Mar 7, 2006

மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை March 8, 2006

மு கு: இந்த சிறுகதையும் நான் கேள்விப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தைத் தழுவியதே. ஒரு பெண் பார்வையில் கதையைச் சொல்வது கஷ்டமாக இருந்தாலும் முயற்சித்திருக்கிறேன். ரொம்ப நாட்களாக எழுதத்திட்டமிருந்த கதை, இன்று கூடிவரவும், மார்ச் 8 ஆக இருப்பதாலும் நேரடியாக வலைப்பதிவிலேயே ஏற்றிவிட தீர்மானித்தேன், அச்சுக்கு முயற்சிக்காமல்.
________________________________________________________
மகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை

"ராஜி ராதா கார்மெண்ட்ஸ்" பளபளப்பாய்த் தெரிந்தது போர்டு. தினமும் துடைக்கிறான் போல. வாட்ச்மேனுக்கு ஒரு ஐம்பது ரூபாய் இந்த மாதம் கூட்டி விட வேண்டும்.

உற்சாகமாக இருக்கிறது மனது. பூக்காரி கூடக் கண்டுபிடித்துவிட்டாள். "என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கிறே?" என்றாள். ஏன் இருக்க மாட்டேன்? சாதாரணமான வெற்றியா கிடைத்திருக்கிறது? ஐந்து வருடப் போராட்டத்துக்குப் பின்.. எவ்வளவு தோல்விகள், காயங்கள்.. நினைக்காதே.. அதையெல்லாம் பற்றி நினைக்காதே.. இன்று நீ சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்..

"வணக்கம்மா.. இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க?"

"கொஞ்சம் வேலை இருக்கு - அதான்" சம்பளத்தை அதிகப்படுத்துவதைப்பற்றி அப்புறம் சொல்லிக்கொள்ளலாம்.

கைப்பையில் துழாவி சாவியை எடுத்துக் கதவு திறக்கும் போதே டெலிபோன் மணி அடித்துக்கொண்டிருந்தது.

அவசரமாக பையை வைத்துவிட்டு போனை எடுத்து "ராஜேஸ்வரி ஸ்பீக்கிங்" என்றேன்

"ராஜியாம்மா? நான் வேதாசலம் பேசறேன், வாழ்த்துக்கள்மா"

"சார் நீங்களா? ரொம்ப நன்றி சார்"

" கம்பெனி ஆரம்பிச்சு ஒரு அஞ்சு வருஷம் இருக்குமாம்மா? சீக்கிரமே சாதிச்சிட்டேம்மா"

"எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார், எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதானே?"

"சரி எத்தனை பேர் பழசையெல்லாம் நெனச்சு பாக்கறாங்க"

"உங்ககிட்டேயே போட்டின்றது வருத்தமா தான் சார் இருந்துது"

"அதிலே என்னம்மா இருக்கு.. இது பிஸினஸ். இதெல்லாம் சகஜம்தானே"

"காலையிலே முதல் போனே உங்ககிட்டே இருந்து. ரொம்ப சந்தோஷம் சார்"

"பெரிய காண்ட்ராக்டா இருக்கேம்மா.. எதாச்சும் பிரச்சினைன்னா தயங்காம என்கிட்டே பேசும்மா, வேத்தாளா நினைக்காதே."

"எங்களால முடியும்னுதான் சார் நம்பறோம், உங்க வார்த்தையே பெரிய பலம் சார்"

போனை வைத்துவிட்டு சாமி படங்களுக்கு ஊதுபத்தி ஏற்றி நமஸ்காரம் செய்துவிட்டு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டிருக்கும்போது வெளியே சலசலப்பு ஆரம்பித்துவிட்டது. மணி பார்த்தேன் -ஏழேமுக்கால். சூப்பர்வைஸர் வந்துவிட்டிருப்பார். தையல் பெண்களும் வர ஆரம்பிக்கும் நேரம்தான்.

போனை எடுத்துச் சுழற்றி "கீதா இருக்காங்களா?"

கீதா வந்து "யாரு" என்றாள்.

" நான் தான் ராஜேஸ்வரி பேசறேன். ஸ்ருதி வந்து சேர்ந்துட்டாளா?"

