Jul 15, 2006

சினிமா ரசிகர்களில் ஒரு கோயிஞ்சாமி

இப்பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ரொம்பவே யோசித்தேன். யோசனையில் கிடைத்த முத்துக்கள்:

1. அன்புள்ள தமிழ்ப்பட தயாரிப்பாளர்களுக்கு

2. திரை ஊடகத்தில் உள்குத்து?

3. விக்கிரமன் பார்வைக்கு

4. பாசிஸப் படத்தயாரிப்பாளர்களின் பகல்வேஷம்

ஆனால், சூட்டைத் தணிக்க வேண்டும் என்பதால் இந்தத் தலைப்பே போதும் என்று முடிவெடுத்துவிட்டேன்!
________________________________

ஏவிஎம்மின் பிரியமான தோழி படம் பார்த்தேன். ரசித்தேன் என்று சொன்னால் ஆமாய்யா - அது நிச்சயமா மிகைதான் ஆகும். பார்க்க வந்திருக்கும் அப்பாவியின் மீது அளவு கடந்த வெறுப்பும், அவன் அறிவின் மீது தீவிர அவநம்பிக்கையும் கொண்ட இயக்குநர்களில் முதலிடம் விக்கிரமனுக்கு கேள்வி ஏதும் கேட்காமல் அளித்துவிடலாம். நடிப்பில் வராத ரியாக்ஷனை இசை மூலம் சவட்டி எடுத்து சோகத்துக்கு லாலாலா, பெருஞ்சோகத்துக்கு ல லாலா, நகைச்சுவைக்கு டுர்ர்ரொய்ங் என்று ஸ்வர சேமிப்பு செய்யும் எஸ் ஏ ராஜ்குமார், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், நிரோஷா, மதன்பாப் குழுவினரின் தரமான (அசிங்கம் சிரிப்பு எந்த எழவும் இல்லாத என்று படிக்கவும்) நகைச்சுவை. ஜோதிகா, ஸ்ரீதேவி மாதவன் வினீத் ஆகியோரின் வாழ்நாள்-கீழ் நடிப்பையும் ஒன்றே சேர்த்து, இந்திய கிரிக்கெட் சங்கத்தின் மானத்தைக் கப்பலேற்றி ஏவிஎம் தயாரித்த காவியம்.. இந்தப்படம் ஓடியிருந்தால் தமிழ் ரசிகனைக் காப்பாற்ற யாராலும் முடியாது!

தமிழ் ரசிகனின் ரசனையைப்போல சந்தேகோபஸ்தமான வஸ்து வேறெதுவும் இல்லை என்பது என் திண்ணமான நம்பிக்கை. சமீப கால்ங்களில் வெளிவந்து, வந்த வேகத்தில் உள்ளே சென்ற சில படங்கள், பெரும்பாலோரின் கண்பார்வையில் படாவிட்டாலும், ஓடியிருக்கக்கூடிய, ஓடியிருக்கவேண்டிய படங்கள். வியாழக்கிழமை சாயங்காலம் திரைப்படம் பார்க்காவிட்டால் கை நடுங்கும் என்பதால், எல்லாப்படங்களையும் (துளசி அக்கா அளவுக்கு இல்லாவிட்டாலும்) பார்த்துவிடுவேன் என்பதால் என் கண்பார்வைக்கு பொதுவாக விடியோ ரைட்ஸ் வந்துவிட்ட எந்தப்படமும் தப்ப முடியாது.

1. உள்ளம் கேட்குமே - ஷாம், ஆர்யா, லைலா, அஸின், பூஜா கல்லூரித்தோழர்கள் சில ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் வழக்கமான கதை என்றாலும், அனைவரின் நடிப்பும், ஒளிப்பதிவும், தெளிவான திரைக்கதையும், அழகான பாடல்களும், ஜீவாவின் தேர்ந்த இயக்கமும்...படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை என்பதைத் தவிர எந்தக்குறையும் எனக்குத் தெரியவில்லை! நான் அஸின் ரசிகனானது இந்தப்படத்திற்குப்பின் தான் என்பது கூடுதல் தகவல்.

2. கண்ட நாள் முதல் - ப்ரியா Vயின் படம். பிரசன்னா, லைலா,கார்த்திக் - மூன்றே கேரக்டர்கள் - 20 வருடப்பகை பாராட்டும் (கன்னத்தில் கடித்துவிட்டாளாம்) பிரசன்னாவும் லைலாவும், லைலாவிற்கு கார்த்திக்கை நிச்சயம் செய்யும் நேரத்தில் மீண்டும் சந்தித்து, மேலும் சண்டை போட்டு எப்போது காதலாகிக் கசிந்துருகப்போகிறார்கள் என எதிர்பார்க்க வைக்கும் சாதாரணக்கதை என்றாலும், மெல்லிய நகைச்சுவை இழையோடும் இயல்பான திரைக்கதை, முக்கியமாக பிரசன்னாவின் நடிப்பு (ஏனோ இந்தப்பையன் பேசப்படுவதில்லை!), யுவன் இசை, பாடல் வரிகள், கிளைமாக்ஸிலும் சொதப்பாத முடிச்சு.. ஏன் ஓடவில்லை?

