Cliffhanger படம், சென்னையில் தூக்கப்படுவதற்கு ஓரிரு நாள் முன்னதாக தேவியில் பார்த்தேன். கூட்டம் குறைவாக இருந்தாலும், ஏஸி முழு அளவில் போடப்பட்டிருந்ததாலோ, படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க பனிமலையில் இருந்ததாலோ தெரியவில்லை - மே மாத சென்னை வெக்கையையும் மீறி படம் பார்க்கையில் ஒரு குளிர் பரவி, பனிமலைக்குள் இருப்பது போல் உணர்ந்தேன்.
அதற்கு முழுக்க முழுக்க எதிர்மறையாக, குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட துபாயில், ஏழே பேர் திரையரங்கில் இருந்தும், வெயிலின் வெக்கையில் வேர்க்கும் அளவிற்கு காட்சிகளுக்குள் இழுத்துவிட்டார் வசந்தபாலன்.
வாழ்க்கையின் எல்லாப் பரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை மிக இயல்பாக எடுத்துச் செல்கிறார் இயக்குநர். (கதையை விரிவாக சென்னைக்கச்சேரியார் சொல்லிவிட்டார்)
குறிப்பாக அந்த முதல் பாடலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. திருட்டுச் சோளத்தைச் சுட்டுத் தின்பது, குட்டையில் ஒலிம்பிக் ஜம்ப் செய்து குளிப்பது, சூடுகொட்டையைத் தேய்த்து தூங்குபவனை எழுப்புவது, பம்பர விளையாட்டின் Ultimate insult -பிஸ்கட் எடுப்பது -- நான் அனுபவித்த எதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்துவிட்டார்கள்? மிகமிக இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் இன்னொரு சிறப்பம்சம் - இயல்பான பாத்திரப்படைப்புகள் - நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரிக்க முடியாமல் எல்லாப்பக்கமும் அவரவர் நியாயம் இருப்பதை உணர்த்தியிருக்கும் பாத்திரங்கள். திருட்டு சினிமா, திருட்டு பீடிக்கு கோபமடைந்த அப்பா வெயிலில் வாட்டியதால் வீட்டை விட்டு வெளியேறும் முருகேசனின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் தீப்பெட்டி கம்பெனிக்கு அனுப்பாமல் கஷ்டப்பட்டாவது படிக்க வைத்த அப்பனின் ஆறாத கோபமும் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
தங்கைகள் தன்னை மதிப்பதில்லை என்று குமுறும் முருகேசனுக்கு வீட்டில் இருந்து கஷ்டப்பட்டுப் படிக்கவைத்த அண்ணனை விட, வீட்டைவிட்டு ஓடியவன்மேல் எப்படி பாசம் வரும் என்று நியாயமான கேள்வி வைக்கப்படுகிறது.
முக்கியமான சிறப்பம்சம் - நடிப்பு.. பசுபதியின் திறமையை வேறு வகைகளில் விருமாண்டியிலும், மும்பை எக்ஸ்பிரஸிலும் பார்த்திருந்தாலும், இந்தப்படம் அவருக்கு ஒரு கிரீடச் சிறகு! தோல்வியடைந்தவன் என்பதை பாடி லேங்குவேஜிலேயே சொல்வதாகட்டும், அப்பா தங்கைகள் மதிக்காததற்கு குமுறுவதாகட்டும், தம்பியிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வது என்று திணறுவதாகட்டும் - அசத்தியிருக்கிறார். ஒன்றிரண்டு விருதுகள் நிச்சயம்.
பசுபதி மட்டுமல்ல, பரத்தின் நடிப்பும் குறிப்பிடப்படவேண்டியதுதான். காட்சிகள் குறைவாக இருந்தாலும் ஒரு கிராமத்து -கோபக்கார-பாசக்கார-துடிப்பான இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.
அப்புறம் அந்த அப்பா - பேர் தெரியவில்லை - நடிக்கவில்லை.. வாழ்ந்திருக்கிறார்.
அம்மா டி கே கலாவின் ஒன்றிரண்டு மிகையை விட்டுப்பார்த்தால் எல்லாரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
குறைகளே இல்லையா? நிறையவே இருக்கின்றன!
1. அளவுக்கதிகமான வன்முறை - வெயிலுக்குப் பதிலாக ரத்தம் என்றே வைத்திருக்கலாம் என்னும் அளவிற்கு! குடும்பப்படத்துக்கு இவ்வளவு ரத்தம் தேவையா? சண்டைக்காட்சிகள், வில்லன்கள் பட்டாளம் இல்லாமல் இந்தக்கதையைச் சொல்லியிருக்க முடியாதா?
