Jun 29, 2006

அந்தக்காலம்.. சொர்க்கமா?

Nostalgia விற்கு நனவிடைத் தோய்தல் என்ற அழகான தமிழ்ப்பெயர் வைத்த புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.

நாம் அவ்வப்போது நனவிடைத் தோய்ந்தாலும், மற்றவர்களின் அந்தக்கால நினைவுகளைக் கேட்க நம்மில் பெரும்பாலோருக்கு பொறுமை இல்லை.

எனக்கு முதலில் இந்த "அந்தக்காலம்" என்பதை எப்படி வரையறை செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.

பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திர பல்லவனும் மாமல்லபுரக் கடற்கரையில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள், தாத்தா மலையமான் கூத்துக்கேட்டுவிட்டு தாமதமாக வருகிறார். நண்பர்கள் உரையாடல் இப்படிப்போகிறது:

"எப்படித்தான் அவருக்கு உடம்பு தாங்குகிறதோ?"

"என்ன இருந்தாலும் அந்தக்கால உடம்பல்லவா"

இதைப்படித்து எனக்கு சிரிப்பு அடங்க பல நிமிடங்களாயின. ஆதித்த கரிகாலனே ஆயிரம் ஆண்டுக்கும் முன் வாழ்ந்தவன்.. அவனுக்கும் "அந்தக்கால உடம்பு" மேல் பொறாமை இருப்பது, இது நாம், இன்று மட்டும் சந்திக்கும் சூழல் இல்லை என உணர்த்தியது.

காலம் மாற மாற, அந்தக்காலமும், அது கொடுத்த நல்ல விஷயங்களும் மட்டுமே ஞாபகம் இருந்து, அந்தக்காலத்தின் தீமைகள் வசதியாக மறந்து போகின்றன. இளமைத் துள்ளலோடு படம் எடுக்கும் 60+ இயக்குநர்களின் படங்களில், நிஜமான இளைஞர்களின் படத்தைக்காட்டிலும் ஆபாசம் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். பஸ்ஸில் ஏறும் பெண்கள் இளைஞர்களை விட முன்னாள் இளைஞர்களுக்கே அதிகம் பயப்ப்டுவார்கள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

என் "அந்தக்காலம்" என்பது 1950 - 70 எனக்கொண்டால், அதைப்பற்றிய இனிப்பு தடவிய நினைவுகளே எனக்குப் புகட்டப்பட்டிருக்கிறது.

துக்ளக்கில் வெளிவரும் துர்வாசரின் புதிய தொடர் "அதனால என்ன பரவாயில்லை" - யாராவது படிக்கிறீர்களா?.

ரைட் ஹானரபிள் வாத்தியார்களும், பிரசவத்துக்குப் பத்தியம் பார்த்த மாமியார்களும், கண்டிப்பான மேலதிகாரிகளும் உலாவரும் தொடரில் அந்தக்காலத்தில் இருந்த சுத்தபத்தமான வாழ்க்கை முறை, மனிதநேயம், உயர்வான விழுமியங்கள் எதுவும் இந்தக்காலத்தில் இல்லாமல் போனது, அவசர உலகத்தின் பணத்துரத்தல்களில் பலியான நுன்னுணர்வுகள் எனப் பலவாறாகவும் கதை அடிக்கிறார். வாராவாரம் வெறுப்பேற்றுகிறார்..

அன்று அவ்வளவு அருமையாக இருந்த சமூகத்தை இன்று கெடுத்து வைத்திருப்பதில் என் பங்கு குற்ற உணர்ச்சியைத் தூண்டும் விதமாய் இருந்தாலும், அப்படிப்பட்ட நல்ல உலகத்தில் வாழ்ந்த நீங்கள், எங்களுக்கு ஏன் மோசமான உலகத்தை விட்டுச்சென்றீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழும், வயதிற்கு மரியாதையால் தடை செய்யப்பட்டு வெளிவராமல் போகும்.

அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் ரத்தமும் சதையும் ஆன மனிதர்கள்தானா? அல்லது கொள்கைக்காக கோபதாபங்களைத் துறந்து, எந்நேரமும் பெரியவர்கள் பேச்சைக்கேட்டு வாழ்ந்த முனிவர்களா? என்றெல்லாமும் சில நேரங்களில் கேள்வி எழும். எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் இவர்கள் என்று அறிய ஆசைப்பட்டாலும், தெளிவாய் அறிய வழிகள் ஊடகங்கள் குறைவு காரணமாய் மிகக்குறைவே.

