Nov 21, 2006

போற்றிப் பாடடி பெண்ணே? (21 Nov 06)

இது இளையராஜா பற்றிய இன்னொரு பதிவல்ல. தேவர் மகன் படத்தின் தாக்கம், தூண்டிய கலவரங்கள் குறித்த எண்ணங்களே.

தேவர் மகன் படம் வெளியான முதல் நாளே பார்த்துவிட்டு ராஞ்சிக்கு ரயிலேறிவிட்டேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழகச் செய்திகளை அறிய வாய்ப்பு கிடைத்தபோது, இந்தப்படத்தின் வெற்றியும் படத்தால் ஏற்பட்ட கலவரங்களும் ஆறிய கஞ்சியாகிவிட்டிருந்தது. ஆனால், பின்னர் வந்த சண்டியர் சர்ச்சையின்போது இந்தப்படம் தேவர் ஜாதியினருக்கு கொடி பிடிப்பதாய்க் கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக போற்றிப்பாடடி பெண்ணே பாடல் அவர்கள் வீட்டு ரோட்டு விசேஷங்களில் முக்கிய அம்சம் கொண்டதாகவும் அறிந்தேன், ஆச்சரியப்பட்டேன். ஆச்சரியம் ஏனென்றால், நான் பார்த்த அளவில் (பிறகு பலமுறை பார்த்துவிட்டேன்) இந்தப்படத்தின் மூலம் அவர்கள் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை.

"நீ ஒரு விதை போடு, அது உன் பேரனுக்கு மரமாகும்" என்று பரந்த மனத்தைக் கொண்ட கிராமத்துப் பெரிய மனிதர் தேவர் என்று பெருமைப்பட்டாலும், தன் சொந்தப்பகைக்காக கிராமத்தையே வெள்ளக்காடாக்கத் துணிந்தவனும் அதே ஜாதி எனக் காட்டியிருந்த படம். வெளிநாட்டில் படித்துத் திரும்பிவரும் இளைஞன் இவர்களைத் திருத்த எவ்வளவு முயற்சித்தும், தனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருக்கும் அதே மிருகம் எழும்பி, வன்முறைக்கே வடிகாலாகிறான், எவ்வளவு படித்திருந்தாலும் அந்த மிருகம்தான் வெல்கிறது என்று செல்லும் திரைக்கதையால் அவர்கள் பெருமைப்பட என்ன இருக்கும் எனப் புரியவே இல்லை. கதையில் வரும் எல்லா மாந்தரும் ஒரே ஜாதியினர் என்பதால், ஊரைக் கெடுப்பவன், சாலை அமைப்பவன், குடித்துச் சீரழிபவன், தேருக்கு வெடிகுண்டு வைப்பவன், நல்வழிப்படுத்த நினைப்பவன் எல்லாரும் அந்த ஜாதிக்குள் உண்டு என்றுதான் படம் சொல்கிறது என நான் நினைத்தேன். கெட்ட கும்பலின் வழக்குகளைப் பார்த்துக்கொள்ளும் பிராமண வழக்கறிஞர், "திங்கிற கையாலே கழுவணும்" என்பதற்கு மேல் தன் கை போனதைப்பற்றிக்கூட கவலைப்படாத வேலைக்காரன் - போன்ற மிகச்சில பாத்திரங்களை விடுத்து வேற்று ஜாதி பாத்திரங்களே இல்லை எனலாம்.

ஆனால், திரைக்கதை எந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும் நடந்த விஷயங்கள் ரசிகர்கள் திரைக்கதையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே நிறுவுகின்றன. நம் பெரும்பாலான மக்கள் பாடல்கள் சண்டைகளைத் தாண்டி திரைப்படங்களைப்பற்றி யோசிப்பதில்லை என்பதுதான் தெளிவாகிறது. "தேவர் காலடி மண்ணைப் போற்றிப்" பாடும் பாடலும், "ஒரு ஆத்திரம் பொறந்தா அப்ப இவன் யாருன்னு தெரியும்" எனச் சூளுறைத்துச் சண்டை போடும் "தமிழச்சி பால் குடிச்சவன்" கொடுத்த தாக்கத்தை கிளைமாக்ஸோ, கதையின் ஆதார ஸ்ருதியோ கொடுக்காததுதான் உண்மை.

படத்திலோ, தொலைத் தொடர்களிலோ, முக்காலே மூணுவீசம் கெட்டவர்களின் வளர்ச்சியைக் காட்டி, அவற்றைப் புகழ்ந்து ப்ளோ-அப் செய்துவிட்டு, கடைசி நிமிடங்களில் நீதிபோதனை செய்தால், எது அதிகத் தாக்கம் கொடுக்கும்?

இது எனக்கே புரிந்திருக்கும்போது, கமலஹாசனுக்குப் புரியாமல் இருக்கும் என நினைக்க நான் தயாரில்லை.

இருப்பினும், இதே தவறை அவர் "ஹே ராம்"இலும் செய்திருக்கிறார். காதல் மனைவி கண்ணுக்கெதிரே கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, கோபத்தில் கண்மண் தெரியாமல் சுட்டுக்கொண்டு கிளம்பும் சாகேத் ராமனை தீவிரவாத இந்து இயக்கங்கள் மூளைச் சலவை செய்வதையும், காந்தியைக் கொல்லவேண்டியதன் நியாயங்களை அவன் தீவிரமாக நம்புவதையும் விஸ்தாரமாகக் காண்பித்த திரைக்கதை, தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் ஷா ருக் கானின் மழலைத் தமிழில் ஓடிக்கொண்டே பேசுவதாக அமைத்திருந்ததால் சுத்தமாக கவனிக்கப்படாமல் போனது.

