May 6, 2006

மு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)

இந்தத் தலைப்பைப்பார்த்த உடன் உங்களுக்கு என்ன தோன்றியது?
 
அரை செகண்டு ஆச்சரியம், கால் செகண்டு அவநம்பிக்கை, அரைக்கால் செகண்டு புன்னகை..
 
ஒரு செகண்டுக்குப் பிறகு அடுத்த வேலை! இல்லையா?
 
சிவகாமியின் சபதம் நாகநந்தி போல, கொஞ்சம் கொஞ்சமாய் விஷம் ஏற்றப்பட்டு, எப்படிப்பட்ட விஷத்தையும் தாங்கும் மனோபாவத்துக்கு அனைவரும் வந்துவிட்ட அவலம், ஒரு செகண்டு முடிந்ததும் எப்படிப்பட்ட அதிர்ச்சியையும் நம்மால் மறக்கவும் ஏற்கவும் வைக்கிறது.
 
அதே நேரத்தில், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு, நாட்கள் யோசித்தும் எந்த உறுதியான பதிலுக்கும் வர முடியாமல் போகவும் வைக்கிறது.
 
நான் நடுநிலைவியாதியாக இல்லாததன் இழப்பும் பெரியதாகத் தெரிகிறது:-)
 
நாலு கிராம் தங்கத்திலும், இலவச கம்ப்யூட்டர்களிலும், குறைந்த விலைக் கேபிளிலும் தெரியாத ஊழல் சாத்தியங்கள், ஏமாற்று சாத்தியங்கள், கலர் டிவியிலும், காஸ் அடுப்பிலும் மட்டுமே சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.
 
நேற்றுவரை இகழ்பாடி, இன்று புகழ்பாடும் இன்பத்தமிழன், டி ராஜேந்தர் ஆகியோர் வந்ததற்குக் காரணம் கேட்காமல், போனவர்கள் அனைவரும் கோடிகளுக்காகத் தான் போனார்கள் என்று இன்னும் சில நடுநிலைவியாதிகளுக்குத் தெரிகிறது.
 
வளர்ப்புக் குடும்பம் சில நடுநிலைவியாதிகளுக்குக் குடும்ப அரசியலாகத் தெரிவதில்லை.
 
ஆட்சி அடைந்தால் யாருக்கு மட்டுமே நன்மை என்று சில கண்மணிகளுக்குத் தெரிவதில்லை.
 
வெள்ளம் வந்ததற்கு நிவாரணம் கொடுத்தது சிலரின் சாதனை. வேறு ஆட்சியாக இருந்திருந்தால் தண்ணீரில் ஊறவிட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களா என்ன?
 
மக்கள் எந்தக்காரணத்தால் இறந்தாலும் ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது சிலரின் கோரிக்கை. இல்லாவிட்டால் "ஞாபகம் வருதே.."
 
நம்முடைய பிரச்சினை இந்த இரண்டு வகை வியாதியாகவும் இல்லாமல் இருந்து தொலைப்பது. எல்லா எழவும் நமக்கு ஞாபகம் வருதே..
 
எட்டாம் தேதியைக் குறிவைக்கும் எந்த அரசியல்வாதியும் 12ஆம் தேதியைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 
நாற்காலியில் உட்கார்வதற்காகத்தான் வாக்குறுதி என்று ஒருவர் வெளியே சொல்லிவிட்டார் - சரி, மற்றொருவர் மட்டும் ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்?  படுக்கையில் படுக்கவா? 
 
ஏலத்தில் விலை ஏற்றுவதைப்போல வாக்குறுதிகள் பறக்கின்றன இந்தத் தேர்தலில். மக்கள் உள்பட யாரும் அவற்றை நிறைவேற்றும் சாத்தியத்தைப்பற்றிக் கனவும் காணவில்லை. அப்படியேன் ஏமாற்று வேலை?
 
கலைஞர் தன்னிடம் உள்ள அனைத்து அஸ்திரங்களையும்  - தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி ஆட்சிக்குத் தயார் நிலை, வாய்ஜால வாக்குறுதிகள், ஊடகத் திரிப்புவேலைகள் - முதலில் பயன்படுத்தி, இந்த அசிங்கத்துக்கு கோடு போட்டார், பார் புகழும் நல்லாட்சி படைத்தவர்கள் ஏன் அதைத் தொடரவேண்டும்? தேமுதிக ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே செய்த கூத்துக்களை அறியாச் சிறுவர்கள் - என்ற வகையில் மன்னித்து விடலாம்!
 