இயல்பாக அந்தக்கால வாழ்க்கையை, அதன் சுகதுக்கங்களோடு, உயர்வு தாழ்வுகளோடு பதிவு செய்த புத்தகங்களில் நான் படித்தவை மிகக்குறைவே.

அந்த வகையில் ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"உம், "காகித மலர்கள்"உம் முக்கியமானவையாகத் தோன்றுகிறது.

எஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழையும் காஸனோவாவை முக்கியக்கதாபாத்திரமாகக்கொண்ட "என் பெயர் ராமசேஷன்", தன்னிலை ஒருமையிலேயே நகர்கிறது. மாதம் நூறு ரூபாய் கையில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக எஞ்சினியரிங் படிக்க ஒப்புக்கொண்ட ராமசேஷன், ராவுடன் அறையைப்பகிர்ந்துகொள்கிறான். ராவின் குடும்பம் ராமசேஷனின் ஆர்வங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் அளவுக்கு விசித்திரமானது.- "எதைப்பற்றியும் கவலைப்படாத" தங்கை, "கலை" ஆர்வம் கொண்ட தாய், பணம் கொட்டும் தந்தை, ஏறத்தாழ அடிமைபோல ஒரு தோழன்.. தன் குடும்பத்தில் உள்ள சம்பிரதாயமான போலித் தனங்களை உணர்ந்திருக்கும் ராமசேஷனுக்கு, இந்த அமைப்பு, புதிய போலித்தனங்களை அறிமுகப்படுத்துகிறது - புதிய அனுபவங்களையும் அவமானங்களையும் அளிக்கிறது. வேறு வேறு வட்டங்களில் சுழன்றாலும், கடைசியில் வரையறுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்புகிறான்.

"காகித மலர்கள்" இன்னும் அதிகமான கதாபாத்திரங்கள், முரண்பாடுகள் - ஸ்டெனோகிராபராக இருந்து சாம தான பேத தண்டங்களைப் பிரயோகித்து முன்னேறிய உணவுத்துறை செயலாளர், அவருடைய "நவீனயுக" மனைவி, விஸ்கான்சின் பல்கலையில் Ecology ஆராய்ச்சி செய்யும் ஒரு மகன், எல்லாக்கட்டுகளையும் உடைக்கத்துடிக்கும் இன்னொரு மகன், தன்னம்பிக்கை குறைவான மூன்றாம் மகன், அவர்கள் காதலிகள், நண்பர்கள் -- எல்லோரின் வாழ்க்கையிலும் சில சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது.

இரண்டு புத்தகங்களுக்குமே இந்தச் சுருக்கம் அநியாயமானதுதான். ஆனால், முழுக்கப்படித்தால்தான் ரசித்து அனுபவிக்க முடியும் என்பதால், எந்தச் சுருக்கமும் அநியாயமாகத்தான் முடியும்.

நான் கொஞ்சம் வேகமாகக் கதை படிப்பவன். உரையாடல்களே மூன்று பக்கத்துக்கு இல்லாமல் கதை நகர்ந்தால், அந்த மூன்று பக்கத்தையும் விட்டுவிட்டு நான்காவது பக்கத்துக்கு நேரடியாகத் திருப்பிவிடுவேன். இந்தக்கதையை அப்படிப்படித்திருந்தால் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வாசித்திருக்க முடியாது. என் போன்ற பொறுமையற்ற வாசகனையே முழுமையாகப்படிக்க வைக்கும் அளவிற்கு இயல்பான எழுத்துநடை ஆதவனுடையது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அப்போதைய சிந்தனையை முழுமையாகப் பதிவு செய்வதில் வெற்றி அடைந்திருக்கிறார் ஆதவன். . எல்லா கதாபாத்திரங்களின் உண்மை எண்ணங்களையும் போட்டுக்கொள்ளும் முகமூடிகளையும், அணியும் வேஷங்களையும், split-personalityகளையும் அபாரமாக எழுத்தில் வடித்திருக்கிறார். ஒரு தொண்டைக் கனைப்புக்குப் பின்னால் கூட "நான் ஒரு பெரிய விஷயம் சொல்லப்போகிறேன், கேட்கத் தயாராகுங்கள்" என்ற குறியீடு அடங்கியிருப்பதாகச் சொல்லும் அளவிற்கு சில இடங்களில் அதீதமாய்ப் போனாலும், சுவாரஸ்யம் குறைவதில்லை.

