May 25, 2006

மே 21, 1991 - இறுதிப்பாகம்

பாகம் 1, பாகம் 2, பாகம் 3
______________________________

இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன. காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை ஏதெனும் சாப்பிடக்கொண்டு வந்துகொடுத்தான் சுபர்ணோ.

ஜன்னல் உடைந்த சம்பவத்திற்குப்பிறகு வேறு யாரும் வரவில்லை என்பதால் சற்று ஆசுவாசம் அடைந்து பத்திரிக்கைகளைப்படித்து கொலை பற்றிய முழு விவரங்களும் அறிந்தோம்.

(இங்கே ஒரு ஆச்சரியமான Coincidence: Negoitiator கதையில் பெல்ட்டில் குண்டு வைத்து அமெரிக்க அதிபர் மகன் இறந்த கட்டத்தைப் படித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் பெல்ட் குண்டினால் கொல்லப்பட்டார் ராஜீவ் என்ற தகவலை அறிந்தேன்!)

செய்தித்தாள்களில் கலவரம் பற்றிய பெரிய செய்திகள் எதுவும் இல்லை.

இரண்டு நாள் கழித்து, சுபர்ணோ சொன்னான்: "இனி தைரியமா வெளிய வரலாம், பிரச்சினை ஒன்றும் இனிமே வராது"

"ஏன், எப்படி ஆச்சு?"

"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளுங்க, தமிழர்களுக்கு ஆதரவா களம் இறங்கிட்டாங்க"

ஆறுதலாக இருந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஜா மு மோ பற்றி ஒரு சிறு குறிப்பு:

அன்றிருந்த பீஹாரின் கனிம வளங்களும், தொழிற்சாலைகளும் பெரும்பாலும் தெற்கு பீஹாரிலேயே இருந்தாலும், அதிகாரமையங்கள்(பாட்னா, சட்டசபை) , ஓட்டு வங்கிகள் ஆகியவை வடக்கில் மையம் கொண்டிருந்த காரணத்தால், வளர்ச்சிப்பணிகள், உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் வடக்கு பீஹாரில் பெரும்பான்மையாக நடந்தன. சோட்டாநாக்பூர் என்றும், ஜார்க்கண்ட் என்றும் அழைக்கப்பட்ட தெற்கு பீஹாரில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை விழவில்லை.

தனி மாநிலமாக தெற்கை ஆக்கினால் இந்நிலைக்கு விடிவு வரும் என்ற எண்ணத்தில், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கோஷமிட்டு தனி மாநிலம் கேட்டுப் பல போராட்டங்கள் நடத்தின சோட்டாநாக்பூர் பிராந்தியக்கட்சிகள். அதில் முக்கியமானது ஜா மு மோ.

பெரும்பாலும் மலைவாழ்மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தவர்களைக்கொண்ட ஜா மு மோவில் படித்தவர்கள், அரசியல் அனுபவம் பெற்றவர்கள் மிகக்குறைவே. அவர்களின் போராட்ட முறைகள் வன்முறையின் அடித்தளத்திலேயே விளைந்தவை. மரங்களை வெட்டி சாலை மறியல், போலீஸ் நிலையத்தைக் கொளுத்துதல், அரசாங்க பஸ்களைக் கொளுத்துதல் போன்று அவர்களின் போராட்டங்கள் அனைத்துமே பொதுமக்களுக்குத் தொந்தரவாகவே முடிந்தன. அரசாங்கம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை - ஜா மு மோ - பிற்காலத்தில் தேசியக்கட்சிகளுடன் கூட்டணி கொள்ளும் வரை. பிறகே சமீபத்தில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.

இந்தப்பின்னணியில், வன்முறைக்கு எதிராக, கலவரத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால், காங்கிரஸ் தொண்டர்களின் வெறியாட்டம் அடங்கிவிடும் என்பது நிச்சயம். இந்தப்பகுதியில் ஜார்க்கண்டை எதிர்க்கத் துணிய மாட்டார்கள்.

மூன்று நாட்களுக்குப்பின் சுதந்திர மூச்சு விட்டோம்.