இது கமல்ஹாசன் வேண்டுமென்றே செய்யும் தவறா? விவாதிக்கலாமா?

30 பின்னூட்டங்கள்:

Anonymous said...

:(

பினாத்தல் சுரேஷ் said...

ஆவிகளுக்கும் பிடிக்காத சர்ச்சைகளையும், பைசா (ஒரு பின்னூட்டம் கூட) பெறாத விவாதங்களை(?!)யும் தொடங்கும் சுரேஷ் ஒழிக ஒழிக!

Anonymous said...

//(ஒரு பின்னூட்டம் கூட) //

இப்பவே ரெண்டு ஆச்சே!

இதோ நான் ஒண்ணு மூணு!

Anonymous said...

சுரேஷ்,
காலைலயே நினைச்சேன்.. நீங்க எல்லாம் விவாத மேடை போட்டால் வேலைக்காகுமா? அங்க விவாத மேடை ஒண்ணு மூணு மணிக்குத் தொடங்கி அனானிகள் இல்லாமையே ஆறு மணிக்கு சதமடிச்சிட்டோம்ல! ;)

Hariharan # 03985177737685368452 said...

ஐயா பெனாத்தல்,

பின்னூட்டமே இல்லை என பெனாத்தியதற்கு இப்பின்னூட்டம்.

யோசிக்கச் சொல்லி அதுக்கு ஒரு விவாதம்னா எங்கிருந்து பின்னூட்டம் வர்றது?

மக்களை ஏமாற்றிய கமலஹாசன்ன்னு தலைப்பு வச்சிருந்தா இவ்வளவுக்கு பெனாத்த வேண்டியிருக்காது!

பினாத்தல் சுரேஷ் said...

கணக்கு எல்லாம் சரிதான் பி கணக்காளரே.

நீங்க ஆரம்பிச்ச மேட்டர் அப்படி பொன்ஸ், வலைப்பதிவுகள்லே சில எவர்கிரீன் தலைப்புகள் இருக்கு, அதுலே ஒண்ணு பாலபாரதி எடுத்தது (அல்லது எடுக்கவைக்கப்பட்டது:-))

ஹரிஹரன், பரிதாபப்பட்டதுக்கு நன்றி.

ஆனால், மக்களை ஏமாற்றிய கமல்ஹாசன் என்பதை நான் ஏற்க மாட்டேன். (தலைப்பில் அப்படி வைத்திருந்தால் கும்பல் பிச்சுகிட்டுப் போயிருக்கும் என்று சொல்கிறீர்கள் என்றால், ஒத்துக்கறேன்).

குமரன் (Kumaran) said...

அட. இது தற்செயலா நடந்ததுன்னா நம்ப முடியலை. இப்பத் தான் கூகுள் வீடியோவில தேவர் மகன் பாத்து முடிச்சேன் (எத்தனாவது தடவைன்னு நினைவில்லை). வந்து நேற்று வந்த இடுகைகள்ல பாத்தா இந்தப் பதிவு இருக்கு. சரி. விவாதம் தான் பண்ண முடியாது. பின்னூட்டமாவது போடலாமேன்னு தான். :-)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க குமரன்.. தற்செயலாத்தான் நடந்திருக்கணும்.. பின்னே வேற எப்படி? சந்தேகப்படறதைப் பாத்தா குருவி, வல்லூறு, காக்கா யாருக்காச்சும் குமரனும் பெனாத்தலும் ஒண்ணுதான்னு SMS பறந்துரப்போவுது..

விவாதம் ஏன் கூடாது என நினைக்கிறீர்கள்?

Anonymous said...

ஓ! குமரன் என்ற பெயரில் எழுதிவரும் பதிவரும் பினாத்தலார்தானோ!

பொன்ஸ்~~Poorna said...

என் பின்னூட்டத்தை இப்போ படிச்சா எனக்கே தப்பான அர்த்தம் வருது...

நான் என்ன சொல்ல வந்தேன்னா, நாள் முழுவதும் பின்னூட்டத்தை மட்டுறுத்த முடியாத உங்க பதிவில், விவாதம் செய்வது கொஞ்சம் கஷ்டம்..

ஓகேவா?

பினாத்தல் சுரேஷ் said...

மைனா, எனக்கே சந்தேகம் வருதுன்னா பாருங்களேன்.

பொன்ஸ், நான் இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொண்டேன்;-) பொதுவா எனக்கு மூளை குறுக்கிலே ஓடாது. (எந்தப்பக்கமுமே ஓடாது சொல்ற அடங்குடா மவனேக்கு இருக்கு ஆப்பு;-))

lollu-sabha said...

ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறார், நண்பர் பினாத்தல் சுரேஷ். என் பார்வையில் தேவர் மகன், நாயகன், மௌன ராகம் ஆகியவை திரை காவியங்கள். இது பற்றி அலச எனக்கு கொஞ்சமும் தகுதியில்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் படத்தில் நடித்த கமலஹாசனுக்கும் (பரமக்குடி ஐயர்) படத்தை எடுத்த பரதனுக்கும் (மலையாள சேட்டன்) தேவர் இனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே நினைக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் ஒரு படம் எடுத்து அதை நான் விமர்சனம் செய்ய எனக்கு ரொம்ப நாளா ஆசை

பினாத்தல் சுரேஷ் said...