திமுக சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய இந்தத் தேர்தலை, கஷ்டமோ என்ற எண்ணத்தைக் கொண்டு வருவதற்குத்தான் இந்த பயப்பட்ட அணுகுமுறை பயன்பட்டிருக்கிறது.  கூட்டணி பலம், ஆட்சிக்கெதிரான அதிருப்திகள், மத்திய மாநில நல்லிணக்கம் ஆகியவற்றை மட்டும் நம்பாமல் எப்பாடு பட்டேனும் ஆட்சிக்கு வந்துவிடவேண்டும் என்று அவர்கள் காட்டிய துடிப்பு, "வாழ்வா சாவா" பிரச்சினையில் திமுக இருப்பதையே காட்டுகிறது. "இதுதான் என் கடைசித் தேர்தல்" என்ற வெளிப்படையான அறிவிப்பு போன தேர்தல் போல இல்லாவிட்டாலும், கலைஞர் அவ்வாறே எண்ணுகிறார் என்பதும், இதை விட்டால் அடுத்த முறை என்பது கலைஞர் இல்லாத திமுகவால் சாத்தியப்படாது (என்று கலைஞர் எண்ணுகிறார்) என்பதாலும்தான் இப்படி முதல் ஓவரிலேயே கடைசி ஓவர் போல அடித்து ஆடுகிறார் என்றும் எண்ணத் தூண்டுகிறது.
 
இப்படிப்பட்ட நிலை அதிமுகவில் இல்லாவிட்டாலும், அவருடைய ஆசைகளைப் பலிக்க விட்டுவிடக்கூடாது என்று அவர்களும் முக்கியமான பவுலர்களை முதல் ஓவர் வீச விடுகின்றனர். கலைஞரின் பயந்த அணுகுமுறை அவர்களுக்குப் பெரிய ஆதரவாகத் தோற்றமளிக்கிறது.
 
எனவே, யார் ஜெயித்தாலும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படப்போவதில்லை, அதை எதிர்க்கட்சிகள் விடப்போவதும் இல்லை. எல்லாக்கட்சிக்கும் சின்னதோ பெரியதோ ஒரு ஊடகம் இருக்கிறது, ஏமாற்றினார் முதல்வர் என்று 24 மணிநேரமும் ஒலிக்க ஒலிபெருக்கிகளும் இருக்கின்றன.
 
எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும், நிம்மதியாக இருக்கப்போவதில்லை, மற்றவர் அவரை நிம்மதியாக இருக்க விடவும் போவதில்லை. இது இந்தத் தேர்தலில் ஒரு கவனிக்கத் தகுந்த விஷயம்.
 
யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க இந்த நிலையையும் மனத்தில் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.
 
இருக்கும் தெரிவுகளில், விஜயகாந்த் கட்சியை போட்டியிலிருந்து விலக்கி விடலாம். நடிகன் நாடாளக்கூடாது, பால்காரன் பாராளுமன்றம் போகக்கூடாது என்ற காரணங்களெல்லாம் இல்லை.
 
விஜயகாந்த், தன்னை கழகங்களின் நீட்சியாகவும் இன்னொரு கழகமாகவும்தான் முன்னிறுத்துகிறாரே ஒழிய, எந்த மாற்றுச்சிந்தனையும் அவரிடத்தில் காணப்படவில்லை, குடும்ப அரசியல் என்பது தேமுதிகவிலும் வெளிப்படையாகவே இருக்கிறது, கட்சியின் உள் கட்டமைப்பைப் பற்றி சரியான விவரங்கள் தெரியாததாலேயே அவர் கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை, இலவசங்களை பசு மாடு வரை விரிக்கத் தயாராக உள்ளவர் போன்ற விஷயங்கள் அவர் மீது எந்த நம்பிக்கையையும் தரவில்லை.
 
