலையில், (நிறைய சன் நியூஸ் பார்ப்பதால் வந்த பாதிப்பு)சந்திரமுகியிலும், அந்நியனிலும் பிற்காலத்தில் அடிபட்ட ஸ்பிளிட் பெர்சனாலிட்டி என்ற கதைக்கருவோடு, தொடர் கொலைக்குக் காரணம் யார் என்ற மர்மத்தோடும் எடுக்கப்பட்ட "மர்மதேசம்" ஒரு நல்ல மாறுதலாக இருந்தது - கதை முடிவை நெருங்கும் நேரத்தில், மற்ற அனைத்து பாத்திரங்களும் இறந்து போய்விட்டதால், முடிவு சுலபமாக ஊகிக்க முடியக்கூடியதாய் இருந்தாலும் சுவாரஸ்யமாயே இருந்தது.
இதே இயக்குநர் என்பதால் மட்டுமே, சிதம்பர ரகசியம் தொடரை ஆரம்பத்திலிருந்தே பார்க்க ஆரம்பித்தேன். 100 எபிஸோடுகளைத் தாண்டிவிட்டாலும், ஆர்வம் குறையாமலும், ஒரு பகுதியையும் விடாமலும் பார்த்தும் வரும் அளவிற்கு சிறந்த முறையில் வந்துகொண்டிருக்கிறது, இப்போது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
ஆரம்பக்காட்சிகளில், மெதுவாகச் சென்றாலும் என்னை ஈர்த்தது கதாபாத்திரங்களின் தொழில்கள் - வழக்கறிஞர், விளம்பரப்பாடகி, ஆரம்பநிலைப்பத்திரிக்கையாளன், கைரேகையை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும் கணினி வல்லுனன், வானிலை ஆராய்ச்சியில் பணிபுரியும் பெண், எயிட்ஸுக்கு மருந்து தேடும் விஞ்ஞானி, மகப்பேறு மருத்துவர் எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்கள். இதுதவிர நாடி ஜோசியம், ஆரிகமி, மூலிகைச்செடி வளர்ப்பு போன்ற விஷயங்களைப்பற்றி தொட்டும் சென்றது.. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தப்போகிறார் திரைக்கதையாளர் என்பதிலேயே ஆர்வம் அதிகமாகிவிட்டது.
பிறகு ஆரம்பிக்கிறது ஒரு கடத்தல், ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாத பலர் கொலைகள் - ஒரே ஒரு ஒற்றுமை -அனைத்து கொலைகளின் போதும் அருகில் பத்திரிக்கையாள நாயகன் இருக்கிறான், அனைத்துப்பேருக்கும் விரல் ரேகை எடுக்கப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக மர்மம் விலக ஆரம்பிக்கிறது. கடத்தப்பட்ட பெண்ணுக்கு எயிட்ஸ் வரவழைத்து, கொல்லப்பட்டவர்களின் நாடியில் இருக்கும் மருந்துகளை வைத்து குணப்படுத்தி எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது வில்லன் கும்பல் என்று.
இன்னும் முழுதாக மர்மம் விலகவில்லை. கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ரேகை எடுக்கத் தூண்டிய மர்ம நபரே (இவனைப்பற்றி இப்போது இருக்கும் ஒரே க்ளூ - பின்னங்கழுத்தில் ஒரு தழும்பு. ஒரு காட்சி அமைப்பிலும் அவன் முகம் தெரியாதது மட்டுமல்ல, திரையில் எந்தப் பாத்திரம் தெரிந்தாலும் அவர்களின் பின்னங்கழுத்தை உற்றுப்பார்க்கிறேன் நான்!), "அய்யோ பாவம் - எல்லாரும் செத்துப் போயிட்டாங்களே" என்று அழுவதாக ஒரு காட்சி. அவன் பிடிபட்டாலும் கொலை செய்தவர் வேறு யாரோவாக இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.
கதையில் வரும் எல்லா சம்பவங்களும் நாடி ஜோசியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதாக வருகிறது. ஆனால், என் ஊகப்படி, முடிவு நாடி ஜோசியத்தை ஆதரிப்பதாக இருக்காது - எதிர்ப்பதாகவும் இருக்காது. (a la கொலையுதிர் காலம் - பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கான பதிலை அவரவர் நம்பிக்கைக்கு விட்டுவிட்ட சுஜாதாவின் சாமர்த்தியம்) எல்லாக் கேள்விகளுக்கும் லாஜிக்கான பதில் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.
