ஏமாற்றும் பதிவு அல்ல
பொதுப்புத்தி, தேசபக்தி, திம்மித்துவம், தீவிரவாத ஆதரவு, மத நல்லிணக்க ஆதரவு/ எதிர்ப்பு, மனிதாபிமானம், உடோப்பியவாதம் - அப்சலின் தூக்கு பற்றி எழுதப்பட்ட ஆயிரமாயிரம் பதிவுகளில் எழுதியவருக்கும் பின்னூட்டியவருக்கும் மேற்கூறியவற்றில் ஏதோ ஒரு பட்டம் கிடைத்தது.
யார் என்ன எழுதியிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை யாருமே வீணடிக்காமல், அவரவர் ஸ்டைலில் கொஞ்சம் தகவல், கொஞ்சம் கருத்து என விளையாடியிருந்தார்கள். அன்னப்பட்சி போல கருத்துக்களின் தாக்கத்தை விலக்கி, தகவல்களின் தாக்கத்தை மட்டுமே கொண்டு எழுந்த யோசனைகளை எழுதுகிறேன்.
1. தூக்கு தண்டனை தேவையா?
இந்தக்கேள்விக்கு என்னால் ஆம் இல்லை யென பதில் சொல்ல முடியவில்லை. திருத்தப்பட முடியாத தீர்ப்பு என்பது பயமுறுத்தினாலும், சட்டத்திற்கு அந்தப்பக்கம் உள்ள சுதந்திரத்தில் குற்றம் செய்பவர்களுக்கு, "இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்" என்று திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கு, பலவீனர்களை கொடுமைப்படுத்தும் வன்முறையாளர்களுக்கு - தற்போது உள்ள சட்டப்படி - இருப்பதில் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றே தோன்றுகிறது.
இதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருணையே காட்டப்படக்கூடாது என்பது என் கட்சி. எந்தப்பாவமும் தெரியாத, எந்தக்கட்சியிலும் சேராத அப்பாவிகள் கலவரத்தில் சாவதையும் பழிவாங்குதலில் தூண்டப்பட்டு கொல்லப் புறப்படுவதையும் நேரில் சில கலவரங்களில் கண்டிருக்கிறேன். இன்னொருமுறை பார்க்க தைரியம் இல்லை. திருவல்லிக்கேணியில் செருப்பு வீசியவர்கள், மனித குண்டாய் வெடித்தவர்கள், மசூதியை இடித்தால் நாடு ரத்தக்காடாகும் என்று தெரிந்தே செய்தவர்கள், ரயிலை எரிப்பதன் பின்விளைவுகளை அறிந்தவர்கள், அதிகாலை மூன்று மணிக்கு வெள்ளநிவாரணம் தருவதாக அறிவித்தவர்கள் - எல்லாரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இது பொதுப்புத்தியாக இருக்கலாம் - இருந்துவிட்டுப் போகட்டும்.
அப்பாவிகள், மௌனப்பெரும்பான்மையினர் தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான் என் வாதத்தின் அடிநாதம். நிரபராதிகள் அரசாங்கத்தால் தண்டிக்கப்படக்கூடாது என்பதைத் தனியாக சொல்லத்தேவையில்லை. எனவே, Rarest of the Rare Cases என்பது ஒப்புக்கொள்ளப்படக்கூடியதாகவே தோன்றுகிறது.
2. சுதந்திரப்போரா? தீவிரவாதமா?
காஷ்மீர் பிரச்சினை பெரிதானதில் இந்தியாவின் பாகிஸ்தானின் பங்குகள், செய்யப்பட்ட தவறுகள், கொல்லப்பட்ட அப்பாவிகள் பற்றியும் பல விரிவான பதிவுகள் வந்தன. சினிமாக்களில் வரும் தீவிரவாதிகள் தவிர உண்மையில் யாரும் பொழுதுபோக்கிற்காக குண்டுவைக்கப் போவதில்லை, உயிர்களுடன் விளையாடப்போவதில்லை - அவர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக அவர்கள் கருதாத வரை.
