Jul 17, 2006

அரசன் 23ம் புலிகேசி - இம்சை

தமிழன் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டான் என்ற வசனத்தை இந்தியாவில் பலமுறை பிரயோகித்திருக்கிறேன். திரைப்படம் பார்க்கவென்று கிளம்பிய பிறகு கேவலம் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணங்களுக்காக திரும்புவதா? எப்படியும் டிக்கெட் - அல்லது ஏதேனும் வேறு படமாவது!
 
துபாயில் இம்சை அரசன் வெளிவந்துவிட்டான் என்ற செய்தி கேட்டவுடன் தொலைபேசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய அழைத்தால், ஆச்சரியம்! மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்கிறார்கள்.(இம்சை எண் 1) "கிட்டாதாயின் வெட்டென மற" என்பதெல்லாம் நமக்குத் தெரியாத மேட்டர். தியேட்டருக்குப் போய் பார்த்துக்கொள்ளலாம் - ஆமாம், துபாயில் பிளாக்கில் டிக்கட் கிடைக்குமா?
 
தியேட்டர் வாசலில் 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின், எதிர்பார்த்தவர்(ள்?) வராத சோகத்தில் டிக்கட்டை கவுண்டரில் திருப்பிக் கொடுக்கப்போனவர்களை மடக்கிப் பிடித்து வெற்றிவாகை சூடினேன். தியேட்டருக்குள் நுழைந்ததும்தான் தெரிந்தது, ஹவுஸ்புல்லான ரகசியம்.. தியேட்டர் ரொம்பச் சின்னது! 9 வரிசை மட்டுமே.. முதல் வரிசையின் ஒரு ஓரத்திலிருந்து பார்க்கும்போது வடிவேலு தெரிகிறார், தூரத்தில் இருக்கும் நாசர் தெரியவில்லை.. (இம்சை எண் 2).
 
படம் ஆரம்பித்து விட்டிருந்தது. பக்கத்தில் ஒரு குண்டான மீசைக்காரர் அமர்ந்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். முன்கதை கேட்கும் உத்தேசத்தை உதறினேன். (இம்சை எண் 3)
 
இப்படிப்பட்ட இம்சைகளை மீறி, முதல் பாதியின் நகைச்சுவையை ஓரளவு ரசிக்க முடிந்தது. இரண்டாவது பாதி, தாங்கவே முடியவில்லை. ஏன்?
 
1. டிஸ்கிளெய்மரில் "ப்ளுட்டோ, நெப்டியூனில் உள்ளவர்கள்", அந்தப்புரம் "24 மணிநேர சேவை", "உன் சிரிப்பில் நாங்கள் ஏழைகளையே பார்க்கிறோம்" போன்ற வரவேற்புத்தட்டிகள் போன்றவை சிம்புதேவனின் எழுத்து நகைச்சுவையை வெளிப்படுத்தினாலும், வசன நகைச்சுவை போதாது. செந்தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் கையைப்பிடித்திருக்கலாம். "ஆக்சுவலா", "இன் பேக்ட்" போன்ற வழக்கமான சொல்லாடல்களைத் தவிர்த்த கிரேசி மோகன் நிச்சயமாக இந்த ஆள்மாறாட்டக் கதைக்கு அருமையாக வசனம் எழுதியிருப்பார். வசன நகைச்சுவை என்பது காவலாளிகளுக்கும், வேலைக்காரர்களுக்கும் அளிக்கும் தண்டனைகளோடு நின்று விடுகிறது.
 
2. வீரபாண்டிய கட்டபொம்மன், எட்டையன், நிக்ஸன் என்று பிரபலப் பெயர்களை வைத்து கதைக்கு ஒரு காலம் கொடுத்திருக்கும் இயக்குநர், நாட்டைத் திருத்தும் மன்னன், அக்காமாலா கப்ஸி உற்சாக பானங்கள், குழந்தைத் தொழிலாளி ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி போன்ற சிந்தனைகளில் எல்லாம் கால தேச வர்த்தமானங்கள் பற்றிய லாஜிக்கைப் பற்றி சற்றும் கவலைப்படாதது ஏன்? காமெடிக்கதையில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான், ஆனால் இவர் சீர்திருத்த சிந்தனைகள்(?!) எதுவும் காமெடி இல்லையே.
 
