Apr 1, 2006

ஒண்ணரைப்பக்க துக்ளக் -2

இப்போது அ தி மு க அணி பெரும் வெற்றி பெற்றால், துக்ளக்கில் காணக்கூடியவை பற்றிய கற்பனை:
 
அட்டைப்படம்
 
கலைஞர் ஸ்டாலினைப்பார்த்துப் பாடுகிறார்.
 
ஏன் தோற்கடித்தாய் மகனே ஏன் தோற்கடித்தாயோ..
இல்லை ஒரு சீட்டு என ஏங்குவோர் பலரிருக்க
எல்லாசீட்டும் உன் அணிக்கா செல்ல மகனே..
 
நான் முதல்வர் ஆவதற்கு
காலம் கனியும் முன்னே
நீயும் வந்து காத்திருந்தாய் - செல்ல மகனே..(ஏன்.)
 
கஷ்டப்பட்டு கணக்குப்போட்டு
கட்சிகள் பலவற்றையும்
கூட்டணிக்குள் அடக்கி வைத்தான் தந்தையடா..
 
கணக்கிலும் குற்றமில்லை
கஷ்டத்திலும் குறைவுமில்லை
கடைசியில் தோற்றுப்போன கட்சியடா.. (ஏன்)
 
எச்சரிக்கை 1: கலைஞரை அட்டைப்படத்தில் பார்த்ததில் ஆச்சரியமாக இருக்கலாம். இந்த தேர்தல் தோல்விக்குப்பிறகு எந்தப்பத்திரிக்கையிலும் அவரை அட்டையில் போடமாடமாட்டார்கள் என்பதால் துக்ளக் அவரை கௌரவப்படுத்துகிறது.
 
எச்சரிக்கை 2: தேர்தலில் நடைபெற்ற விதிமுறை மீறல்கள், ஒழுங்கீனங்கள் பற்றி தி மு க உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர உள்ளது. கமிஷன் சாதகமாக அமையவில்லை என்றால், யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட கதை ஆகிவிடும் என்பதால், தி மு க அமைச்சர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் தகல் காற்றுவாக்கில் கசிகிறது.
 
தலையங்கம்
 
இது பிரமிக்கத் தக்க வெற்றி
 
அ தி மு க அணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. துக்ளக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்ட முடிவுகளே பெரும்பாலும் சரியாக இருந்தாலும், இவ்வளவு பெரிய வெற்றி வரும் என் நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
அ தி மு க வின் வெற்றி என்று சொல்வதைவிட, தி மு க வின் தோல்வி என்றே இதைப்பார்க்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.
 
அ தி மு க வின் ஆட்சியில் கசப்புகள் இல்லாமல் இல்லை.  நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு நல்லது கெட்டது என்று பாராமல் எல்லா உத்தரவுகளையும் வாபஸ் வாங்கியது, ஹிந்துக்களின் மனம் புண்படும்படியான கட்டாய மதமாற்றத் தடை உத்தரவு வாபஸ், ஜெயேந்திரர் கைது, அதைத்தொடர்ந்த போலீஸ் அவதூறு, கஜானாவைக் காலி செய்யும் சலுகைகள் எனப் பல மோசமான நடவடிக்கைகள் இருந்தாலும் அவற்றையும் மீறி, அ தி மு க வுக்கு பெருவாரியான மக்கள் ஆதரவு அளித்திருப்பது, தி மு க அணியின் மேல் அவர்கள் கொண்ட கோபத்தையே காட்டுகிறது.
 
12 மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதா அரசுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முட்டுக்கட்டை போட்டனர். சுனாமி நிவாரணத்துக்கும் வெள்ள நிவாரணத்துக்கும் நிதி ஒதுக்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம், சேது சமுத்திரத் திட்டத்தில் காட்டிய முனைப்பில் சிறு பங்கு கூட குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் காட்டாதது,  மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.
 
தேர்தல் பிரசாரத்துக்கென்றே தன் குடும்பத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தியது மட்டுமின்றி,  கேபிள் மசோதா கையெழுத்தாகிவிடக்கூடாது என்பதில் கருணாநிதி காட்டிய அளவற்ற ஆர்வம் மக்களின் கோபத்தில் எண்ணெய் ஊற்றியது.
 
அடுத்த முதல்வர் யார் என்பதற்கான தெளிவான பதிலை தி மு க அணி முன்னிறுத்தவில்லை எனினும் ஸ்டாலின்தான் அடுத்த முதல்வருக்கான வேட்பாளர் என்பது வேட்பாளர் தேர்விலேயே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. மக்கள் மனதில் "ஜெயலலிதாவா, ஸ்டாலினா" என்ற கேள்விக்கு தெளிவான விடை இருந்தது.
 
ஜெயலலிதாவுக்கு ஒரு வார்த்தை. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் கூறுகிறார் " நதியின் சுழலில் மாட்டிக்கொண்டவன் பிடித்துக்கரையேற எதையும் பிடித்துக்கொள்ளலாம்..அது மரக்கட்டையாக இருந்தாலும் சரி, உடைந்த படகாக இருந்தாலும் சரி. ஆனால் கரை ஏறியவுடன் அதைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அவ்வாறு செய்யாத மன்னன் ஜெயித்தாலும், கொள்கையில் உறுதியானவனாகக் கருதப்பட மாட்டான்";
 
எனவே, ஜெயலலிதா இந்த வெற்றியினால் பூரித்துப்போய்விடக்கூடாது. ஆனால் அவர் நம் பேச்சையா கேட்கப்போகிறார்?
 