எல்லா தீவிரவாதிகளுமே, அவர்கள் சார்ந்த கூட்டத்துக்கு நல்லவர்கள்தான், ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிமினல்கள்தான். பகத்சிங் இங்கிலாந்து ஆட்சியின் கண்களில் தீவிரவாதியாகத் தானே தெரிந்தான்? இங்கே குண்டு வைப்பவர்கள் இந்தியாவின் கண்களில் குற்றவாளியாகத்தான் தெரிவார்கள், அதில் எந்தத் தவறுமில்லை. உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயிர்களைச் சாகடிப்பதுதான் காஷ்மீர் பிரச்சினையின் தீவிரத்தை இந்திய அரசாங்கத்துக்கு உணர்த்தும் வழிமுறை என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் குற்றமிழைத்ததாக அவர்கள் கருதிய ஆங்கில அதிகாரிகளைத் தான் குறிவைத்தார்களே அன்றி சம்மந்தப்படாத பொதுஜனங்களை அல்ல. இந்தப் பெரிய வித்தியாசம் கண்ணில் படாவிட்டால் மட்டுமே பகத்சிங்கையும் காஷ்மீர் போராளிகளையும் ஒப்பிடத் தோன்றும்.
3.அப்ஸல் குற்றவாளியா?
இல்லை என்று யாருமே சொன்னதாகத் தெரியவில்லை. உடந்தையாக மட்டுமே இருந்தது, குற்றத்தின் அளவு, மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது, சரியான வழக்கறிஞர் இல்லாதது போன்ற விஷயங்கள்தான் பேசப்பட்டது. எனக்கு முக்கியமாகத் தோன்றுவது ஒரு கேள்விதான் - "அப்ஸலுக்குத் தான் செய்த உதவியின் தீவிரம் தெரிந்து இருந்ததா இல்லையா?" தெரியாது என்னும் பட்சத்தில் அவன் தூக்கிலிடப்படுவது அநீதி, தெரிந்திருந்தது என்னும்பட்சத்தில் குற்றத்தின் அளவு எத்தகையதாக இருந்தாலும் கடும் தண்டனை சரியே .
இதைச் சரிபார்க்கும் வாய்ப்பு, ஊடகங்கள் வாயிலாக மட்டுமே தகவல் அறியும் நம்மைவிட, குற்றவாளியிடமும் சாட்சிகளிடமும் நேரடியாக உரையாடிய நீதிமன்றங்களுக்கு அதிக வாய்ப்பிருந்திருக்கும். நீதிமன்றங்கள் மேலேயே நம்பிக்கையில்லை எனச் சொல்பவர்கள் அதற்கு மாற்று என எதையும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.
குற்றத்தின் அளவைக் கணக்கிடாமல் "26 பேருக்கும் தூக்கு தண்டனை" எனச்சொன்ன ராஜீவ் காந்தி கொலைவழக்கு மேற்கோளிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் என்ற வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததையும், அங்கே தீர்ப்பு திருத்தப்பட்டதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
வழக்கறிஞர் பற்றிய குறைகளும் கூறப்பட்டன. காஷ்மீர் தழுவிய போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்துபவர்கள் வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இருக்கையில் ஒரு வழக்கறிஞர் வைக்க முடியாமல், தூக்குதண்டனை வழங்கப்பட்டபின் போராட்டமும், அனுதாப அலை உருவாக்கலும் செய்வது திசைதிருப்பல் மட்டுமே.
4. கருணை மனு?
பாராளுமன்றம் முடிவெடுக்குமாம். எப்படிப்பார்த்தாலும், நம்மைவிட அதிகத் தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உச்சநீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பைவிட மனித உரிமையும் State Organized Murder-உக்கு எதிரான மனப்பான்மையும் பெரிதாகத் தோன்றுமளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்குமானால் மன்னிக்கப்படுவது சரியாக இருக்கும். ஆனால் - காஷ்மீரில் போராட்டங்கள் நடக்கின்றன, பாகிஸ்தானுடன் பேச்சு பாதிக்கப்படும், அப்ஸலின் மனைவி விதவையாகிவிடுவாள், அவன் மகன் தற்கொலைக்கு முயற்சிப்பான், வாக்கு வங்கி பாதிக்கப்படும் போன்ற காரணங்களுக்காக மன்னிக்கப்பட்டால்..
என்ன செய்வது நாம் - விதியை நொந்துகொள்வதைத் தவிர?