2. பாவ்னாவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று ஜொள்ளன் கூறினாலும், அந்தப்பாத்திரமோ, அதன் காட்சிகளோ திரைக்கதை நகர்வுக்கு உதவாமல் ஒட்டாமல் இருக்கின்றன - குறிப்பாக அந்த பெப்ஸி உமாவைக் கிண்டல் செய்யும் நகைச்சுவை(?) காட்சி- இன்னும் எத்தனை நாள்தாண்டா அதையே செஞ்சுகிட்டிருக்கப்போறீங்க? அதேபோல ஒவ்வொரு ப்ரேமிலும் யதார்த்தத்தைக்காட்டிய படத்தில் இவர்களின் டூயட் கேண்டீன் விற்பனையை அதிகரிக்கவா?
3. இசை! முதல் பாடல்கூட மனதில் ஒட்டவில்லை - காட்சி அமைப்புகள் மட்டுமே. பின்னணி இசை -இன்னும் எவ்வளவு நாள்தான் இளையராஜாவை எண்ணி ஏங்க மட்டுமே முடியுமோ?
4. திணிக்கப்பட்ட மெலோட்ராமாக்கள் - அதை இழுத்திருக்கும் இயக்குநர். வெயிலில் அம்மணமாக படுக்கப்போடும் தண்டனையையும், காதல் தோல்வியின் வேதனையையும், அப்பா அம்மா சந்தேகப்படுவதையும் இன்னும் சுருக்கமாகவே சொல்லியிருக்க முடியும் - ரசிகர்கள் மேல் நம்பிக்கைக் குறைவா?
5. விளம்பரக்கம்பெனி சம்மந்தமான வேலையில் ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு படம் முழுக்க இன் லைன் அட்வர்டைஸ்மெண்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார்! இயக்குநர் ஷங்கர் இயக்கும் படத்துக்கு ஆகும் செலவில் 1/10 இல் முடித்திருக்கிறார்.. அதேபோல, பசுபதியின் காதலில் வரும் காட்சிகளுக்கு பின்னணி இசையாக இளையராஜாவும் தேவாவும் - பழைய திரைப்படக்காட்சிகளாக!
இருந்துட்டுப் போவுது! எந்தப்படம்தான் குறையே இல்லாம இருக்கு?
மொத்தத்தில் - நல்ல படம் - பார்க்கலாம், ரசிக்கலாம்.
Dec 20, 2006
வெயில் (20 Dec 06)
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
சில காட்சிகள் தேன்.ரெம்ப நல்லா வந்திருந்தது.
நிசயம் இந்தப் படம் பாக்கணுங்க..
இப்பெல்லாம் படங்கள்ல அப்பாவத்தான் வில்லனா காண்பிக்கிறாங்க.. :)
நாம அனுபவித்தத நம் குழந்தைங்க அனுபவிக்கலியேன்னு சொன்னீங்களே... டச்சிங் போங்க..
(அவுங்க அனுபவிக்கிறத நாம அனுபவிக்கலியேன்னு பசங்க சொல்றாங்க..அதுவும் நியாயம்தான்)
Good post. All the best.
நன்றி சிறில்.
//இப்பெல்லாம் படங்கள்ல அப்பாவத்தான் வில்லனா காண்பிக்கிறாங்க.. :)//இந்தப்படத்துலே அப்பாவை எம்டன் மகன் அப்பா மாதிரி ரொம்ப மோசமா எல்லாம் காமிக்கலையே.
//அவுங்க அனுபவிக்கிறத நாம அனுபவிக்கலியேன்னு பசங்க சொல்றாங்க..அதுவும் நியாயம்தான்// என்னத்த அனுபவிச்சாங்க? நாம அனுபவிச்சது எல்லாம் irreplaceable!
கம்பெனியிலயே டிக்கெட் குடுத்துடறாங்களா?
நாளைக்குதான் போறேன். பார்த்துட்டு வந்து சொல்றேன்!
தம்பி:-)
என்னாது கம்பெனியிலே சினிமா டிக்கட்டா? சினிமா பாத்ததுக்கு ஃபைன் கட்டாம இருந்தா போதாது?
சொல்ல மறந்துட்டேன். ஒரு முறை கலேரியாவுக்கு போன் பண்ணிட்டு போங்க.. நேத்து என் பேமிலியையும் சேத்து 7 பேர் இருந்தாங்க! நீங்க போறதுக்குள்ள "தலைமகன்" மாத்தியிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல.
பாத்துட்டேங்க சுரேஷ்!
படம் ரொம்ப இயல்பா, நல்லா இருக்கு!
Post a Comment