3. இசையமைப்பாளர்கள் சரியான தேர்வுதான். "1960ல வந்தா மாதிரி ஒரு பாட்டு வேணும்" என்று சொன்னால், "அதுக்கென்ன, அதையே போட்டுடுவோம்" என்று சொல்லும் தேவ வாரிசுகள்! ஆனால், அதிகமான பாடல்கள், அத்தனையும் காப்பி, அதிக வித்தியாசமில்லாத படமாக்கம் என்று படத்தின் வேகத்தை நாசம் செய்கின்றன. பின்னணி இசை இன்னொரு இம்சை!
 
4. கதை உத்தமபுத்திரனின் ரீபிரிண்ட் என்றால் வடிவேலு (உக்கிரபுத்தன்) நாடோடி மன்னனின் ரீபிரிண்டாக சாகடிக்கிறார். நகைச்சுவை இருந்தால் இதை Spoof எனச்சொல்லலாம், இல்லாததால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது. புலிகேசியாக வடிவேலு நன்றாகவே செய்திருந்தாலும், வடிவேலுவின் பிராண்ட் நகைச்சுவை (அடுத்தவரிடம் அடிவாங்கி அவ்வ்வ்வ்வ்வ் என்று அழுதல்)க்கு ஸ்கோப் இல்லாததால் க்ளிக் ஆகவில்லை.
 
5. முக்கியமான பாத்திரங்களுக்கு நகைச்சுவை நடிகர்களைப் போட்டுவிட்டால் மட்டுமே நகைச்சுவைப் படம் ஆகிவிடாது. இளவரசு தவிர வேறு யாருக்குமே நகைச்சுவை வசனங்களோ காட்சிகளோ இல்லை. இரண்டு காட்சிகளில் ஒரு வசனமும் பேசாமல் மூன்று முறை அழுவதற்கு வெண்ணிற ஆடை மூர்த்தியா தேவை?
 
6. புலிகேசியின் பாத்திரமே, நாயகன் தாத்தாவைப்போல "நல்லவனா, கெட்டவனா" என்று தெரிவதில்லை. மாமா வளர்ப்பில் நாசமான நல்லவனா திருடர்களிடம் பங்கு கேட்கத் தனியாகச் செல்கிறான்? சாதிச்சண்டை மைதானத்தை தன்னிச்சையாக அறிவிக்கிறான்? இந்தக்காட்சிகளில் நாசரின் பங்கை அதிகரித்திருக்க வேண்டும்.
 
7. அரங்க அமைப்புகளிலும் காட்சிகளிலும் சுத்த நாடகத் தனம். வெளிப்புறக்காட்சிகளில் ஏன் அந்த செம்மண் எபக்ட்? ரேவா கலரை ஞாபகப் - படுத்தவா? கரடி ரொம்ப அமெச்சூர்தனமாக இருந்தது.
 
இருந்தாலும், சிற்சில காட்சிகளை ரசிக்க முடிந்தது.
 
பல லேயர்களில் கிண்டல் அமைந்திருக்கும் ஜாதிச்சண்டைக் காட்சி -  ஜாதிக்கலவரங்களைக்கிண்டல், சமத்துவபுரங்களைக் கிண்டல், கோக் பெப்ஸி ஸ்பான்சர்ஷிப்களைக் கிண்டல், கிரிக்கெட் விளையாட்டைக்கிண்டல், அங்கே தெரியும் பேனர்களில் "டங்குவாரை அத்துரு" போன்ற கிண்டல் - எல்லாவற்றையும் தொட்டுச்செல்வதில், இயக்குநர் திறமையுள்ளவர் என்பதை நிரூபிக்கிறார், எதிர்பார்ப்புக்களையும் ஏற்றிவிடுகிறார்.
 