பெரும்பாலும் ஆதவன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்பட்டவை எனச் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அந்தக்காலத்தை" தாண்டி விட்டதாலோ என்னவோ எனக்கு எந்த அதிர்ச்சியையும் இந்தப்பாத்திரங்களும் கதையும் அளித்துவிடவில்லை. வெளிவந்த நேரத்தில் இருந்த சமூகத்துக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். தங்கள் குறைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் வாசகர்களும் இந்தக்கதைகளில் தங்களை அடையாளம் கண்டுகொள்வதாலும், அவை வெளிப்படுதல் விரும்பாத காரணத்தாலும் இக்கதைகள் வெகுஜன அங்கீகரத்தை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

என்ன சொன்னாலும், நான் படித்த புத்தகங்களில் சிறந்தவையாக இந்த இரண்டையும் வகைப்படுத்துவதிலும், பரிந்துரைப்பதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

நன்றி - தமிழோவியம்

கொஞ்ச நாளா எதுவும் எழுத மேட்டர் இல்லாத காரணத்தால் மீள்பதிவு:-)

26 பின்னூட்டங்கள்:

Badri said...

நனவிடை தோய்தல் = நனவு இடை தோய்தல் - நடுவுல 'த்' வரக்கூடாது.

பினாத்தல் சுரேஷ் said...

மேற்படி பின்னூட்டம் வந்தவுடன், பதிப்பிக்க முடியாததால், திரு.பத்ரிக்கு தனிமடல் அனுப்பினேன், கீழ்க்கண்டவாறு:

இடைத் தேர்தல் என்பதில் வலி மிகுகிறதே? இடைப்பட்ட காலம் எனும்போதும் மிகுமே. இந்த இடைக்கு ஏன் கூடாது?

வலி மிகும் மிகா இடங்களைப்பற்றி என் இலக்கண அறிவு, சொல்லிப்பார் - புரிந்துகொள் என்ற அளவிலேயே நிற்கிறது. நனவிடை தோயதல் என்று சொல்வதைவிட நனவிடைத்தோய்தல் என்பதே சரியென சொல்லிப்பார்த்து, சரியென்று பட்டதால் உபயோகித்திருக்கிறேன். ஏதேனும் சிறப்பு இலக்கண விதி உள்ளதா?

இதற்கு பத்ரி இவ்வாறு பதிலளித்தார்:

சுரேஷ் - இரண்டு 'இடை'க்கும் வெவ்வேறு வகைச் சொல்லாக வருகின்றன.

இடைத்தேர்தல் = இடை+இல் தேர்தல். இங்கு 'இல்' என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு வரவேண்டும்,
அது 'தொகை' ஆனதால் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை. இந்த இடத்தில் ஒற்று மிகும்.

ஆனால் நனவு+இடை தோய்தல் என்பதில் 'இடை' என்பதே ஓர் வேற்றுமை உருபு. அதாவது ஏழாம்
வேற்றுமை உருபு. 'மலைகளுக்கு இடையில் நதி' என்பது 'மலையிடை நதி' என்றாவது போல
'நனவுகளுக்கு இடையில் தோய்ந்து போதல்' என்பது 'நனவிடை தோய்தல்' என்றாகிறது. அதனால்
இங்கு ஒற்று மிகாது.

வேற்றுமை உருபுகள்:

2-ம். ஐ
3-ம். ஆல், ஆன், ஒடு, ஓடு
4-ம். கு, பொருட்டு
5-ம். இல், இன், நின்று, இருந்து, காட்டிலும், பார்க்கிலும், விட
6-ம். அது, உடைய
7-ம். கண், இடை, முன், இடம், மேல், கீழ், பின், உள், இல்

விரிவான, தெளிவான பதிலுக்கு நன்றி பத்ரி.

இதைப்படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புவதால், தனிமடல் பரிமாற்றங்களையும் பதிப்பிக்கிறேன்.