எனக்குத் தெரிந்து முழு திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட ஒரே தொலைக்காட்சித் தொடர் இதுதான். தொலைக்காட்சித் தொடரில் ஃப்ளாஷ் பேக் காட்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? ரொம்ப அபூர்வம். கதை எப்படி ஆரம்பித்தது, என்ன திசையில் பயணித்தது என்பதை இயக்குநர் உள்பட அனைவரும் மறந்துபோய்விட்டிருப்பர். "இவருக்கு பதிலாக இவர்" வேறு பழையதை திருப்பிக்காட்ட முடியாத சூழலை உருவாக்கிவிடும். சில நேரங்களில் இயக்குநரே மாறிவிட்டிருப்பார். இந்த விபத்துக்கள் எல்லாம் ஏற்படாமல், கதையின் ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியை இப்போது திருப்பிக்காட்டுவதால், அப்போதே முழுக்கதையும் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்த இரண்டு எபிசோடுகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தொடர்களின் நடுவே, இதுவே மிகப்பெரிய ஆச்சரியம்.
நான் இந்தத்தொடரை மிகவும் ரசிக்கிறேன் - நீங்களும் சஸ்பென்ஸ் விரும்பியாக இருந்தால் பார்க்க பரிந்துரைக்கிறேன்.
பி கு. தொலைக்காட்சித் தொடர்களை என்னைப்போலவே பலரும் பார்த்தாலும், விமர்சனம் செய்வதில்லை. சிவகாசிக்கும் மஜாவுக்கும் கூட விமர்சனம் எழுதுகிறோம் - இவற்றைக் கண்டுகொள்வதில்லை.
விமர்சனங்கள் என்று பார்த்தல் டிவிக்கு வரும் நேயர் கடிதங்கள் (அன்புள்ள -- டிவி உரிமையாளர் --- அவர்களே, நான் உங்கள் தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் விரும்பிப்பார்க்கிறேன், 6 மனிக்கு வரும் --- 6.30க்கு வரும் ____ ... தடங்கலுக்கு வருந்துகிறோம் எனப்போட்ட திரையிலும் கையெழுத்து மிக அருமை.. ப்ளா ப்ளா..) அல்லது பத்திரிக்கைகளில் வரும் ஸ்பான்ஸர்டு கடிதங்கள் (___ தொடரில் ___ நடிப்பு அருமை. இதுபோன்ற மாமியார்கள் திருந்தவே மாட்டார்களா?).
அப்ஜக்டிவ்வாக வரும் விமர்சனங்கள் இல்லாத காரணத்தாலேயே ரொம்ப ஆடுகிறார்கள் இவர்கள்.
தினமலரில் ஒரு கடிதம் படித்தேன் - சிதம்பர ரகசியம் பற்றி - கதையே இல்லாத தொடர் என்று "கிழி"த்திருந்தார் ஒரு வாசகர்!
இவருக்கு எந்த அளவுக்கு மட்டமான சாப்பாடு பழகியிருந்தால் நல்ல சாப்பாடு சாப்பிடும்போது அலர்ஜியாகி இருக்கும்?
Dec 1, 2005
சிதம்பர ரகசியம் - தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் (01 Dec 05)
Subscribe to:
Post Comments (Atom)
23 பின்னூட்டங்கள்:
அருமையான விமர்சனம், பாராட்டுகள் சுரேஷ்.
எனக்கும் மிகவும் பிடித்த தொடர் சிதம்பர ரகசியம் தான்.
ஓலைசுவடிகளைப் பற்றி மிகவும் அருமையாக அலசியிருப்பார்கள். மேலும் ஓலைகளை நகல் எடுப்பதையும் தெளிவாக சொல்லியிருப்பார்கள்.
உண்மையில் தெரியாத விசயங்களை இத்தொடரின் மூலமாக தெரிந்துக் கொள்ள முடிந்தது.