"வந்துட்டாங்க, அப்புறம் ஒரு விஷயம்"

"சொல்லுங்க"

"ராத்திரி ஒன்பது மணிக்கு மேல லேட் பண்ணாதீங்க.. எங்க வீட்டுக்காரர் கத்தறாரு"

"தினமுமாம்மா அப்படி ஆகுது, இப்போ கொஞ்சம் அதிக வேலை அதுனாலதான் ஒரு வாரமா அப்படி ஆயிடுது"

போனை வைப்பதற்குக் காத்திருந்து உடனே மறுபடி அடித்தது.

"மிஸஸ் ராஜேஸ்வரி? வின்சென்ட்"

"சொல்லுங்க சார்"

"இன்னிக்கு பத்து மணிக்கு சைதாப்பேட் ஃபேமிலி கோர்ட், ஞாபகம் இருக்கில்ல?"

"கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் வந்துடறேன் சார். இன்னும் எவ்வளவு நாள்தான் சார் இந்தக்கேஸ் இழுக்கும்?"

"நான் தான் முன்னமே சொன்னேனே மேடம், எக்ஸ் பார்ட்டி செட்டில்மெண்டுக்கு ஒத்துகிட்டா போதுமுன்னு சொல்லறாங்க"

"ஆனா குழந்தையை அவர் வைச்சுக்க விட முடியாதுங்க"

"அப்ப ராகவன் வாய்தா வாய்தாவா இழுப்பார், வேற வழி இல்லை"

போனை வைத்தவுடன் "நீ யாருக்கு வக்கீல்" என்றேன்.

காபியைக் கொண்டுவைத்த பெண்ணிடம் "ராதா மேடம் வந்துட்டாங்களா? என்றேன்.

"இன்னும் வரலைம்மா"

இன்னுமா வரவில்லை? மணி பத்து ஆகிவிட்டதே.

மறுபடி போனைச்சுழற்றி "ராதா?"

" இல்லை நான் சிவா"

"நல்லா இருக்கீங்களா சார்? ரொம்ப நாளாச்சு பாத்து -- ராதா இன்னும் ஆபீஸ் வரலியே, கிளம்பிட்டாங்களா"

"ராதா வரமாட்டா"

"உடம்பு சரியில்லையா"

"இல்லை - நிரந்தரமாவே வரமாட்டா" ஜோக்கடிக்கிறாரா என்ன?

"என்ன சார் தமாஷ் பண்ணரீங்க?"

"தமாஷா? உன்கிட்டே எனக்கு என்ன தமாஷ்? சீரியஸ்ஸாதான் சொல்லறேன். இனி ராதா வரமாட்டா. நாளைக்கு காலையிலே வந்து கணக்கை பிரிச்சிக்கறோம்"

அடிவயிற்றில் குபீரென்றது. குரலில் கோபம்தான் தெரிகிறது. ஒருமையில் பேசமாட்டாரே..

"என்ன சார் இது திடீர்னு?"

"சொன்னா புரியாது? உன்கூட இருந்த டீலிங் எல்லாம் போதும். தனியா கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் - கணக்கையெல்லாம் சரி பண்ணி வை, நாளைக்கு வர்றோம்" போனை வைத்துவிட்டார்.

காலையில் இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்துவிட்டது. நெற்றியில் வியர்வை துளிர்க்கத் தொடங்கியது. "ஏன் ஏன் ஏன்?"

"ஏன் இப்போது? என்ன நடந்தது? எப்படி சமாளிக்கப்போகிறோம்" ஆயிரம் கேள்விகள். அடிமனத்தில் "எல்லாம் கனவு" என்று எழுந்திருக்கப்போகிறோம்.. இல்லை - உண்மைதான். என்னவோ நடந்திருக்கிறது. இதை வளரவிடக்கூடாது. உடனே சரி செய்ய வேண்டும்.

நிலைமையை சீர்தூக்கிப் பார்த்தேன்.

ராதா இப்போது விலகினால் பாதிக்கம்பெனியும் மெஷின்களும் அவளுடன் போய் விடும். இந்தக் காண்ட்ராக்டை முடிக்க நினைப்பது கனவுதான். முதலில் ராதாவே காண்ட்ராக்டையும் கேட்டாலும் கேட்கலாம். அவளுக்கும் நஷ்டம்தான் - ஆனால் அவளைத் தாங்க கணவர் இருக்கிறார். நான் விழுந்தால் எழ முடியாது.