தேவர் மகன் திரைப்படத்தையோ, அதன் தரத்தையோ நடிப்பு, இசை மற்ற தொழில்நுட்ப விஷயங்களையோ நான் விமர்சிக்கவில்லை. பார்த்து பலநாள் ஆகியும் அதன் வசனங்களும் பாடல் வரிகளும் என் நினைவில் இருப்பதே தரத்துக்கு சாட்சி. கமலோ, பரதனோ தேவர் இனத்தைத் தூக்கிப் பிடித்திருக்கவில்லை என்பதையும் தெளிவாகவே எழுதியிருக்கிறேன்.

ஆனால், இப்படம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதும் நடந்த உண்மை. ஏன் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, திரைக்கதை அமைப்பில், பாடல்களில் உள்ள தூக்கலான அமைப்பு, படத்தின் ஆதாரக் கருத்தை விட அதிக impact கொடுக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டதாலா? என்பதையே கேள்வியாகக் கேட்டிருக்கிறேன்.

நான் படம் எடுப்பதா? பதிவே வேலைக்காக மாட்டேனென்கிறது;-))

பினாத்தல் சுரேஷ் said...

ஜெயஸ்ரீ,

நல்ல அலசல்.

தொடர்ந்து முடியுங்கள், என் கருத்துகளைச் சொல்கிறேன்.

ஜெயஸ்ரீ said...

//ஆனால், திரைக்கதை எந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும் நடந்த விஷயங்கள் ரசிகர்கள் திரைக்கதையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே நிறுவுகின்றன //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் திரைப்படம் பார்த்து பின் பல பத்திரிகைகளில் விமரிசனம் படித்து விவாதிக்கும்போது கமல் சொல்ல நினைக்கும் message பலருக்கும் நன்கு புரிந்தது.
//மூணுவீசம் கெட்டவர்களின் வளர்ச்சியைக் காட்டி, அவற்றைப் புகழ்ந்து ப்ளோ-அப் செய்துவிட்டு, கடைசி நிமிடங்களில் நீதிபோதனை செய்தால், எது அதிகத் தாக்கம் கொடுக்கும்? //

இங்கே உங்களிடமிருந்து வேறு படுகிறேன். கெட்டவர்களைப் புகழ்ந்து ப்ளோ அப் செய்யப்படவில்லை. நல்லவன் கெட்டவன் என்ற பொத்தாம்பொதுவான descriptions களைத் தாண்டி அந்த கதை மாந்தர்களைப் பார்க்கவேண்டும். அவர்களது சமூகச் சூழல் அப்படித்தான் இருந்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் அறிந்த வாழ்க்கை முறை அதுதான். கடைசி சில நிமிடங்களில் கமலுக்கும் நாசருக்கும் கடும் சண்டை நடக்க கமல் வாழ்வா சாவா என்ற நிலையில் நாசரைக் கொல்ல வேண்டி வருகிறது. நாசரின் தலையை வெட்டிவிட்டு கத்தியும் கையுமாக கமல் குமுறிக்கொண்டிருக்க , அருகிலிருக்கும் வடிவேலு (அப்படித்தான் நினைவு) " நல்ல காரியம் பண்ணினீங்கய்யா, இப்படிக் கொடுங்க" என்று கையிலிருந்து கத்தியை வெகு இயல்பாக (தன் ஒற்றைக்கையால்) வாங்கிகொள்ளும் காட்சி (அதற்கு அர்த்தம் என்ன என்பது பார்ப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்) ஒன்று போதும்.தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாழும் சூழலைச் சொல்ல. எவ்வளவு திருத்த முயற்சித்தும் அதே வன்முறையைத் தானும் கைக்கொள்ள வேண்டி வந்ததைக் குறித்த பெருந்துயரமும் ,இது இந்ததலைமுறையோடு அடியோடு ஒழியட்டும், அடுத்த தலைமுறை மீது இந்தக் கறைகள் படியவேண்டாம் என்ற ஆதங்கமும், சேர்ந்து "வேண்டாண்டா, பசங்களைப் படிக்க வெய்யுங்கடா" என்னும்போது கமல் சொல்ல வந்த message சொல்லப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன்

ஜெயஸ்ரீ said...

// தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் ஷா ருக் கானின் மழலைத் தமிழில் ஓடிக்கொண்டே பேசுவதாக அமைத்திருந்ததால் சுத்தமாக கவனிக்கப்படாமல் போனது.//

ஹே ராம் போன்ற படங்கள் கூர்ந்து பார்க்கப்பட வேண்டியவை. கமல் தனது துப்பாக்கியைத் தேடி வருவதைத் தொடரும் காட்சிகளை, பார்ப்பது திரைப்படம் என்ற உணர்வையும் மீறிய பதைபதைப்புடனேயே பார்த்துக்கொண்டிருந்தேன். பார்த்து முடித்தபின்பும் ஷாருக்கானின் மழலைத்தமிழ் காதில் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது. சிறிதுநேரமே இருந்தாலும் அந்தக் காட்சிகள் ஆழமானவை.ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமலில் இருக்கும் போது கலவரப்பகுதியில் சாகேத்ராம் (கமல்) நுழையும்போதே சூழல் அவன் கையை மீறிப் போய்விட்டது. சற்றும் எதிர்பாராவிதமாக தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள் அவனைப் புரட்டிச் செல்கின்றன.

// தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த முஸ்லீமின் சாவைப் பார்த்து, யோசிக்கத் தொடங்கி மனம் மாறும் முக்கியமான பகுதியை சுருக்கமாகக் காண்பித்தது. கதையின் முக்கியமான வாதப் பிரதிவாதம் //

நண்பனின் சாவு மனதை மாற்றியது என்று அவ்வளவு எளிதாக கதையை முடித்துவிட முடியாது. அடுக்கடுக்காக நடந்த நிகழ்வுகளும் தொடர்ந்த நண்பனின் இறப்பும் சாகேத்ராமில் ( நம் மனத்திலும்) ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம். அதற்குப் பிறகு ஒரு சராசரி வாழ்வு வாழவே முடியாமல், மனநிலை பிறழ்ந்தவனைப் போலவே இருந்தான் (அவன் இறந்தபின் பேரன் அவரைப்பற்றி சொல்லும் காட்சி).

இன்னும் ஒன்று- தன் துப்பாக்கியைத் தேடி ஸோடா தொழிற்சாலையில் நுழைந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்திற்கும், பல கொலைகளுக்கும் காரணமாகிவிடுகிறான். அவையனைத்தும் விடாமல் வாழ்நாளெல்லாம் நிழலாகத் துரத்துகின்றன.

அவன் காந்தியை கொல்லும் முயற்சியை கைவிட்டபின் மற்றொருவனால் அதே போல் காந்தி கொல்லப்படுகிறார்.

இந்தத் திரைப்படம் சொல்லும் செய்திகள் பலப்பல. விடுதலையைத் தொடர்ந்து நாடு பிரிக்கப்பட்ட நேரத்தில் இருந்த சமூக, அரசியல் சூழல் அற்புதமாகப் காட்டும் திரைக்கதை.

திரைப்படம் பார்வையாளன் மேல் ஏற்படுத்தும் தாக்கம் இவை(மற்றும் பல காட்சிகள்) அனைத்தின் combined effect.


ஏதோ ஒரு பேட்டியில் கமலோ (வேறு ஒரு பிரபலமோ) சொல்லியிருந்ததுபோல ஹே ராம் ஒரு தமிழ்ப்ப்டமுமல்ல, ஆங்கிலப்படமுமல்ல அது ஒரு multi-lingual movie.

சுதந்திரத்துக்குப் பின் வட இந்தியாவில் நடந்த கலவரங்களையும் ஓடிய ரத்த ஆற்றையும் நம்மில் பெரும்பாலோர் புத்தகங்கள் மூலமாகவே அறிவோம். நேரடி அனுபவம் நம்க்கோ நம் முந்திய தலைமுறைக்கோ இல்லை. திரைப்படத்துடன் பலருக்கு ஒன்ற முடியாமல் போனதற்கு இது காரணமாக இருக்கலாம் (படத்தில் ஒரு கதாபாத்திரம் சாகேத்ராமிடம் சொல்வது. நீ ஒரு south Indian ,உனக்கு -இந்தக் கொடுமைகள் புரியாது)
.

பினாத்தல் சுரேஷ் said...

ஜெயஸ்ரீ,

இப்போதுதான் நான் எதிர்பார்த்த திசையில் விவாதம் சூடுபிடிக்கிறது;-)

நீங்கள் சொல்வதை முழுவதும் ஒப்புக்கொள்கிறேன். தேவர் மகன், ஹே ராம் இரண்டும் மிக நல்ல, நுண்ணிய பார்வைக்குட்படுத்தக்கூடிய, திரைக்கதை இயக்கங்கள் மட்டுமின்றி வசனங்களிலும் உயர்ந்த தரமான படங்களே. அவை சொல்ல வந்த விஷயத்தைச் சரியாக சொல்லவில்லை என்பதும் என் குற்றச்சாட்டு அல்ல.

ஒவ்வொரு ப்ரேமையும் கூர்ந்த கவனத்துடன் நோக்கும், மொழிப்பிரச்சினைகளையும் தாண்டி வசனங்களையும் பாடி லேங்குவேஜையும் புரிந்துகொள்ளும் ரசிகர்களுக்கு இவ்விரண்டு படங்களுமே விருந்துதான்.

வருத்தத்துக்குறிய விஷயம், நம் பெரும்பான்மை மக்கள் அவ்வாறு இல்லாததுதான். தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றுகிறது என எடுத்துக்கொள்ளப்பட்டது எவ்வளவு முரணான விஷயம்? படம் வெற்றியடைந்தது எனக்கு மக்களின் ரசனை உயர்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், எந்த விஷயங்களுக்காக ரசிக்கப்பட்டது என்பது குழப்பத்தையும் கொடுத்தது.

நான் சொல்லவந்தது என்னவென்றால், நேர்க்கோடுபோல ஒரே விஷயத்தை ஒரே கோணத்தில் சொல்லும்போது ஏற்படும் தாக்கம் (எ கா: வேதம் புதிது), கடைசி வரியில் மாறும் இப்படிப்பட்ட திரைக்கதைகள் கொடுப்பதில்லை என்பதே. சிறுகதையின் கடைசிவரி முரணை ரசிப்பவர்கள் வேறு வகை, 30 முறை மூன்றாம் பிறை பார்த்தும் கிளைமாக்ஸ் ஒருமுறை கூட பார்க்காத என் உறவின கமல் ரசிகர்கள் வேறு வகை..

