இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் "பயிற்சி வகுப்பு நடத்துவது எப்படி?" என்னும் விரிவுரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான அம்சம் - "கேள்விகள் கேட்பது எப்படி?" அல்லது "கேள்விகளை எப்படி கேட்கக் கூடாது?".
தேர்ந்தெடுத்து பதில் சொல்ல வேண்டிய கேள்விகளில் முக்கியமான அம்சம், பதில்களில் கொடுக்கப் படும் விடைத்தெரிவுகள். சரியான பதில் என்பது இதற்குள்தான் இருக்கிறது என்று பதிலளிப்பவர்க்கு கேட்போர் விதிக்கின்ற கட்டுப்பாடு. பல சமயங்களில் இது சரியான முறையாக இருந்தாலும், சில நேரங்களில் பதிலளிப்போரின் சரியான எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியாமல் போகக் கூடிய சாத்தியக்கூறும் இதில் உண்டு.
ரொம்பக் குழப்பி விட்டேனா? சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பினாத்தல்களைப் பற்றிய தங்கள் மேலான கருத்து? இது கேள்வி.
இதற்கு விடைத் தெரிவுகளாக:
1. சுமார்
2. பரவாயில்லை
3. நன்றாக இருக்கிறது
4. சூப்பர்
5. அதி அற்புதம்
எனக் கொடுத்தால், பினாத்தல்களை முற்றும் வெறுக்கின்ற நபரும், "சுமார்" ஐத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.
இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதால், கருத்துக் கணிப்பு என்பது ஒரு வகை விளம்பர உத்தியாகவும் செயல்படும். நீங்களும் இப்படிப்பட்ட சில விளம்பரக் கணிப்புகளைச் சந்தித்திருக்கலாம்.
அல்லது,விடைத்தெரிவுகளை இப்படியும் அமைக்கலாம்.
1.சுமார்
2.குப்பை
3.தாங்க முடியவில்லை
4.திராபை
5.தேறாது
இப்படி அமைத்தால், விரும்புகிற நபரும் சுமார்-ஐத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். விளம்பரத்தில் போட்டி தயாரிப்பைப் பற்றிய கேள்விகள் இப்படி வடிவமைக்கப் படும்!
எனக்கு விளம்பரம் செய்யும் நோக்கம் இல்லாததால் இந்த இரு அதீதங்களும் இல்லாமல் என் கேள்விகளைத் தயாரிக்க முயற்சித்தேன்.
72 பேர் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இப்போது கேள்வி வாரியான கருத்துகளைப் பார்ப்போம்.
1. பினாத்தல்களைப் பற்றிய தங்கள் மேலான கருத்து?
இதன் முடிவாக "போக வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப இருக்கு" என்பதைத்தான் எடுத்துக் கொள்கிறேன். அதற்காக உழைக்கிறேன்.
தேறாது எனத் தெரிவு செய்த 4% அன்பர்கள், காரண்த்தையும் எழுதி இருக்கலாம்.
2.பினாத்தல்களில் தங்களுக்குப் பிடித்த பதிவு வகை?
நான் நினைத்த படியே நையாண்டிக்குத் தான் மவுசு! இங்கேயும், எதுவுமே பிடிக்கலை என்ற 7% அன்பர்கள் ஏன் பிடிக்கவில்லை எனக் கூறி இருக்கலாம்.
3. பினாத்தல்களைப் பற்றித் தாங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள்?
அனாவசியமான கேள்வி. இருந்தாலும், எனது போன்ற வலைப்பதிவுகளுக்கு தமிழ்மணம் செய்யும் சேவை இதன் மூலம் தெளிவாக எல்லாருக்கும் தெரியட்டும்.
4. பினாத்தல்கள் எவ்வாறு தொடர வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?
என் அனுபவப் பதிவுகளுக்கும் வரவேற்பு இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கூடிய விரைவில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன். இதிலும், தொடரத்தான் வேண்டுமா என 2% வேறு காரணங்கள் கூறாமல் தெரிவு செய்திருக்கின்றனர்.
பங்கு கொண்ட 72 பேருக்கும், ஆரம்பித்து முடிக்காமல் போன 35 பேருக்கும் பார்க்க மட்டுமே செய்த 32 பேருக்கும் நன்றி!
Oct 11, 2005
கருத்துக் கணிப்பு முடிவுகள் 11 Oct 05
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
பார்க்க மட்டுமே செய்த 32 அடியார்களில் ஒருவனான எனக்கும் கூட நன்றி கூறிய தங்களது பரந்த உள்ளப்பாங்கிற்கு எனது அன்புகலந்த நன்றிகள்!!
;-)
Post a Comment