அது சரி சுரேஷ்,
என்னதான் சஸ்பென்ஸ் என்றாலும் பயமுறுத்தும் இசை, உண்மை போலவே ஊட்டப்படும் மூடநம்பிக்கைகள் சமுதாயத்தை குறிப்பாக குழந்தைகளை கெடுக்க வல்லன என்று நான் நினைக்கிறேன்.
கடந்த பல வாரங்களாக கதாநாயகன் ஒவ்வொருவராக போய் பார்ப்பது போர் அடிக்கவில்லை என்கிறீர்களா?
நல்லா இருந்துச்சுக்கங்க உங்க விமரிசனம், இடையில் சிவனேன்னு இருக்குற தாத்தாவை வேற வம்பிழுத்திருக்கிறீங்க ம்ம்ம்ம், ஆனால் மர்மதேசத்தைப்போல் இந்தத்தொடர் என்னைக்கவரவில்லை. :-)
"இத்தகைய அருமையான நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கும் சன் டீவிக்கும், திரு. கலாநிதிமாறன் அவர்களுக்கும் முதற்கண் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வரும் கடிதங்கள் மட்டுமே படிக்கப்படும் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்களே!!!!!!
http://imohandoss.blogspot.com/2005/11/blog-post_29.html
உங்களைப்பற்றியும் சிலவரிகள் குறிப்பிட்டிருப்பதால் இந்த உரலை கொடுக்கிறேன்.
இந்த தொடரை தொடக்கத்திலிருந்தே பார்த்து வருகின்றேன், கடந்த 2 வாரங்கள் பார்க்கவில்லை
சுரேஷ்,
நல்ல விமர்சனம் ! நல்ல தொடர் என்று கேள்விப்பட்டேன். எனக்குத் தான் நேரம் கிடைப்பதில்லை (எல்லாம் அமெரிக்க
வாடிக்கையாளர் தொந்தரவு தான்!!!!)
//திகில், மர்மம், துப்பறிதல் போன்று பொதுவாகப் புழங்கும் வார்த்தைகள்
//
திகில் == HORROR
மர்மம் == SUSPENSE (nearly)
துப்பறிதல் == Detective work
//பி கு. தொலைக்காட்சித் தொடர்களைஎன்னைப் போலவே பலரும் பார்த்தாலும், விமர்சனம் செய்வதில்லை. சிவகாசிக்கும் மஜாவுக்கும் கூட விமர்சனம் எழுதுகிறோம் - இவற்றைக் கண்டு கொள்வதில்லை.
//
Actually, I watch only English serials and movies, unlike people like you :))
OK, OK !!
நான் "ராஜராஜேஸ்வரி" மற்றும் "மெட்டிஒலி" ஆகியவற்றை "கண்டு கொண்டு" அவை குறித்து விமர்சனம் எழுதியிருந்தேன் ;-)
தாங்கள் பின்னூட்டமும் இட்டிருந்தீர்கள் !!!
http://balaji_ammu.blogspot.com/2005/01/blog-post_31.html
http://balaji_ammu.blogspot.com/2005/06/special.html
என்றென்றும் அன்புடன்
பாலா
சுரேஷ்,
இந்த தொடரின் இயக்குநர் நாகா புனே திரைப்படக்கல்லூரியில் படித்ததாக ஒரு ஞாபகம். சரியோ தவறோ தெரியவில்லை.
மர்ம தேசம் பார்த்ததில்லை; கேள்விப்பட்டதோடு சரி. அதற்குப்பிறகு வந்த 'ருத்திர வீணை'எனக்குப் பிடிச்சிது.Making of the serial ரொம்ப நல்ல இருந்திச்சி - tile music-இல் இருந்து எல்லாமே...ஒய்.ஜி. மகேந்திரனை இந்த சீரியலில்தான் பிடிச்சிது. X-Files என்ற ஆங்கில சீரியலும் இதுபோல் Making of the serial என்ற முறையில் பிடிக்கும். அதே மாதிரி இந்த 'சிதம்பர ரகசியம்' சீரியலும் பிடித்தது.
