சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.
எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை
முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா
காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன்.
கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு
புள்ளி குறைந்துவிடும்.
இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால்
கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.
"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.
"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன்.
இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"
"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"
"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"
"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"
"சொல்லு. வேற என்ன விஷயம்?"
"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம்
இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம்
கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு
போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு
திக்குனு இருந்திச்சு"
"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து
ஏன் பயப்படறே?"
"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"
"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன்.
எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"
ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும்
போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.
"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"
"நான் தான் பேசறேன். கோபிதானே?"
"ஆமாம் சார்"
"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு
சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"
"ப்ராப்ளமா சார்?"
"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி
ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல்
பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே
முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"
"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"
"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"
ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.
சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.
"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"
"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"
"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"
"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."
காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது
அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.
"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"
"என்ன சொல்றாங்களாம்?"
"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"
"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"
"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன்
கிடைக்கறது கஷ்டம்!"
சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.
"சரி பாக்கறேன். வேற எதுவும்?"
"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"
"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு
வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"
"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"
சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு
போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி
பிரச்சினைகள்.
ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ
யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.
"முத்து, கேண்டீன் வர்றயா?"
ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை
அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ
பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள்
உள்ளே நுழைந்தார்கள்.
"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,
நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்.
34 பின்னூட்டங்கள்:
அருமையா வந்திருக்குங்க கதை. காதல், பணமுடை, அக்கா கல்யாணம், தம்பியின் பொறுப்பில்லாத்தனம் என யாருக்கு வேண்டுமானலும் இருக்கக் கூடிய கவலைகளை நன்றாக லிஸ்ட் போட்டு இருக்கீங்க.
உண்மையில் இந்த மாதிரி சம்பவங்களில் இறப்பவர்களின் பின்னால் இப்படி எல்லாம் இருந்திருக்குமே என நினைக்கத் தூண்டிய கதை.
மை ஃபிரண்ட் சீக்கிரம் வந்து பின்னுட்டம் போடு
நீங்க போட்ட பிறகுதான் நாங்க போட முடியும்...:)
முடிவு சுருக்கென்று தைத்தது.
நடையும் கதையும் ஒரு சிறுகதைக்குறிய அத்தனை அம்சங்களுடனும் பொருந்தி வருகிறது.
வாழ்த்துக்கள்.
ம்ம்ம்...ம்.. வேதனைதான்...
"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"
:-) thagaraRu katha nalla irukku
ஒரு முடிவோட தான் கிளம்பிருக்காப்போல தெரியுது??? (யாருக்கு, எதுக்கு முடிவுன்னெல்லாம் கேக்கப்படாது!)
கதை நல்லாருக்கு...
நன்றி கொத்தனார்.
ரத்தமும் சதையுமாக பார்க்கும் மனிதருக்கும், செய்தித்தாளில் எண்களாகச் சந்திக்கும் மனிதருக்கும் உள்ள வித்தியாசத்தைதான் கதையாக்க நினைத்தேன்.
என்ன மின்னல், இதுக்கெல்லாமா முதல்ல யாராவது வரணுமுன்னு எதிர்பாப்பீங்க? ஒரு கருத்தைச் சொல்லிட்டுப்போங்க! இது என் கட்டளை.
நன்றி மஞ்சூர் ராசா.
தருமி - வேதனை மட்டும் படத்தான் நமக்கு வாய்த்திருக்கிறது.
பிரபு ராஜா,
கதையிலே ஒரே ஒரு பிட்டை மட்டும் சொல்லி இருக்கீங்க?
ராம்ஸு,
நன்னி.
என்ன முடிவு? யாரு? ;-)
//என்ன முடிவு? யாரு? ;-)//
அதான் சொன்னேனே.. மாநகரத் தாயார் துபய்க்கு ப்ளைட் போட்டிருக்கறதா செய்தி வந்திருக்கு..
அப்புறம் அதவிட.. ப.ம.கவுல தல-க்கு அடுத்தது நான் தானு கணிப்பு வெளியிட்டிருக்காங்க... இருந்தாலும் ஒட்டகங்கள ஏவிவிடாம அரசியல் நாகரிகம் காக்குறீங்க பாருங்க.. நீங்க தெய்வம். என் இதயத்தில் எப்போதும் உங்களுக்கு இதுனாலேயே இடமுண்டுனு சொல்லிக்க ஆசைப்படுறேன்.
்உதம்பி ராமநாதா,
கணிப்பில் நீ முதலாவதாய் வந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தத் தகவலை மாநகரத் தாய்க்கும் சொல்லிவிட்டேன், அவர் விமானத்தை ரஷ்யா பக்கம் திருப்பவும் சொல்லிவிட்டார்.
