Oct 24, 2005

சோளகர் தொட்டி - ச பாலமுருகன் (24Oct05)

ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கத்தைப் படித்து முடித்தவுடன் ஏற்படும் மனநிலை மாற்றமே என்னைப் பொறுத்தவரை அதன் தரத்தின் அளவுகோலாக இருந்தது - நேற்று வரை.

கடைசிப்பக்கத்துக்காக ஆவலுடன் காத்திருந்து, முடிந்தவுடன் "அப்பாடா" என்று விரல்களுக்கு விடுதலை கொடுக்க வைக்கும் சாதாரண நாவல்கள்..
பக்கங்கள் தீர்ந்தவுடன், முடிந்துவிட்டதே என வருந்தவைத்து, கடைசி சில பக்கங்களை திரும்பப் படிக்கத் தூண்டும் சில புத்தகங்கள்.

வெகு சில புத்தகங்கள் மனதிலிருந்து வெளியேறாமல் அழிச்சாட்டியம் செய்து முதலில் இருந்தே மீண்டும் படிக்க வைக்கும். இந்த லிஸ்ட் மிகவும் சிறியது..Gone with the wind, to kill a mocking bird, குருதிப்புனல், ஒரு புளியமரத்தின் கதை என ஒரு கைவிரல்களுக்குள் அடங்கிவிடக்கூடியனதான்.

சோளகர் தொட்டி இது எந்த வகையிலும் அடங்காத புது வகையாக இருந்தது. கடைசி வரியைப் படித்தவுடன் வேகமாக மூடினேன். புத்தகத்தை உடனே கைக்கெட்டாத தொலைவிலும் வைத்தேன்.

காரணம் நிச்சயமாக முதல் வகை சாதாரணப் புத்தகம் என்பதால் அல்ல. கடைசி சில பக்கங்களையோ, முதலில் இருந்தேவோ மீண்டும் படிக்க மனம் துணியாததுதான். -ஏன்? பிறகு கூறுகிறேன்.

கதையை எழுதியவர் மனித உரிமையாளர், வீரப்பனைப் பிடிக்க வந்த அதிரடிப்படையினால் ஒரு மலைக்கிராமத்துக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியது என்பதெல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரிந்துவிட்டதால், கதை அதிரடிப்படையினருக்கு எதிராகவும், வீரப்பனுக்கு ஆதரவாகவும்தான் இருக்கும் என ஒரு முன்முடிவு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. படித்த பின்னரே தெரிகிறது, "Beware of Preconceived notions" என்று "Failure Analysis"-இல் கூறுவது எவ்வளவு சரியானது என்று.

சோளகர் என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் (தொட்டி), சில தலைமுறைகளுக்கு முன்னரும் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இல்லை - மதம் பிடித்த ஒற்றை யானைகளையும், பெருநரி (புலி)களையும் எதிர்த்து, மழை பெய்தால் விதைத்து, பெருந்தனக்காரர்களின் ஏமாற்றுக்குப் பலியாகி பழக்கப்பட்டவர்கள்தாம்.

ஆனால், பிறகு இவர்கள் சந்தித்த எதிரிகள் வேறு வகையானவர்கள். எப்போதோ ஒருமுறை கண்ணில் பட்ட சந்தனக் கடத்தல் கும்பலைப்பற்றி தாழ்ந்த குரலில் பயந்தபடி கிசுகிசுத்துக்கொள்ளும் சோளகர்களை, வீரப்பனுக்கு உணவு கடத்தும் கும்பல் எனச் சந்தேகிக்கும் அதிரடிப்படையினரை சந்திக்க நேரும்போது, அதிகாரபலம், ஆயுதபலம், ஆள்பலம் ஆகியவற்றின் பொருந்தாச் சமன்பாட்டால் சிதறிப்போகிறார்கள்.

"வீரப்பன் கொடியவன், கொலைகாரன், அதிரடிப்படை அவனை சூரசம்ஹாரம் செய்தது சரியான ஒரு முடிவே" என்னும் என் முந்தைய கருத்தை இந்த நூல் மாற்றிவிட வில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயங்களில் ஆசிரியர் எந்தக் கருத்தையும் கூறவும் இல்லை.

நகர நாகரீகத்தையும், அது தரும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மட்டுமே அனுபவிக்கும் மக்களுக்கு அதிரடிப்படையைப் பற்றிய குறைகளும், குற்றச்சாட்டுகளும் Blasphemy ஆகத்தான் தோன்றும் - அப்படித்தான் எனக்கும் தோன்றியது.