ஆனால், ஏன் இந்த டைரடக்கர் எப்போதும் இதுமாதிரியான விஷயங்களை (மூட நம்பிக்கைகளை..?)மட்டுமே கதைக்கருவாக எடுக்கவேண்டும் என்ற எனது தனிப்பட்ட எரிச்சலில் - நல்ல திறமைகள் வீணாவது குறித்த ஆதங்கத்தில் தொடர்ந்து பார்க்காது விட்டுவிட்டேன்.
அன்புள்ள சுரேஷ்
வணக்கம்.நல்ல விமர்சனம்.
இருக்கிற அழுவாச்சி சீரியல்களுக்கு நடுவே ஒரு நல்ல தொடர்.நீங்கள் கூறியது போல் திரைக்கதை அருமை.அது மட்டுமல்லாமல் பாத்திரங்களின் தொழில் மொழி (body language)..உதாரணத்திற்கு two wheeler mechanical shop கடையில் அந்த முதலாளி வாடிக்கையாளர்களை அவர்களுடைய வண்டியின் எண்ணை வைத்துத்தான் கண்டுபிடிப்பார்.
என்னுடைய guess துளசியின் கண்வர் அல்லது YG
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
நன்றி பரஞ்சோதி, முத்து, மோகந்தாஸ், உஷா, குழலி, ரவி, எ.அ. பாலா, தருமி மற்றும் மாயக்கூத்தன்.
முத்து, மெதுவாகச் செல்கிறது என்பதை நானும் குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் விஷயம் இல்லாமல் இழுக்கும் தொடர்களுக்கு நடுவே விஷயத்தை தெளிவாய்க்கூறுவதற்காக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பது ஒத்துக்கொள்ளப்படக்கூடியதாகத்தான் தெரிகிறது.
மூட நம்பிக்கை பற்றி பேசும்போது, பெரும்பாலான திகில் தொடர்கள், சாமி தொடர்கள் (கிட்டேயே நெருங்க முடியாது) ஆகியவற்றில் உள்ள பொறுப்பற்ற மனோபாவம் இதில் எனக்குத் தென்படவில்லை. நாடி ஜோசியத்துக்கு கொடி பிடிப்பது போல தோன்றினாலும், முடிவின்போதுதான் இயக்குநர் கருத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். இதே இயக்குநர் "அது மட்டும் ரகசியம்" என்று அடுத்த ஜென்மத்தைப்பற்றி!~ அதை நான் பார்ப்பதும் இல்லை, கருத்துக் கூறுவதும் இல்லை:-))
பாலா - மெட்டி ஒலி ஞாபகம் இருக்கிறது. எழுதும்போது மறந்துவிட்டேன்:-(
மாயக்கூத்தன், கொஞ்சமாவது இயல்பாக இருக்க வேண்டும் என்ற இதுபோன்ற காட்சி அமைப்புகளில் தான் ஈர்க்கிறது. பார்ப்பவன் பற்றி மரியாதையே இல்லாமல் கார்ப்பரேட் மீட்டிங்கில் பேட்டை பாஷை பேசும் சீரியல்களுக்கு நடுவில்:-(
பெனாத்தலாரே,
நான் கூட விசு, சேகர் பட விமர்சனம்னு நினச்சு வந்தேன்... ஹூம்..
நீர் 'தேவை ஒரு அவன் விகடன்' போட்டப்போவே நினச்சேன். ஏதோ விவகாரம் இருக்குன்னு. அது இது போன்ற மெகா சீரியல்தான்னு இப்ப தான் புரியுது (அக்கா, அத்தைகள் எல்லாம் அடிக்க வரதுக்குள்ள ஜூட்) :))
I had sent this review to Mr.Naga, the director of the serial. His reply to this post and the comments were as below:
Dear Mr.Suresh,
Read it.....thanx for the review and the faith reposed in me to end the serial on a balance note........
Sure, i will end it without taking sides.......either for or against any belief systems..........
I have not done so in any of my previous serials.......(I did only 24 episodes of Rudra Veenai and then walked out of it...well, "ammans & rudrans" entered after i exited...............and about Adhu mattum ragasiyam, its another story of me going out and Gods entering).
