Oct 17, 2005

சந்திரமுகி - அதிர்ச்சி வெற்றி!

சந்திரமுகி - வெள்ளி விழா கொண்டாடி விட்டது. இனிமேல் என் விமர்சனத்தால் படத்தின் வெற்றி வாய்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. (டேய்! அடங்க மாட்டே?)

இருந்தாலும், படம் பார்த்த புதிதில் தமிழ்மணமே சந்திரமுகி விமர்சனங்களால் நிரப்பப் பட்டிருந்தது. "ஒரு ரஜினி படம் கூட பார்க்க முடியாத" வர்களைப்பற்றிய கருத்துகளும், படம் பார்த்த போது ரசிகர் அடித்த விசில்கள், அமெரிக்காவிலும் ஸ்டார் கட்டிய செய்திகள் - இவையே பிரதானமாக இருந்தன. சுரேஷ் கண்ணனின் "சந்திரமுகியும் சாகடிக்கப்பட்ட யதார்த்தங்களும்" பொறாமைப் பார்வையாகத் திரிக்கப்பட்டது. தீவிர ரசிகரே ரிஸ்க் அனாலிஸிஸ் செய்தாலும் "தமிழணங்கி"ல் மாட்டிக்கொண்டார்.

இப்படிப்பட்ட சூழலில் பினாத்தல்களின் கருத்துக்கா மதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என அமைதியாய் இருந்துவிட்டேன்.

இப்போதோ படம் வெள்ளிவிழா கொண்டாடிவிட்டது. உலக சினிமாத் தர வரிசையில் அழிக்க முடியாத 23 ஆம் இடம் பெற்றுவிட்டது (இல்லைன்னு சொன்னா என்ன ஆவீங்க தெரியுமா?)

படத்தைப் பார்த்து, புகழ்ந்து விமர்சித்த அனைவரையும், படத்தை மறுபடி பார்க்க வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் விமர்சனத்தையும் மறுபடி ஒருமுறை படியுங்கள்:-)

எனக்கு பல காட்சிகளில், ஏன் அந்தப் பெரியவரை இப்படி வீணாகக் கஷ்டப் படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. குறிப்பாக கொஞ்ச நேரம் பாடல்! நாயகியுடன் ரொமான்டிக்காக காட்சிகள் அமைக்க முடியாத (நல்ல வேளை!) தோஷத்தால் துர்காவை தர்கா என அழைக்கும் நகைச்சுவை! ஏன் தான் இப்படிப் பட்ட ஒரு இசை ஞானி (அத்திந்தோம் புகழ்) இசையை வெறுப்பவராக சித்தரிக்கப்படுகிறார்? அமெரிக்காவின் பிரபல நம்பர் ஒன் மனோதத்துவ நிபுணரின் குருவை மிஞ்சிய சீடன் ஏன் அவ்வளவு அவமானத்தையும் தாங்க வேண்டும்? சாதாரணமாகவே சிரிக்க வைக்கக்கூடிய வடிவேலுவும், பல படங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்த ரஜினியும் சேர்ந்து ஏன் இரட்டை அர்த்த நகைச்சுவையை நம்ப வேண்டும்?

படம் வந்த புதிதில், ப்லரும் வியந்த விஷயம் ரஜினி பாத்திரம் கதையைச் சுற்றி அமைக்கப் பட்டிருப்பது. எனக்கு கதையே எதைச் சுற்றி அமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை! கொக்கை பறக்க வைத்து, கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு, அண்ணனோட பாட்டையும் பாடி முடித்தபிந்தான் இயக்குநருக்கு ஐயையோ இன்னும் 15 நிமிடம் தான் இருக்கிறது என உறைத்து கதை பக்கம் பார்வையை செலுத்தியுள்ளார். அதற்கு முன், ஒவ்வொரு அஞ்சு நிமிஷத்துக்கும் ஒருமுறை அந்த அரண்மனையை ஐந்து ஆங்கிளில் பலத்த BGM உடன் காட்டுவதே கதைக்கு திரைக்கதாசிரியரின் கடமை!

ஜோதிகாவின் நடிப்பும் பெரிதாக சிலாகிக்கப் பட்டது! மறுக்கவில்லை. ஆனால், அதற்கு கொடுக்கப்பட்டதே 10 நிமிடங்கள்தானே!

எனக்குத் தெரிந்தவரை, சந்திரமுகியின் மாபெரும் வெற்றி, என்னைவிட, ரஜினிக்கும், வாசுவிற்கும், பிரபுவிற்கும் ஏன் ரஜினி ரசிகர்களுக்குமே பெருத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்!

14 பின்னூட்டங்கள்:

ஜோ/Joe said...

இதுவா பெனாத்தல்? அக் மார்க் உண்மை.

சின்னவன் said...

யானை மேலேயோ, குதிரை மேலேயோ ஏறி வந்து உம்மை போட்டுத்தாக்க போறாங்க..
ஒட்டகம் இருக்கா பக்கத்தில், தப்பி ஓட ??

ஏஜண்ட் NJ said...

என்ன ஒரு தீர்க்கமான பார்வை!

- comment posted by: NJ.

CrazyTennisParent said...

சுரேஷ், சரியாக சொன்னீர்கள். தூரத்தில் இருக்கிற தைரியம் தானே

ramachandranusha(உஷா) said...