ஆனால், இந்நூலில் இருக்கும் Authenticity நடந்தது இதுதான் என வெளிச்சம் போடும்போது, அதை மறுக்க முடிவதில்லை. என் மனத்தளவில் இந்த நடவடிக்கைக்கு நானும் அளித்த ஆதரவும், இந்தக்கொடுமைகளைத் தடுக்க இயலமையும் என் மனத்தில் ஏற்படுத்திய குற்ற உணர்வுதான் இன்னொரு முறை படிக்காமல் தடுத்திருக்கிறது.

நீங்களும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

11 பின்னூட்டங்கள்:

ramachandranusha(உஷா) said...

சுரேஷ், இந்த புத்தகத்தைப் பற்றி பிரகாஷ் கூட ஒரு பதிவு போட்டிருந்ததாக ஞாபகம். குமுதத்தில் ஒரு முறை இந்த அட்டுழீயங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி, பிரதமரிடம் டெல்லி சென்று
புகார் சொன்னதாய் சன் டீவியில் காட்டினார்கள்.
தன் மீது சொல்லப்பட்ட புகாருக்கு பி.பி.சியில் தேவரம் சொன்ன மறுமொழி ஞாபகம் இருக்கா?

நண்பன் said...

நல்ல பெனாத்தல் தான்...

ஒரு வழக்கறிஞர் கதை எழுதினால் அது வெறும் வறட்டுத்தனமாகத் தான் இருக்கும் என்ற அவநம்பிக்கையுடன் தான் நானும் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், முதல் இருபத்தைந்து பக்கங்களில் என் முடிவு மாறிவிட்டது மட்டுமல்ல - ஒரே மூச்சில் படித்துவிட்டுதான் கீழே வைத்தேன்.

அதிரடிப்படையினர் வந்திறங்கும் முன் வரையிலும் உண்டான வாழ்க்கையைப் பார்த்து எனக்குக் கூட ஒரு சிறிய பொறாமை உண்டானது நிஜம். கஞ்சா புகைப்பதை ஒரு பெருங்குற்றமாக கருதாத - ஆண்களும் பெண்களும் வட்டமாக கூடி நின்று ஆடுவது - கோல்காரன் ஆருடம் சொல்வது - கடாவெட்டி சோறு போடும் திருவிழாக்கள் - காட்டின் உள்ளே அதிகாரமிக்கவனாக சுற்றிவரும் தீக்கங்காணியான சோளகன்... என்று ஒரு ரம்மியமான மலைவாழ்க்கையை அறிமுகப்படுத்தி வாழ்ந்தால் இப்படியல்லவா வாழ வேண்டும் என்ற பிரமிப்பை ஏற்படுத்திய நாவல்.

பின்னர் அதிரடிப்படையினர் செய்யும் அட்டகாசங்கள் - பெரிய மீசை வைத்த அதிகாரியின் ஆணவங்கள் - பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் பலாத்காரங்கள் - மின்சாரம் பாய்ச்சிய கொடுமைகள் - இதையெல்லாம் கற்பனையால் எழுதிவிட முடியாது. சம்பவ இடத்தில் வாழ்ந்த மனிதனால் மட்டுமே சொல்ல முடியும்.

வீரப்பன் புகழ் பாடும் என்று எதிர்பார்த்து தான் நானும் வாசிக்க ஆரம்பித்தேன். இதோ வந்துவிடுவான் இதோ வந்து விடுவான் என்று தான் வாசித்துக் கொண்டேயிருந்தான். கடைசியில் ஒரு உபரி பாத்திரத்தில் ஒரு சாதாரண மனிதனாக - நாயகனாக கொண்டாடப்படாதவனாக - வந்து போன பொழுது உண்மையிலேயே மனம் வருந்தியது - கதாசிரியரின் நோக்கை சந்தேகித்தற்காக..

நல்ல புத்தகம்...

விலை கொடுத்து வாங்கி வாசியுங்கள்...

Mookku Sundar said...

நல்ல அறிமுகம் சுரேஷ். நன்றி.

கட்டாயம் படிக்கிறேன்.

வீரப்பனுக்கு ஆதரவாகவும் இல்லாமல், அரசு ஆசாமியாக பேசாமல் மலைவாழ்க்கை மக்களின் சோகங்களை நடுநிலையோடு பரிவொடு அணுகி இருப்பதை சிலதுகள் நியூட்ரல் ஜல்லி என சொன்னாலும் சொல்லும். மற்றவன் முதுகிலேறி முன்னேறத் துடிக்கிற சந்தர்ப்பவாத ஆசாமிகளுக்கு
நியூட்ரலே ஜல்லிதான். "பசை"க்கிற பக்கம் சாய்ந்தால்தானே லாபம்.

Unknown said...

