Apr 30, 2006

தேர்தல் - ஒரு மெகா பொழுதுபோக்கு? (30 apr 06)


யாருக்கு ஓட்டுப் போட?
 
தமிழக அரசியல் ஒரு எல்லா-நேரக்-கீழ்-ஐ அடைந்திருக்கிறது (All time Low சாமி!)
 
நல்லவர்களிடையே எவரைத் தேர்ந்தெடுக்க என்று குழம்பிய நாம்,
 
நல்ல கட்சியில் உள்ள கெட்டவனுக்கு வாக்கா, கெட்ட கட்சியில் உள்ள நல்லவனுக்கு வாக்கா என்று மாறி,
 
எவன் குறைவாகத் திருடுவான் என்று தேடி வாக்களித்து,
 
எவனால் நம் இருத்தலுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் என்று பார்த்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளோம்.
 
பிக்பாக்கெட்டா, முகமூடித்திருடனா.. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி போன்ற பழமொழிகளைக் கேட்டாலே எரிச்சல் வரும் அளவுக்கு தேர்தல் சமயங்களில் உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது.
 
மடிபுகுந்த கறந்தபாலும் காலத்தின் கட்டாயங்களும் கொள்கை விளக்கங்களாயின.
 
இப்படிப்பட்ட இழிநிலைக்கு காரணமாய் ஒரு நபரைச் சொல்ல முடியாது - அது நம் அனைவரின் கூட்டு முயற்சி. தமிழ்மக்களின் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் வேறு பல இந்திய மாநிலங்களில் நான் கண்டதில்லை - அதை நம் மக்களின் பொது அறிவுக்கு ஒரு அடையாளமாகவே நினைத்திருந்தேன். ஆனால், இப்போது தோன்றுகிறது - அது நம் மக்களின் பொழுதுபோக்கும் ஆர்வத்தை மட்டுமே காட்டுகிறது என.
 
வட இந்தியாவில் சில பொதுக்கூட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன் - பல பொதுக்கூட்டங்களை தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கொள்கைகளை விளக்கவும், எதிர்க்கட்சியைச் சாடவுமே பொதுக்கூட்டங்கள் பயன்படுத்தப்படுவதை ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், தமிழகத்தின் பொதுக்கூட்டங்கள், பேச்சாளரின் தமிழறிவைப் பறைசாற்றி, மக்களுக்கு பொழுதுபோக்களிப்பதையே முக்கிய நோக்கமாய்க் கொண்டிருக்க, அலங்கார வார்த்தைகளின்றி, நேரடியாக விஷயத்தை மட்டுமே பேசிய பொதுக்கூட்டங்கள் வியப்பை அளித்தன.
 
நம் பொழுதுபோக்கு ஆர்வம், பரிமாண வளர்ச்சி பெற்று, திரையில் தோன்றிய நடிகர்களை நேரில் பார்த்தே பரவசம் பெறும் நிலையை எட்டியது - இன்றும் தொடர்கிறது. சிம்ரனுக்கும் செந்திலுக்கும் குமரிமுத்துக்கும் கூட்டம் கூடுவது கொள்கை விளக்கம் அறியவா? அலங்கார மொழியை ஆதரித்தவர்கள் அடுத்ததாய் வெறும் அலங்காரத்தை மட்டுமே ஆதரித்தது புதிய வெட்கக்கேடல்ல, பழையதின் தொடர்ச்சியே!
 
அடுத்த வளர்ச்சி, தொலைக்காட்சி. சக்தி வாய்ந்த ஊடகம் என்பது ஒரு தேர்தலில் நிரூபிக்கப்பட்டதால், பார்வையாளர்களைப்பெற சகல விதமான சட்டத்துக்குட்பட்ட, உட்படாத வேலைகளிலும் இறங்கி, அளவுக்கதிகமாய்ப்போனதால், இந்த மாயை மிக விரைவிலேயே மங்கி விட்டது என்றாலும், இதிலும் பொழுதுபோக்கு அம்சம்தான் முக்கியமானதாய் இருந்தது, இருக்கிறது. கலர் டிவி கொடுப்பேன் என்பதும் சல்லிசாய் கேபிள் இணைப்பு கொடுப்பேன் என்பதும் இன்றைய முக்கியமான வாக்குறுதிகளாக, எரியும் பிரச்சினைகளாக இருப்பது தமிழ் மக்களின் அதீத பொழுதுபோக்கு ஆர்வத்தை முன்கொண்டே.
 
இவ்வளவு ஏன், இவ்வளவு நீட்டி முழக்கும் பினாத்தல், தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து குட்டிக்கதை என்ன, கருத்துக்கணிப்பென்ன, திரைப்பட ரீமிக்ஸ் என்ன, கொள்கை டிராக்கர் என்ன, ப ம க - வ வா ச சண்டை என்ன - என்று பொழுதுபோக்குக்குத்தானே தூபம் போட்டது?
 
