May 1, 2006

குழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)

என் தலைமுறை மேலேயே எனக்குக் கோபம் வருகிறது.
 
மூன்று சட்டசபைத் தேர்தல்களில் ஓட்டுப்போடும் வாய்ப்பிருந்தும், ஒன்றில் மட்டுமே ஓட்டுப்போட்டிருக்கிறேன். அப்போது, எந்தக்கட்சியும் பிடிக்காமல், கைக்குக் கிடைத்த சுயேச்சைச் சின்னத்தில் குத்தினேன் (அந்த சுயேச்சை வேட்பாளர் வீட்டில் "உண்மையச் சொல்லுங்க - யாருங்க அந்த மூணாவது ஓட்டு?" என்று குழப்பம் உண்டாகி இருக்கும்:-) "ஓ" போடுவது பற்றித்தெரிந்திருந்தால் ஒருவேளை அதைப்பயன்படுத்தி இருந்திருக்கலாம் - ஆனால் அந்தக்குடும்பக் குழப்பம் தவிர்க்கப்பட்டது தவிர வேறு எதுவும் பலன் இருந்திருக்கும் என நம்ப முடியவில்லை
 
ஒருமுறை வெளியூரில் இருந்தேன் என்ற நியாயமான காரணம்.
 
ஒரு முறை கள்ள வோட்டினால் வோடுப்போட இயலாமல் திரும்பினேன். நான் போட நினைத்திருந்த கட்சிக்குதான் என் "கள்ள வோட்டும்" போடப்பட்டிருப்பதாக, வாக்குச்சாவடியில் இருந்த என் உறவினன் சொன்னதால் மனதைத் தேற்றிக்கொண்டேன்.
 
ஆனால் என் கோபம் ஓட்டுப்போடாததால் அல்ல. இந்த மூன்று சட்டசபைத் தேர்தல்களில் மாறிவரும் காட்சிகள் எதுவுமே ந்ம்பிக்கையைத் தூண்டும் விதமாக இல்லாமை.
 
படித்துக்கொண்டிருந்த காலத்தில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது சற்றுத் தொலைவில் இருந்தது. அதைப்பற்றி பல கனவுகளும் ஆசைகளும் இருந்தன.
 
கம்ப்யூட்டர்கள் நிர்வாகம் செய்யும், மக்கள் பிரச்சினைகள் தீரும், பிரிவினைகள் மறையும் என்பது போன்ற பிம்பங்களை அன்று படித்த அறிவியல் புனைகதைகள் உருவாக்கிக்கொண்டிருந்தன.
 
ஆனல், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு நிஜமான போது பழைய சிறு பிரச்சினைகள் புது வடிவம் எடுத்து பூதாகாரமாகத் தாக்க, கனவுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
 
தனிமனிதனின் பொருளாதாரமும், அறிவும் உயர்ந்திருந்தாலும், பின்னிழுக்கும் பிரச்சினைகளின் வீரியம் இன்னும் அதிகமாகவே ஆகியிருக்கிறது.
 
ஜாதி - சண்டை, பிரிவினை, பெருமிதம் அல்லது கீழ்நோக்குப்பார்வை - நிச்சயமாக நான் கனவுகண்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டு இது அல்ல. ஏன், நிலைமை இருபதாம் நூற்றாண்டைவிட மோசமாகத்தான் ஆகியிருக்கிறது.
 
எனக்குத்தெரிந்த அளவில் இதற்குக் காரணத்தை ஊகிக்க முயல்கிறேன்.
 
தரம் குறைந்த திரைப்படங்களே வெற்றி பெறுவதைப்பற்றி ஆதங்கப்பட்டிருந்தார் தருமி. அரசியல் சமூகப்பிரச்சினைகளுக்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
 
ஒரு வெற்றிப்படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?
 
எதையும் வெல்லும் நாயகன், காதல் செய்ய நாயகி, கடைசியில் தோற்க வில்லன், இடையே பொழுதுபோக்க நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், காதல் / காம ரசம் சொட்டும் நடன் பாடல் காட்சிகள் - இவைதானே?
 
இந்த கூட்டாஞ்சோறு எப்படி உருவானது? இப்படி எல்லாம் கலந்து ஒரு படம் எடுக்கப்பட்டு வெற்றி பெற, இந்த அம்சங்களில் எதனால் வெற்றி பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல், எதை விட்டாலும் தோல்வி அடைவோமோ என்ற பயத்தில் இதே காம்பினேஷனில் அடுத்த படமும் எடுக்கப்பட, அதுவும் வெற்றி பெற (எதனால் என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை) எல்லாம் கலந்ததுதான் வெற்றிக்கு வழி என முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.
 