நல்ல பினாத்தல்.
மலைவாழ் மக்களின் இயற்கையான வாழ்க்கை முறையைப் பார்த்து பொறாமைப் பட்டது உண்டு.
இவர்களின் வாழ்க்கையை கூறு போட்டு விற்றதில் அரசியல் வாதிகள், அவர்களின் தயவில் செயல்படும் கடத்தல்காரர்கள் இவர்களின் பின்னால் போகும் வன காவலர்கள் அனைவருக்கும் ஒரு பங்கு உண்டு.நாகரீகம் என்ற பெயரில் நம்மிடம் வளர்ந்துவிட்ட பண/பொருள் ஆசையே அனைத்திற்கும் காரணம்.

doondu said...

அதிரடிப்படையினர் மலைவாழ் மக்களைப் பிடித்து கற்பழித்தது போன்று இருந்த இடம் படித்த போது சரோஜாதேவி புத்தகம் போல நினைத்துக் கொண்டு படித்தேன்.

மிகவும் அருமை.

Muthu said...

Suresh.

yet to read this book...anyway i request you to read my latest story and give your comments and recommendations thank you

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

டீஜே எழுதியது

http://djthamilan.blogspot.com/2005/08/blog-post_11.html

என்னிடம் இருக்கும் பிரதியைப் படிக்க தைரியம் வரமாட்டேன் என்கிறது.

பதிவுக்கு நன்றி சுரேஷ்.

-மதி

பினாத்தல் சுரேஷ் said...

உஷா - பிரகாஷ் பதிவை நான் கவனிக்கவில்லையே; ஆமாம், தேவாரம் என்ன சொன்னார்?

நண்பன் - உங்கள் கருத்துக்கு நன்றி.

சுந்தர் - நியூட்ரல் என்பது எந்த நிலையும் எடுக்காமல் இருப்பது என்ற கற்பிதம் இருப்பவர்களால் நடுநிலை என்பதே ஜல்லியாகத்தான் பார்க்கப்படும். விடுங்க அவர்களை பசித்த புலி தின்னட்டும்:-)

நன்றி கல்வெட்டு; பண பொருள் ஆசை என்பதைவிட அதிகாரம் தரும் ஆணவம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். சிறியோரை (அதிகாரமுள்ள) () பெரியோர் இகழ்தல் அல்லவா இது?

போலி டோண்டு - நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது, சுஜாதா ரோர்ஷாக் சித்திரங்களை விளக்குவத்ற்காக சொன்ன ஜோக்தான் நினைவுக்கு வருகிறது!

முத்து - கமெண்ட்டிவிட்டேன்.

மதி - டீஜேவின் சுட்டிக்கு நன்றி. அதை நான் பார்த்திருக்கவில்லை. எப்படியும் படித்துவிடுங்கள்.

மதுமிதா said...

தேவநேய பாவாணர் நூலக எல்.எல்.ஏ
கட்டிடத்தில் 'முரண்களரி'
அமைப்பில் சோளகர் தொட்டி விமர்சன நிகழ்வில் பாலமுருகனின் உரை கேட்கும் வாய்ப்பு கிட்டியது.
இந்நூலுக்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்கள்,
அம்மக்களுடனான அவரின் கலந்து பழகிய நினைவுகள் அப்பப்பா!

எவ்வளவுதான் பொதுநலம் விரும்புகிறோம் எனினும்
நாமெல்லோருமே சுயநலவாதிகளே
என்பதை முகத்திலடித்தாற்போல் உணர்ந்த கணம் இன்னும் நினைவிலிருக்கிறது


சுரேஷ் நினைவுகளை கிளறிவிட்டு விட்டீர்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்புத்தகம் பற்றி இந்தியா ருடே யில் ,விமர்சனம் வந்த போது; நேரே திரு. பாலமுருகன் அவர்களுக்கு எழுதிப் பெற்றுப் படித்தேன். மிக மன உழைச்சலைத் தந்த புத்தகம்.
அந்த மக்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்கி விட்டார்கள்.இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை அவர்கள் நிலை.
இந்திய அதிகாரவர்க்கமோ, குற்றவாளியைக் கண்டுபிடி அல்லது குற்றவாளியை உருவாக்கு என்பதை
தாரகமந்திரமாகக் கொண்டு செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
சிறையில் வைக்க வேண்டிய பலரை; வாக்குப் போட்டுத் தலைவனாக்கி; அரச பாதுகாப்புடன் வாழவைக்கும் கூத்து நடக்கும் நாடுகளல்லா;;நம் நாடுகள்...
யாருதான் காப்பாற்றப் போகிறார்களோ!அவர்களை...

அபி அப்பா said...

சும்மா நச் னு ஒரு விமர்சனம்! நலல இருக்கு பெனாத்தலாரே!

 

blogger templates | Make Money Online