அவன் விகடன் வேண்டும் எனக்கேட்டிருக்கிறார் ராமச்சந்திரன் உஷா.
மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்ட பெனாத்தலார் அதற்கான ஆயத்தங்களில் உடனடியாக ஈடுபட்டுவிட்டார்.
இதில் எதுபோன்ற கட்டுரைகளும் தொடர்களும் ரெகுலர் துணுக்குகளும் வரவேண்டும் என்பதற்கு மகளிர் பத்திரிக்கைகளையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு தொழிலைத்தொடங்கிவிட்டார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் டைரி
என் பெயர் (வேண்டாமே) (Jean-Claude Van Damme இல்லை!), வயது 35. எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன.
திருமணமான புதிதில் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ, திடீரென்று என் வாழ்வில் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஆம் - என் மனைவி குறட்டை விடத் தொடங்கிவிட்டாள்!
DTS எஃபெக்ட்டில் தினமும் ராத்திரி 10 மணிக்கு மேல் அருகில் உள்ளவர் குறட்டை விடும்போது தூங்க முயற்சி செய்திருக்கிறீகளா? செய்து பாருங்கள்.. இதனால் என் தூக்கம் தினமும் கெட்டுப்போய் அலுவலகத்திலும் தூங்கி வழிந்ததால் வேலை போய்விட்டது.
இப்போது என் மனைவி ஏறத்தாழ 80 டெஸிபெல்லுக்கு மேல் குறட்டை விடுகிறாள். பகல் முழுவதும் அரட்டை, இரவு முழுவதும் குறட்டை என்று என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது.
நேயர்கள் என் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியுமா?
வாசகர்கள் பதில்
நெல்லையிலிருந்து பரசுராமன் எழுதுகிறார்: என் தோழா, உனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணிப்பார்க்கும்போது என் கண்கள் கலங்குகின்றன. கொடுமைக்கார மனைவியரிடம் மாட்டி சீரழிந்து போய் இருக்கும் லட்சக்கணக்கான உன் போன்ற ஆடவர்கள் அந்தச் சிறையை விட்டு வெளியே வர வேண்டும். உடனடியாக விவாகரத்துக்கு எழுது. நாங்கள் இருக்கிறோம்.. தைரியமாக இரு. (இவர் முழு முகவரி எழுதவில்லை என்பது குறிப்பிடத்தகாதது)
ஆம்பூரிலிருந்து அன்பழகன் எழுதுகிறார்: என் கண்மணி, உன்னைப்போல் நானும் மனைவியின் குறட்டையால் அவதிப்படுபவன் தான். என்ன செய்வது! பகலின் அரட்டையையாவது தவிர்க்கலாம், இரவில் நாம் எங்கே போவது? ஏழைகளுக்கு இதிலிருந்து என்ன விடிவு? என்று நம் காதுகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றுதான் முழுமையான விடுதலை நாடாகத் திகழ முடியும்.
ஆதம்பாக்கத்திலிருந்து கணபதி சுப்ரமணியம் (வயது 72) எழுதுகிறார். அந்தக்காலத்தில் எல்லாம், மனைவிகள் குறட்டை விடும்போது நாங்கள் காதில் துணியை அடைத்துக்கொள்வோம். சமீபத்தில் இல்லினாய்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்க்கும் என் பேரன் இதற்கென்றே அழகாக வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் காது அடைப்பானைக் கொண்டு வந்திருந்தான். அதற்குப் பிறகு கேர்ஃப்ரீயாக வாழ்கிறேன்,
மொத்த வாசகர்களின் தீர்வு விவரம் --
கஷ்டப்பட்டு சகித்துக்கொள் - 3%
விவாகரத்து செய் - 78%
காதில் பஞ்சு அடைத்துக்கொள் - 19%
குறட்டையைப்பற்றி டாக்டர் பத்ரனிடம் ஆலோசித்தபோது அவர் கூறியது:
குறட்டை என்பது தூக்கத்தில் மட்டுமே வரக்கூடிய ஒரு சத்தம். இப்படிப்பட்ட நோயாளிகள் விழித்துக்கொண்டிருக்கும் போது நல்ல நலத்துடனே தெரிவார்கள். அவர்களை சுலபமாக பிரித்துப்பார்க்க முடியாது. இந்த நேயர் குறிப்பிடும் வியாதி மிகவும் முற்றிப்போன நிலையில் இருந்தாலும், என் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், இவர் மனைவிக்கு சிடி ஸ்கான், ரத்தப் பரிசோதனை, மரபணுப்பரிசோதனை அனைத்தும் நடத்தியபின், அவர்களிடம் பணம் மிச்சம் இருந்தால் இந்த வியாதியை குணப்படுத்திவிட முடியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேபிள் கலாட்டா
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எஃப் டிவியின் பல நிகழ்ச்சிகளைப்பற்றிய கேள்விகளை அள்ளித்தெளித்திருந்ததால், நம் நீலகண்ட மாமா கைனெட்டிக் ஹோன்டாவை விரட்டி, மிலனில் இருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜானைச் சந்தித்தார்.