Oct 26, 2006
அப்ஸல், தூக்குதண்டனை, கருணை மனு (26 Oct 06)
Subscribe to:
Post Comments (Atom)
19 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு பினாத்தலாரே. உணர்ச்சி வசப்படாமல் ஆழமாக ஒவ்ப்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். இந்த விஷயத்தை பற்றி எழுதப்பட்டவைகளில் மிகச் சிறந்த பதிவு என இதைத்தான் சொல்வேன்.
சுரேஷ் நிதானமாக யோசித்து எழுதி இருக்கிறீர்கள்.
நல்ல பதிவு.
மீண்டும் வேதாளம் ?
மொத்தத்தில் முழு உண்மை அறியாத நாம் ஊடக வாயிலாக அறிந்த அரை உண்மைகளை வைத்து கருத்து கந்தசாமியாகி இருக்கிறோம்.
இந்த வழக்கை குடியரசு தலைவர் தீர்ப்பிற்கு விட்டு விட்டு விவாதிக்க வேண்டியவை:
1. மரணதண்டனை கொடுக்கப் பட வேண்டுமா ? வளர்ந்த நாகரீகங்கள் அந்த திசையில் பயணிக்கும்போது நாம் அந்த நிலையை அடைய வளர்ந்திருக்கிறோமா ?இல்லை கால அவகாசம் வேண்டுமா?
2. உயர்/உச்ச நீதிமன்றங்களின் நீதி பரிபாலனம் இன்னும் transparent ஆகவும் நேர்மையாகவும் இருப்பதாக மக்கள் எண்ண செய்ய வேண்டுவன என்ன ?
3. காவல்துறையின் புலனாய்வும் transparent ஆகவும் நேர்மையாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் ? ஜெஸிகா லால், மட்டூ வழக்குகள் , தமிழகத்தில் நடைபெறும் பொய் வழக்குகள் அவர்களின் credibilityஐ வெகுவாக பாதித்துள்ளன.
4. சாட்சிகள் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மாற்றிமாற்றி, எந்த தண்டனையுமின்றி, சாட்சி சொல்வது நிறுத்தப் பட வேண்டும். Perjury should be punishable.
நன்றி செல்வன்.
நன்றி அனானிமஸ்.. பெயர் வேண்டாம், ஒரு நம்பராவது வச்சுக்குங்களேன்.. கூப்பிட சௌகரியமா இருக்கும்.
மணியன்,
நானும் கருத்து கந்தசாமி ஆகியிருந்தாலுமே கூட, தீர்ப்பளிக்கும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டுவிடவில்லையே:-)
உங்கள் கேள்வி 1, பயணிக்கும் தளம் வேறு. என் நிலை Rarest of Rare இலேயே இருக்கு.
2. நிச்சயம் யோசிக்க வேண்டிய கருத்து. Transparent ஆக இருப்பதை விட தெரிவது முக்கியம்.
3. பாண்டியம்மாள் இன்ன பிற.. ஆகியவை போலீஸின் மதிப்பையும் Credibility ஐயும் குறைக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், போலீஸ் குற்றம் சாட்டியவர்கள் நேராக தண்டிக்கப்படுவதில்லையே.. Transparency வேண்டாம் என்று நான் சொல்லவில்லை;-)
4. Perjury should be punishable. -- ஒத்துக்கறேன்.
சுரேஷ்,
என்னுடைய 2,3,4 பகுதிகள் இந்த controversy போன்றவை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மக்கள் சந்தேகிக்க இவையே மூலகாரணிகளாகும். அருந்ததி ராய் போன்றவர்கள் இத்தகைய ஓட்டைகளையே சுட்டுகிறார்கள். அவற்றை நீக்க வேண்டும்.
உங்கள் பதில் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துக் கொண்டதால் இப்பின்னூட்டம். போலீஸ் நியாயமான முறையில் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு வந்தது என்று மக்கள் (leaving the partisan crowd,both sides) நினைத்திருந்தால் அஃப்ஸலுக்கு இவ்வளவு ஆதரவு, குறைந்த பட்சம் அனுதாபம், எழுந்திருக்காது. அதனால் காவல்துறையின் கண்ணியம் நீதித்துறையின் கண்ணியத்திற்கு ஈடாக இருத்தல் அவசியம்.
பிரச்சினையின் கனத்தில் உங்கள் பதிவின் அழகான formatஐயும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ள தன்மையையும் பாராட்ட தவறிவிட்டேன். பாராட்டுக்கள்!
மணியன்,
மீள்வருகைக்கும் நன்றி.