Dubukku said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2006/06/29/twobooks/

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி டுபுக்கு

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
உங்கள் பதிவு அருமை !
குறிப்பாக இது !

//ரைட் ஹானரபிள் வாத்தியார்களும், பிரசவத்துக்குப் பத்தியம் பார்த்த மாமியார்களும், கண்டிப்பான மேலதிகாரிகளும் உலாவரும் தொடரில் அந்தக்காலத்தில் இருந்த சுத்தபத்தமான வாழ்க்கை முறை, மனிதநேயம், உயர்வான விழுமியங்கள் எதுவும் இந்தக்காலத்தில் இல்லாமல் போனது, அவசர உலகத்தின் பணத்துரத்தல்களில் பலியான நுன்னுணர்வுகள் எனப் பலவாறாகவும் கதை அடிக்கிறார். வாராவாரம் வெறுப்பேற்றுகிறார்..

அன்று அவ்வளவு அருமையாக இருந்த சமூகத்தை இன்று கெடுத்து வைத்திருப்பதில் என் பங்கு குற்ற உணர்ச்சியைத் தூண்டும் விதமாய் இருந்தாலும், அப்படிப்பட்ட நல்ல உலகத்தில் வாழ்ந்த நீங்கள், எங்களுக்கு ஏன் மோசமான உலகத்தை விட்டுச்சென்றீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழும், வயதிற்கு மரியாதையால் தடை செய்யப்பட்டு வெளிவராமல் போகும்.
//

பத்ரியின் விளக்கமும் அருமை !

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பாலா.

கோவி.கண்ணன் said...

காலம்னு வலைப்பு தலைப்பு வெச்சிருக்கியே கொஞ்சம் பொனாத்தாலுருக்கு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வாப்பா கண்ணுன்னு அண்ணன் கைப்பு சொன்னதை ஏற்று ... கருத்து சொல்ல வந்திருக்கேனுங்க...

அந்தக்காலம் இந்தகாலம் எல்லா காலமும் ஒன்னுதானுங்க ... எல்லா காலத்திலேயிம் களவானிபசங்க இருந்துக்கிட்டு தானுங்க இருக்கானுங்க... ஊடக வளர்ச்சி அதிக இருக்குறதால் இந்த காலத்துல மாற்றம் உடனடியா இருக்குதுங்க. சின்ன வீடு ... இரண்டு பொண்டாட்டி சமாச்சாரமெல்லாம் இப்ப குறைவு தானுங்க. முன்னால மொத்தம குத்தகைக்கு எடுத்தவனுங்க இன்னிக்கு வாடகைக்கு எடுக்குறானுங்க. முன்பு வாழ்க்கைன்னு சொன்னத இப்ப சர்வேவல் ந்னு சொல்கிறார்கள்

இராதாகிருஷ்ணன் said...

இந்த வகையில் வந்த மற்றொரு சுவையான புத்தகம் எஸ்.வி.ராமகிருஷ்ணன் எழுதிய 'அது அந்தக் காலம்' http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=art&itemid=291

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கோவி கண்ணன் - நம்ம பதிவுக்கு வரதுக்குக் கூட ரெகமண்டேஷன் தேவைப்படுது போல:-( நீங்க சொல்றது சரிதான். பெயர்களும் முறைகளும் மட்டும்தான் மாறியிருக்கு. மேட்டர் ஒண்ணும் மாறலைன்றதுதான் உண்மை.

ராதாகிருஷ்ணன், எஸ் வி வி எனக்குப் பிடித்த எழுத்தாளராக இருந்தவர்தான். "இருந்தவர்" ஆனதுக்குக் காரணம் அவருடைய ஒரு புத்தகத்துக்கும் மற்றொரு புத்தகத்துக்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாங்கள் கூட இல்லாமல் இருப்பதுதான்:-)

பினாத்தல் சுரேஷ் said...

மன்னியுங்கள் இராதாகிருஷ்ணன். அவசரத்தில் எஸ் வி ராமகிருஷ்ணனை எஸ் வி வி எனப்படித்து விமர்சித்தும் விட்டேன். இதைப்படிக்கவில்லை. படித்துவிட்டுச் சொல்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

அட என்னங்க என்னமோ தோய்க்கறது, காய போடறதுன்னுக்கிட்டு. அதுக்குத்தான் நாங்க அழகு தமிழில் கொசுவர்த்தி சுத்துதல்ன்னு வெச்சிருக்கோமே.

