Sep 12, 2007

கலவர பூமியில் காத்து வாங்கின கதை!

ஊருக்குப் போனதும், எதாவது ஒரு மெகா ட்ரிப் அடிப்பது வழக்கமாகிவிட்டது. மெகா ட்ரிப் என்பது நாட்களின் கணக்கல்ல, ஆட்களின் கணக்கு. என் குடும்பம் கொஞ்சம் பெரிசு. 3 அக்காக்கள், 2 அண்ணன்களுடன் பிறந்த கடைக்குட்டி நான். அனைவரும் இந்திய ஜனத்தொகைக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து இருப்பதால் 20 - 25 டிக்கட் சேர்ந்துவிடும். எல்லாரும் சேர்ந்து செல்லத் தேர்வு செய்த இடம் குற்றாலம்.
 
செங்கல்பட்டிலிருந்து புகைவண்டி (தொடர்வண்டியோ?) தென்காசி வரை என்றும், அங்கே வேன் வைத்து லோக்கலாக எல்லா இடங்களுக்குச் செல்லவும் முடிவெடுத்து புக்கிங் எல்லாம் முடித்து, பயணத்துக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கும் வேளையில்தான் சன் நியூஸில் தென்காசியில் மதக்கலவரம், பற்றி எரிகிறது, தென் தமிழ்நாட்டில் பரபரப்பு என்றெல்லாம் செய்தி. சன் நியூஸின் பரபரப்பு தெரிந்த விஷயம்தான் என்றாலும், குஞ்சு குளுவான்களுடன் கலவர பூமிக்குச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு யாருக்கும் என் அளவுக்கு இல்லை. (அவர்கள் கலவரம் பார்த்ததில்லை) மைனாரிட்டி ஆட்சியில் கூட்டணி பேச்சு கேட்டு மூட்டையைக் கட்டியாகிவிட்டது.
 
தென்காசியில் ஓட்டலுக்குச் செல்லும்போது கொஞ்சம் பயம் எல்லாருக்குமே வந்தது. ஜனாதிபதி விஸிட் போல 10 அடிக்கு ஒரு போலீஸ், 30 அடிக்கு ஒரு ரையட் கண்ட்ரோல் வாகனம்.
 
பயப்பட்டது தேவையில்லை என சிறிது நேரத்திலேயே தெளிவாகிவிட்டது. நட்பாகிவிட்ட ஒரு போலீஸ்காரர் Matter-of-fact ஆகச் சொன்னார்.. "ரெண்டு பக்கமும் மூணு மூணுன்னு விழுந்ததிலே பேலன்ஸ் ஆயாச்சு. கொஞ்சம் கூடக்குறைச்சல் இருந்திருந்தா இன்னும் தொடர்ந்திருக்கும்! 40 பேரை அர்ரெஸ்ட் செஞ்சிருக்கோம்.. எல்லாம் 20-25 வயசுப் பையனுங்க! ஏன் தான் புத்தி இப்படிப் போவுதோ!"
 
டீக்கடை வாசலில் பிச்சை எடுக்கும் ஒரு ஊமை சொன்னார், "இங்கதான்.. இந்தச் சந்துலதான் வெட்டிப்போட்டானுங்க! எவ்ளோ ரத்தம்! ஒரு துளி ரத்தம் ஊற எவ்வளவு செலவாகுது!" ஊமை என்றுதானே சொன்னேன்? அவர் உடல்பாஷையிலும் ராகத்தோடும் சொன்னது இவ்வளவு தெளிவாகப்புரிந்தது!
 
கலவர பயத்தை மூட்டை கட்டிவிட்டு தென்காசியின் தென்றலை அனுபவிக்க ஆரம்பித்தோம். இந்தப்பயணத்தில் நான் தொட்ட, நீங்களும் நிச்சயம் தவறவிடக்கூடாத இடங்கள் என்று நான் பரிந்துரைக்கும் இடங்கள்:
 
1. தென்காசி விஸ்வநாதர் கோவில்: பிரம்மாண்டம். கோபுரத்திலிருந்து கோவிலுக்குள் செல்லும்போது காற்று திசைமாறுகிறது, கோவிலுக்குள் அழைக்கிறது என்று கோபுர அதிசயமாகச் சொல்கிறார்கள், எழுதிவைத்திருக்கிறார்கள். அதிசயமோ இல்லையோ அற்புதமான சுத்தமான காற்றும் சூழ்நிலையும் பக்தியைக் கூட்டிவிடுகிறது! அருமையான அனுபவம்.
 
