முதல் பாகம் இங்கே:
இரண்டாம் பாகம் இங்கே:
படித்துவிட்டு வாருங்கள், மூன்றாம் பாகத்தை இங்கே படிக்க.
_____________________________________
எரிகின்ற குடிசையைப்பார்த்ததும் பயம் இன்னும் அதிகமானது இருவருக்கும். ஐந்து நிமிடம் அங்கேயே நின்றதில் வேறு யாரும் ஆட்கள் நடமாட்டம் கண்ணில் படவில்லை என்பது சற்றுத் தைரியத்தைக் கொடுத்தது.
"போய்ப்பாத்துடலாம?" என்றேன்.
"நீ இங்கேயே இரு. நான் போய்ப்பாக்கறேன், எவனாவது இருந்தாலும் என்னை ஒண்ணும் பண்ண மாட்டாங்க."
நான் அதை நம்பவில்லை. இவன் என்னுடன் சுற்றுவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். நான் எங்கே என்ற கேள்வியை கிருஷ்ணா இவனைக் கொஞ்சிக்கேட்கப்போவதில்லை.தமிழனாகப் பிறந்ததற்காக நான் பயப்படுவது நியாயம்.. இந்தப் பெங்காலிக்கு என்ன வந்தது? எந்தச் சமூகத்திலும் எல்லாரும் குற்றவாளிகள் இல்லை. நிச்சயமாக எனக்காக இவன் எடுக்கும் ரிஸ்க் அதிகம்.
இருந்தாலும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை.
அவன் மெதுவாக குடிசை வரை போனான். இரண்டே நிமிடத்தில் திரும்பினான். "சீக்கிரம் இங்கே ஓடிவா"
ஓடினேன்.
"கிருஷ்ணா கும்பல் வரவில்லையாம்.. வேற யாரோ லோக்கல் கும்பல்தான் வந்திருக்காங்க. சும்மா பொழுது போகாம இந்தக்குடிசைய கொளுத்திப்போட்டிருக்கானுங்க"
அவர்க்ள் இன்னும் வரவில்லை என்றால் எப்போதும் வரலாம். காட்டுக்குள் சென்று விடலாமா? எவ்வளவு நேரம் காட்டில் இருக்க முடியும்?
"அதே ஐடியாதான் சொல்றேன். நீயும் ரூமுக்குள்ளே போய் இரு. நான் வெளியே பூட்டிடறேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருங்க (அருண் ஏற்கனவே உள்ளே இருக்கிறான்). கொஞ்சம் நிலைமை சரியான உடனே வெளியே வரலாம். நானும் எங்கேயாவது போயிடறேன்."
வேறு எதுவும் தோன்றவில்லை.
ரூம் கதவை பாக்கெட்டிலிருந்து சாவி எடுத்துத் திறந்தான்.
உள்ளே கோழிக்குஞ்சு மாதிரி கட்டிலுக்கு அருகில் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தான் அருண். சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு சிரிப்பு வந்தது.
"சத்தம் வராம உள்ளேயே இருங்க - நான் அப்புறமா வரேன்." என்று கிளம்பினான் சுபர்ணோ. "சாவிய நீங்களே வெச்சுக்கோங்க, நான் கதவித் தட்டினா அடி வழியா சாவியத் தள்ளிவிடுங்க, நான் திறக்கிறேன்" கிளம்பும் முன், கையிலிருந்த சார்ம்ஸ் சிகரெட் பாக்கெட்டை என்சட்டையில் சொருகிவிட்டுத்தான் சென்றான். (என் பிராண்ட் இல்லைதான்). சுபர்ணோ மேல் பெரிய மரியாதை வந்தது.
"என்ன ஆச்சு எதாவது விவரம் தெரியுமா சுரேஷ்" அருண் நான் வந்தபிறகு இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறான்.
எனக்கே ஒன்றும் விவரம் தெரியாதே. "ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம். ஸ்ரீபெரும்புதூர்ல மீட்டிங் பேசும்போது குண்டு எதோ வெடிச்சுதாம்."
"சரி அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்?"
"டெல்லியில இருந்த எல்லா சர்தாருமா இந்திரா காந்தியக்கொன்னாங்க? இதெல்லாம் நம்ம நாட்டு சாபக்கேடு"
"நம்ம ஊர்லே இது மாதிரியெல்லாம் எதுவுமே நடக்காதே"
"அது தவிர, இங்கே லோக்கல் காங்கிரஸ் ஆளுங்களுக்கெல்லாம், தலைவன் மேல உள்ள விசுவாசத்தக் காமிக்க இது ஒரு சுலபமான வழி. பீஹார்லே அரசியல்லே பெரிய ஆளுங்க எல்லாம், என்ன என்ன கலவரம் செஞ்சிருக்காங்கன்றதுதான் குவாலிபிகேஷன்! அவனுக்கு சொந்தப்பகை உள்ளவனுங்களை எல்லாம் போட்டுத்தள்ளவும் ஒரு சான்ஸு."
"போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி உள்ள இருந்துடலாமா? அது ஸேபா இருக்குமா?"
"போலீஸ் ஸ்டேஷன்லதான் கலவரம் எதா இருந்தாலும் ஆரம்பிக்கும். எல்லா போலீஸ்காரனும் வீட்டுக்குள்ளே இருப்பான்."
"எப்பதாங்க அடங்கும்?"