But to Mr.Dharumi.......kindly note, i have done other type of serials too.......comedies: Ramany Vs. Ramany I & II, Veetukku Veedu Looti and some social stories in Balachanderin Micro Thodargal: 1. Nizhal Vilayattu (about a teenage girl who comes as a paying guest in a house owned by a couple of old people who have a sad and secretive past) 2. Bachelors' party (about a late teenager who is raped by one of her four computer instructors in early twenties......and her struggle to find out who it is........not to get married like the heroines of the films but just to know the man who betrayed her faith).........[How hard one has to try, in this profession, to avoid getting branded or typecasted......!!?!!!!!!!]
Thanx, once again, to Suresh and all others who have given a thought to my serial....
indha kadithathai thamizhil adikka mudinthal nandraga irundhirukkum endra adhangathudan mudikkiren......
NAGA
Thanks for Mr.Naga's Reply and Patiththurai.
Ramanathar, TV paarththa, aval vikatan paticha brand panniduveenggale!
Mr. Naga,
i dont know and am not sure whether this feedback to your mail to Suresh would come to your attention. Still.......
வீட்டுக்கு வீடு..., ரமணி vs ரமணி ..எனக்குப் பிடித்தன. ஒரு முக்கிய காரணம்: ஒரே அழுவாச்சி சீரியல்களுக்கு நடுவில் அவை oasis in a desert! ஆனால், எப்படி உங்களது இந்த நல்ல சில சீரியல்களை உங்களோடு தொடர்புபடுத்தாமல் இந்த ரு.வீணை, மர்மதேசம், சி. ரகசியம் - இவைகளோடு மட்டுமே தொடர்பு கொண்டேன் என்பது தெரியவில்லை. (ரு.வீணை கடைசியில் கொஞ்சம் இழுவைதான்; நீங்கள் அதற்குக் காரணமில்லை என்பது சந்தோஷம்)
இன்னொரு சீரியல் - வர்மக்கலை தொடர்புடையது; இன்னொன்று கர்ப்பகத்தரு- அவைகள் உங்களுடையதா என்று தெரியவில்லை. வித்தியாசமாக இருந்தன.
Techniques , photography and acting -இவைகள் இந்த சீரியல்களில் எனக்குப் பிடித்த அம்சங்கள் -ஏற்கெனவே சொன்னதுபோல் X-Files மாதிரி.
புனே film institute பற்றிய எனது சந்தேகம்...?
என் "குற்றச்சாட்டு"க்கு உங்கள் பதில்..?ஏன் இந்த ஜாதகம், ஜோதிடம் போன்ற விஷயங்களை விட்டு வெளியே வரக்கூடாது...?
Hi everybody.....
Dharumi, yes, i am from FTII - Pune graduate of '86.
I accept the accusation. But again, i think, i have not grown out of my teenage, when i started questioning these "mooda nambikkai"s....!!
The serial about varma kalai is not mine, but of CJ Baskar (Chitthi fame)...The Karpagamaram one (Edhuvum Nadakkum) is mine, though unfortunately one had to discontinue due to commercial reasons of a secondary channel (Raj TV).
thank you, Mr Naga.
wish you a long journey with many more 'milestones'.
ஒருவரது நம்பிக்கை மற்றவருக்கு மூட நம்பிக்கை. ஈதர் பிரபஞ்சத்தில் அனைவரும் மிதப்பதாக அறிவாளிகள் நம்பிய காலம் உண்டு. Huygen-ஐப் பொறுத்தவரை ஒளித்துகள் மூட நம்பிக்கை. Heisenberg's Uncertainty Principle பல அடிப்படை புரிதல்களை மூட நம்பிக்கையாக்க வல்லது. உணர்ந்தறிதல் என்ற தளத்தில் உள்ள பல விஷயங்கள் மூட நம்பிக்கை என ஒதுக்கப்படுவது மேலை நாட்டு அறிவியலாளர் மத்தியில் வெகுவாகக் குறைந்து வருகிறது. Para Normal, Mind control, Mind body relationship குறித்த ஆராய்ச்சிகள் அதிகரித்துள்ளன. நாம் நம்பும் நம்பிக்கை தவிர மற்ற நம்பிக்கைகள் அனைத்தும் மூட நம்பிக்கை என நினைத்துக்கொள்வது arrogance or ignorance or இரண்டும் கலந்த ஒருவித மதவாதம்போன்ற மூட நம்பிக்கை என்றுதான் தோன்றுகிறது.