அதற்குப்பிறகும் பல நாட்கள் நிம்மதியாகத் தூங்க விடாத பயங்கள், இரவு நேர திடுக்கிட்ட விழிப்புகள் - ஏன் இன்னும் கூட சில நேரங்களில் இந்த நினைவுகள் படுத்துகின்றன.

முத்தாய்ப்பாக, சில மாதங்கள் கழித்து கிருஷ்ணாவைச் சந்திக்க நேர்ந்தபோது அவன் சொன்னான்..

"தலைவர் இறந்த அன்று உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்"

நான் பயந்தது நியாயம்தான் போலிருக்கிறது..

"உன்னை எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு ஓடச்சொல்லி எச்சரிக்கை செய்துவிடலாம் என்றுதான் தேடினேன்"

"அந்த ஜீப் விவகரத்திறகாக நீ என்னைக்கொல்லத் தான் தேடினாய் என்று பயந்திருந்தேன்" சொல்லியே விட்டேன்.

"என்ன பேச்சு பேசுகிறாய்? உனக்கும் எனக்கும் தகராறு இருந்திருக்கலாம் - ஆனால் தெரிந்தவனைப் போய் கொல்வேனா? உனக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன்"

மனித மனங்களைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது என நினைத்தாலும் அவன் சொன்னதை நம்பினேன்.

தமிழர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என பத்து நிமிடம் முன் சொன்ன சுபர்ணோ என்னைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தான். கலவரம் ஏற்படுத்திப் பெயர் வாங்க நினைத்த அரசியல்வாதியும் தெரிந்தவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்திருக்கிறான்.

"இது என்ன மேட்டர்? ஒரு மூணு நாள் வீட்டுக்குள்ளே கிடந்தே, ஒரு அடியும் படாமதானே பொழைச்சே, இதைப்போய் நாலு பாகமா எழுதறியே" என்றும் இதைப்படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால் என் பயம் சத்தியம். பிழைத்ததால் மட்டும் நானும் பலியாவதற்கு இருந்த சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விட்டன என்று சொல்ல முடியாது.

அன்று எனக்கு 21 வயது. அதற்கு முன்பான 21 வருடங்கள் தராத அனுபவங்களையும், புரிதல்களையும் அந்தச்சம்பவம் தந்தது.

குஜராத்தில் துரத்தப்பட்ட முஸ்லீம்களையும், கல்கத்தாவில் கொல்லப்பட்ட இந்துக்களையும், ஹோசூருக்கு விரட்டப்பட்ட தமிழர்களையும், அதிரடிப்படையால் அச்சுறுத்தப்பட்ட மலைவாசிகளையும் - அவர்களின் துன்பங்களையும், வலியையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை என் முதல் 21 வருடங்கள் தந்திருக்கவில்லை.

எந்தப்பிரச்சினைக்கும் காரணம் ஒரு இனம், அவர்கள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற சிந்தனை என் மனத்தில் ஏறாததற்கு இந்த அனுபவங்கள் ஒரு முக்கியக்காரணம்.

என் பாட்டி தைரியமாக பாம்பும் பல்லியும் பேய்க்கதைகளும் உலாவும் இடத்துக்கு வெளிச்சம் இல்லாமல் போவதைப்பற்றிக் கேட்டபோது அவள் சொன்ன "பேய் பத்தி பயம் ஒன்னும் இல்ல, மனுசப்பேய்ங்களைப்பத்திதான் பயப்படணும்" என்று சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கியதும் இதனால்தான்.

என் விடலைத்தனம் விடைபெற்றதும் இந்தத் தருணத்தில்தான்.

படித்த அனைவருக்கும் நன்றி. கருத்துக்களைக் கூறுங்கள்.

20 பின்னூட்டங்கள்:

மணியன் said...

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பற்றி தெரிந்து கொண்டோம். மனிதர்களை அவர்கள் சொல்லும் வார்த்தைகளால் எடை போடமுடியாது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஸ்ரீராம். முதல் வருகையோ?

மணியன், நீங்கள் ஒருவர்தான் நான்கு பதிவுக்கும் பதில் எழுதிய ஒரே நபர். நட்சத்திர வாரத்திலும் என்னை ஊக்குவித்த உங்களுக்கு என் நன்றி.