பொழுதுபோக்கை ஒரு பெரிய தவறாக நான் கருதவில்லை. ஆனால், தேர்தல் என்பதும் ஆட்சி மாற்றம் என்பதும் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே கருதப்பட்டுவிடும் அபாயத்தைத் தவிர்க்க வேண்டும்.
 
எனவே, இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்கு அளிக்கலாம் என்ற என் குழப்பத்தை, உரத்த சிந்தனையாக மாற்றி, கலப்பை கொண்டு உழுது, நாளை படைக்கிறேன்.

9 பின்னூட்டங்கள்:

தருமி said...

என் குத்து முதல் குத்து

Anonymous said...

Very good aticle Mr.Suresh all valid points current senario

keep it up

பொன்ஸ்~~Poorna said...

அது சரி.. உங்களுக்கு தமிழ்னாட்டில் ஓட்டு இருக்கா என்ன??

மணியன் said...

நம்ம ஊரிலே தேர்தல் கூட்டங்களை பொழுதுபோக்குக்கு பார்த்துவிட்டு வாக்களிக்கும்போது பார்த்துத் தான் குத்துவார்கள் :) கூட்டத்தைப் பார்த்து ஜெயிக்கப் போவது யாரு என்று சொல்ல முடியாது.

Geetha Sambasivam said...

ப.ம.க வ.வா. சங்கச் சண்டை உங்கள் பொழுதுபோக்கா? எல்லாம் தலிவர் இல்லை என்பதால் வந்த வினை.

பினாத்தல் சுரேஷ் said...

தருமி, எப்படி குத்து? நல்லபடியாவா இல்லை ஓங்கியா?

நன்றி அனானிமஸ், வாழ்த்தறதுக்காவது பேர் சொல்லலாமில்லை? நிஜப்பேரா கேக்கறோம்?

பொன்ஸக்கா.. ஓட்டு இருக்கு. ஆனா டிக்கட் செலவு தற கட்சிக்கு ஓட்டுனு முடிவு பண்ணிட்டேன்.

மணியன், அது வாஸ்தவம்தான் - கூட்டத்துக்கும் ஓட்டுக்கும் சம்மந்தமில்லைதான்- ஆனா கூட்டத்துக்கும் பொழுதுபோக்குக்கும் சம்மந்தம் இருக்கு இல்லை?

கீதா, நமக்கு எல்லாமே பொழுதுபோக்குதான்!

Muthu said...

சுரேஷ்,
நம்முடைய செய்தித்தாள் பழக்கத்தை அவ்வளவு கறாராக விமர்சனம் செய்யமுடியுமா? அல்லது இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் மிகமட்டம் என்று கூறிவிடமுடியுமா?
திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன என்று ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அவ்வளவு சரியாக இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது.இன்றும் தமிழகம் இந்தியாவில் நன்கு முன்னேறிய மாநிலங்களில் முண்ணனியில்தான் உள்ளது.
தண்ணீர் என்ற ஜீவாதார சக்தி நம்மிடம் பெருமளவு இல்லாத நிலையிலும் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் அசாதாரணமானது. மற்றபடி வடஇந்திய அரசியலும் மலிவானதுதான்.
மற்றபடி நீங்கள் கூறிய பொழுதுபோக்கு என்பதை சிறிது மாற்றி சினிமா கலாச்சாரம் என்று கூறலாம். அம்மா வெள்ளையா இருக்கு.எம்சியாரு செவப்பா இருக்காருன்னு சொல்லி ( கலரா இருப்பவர்கள் நல்லவர்கள்) ஓட்டு போடற முட்டாள்கள் இங்கத்தான் இருக்கிறார்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

முத்து,

வட இந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் ஒப்பிட்டது - பொழுதுபோக்கு என்ற ஒரே அம்சத்தில்தான். மற்றபடி, குதிரை பேரங்களும் அரசியல் கொலை கொள்ளைகளும் பீஹாரைவிடவும் தமிழ்நாட்டில் அதிகம் என்று நினைக்கக்கூட மாட்டேன்.

சினிமா கலாசாரம் என்பதை ஏற்க மாட்டேன். தயாநிதி மாறன் எம்புட்டு செவப்பா இருக்காருன்னு கூட்டம் கூடியதாகக்கேள்விப்பட்டேன்:-)

Anonymous said...

தயாநிதி மாறன் செவப்பா இருக்காருன்னு கூட்டம் கூடிச்சா? அடப்பாவி மக்கா.

சின்ன வயசிலே இருந்தே ஏ.சி.யிலயே கஷ்டப்பட்டு வளர்ந்த புள்ளையாச்சே. அப்படி தான் இருக்கும்? கட்சிக்காரனுங்க மாதிரி ஈஸியா வெயிலிலே அலைந்து திரிந்த பையனா என்ன கருப்பா இருக்கிறதுக்கு?!

 

blogger templates | Make Money Online