Nov 16, 2006

96, 8, 2, 0.2857 அவியல்.

1.இளையராஜாவின் மறுப்பு பெரியார் பட இசையமைப்பு சர்ச்சைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கூட்டியிருக்கிறது. இந்தியா க்ளிட்ஸில் வந்த செய்திக்கும் இப்போது அவர் கூறுவதற்கும் சம்மந்தத்தையே காணோம். எது தவறு, எது சரி? ஜூவி பேட்டியில் ஞான ராஜசேகரனின் மறுப்பு இன்னும் குட்டையைக் குழப்புகிறது.

தவறான செய்தியின் அடிப்படையில் எழுதியதால் ரோஸா பின் வாங்கவேண்டும் எனக்கூறும் அன்பர்கள், எந்தச் செய்தியை நம்பவேண்டும், உறுதியாக நம்பிக் கருத்து சொல்ல முடியும் என்பதையும் விளக்க வேண்டும். மேலும் ரோஸாவின் பதிவு இளையராஜாவின் "பெரியார் பட இசையமைக்க மறுப்பு" என்பதை ஒரு தூண்டுகோளாய்க் கொண்டு இளையராஜா பற்றிய அவருடைய கருத்துக்களைச் சொல்கிறது. (அது இளையராஜா மீதான விமர்சனம் என எனக்குத் தோன்றவில்லை) அக்கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், இப்போது வந்த ஜூவி செய்தியால் அவர் எதையும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

அதேபோல, என் பதிவின் ஆதார தொனியான - "முழு ஈடுபாடில்லாததால் இசையமைக்க மறுப்பது" தவறென எனக்குத் தோன்றவில்லை. அவ்வப்போது வரும் செய்திகளின் அடிப்படையில் எழுதுகிறோம். அவை பின்னால் மறுக்கப்படக்கூடும் என்று ஒரு மாற்று நிலையும் கையில் வைத்திருப்பதுதான் போலித்தனம்.

2. "தொலைக்காட்சித் தொடர்களில் பிரபல திரைப்படங்களின் தாக்கம்" என்ற தீஸிஸ் தலைப்பை முனைவர்-ஆக-துடிக்கிறவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். கோலங்கள் என்னும் டப்பா தொடரில் மகாநதியின் காட்சிகள் கேவலமாக உல்டா செய்யப்பட்டதைப் பார்த்திருந்தால் கமலஹாசனுக்கு ரத்தக்கண்ணீர் வந்திருக்கும்! கோபுரங்கள் சாய்வதில்லையை விஸ்தாரமாக ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள் இன்னொரு தொடரில்.

3. சன் டிவியில் வெளிவரும் ஏராளமான தாராளமான அரசு விளம்பரங்களின் தரம் யாரையாவது உடனே அடிக்கவேண்டும் எனுமளவிற்கு கோபத்தைத் தூண்டுகின்றன. இந்தியிலேயே கேவலமாக எடுக்கப்பட்டு, அதை இன்னும் கேவலமாக (Completely lost in translation) மொழிபெயர்க்கப்பட்டு, கேப் கிடைக்கும்போதெல்லாம் ஒரு முறைக்கு இரண்டு முறையாக ஒளிபரப்பப்பட்டு "இதற்கு எவ்வளவு செலவு செய்தார்களோ, எவ்வளவு செலவு செய்ததாய் கணக்கு காட்டினார்களோ, சன் டிவிக்கு இதனால் எவ்வளவு வருமானமோ" என்ற கேள்விகளையெல்லாம் தூண்டிவிடும் நெகட்டிவ் விளம்பரங்கள்.

4. ஜெயாவையும் சன்னையும் விட்டால் வேறு போக்கிடம் இல்லாத கேபிள் நெட்வொர்க் எங்களூரில். விஜயின் லொள்ளு சபாவும், கலக்கப் போவது யாருவும் நல்ல நகைச்சுவை என்று கேள்விப்பட்டிருந்ததோடு சரி. ஆனால், இதற்கு ஒரு விடிவு வந்திருக்கிறது. லொள்ளு சபாவின் எபிசோடுகளை கணினியில் பார்க்க ஒரு பிளாக்ஸ்பாட் திறந்திருக்கிறார்கள் சில புண்ணியவான்கள். அவசியம் போயிப்பாருங்க, சிரிங்க!