3. அழகாய் இருக்கிறாய் - பயமாய் இருக்கிறது - விஜய் மில்டனின் முதல் படம். பார்த்திபன் பிராண்டு கிண்டலுடன் ஆரம்பித்து - தமிழ் சினிமால காதலியத் தேடி சென்னை கிளம்பறவங்க கொஞ்சம் கொறைஞ்சிருந்தாங்களேப்பா - போன்ற டயலாக்குகள், காட்சிக்கு காட்சி கிராபிக்ஸை நகைச்சுவைக்காகவே அழகாக உபயோகப்படுத்தி, காதலைப்பிரிப்பதற்கு ஆயிரம் சதி செய்யும் முதல் பாதி வேகமாகவே ஓடுகிறது.. முரளியின் காபிரைட் சொல்லாத காதலை இரண்டாம் பாதில் உபயோகப்படுத்தி சொதப்பாமல் இருந்திருந்தால் மிக நல்ல நகைச்சுவைப்படமாக வந்திருக்க வேண்டியது.

சித்திரம் பேசுதடி போன்ற படங்கள் ஒரே பாடலுக்காகவும், வரிசையாக நார்த் மெட்ராஸ் படங்களுக்கிடையில் வந்த குடும்பப்படம் என்பதால் பாரிஜாதமும் ஹிட் ஆகும்போது, இப்படங்கள் வெற்றி பெறாததற்கு எந்தக்காரணமுமே எனக்குத் தெரியவில்லை.

6 பின்னூட்டங்கள்:

கதிர் said...

சுரேஷ்,

உள்ளம் கேட்குமே

அருமையான கதை மற்றும் அழகான (உங்களுக்கு அசின்னா எனக்கு பூஜா) நடிகைகள் நடிச்ச படம் உள்ளம் கேட்குமே தாமதமாக வந்தாலும் ஓரளவுக்கு ஓடியது. அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் நல்ல ஹிட் ஆச்சு. சரியாக கவனிக்கப்படாமல் இருக்கும் கதாநாயகர்களில் ஷாமுக்கு முதலிடம் தரலாம்.

கண்ட நாள் முதல்,

இந்த படத்தில எதிரெதிர் குணமுள்ள இரண்டு பேர் எப்படி இணைகிறார்கள் என்பதை அருமையாகவும் வித்யாசமாகவும் சொல்லி இருப்பாங்க. இயக்குனர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
சுடும் வெய்யில் கோடை காலம் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
தமிழ் சினிமா கண்டு கொள்ளாத இன்னொரு திறமையாளன் பிரசன்னா.

அன்புடன்
தம்பி

இலவசக்கொத்தனார் said...

நல்லாத்தான் இருக்கு. இவ்வளவு நல்லா இருக்கற பதிவு வெற்றி பெறுமா? சரியான சமயத்தில்தான் வெளிவந்திருக்கிறதா? அதுதான் கேள்வி.

துளசி கோபால் said...

பினாத்தலாரே,

இதுதான் எனக்கும் புரியாத புதிர்( இந்தப் பேர்லேயும் ஒரு படம் வந்திருந்தது)

நல்ல கதை இருக்கும் படங்கள் எல்லாம் ( சைலண்ட்டாக) எனக்கு வந்துருது.
பாக்கி இருக்கற மிச்ச சொச்சங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு:-)))))

பத்திரிக்கைக்காரங்களைக் 'கவனிச்சுக்கிட்டாப்' படங்கள் வெற்றியாமே!

பிரிக்க முடியாதது விக்ரமனும், எஸ்.ஏ. ராஜ்குமாரின் 'லலலலல வும்.

இந்த வியாதி ஹிந்திப் படத்துலே இருந்து வந்திருக்குமோ. ஒரு ஆஆஆஆஆஆ
இல்லே லலலலலல படம் ஆரம்பிச்சதுலே இருந்து முடியறவரை பல சுருதிகளில்
( நவரஸமாம்!) வந்து நம்மளை அறுத்துத் தள்ளிட்டுத்தான் ஓயும்.

//துளசி அக்கா மாதிரி...... ...// ன்னு சொல்லிட்டதாலே நம்ம பங்கு பின்னூட்டத்தைப்

போட்டுட்டேன்:-)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தம்பி..

அஸினுக்கு அதுக்குப்பிறகு ஏறுமுகம்தான்.. பூஜாவுக்கு அப்ப்படி ஒண்ணும் இல்லையே:-))

யோவ் இலவசம் - என் வேதனைல எஞ்சாய் பண்ணறியே.. நியாயமா? ஆனா, நிஜமாவெ, சனி இரவு எந்த போஸ்ட் போட்டாலும் பெயில் ஆகத்தான் சான்ஸ் அதிகம்.

//துளசி அக்கா மாதிரி...... ...// ன்னு சொல்லிட்டதாலே நம்ம பங்கு பின்னூட்டத்தைப் போட்டுட்டேன்:-)))//

ஆக, பேர் போடாம இருந்திருந்தா ஒண்ணும் வந்திருக்காது??

தருமி said...

சனி இரவு எந்த போஸ்ட் போட்டாலும் பெயில் ஆகத்தான் சான்ஸ் அதிகம்.//
அட ஆமா! படம் ரிலீஸ் பண்றது மாதிரி பதிவுகளையும் நாள், கிழமை பாத்துதான் செய்யணுமோ!? :(

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க தருமி சார்.. Long time no see!

நாங்க எந்த விஷயமா இருந்தாலும் அதிலே விஞ்ஞானத்தை நுழைச்சுட மாட்டோம்?

 

blogger templates | Make Money Online