பினாத்தலு, நா கூட ஜோசியம் சொன்னேயா, மணிசித்தரதாழு, ஈரோயின் சோபனா தானே மெயின் ரோலு, ஈரோ மோகன்லால்
பாதி படத்துக்குமேலே தானே வருவாருன்னு, அத போயி ரஜினி படம் ஆக்கப் போறாங்களே, பாபாக்கு ஆன கதிதான்னேன். ஆனா எடுத்தவுடனே தலைவரு காலை தூக்கி ஆசிர்வாதம் செய்யும் தோரணைய் பாத்தவொடனே புரிஞ்சிடுச்சு, வாசு நம்ம தமிழ் ரசிகருங்க மனச நல்லா புரிஞ்சி வெச்சிருக்காருங்கோ.படம் பாக்கலை, ஞாயிற்றுகிழமை சன் டீவி பார்த்தேன்.

Suresh said...

உண்மையை தைரியமாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்...என்னைக்கேட்டால் 'பாபா' இதைவிட எவ்வளவோ மேல்..

ஜிக்கியின் பாவா said...

இது போன்ற பிணாத்தலான விமரிசனம் எதுவுமில்ல. உலகமே இந்த படத்தை கொண்டாடுது, நீ என்னாடானா வீணா போன விமர்சனம் எழுதி நேரத்தை போக்கடிக்கிறே. பிளாக்குலே எழுதனுமுனா ஆயிரம் விஷயம் இருக்கு.

கூத்தாடி said...

//தோஷத்தால் துர்காவை தர்கா என அழைக்கும் நகைச்சுவை! ஏன் தான் இப்படிப் பட்ட ஒரு இசை ஞானி (அத்திந்தோம் புகழ்) இசையை வெறுப்பவராக சித்தரிக்கப்படுகிறார்//

இந்த ரஜினி -நயன் காட்சிகள் இன்னொரு மலையாளப் படத்திலிருந்து தூக்கியது ஆறாம் தம்புரான் ன படத்தில் மோஹன்லால் & மஞ்சு வாரியர் பண்ணுன சீன் அது.அந்தப் படத்தில் இது o.k ஆக இருந்தது .இதில் நல்ல காமடி ...

மலையாள ஒரிஜினல் பாத்தீங்கண்ணா எவ்வுளவு காப்பி ,அதையும் எப்படி சொதப்புவதுண்ணு தெரியும்

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜோ, சின்னவன், ஞானபீடம், முத்து, உஷா, லண்டன் * சுரேஷ், மூதேவி மற்றும் கூத்தாடி.

முதல்ல நானும் அடி வாங்கப் போறேன்னுதான் நெனச்சேன். இங்கே சந்திரமுகியால் பாதிக்கப்பட்டவர் கூட்டமும் இவ்வளவு இருக்குன்னு இப்பதானே தெரியுது!

மூதேவி, நம்ம விமர்சனம் பினாத்தல்தான் - அதுதான் ப்ளாக் தலைப்புலேயே இருக்கே. படம் எனக்குப் போட்டியா இருப்பதால்தான் பொறாமையில் இந்தப்பதிவு:-)

Unknown said...

எது எப்படியோ...
ஒரு பொழுதுபோக்கு ரசிகனுக்கு... வர்ற சின்னப் பயபுள்ளைகள் எல்லாம் நூறு பேரை அடிக்கும் போது ரஜினியை ஏற்கனவே அப்படிப் பாத்த மக்கள் திரும்பப் பாத்துக்கிட்டாங்க...

அதுக்காக மணிச்சித்ரதாழுவை எல்லாமா இழுக்கிறது? ஏன்யா சிவாஜி பிலிம்ஸ் என்ன தர்மச் சத்திரமா, நல்ல படம் எடுத்து நட்டம் அடையிறதுக்கு?

கொழுவி said...

அட நீங்கள் வேற.
உலகத்திலயே 23 ஆவது இடத்தில வசூல் அள்ளின படத்தைப்பற்றி இப்பிடிச் சொல்லிறியள். உலகம் முழுக்க நாலாயிரம் திரையரங்கில ஓடின படங்களே செய்யாத சாதனையை 400 திரையரங்குகளில ஓடின சந்திரமுகி செய்தது சாதனையில்லையா?
தமிழே தெரியாத எத்தனை லட்சம்பேர் இப்படத்தைப் பார்த்திருக்க வேண்டும்? இன்னும் ஓடிக்கொண்டிருக்கும இப்படம் விரைவிலேயே அதிகவசூலைப்பெற்ற டைட்டானிக்கை முறியடிக்க வேண்டுமென்று அசிகூறிப் பதிவைப் போடுவதை விட்டுவிட்டு இப்படி எழுதுகிறீர்களே?
ரசினி படம் ரசிக்கத்தெரியாதவனெல்லாம் மனுசனாயா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி Pradeep மற்றும்கொழுவி.

//ரசினி படம் ரசிக்கத்தெரியாதவனெல்லாம் மனுசனாயா?// :-))))))))))))))))))))))))

Anonymous said...

Right on the target !!! why don't this guy retire with his bushels of money and leave us alone ?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இடுப்பைச் சித்தர், உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் எல்லாவற்றுக்கும் மேலே, இந்தப்பதிவுக்கு உயிர் கொடுத்ததற்கும்:-))

 

blogger templates | Make Money Online