என எனக்கே தெரிந்திருக்கும்போது, கமலுக்குத் தெரிந்திருக்காதா என்பதுதான் என் கேள்வி.

ஹே ராம் கடைசிக்காட்சிகளை, அதன் வடிவமைப்பை முழுவதும் புரிந்துகொள்ள எனக்கு மூன்று முறை பார்க்கவேண்டியிருந்தது. அந்த அளவு பொறுமை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியுமா என்பது இன்னொரு கேள்வி.

ஜெயஸ்ரீ said...

//தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றுகிறது என எடுத்துக்கொள்ளப்பட்டது எவ்வளவு முரணான விஷயம்? படம் வெற்றியடைந்தது எனக்கு மக்களின் ரசனை உயர்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், எந்த விஷயங்களுக்காக ரசிக்கப்பட்டது என்பது குழப்பத்தையும் கொடுத்தது.//

நம் மக்கள் வெகு எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அதனால்தான் நீங்கள் பதிவில் சொன்னதுபோல் "ஒரு ஆத்திரம் பொறந்தா அப்ப இவன் யாருன்னு தெரியும்" எனச் சூளுறைத்துச் சண்டை போடும் "தமிழச்சி பால் குடிச்சவன்" கொடுத்த தாக்கத்தை கதையின் மூலக்கரு ஏற்படுத்தவில்லை (இது திரைப்படத்தைப் பார்த்தவர்களில் 50% மக்களுக்கு).

பொதுவாக கமல் படங்கள் இர_ண்டுவகைப்படும். ராஜ பார்வையில் தொடங்கி , ஒரு சிறந்த படைப்பாளியாக மனதில் மலர்ந்த கதைக் கருவை வெகு சில compromise களுடன் எடுக்கப்பட்டவை. இவற்றில் பல வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் மிகச் சிறந்த படைப்புகள். மூன்றாம் பிறை, நாயகன், குணா, மகாநதி , தேவர் மகன், குருதிப்புனல் அன்பே சிவம், ஹே ராம் . உலக அளவில் பேசப்படும் தகுதி வாய்ந்தவை.

மற்றது மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை ஷ-ண்முகி போன்ற ஜனரஞ்சகமான படங்கள். வணிகரீதியாக வெற்றி பெற்றவை.

//தேவர் மகன் படம் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றுகிறது என எடுத்துக்கொள்ளப்பட்டது எவ்வளவு முரணான விஷயம்? படம் வெற்றியடைந்தது எனக்கு மக்களின் ரசனை உயர்ந்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், எந்த விஷயங்களுக்காக ரசிக்கப்பட்டது என்பது குழப்பத்தையும் கொடுத்தது.//

நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக்கொள்கிறேன். தேவர் மகன் வணிகரீதியாக வெற்றி பெறுவதற்கு கதையின் climax ஓ ஆதார ஸ்ருதியோ கமல் சொல்ல வந்த செய்தியோ காரணமில்லை. (ஆனால் " நாயகன்" இன் வெற்றிக்கு இவைதான் காரணம். கவனித்திருக்கிறிர்களா? அப்படி அரிதாகவே அமையும்)

வணிகரீதியான வெற்றி மட்டுமே ஒரு திரைப்படத்தின் வெற்றியா ? அப்படிப் பார்த்திருந்தால் சத்யஜித் ரே யால் உலகப் புகழ் பெற்ற "பதேர் பஞ்சாலி" யை யும் அதைத் தொடர்ந்து வந்த படங்களையும் எடுத்திருக்க முடியுமா? அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகள் காலியாக இருந்ததாகப் படித்திருக்கிறேன். தற்போது உலகெங்கிலும் அவரது படங்கள் இல்லாத திரைப்படக் கல்லுரிப் பாடத்திட்டங்கள் இல்லை. அமெரிக்காவில் உள்ள பல நூலகங்களில் உலகப் புகழ் பெற்ற மற்ற நாட்டுத் திரைப்படங்களின் DVD பகுதியில் "பதேர் பாஞ்சாலி" இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

ஜெயஸ்ரீ,

இப்போது விவாதம் திசை மாறுகிறது. வணிகரீதியான வெற்றிதான் நல்ல படத்துக்கு அடையாளமா என நீங்கள் கேட்கும் கேள்வி என்னைப்பார்த்து என்றால் மன்னிக்கவும், விவாதம் குளோஸ்!- எனக்கும் அதே கருத்து என்பதால்.

எனக்குப் பிடித்த படங்களை பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனை வைத்து முடிவு செய்வதில்லை. ஹே ராம் மாபெரும் தோல்வியாக இருந்தாலும் நல்ல படம்தான், மன்மதன் பெருவெற்றி பெற்றாலும் குப்பைதான்.

//(இது திரைப்படத்தைப் பார்த்தவர்களில் 50% மக்களுக்கு)//

சதவீதத்தை ஒப்புக்கொள்ளமுடியவில்லை, அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். என் பதிவே இப்படிப்பட்ட மக்களுக்கு தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கம் குறித்ததே தவிர, உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி அல்ல.

நாயகன் படத்தைப்பற்றி தொடரலாமா? ஆதார ஸ்ருதி விலகவில்லை என நான் நினைக்கவில்லை. "கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்" என்ற கிளைமாக்ஸ் ஸ்ருதி படம் நெடுகிலும் வந்திருக்கிறது என்றா கருதுகிறீர்கள்?

