Nov 12, 2006

கலைஞருக்கு ஓய்வு தேவையா? (12 Nov 06)

இளம் வயதில் அரசியலில் அவர் எடுத்த பல முடிவுகள் அவரைப் புடம் போட்டு பல சாதனைகள் செய்யவைத்தன - பெரிய பதவிகளைப் பார்த்தாகிவிட்டது, சிறை சென்று மீண்டாகிவிட்டது. இலக்கியத்தில், அதுவும் அவர் தேர்ந்தெடுத்த இலக்கியப்பிரிவில் அவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற அளவிற்கு பல சாதனைகள் செய்துவிட்டார்.

இருந்தாலும் ஓய்வு தேவையே என்பது என் கருத்து. இனியும் அவர் அரசியல் - இலக்கியம் என்ற இரட்டைக்குதிரைச் சவாரி செய்வது இரண்டு குதிரைகளுக்குமே கஷ்டமாகத்தான் அமையும் என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

முக்கியமாக, அவர் இலக்கியத்திலிருந்து ஓய்வு பெறுதல் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

எந்தக்கலைஞரைப்பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்கள்? பிரிட்டன் பாராளுமன்றத்தில் மிக இளையவராக உள்ளே நுழைந்து, கன்ஸர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அரை சென்று, பாலியல் வழக்கில் சிறை சென்று மீண்டு வந்திருக்கும், பல பெஸ்ட்ஸெல்லர்களை எழுதி இலக்கியத்திலும் வலுவான இடத்தைப் பிடித்திருக்கும் ஜெஃப்ரி ஆர்ச்சர் என்னும் கலைஞரைப்ப்பற்றிதான் பேசுகிறேன் என்பதில் சந்தேகம் இல்லையே?

ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகம் - False Impression - ஐப் படிக்கும் துர்ப்பாக்கியத்துக்கு சமீபத்தில் தள்ளப்பட்டேன்.

அமெரிக்க கந்துவட்டி வங்கியில் பணிபுரியும் நாயகி, செப்டம்பர் 11 விபத்தில் மயிரிழையில் தப்பிப்பிழைக்கிறாள் - ஆனால் அவள் பிழைத்தது யாருக்கும் தெரியாது. இந்த நிலையை கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு, விலைமதிப்பற்ற கலைப்பொருளை இழக்கவிருக்கும் ஒரு வாடிக்கையாளரைத் தப்புவிக்க முயற்சிக்கிறாள். இவளுக்கு மட்டும் எல்லா விமானங்களும் காத்திருக்கின்றன. மன்னிக்கவும் - இவளுக்கு மட்டுமல்ல, இவளைத் துரத்தும் ஒரு FBI அதிகாரி, கொலை செய்யத் துரத்தும் (பல் நாட்டு போலீசால் தேடப்படும்) ஒரு தொழில்முறைக் கொலைகாரிக்கும், எல்லா விமானங்களும், பாஸ்போர்ட் விசா எந்தத் தொந்தரவும் இன்றி திறந்து காத்திருக்கின்றன. 300 கொடுமையான பக்கங்களுக்குப் பிறகு சுபம்!

ஆக்ஷன் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதென்னவோ சரிதான். அதற்காக இப்படியா? கதை வேகமாகப்போகிறது என்பதற்கு ஆரம்ப கால எழுத்தாளர்கள் பயன்படுத்தும் பயணம்.. பயணம் மேலும் பயணம் உத்தி, எந்தக் கதாபாத்திரமும் எப்போதும் எங்கேயும் இருக்கலாம் என்னும் ஆம்னிப்ரஸன்ஸ் லாஜிக் மீறல்... Matter of Honor, Shall we tell the President போன்ற நிஜமான ஆக்ஷன் கதைகளைக் கொடுத்த ஆர்ச்சரா இப்படி?

ஓய்வு தேவைதானே? நீங்களே சொல்லுங்கள்!

14 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் உமக்கு நக்கல் ஜாஸ்திதான். இருக்கட்டும். முதலில் புத்தகத்தை படிக்கிறேன்.

podakkudian said...

அவசரமாக வந்து எட்டி பார்த்தால் ஹிஹி அது சரி நம்ம நாட்டு கலைஞறுக்கு ஓய்வு தேவை இல்லை என்று நினைக்கிறிர்களா?

கதிர் said...

பல்பு வாங்கிட்டேன்! :((

ஓகை said...

அட! நானும் ஏமாந்தேன்!!

லொடுக்கு said...

தடாலடி தலைப்பை போட்டு எல்லாரையும் உள்ளே இழுத்துட்டீங்க. கலைஞருக்கு ஓய்வு தேவைதான்.

பினாத்தல் சுரேஷ் said...

புத்தகத்தைப் படிக்க வேணாம்னுதானே கொத்ஸ் சொல்றேன். சரி அப்புறம் உங்க தலைவிதி!

பினாத்தல் சுரேஷ் said...

podakkudian

நீங்க எந்தக் கலைஞரை நினைச்சுகிட்டீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

தம்பி,

நான் பல்பு விக்கறதில்லையே:-)

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை,

இது வலை விரிக்கிர சமாசாரம்தானே.. மாட்டாம யாரும் போக மாட்டாங்க:-)

பினாத்தல் சுரேஷ் said...

லொடுக்கு.. நீங்க எந்தக்கலைஞரைச் சொல்றீங்க?

மு.கார்த்திகேயன் said...

ஆஹா.. எப்படியோ..தலைப்பை வைத்து நிறைய பேரை உங்கள் பதிவை படிக்க இழுத்துவந்துவிட்டீர்கள், சுரேஷ்

இலவசக்கொத்தனார் said...

அவரு எழுதின எல்லா புக்கும் படிச்சாச்சி சிறை நாட்குறிப்புகள் உட்பட. ரெண்டு டிராமா எழுதி இருக்காராம். அது மட்டும் மாட்டலை. அதனால கேவலமா இருக்கிற சில கமல் படத்தை பார்த்து தொலைக்கிற மாதிரி இதையும் படிச்சி தொலைக்கறேன். :D

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கார்த்திகேயன் முத்துராஜன். என்னவெல்லாம் மார்க்கெட்டிங் பண்ணவேண்டியிருக்கு பாத்தீங்களா?

கொத்ஸ்.. அப்படி ஒரு கெட்ட பழக்கமா உங்களுக்கு (என்னை மாதிரியே!).. இந்த வியாதிக்கு எந்த மருந்தும் இருக்கறதா எனக்குத் தெரியலை, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க:-)

ramachandranusha(உஷா) said...

ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 

blogger templates | Make Money Online