அவ்வளவு பெரிய எக்ஸ்பர்ட்டே உன்னைத் தேடி வருகையில் ஒட்டகங்கள் என்ன செய்துவிடப்போகின்றன என்றுதான் அவற்றை ஏவவில்லை!
Jokes apart, இந்தப்பதிவின் தலைப்பு பலரை இழுக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. தலைப்பிலேயே விவரம் இருந்த நேற்றைய பதிவின் 25% ஹிட்டு கூட இதற்கு வரவில்லை. இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்..
மக்கள்ஸ் சிறுகதைன்னா கொஞ்ச தூரம் ஓடிடறாங்கோவ்!
நம்பிக்கை என்பது எவ்வளவு அல்பாயுசில் முடிந்து விடுகிற்து என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் பினாத்தல்.
இறப்பு என்பதெல்லாம் எண்ணிக்கையில்தான் என்றாகி விட்ட நிலையில் இறந்தவனில் ஒருவனின் நிலை குறித்த புனைவு அழுத்தமாக இருக்கிறது. வாழ்த்துகள்
ஆசிப் மீரான்
நீங்கள் சொல்வது சரிதான். சிறுகதை என்றால் சற்று பொறுத்துப் படிப்போம் என்றவர்களில் நானும் ஒருவன்.
சிறுகதை நன்றாகவே வந்திருக்கிறது. ஆவியிலிருந்து சுஜாதா கதையை காப்பி& பேஸ்ட் செய்துவிட்டீர்களோ எனும் மயக்கம் தரும் நடப்பு நிகழ்வு கரு.வருந்தவேண்டியவர்கள் வருந்தினால் பயனுண்டு; நானும் நீங்களுமல்ல :(
மக்கள்ஸ் சிறுகதைன்னா கொஞ்ச தூரம் ஓடிடறாங்கோவ்!
///
அப்படினு சொல்ல முடியாது
இதே கமெடி சிறுகதைனா அனானி பின்னுட்டங்கள் போட்டுயிருக்கலாம்
//
உண்மையில் இந்த மாதிரி சம்பவங்களில் இறப்பவர்களின் பின்னால் இப்படி எல்லாம் இருந்திருக்குமே என நினைக்கத் தூண்டிய கதை.
//
பதில் எழுத முடியா வேதனையுடன் ரீப்பிட்டே...:(
நன்றி ஆசீப்.
நம்பிக்கைகளை சிதைக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் தந்தது? எண்ணிக்கைகளாய் இறக்கும் அனைவர் பின்னணியிலும் இப்படி கதைகள் இருக்குமல்லவா! :-(
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்.
நாம் வருந்திக்கொண்டுதான் இருக்கிறோம். அவன்களுக்குத் தெரியவில்லையே!
மின்னுது மின்னல், நன்றி.
வேதனையெல்லாம் நமக்கு மட்டும்தானோ என்று தோன்றுகிறது. செய்திகளிலும் அவசர அவசரமாகப் பின் தள்ளப்பட்டுவிட்டது! டாக்டிக்ஸாம்.. சந்தர்ப்பவாதிகள்!!
தல,
இப்பத்தான் வாசித்தேன். வலிக்குது! :(
இதுக்குப் பின்னாடி வந்தச் செய்திகளைத் தான் பேப்பரில் படித்தேனா? இது கதையல்ல நிஜமா?
ஆமா சுரேஷ் தலைப்புல்லக் கொஞ்சம் ஈர்ப்பு குறைவு தான்...
நல்ல அழுத்தமாக வந்திருக்கிறது கதை
பாராட்டுக்கள் பினாத்தலாரே..
*ஜோக் ஒன்லி*
கண்டிப்பாக ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பவும்.(தினகரன் வார மலர்???:)
இதுபோல ஒரு கதய ஒரு பெரிய எழுத்தாளர் எழுதி இந்தப் பக்கமா கிழி கிழின்னு கிழிச்சிருந்தாங்களே.
என்னமோ போங்க. கலவரத்த வச்சு கத எழுதுறது பேஷனாப் போச்சு. :))
ரெம்பவே நல்லாயிருக்குது கத.
பி.கு; அடுத்த கலவரம் எப்ப வரும்ணு காத்திருக்க வச்சிட்டீரே பெனாத்தல்.
லொடுக்கு -- ஆமாம். வலிதான்.
தேவ் -- ஆமாம். தலைப்பு வீக்தான். ஆனால் மேட்டர்மேலே இருந்த நம்பிக்கையிலே, தலைப்பை வச்சு மார்க்கெட் பண்ண வேணாமுன்னு விட்டுட்டேன்.
ச சங்கர், நன்றி.
