Feb 22, 2007

காவிரி, எந்த ஜல்லி தண்ணீர் தரும்? (22 Feb 07)

17 ஆவது நாளாக இன்றும் மறியல் செய்தார்களாம் கர்நாடகாவில். இந்தச் செய்தியையும் தங்கம்-வெள்ளி விலை நிலவரத்துடன் சேர்த்துச் சொல்லும் அளவிற்கு ரெகுலர் ஆகிக்கொண்டிருக்கிறது.

படிக்கும்போது கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தேன். வேலை தேடிய நேரத்தில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். வேலை கிடைத்த பிறகும் அவ்வப்போது டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன், இப்போது கிரிக்கின்போவோ, எஸ் எம் எஸ் - ஸோ வெறும் ஸ்கோர் மட்டும்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பிட்ச் என்றால் என்ன, எப்படிப்பட்ட பந்துக்கு எப்படி பீல்ட் செட் செய்கிறார்கள், பந்து ஸ்விங் ஆகிறதா ஸ்பின் ஆகிறதா, பேட்ஸ்மேன் அடித்த ஷாட் நல்ல ஷாட்டா, விளிம்பில் பட்ட ஆபத்தா.. எதுவும் தெரியாமல் 37/ 3 - 10 ஓவரில் என்பது நம் டீமுக்கு நல்லதா கெட்டதா என்று மட்டுமே யோசிக்கிறேன்.

அதற்கும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளை ஒட்டி நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு 419, கர்நாடகத்துக்கு 270 என்று எண்கள் மட்டுமே முதலில் உணர்ச்சியைத் தூண்டியிருக்கிறது. இந்த உணர்ச்சித் தூண்டுதலை தத்தம் அரசியல் வாழ்விற்கு எந்த விதமாக சாதகமாக்கிக்கொள்ளலாம் என்றே சம்மந்தப்பட்ட அனைவரும் பாடுபடுவது வெட்கக்கேட்டின் உச்சம்.

ஜடாயு பதிவில் "என் வீட்டிலே ரெண்டு நாள் தண்ணி வரலை, இதுலே தமிழ்நாட்டுக்கு வேற தரணுமாக்கும்" என்று நொடித்துக்கொள்ளும் கர்நாடக
அம்மணிகள், துரியோதனனைப் பேரடி செய்து "ஒருசொட்டு நீர் கூட தமிழ்நாட்டுக்குப் போகக்கூடாது" என்று வெற்றுச்சவடால் விட்டு பிரச்சனையை
ஊதிப் பெரிதாக்கும் சலுவாலியாக்கள், நம் பலத்தைக் காட்டினால்தான் தண்ணீர் வெளியூர் போவதிலிருந்து நிறுத்த முடியும் என்று புரிந்துவைத்திருக்கும் விவசாயி சங்கங்கள், ஊருக்கொரு பேச்சு பேசும் ஸ்பெஷல் மனசாட்சிகளை வைத்திருக்கும் தேசியக்கட்சிகள் -- யாராவது
பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஆசையாவது படுகிறார்களா? ம்ஹூம்.

தேசியக்கட்சிகள் என்று சொல்லப்படுபவையின் நாற்றம்தான் இதில் உச்சம். சுற்றி நிற்கும் நாலு பேர், தனக்கு ஓட்டுப்போடக்கூடிய வங்கிக்கு
நல்லதாய்த் தோற்றமளிக்கும் வார்த்தைகளை - வெறும் வார்த்தைகளை - ஊருக்கு ஒன்றாகச் சொல்லித் திரியும் இவர்களுக்கும் தேசியத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும். இவர்கள் அனைவருக்கும் ஒரு தேசியக்கொள்கையை கட்டாயப்படுத்தி வாங்க பொதுநலவழக்கு போன்ற ஏதேனும் வழிவகை இருக்கிறதா? அவர்களுக்கு தமிழ்நாட்டு ஓட்டுகள் என்றும் எட்டாக்கனி என்பதால் கர்நாடகத்தில் மட்டும்தான் அவர்கள் குரல் உரத்து ஒலிக்கிறது.

எந்த ராஜா எந்தப்பட்டணம் போனாலும் தமிழ்நாட்டு அரசியல் கருணாநிதி-ஜெயலலிதாவை விட்டு விலகுவதில்லை. நடுவர் மன்றத்தை யார் அமைத்தது, உன் ஆட்சியில் நீ என்ன கிழித்தாய், இப்போது கொடுக்கப்பட்ட அளவு ஒரு ஏமாற்று, நீ தமிழ் மக்களைக் கொள்ளையடித்தாய், 71ல் என்ன செய்தாய், 91ல் என்ன செய்தாய்.. என்று தற்காலத்துக்கு வராமல் அடம்பிடிக்கும் சண்டைகள் - இதை ஒரு தூண்டுகோளாய் வைத்து பிரிவினைவாதத்துக்கு ஆள்சேர்க்கும் கும்பல்கள்!