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி இலவசம்...

கொசுவர்த்தி சுத்துதல் என்பது பாட்டாளிகளின் தமிழ். இலக்கிய விசாரம், பின்நவீனத்துவ வாதம், இருத்தலியல்வாதம் ஆகியவை குறித்து வாதிப்போருக்கு, நனவிடை தோய்வதே உகந்தது. மேலும் கொசுவத்திக்கு வலையுலகில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர் நியூஸிலாந்தில் உள்ளதால், சட்டச்சிக்கல்களிலிருந்து தப்பும் நோக்கத்தில் மேற்படி வார்த்தை பிரயோகிக்கப்பட்டது.

தெளிந்தாயா?

மணியன் said...

அறிமுகப்படுத்தப் பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும். 'அந்தக் காலம்' பற்றி 'அந்தக் காலம்' போட்டி பரிந்துரைத்தவர் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதனால் தானோ டோண்டு அவர்கள் 'சமீபத்தில்' நடந்தவைகளையே கூறுகிறார் போலும்.
//இலக்கிய விசாரம், பின்நவீனத்துவ வாதம், இருத்தலியல்வாதம் ஆகியவை குறித்து வாதிப்போருக்கு, நனவிடை தோய்வதே உகந்தது. //
இப்போது புரிந்தது ஏன் உங்கள் பதிவிற்கு ரெகமெண்டேஷனுடன் வரவேண்டும் என்று :))

கீதா சாம்பசிவம் said...

ஒரு இலக்கண வகுப்பே எடுத்தாச்சு, நடுவிலே இது வேறேயா? புத்தக விமரிசனம் தான் சொல்றேன். இதுவாவது புரியுதா?
நீங்க கொடுத்த எல்லாப் புத்தகமும் படிச்சிருக்கேன். துர்வாசரும் படிக்கிறேன். அது பற்றிய என் அபிப்பிராயம்: NO COMMENTS

கீதா சாம்பசிவம் said...

கீதா, உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்க என்ன சொல்றீங்கனு (வழக்கம் போல) புரியலை.
உங்களுக்குப் பதிலா நானே சொல்லிட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மணியன்.. சமீபத்தில் -- வம்பிலே மாட்டிவிடப் பாக்கறீங்க பாத்தீங்களா?

எதுக்கு ரெகமண்டேஷன்? பயமெல்லாம் வேணாம்.. எப்பவாச்சும்தான் இந்த வார்த்தைகள் எல்லாம் ஸ்பெல்லிங் செக் பண்ணி உபயோகப்படுத்துவேன்..

கீதா - முதல் முறையா உங்கள் பின்னூட்டம் புரிஞ்சுதுன்னு பின்னூட்டமிடலாம்னு பாத்தா.. இப்படி ஒரு ஃபாலோ அப் பின்னூட்டம் விட்டுட்டீங்களே:-((

துர்வாசர் பத்தி நோ கமேண்ட்ஸா? எதிர்பார்த்ததுதான்:-)

Prabu Raja said...

துர்வாசரும் தெரியாது, துக்ளக்கும் தெரியாது.

ஆனா இந்த இலக்கணம் 10ம் வகுப்புல படிச்சது இப்ப கொஞ்சம் ஞாபகம் வருது.

தான்க்ஸ்

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க பிரபு ராஜா..

நம்ம பதிவு எவ்வளோ இன்ஃபர்மேட்டிவ் பாத்தீங்களா? உங்களை உங்க பத்தாங்கிளாஸுக்கு நனவிடை தோய வச்சுடுச்சு பாத்திங்களா:-))

ஓகை said...

சுரேஷ்,

நீங்கள் குறிப்பிடும் 1950-70 - இந்த காலத்தில்தான் நான் பிறந்தேன். 70ல் நான் எட்டாம்பு. கணக்கை பொட்டுக்கொள்ளுங்கள்.