உங்கள் கருத்து புரிகிறது.
//போலீஸ் நியாயமான முறையில் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு வந்தது என்று மக்கள் (leaving the partisan crowd,both sides) நினைத்திருந்தால் // உண்மைதான்.
உங்கள் பாராட்டுக்கும் நன்றி.
Suresh,
//இந்த விஷயத்தை பற்றி எழுதப்பட்டவைகளில் மிகச் சிறந்த பதிவு என இதைத்தான் சொல்வேன்.
//
I second Selvan, the Great !!!
//இதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருணையே காட்டப்படக்கூடாது என்பது என் கட்சி............. திருவல்லிக்கேணியில் செருப்பு வீசியவர்கள், மனித குண்டாய் வெடித்தவர்கள், மசூதியை இடித்தால் நாடு ரத்தக்காடாகும் என்று தெரிந்தே செய்தவர்கள், ரயிலை எரிப்பதன் பின்விளைவுகளை அறிந்தவர்கள், அதிகாலை மூன்று மணிக்கு வெள்ளநிவாரணம் தருவதாக அறிவித்தவர்கள் - எல்லாரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இது பொதுப்புத்தியாக இருக்கலாம் - இருந்துவிட்டுப் போகட்டும். //
இருந்துவிட்டு போகட்டுமா அல்லது இருந்தே ஆகவேண்டுமா? இந்தப் புத்தி இருக்கவேண்டிய புத்திதானே சுரேஷ்?
நன்றாக சிந்தித்து எழுதப்பட்ட பதிவு.
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி பாலா. உங்கள் பதிவுக்கான பதிலாகத்தான் எழுத யோசித்தேன். அப்போது சில காரணங்களால் முடியவில்லை எனவே முழுசா புதுசா போட்டுட்டேன்.
நன்றி ஓகை.
இப்படி இருப்பது பொதுப்புத்தி என்று வர்ணிக்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அபாயங்கள் இருப்பதால் அப்படிச் சொன்னேன்.
நன்றீ அருண்குமார்.
""""உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயிர்களைச் சாகடிப்பதுதான் காஷ்மீர் பிரச்சினையின் தீவிரத்தை இந்திய அரசாங்கத்துக்கு உணர்த்தும் வழிமுறை என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் குற்றமிழைத்ததாக அவர்கள் கருதிய ஆங்கில அதிகாரிகளைத் தான் குறிவைத்தார்களே அன்றி சம்மந்தப்படாத பொதுஜனங்களை அல்ல. இந்தப் பெரிய வித்தியாசம் கண்ணில் படாவிட்டால் மட்டுமே பகத்சிங்கையும் காஷ்மீர் போராளிகளையும் ஒப்பிடத் தோன்றும்"""""
சரியாக சொன்னீர்கள்...நிறைய விஷயங்கள் சொல்லலாம் ஆனால் பதிகின் கருத்து திசை திரும்பி விடும்...எனவே நல்ல பதிவு என்பதோடு நிருத்திக்கொள்கிறேன்
நன்றி சரவணகுமார்.
24 மணிநேரத்துக்குள் இந்தப்பதிவை இயற்கை மரணம் அடைய விடமாட்டேன்.. விடமாட்டேன்.. விட மாட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏன்.......
செல்வன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்...
நிதானமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீதிமன்றங்கள் தவறிழைத்திருக்கலாம் என்பதைச் சொல்லத்தான் முடியும் அதற்கு மாற்று அரசியல் சாசனத்திலேயே இல்லியே என்ன செய்வது. நீதிமன்றம் மக்களின் மனநிலைக்காக தீர்ப்பளிப்பது அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், செயல்பாடுகள் போலில்லையா?
அப்போ மக்களின் பொதுப்புத்தியை மாற்றுவதுதான் நீதிமன்றங்களுக்கு பதிலாக இருக்கும். அதற்காகத்தான் பலரும் முயற்சி செய்கிறார்கள்.
நன்றி சிறில்.
மரணதண்டனைக்கு எதிராக பொதுக்கருத்து ஏற்படுவது பற்றி எனக்கு எதிர்ப்பு கிடையாது. ஆனால், தற்போது உள்ள சட்டங்களின் படி கடுமையான தண்டனை, ஆராய்ந்த பல்வேறு நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு மேல் மரியாதை இருக்கிறது.
Post a Comment