May 9, 2006

தேர்தல் 2060 - சிறுகதை


வேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் - இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு நாளாய் பிரச்சினையின் மூலாதாரத்தைப் பிடிக்க  முடியவில்லை.  
 
கைப்பேசி சிணுங்கியது. இது வேறயா? கிரீஸும் எண்ணையும் வழிந்த கையுறையைக் கழட்டி போனை எடுத்தேன்.
 
குறுஞ்செய்திதான்.
 
"இன்று வாக்குப்பதிவு, இன்னும் 12 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி வாக்களியுங்கள்.
 
வாக்களிக்க வேண்டிய சாவடியின் வழியைப்பெற, இங்கே அழுத்துங்கள்" இங்கேவில் ஹைப்பர்லின்க் ஒளிர்ந்தது.
 
பார்த்துக்கொண்டிருக்கும்போதே 12 மணி என்பது 11:59:59 என்று கீழிறங்க ஆரம்பித்தது. இனி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு சிணுங்கல் நிச்சயம்.
 
அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஏன் மூன்றாம் கியர் விழவில்லை?
 
மறுபடி கைப்பேசி அதட்டியது.
 
"டேய் போனை எடுறா, நான் வசந்த்"
 
"டேய் போனை எடுறா, நான் வசந்த்"
 
வசந்த் கோபமாகத் தெரிந்தான்.
 
"என்னடா கோபம்" என்றேன்.
 
"ஏமாத்திட்டாங்கடா.. இலவச போனுன்னு சொன்னாங்களேன்னு பழைசை சரண்டர் பண்ணிட்டு புதுசா இதை வாங்கினேன்"
 
"என்ன பிரச்சினை?" கேட்பதற்குள் அவன் உருவம் திரையிலிருந்து அகன்று
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்" என்றது அ உ க மு க தலைவர் உருவம்.
 
"இதைத்தாண்டா சொல்ல வந்தேன். ஏமாத்திட்டானுங்க. காசு கொடுத்தாலும் இந்த மாதிரி நடுவுலே வந்தெல்லாம் கொல்லாத போன் தான் வேணும்"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"அட் நீ வேற.. நண்பர்கள் பேசும்போது குறுக்கே பேசாதேடா" என்றேன்.
 
"அய்யோ அப்படியெல்லாம் எதுவும் பேசாதே. வாய்ஸ் ரெகார்ட் பண்ணி வீட்டுக்கு தொண்டர்களை அனுப்பிடுவாங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"அப்படிக்கூடவா செய்வாங்க?"
 
"அதையும் செய்வாங்க, அதுக்கு மேலேயும் செய்வாங்க! சரி ஓட்டு போட்டுட்டயா?"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"இது வேற நடுவுலே தொண தொணன்னுகிட்டு - இன்னும் 12 ஹவர் இருக்கே"
 
"சரிதான் - நீ லேட் பண்ணா யாராவது ஹேக்கர் வந்து போட்டுட்டு போயிடுவான்"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"மொதல்ல போனை மாத்து. ஹேக்கருங்க கூட நுழைய முடியுமா என்ன? பாஸ்வேர்டு இல்லாம முடியுமா?"
 
"அதெல்லாம் செர்வர்லேயே டிரிக் பண்ணிடுவாங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"நீ யாருக்குப் போட்டே"
 
" வேற யாருக்கு? என் ஜாதிக்காரன் வக்கீல் முன்னேற்றக்கழகத்துக்கு கூட கூட்டணி வச்சிருக்க அ உ க மு கவுக்குதான்"
 
"ஏண்டா இப்பவும் ஜாதி பாத்துப் போடறீங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"பின்ன வேற யாருப்பா எங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருவாங்க? எல்லா வேலையும்  இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட்டா மெரிட்டுன்றாங்க! - உனக்கும்தான் சொல்றேன் - க மு க காரனுங்க எஞ்சினியர்களையும் நிம்மதியா இருக்க உட மாட்டானுங்க. ."
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
எனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. "அதுக்காக இப்பவும் நீ ஜாதி பாக்கறதெல்லாம் சரியில்லை"
 
"அத்தை உடுறா. புதுசா நடிகன் காமேஷ் ஆரம்பிச்சிருக்கானே கட்சி - அதுக்கு என்ன சான்ஸு?"
 
"அவனுக்குப் பொழைக்கவே"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"தெரியலடா. அவன் அவன் பெரிய பெரிய மேட்டர்லாம் இலவசமாத் தரேன்றபோது இவன் லாப்டாப் தரேன்றான். யார் அதுக்குப்போயி ஓட்டுப்போடப்போறாங்க"
 
"சரி, க மு க தலைவருக்கு எக்ஸ்பயரி டேட் வந்தாச்சுல்லே, யாரை அவர் பதவிலே உக்கார வைக்கப்போறாராம்?"
 