91ல் நடத்திக்காட்டிய வன்முறையால் தன்னம்பிக்கை அதிகரித்து நிற்கும் வாட்டாள் நாகராஜ் போன்ற கும்பல்கள் கேட்பாரில்லாமல் அலைகிறது. இப்போது ஒரு பெரிய பிரச்சினையும் இல்லையாம் - கேபிள் டிவி கட்டானது தவிர - அதற்கு இவர்களுக்கு நன்றி சொல்வது ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இல்லாமல் வேறென்ன? சொந்த ஊரைவிட்டு வெளியே வந்துவிட்ட ஒரே காரணத்துக்காக பயந்தே வாழ்ந்துகொண்டிருக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கும் இந்த மாதிரி ஆட்கள் எந்த மாதிரி தண்டனைக்கும் உகந்தவர்கள்.

ஆக, எல்லாரும் ஜல்லிதான் அடிக்கிறார்கள் - என்ன, இது ரொம்ப அபாயகரமான ஜல்லி. கர்நாடகத்தில் வாழும் தமிழனுக்கு உடனடி அபாயம், இந்திய தேசியத்துக்கு குறுகிய கால அபாயம், தமிழ்நாட்டின் EX-நெற்களஞ்சியத்துக்கு ஆயுட்கால அபாயம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட ஜல்லி, தேசிய ஜல்லி எதுவுமே பயன் தரவில்லை என்பதே உண்மை. தொண்டர்கள் மாறினார்களோ என்னமோ, தமிழ்நாட்டுத் தலைவர்கள் திராவிடத்திலிருந்து தேசியத்துக்கு மாறி தேவையான அளவு - தேவையான துறைகளில் மந்திரிகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாகியும் காவிரிக்கு ஒரு முடிவு காண முடியாதது, தேசிய நீரோட்டத்தின் குற்றமா, திராவிடக் கட்சிகளின் குற்றமா?

நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் எல்லாம் வெறும் காகிதங்களைத் தான் தர முடியும். தண்ணீர் வர எந்த தமிழ் தேசியம், இந்திய தேசியம், திராவிட தேசியம் எந்த ஈயம் பித்தளையும் உதவ முடியாது - அதற்கு முதல் படி மக்கள் உணர்ச்சிகளை விட்டு அறிவுபூர்வமாக இந்தப்பிரச்சினையை அணுகுவதாகவே இருக்க முடியும். அதற்கு எந்த இயக்கமும் உதவப்போவதாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியவில்லை!

நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது அறிவார்ந்த சிந்தனைகளால்தான் வந்திருக்கும் - என நான் நம்புகிறேன், அதை ஏற்பதே / ஏற்கவைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். இத்தீர்ப்பிலும் குறைகள் இருக்கலாம், அவற்றையும் அறிவுபூர்வமாகச் சிந்தித்தே களைய வேண்டும் - வேறெந்த வழியும் இல்லை.

28 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா! பதிவு ப்ற்றிய பின்னூட்டம் நாளைக்கு.

Anonymous said...

இது ஒரு நல்ல ஜல்லி..ச்சே...பதிவு...

உங்களுக்கு தான் ஓட்டு போட்டுட்டனே :)))))

செந்தழல் ரவி

மனதின் ஓசை said...

//அதற்கு முதல் படி மக்கள் உணர்ச்சிகளை விட்டு அறிவுபூர்வமாக இந்தப்பிரச்சினையை அணுகுவதாகவே இருக்க முடியும்.//
உண்மை..:-)

//அதற்கு எந்த இயக்கமும் உதவப்போவதாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியவில்லை!//
அதை விட பெரிய உண்மை. :-(


ஒரு கட்சி அறிவுபூர்வமாக இந்தப்பிரச்சினையை அணுக முற்பட்டாலே இவன் மக்களுக்கு துரோகம் செய்கிறான் என அடுத்த கட்சி கூப்பாடு போடுமே என பயந்து கோண்டே இருப்பதும் ஒரு காரணம்.

மு.க ஆறுதல் தருகிறது என சொன்னது உண்மையில் ஆறுதலாகவே எனக்கு பட்டது.. ஆனால் அந்த நிலையில் தொடர்ந்து இருக்க (தமிழக மற்றும் கர்நாடக) அரசியல் விடவில்லை என்றே நினைக்கிறேன்.

//நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது அறிவார்ந்த சிந்தனைகளால்தான் வந்திருக்கும் - என நான் நம்புகிறேன், அதை ஏற்பதே / ஏற்கவைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். இத்தீர்ப்பிலும் குறைகள் இருக்கலாம், அவற்றையும் அறிவுபூர்வமாகச் சிந்தித்தே களைய வேண்டும் - வேறெந்த வழியும் இல்லை. //

ரிப்பீட்டே..