நனவிடை தோய்தல் - அருமையான தமிழ்ச்சொல். இந்த சொல் என்னை ஒரு கவிதை உலகத்திற்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. கொசுவர்த்தி என்ற சொல் கருப்பு வெள்ளையும், வியர்வையின் கசகசப்பும், படத்தில் மௌனம் வரும்போது மேலே ஓடிக்கொண்டிருக்கும் முப்பத்தி சொச்சம் மின்விசிறிகளின் கொரகொர டொரடொரப்பும் - இவ்வாறு நனவிடை தோய்ந்துவிடுகிறேன்.

தமிழகத்தில் 19ம் நூற்றாண்டுவரை இருந்த ஒவ்வொரு நூற்றாண்டு வாழ்க்கைகளுக்குமிடையே இருக்கும் வேறுபாடுகளுடன் 20 நூற்றாண்டு வாழ்க்கைக்கு இருக்கும் வேறுபாட்டை ஒப்பிடவே முடியாத அளவுக்கு அந்த நூற்றாண்டில் மாறுதல்கள் நடந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளின் இந்திய முகலாய ஆட்சி தமிழகத்தின் வாழ்க்கை முறைகளில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியதா என்று என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை. ஆனால் ஆங்கிலேய ஆட்சி பல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது. அச்சு ஊடகமும், அயல்மொழியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையும், புதிய வாகனங்களால் பல நில மக்களின் போகுவரத்து அதிகமானதும், அதனால் ஏற்பட்ட கலச்சார பரிமாற்றங்களும், விஞ்ஞான வளர்ச்சிகளும், சென்ற நூற்றாண்டை மிகவும் மாற்றியமைத்திருக்கின்றன. இந்த மாற்றங்களை அகில உலகமும் ஏறக்குறைய அதே நேரத்தில் சந்தித்திருந்தாலும், ஆஙகிலேயரிடம் நாடு அடிமைப் பட்டிருந்த நாட்களில் நாம் அடைய நேர்ந்தது, வரலாறு நமக்கிழைத்த கொடுமை. நான் நீட்டி முழக்கி சொல்ல வருவது என்னவென்றால் இவ்வளவு மாற்றங்கள் ஒரு நூற்றாண்டில் நடந்திருக்கிறபடியால் ஒவ்வொரு ஆண்டுமே ஒரு நூற்றண்டின் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அதிலும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. சில செய்திகளைச் சொல்கிறேன். 1967ல் ஐந்தாம் வகுப்பு சிறுவனாக நான் குடந்தை நகரில் ஒரு பெண் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு தெருவில் சென்றதைப் பார்த்து வியந்து ஓடிப்போய் என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் பாப்பா மலர் என்ற சிறுவர் வானொலி நிகழ்ச்சி கேட்பதற்காக அடுத்தத் தெருவில் இருக்கும் வானொலிப் பெட்டியுடைய என் நண்பன் வீட்டிற்கு வாராவாரம் சென்றிருக்கிறேன். அப்போது என் வீட்டில் வானொலிப்பெட்டி இல்லை. இங்கே ஒரு கூடுதல் செய்தி. அந்த நண்பன் அந்தன வகுப்பைச் சேர்ந்தவன். என் வீட்டில் அன்று அசைவம் சமைத்திருந்தால் என் தாயார் என் உதட்டிலும் புறங்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி அனுப்பி வைப்பார். ஒவ்வொருவரும் என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லாருக்குமே தெளிவாக தெரிந்திருந்த அந்த நாட்களில், முகமதிய மற்றும் கிருத்துவ மத மக்களை நாங்கள் இந்து மதத்தின் மிகவும் வேறுபாடுகளுடைய மற்றுமிரண்டு ஜாதிகளாகவே சிறுவயதில் உணர்ந்து இருக்கிறோம்.

இந்தத் தலைப்பில் ஒரு தனிப்பதிவில் எழுதவேண்டியதையும் விட அதிகமான செய்திகள் இருக்கின்றன.

நீங்கள் துக்ளக் வாசகர் என்கிற உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்களே பரவாயில்லையா?
துர்வாசர் எழுதுவதில் பெரும்பகுதி சரியாகவே இருக்கிறது என்பது என் எண்ணம்.

இதை என் வலப்பூவில் ஒரு பதிவாகவே ஆக்கியிருக்கிறேன். நன்றி.

விருபா / Viruba said...