ஜெயஸ்ரீ said...

//நான் சொல்லவந்தது என்னவென்றால், நேர்க்கோடுபோல ஒரே விஷயத்தை ஒரே கோணத்தில் சொல்லும்போது ஏற்படும் தாக்கம் (எ கா: வேதம் புதிது), கடைசி வரியில் மாறும் இப்படிப்பட்ட திரைக்கதைகள் கொடுப்பதில்லை என்பதே//

வேதம் புதிதில் எடுத்துக்கொண்ட theme சற்று எளிமையானது. எல்லாருக்கும் ஏற்கனவே நன்றாகத் தெரிந்தது. அதுவும் அல்லாமல் ஒரு universal appeal and acceptance உள்ளது. அங்கே கதை நேர்க்கோட்டில் பயணித்து கடைசியில் so, moral of the story is என்பதுபோல் முடிப்பது எளிது.

ஆனால் கமல் எடுத்துக்கொண்ட கதைக்களன், பின்புலம் சிக்கலானது. அந்த சமூகத்தின் பல்வேறு பரிணாமங்களையும் பார்வையாளனுக்கு அறியத்தருவது முக்கியமாகிறது.

//கடைசி வரியில் மாறும் இப்படிப்பட்ட திரைக்கதைகள் //

கடைசிவரியில் யாரும் மாறுவதில்லை. மாற வேண்டும் என்ற ஆவலும், மாறிவிடும் என்ற நம்பிக்கையும் மட்டுமே இருக்கின்றன.

//என் பதிவே இப்படிப்பட்ட மக்களுக்கு தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கம் குறித்ததே தவிர, உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உணர்வுகளைப் பற்றி அல்ல. //

நம் மக்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதை மனதில் கொண்டு கமல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். ஆனால் சிலர் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை பார்க்கும் பெரும்பாலான மக்கள் மனதில் ஏற்படுத்தவேண்டுமென்றால் அதற்காக மிகவும் முனைந்து திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் படத்தின் தரம் சற்றுப் பாதிக்கப்பட்டிருக்குமோ என்று ஒரு ஐயம்.

தேவர் மகனில் ஒரு படைப்பாளியாக கமலின் படைப்புத் திறன் முழு வீச்சில் வெளிப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட படங்கள் பெரும்பான்மை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ( நான் "பதேர் பாஞ்சாலி" உதாரணம் சொன்னது இதற்காகத்தான்). சில படைப்புகள் இப்படித்தான் அமைந்துவிடுகின்றன. தன் மனதில் உள்ள வடிவத்தை அதிக சமரசம் (compromise) இல்லாமல் எடுக்க ஆசைப்பட்டிருக்கலாம்.

தவறு கமல் மீதும் இல்லை, பார்வையாளர்கள் மீதும் இல்லை . இதுபோல் இன்னும் பல படங்கள் எடுக்கப்படவேண்டும். கல்வியறிவும், தொழில்நுட்பமும் வளர வளர மக்களின் ரசனையும் மேம்படும்.

ஹே ராம் இன்னும் சில மக்களை சென்றடைந்திருக்க வேண்டுமானால் அதை இரண்டு படங்களாக எடுத்திருக்கவேண்டும். அதன் கதைக்களனும், சரித்திரப் பின்புலமும் நம் மக்களுக்கு அதிகப் பரிச்சயம் இல்லாதவை. தான் சொல்லவந்த விஷயம் பெரும்பானமை மக்களை சென்றடையாது என்பதும் வணிகரீதியான அதன் தோல்வியும் கமல் ஓரளவு எதிர்பார்த்திருக்ககூடிய ஒன்றே. ஆனால் ஒரு படைப்பாளியாக கமலுக்கு முழு வெற்றி. இப்படிப்பட்ட படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.

நான் சொல்ல நினைப்பது இவ்வளவுதான்.


கடைசியாக -அன்பே சிவம் படத்தில் நேரடியாகச் சொல்லிய செய்தியும் பெரும்பான்மை மக்களைப் போய்ச் சேரவேயில்லையே? இங்கே தவறு நிச்சயமாக கமலுடையது இல்லை.

படைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் அவசியம் வேண்டும். தான் மனதில் உள்ள கலை வடிவத்தை ஒரு customized package போல கொடுப்பது மிகக் கடினம்.

Anonymous said...

Excellent discussions! Jaysri and Suresh!

Regarding Hey Ram, yes it was a very complex film and Kamal has portrayed many things symbolically which many in the audience failed to even notice. That's why Sakethram's change of mind appears so sudden.

Sakethram's attitude begins to change after the incidents at the soda factory and the hospital and subsequently his meetings with Gandhi. But his mind is always oscillates.

The scene at the hospital where Abhyankar has been admitted is a good one. Sakethram tries to confess to Mythili but he is interrupted by Maharaja and then he goes on to meet Abhyankar and promises towards their "Mission". Had the Maharajah not come at that point, the story might've ended there.

Sakethram's consciousness does chase him till his last breath. Towards the end when he awakens and he is found in the drain of a construction sight and he hears gunshots being fired. His grandson answers that's due to Hindu-Musilim riots. Sakethram painfully asks "innuma??" This is a wonderful scene. I think this scene was missed by many due to technical constraints such as live sound recording incorporated in the movie.