இராமநாதன் said...

பெனாத்தலார் உப்புமா கிண்டுறதோட சேர்த்து அப்பப்போ புல் சாப்பாடும் போடுவார்னு நிருபிக்க ஒரு பதிவா.. ஒன் டே டூ லேட்!

நல்ல கருத்துகள். ஸ்கோர்போர்ட் மாதிரிதான் ஆகிவிட்டது. யாரும் கெட்டவர்களே இல்லை. புரிந்துகொள்ளலில் தான் எல்லாவற்றிலும் பிரச்சனை. டயலாக் என்பதை அரசியலுக்காக மோனோலாக்காக மாற்றி மாற்றி இருபக்கமும் பேசிக்கொண்டே இருந்தால் பிரச்சனைக்கு தீர்வே கிடைக்கப்போவதில்லை.

நடுவர் மன்றம் இந்தியர்களைக்கொண்டு அமைத்தால் பிரச்சனை என்றால், வெட்கத்தைவிட்டு ஐ.நாவிடம் ஒப்படைத்துவிடலாம். அதற்கு முன் தர்ட் பார்ட்டி தீர்ப்புக்கு ஒப்புக்கொள்வோம் என்று ரெபரெண்டம் நடத்தலாம். ஏனோ நானும் அச்சுபிச்சுன்னு பேசிக்கிட்டிருக்கேன்.

மணியன் said...

்நாட்டிலே நடப்பதை 'நச்'சென்று சொல்லும் பதிவு. ்பழைய ஜல்லி- இங்லீஷ்காரனே இருந்திருக்கலாம் - தண்ணீர் தருமா ?

பொன்னியின் செல்வன் said...

What ever u have mentioned is right.None of the National or Dravida political parties will help out. We have to accept the verdict and should implement the verdict very strictly.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க இலவசம்.

பொறுமையா படிக்கணுமா? சரி வெயிட்டிங்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி செந்தழல் ரவி.

நீங்க, எனக்கு ஓட்டுப்போட்டீங்களா - அதுவும் நீங்களே போட்டியிலே இருக்கும்போது.. ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு..

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க மனதின் ஓசை.

எனக்கும் மு க முதலில் பேசிய விதம் மிகவும் முதிர்ச்சியோடும் பொறுப்போடும் பேசியதாகவே தெரிந்தது. தொடரவில்லையே:-((

பினாத்தல் சுரேஷ் said...

ராமநாதன்,

உப்புமாவே 24 X 7 போட முடியுமா.

அச்சுபிச்சுன்னு பேசறதுக்கு சகவாச தோஷம்தான் காரணம்னு யாரும் சொல்லாட்டி சரிதான்.

பினாத்தல் சுரேஷ் said...

மணியன்..

இது என்ன புது ஜல்லி? வேணாம் சார், இருக்கறதே ஜாஸ்தி..

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கு, கருத்துக்கு, என்னுடன் ஒத்துப்போவதற்கு, நன்றி பொன்னியின் செல்வன்.

பினாத்தல் சுரேஷ் said...

அப்பால,,

யாராச்சும் பாத்தீங்களா, படிச்சீங்களா?

Elango said...

நல்ல கருத்துக்கள் செல்வன். சோ ஒருமுறை இப்படிச் சொல்லியதாக கேள்வி: என்று தமிழக மக்கள் கருமவீரர் காமராஜரை தோற்க்கடித்தனரோ, அன்றே தமிழகத்தை நான் திராவிட கட்சிகளுக்கு அடமானம் வைத்து விட்டோம். இனி அவ்விரு கட்சிகள் இல்லாமல் வேறு யாராவது வருவது சந்தேகமே. அப்படி வந்தால் மட்டுமே காவிரி பற்றி அறிவுப்பூர்வமாக ஏதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவும் நம்முடைய கால கட்டத்தில் நடக்குமா என்று தெரியவில்லை. கருணாநிதியின் கொள்ளுப்பேரன் ஆட்சி காலத்தில் எப்படி இருக்கும் தமிழ்நாடு என்று தெரியவில்லை. :(

பினாத்தல் சுரேஷ் said...

இளங்கோ,

சரியான பதிவிற்கான பின்னூட்டம்தானா, நான் சுரேஷ், செல்வன் இல்லை.

இருப்பினும், இந்தப்பதிவின் பேசுபொருளுக்குச் சம்மந்தத்தோடே இருக்கிறது ;-)

திராவிடக்கட்சிகளை மட்டுமே குறை சொல்ல முடியாது. காவிரிப் பிரச்சினையில் முதலில் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கவிட்டது கர்நாடக அரசியல்தான் என்பது என் புரிதல். தமிழகத்தில் எல்லாம் ரியாக்ஷன் பாலிடிக்ஸ்தான். அதிலும் திமுக அதிமுக ரியாக்ஷன் தான்!