5. இன்னொரு சுனாமி எச்சரிக்கை வந்தது, வாபஸ் வாங்கப்பட்டது (ஜப்பானுக்கு). இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் எத்தனை முறை வந்தாலும் புலி வருது போல நினைக்காமல் எல்லா முறையும் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை அந்த ஊர் கடலோர மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆமாம், நம்ம ஊருக்கு சுனாமி எச்சரிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்களே, என்ன ஆச்சு?

6. இந்த வாரப்பதிவுகளில் யோசிக்க வைத்த பதிவுகள்:

கடல்கணேசனின் நேர்மையே கஷ்டப்பட்டு வெல்லும் - கவரக்காரணம் அதில் இருந்த பாஸிட்டிவ் அப்ரோச், தாமதமானாலும் கிடைத்த நீதி மனதுக்குத் தரும் அமைதி.

இரண்டாவது - அசுரனுடைய "உங்கள் இரக்கம் உண்மையானதா?" நியாயமான கேள்வி. பதிவைப் படித்தபின் எனக்குள்ளும் எழுந்த கேள்வி. 50 அடி குழாய்க்கிணற்றில் விழுந்த சிறுவனுக்குக் கிடைத்த ஊடகக்கவனம் இது போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் விழாதது ஏன்?

அண்டர்கிரவுண்டு சுரங்கங்களுக்குள் பலமுறை போயிருக்கிறேன். மீத்தேனை சுவாசித்து ஒருமுறை அபாயமணி ஒலிக்க வெளியே ஓடி வந்திருக்கிறேன். இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும்.. இன்னொரு நாள்!

இப்பதிவுகளில் பின்னூட்ட முடியாமை இணையத் தொடர்பு காரணங்களால் என் கைகள் கட்டப்பட்டு இருப்பதாலே மட்டும்தான். பதிவர்கள் மன்னிக்க.

பினாத்தல்கள், உங்கள் அபிமானத்தாலும் தொடர்ந்த ஆதரவாலும் இன்று 200ஆவது பதிவைச் சமர்ப்பிக்கிறது. 25 மாதங்கள் என்பதை வருடத்துக்கு, மாதத்துக்கு, வாரத்துக்கு, நாளுக்கு என வெட்டியாகப் போட்ட கணக்குதான் தலைப்பு!(அக்டோபர் 15, 2004 அன்று தமிழுக்குக் கிடைத்த சாபம் இன்னும் தொடர்கிறது:-))

பின்னூட்டத்துக்கான கேள்வி: பினாத்தலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது? (ஒன்றை மட்டும் குறிப்பிடுங்கள் - ஜனநாயக முறைப்படி கிடைக்கும் பதிலை இடதுபுறம் வைக்க உத்தேசம்)

30 பின்னூட்டங்கள்:

enRenRum-anbudan.BALA said...

Suresh,
Congrats and keep up the good work !

Boston Bala said...

2. ரொம்ப சீரியல் பார்க்காதீங்க ; )

3. ஏதோ விளம்பரம் கொடுத்துவிட்டுத்தானே காசை அடிக்கிறார்கள்... தயாரிக்காமலே ஏமாற்றாமல், 'நெஞ்சுக்கு நீதி'யாக நடந்து கொள்வதைப் பாராட்டுங்களேன் : P

4. ஒரேயடியாகப் பார்த்தால், அலுத்து விடலாம்... 'தர்மபுரி' அளவுக்கு நகைச்சுவை இல்லை என்பது இன்னொரு குறை : ))


பி.கே.: 'எதை எடுப்பது... எத்தை விடுப்பது!?'

அப்புறம்... வாழ்த்துக்கள் சுரேஷ்!

Muthu said...

//தவறான செய்தியின் அடிப்படையில் எழுதியதால் ரோஸா பின் வாங்கவேண்டும் எனக்கூறும் அன்பர்கள், எந்தச் செய்தியை நம்பவேண்டும், உறுதியாக நம்பிக் கருத்து சொல்ல முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.//

//அதேபோல, என் பதிவின் ஆதார தொனியான - "முழு ஈடுபாடில்லாததால் இசையமைக்க மறுப்பது" தவறென எனக்குத் தோன்றவில்லை. //


அருமை..நாம் ஒத்துப்போகிறோம்...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

அவன்விகடன் பதிவை பிடித்த பதிவாக எடுத்துக்கொள்ளவும்.