The film can appreciated more if the viewer has a better knowledge of the history of that period.

For an average viewer, the film appears to be dragging and confusing due to its multi lingual narration and symbolical representations. The screenplay is one of the best ones but it gives the necessary impact only to a knowledgeable viewer. The film needs to be watched very carefully and only then one can understand it.

As Jaysri said, the background of the movie is very complex and one has to know the history of Indian independence to appreciate the movie.

I hope the discussion continues.

With regards,
Ramji

இலவசக்கொத்தனார் said...

நல்ல விவாதம்தான். இப்படி அலசி ஆராய்ந்து துவைத்து காய போட்டு இருக்கீங்களே ரெண்டு பேரும். இதுக்கெல்லாம் மத்தவங்க வந்து கருத்து சொல்ல மாட்டேங்கறாங்களே.

பினாத்தல் சுரேஷ் said...

ஜெயஸ்ரீ,

//படைப்பாளிக்கு படைப்பு சுதந்திரம் அவசியம் வேண்டும். தான் மனதில் உள்ள கலை வடிவத்தை ஒரு customized package போல கொடுப்பது மிகக் கடினம்.//

உண்மை, cant agree more!

ராம்ஜி,

வாங்க வாங்க!

சாகேத ராமனிலும், சக்திவேலுத்தேவரிடமும், தோழர் நல்லசிவத்திடமும் ஒரு பெரும் ஆளுமையை - முத்து, படையப்பா போன்ற எதையும் சாதிக்கும் தன்மையை எதிர்பார்ப்பது வீண், ஓரளவு அந்த ஆளுமை கொண்ட சக்திவேலுத்தேவரும் நாயக்கர் பாவாவும் வென்றார்கள்! அது இல்லாத கிருஷ்ணசாமியும், சாகேதராமனும் தோழர் நல்லசிவமும் தோற்றார்கள்!

சாகேதராமன் ஒரு எடுப்பார்கைப்பிள்ளை என்பது முதல் காட்சிகளிலேயே (தண்ணி அடிப்பது) கோடி காட்டப்பட்டிருக்கும். மிகவும் குழப்பமான மனநிலையிலேயே, ஏன் என்ற கேள்விகளைக் கேட்கவேண்டும் என்ற அறிவு இருந்தாலும், அதையும் தாண்டி தூண்டப்பட்ட உணர்ச்சிகள் - அற்புதமான பாத்திரப்படைப்பு, அதைவிட அற்புதமான நடிப்பு.

நான் குறை கூறியதெல்லாம் திரைக்கதை அமைப்பு, யாருடைய கன்ஸம்ப்ஷனுக்காக தயார் செய்யப்பட்டது போன்றவற்றையே.

கொத்தனார், நீங்க பேசவேணாம்னு யார்ராச்சும் தடை போட்டாங்களா என்ன?

ஜெயஸ்ரீ said...

//நல்ல விவாதம்தான். இப்படி அலசி ஆராய்ந்து துவைத்து காய போட்டு இருக்கீங்களே ரெண்டு பேரும் //


-))))))

ஜெயஸ்ரீ said...

ராம்ஜி,

நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நானும் மிகவும் ரசித்தேன்.

I agree 100% with your views.

Thanks again

Anonymous said...

Thanks Suresh..
//சாகேதராமன் ஒரு எடுப்பார்கைப்பிள்ளை என்பது முதல் காட்சிகளிலேயே (தண்ணி அடிப்பது) கோடி காட்டப்பட்டிருக்கும்.//

Well said. This is a valid point. Hey Ram has many of such logical connections. Another example is the "first person singular" (as told by his grandson) style of narration. There is a logical connection to every scene and one has to watch it closely.

//நான் குறை கூறியதெல்லாம் திரைக்கதை அமைப்பு, யாருடைய கன்ஸம்ப்ஷனுக்காக தயார் செய்யப்பட்டது போன்றவற்றையே.//

I understand your viewpoint. As you said to an average viewer many things will go over the head and it failed to give the necessary impact.

The audience should begin to appreciate finer nuances of such films. May be Kamal overestimated his audience or wanted to improve their appreciation level of cinema. Or may be people shy away from films that make them "think".

One common excuse which I came across among my circle of friends was that "people go to movies for relaxation. What is the point in giving such complex stories and make it a stressful experience?"

With regards to Devar Magan, I've read somewhere in the blogosphere that it is an adaptation of Godfather. A very good adaptation indeed. No where one could make it out while watching the movie. It becomes evident only when one draws parallels from Godfather. But Devar Magan is highly Indianised and adapted very well. A good example of how remakes should be made. But however, the film and Kamal were targetted for the wrong reasons. That's the sad part. Again, people faithfully leave out the message or moral of the film.

But such attempts should never dishearten film makers like Kamal from making such films. Some day these films especially Hey Ram will be hailed for their script and making.

With regards,
Ramji

ஜெயஸ்ரீ said...

//சாகேத ராமனிலும், சக்திவேலுத்தேவரிடமும், தோழர் நல்லசிவத்திடமும் ஒரு பெரும் ஆளுமையை - முத்து, படையப்பா போன்ற எதையும் சாதிக்கும் தன்மையை எதிர்பார்ப்பது வீண், ஓரளவு அந்த ஆளுமை கொண்ட சக்திவேலுத்தேவரும் நாயக்கர் பாவாவும் வென்றார்கள்! அது இல்லாத கிருஷ்ணசாமியும், சாகேதராமனும் தோழர் நல்லசிவமும் தோற்றார்கள்! //

well said!!