அதேபோல, தேர்தலில் ஒரு கட்சி வெற்றிபெற என்ன தேவை?
 
போன தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு, அவர் கட்சியின் ஆட்சிமுறை, செயல்படுத்திய நலத்திட்டங்கள், எதிர்க்கட்சியின் அராஜகங்கள், மக்கள் தேவைகளை அவர் கட்சியோ எதிர்க்கட்சியோ சந்தித்த விதங்கள், அவர் சார்ந்த மதம் / ஜாதி என்று எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம் - ஆனால், சரியான ஒரு காரணம் தெரிய வார்ப்பில்லாததால், இதே கூட்டாஞ்சோறு மனோபாவம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
ஒரு தேர்தலில் கொள்கைகளைக் காட்டி வாக்கு கேட்டவர் தூக்கி எறியப்பட்டார் - எனவே, கொள்கைகள் அவுட் ஆஃப் ஃபேஷன்!
 
நாட்டு முன்னேற்றம், Feel Good Factorகள் தோல்விக்கே வழிவகுக்கும் - அதையும் தொட முடியாது.
 
Gen Next பற்றிப்பேசினால், எதிர்க்கட்சிக்காரன் சுலபமாக ஒரு இலவச XYZ திட்டத்தை அறிவித்து அனைத்து வாக்குகளையும் அள்ளி விடுவான். எனவே, அடுத்த தலைமுறை பற்றிப்பேசாமல் இருப்பதே நல்லது.
 
இப்படி எந்தப்பக்கம் போனாலும் ஒரு சரியான, காலத்தால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிரசார உத்தியே இல்லாமல் இருப்பதால், சினிமா போலவே எல்லாம் கலந்துகட்டி அடிக்கப்படுகிறது.
 
நிச்சயமான உத்தி என நினைக்கப்படுவது - மக்கள் ஆட்டு மந்தைகள் என்ற நினைப்புத்தான் - அது உண்மையா பொய்யா என்பது எனக்கும் தெரியாது.
 
அதனால்தான் ஜாதிக்கட்சிகள், சிறுபான்மைக்குழுக்கள்,  ஒரு பிரிவு மக்களின் வாக்குக்களை  கையில்  வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் சிறு கட்சிகள், கூட்டணி அரித்மெட்டிக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
 
ஜாதிகள் ஒழியாமைக்கு இத அரசியல் முறையே முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி என்பதால் வெற்றிவாய்ப்பு நிச்சயிக்கப்படுகிறது என்பதை எல்லா ஊடகங்களும் அரசியல் வாதிகளும் ஏற்கத் தொடங்கிவிட்டனர். இந்தச்சிந்தனையின் வெளிப்பாடுதான் - ஜாதிகளை ஒழிக்க வேறு என்னவற்றையெல்லாம் ஒழிக்கலாம் என்று யோசிப்பவரும் கூட, தேர்தல் வந்தவுடன் வட மாவட்டங்களில் பா ம க பலமாக உள்ளது, விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறார். (தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை). இந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் வைகோவும் விஜயகாந்த்தும் ஒரே ஜாதி என்பதல் இவர் ஓட்டை அவர் பிரிப்பார் அவர் ஓட்டை இவர் பிரிப்பார் என்று கழுகுகள் ஆரூடம் சொல்வதும்.
 
இந்தச் சிந்தனையின் தோல்வியையே நம் முன்னேற்றத்தின் அளவுகோலாகக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
 
மக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல - ஜாதி/மதம் காரணமாக மட்டும் ஓட்டு விழுவதில்லை என்பது தெளிவாகாத வரையில் இந்தச் சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் விடிவு வரப்போவதில்லை.
 
ஒவ்வொரு தேர்தலிலும் போன முறையை விட அதிக ஜாதி சார்ந்த வாதங்களும் வேட்பாளர்களும் (ஜாதிக்கட்சிகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமில்லை - மீதிக்கட்சிகளும் ஜாதி அடிப்படையில்தான் வேட்பாளரை நிர்ணயிக்கின்றன, ஜாதிக்கட்சிகளை அணைத்து ஆதரவளிக்கின்றன)  காணப்படுகின்ற அவலம் ஒழியவேண்டும் - முன்னேற்றத்தின் முதல் படி அதுவாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். 
 