என்ன நடந்திருக்கும்? நான் க்ரெடிட் எடுத்துக்கொண்டுவிடப்போகிறேன் என்ற பொறாமையா? யாருக்கு வெற்றி வந்தால் என்ன? லாபம் இருவருக்கும்தானே? சேச்சே பொறாமையாக இருக்காது..

எல்லா வேலையும் கிடக்கட்டும். உடனே அவள் வீட்டுக்குப் போகவேண்டும். சூப்பர்வைஸரைக்கூப்பிட்டேன்.

"எல்லாருக்கும் பீஸ் கொடுத்துட்டீங்களா?"

"ஆச்சு மேடம்"

"சரி கொஞ்சம் ராதா மேடம் வீடு வரை போயிட்டு, அப்படியே சைதாப்பெட் போகணும்.. ட்ரெயின்லே நேரமாயிடும், ஆட்டோக்கும் தூரம் அதிகம், கொஞ்சம் ராதா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் என்னை ரயில்வே ஸ்டேஷன்லே ட்ராப் பண்ணிடறீங்களா?"

ராதா வீட்டு வாசலில் அவள் கணவர்தான் நின்றுகொண்டிருந்தார்.

"எங்கே வந்தீங்க?"

"இல்லை ராதாவைப் பாத்து பேசிட்டு போகலாமுன்னு"

"உன்கிட்டே என்ன பேசறது - நீ அவளை ஏமாத்தி சுருட்டினது எல்லாம் பத்தாதா?"

நானா? சுருட்டினேனா! இது என்ன புதுக் குற்றச்சாட்டு?

"என்ன சார் சொல்லறீங்க? கணக்கை யெல்லாம் ராதாதானே பாத்துக்கறா?"

"அப்ப அவள் சுருட்டினான்னு சொல்லறயா?"

இது என்ன விதண்டாவாதம் பேசுகிறார்.. ஒன்று மட்டும் புரிந்தது. முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறார்.

"ராதாவைப் பார்க்கணும்"

"நீ மட்டும் உள்ளே வா"

சூப்பர்வைஸரை குற்ற உணர்வோடு பார்த்தேன்.

"நான் இங்கேயே இருக்கேன் மேடம், நீங்க பேசிட்டு வாங்க"

ராதா வீடுக்குள் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் விரோதமும் குழப்பமும் கலந்திருந்தன. உட்காரச் சொல்லவில்லை.

"என்ன ஆச்சு ராதா? என்ன பிரச்சினை சொல்லு?"

"உன்கூட இருந்தா நானோ என்கூட இருந்தா நீயோ முன்னேற முடியாதுன்னு தோணுது. அதனால பிரிஞ்சுடறதுதான் நல்லது"

"அதுக்கு சரியான நேரம் பார்த்தியே.. ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ. இந்த காண்ட்ராக்ட் முடிஞ்சதும் பிரிச்சிக்கலாம்"

"பிரியறதுக்கு முடிவெடுத்ததுக்கு அப்புறம் நேரமா பாக்க முடியும்? அது மட்டும் இல்ல.. அந்த காண்ட்ராக்டும் எங்க பங்குதான்" சிவாதான் பதில் சொல்கிறார். அவள் பேசவில்லை. என்னதான் நடக்கிறது?

"கெஞ்சிக்கேக்கறேன் ராதா.. ஒரு ஆறு மாசம்.."

"அவள் இருந்தான்ன, உனக்கு ஆபீஸுக்கு மட்டுமில்ல, கோர்ட்டுக்கும்தான் கூடவரவேண்டி இருக்கும்"

இப்போது புரிகிறது.. முடிவு இவருடையது..

என்ன செய்வது எனப்புரியவில்லை. இப்போது கோபப்பட்டாலோ, யோசிக்காமல் வார்த்தையை விட்டாலோ பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிவிடும். ஓரிரு நாள் ஆறப்போடலாம். பிறகு ராதாவிடம் தனியாகப்பேசிப்பர்க்கலாம்..

"இப்படி நட்டாத்துலே விட்டுட்டுப் போறது உனக்கே சரியான்னு யோசிச்சுப்பாரு" சொல்லி எழுந்தேன்.

என் பின்னாலேயே கதவு அறையப்படும் சத்தம் கேட்டது. எனக்கு அழுகை வராதது ஆச்சரியமாக இருந்தது. நிராகரிப்புகளும், ஏமாற்றங்களும் பழகிவிட்டன.

வெளியே வந்ததும்தான் கவனித்தேன். என் கைப்பை வீட்டுக்குள்ளேயே விட்டுவிட்டேன்.