முத்துகுமரன் said...

வாழ்த்துகள்....

ILA (a) இளா said...

200க்கு வாழ்த்துக்கள். பிடித்தது, பொட்டிகடயும், நீர்வீழ்ச்சியும், நீங்கள் தேன்கூடுக்கு குடுத்த தலைப்பும். வ.வா.சங்கத்துல எழுதிய Wifelogy'ம்

கதிர் said...

அட 200ஆ!!

எல்லாமே தரமான பதிவுகள்தான் எதை சொல்றதுன்னு தெரியல?

ஒரு பக்கம் அவன் விகடன், சிவாஜின்னு காமெடி பண்றீங்க, இன்னொரு பக்கம் அப்ஸல், தூக்கு, இளையராஜா ன்னு சீரியஸ் சொல்றிங்க.

எந்த பக்கத்தில இருந்து பார்த்தாலும் நல்லாவே இருக்கு.

மத்தபடி சாபமெல்லாம் இல்ல!

//அக்டோபர் 15, 2003 அன்று தமிழுக்குக் கிடைத்த சாபம் இன்னும் தொடர்கிறது:-)) //

எத்தனை நாளைக்குதான் தன்னடக்கத்தை மெயிண்டெயின் பண்றேன்னு இப்படியே எழுதுவிங்க?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி எ அ பாலா. பின்னூட்டக் கேள்வியை மறந்துவிட்டீர்களே!

நன்றி பாஸ்டன் பாலா. கொஞ்சம் பாத்தாலும் முழுசாப் பாத்தாலும் சீரியல்னாலே பி பி ஏறுதே..

அதென்ன பி கேக்கு அப்படி ஒரு Diplomatic பதில்?

நன்றி முத்து (தமிழினி). உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது;-)

நன்றி முத்துக்குமரன். பி கே?

நன்றி இளா, உங்கள் ஓட்டுக்களும்் சேர்க்கப்பட்டது;-)

நன்றி தம்பி. நிறைகுடம், காலிக்குடம் ரெண்டுமே சத்தம் போடாது. நான் காலிக்குடம், சத்தமே வராததைப்பாத்து வேற முடிவுக்கு வந்துடாதீங்க;-)

லக்கிலுக் said...

ராஜிவ் காந்தியின் மரணத்தின் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இரு பாகங்களாக எழுதியிருந்தீர்களே. அதற்கு என் ஓட்டுக்களைச் சேர்க்கவும்....

அன்புடன்
லக்கிலுக்

பொன்ஸ்~~Poorna said...

சுரேஷ்,
காலைலயே ரொம்ப நீளமா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. எங்கே போச்சுன்னு தெரியலை. gist:

* 200க்கு வாழ்த்துக்கள்

* சுனாமி மேட்டர் இன்னும் செப்டம்பர் 2007 ஆகுமாம்

* பிடித்த பினாத்தல் : அவன் விகடன்..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லக்கிலுக். அது நாலு பாகமாச்சே:-))

பொன்ஸ், எதுவும் வரவில்லையே.. வராதான்னு காத்துக்கிட்டு இல்ல இருக்கேன்:-)) ஞாபகப்படுத்தி முழுசா எழுதிடுங்க:-))

மணியன் said...

96,8,2,0.2857 க்கு வாழ்த்துக்கள் !!

பாபாவே எதை எடுப்பது, விடுப்பது என்றால் நாங்கள் என்ன செய்வது :( தவிர
200ஐயும் படித்தவனில்லை நான்.

சமீபத்தில் படித்ததில் பிடித்தது உங்கள் ராஞ்சி அனுபவங்கள் தான்.

உங்கள் பதிவு என்னைக் கவர்ந்த சிலவற்றுள் ஒன்று.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மணியன். ராஞ்சி அனுபவங்களுக்கு தற்போதைய நிலவரப்படி இரண்டு ஓட்டுகள்.

Anonymous said...

ராஞ்சி அனுபவங்கள்

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் பினாத்தலாரே!!!

//பினாத்தலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது? ஒன்றை மட்டும் குறிப்பிடுங்கள்//

ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்வது ரொம்ப கஷ்டமாச்சுங்களே ;)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கப்பி பய.