மாமா மன்னா, புண்ணாக்கு மன்னா, மூடா போன்ற கவிதை வரிகள், விளக்கத்தை முன்கூட்டியே கணித்துவிட முடிந்தாலும், சிரிக்க வைத்தன.
 
ஆனால், இந்தச்சில காட்சிகளுக்காக இதை நகைச்சுவைப்படம் என்று விளம்பரம் செய்திருப்பது ரொம்பவே ஓவர்.
 
கூட்டிக்கழித்துப் பார்த்தால் இம்சை மட்டுமே மிஞ்சுகிறது.

29 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் said...

அப்படியா சேதி. நல்லவேளை நான் படம் பார்க்க ஆக்லாந்து போகலை:-))))

ஜெஸிலா said...

நேற்று நாங்களும் சென்றிருந்தோம் கலேரியாவுக்கு படம் பார்க்க. நீங்கள் சொல்வது 100% சரி. சில காட்சியில் தான் சிரிக்க முடிந்தது. நான் சிரிக்காததால் மற்ற அனைவரும் சிரித்ததால் எனக்கே என் மீது சந்தேகம் இருந்தது இப்போது தெளிவடைந்தது. நேற்று எங்கள் திருமண நாள் என்று சென்றோம், அங்கு போயாவது கணவர் சிரிக்க முயற்சித்தார்களோ என்னவோ. நிஜமாகவே அவர் வாய்விட்டு சிரித்தார்.

Hariharan # 26491540 said...

பெனாத்தலாரே,

படம் பார்க்கலாம? இல்லை அதைவிட இம்மாதிரி விமர்சனமே போதுமா?

ஒரே இம்சையா இருக்கு :-))))

கீதா சாம்பசிவம் said...

அவன் விகடன், துக்ளக் போன்ற மாதிரிப் பத்திரிகை எல்லாம் எழுதியாச்சு. பேசாமல் நீங்களே ஒரு படம் எடுத்து விடுங்கள். இந்த மாதிரிக் குறைப்பட வேண்டாம். நீங்கள் மட்டுமாவது போட்டுப் பார்க்கலாம் இல்லையா? நல்ல வேளையா எனக்கு சினிமா ஆசை, அதுவும் தியேட்டரில் போய்ப் பார்க்கும் ஆசை இல்லை, பிழைத்தேன்.

பினாத்தல் சுரேஷ் said...

அக்கா, உங்களுக்கு சிடி வரும்போது பாருங்க போதும்:-))

வாங்க ஜெஸிலா - மாட்டினீங்களா நீங்களும்? நீங்க எந்த ரோ லேயிருந்து பார்த்தீங்க.. முதல் மூணு ரோலே படம் கிட்டப்பார்வை எட்டாப்பார்வைதான்!

ஹரிஹரன் - இந்த விமர்சனத்தையா இம்சைன்றீங்க? அப்ப படத்தைப்பாருங்க:-))

கீதா - தமிழ் வலைப்பதிவர்கள் படிச்சு திட்டறது போதாதா? சினிமா எடுத்தா ஆறரை கோடி பேரும் திட்டுவாங்களே! (ஒருவேளை அதான் உங்க நோக்கமோ?)

இலவசக்கொத்தனார் said...

என்னப்பா இது, ஊரே நல்லாயிருக்குன்னு சொல்லுதே, போயி பாக்கலாமுன்னா, இப்போ நீர் வந்து குட்டையை குழப்பிட்டீரே.
இப்போ பாக்கணுமா வேண்டாமா?

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

படம் நல்லா இருக்குன்னு சொன்னவங்க எல்லாம் சொன்ன அதே ரெண்டு சீனை நானும் நல்லா இருக்குன்னு சொல்லிதான் இருக்கேன்.

ஆனா அந்த ரெண்டு சீனுக்கு மேல ஒண்ணும் இல்லைன்றதுதான் இம்சை!

பாக்கப்போறீங்களா இல்லையா என்பது உங்கள் சொந்த முடிவு, அதில் தலையிட நான் விரும்பவில்லை.