குழப்பமும் உரத்த சிந்தனையும் தொடரும்...


10 பின்னூட்டங்கள்:

குழலி / Kuzhali said...

//ஜாதிகள் ஒழியாமைக்கு இத அரசியல் முறையே முக்கியக்காரணம் என்று நான் நினைக்கிறேன்
//
பெனாத்தல் சுரேஷின் புதிய கண்டுபிடிப்பா இது?

அய்யா நீங்கள் சொல்லும் இந்த அரசியல் வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன, சாதிக்கட்சி என சொல்லப்படும் பாமக பிறந்து வெறும் 16 ஆண்டுகள் ஆகின்றன? விடுதலை சிறுத்தைகள் பிறந்து வெறும் 9 ஆண்டுகள் ஆகின்றன.... இவர்களால் தான் இன்னமும் சாதி இருக்கிறதென்றால் மேற்கு மாவட்டங்களில் பாமக,விடுதலைசிறுத்தைகள் நிழல் கூட பட்டதில்லை பிறகெப்படி அங்கே இன்னமும் சாதிகள் இருக்கின்றன.....
சரி கேரளாவில் எந்த சாதிக்கட்சி உள்ளது பிறகு அங்கெப்படி சாதிகள் உள்ளன, சாதிக்கட்சிகள் சாதிக்கு காரணம் என்ற முன்முடிவை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு சிந்தித்தால் காரணம் புரியலாம்....

ஒரு ஜென்கதை உண்டு சீடர்களிடம் போதிக்கும் முன் ஜென் துறவி ஒரு தேநீர் நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் தேநீர் ஊற்றினாராம், ஊற்றப்பட்ட எல்லா தேநீரும் கீழே போனது, பிறகு கோப்பையிலிருந்து தேநீரை கீழே ஊற்ற சொன்னாராம், மற்றவர்கள் புரியாமல் கேட்ட போது உங்கள் முன் முடிவுகளை மனதிலிருந்து ஊற்றிவிட்டு பிறகு வாருங்கள் பேசலாம், காலியான கோப்பையில் தான் நிரப்ப முடியும் தேநீர் இருக்கும் கோப்பையில் அல்ல என்றாராம்... சாதிகட்சிகளும், அரசியலும் தான் சாதிமறையாமல் இருக்க காரணம் என்பதை சற்று விலக்கிவிட்டு யோசித்தால் இன்னும் காரணங்கள் என்ன என்று புரியலாம்....

நன்றி

துளசி கோபால் said...

//ஒவ்வொரு தேர்தலிலும் போன முறையை விட அதிக ஜாதி சார்ந்த வாதங்களும் வேட்பாளர்களும் (ஜாதிக்கட்சிகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமில்லை - மீதிக்கட்சிகளும் ஜாதி அடிப்படையில்தான் வேட்பாளரை நிர்ணயிக்கின்றன, ஜாதிக்கட்சிகளை அணைத்து ஆதரவளிக்கின்றன) //


இதுதான் 100% உண்மை.

CrazyTennisParent said...

ஓ போடுதல் எல்லாம் ஒரு பொறுப்புணர்வு உள்ள குடிமகன் செய்யும் காரியம் அல்ல.
இருப்பதில் சிறந்தது என்ற கொள்கை அவ்வளவு கேவலமானது அல்ல.வாழ்க்கையில் இந்த கொள்கையை நாம் அனைத்திலும் உபயொகிக்கும்போது(கல்யாண முயற்சிகளை நினைத்துக்கொள்க) எலக்சன் மட்டும் விதிவிலக்கா?

சினிமாவை ஒப்புநோக்கி நீங்கள் அலசியுள்ளது நன்றாக உள்ளது. நேர்மையான,மாய்மை இல்லாத, சமரசம் இல்லாத,உரிமையை கேட்டுவாங்கும் சிந்தனையை மக்களிடம் வளர்க்கவேண்டும். அதுதான் தீர்வு. அதற்குத்தான் படித்தவர்கள் பாடுபடவேண்டும்.
நடைமுறை என்று வரும்போது விஜயகாந்தின் விருத்தாசலத்தை பற்றி பேசுவதில் தவறு இல்லை.
(ஆனால் இன்றைய நிலவரப்படி விஜயகாந்த அங்கு வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இது சினிமா கவர்ச்சிதானே? இல்லாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் அவர் வெல்லவேண்டுமே? முடியுமா?)