நன்றி பாவை, அருணகிரி.
அருணகிரி, மூட நம்பிக்கை என்று நான் கருதுவது, "எனக்கு எந்த உபயோகமும் இல்லாவிட்டாலும், வழிவழியாகச் செய்யப்பட்டது என்ற ஒரே காரணத்தல், எனக்குத் தேவை இல்லாத நிலையிலும் செய்ய்ம் செயல்". நிரூபிக்கப்பட்டால் (not on the averages, but scientifically) ஒத்துக்கொள்வதில் எந்தத்தயக்கமும் இல்லை.
'மூட நம்பிக்கை என்று நான் கருதுவது, "எனக்கு எந்த உபயோகமும் இல்லாவிட்டாலும், வழிவழியாகச் செய்யப்பட்டது என்ற ஒரே காரணத்தல், எனக்குத் தேவை இல்லாத நிலையிலும் செய்ய்ம் செயல்".'
நல்ல வரையறையாகவே தோன்றுகிறது. ஆனாலும் உபயோகம் என்பது காலவர்த்தமானங்களுக்கேற்ப வித்தியாசப்படும் என்பதை எண்ணிப்பார்க்கையில் இது சரியான வரையறைதானா எனவும் கேட்கத் தோன்றுகிறது. 18-இல் புரியாத, புரியாததாலேயே உபயோகம் இல்லையென்று ஒதுக்கப்பட்ட Ayn Rand பிறகு புரிகிறது. புரிந்தது என்று நினைத்ததன் complexities பிறகு புரிய வந்து நமது புரிதலின் ஆழமின்மை வெளியாகிறது. தனி மனித நம்பிக்கையைப் பொறுத்தவரை நம்பிக்கையா மூட நம்பிக்கையா என்பது பெரிய பிரச்சினை இல்லை. ஒரு சமுதாயத்துக்கே சிலர் நம்பிக்கை அல்லது மூட நம்பிக்கை எனக் கூறு பிரிக்க முற்படுகையில் விஷயம் சிக்கலாகிறது.
"நிரூபிக்கப்பட்டால் (not on the averages, but scientifically) ஒத்துக்கொள்வதில் எந்தத்தயக்கமும் இல்லை".
Experiential உண்மைகள் பலவற்றிற்கு Scientific நிரூபணம் இன்னமும் இல்லை; அதனால் அந்த உண்மைகள் பொய்யாகி விட மாட்டா. The onus of proof lies on science. இங்குதான் கீழை அணுகுமுறைக்கும் மேலை அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகிறது. கீழை அணுகுமுறையில் subjectivity-யும் முக்கியம். மேலை அணுகுமுறையில் objectivity-தான் முக்கியம். ப்ளேட்டோவை மீறிய அரிஸ்டாட்டில் அணுகுமுறையின் விளைவு இது. இந்த அணுகுமுறைதான் அதன் வலிமை, இந்த அணுகுமுறைதான் அதன் குறையும்கூட.
உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால் மனித மனம் மற்றும் சிந்தனை பற்றி objective-ஆக ஆராய்ந்து முடிவெடுக்க முடியுமா, யோசித்துப்பாருங்கள். இல்லையென்றால் அவை மூட நம்பிக்கை என்று புறம் தள்ளி விடுவதா? statistical averages-இல்தான் பல சமயம் அடைக்கலம் காண வேண்டி இருக்கிறது (அல்லது objectivity-யைக் கைவிட வேண்டும்). அளவிடப்படும் முயற்சியே அளவிடும் விஷயத்தை மாற்றி விடுகிறது என க்வாண்டம் அறிவியல் சொல்கையில், என்ன objectivity பேசி என்ன பயன்?
எனினும் நீங்கள் சொல்ல வருவதன் சாரம் புரிகிறது.
சுரேஷ்,
நானும் சிதம்பர ரகசியத்தின் ரசிகன் தான்.அதைப் பற்றி ஒரு பின்னுட்டமும் இட்டிருக்கிறேன்.ஆனால் கடந்த மாதமாக அரைத்த மாவையே அரைக்கிறார்கள்.இந்த சீரியலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு Fஒர்ம் வந்து கொண்டிருக்கிறது.அதற்காக நான் எழுதியதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இனி..