கதவைத் தட்ட யத்தனிக்கும் முன்னே உள்ளே இருந்து பேச்சு கேட்டது.

"வேதாசலம் எப்படி மனுஷன்? சொன்னா சொன்னபடி செயாவாரா?"

"நானும் ராஜியும் அவர்கிட்டேதான முதல்லே வேலை பார்த்தோம்.. அதெல்லாம் கரெக்டா தந்துடுவாரு."

"அவர் சொன்னப்ப கூட நான் நம்பலைடி.. இப்போகூட அந்த சூப்பர்வைஸர் கூடவே வந்திருக்கான் பாரு"

"உங்களுக்கு என்னங்க, கூடவே இருந்த எனக்கே தெரியாது.. சேர்ந்து சேர்ந்து எல்லா இடத்துக்கும் போவாங்க, அப்படித்தான் எங்கேயோ வேதாசலம் பார்த்திருக்கணும்"

இப்போது எனக்கு அழுகை வந்தது.

_____________________________________________________#5

15 பின்னூட்டங்கள்:

லதா said...

அன்புள்ள சுரேஷ்,

என்ன, அவன் விகடனுக்கு அடுத்தபடியாகத் தொலைக்காட்சியில் மெகாசீரியலின் சில எபிசோடுகளை எழுத முயற்சி செய்கிறீர்களா ? வாழ்த்துகள் :-)))

Unknown said...

சுரேஷ்

நீங்களுமா கதை எல்லாம் (அதுவும் சீரியஸான) எழுத ஆரம்பித்து விட்டீர்கள்? நம்பவே முடியவில்லை.

வாழ்த்துக்கள் ...

தருமி said...

வேத நாயகம்...வேதாசலம்...?? எனக்கு தலையில் உள்ளதே கொஞ்சம்..(ஐ மீன், வெளியே உள்ளத சொன்னேன். உள்ளே எப்படின்னு தெரியாது!)

பினாத்தல் சுரேஷ் said...

லதா, திட்டறதுன்னா நேரடியா திட்டிடுங்க.. மெகா சீரியல் மாதிரி கேவலமாவா இருக்கு?

துபாய்வாசி, அப்பப்போ சீரியஸ்ஸா எழுதினாதான் பினாத்தலுக்கு மதிப்பு, பெனாத்தினாதான் சீரியஸ் எழுத்துக்கு மதிப்பு.

ஆஹா குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கினது நக்கீரனா தருமியா? திருவிளையாடலே எனக்கு குழம்புதே.. திருத்திட்டேன், நன்றி,

மணியன் said...

கதை நன்றாக இருந்தது. வில்லன் வேதநாயகமா, சிவாவா அல்லது இராதாவா ?

இல்லை பெண்மை என மகளிர்தினத்தில் எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி, மணியன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஷாஜி; I will read ypur kavithai and comment there.

G.Ragavan said...

பெனாத்தல்.....இது கதையல்ல...எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அறிவுரை...ஒரு பெண்ணை மட்டம் தட்ட வேண்டும் என்றால் அவளுடைய நடத்தையைத்தான் முதலில் குறி வைப்பார்கள் ஆணின வெறியர்கள். அங்க ஒரு தட்டு தட்டீட்டா எல்லாம் முடிஞ்சி போயிரும். அது உண்மையா இருந்தா என்ன...பொய்யா இருந்தா என்ன....வக்கிரம் பிடித்தவர்களுக்கு இதுதான் இனிக்கும் வழி.

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Kulam, for your continued support.

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Raghavan.

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by a blog administrator.
பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தென்றல்.. ஒரு thendrel-உம், thendral-உம் வந்து குழப்பறீங்களே!

பொன்ஸ்~~Poorna said...

சூப்பர் கதைங்கண்ணா... நல்லா இருந்துது.. ரொம்ப கம்மியான பாத்திரங்களுடன், இயல்பான, தரமான கதை... இன்னும் நிறைய எழுதுவீங்கன்னு நினைக்கறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பூன்ஸ்.. தொடர்ந்த ஆதர்வு இருந்தால் எழுதுவேன்.

சிறில் அலெக்ஸ் said...

தல ..கலக்கிட்டீங்க..
ரெம்ப நல்லாயிருந்துச்சுங்க.

வாழ்க வளமுடன்.

 

blogger templates | Make Money Online