2. புளியரை என்று ஒரு ஊர்.. தென்காசியிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டரில். தக்ஷிணாமூர்த்தி கோவில்தான் இந்த ஊருக்கு முகவரி கொடுக்கிறது என்றாலும், ஏரியும் இல்லாமல், நதியும் இல்லாமல்  ஒருபக்கம் படித்துறையும், மறுபக்கம் நதிநீர்வரத்தும், நடுவே தாமரை அல்லி, மொத்தத்தில் ஓட்டம் இல்லாத குளம். குளிக்க முடியாத நேரத்தில் இங்கே சென்றது மிகப்பெரிய வருத்தம். கோவில் ஒரு 50 அடிக்குன்று. இருபக்கமும் இயற்கையும் விவசாயமும் சேர்ந்து செய்திருக்கும் பச்சை மாயம்.. பார்த்தால்தான் தெரியும். அங்கேயே இருந்துவிடலாம் போல இருந்தாலும், மாலை மங்க குளிர் தொடங்க, மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டது அந்தப்பொழுதுக்கே ஒரு பேண்டஸித்தன்மையைக் கொடுத்தது!
 
3. பாபநாசம் அப்பர் டேம், பாணதீர்த்தம் - வேன் செல்ல முடியாது என்று சதி செய்து 3 கிலோமீட்டருக்கு மேல் நடக்கவிட்டார்கள்! வழிக்களைப்புக்கு நாகப்பழமும், சீவல்போல வெட்டப்பட்ட மாங்காய்த்துண்டுகளும்! முடிவில் தெரிவது ஒரு விஷுவல் ட்ரீட்!  நான்குபுறமும் மலையால் சூழப்பட்ட நீர்த்தேக்கம், கூட ஒரு அணை! அங்கிருந்து படகில் 5 கிமீ சென்று மேலே ஏறினால் வரவேற்கிறது பாணதீர்த்தம் அருவி.தமிழில் முதல் சிறுகதை எழுதிய வ வே சு அய்யர் இங்கே இருந்துதான் விழுந்து தற்கொலை செய்துகொண்டாராம் என்ற என் ட்ரிவியாவை விற்க ஆள் தேடினால் யாரும் இல்லை. 40 அடி உயரத்திலிருந்து கோபமாகக் கொட்டும் அருவியின் அடிவாங்க அத்தனை பேரும் ஓடிவிட்டார்கள்! யப்பா! என்ன அடி.. எனக்குத் தெரிந்த பிஸிக்ஸில் கணக்குப்போட்டுப் பார்த்தால் ஏறத்தாழ 50 கிமீ வேகத்தில் அரைகிறது தண்ணீர்.. ஆனால் வலிக்கவில்லையே.. சுகமாகத்தானே இருக்கிறது!
 
4. பாலருவி.. குஷியில் ஜோதிகா குளித்த இடம் என்று சொல்லித்தான் மார்க்கட்டிங் செய்கிறார்கள். பாடல் பெற்ற திருத்தலம் (மேகம் கருக்குது ஜகஜக்க ஜகுஜிக்) என்ற போதிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. இங்கு ஒரு 60 அடி உயரத்திலிருந்து ஆக்ரோஷமாக விழும் அருவி, ஒரு சிறு ஸ்விம்மிங் பூலையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அடிவாங்கிக் கஷ்டப்பட்டவர்கள் நீந்திக்கொண்டு இளைப்பாறலாம். சில்லென்ற நீரும், மூலிகை கலந்த காற்றும் நம்பமுடியாத பரவசம்!  தென்காசியிலிருந்து 40 கிமீ போகும் மலைப்பாதை பார்க்க ரம்யமாக இருக்கிறது, ஆனால் ஒழுங்காக எதையும் தெளிவாகப் பார்க்கவிடாமல் தூக்கித் தூக்கிப் போடும் ரோடு! ஏன் இவ்வளவு மோசமான ஒரு சாலையோ.. இத்தனைக்கும் இரு மானிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை!
 