"என்ன மாமா, ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்" உற்சாகமாக வரவேற்றார் ஜான்.
"என்ன இப்பெல்லாம் உங்களை எஃப் டிவியிலே பாக்கவே முடியறதில்லே? என்று போட்டு வாங்கினார் மாமா.
"என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? பாரீஸிலே ஃபேஷன் வீக், லாஸ் ஏஞல்ஸிலே ஃபெஷன் வீக் ரொம்ப பிஸியாயிட்டேனா - அதனாலேதான் உங்களைப் பார்க்க முடியலே" என்று சுகமாக அலுத்துக்கொண்டார்.
"இப்பெல்லாம் ஃபேஷன் டிசைனிங்க் ரொம்ப சுலபமாயிடிச்சு.. எல்லாரும் ஒரு கத்திரிக்கோலோட கிளம்பிட்டாங்க.. இருந்தாலும், எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. நாகரீகத்தாய்க்கு செய்யற சேவையாவே இந்தத் தொழிலைக் கருதறேன்"னாரு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு.
வாசகர் கடிதம்
"மூன்டிவி"யிலே ராத்திரி 12 மணிக்கு வர மசாலா மிக்ஸ் லே வர பாட்டுக்களெல்லாம் சுத்த சைவமா மாறி விட்டன. ஏமாற்றமா இருந்தாலும், இளைய தலைமுறைக்கு நல்ல பாடல்களைக் காட்டற இவங்க சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று புகழாரம் சூட்டுகிறார், அம்பத்தூரிலிருந்து அறிவுடை நம்பி.
கயா டிவியில் கடந்த 15ஆம் தேதி செய்தி வாசித்த சொக்கலிங்கம் தன் மூக்குக் கண்ணாடியை புதிய ஃப்ரேமில் மாற்றிவிட்டார், புதுக்கண்ணாடி அவர் முகத்துக்கு மேலும் மெருகு சேர்க்கிறது" உணர்ச்சிவசப்படுகிறார், கடலூரிலிருந்து கலியபெருமாள்.
"8 ஆம் தேதி நடந்த ஃபுட் பால் மேட்ச்சின் இடைவேளையில் காண்பித்த காக்காய்கள் இரண்டும் மிக அருமை. ஒளிப்பதிவாளருக்கு திருஷ்டி சுத்திப் போடவேண்டும்" நெகிழ்கிறார் தேனியிலிருந்து குணசேகரன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கோட்டா - அனுபவங்கள் பேசுகின்றன
காசியில் விஸ்வனாதர் ஆலயத்துக்கு சென்றிருந்தேன். அங்கே கோயில் வாசலில் செருப்பு விட்டுக் கொள்ளலாம் என்று சொல்லும் போது இடை மறித்த எங்கள் ஹோட்டல் மானேஜர், அங்கே அதிக செல்வாகும், 2 கிலோ மீட்டர் தூரம்தானே, இங்கேயே விட்டுச்செல்லுங்கள் என்று கூறினார்.
செருப்பில்லாமல் நடந்தது கஷ்டமாக இருந்தாலும், 25 பைசா சேமித்துவிட்டோம் என்ற திருப்தியில் வலி பறந்தே போய்விட்டது.
நம் ஊரில் உள்ள ஹோட்டல் மானேஜர்கள் இப்படி நடந்து கொள்வார்களா? சந்தேகம்தான்.
