Apr 13, 2006

மேதா பட்கரும் ராஜ்குமார் ரசிகர்களும் (13 Apr 06)

பாபா ஆம்தே, மேதா பட்கர் மற்றும் நர்மதா பச்சாவ் அந்தோலனின் அஹிம்சைப்போராட்டம் 19 நாட்கள் கடந்தும் எந்த முடிவுக்கும் வருவது போலத் தெரியவில்லை. ரோசா வசந்த்தின் பதிவைத் தொடர்ந்து பெடிஷனில் கையெழுத்துபோட்டு, தொடர்ந்த மின்னஞ்சல் ஊக்க, தனிப்பட்ட உண்ணாவிரதத்துக்கு நாளும் குறித்து, இரண்டு தொலைபேசி, பல மின்னஞ்சல்கள் என்று நானும் என் கடமை(?)யை ஆற்றிவிட்டேன் என்று சுயசமாதானப்படுத்தல் மட்டுமே செய்ய முடிகிறது.
 
லட்சக்கணக்கான கிராமவாசிகளின் நேரடி உயிர்ப்பிரச்சினை குறித்தான போராட்டம் கத்தியின்றி, ரத்தமின்றி நடைபெற்று வருகையில் அதற்கான ஊடக கவனம் சில தனிப்பட்ட வலைப்பதிவுகளாலும், மின்னஞ்சல்களாலும் மட்டுமே பெறப்படுவது மனதை வருத்துகிறது. செய்தித்தாள் பக்கங்களில் அதற்கு ஒரு மூலையில் மட்டுமே இடம் கொடுக்க முடிகிறது, தொலைக்காட்சி நேரத்தை "ஒண்டிக்கு ஒண்டி வறயா" சவால்கள் சாப்பிடுகிறது.
 
இதற்கு நேர் எதிராக மற்றொரு சம்பவம் ஊடக கவனத்தை மிக சுலபமாக ஈர்க்க முடிகிறது. ராஜ்குமார் மரணம் என்பது ஒரு வருந்தத்தக்க நிகழ்வுதான், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கும் அவர் ரசிகர்களுக்கும் "ஈடு செய்ய முடியாத" இழப்புதான் என்றாலும் அவருடைய ரசிகர்களால் தூண்டப்பட்ட வன்முறைக்கு யார் பொறுப்பு?
 
78 வயதான ஒருவர் இயற்கையான காரணங்களால் மரணமடைந்தால் அதற்கு தெருவில் செல்லும் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்படவேண்டும்? பெங்களூரில் பிழைக்க வந்த வேற்று மாநிலத்தார் ஏன் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளவேண்டும்? கடைகளை ஏன் அடைக்கவேண்டும்? சாலையோரம் ஏன் பதுங்கவேண்டும்?
 
இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாகவே எல்லாராலும் எண்ணப்படுகிறது, பல முன்னுதாரணங்களும் சுலபமாக எடுத்துவைக்கப்படுகின்றன. கட்சித்தலைவரை சிறையில் அடைத்தால் தான் தீக்குளிப்பு எனிருந்த கலாசாரம், பயணிகள் இருக்கும்/இல்லாத பேருந்துகளுக்குத் தீவைத்தல் என்ற பரிணாம வளர்ச்சி பெறுகிறது. என் தலைவன் இறந்தான் - எனவே எதிர்க்கட்சித் தலைவனின் சிலையை உடைப்பேன் எனஒரு கூட்டம் கூறியது. கிடைத்தது வாய்ப்பு என ஒரு கும்பல் தெருவெல்லாம் கொள்ளை அடிக்கிறது. தலைவி செத்ததற்கு ஒரு இனமே காரணம் என வாக்காளர் பட்டியல் எடுத்து குலக்கழுவல் செய்யப்படுகிறது. தலைவன் மரணத்துக்குக் காரணம் ஒரு மொழி என்று அந்த மொழி பேசுபவர்களை தேடி அடிக்கிறது ஒரு கூட்டம். எந்தக்கட்சியோ, எந்தத் தலைவனுமோ எந்த உச்ச நட்சத்திரமுமோ விதிவிலக்கில்லாமல் இவற்றை ஆதரிப்பது மட்டுமில்லாமல், அதிகக் கலவரங்களே தன் பலத்தை நிரூபிக்கும் என்று ஊக்குவிக்கவும் செய்கின்றன.
 