மோடி மஸ்தானுக்கு காசு போடாம வீடு திரும்பறது உங்க சுதந்திரம் - அதில் அவன் தலையிடுவதில்லை. ஆனால், காசு போடாமல் போனால் என்ன நடக்கும் என்ற விளைவுகளைப் பட்டியலிட்டுச் சொல்வானே - அதுபோலத்தான் நானும் சொல்லியிருக்கேன்.

இலவசக்கொத்தனார் said...

அடப் பாவிங்களா,

என்னை ரத்தம் கக்க வைக்க எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க??

ஒரு பக்கம் போலீஸ் தொரத்துது. இன்னொரு பக்கம் இந்த மாதிரி மந்திரவாதி, போடி மஸ்தான் தொல்லை. என் நிலமை கிட்டத்தட்ட மெகா சீரியல் கதாநாயகி ரேஞ்சுக்குப் போயிடுச்சே. இன்னும் நான் ஓஓஓன்னு அழாததுதான் பாக்கி....

Nakkiran said...

கண்ட கண்ட தாதா படம் பார்ப்பதற்கு, இது எவ்வளோவொ மேல்.. தைரியமாய் போய் பார்த்துவிட்டு வரவும்.. நிச்சயம் நிறைய இடங்களில் சிரிக்கலாம்...

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம் அண்ணா.. நீங்க கேட்டீங்க, நான் சொன்னேன் அவ்ளோதான். உங்களை மிரட்டினா என்ன பிரயோஜனம்? ஒரு மில்லியன் டாலர் தேறுமா?

நக்கீரன், நூத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க. இந்த படத்து மேலே எனக்குப் பெரிய வெறுப்பெல்லாம் இல்லை. நகைச்சுவைப்படம்னு சொன்னதும், அதிக எதிர்பார்ப்பும்தான் பதிவுலே தெரியற வெறுப்புக்குக் காரணம். இது ஒரு சீரியஸ் படம்னு தெரிஞ்சிருந்தா, வடிவேலு நடிக்கும் சீரியஸ் படத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்த்துட்டு ஒதுங்கியிருப்பேன், நீங்க சொன்ன தாதா படங்களுக்கும் அதே மரியாதைதான்:-)

நன்மனம் said...

//பக்கத்தில் ஒரு குண்டான மீசைக்காரர் அமர்ந்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். //

மீச குண்டா இருந்ததுக்கே இப்படி இம்சைனு சொல்லி பய படரீங்க, ஆளு குண்டா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க :-)

தம்பி said...

சுரேஷ்,

சொல்லிவிட்டுருந்தா நானும் வந்து ஜோதில கலந்து இருப்பேனே. நல்லவேளை வேட்டையாடு விளையாடு வந்தா மட்டும்தான் கலேரியா பக்கம் போகணும்னு முடிவுல இருக்கிறேன். காப்பாத்திட்டிங்க.

தம்பி

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க நன்மனம்!

எழுத்துப்பிழைன்னு ஒரு பார்ட்டி எல்லா பதிவுக்கும் போய் இங்கே தப்புன்னு சொல்றாரு, நம்ம பக்கம் வர்றதே இல்லை, ஆஹா, நாம எழுத்துப்பிழையே இல்லாம எழுதறோம் போல-ன்னு பெருமைப்பட்டுகிட்டு இருந்தேன், நீங்க பொருட்குற்றம் கண்டுபிடிச்சீங்க பாருங்க:-))

இப்போ பாருங்க:

"இரட்டை நாடி உடலுடன், கோடாலி மீசைக்காரர்"

ஓகேவா?

எதையெல்லாம் திருத்த வேண்டியிருக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி,

நீங்க பேசியும் ரொம்ப நாளாச்சி! மேலும், நானே எப்படிப்போனேன்னு எழுதிட்டேன் பாருங்க. வே வி வந்தவுடனே டிக்கட் நீங்களே புக் பண்ணிட்டு கூப்பிடுங்க:-))

ஒரு தனிப்பதிவே கூட போட்டுட்டேன்.. எப்பதான் வருதாம்??

[சதானந்தன் said...