அடுத்த வாரம் வரவிருக்கும்(எப்போதும்) 'சிதம்பர ரகசியத்தின்' உரையாடல்கள்.(காட்சி அமைப்புகள் கூட).
ஆகாஷ் பாட்டி:வாடாப்பா..சித்த இரு..நான் போய் காப்பி எடுதுண்ட்டு வரேன்..நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் 'அதை'ப் பற்றி சொல்ல மாட்டேன்..(ஏன்னா என்க்கே 'அது' தெரியாது)..
பிச்சைக்காரன் 1: கிரீம் பிஸ்கட்டில் கிரீம் இருக்கும்.நாய் பிஸ்கட்டில் நாய் இருக்காது! யோசி..பிரிட்ஜில லைட் எரியுதுன்னு அங்கே போய் இருந்து படிக்க முடியுமா? யோசி.
குடோனில்(அதாவது போலீஸ் ஸடேசன்).ஒரு 40 வாட்ஸ் பல்பு கீழ்..எடிட்டர் உட்கார்ந்திருக்கிறார்.
ஆரியபாதம்:சொல்லுங்க குமரகுரு ஏன் இப்படி பண்ணீங்க??
இந்த கேள்வியைக் கேட்ட உடன் ஒரு 'அஜீரண' எபக்ட்டில் ,முடி எல்லாம் சிலிர்த்து ஒரு லுக் விடுகிறார் எடிட்டர்.
குமரகுரு: நான் ஏன் அப்படி பண்ணணும் ??
ஆரியபாதம்: So .நீங்க இதை பண்ணலை...
(இந்த நேரத்தில் நம்ம ரேகன் ஒரு 'சங்கு' எபக்ட்டில் ஒரு சவுண்டு விடறார்..அதே நேரத்தில் நம்ம கேமரா ஒரு 360+180+360 ஆங்கிளில் திரும்பி ஒரு வாட்டர் பாட்டில் பக்கம் வந்து நிற்கும்).
அபிராமி(கதாநாயகி!!):ஏன்னா..(ஆகாஷைப் பார்த்து) உங்களுக்கு தோஷம் இருகுன்னு என்னோட தோப்பனாருடைய குருவோட கொள்ளுத்தாவோட சின்ன மாமனார் அடிக்கடி சொல்லுவார்..அது இப்போ உண்மையாடுத்துதே..இருங்கோ போய் விக்ஸ் எடுத்துண்டு வரேன்...(ஜல தோஷத்திற்கு)..
ஆகாஷ்(மனதிற்குள் சந்திரமுகி பிரபு ஸ்டைலில்):என்ன கொடுமையா இது..எங்கயாவது ஒரு America ரிடனுக்கு இப்படி ஒரு ஜோடியா??
தீட்ச்சதர் (தில்லைராஜனைப் பார்த்து) :அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்... பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்.. ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது. டீ கப்ல டீ இருக்கும்.. ஆனா வேர்ல்டு கப்ல வேர்ல்டு இருக்காது. இவ்ளோதான் உலகம்..புரிஞ்சுக்கோங்கோ(என்னா நாகா சார் டயலாக்கை கரெக்டா சொல்லிட்டேனா ? )
அந்த சமயம் தீட்சதரின் சகோதரி...:அண்ணா விஷம் கொடுங்கண்ணா...
தீட்சதர்: இவ பண்ணிண பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன் ஆயிடும்... ஆனா பாய்சன் பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது.
இதைக் கேட்டதும் தில்லை ராஜன் ஏதோ புரிந்தது போல விரல்களை வைத்து 'கணக்கு' போடுகிறார்.
தில்லைராஜன்:நீங்க சொல்லறத்து கரெக்ட்டுதான்..அது..வந்து ..இப்போ எஞ்சினியர் காலேஜ்ல படிச்சிட்டு எஞ்சினியர் ஆகலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடெண்ட் ஆகமுடியுமா?
பத்மராஜன்(அழுது கொண்டே): உன்க்கு நான் இருக்கேன்மா..நீ எதுக்கும் கவலைப்படாதே..இந்த அண்ணன் காலம் முழுக்க வச்சு காப்பாத்துவேன்..