"க மு க, அ உ க மு க பத்தி இந்தப்போன்லே பேச வேணாம்.. ரிஸ்க்கு"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"நான் கால் பண்ணட்டுமா?"
 
"இன்னும் ரெண்டு நிமிஷத்துக்குள்ள பண்ணு"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர் - இந்த உரையாடலில் ஆட்சேபகரமான எந்தச்சொல்லாடலும் இல்லாததால் எங்கள் தகவல் தொகுப்பிலிருந்து நீக்கப்படுகிறது. மறவாதீர் அ உ க மு க." 
 
இவன் சொல்வதும் சரிதான். தாமதம் செய்யாமல் உடனே ஓட்டுப்போட்டுவிட வேண்டும்.
 
என் வாகனத்தின் எஞ்சினுக்கு உயிர் கொடுத்தேன். ஓட்டுப்போட்டுவிட்டு வந்து வேலையைத் தொடரலாம். கஸ்டமர் திட்டினால் சகித்துக் கொள்ளலாம் - அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது முடியாது.
 
எஞ்சினின் குரல் கேட்டது - "எங்கே செல்ல?"
 
கைப்பேசியிலிருந்து வாக்குச்சாவடியின் GPS மேப்பின் லின்க்கைக் கொடுத்தேன்.
 
யாருக்கு ஓட்டுப்போட? குழப்பம் தலைதூக்கியது.
 
பொ மு க (பொறியாளர் முன்னேற்றக்கழகம்) க மு க (கணிமை முன்னேற்றக்கழகம்) வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. க மு க தலைவர் ஏராளமாக இலவசம் அறிவித்திருந்தாலும் எதாலும் எனக்குப் பிரயோஜனம் இல்லை. அதே நிலைதான் அ உ க மு க விலும். (அகில உலக க மு க) எந்த இலவசமும் எனக்கு உதவாது.
 
எஞ்சின் கிளம்பி சீராக ஓடுகிறது. "தமிழ்க்கணிமை அமைக்கப் பாடுபடும் க மு கவுக்கே உங்கள் ஓட்டு என்றார் வாகனத்திரையில் க மு க தலைவர்.
 
தமிழ்க்கணிமையை வைத்தே இன்னும் எத்தனை நாள் ஓட்டு வாங்குவார் இவர்? 40 ஆண்டுகளாக நாட்டை ஏமாற்றியது போதாதா? இதே முழக்கத்தை வார்த்தைகள் மட்டுமே மாற்றி அ உ க மு க தலைவர் சொல்கிறார். இந்த இருவரைத் தவிர வேறு வழி இல்லையா?
 
வசந்துக்கு போன் போட்டேன்.
 
"ஆமாம், 'இருவருக்குமே எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை'ன்னு ஓட்டு போட முடியுமா?"
 
"அது இந்த எலெக்ஷன்லே முடியாது. அடுத்த எலக்ஷன்லே செய்றதா சொல்லி இருக்காங்க"
 
"எதாவது DMD உபயோகப்படுத்தலாமா?" DMD என்பது Decision Making Device.
 
"பூத்துக்குள்ளே உபயோகப்படுத்த முடியாது. வெளியவே யூஸ் பண்ணிடு"
 
என் கைப்பேசியிலிருந்து DMD நிரலைத் துவங்கினேன்.
 
அது கேள்விகள் கேட்க ஆரம்பித்தது.
 
"உங்கள் வயது என்ன?"
 
"உங்கள் ஜாதி என்ன?"
 
"உங்கள் வருமானம் என்ன"
 
இப்படி 20 கேள்விகள் கேட்ட பின்,
 
"பொதுவாக உங்கள் ஜாதியைச் சேர்ந்த, உங்கள் வயது வருமானத்துடன் ஒத்துப்போகும் பெரும்பான்மையோனாரின் வாக்கு விவரம் இன்னும் சற்று நேரத்தில் இத்திரையில் காட்டப்படும்"
 
0% ல் ஆரம்பித்து பொறுமையாக பச்சை நிறமாகிக்கொண்டிருந்தது.
 
40% ஐத் தாண்டும்முன் வாக்குச்சாவடி வந்துவிட்டது.
 
மெடல் டிடக்டரைத் தாண்டி உள்ளே சென்றபோது காவலர் -"யோவ் - அந்த செல்போனை இங்கே வச்சுட்டுப் போ" என்றான். இவர்களுக்கு மரியாதையே தெரியாதா?
 