நான் ராஜ்குமார் நடித்த எந்தப்படத்தையும் பார்த்ததில்லை. அவர் மிகச்சிறந்த நடிகராக இருக்கலாம், திரைஉலகில் பல மைல்கற்களை எட்டியவராக இருக்கலாம். ஆனால் அவர் பலம் திரையில் மட்டும்தான் என்பது வீரப்பன் கடத்தலின் போது தெளிவாகி விட்டதுதானே? அவர் கடத்தப்பட்ட போதும் கலவரங்கள் வெடிக்க இருந்து, உயிருக்குப் பிரச்சினை வரலாம் என்ற எண்ணத்தில் அவர் உறவினர்களால் கலவரம் நிகழாமல் தடுக்கப்பட்டது எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
எனவே, கலவரம் நிகழாமல் தடுக்கும் சக்தி அவர் உறவினர்களுக்கு இருந்திருக்கிறது! இப்போதும் தடுத்திருக்கலாம், செய்யவில்லை.
 
தன் ஊர்த்தெருவில் கலவரம் நடக்கலாமா வேண்டாமா என்ற முடிவை சில செல்வாக்குள்ள மனிதர்கள் நிர்ணயிக்கிறார்கள், அவர்கள் போட்ட பிச்சையில் சாதாரண மக்கள் தெருவில் நடக்கிறார்கள்!
 
வாழ்க ஜனநாயகம்.

19 பின்னூட்டங்கள்:

Idly Vadai said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். என் பதிவிலிருந்து ஒரு சுட்டி கொடுத்திருக்கிறேன்.

லக்கிலுக் said...

பெரிய கொடுமை... இப்போ பெங்களூரில் தமிழ் பேசினால் உதைக்கிறான்களாம்... என் தலைமை அலுவலகம் அங்கு தான் இருக்கிறது... ராஜ் குமார் மண்டையை போட்டதுக்கு தமிழ் என்ன பாவம் செய்தது?

நாட்டுலே எவன் மண்டையைப் போட்டாலும் தமிழன் தலைய தான் உருட்டறாணுங்க.....

ROSAVASANTH said...

மிகவும் ஒப்புக் கொள்ள வேண்டிய பதிவு.

92 காவேரி 'கலவரம்', வீரப்பன் கடத்தல், மற்றும் மழை தன் கொடையை குறைத்துகொண்ட நேரமெல்லாம் வரும் காவேரி பிரச்சனை என்று பல நெருக்கடிகளின் போதும் பெங்களூரில் இந்த கொடுமைகளை கண்டதுண்டு. ஆனால் ராஜ்குமாரின் இயற்கை மரணமும் கூட மற்ற மொழியினருக்கு (குறிப்பாய் தமிழர்களுக்கு) நெருக்கடி ஏற்படுத்துவது அதிகப்படியாய் தெரியலாம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மீண்டும் சில நாட்களுக்கு தமிழ் சினிமாக்களை தமிழ் சேனல்களை தடை செய்தல் என்று எதுவும் தொடராமல் இருந்தாலே நாம் நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இட்லிவடை

நன்றி லக்கிலுக். நான் இதைத் தமிழன் / அல்லாதவன் எனப்பார்ப்பதை விட, ஒரு தனி மனிதனுக்காகக் கிளப்பப்படும் கலவரம் என்ற வகையிலேயே பார்க்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை அல்ல என்று கூறவில்லை, ஆனால் தமிழன் மட்டும்தான் பாதிக்கப்படுகிறான் என்று நினைக்கவில்லை. டர்பன் கட்டிய அனைவரும் 1984ல் பந்தாடப்பட்டதும் இதே அளவுகோலில் வரும் அல்லவா?

நன்றி ரோசா வசந்த். பிரச்சினை பெரிதாகாமல் இருப்பதும் பெரிதாவது சில தன்னலவாதிகளின் கையில் இருப்பதுதான் என்னை அதிகம் வருத்துகிறது. மற்ற கலவரங்களிலாவது (நான் நியாயப்படுத்தவில்லை)ஒரு பொதுநலம் சார்ந்த குறிக்கோள் இருக்கிறது. இதுபோன்ற கலவரங்களில் தன் பலத்தை நிருபிப்பது தவிர எந்த குறிக்கோளுமே இல்லை, பாதிக்கப்படுவது அம்மாநில மக்கள் உள்பட அனைத்து பொதுமக்களும்தானே.

முத்து(தமிழினி) said...

நல்ல பதிவு சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முத்து. கர்நாடகவாசி என்ற முறையில், உங்களிடம் இருந்து இன்னும் சற்று விரிவான (with first hand information) பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன்:-)

முத்து(தமிழினி) said...

மங்களூரில் கன்னட வெறியன்கள் கம்மி. இங்கு துளு தான் முக்கியமொழி.கொங்கணியும் உண்டு.

படிப்பறிவு அதிகம் உள்ள மக்களலாதலால் ஒரு பிரச்சினையும் பொதுவாக இல்லை.எனினும் இன்று கர்நாடகா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

(சமுதாய பிரச்சினைகளை நீங்கள் எழுதுவதை நான் விரும்புகிறேன்.)

ramachandranusha said...