இந்த லிஸ்ட்டில் குற்றாலத்து அருவிகளைச் சேர்க்கப்போவதில்லை. அருவிகளுக்கு ஒரு குறையும் இல்லை, தண்ணீரும் தாராளமாகவே இருந்தது. ஆனால் பிரச்சனை அதன் பிரபலம். நடிகர்களுக்கு மாலீஷ் போட்ட புகைப்படங்களைக் கடையில் வைத்து எண்ணெய் தேய்க்கும் வீரர்கள், ஊருக்கும் தெருவுக்கும் அருகாமையில் இருப்பதால் ஏறும் கூட்டம்.. இத்தனைக்கும் வார இறுதிகூட இல்லை. 200க்கு மேற்பட்டவர் குளித்தால்தான் ஒழுங்குசெய்வோம் என்று 199 பேர் இருக்கும் இடத்துக்கு நெருங்காத போலீஸார். வலிமையே வாழும் (குளிக்கும்) என எண்ணெயை குளித்து வெளியே வருபவன் மேல் தேய்த்தவண்ணம் செல்லும் மக்கள்..உள்ளே சென்றால் வெளியே வரக்கூடாது என்ற திண்ணிய எண்ணம் கொண்டு, எண்ணிய முடிபவர்கள்.. உள்ளே நுழைந்தவுடன் எப்போது வெளியேறப்போகிறோம் என்ற ஆர்வத்தை உண்டு செய்துவிட்டது.
 
என் பலத்தைக்கொண்டு உள்ளே போகமுடியாமல் அடிபட்டு, மிதிபட்டு எப்படியோ சிலமீட்டர்கள் உள்ளே சென்றவுடன் வந்த ஆத்திரத்தில் பக்கத்தில் முட்டிக்கொண்டு நின்ற சிறுவனின் காலில் ஓங்கி ஒரு மிதிவிட்டேன். (பெரியவர்களைத் தொடவா முடியும்?).. குளித்து வெளியே வந்தால் அக்கா பையன் சோகமாக நின்றுகொண்டிருந்தான்..
 
"என்னடா ஆச்சு?"
 
"எவனோ ஒரு ஸ்டுப்பிட் காலை ஓங்கி மிதிச்சுட்டான் மாமா!"
 
பி கு: கேமரா எடுத்துச் செல்பவர்கள் பேட்டரியும் பேட்டரி சார்ஜரும் எடுத்துச் செல்லவும்.
 
பி பி கு: இந்த அழகையெல்லாம் கேமராவில் சிறைப்படுத்துவது இயலாது என்பதால் மட்டுமே நான் போட்டோ எடுக்கவில்லையே தவிர, முதல் பி கு காரணம் அல்ல :-)

26 பின்னூட்டங்கள்:

அபி அப்பா said...

சூப்பர் போங்க, அக்கா பையன் கால் இப்ப எப்படி இருக்கு:-)

மைனாரிட்டி அரசின் கூட்டணி ஆதரவால்:-))

வழக்கம் போல கலக்கல் வேகம் எடுத்து இருக்கு, கலக்குங்க!

சுல்தான் said...

கேமராவும் போட்டாவும் தேவையேயில்லை. உங்கள் பதிவில் நேரில் பார்க்கிற மாதிரியே இருக்கிறதே.

இந்த டூர் ஆபரேட்டர்களைச் சொல்லணும். எங்களுக்கெல்லாம் முக்கிய அருவி, ஐந்தருவி மட்டும் காண்பித்து விட்டு, பன நொங்கு வாங்கிக் கொடுத்து ஊருக்கு அனுப்பிச்சிட்டாய்ங்க.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அபி அப்பா..

காலை மிதிச்சேன்னுதானே சொன்னேன்.. உடைச்சேன்னா சொன்னேன்? ஒரு பிரச்சினையும் இல்லை சார்..

நன்றி சுல்தான்..