DMD முடிவு தெரியாமலே உள்ளே சென்றேன், வாக்களித்தேன்.
 
திரும்பி வருகையில் மீண்டும் வசந்தை அழைத்து விவரம் சொன்னேன்.
 
"அப்போ, DMD சொன்ன மாதிரி ஓட்டுப் போடலையா?"
 
"எங்கே - அதுக்குள்ளேதான் உள்ளே போயிட்டேனே."
 
"அப்புறம் எப்படிதான் முடிவு பண்ணே"
 
"ஒரு பழைய காலத்து DMD யை யூஸ் செஞ்சுதான்.."
 
"அது என்னடா பழைய காலத்து DMD?"
 
"கையிலே ஒரு காயின் இருந்துது.. பூவா தலையா போட்டுப் பாத்தேன்"
 
__________________________

22 பின்னூட்டங்கள்:

Unknown said...

கலக்கல் கதை பினாத்தல்!

எந்தக்காலத்திலும் இந்த 'இலவசங்கள்' விடாது என்பது தெளிவாகிறது!

Unknown said...

கதை நல்லா இருக்கு சுரேஷ்.

DMD சூப்பர் :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி துபாய் வாசி, கே வி ஆர்.

தேன்கூட்டில் வாக்குப்போட மறந்து விடாதீர்கள்:-)

கதை கொஞ்சம் சினிகல்தான், ஆனால் என் நம்பிக்கை அவ்வளவுதான்- என்ன செய்ய?

ஓகை said...

நல்ல கற்பனை. DMD அருமை. என் கதை ஒன்றும் போட்டியில் இருக்கிறது. அதையும் படியுங்கள்.
நடராஜன்.

தருமி said...

2060-ல் வாக்குச்சாவடிக்குப் போய்தானா ஓட்டு போடணும்? இருக்காதுன்னு நினைக்கிறேன்.

Boston Bala said...

எனக்குப் பிடிச்சிருக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஓகை. உங்களுடையதும் ஏற்கனவே படித்துவிட்டேன்.. பின்னூடம் இடுவதில் சொந்தச்சிக்கல்கள்:-(

சாம், கற்பனையில், சில விஷயங்களாவது நம் இன்றைய வாழ்வுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று கருதிச் சேர்த்தது அந்த வாக்குச் சாவடி மேட்டர், மேலும் காவலர் நிலையையும் சொல்லிவிடலாம் அல்லவா?

நன்றி பாஸ்டன் பாலா,

என் நேரம், ரொம்பக்கொஞ்ச நேரமே முகப்பில் இருந்ததால், பலரால் படிக்கப்படவில்லை:-(

G.Ragavan said...

பினாத்தல் மிக அருமை. சூப்பரப்பு.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஜி ராகவன்!

Geetha Sambasivam said...

Always old is gold.

பினாத்தல் சுரேஷ் said...

thanks geetha..

this comment praises or criticizes the story? too cryptic:-)

தகடூர் கோபி(Gopi) said...

:-)

சூப்பர்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி..

எல்லாரும் வாக்களிக்கும்போது மறந்துவிடாதீர்கள்:-)

பொன்ஸ்~~Poorna said...

க மு க, அ உ க மு க, பொ மு க.. சூப்பருங்க...

உங்க ப.ம.க வை விட்டுட்டீங்க?!!!

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸக்கா,

நான் எழுதினதெல்லாம் மோசமான கட்சிகளைப்பற்றி.. அப்படிப்பட்ட ஒரு கதையில் நல்ல கட்சியான ப ம க வை எப்படிக்குறிப்பிடுவேன்?

வ வா ச வைப்பற்றி குறிப்பிட்டிருக்கலாமே என்று நீங்கள் புலம்புவது என் மனக்கண்ணில் தெரிகிறது.. நாளை காலை இருக்குமா என்று தெரியாத ஒரு சங்கத்தைப்பற்றி 2060ல் எப்படிக் கறபனை செய்ய முடியும்?

Sud Gopal said...

Good one Penathal.

All the best.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சுதர்சன்.கோபால்.

உங்கள் வாசிப்பிற்கும், வாழ்த்துகளுக்கும்.

Unknown said...

வாழ்த்துகள் பினாத்தலாரே!!!

பினாத்தல் சுரேஷ் said...

ந்னறி கே வி ஆர், உங்கள் ரிக்ஸாப் பிரசாரத்துக்கும் சேர்த்து..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஞானியார்.

கைப்புள்ள said...

வாழ்த்துகள் பெனாத்தலாரே! நல்ல கதை.

 

blogger templates | Make Money Online