அனானிமஸ்.. என்னவோ கள்ள் ஓட்டுப் போடற ரேஞ்சிலே இல்ல வெறும இதை மட்டும் எழுதி இருக்கீங்க;-)

துளசி கோபால் said...

பினாத்தலாரே,


அடடா.... 200 வது பதிவா?

வாழ்த்து(க்)கள்.
200ன்னு சொல்லிட்டுச் சும்மா இருக்காம பிடிச்சது எதுன்னு
கேட்டு இப்படி மாட்டுவீங்களா? :-)))))
எத்தனையோ விஷயத்தைத் 'தொட்டு' எழுதுனாலும், எனக்குப் பிடிச்சது
நகைச்சுவைப்பதிவுகள்தான். சிரிக்கணும். சிரிக்கணும். எப்பவும் சிரிச்சுக்கிட்டே
இருக்கணும்ங்கறதுதான் என்னோட கொளுகை. ( அதான் சிரிப்பாச் சிரிக்குதேன்னு
சொல்லாதீங்க) சரி, கேட்டுட்டீங்க. ம்ம்ம்

என் ஓட்டு அவன்விகடனுக்கே!

//என்பதை ஒரு தூண்டுகோளாய்க் கொண்டு இளையராஜா //

தூண்டுகோலாய்

//2. "தொலைக்காட்சித் தொடர்களில் பிரபல திரைப்படங்களின் தாக்கம்" என்ற தீஸிஸ் தலைப்பை
முனைவர்-ஆக-துடிக்கிறவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்//

முனைவர்களுக்கு இன்னொரு ஐடியாவும் இதோ.
தமிழ் வலைப்பதிவுகளில் திரைப்படம் & திரைப்பட நடிகநடிகையரின் தாக்கம்

//ஜெயாவையும் சன்னையும் விட்டால் வேறு போக்கிடம் இல்லாத
கேபிள் நெட்வொர்க் எங்களூரில்//

எங்களுக்கு நிம்மதி. இப்படி எதுவும் இல்லை. இப்பத்தான் சமீபமா 'சன்' வந்துக்கிட்டு
இருக்காம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துளசி அக்கா.

//தமிழ் வலைப்பதிவுகளில் திரைப்படம் & திரைப்பட நடிகநடிகையரின் தாக்கம்// நல்ல தலைப்பா இருக்கே.. எனக்குள்ளே ஒரு மிருகத்தை எழுப்புது.. பாக்கலாம்.

//இப்பத்தான் சமீபமா 'சன்' வந்துக்கிட்டு
இருக்காம். // பின்னே.. எவ்வளோ நாள்தான் தப்பிப்பீங்க?

enRenRum-anbudan.BALA said...

//நன்றி எ அ பாலா. பின்னூட்டக் கேள்வியை மறந்துவிட்டீர்களே!
//
மதக்கலவரத்தை முன் வைத்து நீங்கள் முன்பு எழுதிய சிறுகதை ஒன்று. தலைப்பு நினைவில் இல்லை !

இலவசக்கொத்தனார் said...

//பினாத்தலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?//

ஐ! ஆசை தோசை அப்பளம் வடை! இப்படி எல்லாம் கேட்டா சொல்லுவோமா? முதலில் பாபாவை கூப்பிட்டு எல்லாத்தையும் படிச்சு ஷார்ட்லிஸ்ட் தரச் சொல்லுங்க. அப்புறம் பாக்கலாம்.

200 பதிவு போட்டாச்சா? யப்பா பெரிய ஆளுதான்வே. வாழ்த்துக்கள்.

அசுரன் said...

சுரேஸ்,

தங்களது தளத்துக்கு முதல் முறையாக வருகிறேன், எனவே பிடித்ததாக ஒன்றை தேர்ந்தெடுக்க இயலாமல் இருக்கிறேன்.

எனது பதிவை இங்கு பட்டியலிட்டதற்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது சுரங்க அனுபவ்ங்களை எழுதுங்கள், நாம் இன்று வசதியாக உட்கார்ந்த இடத்தில் அனைத்தையும் வருவித்து அனுபவிப்பதற்க்காக எத்தனை சாதாரண மனிதர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை விடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவையுங்கள்

நன்றி,
அசுரன்

பினாத்தல் சுரேஷ் said...

