Dec 9, 2006

இன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)

படத்தைப் பார்க்காமலே விமர்சனம் எழுதிவிட்டேன். புதுப்படத்துக்கென பிலிம் காட்டி பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். அந்த வகையில் இன்னும் ஒரு விமர்சனம்.
இன்னும் வெளியாகாத புத்தகத்துக்கு ஒரு விமர்சனம். "கரையைத் தேடும் ஓடங்கள்" புத்தகம் எழுதியவர் உங்களுக்குப் பரிச்சயமானவர்தான். விடை கடைசியில்.
பணத்தைத் தேடி ஓடும் ஓட்டம் ரிஸ்க் இல்லாததாக இருப்பதில்லை. ஆண்களுக்கு ஒருவகை பிரச்சினை என்றால் பெண்களுக்கு வேறு வகையான பிரச்சினைகள். அந்தப்பிரச்சினைகளையும் விடுபட வழியே இல்லாத நிலைமையையும் கதைக்களனாகக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.
குடும்பக் கடன்களுக்காக கிழவனை மணக்கச் சம்மதித்து, அவன் இறக்க, கொலை என்ற சந்தேகத்தில் சிறைக்கு சென்று மீளும் அமீரா,
ஓடிப்போன புருஷன், கைக்குழந்தைகள், சமாளிக்க வழி இல்லாமல் ஷேக் வீட்டு வேலைக்காரியாகும் ஆயிஷா,
காதலித்து மணம்புரிந்த கணவனின் துபாய் ஆசையில் அவசரப்பட்டு வேறு ஒரு ராக்கெட்டில் சிக்கி மயிரிழையில் தப்பிக்கும் இந்துமதி
ஆகிய கதாபாத்திரங்கள் சென்னைக்குத் திரும்புகையில் அறிமுகமாகின்றனர். பெரும் பிரச்சினையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற எண்ணங்கள் சென்னையில் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் தூள் தூளாகின்றன. நாளொரு பிரச்சினை, பொழுதொரு பொல்லாப்புடன் வாழ்க்கையைத் தொடர்வதில் சிக்கல்களை அதிகப்படுத்த, தற்கொலை முடிவெடுக்கும்வரை சென்று கடைசியில் உலகை எதிர்த்துப் போராட முடிவெடுக்கின்றனர்.
நாவலின் அமைப்பும் நடையும் அருமை. பெண்ணிய எழுத்தாக இருக்குமோ என்ற சிந்தனை ஆரம்பத்தில் வந்தாலும் கெட்டவர்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம் ஒதுக்கீடு கொடுத்து அந்த வசையிலிருந்து தப்பிக்கிறார் ஆசிரியர். உரையாடல்கள் - குறிப்பாக வட்டார வழக்குகள் இயல்பாக அமைந்து படிப்பதை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
இருந்தாலும், சில கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.
1. முன் சரித்திரம் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெவ்வேறு இடங்களில் வருவதால் கொஞ்சம் பெயர்க்குழப்பம் வருகிறது. மேலும் இரு முக்கிய பாத்திரங்களின் பெயர்கள் கிட்டே இருப்பதால் (ஆயிஷா, அமீரா) குழப்பம் வருகிறது.
2. ஆரம்பத்தில் நாவல் படிக்கிறோமா, சீரியல் பார்க்கிறோமா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு ஒரே அழுகை நெடி. (பார்ப்பது போல் காட்சியை அமைத்திருக்கிறார் ஆசிரியர் என்று பெருமையும் பட்டுக்கொள்ளலாம்)
3. இந்திய கான்ஸலேட்டால் தப்புவிக்கப்பட்ட பெண்கள் சி எம்மைச் சந்தித்து வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது, அவர்கள் தற்கொலை முடிவு வரை செல்லும்போது மறக்கப்பட்டிருக்கிறது ஒரு குறையே.
4. சுக முடிவுக்கான கிளைமாக்ஸ் திருப்பங்கள் செருகப்பட்டது போன்ற ஒரு தோற்றம்.
ஆனால், சொல்லப்பட்ட இந்தக்குறைகளைப் பார்த்து தவறாக முடிவெடுத்துவிடாதீர்கள். நல்ல நாவல், படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
கலைமகளில் எப்போ வருமோ என்று தெரியாது. பிறகு ஆசிரியர் தன் வலைப்பூவில் எழுதுவார் என்றே நினைக்கிறேன்.
ஆம்.. நுனிப்புல் உஷாவின் கலைமகள் பரிசு பெற்ற நாவலின் விமர்சனம்தான்.

4 பின்னூட்டங்கள்:

மணியன் said...

உங்கள் விமரிசனத்திற்கு கலைமகள் குழுவினர் object செய்யாமல் இருந்தால் சரி.

ஆர்வத்தைக் கிளறும் விமரிசனம்.

பினாத்தல் சுரேஷ் said...

