May 31, 2006

தேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)

தேன்கூடு - தமிழோவியம் நடத்திய ஏப்ரல்-மே மாதத்திய போட்டி - தேர்தல் 2060 -இல் நான் பரிசு பெற்றதைப் பற்றி ஏற்கனவே தேவையான அளவுக்கும் மேலேயே பெருமை அடித்துக்கொண்டு விட்டேன்.
 
மழை விட்டாலும் தூவானம் விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தப் போட்டியின் பரிசுகள் தரும் உரிமைகள். என் "அடங்குடா மவனே"வுக்குக் கொடுத்த விடுமுறையை அதிகப்படுத்திவிடுமோ என அஞ்சும் அளவுக்கு:-))
 
மே-ஜூன் மாதத்திய போட்டிக்கான தலைப்பை அறிவிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள், அதற்கு முதற்கண் நன்றி.
 
என்ன தலைப்பு வைக்கலாம் எனச் சிந்திக்கும்போது, தேன்கூடு - தமிழோவியத்தின் முந்தைய போட்டியின் தலைப்பு எப்படி இருந்ததோ, அவர்கள் விதிமுறைகள் என்ன சொல்லியனவோ அவற்றை ஒரு வரைமுறையாகக் கொண்டேன்.
 
1. தலைப்பு கவரும் விதமாய் இருக்க வேண்டும்;
2. புதுமையாக இருக்க வேண்டும்
3. பல விதமான படைப்புத் திறமைகளையும் - கதை என்றோ, கவிதை என்றோ சுருக்காமல், கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் என்று படைப்பிலக்கியத்தின் அத்தனை கூறுகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாய் இருக்க வேண்டும்.
 
மேலும், அதிகப் படைப்புகள் வர வழி செய்யும் விதமாயும் இருக்க வேண்டும். குறைந்த படைப்புகளே வரும் பட்சத்தில், பினாத்தல் போன்ற படைப்புகள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுகின்றன:-))
 
வெவ்வேறு சூழல்களில், நாடுகளில், பணிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தினமும் சந்திக்கும், பாதிப்புக்குள்ளாகும், நம் பார்வைகளையும் குணநலன்களையும் புரட்டிப்போடும் ஒரே பொது நிகழ்வு - மாறுதல்.
 
அதிலும் எல்லாரும் சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான மாறுதல், விடலைப்பருவம் விடைபெறும் தருணங்கள்.
 
இத்தருணங்கள் நம் சிந்தனாமுறைகளை, அணுகுமுறைகளை, கொள்கைகளைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. எதற்கும் கவலைப்பட்டிராமல் இருந்த இளைஞன் / இளைஞி, பொறுப்பேற்று, குடும்பத்தின் கொள்கைகளை வகுக்கத் தயாராகும் மாற்றம், வெளிப்பார்வைக்குச் சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தனிப்பட்ட நபரின் சரித்திரத்தில் மிக முக்கியமான தருணம்.
 
இத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal  நிகழ்வு.
 
எனவே, நான் தேர்வு செய்திருக்கும் தலைப்பு:
 
வளர் சிதை மாற்றம்
                                       bye-bye adolocense
 
இந்தத் தருணத்தை, படைப்பாக்கி (கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள்  - எப்படி வேண்டுமானாலும்), பதிவாக்கி, தேன்கூட்டில் சமர்ப்பியுங்கள். - இங்கே சுட்டி
 
படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூன் 20
 
ஜூன் 21 - 25 வரை வாக்கெடுப்பௌ நடைபெற்று, முடிவுகள் ஜூன் 26 அறிவிக்கப்படும்.
 
 
நன்றி. 
 

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...

மிகவும் வித்தியாசமான தலைப்பு. இது ஒரு சுவாரஸியமான போட்டியாக இருக்கும். ந்ன்றி.

இலவசக்கொத்தனார் said...

இப்போதான் நம்ம தெக்கிக்காட்டான் - 'எனது வளர்சிதை மாற்றத்தினை...' என்று எழுதியதற்கு 'ஏங்க தெகா. நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ என்ன திடீர்ன்னு சமக்கால நவீனத்துவத்தோட எழுதறீங்க?கொஞ்சம் தமிழில் எழுதுங்க சாமி.' ன்னு பின்னோட்டம் போட்டுட்டு வரேன். இப்போ நீங்க.

அட போங்கப்பா.

Prabu Raja said...

தலைவா! என்னா ப்ரைஸ் குடுத்தாங்கன்னு சொல்லவே இல்லயே..

தமிழோவியத்துல உங்க போட்டோ பாத்தேன். ப்ளாக்ல அந்த போட்டோஷாப் இமேஜ் ஏமாத்திடுச்சி.

U r looking cute.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜாஃபர்.

இலவசக்கொத்தனார், வருகைக்கு நன்றி. கருத்துக்கு:-(( ஏன்யா ஆரம்பிக்கும்போது அபசகுனமா!

பிரபு ராஜா - அது நான் இல்லீங்கோ! வேற யாரோ படிக்கிற புள்ள! (+2 மானில முதல் மாணவன்)

என்னோட எழுத்துகள் என்ன அவ்வளவு இளமையாவா இருக்கு? டான்க்ஸ்!

குமரன் (Kumaran) said...

நான் என் பாட்டுக்கு எழுதிக்கிட்டு இருப்பேன். போட்டிக்கெல்லாம் எழுத மாட்டேன். ஆமாம். ஏம்பா சும்மா வற்புறுத்துறீங்க. என்னால முடியாதுன்னா முடியாது. அவ்வளவு தான்.

வேற ஒன்னும் இல்லை சுரேஷ். உங்களுக்கெல்லாம் முதல் பரிசு குடுத்துட்டாங்களேன்னு கொஞ்சம் மன வருத்தம். அவ்வளவு தான். - இப்படி சொல்வேன்னு நினைச்சீங்களா? அதெல்லாம் இல்லைங்க. தலைப்பு நல்லா இருக்கு. கொத்தனார் ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பார். கண்டுக்காதீங்க. வாழ்த்துகள்.

Prabu Raja said...

சே! திரும்பவும் ஏமாந்துட்டேனே!!

:-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குமரன்.

பிரபு ராஜா:-))

 

blogger templates | Make Money Online