மீண்டும் ஒருமுறை, கலைஞர் நடுவர் மன்றத் தீர்ப்பு வந்ததும் செயல்பட்ட முதிர்ச்சி - தொடர முடியாமைக்கு ரியாக்ஷன் தான் காரணம்.

கோபி(Gopi) said...

நல்ல பதிவு!

அட விவசாயிங்களுக்கும் பாமர மக்களுக்கும் தான் விவரம் தெரியாது அரசியல்(சுயநல)வாதிகள் பின்னாடி கண்ணை கட்டீட்டு போறான்...

படிச்ச தகவல் தொழில்நுட்பத்துறை மக்களுக்கு என்ன வந்தது...?

"கன்னடக் கூட்டா"வாம்... பேரணியாம்... "பெங்களூருக்கே தண்ணி பத்தலை தமிழ்நாட்டுக்கெல்லாம் தரக்கூடாது"ன்னு கோஷம் வேற...

இவங்கள்லாம் என்னத்தை படிச்சி என்னத்தை...

பினாத்தல் சுரேஷ் said...

கரெக்டு கோபி.

படிச்சவங்கன்றதால அறிவாளிங்கன்ற முடிவுக்கு வந்துட முடியாது.

எனக்குத் தெரிஞ்சு அறிவாளின்னா, நமக்கு எல்லா விஷயமும் தெரியாது, அதுக்குன்னே உக்காந்துருக்கற ஆளுங்க (நடுவர் மன்றம் மாதிரி) முடிவு பண்ணட்டும்னு விடறவன் தான்.

Raveendran Chinnasamy said...

தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா இல்லை தனியாக இருக்கிறத என்று என்னும் அளவுக்கு போய் விட்டது
தீவிரவாதம் ஏன் வளராது

இளங்கோ said...

மன்னிக்கவும் சுரேஷ். நான் பிளாகிங்குக்கு கொஞ்சம் புதுசு, அதனால் என்னுடைய கூகில் ரீடரில் கிட்டதட்ட 40 பதிவுகளை சேர்த்து வைத்திருப்பதால் தான் இந்த குளறுபடி. இது தங்களுடைய பதிவிற்கான பின்னூட்டம் தான்.

Seemachu said...

சுரேஷ்,
மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்.

அன்புடன்,
சீமாச்சு

முகமூடி said...

2006க்கான சிறந்த இண்டிப்ளாக்ஸ் (தமிழ்) விருது பினாத்தல்களுக்கு கிடைத்திருக்கிறது...

வாழ்த்துக்கள் பெனாத்தலார்

பினாத்தல் சுரேஷ் said...

ரவீந்திரன் சின்னசாமி,

வருகைக்கு நன்றி. தமிழகம் இந்தியாவைவிட்டு எங்கே போனது? யார் போகவிட்டது என்பதையும் யோசிக்கலாமல்லவா? தீவிரவாதம் எப்படிப்பட்ட முடிவுகளைத்தரும் என்பதையும் யோசிக்கலாமே..

பினாத்தல் சுரேஷ் said...

பரவாயில்லை இளங்கோ, நன்றி.

சீமாச்சு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

தகவலுக்கு நன்றி முகமூடி! மகிழ்ச்சியாக இருக்கிறது.

Anonymous said...

ur correct, but I think just talking about this issue is waste, someone from us should come with a solution for this cauvery problem...

பினாத்தல் சுரேஷ் said...

//ur correct, but I think just talking about this issue is waste, someone from us should come with a solution for this cauvery problem..//

Thanks Kaartz for your comment. But my feeling is instead of someone from US,it can be the qualifies analysts of the tribunal. Talking alone will never solve any problem.

லக்கிலுக் said...

//Elango said...
நல்ல கருத்துக்கள் செல்வன்.
//

செல்வனா? பதிவை எழுதியது பினாத்தல் சுரேஷ் என்று நினைக்கிறேன்.

//சோ ஒருமுறை இப்படிச் சொல்லியதாக கேள்வி//

சோ இதுவும் சொல்லுவாரு. இதுக்கு மேலயும் சொல்லுவாரு. அவருக்கென்ன? அவரோட இப்போதைய கவலை அவர் மகனோட ஆழ்வார்ப்பேட்டை பில்டிங்கை காப்பாத்திக்கறது தான் :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க லக்கிலுக்.

அது செல்வன் என்று தவறுதலாக எழுதிவிட்டதாக அவரே கூறிவிட்டாரே..

சோ முதல் பினாத்தல் வரை எல்லாரும் எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள்தான் எதாவது செய்ய்வேண்டும்.. இல்லையா லக்கி?

 

blogger templates | Make Money Online