49 ஓ - ஒரு சரியான மாற்று அல்ல; யார் 49ஓ போட்டார்கள் என்பது கழகப் பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும் சாத்தியம், ஒருவேளை 49ஓ அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கழகங்களே ஆட்சியை அமைக்கும், அவர்கள் 49ஓ வினால் திருந்துவார்கள், பாடம் பெறுவார்கள் என்ற எந்த நம்பிக்கையும் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை, முத்து (தமிழினி) சொல்வது போல இருப்பவற்றுள் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் பெரிய தவறு இருப்பதாக எனக்கும் தெரியவில்லை.
 
எனவே, இருப்பது திமுக அணியா, அதிமுக அணியா என்ற கேள்வி மட்டும்தான்.
 
இரண்டிற்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதங்களை விட, ஏன் வாக்களிக்கக் கூடாது என்ற வாதங்களே அதிகமாய் இருப்பது தெளிவு. ஆனால், இவற்றுக்குள்தான் நமது தேர்வு இருந்தாகவேண்டியது, to get the nearest cliche,  காலத்தின் கட்டாயம்.
 
அதிமுக, கட்சியாக 182 தொகுதிகளில் போட்டியிடுவதால், சுமாரான அலைகூட அதிமுக அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட வழி செய்யும். ஆனால், திமுகவுக்கு ஆதரவாக பேரலை அடித்தால் மட்டுமே அறுதிப்பெரும்பான்மை பெற இயலும்.
 
யாராய் இருந்தாலும் தனித்து ஆட்சி அமைத்தால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கோ, ஊடகத்தின் ஒப்பாரிக்கோ, ஐந்து ஆண்டுகள் கவலைப்படவேண்டியதில்லை. எதையும் செய்யலாம் என்ற தைரியம் இருக்கும், அது பல தவறுகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
 
எனவே, நான் இன்று வாக்களித்தால் (யாராவது விமானக் கட்டணத்தைக் கொடுத்தால்) தி மு க அணிக்கே வாக்களித்திருப்பேன், அவர்கள் தனிப்பெரும்பான்மை பெறுவது கடினம் என்பதால் மட்டுமே! அந்த ஆட்சி  இன்னும் இரு ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களினால் (நிலைமை மாறினால் அதற்கும் முன்பே கூட) சட்டசபையின் வலு மாறக்கூடும்,  காங்கிரஸும், பா ம க வும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்காது என்பதால், இப்போது போடப்படும் வாக்குக்கு நீண்ட ஆயுள் இருக்காது என்பதால் மட்டுமே.
 
மற்றபடி, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் இப்போதும் சந்தேகம் இல்லை.

16 பின்னூட்டங்கள்:

Geetha Sambasivam said...

பி.ஜே.பியைப் பற்றிநினைத்துக்கூடப் பார்க்க முடியாதபடிக்கு அவ்வளவு மோசமான கட்சியா? அல்லது அவ்வளவு மோசமாக அரசு புரிந்தார்களா?ஏன் திரும்பத்திரும்ப திராவிடக்கட்சிகளே வரவேண்டுமா? இதற்கு யாராவது என்னை ஆரிய அடிவருடி என்பார்கள். சொல்லட்டும்.

Anonymous said...

You haven't given enough reasons for voting aginst 49-0.

" இரண்டிற்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற வாதங்களை விட, ஏன் வாக்களிக்கக் கூடாது என்ற வாதங்களே அதிகமாய் இருப்பது தெளிவு. ஆனால், இவற்றுக்குள்தான் நமது தேர்வு இருந்தாகவேண்டியது, to get the nearest cliche, காலத்தின் கட்டாயம்"

We need to confront the above challange. Then only, We (People) Win this election and , not by the politicians

Muthu said...

திமுக மேல் அதிக விமர்சனங்கள்
( கவுண்ட் பண்ணிட்டோமில்ல) வைத்திருந்தாலும் நிதர்சனமாகவும் நியாயமாகவும் சொல்லி உள்ளீர்கள்.


குறிப்பாக அந்த கூட்டணி ஆட்சி தேவை (கடிவாளம்) கருத்து.

சூப்பர்..


திமுக டெஸ்பரேட் என்பது உண்மை. ஆனால் "சுலபமாக வென்றிருக்கக் கூடிய" என்ற வார்த்தை தவறு.
தேர்தலுக்கு முன்பு அதிமுகவிற்கு ஒரு அலை வீசுவது போல் கட்டமைக்கப்பட்டிருந்தது.