ஆமங்க இந்த படத்த இன்னைக்குதான் பார்த்தேன் நீங்க சொன்னது சரிதான். புலிகேசி படம்பார்த்து யாரவது சிரிச்சா அவங்களுக்கு இந்த
ஆண்டுக்கான சிறப்பு விருதே கொடுக்கலாம்

பொதுவா நம்ம ஆளுங்க சர்வதேச விருது படங்கள பார்க்கிறது ரொம்ப
கம்மி அந்த தைரியத்தில ஓட்டல்ல ரும்போட்டு பத்து நாள் OPIUM WAR
(CHINA) படத்த பார்த்து இதகாப்பி அடிச்சு புலிகேசிய ஒப்பேத்திட்டாங்யா
யாரவது முடிஞ்ச இந்த படத்த பாருங்க புரியும் புலிகேசி யாருன்னு.

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க M G ரகு. முதல் வருகையோ?

நீங்க சொல்ற மேட்டரும் சரிதான். எவன் கண்டுக்கபோறான் சொல்லுங்க!

ஜோ / Joe said...

//நீங்க சொல்ற மேட்டரும் சரிதான். எவன் கண்டுக்கபோறான் சொல்லுங்க!//
இது நடிகர் திலகம் நடித்த 'உத்தம புத்திரன்'-ன் உல்டா என்பதையே யாரும் கண்டுக்கல்ல .வெளிநாடு வரை போகணுமாக்கும்.

பினாத்தல் சுரேஷ் said...

ஜோ,

நீங்க சொல்றது சரிதான். யாருமே கண்டுக்கல -இதெல்லாம் சகஜமப்பா எண்ணமா இருக்கலாம்.

ஆனா, நான் எழுதியிருக்கேன்:-)

[சதானந்தன் said...

''முதல் வருகையோ''

என்ன தலை இப்பிடி சொல்லி புட்டிக உங்கள் வரவு நல் வரவு அப்பிடின்னு ஒரு வார்த்த சொல்ல படாத....?
ம்...... எதுக்கும் ரெண்டு பீர் பாட்டிலோட வந்தாதான் வாங்க வாங்க
என்பீங்களா...?

பினாத்தல் சுரேஷ் said...

M G R அண்ணன்! அப்படி எல்லாம் இல்லீங்க.. வருக வருக, அடிக்கடி வருக, பின்னூட்ட மழை பொழிக என்று 23, 36, 344ம் வட்டம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொண்டு, இந்த பின்னூட்டமாலையை பொன் பிளாட்டின மாலையாக அணிவித்து வரவேற்கிறேன்.

சீனு said...

நிச்சயம் உங்கள் விமரிசனம் சுத்த பெனாத்தால் மற்றும் பேத்தல். அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

சீனு,

உங்கள் வருகைக்கும், என் விமர்சனத்தைப்பற்றிய உங்கள் விமர்சந்த்துக்கும் மிக்க நன்றி.

பினாத்தல்கள் - இல் வேறென்ன எதிர்பார்க்க முடியும்:-)

Anonymous said...

nalla discussion

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கு நன்றி அனானி. எந்த டிஸ்கஷனைச் சொல்றீங்க?

பேர் போட்டு எழுதுங்கப்பா! இல்லாட்டி பின்னூட்ட போலிஸ் பாத்து கயமைன்னு சொல்லிடப்போறாரு!

Balaji said...

தமிழ் மெண்பொறி கெட்சிட்சி...!!ஆனா typing ரொம்ப பெஜாரா கிது!!!
கத்துகறேன்...

தாங்க்ஸ்.

பாலாஜி

பினாத்தல் சுரேஷ் said...

thanks naina balaji

Anonymous said...

ethullayum kurai kandupudikkama vidamattengalo? directors ellam romba paaaaaavam!

PATRICIA

Unknown said...

Dubbaa review.... vimarsanam seiyya theriyavillai.... movie super....

Unknown said...

Dubbaa review.... vimarsanam seiyya theriyavillai.... movie super....

 

blogger templates | Make Money Online