ஆனால், இந்தப்பின்னூட்டத்தில் என்ன சொல்லவருகிறீர்கள்? நான் கிருஷ்ணாவின் சொல்லை நம்பியதைப்பற்றியா? என் நம்பிக்கை தவறல்ல என்பதை அடுத்தும் நான் அங்கே வாழ்ந்த 4 ஆண்டுகளில் தெரிந்துகொண்டேன்.

தவறான நேரத்தில் இடப்பட்ட இடுகையோ? பெரிய அளவில் படிக்கப்படவோ, பின்னூட்டப்படவோ இலையே?

manasu said...

//தமிழர்களையெல்லாம் ஒழிக்க வேண்டும் என பத்து நிமிடம் முன் சொன்ன சுபர்ணோ என்னைக் காப்பாற்ற பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தான். கலவரம் ஏற்படுத்திப் பெயர் வாங்க நினைத்த அரசியல்வாதியும் தெரிந்தவர்களுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்திருக்கிறான்.//


இதனால் தானோ இந்தியா இன்னும் இந்தியாவாய் இருக்கிறது.

நல்ல எழுத்து நடை.

வாழ்த்துக்கள் சுரேஷ்.


//தவறான நேரத்தில் இடப்பட்ட இடுகையோ? பெரிய அளவில் படிக்கப்படவோ, பின்னூட்டப்படவோ இலையே? //


எனக்கும் வருத்தமாய் தான் இருக்கிறது சுரேஷ்.

லக்கிலுக் said...

தவறாமல் ஆர்வத்துடன் 4 பதிவுகளையும் படித்தேன்... படித்து முடித்தபின் என் கருத்தினை சொல்லலாம் என்றிருந்தேன்...

Excellent - அற்புதம்!

வேறு வார்த்தைகளில் விமர்சிக்க முடியவில்லை உங்கள் அனுபவங்களை நீங்கள் எழுதியிருக்கும் பாங்கை.....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி மனசு,

ஆனால் வருத்தம் எல்லாம் இல்லை. என் மனசில் இருந்து ஒரு சுமை இறங்கியதுபோல உணர்ந்தேன், இதை எழுதி முடித்த பிறகு. என் மனைவியிடம் கூட நான் இவ்வளவு விரிவாக இவற்றைச்சொன்னதில்லை.

நன்றி லக்கிலுக்.

siva gnanamji(#18100882083107547329) said...

'கங்கை இன்னும் வற்றிவிடவில்லை'
இந்த மண்ணில் ஈரம் எந்த நாளும்
நிலைக்கும்
எங்கோ எவனோ எதையோ செய்ய
இதுதான் சமயமென்று கலவரம் செய்யும் சமூக விரொதிகளின் ஆர்ப்பாட்டம் நஷ்டத்தை ஏற்படுத்தலாம்;வெற்றி பெறுவதில்லை

Geetha Sambasivam said...

உங்கள் எல்லாப் பதிவுகளையும் படித்தேன். உங்கள் பயம் நியாயமானது தான். மக்கள் வெறியில் என்ன செய்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. தப்பியது உங்கள் அதிர்ஷ்டம் மட்டும் இல்லை உங்கள் பெற்றோர் மற்றும் மனைவியும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறார்கள். இது நிச்சயம் கடவுள் செயல்தான்.

மணியன் said...

//ஆனால், இந்தப்பின்னூட்டத்தில் என்ன சொல்லவருகிறீர்கள்? நான் கிருஷ்ணாவின் சொல்லை நம்பியதைப்பற்றியா? என் நம்பிக்கை தவறல்ல என்பதை அடுத்தும் நான் அங்கே வாழ்ந்த 4 ஆண்டுகளில் தெரிந்துகொண்டேன்.//

சுரேஷ், நான் சொன்னது கிருஷ்ணாவின் முன்னாளைய வார்த்தைகளை. நல்லவன், அமைதியானவன் எனக் காணப்பட்டவன் இத்தகைய சமயங்களில் எதிரியாவதும் நாளும் சண்டைபோடுபவர் நன்மை செய்வதும் பெரும்பாலும் காணலாம். ஒருவேளை எப்போதும் மனிதன் தனது அகத்தை மறைத்து முகமூடி (hypocricyயை தமிழில் தெரிவிக்க வேறுவார்த்தை கிடைக்கவில்லை :)) அணிவதால் இருக்குமோ ?அசம்பாவித சமயங்களில் அகத்தின் அழகோ கோரமோ வெளிவருகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிவஞானம்ஜி. ஆனால் அந்த நஷ்டம், சிலரின் வாழ்க்கையில் மாறாத பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறதே...