அதை அப்படியே விட கலைஞர் என்ன முட்டாளா? ஆகவே அவர் பங்குக்கு மக்களை மட்டும் முட்டாளாக்க :) அவரும் கலர் டிவி அறிவித்திருக்கிறார்.வேறு வழியில்லை.

யுத்த தந்திரம் :)

Esha Tips said...

you are very great...........

ஜெயக்குமார் said...

//மு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார்//

இப்படி ஒரு செய்தி வெகு சீக்கிரத்தில் மாறன் குடும்ப ஊடகங்களில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே அவர்களின் ஊடகங்கள், தோழமைக்கட்சிதலைவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கூட ஸ்டாலினுக்கு அளிப்பதில்லை. தயாநிதி மாறன் தான் அவர்களில் ஊடகங்களில் முன்னிருத்தப்படுகிறார். இதற்கு பின்னால் என்ன சதிஉள்ளதென்று மாறன் குடும்பத்திற்கு மட்டுமே வெளிச்சம்.

இதனால் இதுபோன்ற செய்திகள் விரைவில் அதுவும் சன் மீடியாக்களிலேயே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பினாத்தல் சுரேஷ் said...

கீதா, நன்றி. பி ஜே பி ஜெயிப்பது பற்றீ நீங்கள் ஆசைப்படக்கூடாது என்று கூறவில்லை, ஆனால் கொஞ்சமாவது சாத்தியம் வேண்டாமா?

அனானிமஸ், ஓ போடுவதற்கு மிகப்பெரிய அட்வகேட், ஞாநியே அடுத்த தேர்தலில்தான் அதன் தாக்கம் இருக்கும் என்கிறார்.

முத்து, எண்ணிப்பாருங்கள்!

தமிழ்பூக்கள், நன்றி, எதற்கெனத் தெரியாவிட்டாலும்:-)

இலவசக்கொத்தனார் said...

கட்சி எல்லாம் சரி. யாரு வேட்பாளர் என்ற விஷயம் தேவையே இல்லையா? நீங்க சொல்லறபடி பார்த்தா எந்த ரௌடி நின்னாலும் ஓட்டு போடணுமா? (எந்த கட்சி சார்பாகவும்)

நிக்கறாங்கப்பா. இல்லைன்னு சொல்ல முடியாது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜெயக்குமார்.

நானும் கவனிக்கிறேன் - தோழமைக்கட்சிதலைவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கூட ஸ்டாலினுக்கு அளிப்பதில்லை - என்பதை.

ஆனால் அதற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கத் தயாராக நான் இல்லை:-)

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம்,

நல்ல கேள்வி.

செங்கல்பட்டு பாராளுமன்றத்தொகுதியில் 98ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ கே மூர்த்தி, சிறந்த முறையில் செயல்பட்டார் என்பதால், அடுத்த முறை பெரிய அளவில் வெற்றி பெற்றார். ஆனால், சுழற்சி என்று கூறி அமைச்சர் பதவி அவருக்கு மறுக்கப்பட்டு, பின் பென்ச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளார். (அன்புமணிக்கு இது பொருந்துமா என்பது வேறு கேள்வி). வேட்பாளரின் செயல்பாட்டுக்காக ஓட்டு போட்டும் என்ன நடந்தது?

கட்சி சரியில்லை என்றால் வேட்பாளர் ஒன்றும் செய்ய முடியாது என்ருதான் நினைக்கிறேன்.

VSK said...

கொஞ்சம் கூட அறிவுபூர்வமாக சிந்திக்காமல்,
அடிமட்ட மனிதனைப் போல் எழுதப்பட்ட விமரிசனம் இது!
இதற்குத்தன் அவனே இருக்கிறனே!
அவனுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால்,
சொதப்பி விட்டீர்களே!
வேட்பாளர் தகுதி, தொகுதி நலம், திறமை, செயல்பாடு இப்படி எதுவுமே கணகிலிடாமல்,
பொத்தாம்பொதுவாக,
சூரியனுக்கு, இரட்டை இலைக்கு, எனக் குத்தச் சொல்லும்
உன்GGஅல் பதிவு, தூக்கப்பட வேண்டிய ஒன்று!

