Nov 5, 2005

மேலும் ஒரு கடற்கரை சந்திப்பு 03 Nov 05

அமீரக வரலாற்றில் முதல் முறையாக, புஜைராவை ஒட்டி உள்ள கல்பா கடற்கரையில் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. சம்பிரதாய முறைப்படி, என்ன சாப்பிட்டோம் என்பதைக்கூறிவிட்டு, பிறகு என்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பதைக் கூறுகிறேன்.

காலையில் எடுத்துச் சென்ற உணவு வகைகள் மதியத்துக்குள்ளேயே தீர்ந்துவிட்டதால், கடற்கரையிலேயே இருந்த டுபாக்கூர் உணவகத்தில் இருந்து, சுடச்சுட சமோசாக்களையும் (சமைத்து ஐந்தே நாள் ஆனது), காப்பியையும் குடித்து வயிற்றுக்கு சிறிது ஈந்த பின்னர், செவிக்கும் ஈய ஆயத்தமானோம்.

சந்திப்பில் கலந்துகொண்ட ஒவ்வொரு பெயரையும் கூற முடியாது என்பதால், முக்கியமான சிலர் பற்றி மட்டும் (ம்ஹூம் நீ சரிப்பட மாட்டே!):

நுனிப்புல் (ஃபுஜைரா கடற்கரையில் இயற்கையான புல் கிடையாது என்பதால், இவர் வரவு கடற்கரைக்கு பசுமை சேர்த்தது) தன் கணவருடன்,

உங்கள் உண்மையுள்ள (yours truly) புரட்சிப்பினாத்தலார் தன் ரத கஜ துரக பதாதியுடன் (அப்படீன்னா என்னங்க?),

பதிவிட இன்னும் தொடங்காமல் அவ்வப்போது பின்னூட்டம் மட்டும் கொடுக்கும் தென்றல் தன் குடும்பத்துடன்,

90களில் கையெழுத்துப்பத்திரிக்கையாகத் தொடங்கி, அதன் விஞ்ஞான நீட்சியாக வலைப்பதிவுலகிலும் தடம் பதிக்க இருக்கும் குளம் வலைப்பூவின் ஆறு எழுத்தாளர்களில் இருவரும்

மற்றும் பலரும் (இப்படிப் போடறதும் சம்பிரதாயம்தான்) கலந்து கொண்டனர்.

என்ன விவாதித்தோம்?

1. வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது எப்படி?

2. தீபாவளி ஆரியர் பண்டிகையா?

3. குஷ்பூவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பெண்ணியவாதிகளா?

4. செம்மொழித் தமிழை எவ்வாறு மேம்படுத்தலாம்?

5. இலக்கியம் என்பதின் இலக்கு யாது?

என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல், பொதுவான விஷயங்களை மட்டும் பேசிவிட்டு, பேச்சில் கலந்து கொள்ளாதவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் ஆவதில் கோபம் காட்டக்கூடிய சாத்தியக்கூறு இருந்ததால் ஒன்றரை மணி நேரத்தில் ஜூட் விட்டு விட்டோம் - இனி அடிக்கடி சந்திக்க முயலுவோம் என்ற வாக்குறுதியுடன்.

6 பின்னூட்டங்கள்:

ramachandranusha said...

குடும்ப பொறுப்பு என்ற சாகரத்தில் மூழ்கியிருந்த பினாத்தலார் காதில் நாங்கள் பேசிய இலக்கிய பேச்சுகள் காதில் விழாமல் போனதில் ஆச்சரியமில்லை. ஆகவே
"தென்றல் வாம்மா".
செந்தில், லாவண்யா- இவர்கள் இருவரும் குளம் என்ற பதிவை ஆரம்பித்துள்ளார்கள். நல்ல
நாள் பார்த்து, தமிழ்மணத்து ஜோதியில் ஐக்கியமாவர்கள்.இவர்கள் மற்றும் தென்றலுடன் பேச்சு சுவாரசியமாகப் போனது. இலக்கியம், எழுத்து, எழுத்தாளர்கள், பெண்ணீயம் எல்லாம் அலசப்பட்டது.
சுரேஷ் என்ன பேசினார் என்பதற்கு பதில் முதல் வரி :-)

ramachandranusha said...

சிறு திருத்தம்- லாவண்யா இல்லை. சுதா என்று மாற்றிப் படிக்கவும்.

தாணு said...

உஷா
துலசி செய்ததுபோல் போட்டோவும் போட்டிருக்கலாம்.
சுரேஷ் பதிவே பினாத்தல்தானே, அதிலேயே அமிழ்ந்துவிட்டார் போலும்

Muruga said...

Ean ippadi ellam thalaippu vaithu, ondraiyum urupadiyaga eluthamal... mikavum nallathu. nandri.

முகமூடி said...

// 1. வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது எப்படி?
2. தீபாவளி ஆரியர் பண்டிகையா?
3. குஷ்பூவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பெண்ணியவாதிகளா?
4. செம்மொழித் தமிழை எவ்வாறு மேம்படுத்தலாம்?
5. இலக்கியம் என்பதின் இலக்கு யாது? //

இதையெல்லாம் பேசாமல் ஒரு சந்திப்பு நடந்தால் அது வெறும் பொதுஜன சந்திப்பு..., வலைப்பதிவாளர் சந்திப்பு அல்ல என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

உஷா,
உண்மைதான். பல தடங்கல்களால், சந்திப்பு நிகழ்ந்த நேரத்தில், முழுமையாக விவாதத்தில் பங்கு கொள்ள முடியாமல் போய் விட்டது. அதனால் என்ன? நீங்கள்தான் ஷார்ஜா வராமல் இருக்கப் போகிறீர்களா அல்லது நான் தான் புஜைரா வராமல் இருக்கப் போகிறேனா?

தாணு,

போட்டோ கொஞ்சம் தினத்தந்தி ஸ்டைலில் வந்துவிட்டது. (மூன்றாம் வரிசையில் நான்காவதாக நிற்கும் நபர்தான் ஸோ அன்ட் ஸோ என்று விளக்கம் கொடுக்கும் அளவிற்கு!)

முருகா,

உங்களுக்கு எதில் வருத்தம்? தலைப்பிலா அல்லது உள்ளடக்கத்திலா? நீங்களாவது(?!) சற்றுத் தெளிவாக எழுதி இருக்கலாம்.

ப ம க தலை,

மேற்படி தலைப்புகள் இல்லாவிடினும், விவாதப்பொருள்கள் சூடாகவும் சுவையாகவுமே இருந்தன (சமோசாவைப்போல் இல்லை)

 

blogger templates | Make Money Online