டவுண் லிமிட்டை தாண்டி கிராமங்கள் ஆரம்பித்துவிட்டால் சாதி ஓட்டு மிகவும் முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.சாதி இருக்கும்வரை சாதி ஓட்டு இருக்கும்.இது நிதர்சனம்.இதை ஒழிக்க வழி இப்போதைக்கு இல்லை. கல்வி பெருகினால் வரலாம்.

தருமி said...

நமது சமூக அரசியல் அவலங்களுக்குக் காரணிகள் கண்டுபிடிப்பதைப் பற்றி நீங்கள் கொடுத்துள்ள சினிமா-உவமை மிக நன்றாகவும், மிகப் பொருத்தமாகவும் உள்ளது.
ஆக, நம்க்கு நல்ல அரசியல் அமைப்பு கிடைக்கப் போவதில்லை - நல்ல சினிமா கிடைக்காதது போல. இல்லையா?

பினாத்தல் சுரேஷ் said...

குழலி, முழுவதும் மீண்டும் படித்துப்பார்த்தேன்.
பா ம கவும் விடுதலைச்சிறுத்தைகளும்தான் ஜாதிப்பிரிவினைக்கு காரணம் என்று எங்கும் சொல்லவில்லையே?

இன்னும் சொல்லப்போனால், ஜாதிக்கட்சிகளை விட மீதிக்கட்சிகளைத்தான் இன்னிலைக்குப் பொறுப்பாக்கி எழுதி உள்ளேன்.

கோப்பையில் என்றுமே ஒன்றும் இருந்ததில்லை சார்:-( இப்போ எங்கே இருந்து புதுசா காலி செய்யறது?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துளசி அக்கா!

முத்து, ஓ போடுவது என்னையும் கவரவில்லை. தனி பட்டன் இருந்தாலவது யோசிக்கலாம். கல்யாண முயற்சிகள்? உங்க வீட்டம்மா மெயில் ஐ டி கிடைக்குமா:-)

நான் விருத்தாசலத்தைப் பற்றிப்பேசியதே தவறு என்று சொல்லவில்லை. ஆனால், ஜாதி ஓட்டுக்கள்தான் தீர்மானிக்கின்றன என்ற நிலை-அதுதான் மற்ற எல்லா விஷயங்களையும் மீறி மேலே வரும் என்ற எண்ணம் - நடைமுறையாகவே இருந்தாலும், சகிக்க முடியவில்லை!

டவுண் லிமிட்டைத் தாண்டவேண்டாம், லிமிட்டுக்குள்ளே எல்லாம் சரியா இருக்கா என்ன? இது சரியா இல்லையா என்பதுதான் என் கேள்வி.

நன்றி தருமி. எதிர்பார்ப்பது மட்டும்தானே நம் வேலை?

krishjapan said...

சுரேஷ், நானும் காட்பாடிதான்.... தொன்பாஸ்கோவில் படித்தீர்களா. எந்த ஆண்டு, நான் 1976-80.

பினாத்தல் சுரேஷ் said...

கிருஷ்ணா,

நான் தொன் போஸ்கோ இல்லை. இடம் தர மறுத்துவிட்டார்கள். என் அண்ணன்கள் படித்தார்கள். வருடம் சொன்னால், என் ரசிகர்கள் என் வயதை ஊகித்துவிடும் அபாயம் இருப்பதால், உங்களுக்குப் பிறகுதான் படித்தேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

என் வீடு தொன் போஸ்கோவுக்கு அருகில்தான்.

கப்பி | Kappi said...

இந்த ஜாதிக்கட்சிகளிலும் ஜாதியை வளர்ப்பதை விட தங்கள் வளர்ச்சி குறித்து வருந்துபவர்களே இருக்கிறார்கள்....இதனால் ஜாதிக்காக ஓட்டு போடுபவர்கள் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே கூற வேண்டும்...மற்ற வாக்காளர்களை விட இவர்களுக்கு ஏமாற்றப்படுவோம் என்ற விழிப்புண்ர்வும் குறைவாகத்தான் இருக்கிறது...

என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்னைகளின் மூல காரணம் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரிடமும் இருக்கும் NEGLIGENCE தான்....

குழலி / Kuzhali said...

இந்த பதிவின் கருத்துகளோடு தொடர்புடைய என் பதிவின் சுட்டி இங்கே http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_16.html

 

blogger templates | Make Money Online