உஷாவின் பின்னூட்டம், வேறு பதிவுக்குச் சென்றுவிட்டதால் வெட்டி ஒட்டுகிறேன்.

**********************
சுரேஷ்,
விரிவான விமர்சனத்துக்கு நன்றி,

நன்றி- சீரியல் எடுக்க உகந்த கதை என்றி சிபாரிசு செய்ததற்கு :-)

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில், நானே நுனிப்புல்லில் முதலிலேயே எழுதிவிட்டேன். இதோ மீண்டும்
உங்கள் பார்வைக்கு-

//பல உண்மையான சம்பவங்கள், செய்திகள். அனைத்தில் இருந்து மூன்று பெண்களின் உண்மை சம்பவங்களை எடுத்து, கதைக்கு என்று சிலவற்றை சேர்த்தும் நல்ல முடிவு என்று கொஞ்சம் நாடக தன்மையுடன் (வேறு வழியில்லாமல்) நாவல் ஆக்கியதுதான் "கரையைத் தேடும் ஓடங்கள்"//

ஆயிஷா எடுக்கும் முடிவுடன் நிறுத்தியிருக்கலாம் என்று வாசகி உஷா திட்டினாள். ஆனால் எழுத்தாளினி, எழுதுவது வெகுஜனபத்திரிக்கை என்று நினைவுறுத்தினாள் :-)))

மற்ற கேள்விகளுக்கு- கலைமகள் நாவல் போட்டி என்று தெரிந்ததும், சுறுசுறுவென்று எழுத ஆரம்பித்து,
அஞ்சல் எடிட்டரில் திடீரென்று பாஃண்ட் மாறிப் போனது. என்ன என்னவோ முயற்சித்தும் மாற்ற
முடியவில்லை என்று தூர வைத்துவிட்டேன்.

எனக்கு நினைவிருந்தவரையில் 2005 ஆகஸ்ட் மூன்றாம் தேதி "பிரபலம்" ஒருவரை சந்தித்தேன்.
இந்த மாதிரி போட்டி, நாங்கள் (சிலர் பெயரைக் குறிப்பிட்டு) எழுதப் போகிறோம் நீங்க எழுதவில்லையா
என்றுக் கேட்க, சவால் என்றால் ஒரு கைப் பார்க்கும் பழக்கம் இருப்பதால் அவதி அவதியாய் விட்டேனோ பார் என்று எழுதி பத்தாம் தேதி வாக்கில் போஸ்ட் செய்தேன். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டு முடிந்துவிட்டதாலும், ஊரை விட்டு வந்து இருப்பதாலும் போட்டி முடிந்துப் போயிருக்கும்
என்று தீர்மானமாய் நினைத்த நேரத்தில் இன்ப அதிர்ச்சி.
இப்பொழுது படிக்கும்பொழுது, ரீ ரைட் செய்து இருக்கலாம் என்றும், தமிழ் முஸ்லீம் பேச்சு வழக்கங்கள், யாராவது இஸ்லாமிய நண்பர்களிடம் பார்த்து சொல்லுமாறு கேட்டு இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கலைமகளுக்கான கதை என்பதால் இந்த காப்பி ரைட் பிரச்சனைகள் வரலாம், மேலும் அதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெளிவாய் எனக்கு தெரியாது. ஆக தற்சமயம் பதிவில் போடும் உத்தேசம் இல்லை

ஆக சொந்த ரிஸ்க் எடுத்து, கேட்கும் உம்மை போன்ற ஆசாமிகளுக்கு மட்டும் தனிப்பட்ட பார்வைக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறேன். இதில் எந்த பிரச்சனையும் வராது என்ற தைரியம் :-)

******************

பினாத்தல் சுரேஷ் said...

மணியன்,

நன்றி. கலைமகள் குழுவிற்கு இதில் வேறுபட ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறேன். கையெழுத்துப்பிரதியை நண்பனாகப் படிப்பது, விமர்சிப்பது காபிரைட்டில் வராது என்று நம்புகிறேன். மேலும் இது விமர்சனம்தானே..

உஷா,

சீரியலுக்கு இதெல்லாம் ஒத்துவராது. கொடுமைப்படுத்தும் மாமியார், நாத்தனார், நாயகனை அடைய ஆசிட் வீசிலிருந்து அணுகுண்டு வரை போடத் தயாராக உள்ள வில்லி எல்லாம் சேருங்கள், யோசிக்கலாம்:-))

ramachandranusha(உஷா) said...

ஒரு திருத்தம்- போட்டி கடைசி தேதி ஜீன் 15ம் 2005. ஆகஸ்டு இல்லை.

சுரேஷ்,
பாதி கதை துபாய், அதை கும்மிடிபூண்டியாய் மாற்றி மாமியார்,நாத்தனார் வில்லி எல்லாம், நம்ம தயாரிப்பாளர்களுக்கு சேர்க்க தெரியாதா என்ன? ஏனோ
"ப்ரியா" நினைவு வருகிறது ;-)))))

 

blogger templates | Make Money Online