நடிகர் ராஜ்குமார், தன் முழங்கால் முட்டி அறுவை சிகிச்சையை சென்னையில் தனியார் மருத்துவமமனையில் செய்துக் கெண்டார். அதற்கு தமிழக மருத்துவர்களின் உதவி தேவையாய் இருந்தது. இன்று திருமதி, ராஜ்குமார் அவர்களும், இரு மகன்களும் தங்கள் துக்கத்தை ஒதுக்கிவிட்டு,
கலவரத்தை நிறுத்துங்கள் என்று தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படி செய்தால் கலவரம் குறையலாம், செய்வார்களா?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முத்து, மங்களூர் பத்திரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியும். பெங்களூர் வலைப்பதிவாளர்கள் யாரும் இந்தப்பக்கமே காணோமே.. சமுதாயப்பிரச்சினைகளை எழுதலாம், ஆனால் நமக்குத் தொழில் கிண்டல்தானுங்களே, சில விஷயங்கள் கிண்டல் அடிக்கப்படுவது பலருக்குப் பிடிக்காதுங்களே..

நன்றி உஷா. நேரில் தூண்டிவிட்டு, பத்திரிக்கையில் வேண்டாம் என்றாலா நிற்கப்போகிறது? அதுபோல ஒரு பேட்டியை இன்று காலை சன் டிவியில் பார்த்ததாக ஒரு ஞாபகம்.

Dharumi said...

நாமெல்லோருமே 'இப்படி' வயித்தெரிச்சல் கோஷ்டிகளாக அரற்றிக்கொண்டேதான் இருக்க முடியுமா?

முத்து(தமிழினி) said...
This comment has been removed by a blog administrator.
முத்து(தமிழினி) said...

whether is intentional or unintentional i donot know...

தம்பி said...

அன்புள்ள பினாத்தலாரே

பிரபலமான இளையராஜா மற்றும் M.ஸ்.V இவங்க இசையை நக்கல் அடித்தது மன்னிக்க முடியாத குற்றம். அதுவும் உங்க குரல்ல பாடி இருக்கிங்க, இல்ல இல்ல பேசி இருக்கிங்க. இருந்தாலும் தேவா வை நல்லா புரிஞ்சி வச்சிருக்கிங்க. உங்க குரல் கானா பாட்டுக்கு பொருத்தமா இருக்கும். அப்படியே கோடம்பாக்கம் போனீங்கன்னா இப்போ புதுசா ஒரு ஆள் வந்துருக்காரே அவர ஓரங்கட்டிடலாம்.

உமா.கதிரவன்

பினாத்தல் சுரேஷ் said...

முத்து, என்ன சொல்ல வந்தீர்கள், அழித்துவிட்டீர்கள்? நான் படித்த வரை அதில் ஆட்சேபகரமாய் ஒன்றும் தெரியவில்லையே? இருந்தாலும் நீங்கள் அழித்துவிட்டதால் பதில் சொல்லவில்லை.

தருமி, வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள்.. வெறுப்புதான் ஏறுகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

கதிரவன் (உமா), பதிவை மாத்திப் போட்டுட்டீங்க.

கோபி(Gopi) said...

நல்ல பதிவு.

ராஜ்குமார் மறைவு செய்தியை அறிந்தவுடன் (எத்தனை தமிழர்களை உடன் அழைத்துச் செல்லப் போகிறாரோ என்று) மனதில் துக்கம்.

1991 கலவரத்தில் ஓசூர் எல்லைக்கு உயிர் பயத்துடன் ஓடிவந்த ஏழைத் தொழிலாளிகளின் முகங்களை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

சனிப் பிணம் மட்டுமல்ல!
என் தலைவன் பிணமும்
தனியே போகாது!!

முத்து(தமிழினி) said...

தலைவா,

மெயில் கொடுங்க தலை..எனக்கு சில குழப்பங்கள் உள்ளது.

டண்டணக்கா said...

Pls don't take this as a complaint...
How many of our comments here are discussing about Metha... NONE!. Are we wrong too, just like our media?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி, உங்கள் வாக்கியம் (கவிதையோ?!) அருமை. இதைப்படித்தால் தன் தலைவனை எவ்வளவு கேவலப்படுத்துகிறோம் என்று புரியலாம்.

டண்டணக்கா, நீங்கள் சொல்வது என்னைச்சுட்ட உண்மை. NBA வுக்கு என் ஆதரவை தெரிவித்து விட்ட பின் அதில் விவாதத்துக்கு விஷயம் இல்லை என்ற காரணம் இருந்தாலும்.

 

blogger templates | Make Money Online