2003 இல் வெளியான நனவிடை தோய்தல்

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

முழுமையாக ஒப்புக்கொள்ளமுடியவில்லை - நானும் ஒன்றும் இளைஞன் இல்லாவிட்டாலும் - 70 எனக்கு முக்கியமான வருடம் - இந்த Clue போதும் என்று நினைக்கிறேன்:-))

ஆல்வின் டாப்ளரின் தேர்டு வேவ், ஃபியூச்சர் ஷாக் போன்றவற்றை படித்திருக்கிறீர்களா? 20ஆம் நூற்றாண்டின் இறுதியைப்பற்றி அவர் சொன்னதை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. வேகவேகமான மாற்றங்கள் - எல்லா மாற்றங்களும் நன்மையைக்கொண்டு வரப்போவதில்லை, எல்லாம் தீமையை மட்டுமேவும் கொண்டுவரப்போவதில்லை.

நான் துக்ளக் வாசகன் தான் - அபிமானி அல்ல:-) விகடன், நக்கீரன் தினமலர் தமிழ் முரசு என்று எதையும் விடுவதில்லை, துக்ளக்கையும். என் பழைய பதிவுகளில் ஒன்றரைப்பக்க துக்ளக் படித்துப்பாருங்கள். துர்வாசர் இப்போது எழுதுவது 90% குப்பை என்பது எ தா அ.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி விருபா. படித்து கருத்து எழுதுகிறேன்.

ஓகை said...

ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை நடராஜன்,

மாற்றங்கள் வேகமாக வருகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறேன். (ஃபியூச்சர் ஷாக்கின் அடிநாதமே அதுதான்). ஆனால் மாற்றங்கள் எல்லாமே மோசமானவை, அந்தக்கால வாழ்க்கை சொர்க்கம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்.
விழுமியங்கள் மாறிவருகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறும் விழுமியங்களில் சிலவாவது மூடப்பழக்கவழக்கங்களில் இருந்து விடுதலைக்கு வழிகோலும் மாற்றங்கள் என நம்புகிறேன்.
நிதானமான அந்தக்கால வாழ்க்கை பழகியவர்கள் இந்தக்கால வேகங்களையே வெறுப்பதை எதிர்க்கிறேன்.

துர்வாசர் ஒரு அத்தியாயத்தில் கிர்க்கெட் விளையாடி மகிழ்ச்சி கொண்டாடும் இளைஞர்களைக் கிண்டல் அடித்திருந்தார். அதில் எனக்கு அந்தக்காலம் இந்தக்காலம் எல்லாம் தெரியவில்லை - தன்னால் ஆட முடியவில்லையே என்ற ஏக்கம்தான் தெரிந்தது.

எனக்கு மின்னஞ்சலில் ஒரு நண்பர் அனுப்பியிருந்த விமர்சனத்தில் -

"இந்தக்கால இளைஞரகளுக்கு எந்த மரியாதையும் தெரியவில்லை. பெரியவர்களை மதிப்பதில்லை, அறிவை ஏற்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. விளையாட்டிலும் கேளிக்கையிலுமே கால்ம் கழிக்கிறார்கள்"

என்று சொன்னவர்...

அரிஸ்டாட்டில்!!

வல்லிசிம்ஹன் said...

சுரேஷ்,
நனவிடை தோய்தல் என்னும் தெளிவான நோய் வர வயது ஆக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
எப்போதுமே நிகழ் காலத்தைவிட ,இறந்த(?) காலம் இனிமையாகத் தோன்றுவது ஒரு முறையாகவே நடந்து வந்துஇருக்கிறது. எங்களை விட எங்களைப் பெற்றவர்கள் உசத்தி. எங்களை விட நாங்கள் பெற்றவர்களும் உசத்திதான். வாய்விட்டுப் பேசத் தெரிகிறதே.மனம் விட்டு எழுதத் தெரிகிறது.நான் சொல்வது நிஜமான உண்மை.
மிக நல்ல பதிவு. நன்றி

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வல்லி. (வள்ளியோ?)

இது ஒரு தீராத நோய். உங்கள் பின்னூட்டத்த்தில் இறந்த-விற்கும் காலத்திற்கும் இடையில் ஒரு கேள்விக்குறி போட்டிருக்கிறீர்களே, அது சரிதான். காலம் இறப்பதில்லை - மனதில் வடுவாய் இருக்கிறது..

 

blogger templates | Make Money Online