சுரேஷ், ஒரு விண்ணப்பம்

உங்கள் பின்னூட்டப்பகுதியில் font size சிறிது அதிகரிக்க முடியுமொ? படிப்பதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜெயஸ்ரீ.

அதிகப்படுத்துகிறேன்.. அடுத்த வெள்ளிக்கிழமைதான் முடியும்;-((

Anonymous said...

நன்றி ஜெயஸ்ரீ.

இந்த படத்தினை நான் பலமுறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் சில புதிய விஷயங்கள் புலப்படுகின்றன. நான் மிகவும் ரசித்த படம்.

ஹே ராம் போன்ற படங்களை ரசிப்பதற்கு audience பங்களிப்பு மிக அவசியம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் spoon feed செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.

இந்த அளவிற்கு அதிக detailing உள்ள படத்தினை பார்த்து பழக்கமில்லாதது கூட அதன் தோல்விக்கு ஒரு காரணமாயிருக்கலாம்.

ஜோ/Joe said...

சுரேஷ்,
விவாதத்துக்கு அழைத்ததற்கு நன்றி .இங்கே நான் கமல் ரசிகன் என்ற முறையில் கருத்து சொல்லவோ அல்லது அவரை தற்காத்துப் பேசவோ வரவில்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.

தேவர் மகன் திரைப்படம் சாதிக்கலவரத்தை தூண்டிவிட்டது என்பது அந்த படம் வெளியான காலகட்டத்தில் நான் அறியாதது .சமீபத்தில் தான் இதைப்பற்றிய விவாதங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.

தேவர் மகன் படம் ஒரு சமுகத்தில் உள்ள நல்ல,தீய வழக்கங்கள் ,வன்முறைப் போக்கு ,வாழ்வியல் முறை ,அவர்களின் இருமாப்பு ,வீண் தற்பெருமை இவற்றை விமர்சனப் பார்வையோடு சொன்ன படம் .அப்படத்தில் நாயகனும் ,வில்லனும் ஒரே சமுகம் தான் ."போற்றிப் பாடடி" பாடல் அச்சமுதாயத்தை புகழ்வதால் அது கலவரத்துக்கு காரணமானது என்பது ஒரு வேதனையான உண்மை தான் .ஆனால் அதற்கு கமல் தான் காரணம் என்பது அபத்தம் என்பது என் கருத்து.

அதே படத்தில் "காட்டுமிராண்டிகள்" என்று நாயகன் தனது சமூகத்தை சுயவிமரிசனம் செய்கிறார் .அதற்காக கமல் தேவர் சாதியை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதாக முதலில் யாராவது கிளப்பி விட்டிருந்தால் ,கமலுக்கு தேவர்களின் விரோதி என்ற பட்டம் கிடைத்திருக்கும் .இப்போது அதிலுள்ள ஒரு பாடலை கலவரத்துக்கு காரணமாக சொல்கிறார்கள் .அந்த பாடலில் யாரையும் இகழ்வதாக இல்லை .சரி..ஒரு சமூகத்தை அச்சமுதாயமே புகழ்ந்து பாடுவதாக வருகிறது .இது என்ன இதற்கு முன் நடவாததா ? அதனால் ஒரு கலவரம் உருவாகும் என்றால் கலவரம் செய்தவர்களின் தவறேயன்றி அது எப்படி கமலின் தவறாகும்?

சோ இயக்கிய 'முகமது பின் துக்ளக்' படத்தில் "அல்லா அல்லா ..நீ இல்லாத இடமே இல்லை" என்ற பாடல் வருகிறது .இதை ஒரு முஸ்லீம் ஒலி பரப்பப்போய் ,மாற்று மதத்தினர் சினம் கொண்டு கலவரம் வந்ததென்று வைத்துக்கொள்வோம் .அதற்காக சோ இஸ்லாமை தூக்கிப் பிடித்தார் ,அவர் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என்று யாராவது சொன்னால் ,அது எவ்வளவு அபத்தமோ ,கமல் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அவ்வளவு அபத்தம்.

விருமாண்டியிலும் தேவர் சாதியை பற்றித் தான் வருகிறது என்றும் சொல்கிறார்கள் .விருமாண்டியிலும் நாயகன் வில்லன் இருவரும் ஒரே சாதி தான் .ஆனால் நெப்போலியன் கதாபாத்திரம் இந்த இருவரையும் விட நற்குணமுள்ள ,கொடுத்த வாக்கை காக்க உயிர்விடும் பாத்திரமாக காண்பிக்கப் படுகிறது .அந்த பாத்திரம் ஒரு தெலுங்கு சமுதாயத்தை சார்ந்ததாக காட்டப்படுகிறது .உடனே கமல் அந்த தெலுங்கு சமுதாயத்தை தூக்கிப்பிடிப்பதாக அர்த்தமா ?

திரைப்படத்தின் கதாபாத்திரங்களை பொதுமைப்படுத்தி ஒருவரை இப்படி காட்டிவிட்டால் ,அவர் சார்ந்த எல்லாவற்றையும் படைப்பாளி மொத்தமாக அப்படி காட்டவே விரும்புகிறார் என்று வாதிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை .இது கமல் படங்களுக்கு மட்டுமல்ல .

 

blogger templates | Make Money Online