மீண்டும் நன்றி எ அ பாலா. சிறுகதை "இரு சம்பவங்கள்"-உக்கு ஒரு ஓட்டு சேர்த்துக்கொள்கிறேன்.

இ கொ, நன்றி. பாபாதான் ஜூட் விட்டுட்டாரே.. அப்படியாவது 200-ஐயும் ஒரு முறை படிச்சு ஜெனெரல் நாலெட்ஜை வளர்த்துக்கக்கூடாதா?;-)

அசுரன், உங்கள் வருகைக்கு நன்றி. அண்டர்கிரவுண்டு சுரங்கங்கள் பாதுகாப்புக்கு ஒரு பெரிய சவாலே. அதுவும் பாதுகாப்பைப் பற்றிய அக்கறை அற்றவர்களால் நிர்வகிக்கப்படும்போது உள்ளே செல்வதே பெரும் சவால்தான். எழுதுகிறேன்.

தகடூர் கோபி(Gopi) said...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

ஒரு சில பதிவுகள் தவிர எல்லாப் பதிவுமே பிடிக்குமே... எது பிடிக்காதுன்னு கேட்டிங்கன்னா 'எண்ணி' சொல்ல முடியும். :-)

ramachandranusha(உஷா) said...

சுரேஷ், உங்கள் தனி தகுதியாய் நினைப்பது, மற்றவர்கள் செய்யாதது ஃபிளாஷ் உத்தி! அதை நல்லா டெவலப் செய்யுங்க என்பதே என் விருப்பம். பதிவுன்னுப் பார்த்தால் எல்லாரும் லிஸ்ட் கொடுத்துட்டாங்க :-)

பினாத்தல் சுரேஷ் said...

கோபி, நன்றி. சரி.. உங்களுக்கு மட்டும் கேள்விய மாத்திட்டேன். எது பிடிக்காது?;-)

உஷா, நன்றி. எல்லாரும் ஓட்டுப்போட்டுட்டாங்கன்னு நாம போடாம இருக்கறதுதான் ஜனநாயகமா சொல்லுங்க?

பினாத்தல் சுரேஷ் said...

நானும் வேணாமுன்னுதான் பார்த்தேன்.. என்ன பண்ண.. இன்னும் எதிர்பார்க்கப்பட்ட பலர் இந்தப்பதிவைப் பார்த்ததாவே தெரியலையே.. பி கே வேற கேட்டிருக்கேன்..

எனவே, பி க!

மு.கார்த்திகேயன் said...

//விஜயின் லொள்ளு சபாவும், கலக்கப் போவது யாருவும் நல்ல நகைச்சுவை என்று கேள்விப்பட்டிருந்ததோடு சரி. ஆனால், இதற்கு ஒரு விடிவு வந்திருக்கிறது. லொள்ளு சபாவின் எபிசோடுகளை கணினியில் பார்க்க ஒரு பிளாக்ஸ்பாட் திறந்திருக்கிறார்கள் ///


சுறேஷ், லொள்ளு சபாவை youtube.com la பாருங்க.. முக்காவாசி எபிசோடுகள் இங்கே கிடைக்கும்.. நீங்கள் சொல்லும் பதிவுக்காரர்கள் கூட இங்கே இருந்து உங்கள் பார்வைக்கும் தரலாம்..

ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள். எனக்குப் பிடித்தது அவன் விகடன்,

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மு கார்த்திகேயன். நீங்களும் கார்த்திகேயன் முத்துராஜனும் ஒரே ஆளா வெவ்வேறயா? லொள்ளு சபா ப்ளாக்ஸ்பாட் நடத்தறவங்கதான் உ ட்யூப்லே அப்லோட் பண்ராங்கன்னு நினைக்கிறேன்.

நன்றி ஜெயஸ்ரீ.

சிறில் அலெக்ஸ் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.

உங்க பதிவுகள் எல்லாம் (நான் படித்தவரையில்) நல்ல பதிவுகளே. டா கில்லி கோட் ரெம்ப நல்ல இருந்துச்சு. என் தேர்வு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிறில்.

யாராவது ஒருத்தராவது டா கில்லி கோட் சொல்லமாட்டாங்களான்னு பாத்துகிட்டிருந்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சது அது.

 

blogger templates | Make Money Online