கிருஷ்ணன், கீழ்பாக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கோட்டா - வாண்டு லூட்டி
விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த என் பேரன் துஷ்யந்த் (வயது 4, UKG படிக்கிறான்), ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டார் ரைம் பாடச்சொன்னால், முதல் வரியைப் பாடிவிட்டு, இரண்டாவது வரியாக "ரஜினிதான் எப்பவும் சூப்பர் ஸ்டார்" என்று பாடுகிறான்.. இந்தக்கால பிள்ளைகளின் அறிவையும், விஷய ஞானத்தையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
தம்பித்துரை, தாம்பரம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுயமாய் தொழில் செய்வது எப்படி? (தொடர்)
இந்த வாரம் சுய தொழில் பகுதிக்க்காக, காலேஜ் வாசலில் டீக்கடை வைத்திருக்கும் மாதவன் நாயரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.
"முதலில் டீ மட்டும்தான் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் முறுக்கு, புளி சாதம்னு பிசினெஸ் டெவெலப் ஆச்சு.
காலேஜ் பசங்க எல்லாம் டீ ஷர்ட் போடறாங்களேன்னு யோசிச்சு, நமிதா, அசின் படம் எல்லாம் பிரிண்ட் பண்ண பனியன்களையும் விற்க ஆரம்பிச்சேன்.
இப்போ நான் என்ன எல்லாம் பண்ணறேன்னு எனக்கே தெரியாது.
என்னை நம்பி இங்கே ஒரு குடும்பமும், கேரளாவிலே ஒரு குடும்பமும் பசியாற சாப்பிட முடியுது.
அதையும் தவிர, பசியோட வர தெரு நாய்ங்களுக்கு, பழைய பொறையை எல்லாம் போட்டு பசியாத்தறதுலே ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்குது என்றார் நாயர்.
டீ செய்வது எப்படி?
- சுடுதண்ணீரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
- டீ-பைகள் (மளிகைச் சாமான் கடைகளில் கிடைக்கும்) பக்கத்தில் வைத்து விடுங்கள்
- சர்க்கரை ஒரு கிண்ணத்திலும், பால் ஒரு பாத்திரத்திலும் அருகே வைத்து விடுங்கள்
- யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அதை அவர்கள் போட்டு சாப்பிடுவார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதி பதில்கள்(கோலங்கள் தொடரில் நடிக்கும் வில்லன் ஆதி, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்)
கே: என் மேலதிகாரிக்கு என்னைக்கண்டாலே ஆவதில்லை. எதற்கெடுத்தாலும் சிடுசிடுத்து விழுகிறார். வேலையையே விட்டு விடலாம் போல இருக்கிறது. என்ன செய்வது ஆதி?
ஆதி பதில் : ஒரு குட்டிக்கதை கேள்விப்பட்டிருப்பீர்கள் - ஒரு ஊர்லே ஒரு காக்கா இருந்துதாம், அப்புறம் அது பறந்து போயிடுச்சாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாறுதல் மட்டும்தான் மாறாதது. இன்னிக்கு உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டலாம். நாளைக்கு நீங்க மேலதிகாரி ஆயிட்டீங்கன்னா, எப்படித் திட்டறதுன்றதுக்கு ஒரு பயிற்சியா இதை எடுத்துக்குங்க. ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கங்க - விழுந்தவனுக்கு கால்கள் எல்லாம் பூட்டு, எழுந்தவனுக்கு விரல்கள் எல்லாம் சாவி.
கே: என் மாமனார் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்.. என்ன செய்வது?
ஆதி பதில் : பிட்டு போட்டாதான் எக்ஸாம்லே பாஸ் பண்ண முடியும், விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கையிலே பாஸ் பண்ண முடியும். அவர் உங்களை மதிக்காவிட்டால்தான் என்ன, "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"னு கண்ணதாசன் சொன்னா மாதிரி நீங்க வாழ்ந்து காட்டுங்க, அவர் உங்களை மதிக்க ஆரம்பிப்பார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் கொஞ்சம் ஃபேஷன் பக்கங்கள், டாக்டர் பதில்கள், வாசகர் அனுபவங்கள் எல்லாம் சேர்த்தால், சூடான, சுவையான, நச்சென்ற அவன் விகடன் தயார்.
வினியோகஸ்தர்களே, உங்கள் பகுதிக்கு உரிமம் எடுக்க முந்துங்கள்.
வாசகர்களே! இன்னும் சில நாட்களில் உங்கள் கையில் தவழும் "அவன் விகடன்" - உங்கள் பேராதரவை எதிர்பார்க்கும்
ஆசிரியர் குழு.