இதை குங்குமம்-க்கு அனுப்பியிருந்தால் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளில் எங்காவது சிக்கி போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள், எனக்கு நம்பிக்கையில்லை. எப்படியும் இணையத்தில் பதிப்பித்துவிட்டதால் இனி அனுப்பமுடியாது என்றே தோன்றுகிறது.
விகடனில் மூன்று பக்கங்கள் சிறுகதைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் பாக்கியம் ராமசாமி, நரசய்யா போக எப்போதேனும் சில காதல்கதைகள் வெளியிடுகிறார்கள். குமுதம் ஒருபக்க கதை உப்புமாக்களில் சிக்கி சீரழிந்து பலநாளாகிறது.
எனக்கு பத்திரிக்கைகளில் கதை பதிப்பாகவேண்டும் என்ற ஆசை இருந்தது, இருக்கிறது.. ஆனால் நடக்க சாத்தியம் குறைவு. எனவே கரு தோன்றியவுடன் பினாத்தல்களில் பதிக்கத்தான் கை போகிறது.
சிறில், நன்றி.
நல்லவேளை நான் பெரிய எழுத்தாளன் இல்லை - இருந்திருந்தால் கமா, புல்ஸ்டாப்புக்கும் உள்ளர்த்தம் தேடப்பட்டிருக்கும் ;-)
கலவரத்துக்காக காத்துகிட்டிருக்கீங்களா? என்ன சார் கலவரத்தை கிளப்பறீங்க?
"எப்படியும் இணையத்தில் பதிப்பித்துவிட்டதால் இனி அனுப்பமுடியாது என்றே தோன்றுகிறது"
அப்படியில்லை என்று நினைக்கிறேன்...இணையத்தில் உங்களது வலைப்பக்கத்தில்தானே இருக்கிறது...இணையத்தில் பதிப்பித்தது என்று சொல்லியே லின்க்கும் குடுத்து அனுப்புங்களேன்..ஜஸ்ட் அ ட்ரை :)
நன்றி ச சங்கர்.. முயற்சிக்கிறேன்
கதையைப் படித்ததற்கு நன்றி டெல்பைன். ஆம். மனதை என்னவோ செய்த விஷயம்தான் :-(
நல்லா வந்திருக்கு கதை!! கட கடன்னு படிச்சு முடிச்சுட்டேன்......செய்திதாள்ல இந்த மாதிரி செத்துபோரவங்கள பத்தி படிச்சிட்டு, உச் கொட்டிடு அப்படியே மறந்து போயிட்ரோம்!!
ஆனா நீங்க சொல்லரது ரொம்ப சரிதான் கதைன்னா ஓடிட்ராங்க மக்கள்.....உங்கள்டேந்து ப்லாஷ் மட்டுமேதான் எதிர்பார்க்கராங்க போல!!:):)
மின்னுது மின்னல் பயங்கரமா மின்னரீங்க!!
நன்றி ராதா ஸ்ரீராம்.
ப்ளாஷ்தானே..பார்க்கலாம் :-)
//ரத்தமும் சதையுமாக பார்க்கும் மனிதருக்கும், செய்தித்தாளில் எண்களாகச் சந்திக்கும் மனிதருக்கும் உள்ள வித்தியாசத்தைதான் கதையாக்க நினைத்தேன்.//
ரொம்ப லேட்டா இதைப் படிக்கிறேன். அருமையாய் எழுதி இருக்கிறீர்கள். கதையில் கலவரமோ, சாவைப் பற்றிய தீவிர விவரிப்போ எதுவும் இல்லை.
ஆனால் படித்து முடித்த உடனே, அப்படி ஒரு சோகம் நெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டது....
நன்றி நந்தா.
சுரேஷ்,
அருமையான சிறுகதை,
இதற்கு பின்னூட்டமல்ல, ஒரு பதிவே இடலாம்...
//நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்.//
கடைசி வரியில் அதிர வைத்து விடுகிறீர்கள், அந்த அதிர்வுடன் மீண்டும் ஒருமுறை கதையை படிக்க வைப்பதே, கதையின் வெற்றி !!
நடையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவென்றாலும், கதையின் கருத்தும், களமும், எதிர்பாராத முடிவும் அருமை...
//ரத்தமும் சதையுமாக பார்க்கும் மனிதருக்கும், செய்தித்தாளில் எண்களாகச் சந்திக்கும் மனிதருக்கும் உள்ள வித்தியாசத்தைதான் கதையாக்க நினைத்தேன்.//
இந்த பின்னூட்ட வரிகள் உண்மை.. கதை இதையே பிரதிபலிக்கிறது.. இத்துடன் நடந்த உண்மைச் சம்பவத்தின் ஆழம் அதிகமாகத் தெரிகிறது...
தொடர்ந்து கலக்குங்கள்..
Post a Comment