கேள்வி பதில்
 
எம் ராஜா, ஊத்துக்கோட்டை
 
கே: தேர்தல் முடிவு நீங்கள் எதிர்பார்த்ததுதானா?
 
ப:  மக்களுக்கு மத்திய அரசின் மேல் வெறுப்பு இருக்கிறது என்பது தெரிந்தது. ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
 
கே: பா ஜ க அனைத்துத் தொகுதிகளிலும் டெபாஸிட்டை இழந்து விட்டதே?
 
ப: போகிற போக்கைப் பார்த்தால் "நேற்று சாயங்காலம் சூரியன் மறைந்து விட்டதே" என்று கூட கேள்வி அனுப்புவீர்கள் போலிருக்கிறதே.
 
பரமசிவன், ஒண்டிக்காரன்புதூர்
 
கே: ம தி மு க 28 தொகுதிகளில் வென்றிருக்கிறதே, இது பற்றி?
 
ப: பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதையே இந்த முடிவு காட்டுகிறது.  ஆனால் நாரை அதிக நேரம் சுமந்துகொண்டிருந்தால்  பூவும் நாறிப்போய் விடும் என்பதையும் மறக்கக்கூடாது. 
 
அகமது கனி, மேலவாயல்பட்டிணம்
 
கே: தமிழக அமைச்சரவையில் தகுதி வாய்ந்த அமைச்சர் யார்?
 
ப: உங்களுக்கு ஏன் இந்த வீண்வம்பு? நான் யாராவது ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு வைக்க, அவர் பதவி பறிபோவதைப்பார்ப்பதில் உங்களுக்கு என்னதான் ஆனந்தமோ!
 
_______________________________________________________________________
 
விரைவில் அடுத்த எடிஷன்: விஜயகாந்த் முதல்வர்!

14 பின்னூட்டங்கள்:

Geetha Sambasivam said...

Eagerly expecting other edition. Very interesting than the original.

dondu(#11168674346665545885) said...

"கே: தமிழக அமைச்சரவையில் தகுதி வாய்ந்த அமைச்சர் யார்?

ப: உங்களுக்கு ஏன் இந்த வீண்வம்பு? நான் யாராவது ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு வைக்க, அவர் பதவி பறிபோவதைப்பார்ப்பதில் உங்களுக்கு என்னதான் ஆனந்தமோ!"

நிஜமாகவே கடந்த காலத்தில் துக்ளக்கில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு, இதே பதிலும் வந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

ஊக்கப்படுத்துவதற்கு நன்றி கீதா சாம்பசிவம்.

நன்றி டோண்டு. நகல் எடுக்கும் வேலையில் ரொம்ப ஒரிஜினலாக இறங்கிவிட்டேனா, பாருங்க, இந்த மாதிரி விபத்துகள் ஏற்பட்டுவிடுகிறது.

குமரன் (Kumaran) said...

:))))))))))))))))))))))

IdlyVadai said...

சூப்பர் அப்பு.

துளசி கோபால் said...

தூள்!!!!

தகடூர் கோபி(Gopi) said...

சூப்பருங்க....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன், இட்லிவடை, ஷாஜி, துளசி அக்கா & கோபி.

ஷாஜி, அடுத்த எடிஷன் அதுதான்.. விஜயகாந்த் முதல்வர்! ஆவலுடன் எதிர்பாருங்கள்,, மூன்று நாட்களில்.

Anonymous said...

//அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் கூறுகிறார் " நதியின் சுழலில் மாட்டிக்கொண்டவன் பிடித்துக்கரையேற எதையும் பிடித்துக்கொள்ளலாம்..அது மரக்கட்டையாக இருந்தாலும் சரி, உடைந்த படகாக இருந்தாலும் சரி. ஆனால் கரை ஏறியவுடன் அதைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும். அவ்வாறு செய்யாத மன்னன் ஜெயித்தாலும், கொள்கையில் உறுதியானவனாகக் கருதப்பட மாட்டான்";//

Is this a true quote ?

aathirai said...

ப: பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதையே இந்த முடிவு காட்டுகிறது. ஆனால் நாரை அதிக நேரம் சுமந்துகொண்டிருந்தால் பூவும் நாறிப்போய் விடும் என்பதையும் மறக்கக்கூடாது.
super

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கு நன்றி அனானி.

நம்ம பினாத்தலைப் பார்த்தா அர்த்த சாஸ்திரம் எல்லாம் படிச்ச மாதிரியா தெரியுது? சும்மா ஒரு ஃப்ளோலே பினாத்தினதுதான் சார்.

any resemblance to artha saasthram is purely unintentional and coincidental. (இப்படித்தானே சினிமாலே முதல்லே போடுவாங்க?)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஆதிரை.

Anonymous said...

அருமை..

நாகராஜன்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகராஜன்.

 

blogger templates | Make Money Online