எனக்குப் புரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றால்தான் சோறு. வெளியே சென்றால் ராஜீவ் காந்தியுடன் பேசத்தான் வாய்ப்பு கிடைக்கும்.
"சரி அமைதியா இரு. ஏதாவது புஸ்தகத்தைப்படி. சத்தம் வந்தா சந்தேகம் வரும்."
எந்தப்பொழுதுபோக்குச் சாதனமும் இல்லாமல், செய்ய வேலை எதுவும் இல்லாமல், காதை அடைக்கும் பசியுடன், சத்தம் போட முடியாமல் இரண்டு மணி நேரம் கடந்தது. எதை எதிர்பார்க்கிறேன் என்றே தெரியாமல், எதாவது நடந்து முடிந்தால்தான் இந்த நிலைமையிலிருந்து மாற்றம் வரும் என்பதால் கலவரக் கும்பல் வந்து போனாலே தேவலாம் என்றெல்லாம் ஓடுகிறது நினைப்பு.
ஐந்து மணிநேரம் அப்படியே கழிந்தது. தூக்கமா, பயம், பசியெல்லாம் கலந்த மயக்கமா என்று தெரியாமல் கழிந்த நேரம்.
கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. புலன்கள் விழித்தன.
"நான் தான் சுபர்ணோ.. சாவி கொடு"
ஒரு பிரெட் பாக்கெட்டை அவ்வளவு காதலுடன் அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.
"என்ன நடக்குது வெளியில?" என்றேன், வயிற்றின் குமுறல் தணிந்தபின்.
"இவங்க ஜரண்டியிலே ரெண்டு மூணு குடிசைய எரிச்சானுங்களாம். இந்தப்பக்கம்வர மறந்துட்டாங்க போலிருக்கு. ராஞ்சியில மெட்ராஸ் ரெஸ்டாரண்ட்ட எரிச்சிட்டாங்களாம், எப்படியும் ஒரு ஏழெட்டு உயிர் போயிருக்கும்"
ஒரு விசித்திரமான ஆறுதல் ஏற்பட்டது. 400 - 500 என்றெல்லாமல் போகாததில் கலவரம் கட்டுக்குள்தான் இருக்கிறது என்று.
"சரி நான் கிளம்பறேன். முடிஞ்சா ராத்திரி வரேன். வராட்டி கோபிச்சுக்காதே"
கோபமா? இவன் மேலா?
வெளியே சென்று கதவைப்பூட்டி சாவியை உள்ளே தள்ளினான்.
அவன் வெளியே சென்று ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். நான் எதிர்பார்த்திருந்த - பயந்திருந்த சப்தம் கேட்டது.
"எவனாச்சும் தமிழாளுங்க இங்கே இருக்காங்களாடா"
கண்ணாடிகள் உடையும் சப்தம். எதோ மேஜையை உருட்டி இருக்கிறார்கள்.
செக்யூரிட்டியின் குரல் கேட்டது. "எஜமானுங்களா.. இங்கே யாருமே இல்லீங்களே.. காலையிலே எல்லாரும் ஊருக்கு ஓடிட்டானுங்க"
எல்லா ரூம்களின் கதவையும் பளீர் பளிரென்று உதைக்கும் சப்தமும் கேட்டது.
அருணிடம் மிக மெல்லிய குரலில், "கட்டிலுக்குக் கீழே போ
- அந்தக்கம்பளியை மேலே இருந்து போட்டு மறை"
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. என் கையருகில் கல் வந்து விழுந்தது.
மூச்சு விடக்கூட மறந்திருந்தோம்.
பத்து நிமிடமா, பத்து யுகமா எனத்தெரியாத நேரம்..
சப்தங்கள் கொஞ்சம் குறைந்தன.
தொடர்ச்சியான அமைதி நிலவியும் வெளியே வரத் தோன்றவில்லை. வியர்வை மூக்கை நனைத்தது.
செக்யூரிட்டி கதவைத் தட்டினான் "சாப் ஓ லோக் சலே கயே (அவர்கள் போய் விட்டார்கள்)"
கொஞ்சம் நிம்மதியுடன் வெளியே வந்தோம்.
அருண் எதுவும் பேசாமல் துடைப்பத்தை எடுத்து கண்ணாடிச்சில்லுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
கண்ணாடி இல்லாத ஜன்னல் ஆபத்து. வெளியிலிருந்து எல்லாம் தெரியும். எதாவது பழைய பேப்பர் எடுத்து ஒட்டலாம்..
எடுத்த பேப்பரில் அழகாக்ச் சிரித்துக்கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.
_______________________________
--நாளை கடைசிப்பாகம்--
May 24, 2006
மே 21, 1991 - 3
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
//மூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன்.//
அடுத்தது என்ன இலவச இணைப்பா ?
அப்பாடி, வந்து போனார்களா ? இது மிகவும் மோசமான நிகழ்வுதான். பணமும் பதவியும் அப்போது உதவிக்கு வந்திருக்குமா?
மன்னிக்கவும் மணியன், பெரிசு பெரிசா போட்டிருக்கலாம், ஆனால் அதுக்கு எழுதவே நேரம் இல்லை, படிக்கவறவங்களைப் பத்தியும் யோசிக்கவேணாமா?
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பணம், பதவி போன்ற எதுவும் உதவிக்கு வரமுடியாத நேரங்கள் நிறையவே இருக்கின்றன.
அப்புறம்??
Post a Comment