May 13, 2007

சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06) republish

ஓராண்டுக்கும் முன் எழுதிய பதிவு, இன்றைக்கும் பல இடங்களில் பொருத்தமாய்
இருப்பதால் இந்த மீள்பதிவு.

சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06)

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சந்தேகத்துக்கு இடமின்றி முதலிடம்.
எப்படிப்பெற்றது என்பதற்கு தூர்தர்ஷனின் அரசாங்க
சோம்பேறித்தனத்திலிருந்து சுமங்கலி கேபிள் விஷனின் அத்துமீறிய உதவிகள்,
தொலைத்தொடர்புத்துறையின் நெருங்கிய தொடர்புகள் என எந்தக்காரணம்
இருந்தாலும் முதலிடம்தான், அதை மறுக்க முடியாது.

பெற்ற முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஊடகங்களின் அடைபட்ட சுழற்சியில்
சுலபமே. (நிறைய பேர் பார்க்கிறார்கள் - அதிக விளம்பர வருவாய் - அதிக
செலவில் நிகழ்ச்சிகள் - நிறைய பேர் பார்க்கிறார்கள்--)

சாதாரண நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, செய்திகளில் கூட தமிழ்த்
தொலைக்காட்சிகளில் சன்டிவியே அதிகப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது (TRP).

பெரும்பான்மைத் தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கும் செய்திகளும் வழங்குவதால்,
அரசிய்லிலும் மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்க வேண்டிய சன் டிவி, திமுக
கூட்டணிக்கு பெரிய பலவீனமே என்றே நான் கருதுகிறேன்.

சன்டிவி திமுக கட்சியின் பிரச்சார பீரங்கியா? இதை ஒரு அடிமட்ட திமுக
தொண்டன் ஒத்துக்கொள்வானா? கலைஞர் தவிர்த்து சன்டிவியில் காட்டப்படும்
திமுக (இரண்டாம் நிலை) தலைவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
மு க ஸ்டாலினையே எப்போதாவதுதான் கண்டுகொள்கிறார்கள் எனும்போது,
துரைமுருகனும், பொன்முடியும் புலம்பிப் பிரயோஜனமில்லை.

தயாநிதி மாறனின் அனைத்து நிகழ்ச்சிகளும் காட்டப்படும்போது கலைஞர்
பங்குபெறாத மாநில மாநாடுகளும் ஒருவரிச்செய்தியாகவும் இடம்பெறாமல் போவதை
திமுக தொண்டர்கள் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற
நிகழ்வுகள், திமுக ஒரு குடும்பக்கட்சி மட்டும்தான் என்ற தோற்றத்தை
கடைநிலைத் தொண்டனுக்கும் ஏற்படுத்தி விடுவதால், கட்சி உணர்வு குறையத்தான்
செய்யுமே அன்றி கூடப்போவதில்லை.

கூட்டணிக்கட்சிகளைப் பொறுத்தவரை, சன்டிவி வைகோ மனத்தில் ஒரு ஆறாத
வடுவாகவே இருந்து வந்திருக்கிறது. அணி மாறிய நேற்றைய செய்திகளில் வைகோ
2002-இல் பேசியது, 2004-இல் பேசியது என்று அடுக்கி 15 நிமிஷம்
காண்பித்தையெல்லாம், அந்த 2002இலும் 2004-இலும் அரை நிமிஷம்
காட்டியிருந்தால் கூட அவரைத் திருப்தி செய்திருக்க முடியும். (கூட்டணி
மாற்றம் இதனால்தான் என நான் கூற வரவில்லை)

பா ம க வின் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சந்தித்த, சந்திக்கும் மிகப்பெரிய
கேள்வி - சன்டிவியை மட்டும் ஏன் தார் பூசாமல் விட்டுவைத்திருக்கிறீர்கள்
- நிச்சயம் அவர்களுக்கு சன்டிவியால் தர்மசங்கடம்தான்; அவர்களின்
கொள்கைக்கு பின்னடைவுதான்.

சன் செய்திகளுக்கு, விளையாட்டுச் செய்திகள் என்றாலே சச்சின் மட்டும்தான்
(சமீப காலமாக சானியா மிர்ஸா). அதேபோல, ஜெயலலிதாவைத் திட்டாத வரையில்
காங்கிரஸ் என்றால் சோனியா மட்டும்தான். அதுசரி, காங்கிரஸில் வேறு யார்
பெயரைத் தெரிந்துவைத்டுத்தான் என்ன ஆகப்போகிறது?

சரி கட்சிகளை விட்டுவிடுவோம், சாதாரண, கட்சி சாராத பொது மக்களைப்
பார்ப்போம். (என்னைப்போன்ற ஒரு ஜந்து). மதுரை மாவட்டத்தில் டி
கல்லுப்பட்டிக்கு அருகிலிருக்கும் சிற்றுரில் தண்ணீருக்காக மக்கள்
(சுமார் 5 பேர்) திடீரென (சன் காமெராவைப்பார்த்ததும்) சாலை மறியலில்
ஈடுபட்டதை செய்தி என்றே வைத்துக்கொள்வோம்.. இதனால் மதுரை மாவட்டம்
முழுவதும் பரபரப்பு நிலவியது எனும்போது, அந்த ஊருக்கு அருகிலேயே
இருக்கும் எனக்கு ஏன் பரபரபரப்பு வரவில்லை என்ற கேள்வி என் மனத்தில்
எழாதா? நிஜமான போராட்டத்துக்கும் நிஜமான பரபரப்புக்கும் மரியாதை
குறைந்ததுதான் மிச்சம்.

கலைஞர் கைது விவகாரம் நிச்சயமாக ஒரு அனுதாப அலையாக உருவெடுத்திருக்க
வேண்டிய விஷயம். ஆனால் அந்த 2 நிமிட ஒளித்துணுக்கை இதுவரை குறைந்தபட்சம்
2000 முறையாவது ஒளிபரப்பி செய்திகளுக்கு முன் காண்பிக்கப்படும் கடிகாரம்
ரேஞ்சில் ரிபீட் செய்து அந்த அஸ்திரத்தைப் பயனிழக்கச் செய்ததுதான்
நடந்தது.

மொத்தத்தில், ஒரு பிரம்மாஸ்திரமாக இருந்திருக்கவேண்டிய சன்டிவி, முனை
மழுங்கிய குண்டூசியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

உங்கள் கருத்து?

3 பின்னூட்டங்கள்:

குட்டிபிசாசு said...
This comment has been removed by the author.
குட்டிபிசாசு said...

உன்மை தான். மாறன் அணி பலமாவது பகல்கனவே. ஆனால் தி.மு.க. பலவீனம் அடையப்போவது நிச்சயம்.உங்கள் கூர்றுப்படி தி.மு.க மேலும் கீழே தள்ளப்படும்.
ம்றுபதிப்பிற்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குட்டி பிசாசு. இரண்டுக்குமே அடிவிழும், எந்த விகிதாசாரம் என்பதுதான் தெரியவில்லை.

ஆமாம், உங்களுக்கும் இந்த ஆவிகளுக்கும் எதாச்சும் சம்மந்தம் இருக்குதா? ;-)

 

blogger templates | Make Money Online