நாங்க எந்த ப்ளான், டெட்லைன் எதுவும் இல்லாம, ஊர்மக்கள்கிட்டே பேசி இங்கேயெல்லாம் போக முடிவெடுத்தோம். (முக்கியமா ட்ராவல்ஸ்காரங்ககிட்ட பேசக்கூடாது)

கப்பி பய said...

அட போன வாரம் தான் நானும் இந்த ஏரியால ரவுண்ட் அடிச்சேன்...பாணதீர்த்தம் பார்த்து வாயடைச்சு போச்சு..நாங்களும் போட்டோவோட கூடிய சீக்கிரம் பதிவு போடுவோமுல்ல :)))

பினாத்தல் சுரேஷ் said...

கப்பி பய,

//நாங்களும் போட்டோவோட கூடிய சீக்கிரம் பதிவு போடுவோமுல்ல :))) //

வெந்த புண்ணுல வேலைப்பாய்ச்சறீங்க பாத்தீங்களா :((

Anonymous said...

penathal ,
you make my day.
god bless you for all the sense of humour you have. mr kothsu too.you both make blog reading a very entertaining process. not to mention the pucnhlines that do come in every post,which aslo are thought provoking.....

கோபிநாத் said...

:))

பினாத்தல் சுரேஷ் said...

அனானி சார்,

தாங்க்ஸ்.. கூச்சமா இருக்கு :-)

கோபிநாத், வருகைக்கு நன்றி.. கருத்துக்கு? என்னப்பா கருத்து சொன்ன நன்றி சொல்ல?

வடுவூர் குமார் said...

தலைப்பு இக்காலத்துக்கு சரி,இன்னும் ஒரு வருடம் கழித்து குற்றாலம் போகலாம் என்று நினைத்து இந்த பதிவை தேடும் போது தான் தெரியும்..அவஸ்தை (எங்களுக்கு).
சமீபத்தில், ஹரிஹரன் பதிவில் ஒரு பதிவை தேடிய அனுபவம் தான் ஞாபகம் வந்தது.
பி.கு. தெரிந்துகொண்டோம். :-)

Sridhar Venkat said...

நல்ல வர்ணனை... மற்றும் அருமையான தலைப்பு :-)

//முதல் சிறுகதை எழுதிய வ வே சு அய்யர் //
புதிய தகவல். மேலும் விக்கிபீடியாவில் உலாவியதில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பெண்ணை காப்பாற்ற அருவியில் பாய்ந்து வெளியெற முடியாமல் இறந்தார் என்று படித்தேன். முழு விவரங்களுக்கு இங்கே செல்லவும்

இராமநாதன் said...

ஆங்காங்கே பஞ்சுகள் எல்லாம் கனமா இருக்கு.. :)))

இந்த பாண தீர்த்தம் அண்ட் அணையை மிஸ் பண்ணிட்டேன்.. நமக்கு நாமேனு சொறிஞ்சுக்கலேன்னா எப்படி? நான் குத்தாலம் போன கதை தொடராவே எழுதுனதோட கடைசி பாகம் இங்கேயிருக்கு.

போட்டோ எடுக்காட்டா என்ன? தங்கமணிகிட்ட வாங்கின விழுப்புண்களப் பத்தி டிஸ்க்ரிப்ஷன் கொடுக்கலாமே கொத்ஸ் ஸ்டைல்ல?

---
அக்கா பையன் இமெயில் ஐடி அனுப்பி வைக்கவும்..

இலவசக்கொத்தனார் said...

யோவ் பார்த்து. இப்படி ஒரு போட்டோ கூட எடுக்காம டக் அடிச்சுட்டு வந்து நிக்கற. யாராவது பொரஃபசனால் போட்டோகிராபர் இப்படி எல்லாம் பதிவு போட்டுட போறாங்க.

குடு குடு கிழவர்கள் - குற்றாலத்தில் குழப்பம்

புதன்கிழமை கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என எதையும் படிக்காமல் வெறும் சீரியல்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் போர் அடித்தது. சரி பதிவுகளைப் படிக்கலாம் என பினாத்தல் பக்கம் போனால்.. வழக்கம் போல் கிழவர்களின் குடு குடு குழப்பத்தால் வெறிச்சென இருக்கிறது பதிவு. கேப்டன் கிழவன் பினாத்தல் டக் அடித்து வழிந்துள்ளார். என்னப்பா அங்கே வெய்யில் அதிகமாக.. கிழவனால் ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லையே..