நாகா:கட்.. கட்..டேய்..வேற சீரியலில் பேசற டயலாக்கை இங்க பேசாதே..(மனதிற்குள்) இதான்பா பல சீரியல்கள நடிகறவன் போட்டா வர தொல்லை...
Forum Members(Afer this serial)
Member 1
பாயசம்,பாய்சன்..ஏதோ மேட்டர் இருக்க்கு..நீங்க நல்லா பார்த்தீங்கனா ஒன்னு புரியும்..தில்லை விரல்களை ஆட்டி ஒரு சைகை பண்ணுவார்..அதுல ஒரு க்ளு இருக்கு...
நாகா(வடிவேலு டைலில்):ஆகா..கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா
Member 2தேள் கொட்டும் அப்படினு தீட்சதர் சொன்னார்..நான் என்ன நினக்கிறேனா..எல்லா கொலையையும் பண்ணினது தேள் தான் அதைத்தான் தீட்சதர் சொல்லாமல் சொல்லறார்.
Member 3கண்டிப்பாக தேள் இருக்க முடியாது ஏன்னா நாயைப் பத்தியும் சொல்லியிருகிறாரே..
நாகா(வடிவேலு ஸ்டைலில்):இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்கிட்டாங்கய்யா...
ஆமா, நீங்கெல்லாம் டிவி சீரியலைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கீங்களா? இது எப்ப வந்துச்சுப்பா?
( ஐய்யோ, யாரும் அடிக்க வந்துராதீங்க)
தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி சீரியல்களை[ப் பத்தி ஒண்ணுமே தெரியாத அப்பாவியா இருந்த(!) நான்
ஃபிப்ரவரி மாசம் முழுக்க( அப்பப்ப நடுநடுவிலே விட்டதுஒரு கணக்கா?) மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக்
கலந்து செல்வி, வேப்பிலைக்காரி, அப்புறம் ஒண்ணு குழந்தையைக் கடத்தி வச்சுட்டு, கெளசல்யா டபுள் ஆக்ட்டுக்
கொடுத்துச்சேப்பா அது, தங்க வேட்டை நாலு மொழிகளில், இப்படிப் பார்த்துட்டு உருத்தெரியாம இங்கெவந்து
சேர்ந்தேன். ஆனா அப்ப இந்த ரகசியத்தைப் பாக்காமப் போயிருக்கேன்னா பாருங்க. வந்து போயிருச்சா இல்லே
வந்துக்கிட்டு இருக்கா?
கொஞ்சம் சொல்லுங்கப்பா.
முடிஞ்சா வலை ஏத்திவுடுவீங்களா? சீரியலைத்தான் சொல்றேன்:-)))
இதுலே மாயக்கூத்தன் கிருஷ்ணன்றவர் பின்னூட்டியிருக்கார் துளசியின் கணவர் இல்லேன்னா YG.(-:
துளசியக்கா,
ஏற்கனவே வலையில் பல சீரியல்கள் இருக்கின்றன. இங்கே போய் இலவசமாய் பெயரைப் பதிந்துகொள்ளுங்கள், சீரியல்களை ரசியுங்கள்.
www.tamilserial.com
http://webtamil.net/phpBB2/
www.shiningstarnet.tk
இதுபோல இன்னும் எண்ணற்ற தளங்கள் உள்ளன. சட்டென நினைவுக்கு வந்தவை இவைகள்தாம்.
பினாத்தல் சார், கடைசி சில வாரங்களில் நாகா கொஞ்சம் ஜவ்வி விட்டதுபோல் உணர்ந்தேன். இந்த சீரியலின் கடைசி அத்தியாயம் பார்க்கவில்லை. என்ன ஆயிற்று இறுதியில்?
அருணகிரி,
உங்கள் வருகைக்கு நன்றி.
//கடைசி சில வாரங்களில் நாகா கொஞ்சம் ஜவ்வி விட்டதுபோல் உணர்ந்தேன்// கொஞ்சமா? Understatement:-)
முடிவு, எடிட்டர் தன் டாக்டர்பெண்ணால் கொல்லப்படுகிறார், எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்து Happily ever after! முடிவு இன்னொரு ஏமாற்றம்!
Post a Comment