நன்றி கீதா சாம்பசிவம். நானும் குறிப்பிட மறந்துவிட்டேன், என் பக்தியும் இச்சம்பவத்தால் அதிகரித்தது உண்மை.

நன்றி மணியன், நாம் யாரையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.

பொன்ஸ்~~Poorna said...

பயங்கரமான கதையாத்தான் எழுதி இருக்கீங்க.. நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான்.. யாரையும் முழுதாகப் புரிந்து கொள்வது கடினம் தான்..

நாலு பாகமும் நானும் படிச்சேன்.. மொத்தமா கடைசியில் எழுதலாம் என்று இருந்துவிட்டேன்..

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொன்ஸக்கா!

Sam said...

முந்தைய பதிவில பின்னூட்டம் இடல. அடுத்து என்ன எழுதப் போறீங்கன்னு ஆவலா எதிர்பார்க்க
வைத்த தொடர். நல்ல எழுத்து நடை. ரொம்ப நல்லா இருந்தது. நல்ல வேளை எதுவும் அசம்பாவிதமா நடக்கலை. சின்ன திரைப்படமாக் கூட இதை எடுக்கலாமே!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சாம்.

Prabu Raja said...

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு ராஜா.

Anonymous said...

Excellent narration.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனானிமஸ்.

Prasanna said...

அருமையான பதிவு சார். நான் உங்க பதிவுகள அப்போ அப்போ படிச்சு வந்தாலும் நான் அனுபவிச்ச சில விஷயங்கள நீங்க எழுதி இருக்குற விதத்தை பார்க்கும் போது கண் முன்னாடி நடக்குற மாதிரி இருந்தது. நல்ல விஷயங்கள் நாளானாலும் படிக்கப்படும் பின்னூட்டமிடப்படும். அதனால தொடர்ந்து எழுதுங்க. இந்த மாதிரி நேரத்துல ரயில்வே ஸ்டேஷன் போயிடணும் அப்படின்னு எங்க பாப்ஸ் சொல்லுவார். அங்க தான் சரியான விலைல உணவு கிடைக்கும்னு.
பிரசன்னா

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பிரசன்னா..

ரயிலிவே நிலையத்துக்குச் சென்றுவிடுவது நல்ல அட்வைஸ்தான் - பந்த், ஹர்த்தால், சாலை அடைப்பு போன்ற நேரங்களில். இது ஒரு கலவர நேரம், தமிழர்களைத் தேடிக்கொன்ற நேரம்.. ரயில்வே ஸ்டேஷன் இங்கே பொருந்தாது என்றே நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

இப்பதான் நாலையும் வாசிச்சு முடிச்சேன். சம்பவம் நடந்த இத்தனை நாட்களுக்குப்பின் பதற்றம் இல்லாமல் அதைப் பற்றிப் பேசவோ சொல்லவோ சிலசமயம் நினைச்சுச் சிரிக்கவோகூடமுடியும். ஆனால்......

சம்பவம் நம்ம வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும்போது.......... திகிலும், மண்டைக்குடைச்சலுமாத்தான் இருந்துருக்கும். வாசிக்கும்போது அந்த பயம் தெரிஞ்சது.
ஒரு நொடி போறதுகூட ஒரு மணி நேரமாத்தான் இருந்துருக்கும்.

பூட்டிய அறையில் யாருடனும் பேசாமல் ச்சும்மாக் கிடப்பது... பெரிய சவால்!

நடையைப் பத்தி நா தனியா ஒன்னும் சொல்றதுக்கில்லை. இது நடையா? அருமை !!

 

blogger templates | Make Money Online