ஒட்டுமொத்தத்தில் இந்த கிழவர்கள் பரபரப்பில் பின்னூட்டம் சம்பாதிப்பதற்காக நம் பதிவுலகம் அவமானப்பட வேண்டியுள்ளது. அதனால்தான் பதிவுலகை விட்டு விலகாமல் அட்டை போல் ஒட்டிக் கொண்டு நம் மானம் எனும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.. இந்த கிழவர்கள். போட்டோ போட இருக்கும் கப்பிக்கு எனது வாழ்த்துக்கள்.

(கிழவர்கள் என்ற பதம் வயதான நல் இதயங்களை காயப்படுத்த அல்ல.. அவ்வாறு யாரேனும் உணர்ந்தால் அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.)

நாகை சிவா said...

நீங்க காத்து வாங்கின கதையை வச்சு இங்க ஒரு கலவரத்துக்கு அடி போடுகிறார் ஒருவர்....

நீங்க உங்க அக்கா பையனுக்கு உதை கொடுத்ததால் ஏற்பட்ட வினை இப்படி அறுவடை ஆகிறதோ????

:)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வடுவூர் குமார். சுற்றுலான்னு லேபிள் பண்ணிடலாமா? அப்ப கண்டுபிடிக்க சுலபமா இருக்காது??

ஸ்ரீதர், வவேசு தற்கொலை செய்துகொண்டதாக பிரிவோம்-சந்திப்போம் (சுஜாதாத்தா) இல் படித்த ஞாபகம். கூகிளைக் குடாய்வதற்கு நேரம் இல்லை. குடாயலாம்.

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு,

உங்களதுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு. என்ன, நான் நாலு பாகம் எல்லாம் இழுக்கலை:-)

கொத்தனார்..

ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க.. வரவர, எங்கெங்கெங்கேயோ இருக்கற கோவத்தையெல்லாம் இறக்கற இடமா பினாத்தல ஊஸ் பண்றீங்க போல.. நாகை சிவா சொல்ற மாதிரி இன்னொரு கலவரம் கிளம்பாம இருந்தா சரி! அதுவரைக்கும் என்சாய்!

நாகை சிவா.. என்ன செய்யலாம் சொல்லுங்க? முற்பகல் செய்யின் முற்பகலே விளையற கலியா இருக்கே!

ramachandranusha(உஷா) said...

கொத்ஸ் வாழ்க! என்னமா பெண்களுக்கு மரியாதை தருகிறார். கிழவி என்று யாரையும் சொல்லலை பாருங்க.

Malathy said...

hi
kalavarm pathi ellam onnum enaku sollave ellaiye. nan varama poita kurai therka padichi terinjimten

பினாத்தல் சுரேஷ் said...

உஷாக்கா, நேரம்!

நாங்க எல்லாம் பொம்பளைன்னு ஆரம்பிச்சாலே எம் சி பி னு சொல்ற ஆளுங்க, கொத்ஸ் கிழவின்னு சொல்லலையாம்! மரியாதை தர்றாராம்..

மாலக்கா, தாங்க்ஸ்

இலவசக்கொத்தனார் said...

உஷாக்கா வாழ்க. என்னதான் தனிமனித காழ்ப்புணர்வு எங்க ரெண்டு பேருக்கிடையே போன பதிவில் இருந்தாலும், தமிழ் வலையுலக பெண்களுக்கு நான் தரும் மரியாதையைக் கண்டு அதனை பாராட்டும் நல்ல உள்ளம் படைத்த உஷாக்கா வாழ்க.

நான் மட்டும் சூரத்தில் உங்க பக்கத்து வீட்டு ஆளா இருந்தா தைரியலக்ஷ்மி அது இதுன்னு பாராட்டு இருப்பேன். அப்படி நாமெல்லாம் ஒரே கார்டன்ஸில் இல்லாத காரணத்தால் இப்படியே ஜூட் விடறேன்.