இலவசக்கொத்தனார் said...

//கட்சி சரியில்லை என்றால் வேட்பாளர் ஒன்றும் செய்ய முடியாது என்ருதான் நினைக்கிறேன்.//

நல்ல வேட்பாளர் எங்க இருந்தாலும் போடலாம். ஆனா நல்ல கட்சியில் தப்பான வேட்பாளர் நின்னா கட்சி வித்தியாசம் பார்க்காமல் தோற்கடிக்கணும். அதான் நான் சொல்லறது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி எஸ் கே.

வேட்பாளர் தகுதி என்பது எந்தக்கட்சியைச் சார்ந்தவர் என்பதை பெரிதும் சார்ந்தே இருக்கிறது. தொகுதி நலம் என்பதும் கட்சி எவ்வளவு சுருக்குப்பையைத் திறக்கிறது என்பதைப்பொறுத்தே உள்ளதுதான் நிதர்சனம்.

அறிவுபூர்வமான சிந்தனைக்கா உங்கள் ஊரில் பினாத்தல் என்று சொல்வார்கள்?;-)

இலவசம்,

மோசமான வேட்பாளர்னு சில பேரைத் தோற்கடிங்க, மோசமான கட்சின்னு சிலபேரை, அப்புறம் செல்லாத ஓட்டாத்தான் முடியும்.

மேலும், நான் பிரசாரம் செய்யவில்லை:-(

என் மனதில் பட்ட நிலைப்பாட்டைத்தான் சொல்கிறேன்.

கப்பி | Kappi said...

காஞ்சியில் அதிமுக பிரசாரக் கூட்டத்தில் விசு தன் சொந்தக் கதை தவிர குறிப்பிட்ட ஒன்றிரண்டு விஷயங்களில் 'ஸ்டாலின் அதிமுக-வில் இணைவது' ஒன்று.. :-)

//திமுக சுலபமாக ஜெயித்திருக்க வேண்டிய இந்தத் தேர்தலை,//

ஒரு வருடத்திற்கு முன் இந்த நிலை இருந்தது உண்மை தான்...ஆனால் ஊடகங்கள் வாயிலாக அதிமுக மக்கள் மத்தியில் 'feel good' factor-ஐ அதிகப்படுத்தியதால் தான் திமுக இந்த அனுகுமுறையை ஏற்க நேர்ந்தது...

திமுக-விற்கு ஆட்சி அமைக்க 'உங்க வீட்டு டெஸ்பரேட் எங்க வீட்டு டெஸ்பரேட் இல்ல..கொக்க மக்கா டெஸ்பரேட்...'

ஏ.கே.மூர்த்தி பற்றி குறிப்பிட்டதும் உண்மை தான்...தனிப்பட்ட முறையில் பாமக-வை, அதன் கொள்கைகளை(?!) ஏற்காதவன் தான் என்றாலும் ஏ.கே.மூர்த்தி-க்கு வோட்டளித்தது இப்போது ஏமாற்றத்தையே தருகிறது...

Geetha Sambasivam said...

Mr.பெனாத்தல்,
அந்த சாத்தியம் வருவதற்குப் பெனாத்தக்கூடாதா என்பது தான் என் ஆதங்கம்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கப்பி பய (என்ன அர்த்தம் சார் இந்தப்பேருக்கு?)

ஏ கே மூர்த்தி விவகாரம், என் மனசுலே ரொம்ப நாள் இருந்தது, இப்போதான் எழுத முடிஞ்சது.

கீதா, பி ஜே பி மேல் எனக்கு சார்போ, சாஃப்ட் கார்னரோ இல்லையே.. என்ன பண்ண?

Geetha Sambasivam said...

பரவாயில்லை, இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீங்கள்தொடர்ந்து பெனாத்துங்கள். என் ஆதரவு உங்கள் பெனாத்தலுக்கே. கட்சி சார்பின்றி, வெளியிலிருந்து எல்லாம் இல்லாமல் தமிழ்மணத்திற்கு உள்ளிருந்தே ஆதரவு தருகிறேன்.

 

blogger templates | Make Money Online