பெனாத்தலாரே, உஷாக்கா பதிவில்தான் நானும் நீர் சொன்ன பெருமை மிக்க பட்டத்தை அடைந்தேன்.

ramachandranusha(உஷா) said...

இலவசம் அவர்களே! நமக்குள் தனிப்பட்ட பகை தலை விரித்தாடினாலும் , மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசினால் பாராட்டுவது என் தனிப்பட்ட இயல்பு பண்பு என்பதை தன்னடக்கத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனாரே...

சைக்கிள் கேப்புல பெரிய ஆள் ஆகப் பாக்கறீங்களே!

டாக்டர் எம்சிபி பட்டம் வாங்கியாச்சா? வாழ்த்துஸ்.

Golden Moon said...

ஐயா சுரேஷ் ! !

நான் குற்றாலத்துக்கு மிக அருகில் உள்ளேன். மெயின் அருவிக்கு எனது வீட்டிலிருந்து நடந்து சென்று விடலாம் (சுமார் 2 கீ.மீ). குற்றாலத்தைப் பற்றி தெளிவாக எழுதியுள்ளீர்கள்...நீங்கள் இரவில் அருவியில் குளித்ததுண்டா ? இரவு மணி 10 க்கு மேல்.....அடுத்த முறை குற்றாலம் வந்தால் இரவு குளியலை அனுபவிக்கவும்..

பினாத்தல் சுரேஷ் said...

ஹாய் தங்கநிலா!

மிஸ் பண்ணிட்டனே.. சரி அடுத்த முறை நிச்சயம் சொல்லிவிட்டு வருகிறேன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

சூப்பர் கலக்கல்! குற்றாலம் போய்ப் பாத்தே ஆகணும்னு தோணிப் போச்சு. கலவரம் இல்லாத நேரமாப் போகணும்!

//காலை மிதிச்சேன்னுதானே சொன்னேன்.. உடைச்சேன்னா சொன்னேன்// அப்படின்னு நீங்க சொல்றீங்க. சின்ன பையன் பாவம், நாங்க பேசிக் கேட்டுக்கறோம். பையன் இமெயில்/ஃபோன்# கொடுங்க!

வ‌.வே.சு. அவர்களின் வாழ்க்கை பற்றி மிகப் படித்திருக்கிறேன்.‍ அவரது பெண் சுபத்திராவை காப்பாற்றத் தான் அருவியில் குதித்ததாகப் படித்ததாக (அப்பா, எவ்வளவு டிஸ்கி) மவுஸப் போட்டு தாண்டிச் சொல்ல முடியும்:-)

தேவ் | Dev said...

சீசன்ல்ல போனாத் தான் இந்தத் தொல்லை எல்லாம் போன டிசம்பர் மாசம் போயிருந்தேன் நான்...அப்போக் கூடாமும் ரொம்ப கம்மி.. அருமையான இடம்.. அகஸ்தியர் பால்ஸ் போகல்லயா... அப்படியே அந்த ரூட்ல்ல இன்னும் மேலேப் போனா தென்மலைன்னு ஒரு இடம் வரும் மலையாளக் கரையோரமது.. அங்கிட்டு ஒரு அணை இருக்கு அம்சமா இருக்கும்.. அப்புறம் அந்த ரயில் போற பாதை அருமையா இருக்கும்...

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கெக்கேபிக்குணி.. உங்களையும் ரொம்ப நாளாக் காணலை..

பையன் இ-மெயில் போன் எல்லாம் கேக்கறதைப்பாத்தா கொலைமுயற்சி கேஸ்லே உள்ள தள்ளாம விடமாட்டீங்க போல!

வ வே சு அய்யர் ஸ்டோரி ரெண்டு பேர் சொல்றதால இப்போதைக்கு ஒத்துக்கறேன் (இன்னும் குடாயலை)

தேவ்,

ஆப் சீஸன்லே போறது ரிஸ்க் ஆச்சே.. தண்ணி வரலைன்னா?

அகஸ்தியர் பால்ஸ் மற்றும் பல நேரம் இல்லாததால மிஸ்ஸு!

 

blogger templates | Make Money Online