Aug 6, 2005

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே... 06 Aug 05

என் பிறந்தகப் பெருமையை இணையத்தில் பெரும்பாலும் காண முடியாது. வெளியே கூட, பல எதிர்மறைக் காரணங்களுக்காகவே பிரபலமான ஊர் என்னுடையது.

வெயில் காலத்திலும், ஜெயில் காலத்திலும் மட்டுமே பிரபலம் அடைந்து மற்ற நேரங்களில் கண்டுகொள்ளப்படாத ஊர்.

தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கும் குக்கிராமங்கள் கூட சில பிரபலங்களால் அறியப்பட்டிருக்க, பல பிரபலங்களைக் கொடுத்தும் (பெனாத்தல் சுரேஷ் உள்பட)ஊர் பேரை அந்தப் பிரபலங்கள் வெளிப்படுத்த விரும்பாமையினாலோ என்னவோ வெளிச்ச வட்டத்தில் எங்கள் ஊர் காணப்படவில்லை.

இன்னும் கொஞ்சம் குறிப்புக்கள் கொடுக்கிறேன், கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.

இருக்கும் சில சிறு விஷயங்களால் பல சிற்றூர்கள் பெருமை பெற்றிருக்க, எங்கள் ஊரின் பெருமைகள் ஏழு 'இல்லாதவை"களால் காணப்படுபவை.

1. மரங்கள் இல்லாத மலைகள்
2. தண்ணீர் இல்லாத ஆறு
3. மன்னன் இல்லாத கோட்டை
4. அதிகாரம் இல்லாத காவலர்கள்
5. மூர்த்தி (விக்கிரகம்) இல்லாத கோவில்
6. மற்றும் ..

--மற்றும்

தைரியம் இல்லாத ஆண்கள்

7. மற்றும்

--மற்றும்..

அழகு இல்லாத பெண்கள்!

கடுமையான வெயிலில் எங்கள் ஊருக்கு வந்த தேசத் துரோகியால் மட்டுமே இப்படிப்பட்ட "பெருமை"களைக் காண இயலும் என்றாலும் எந்த விதியோ இதுவே நிலைத்து விட்டது.. இவற்றில் எதுவுமே இன்று உண்மையில்லை என்பதும் உண்மை.

இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை? என் ஊர் :

--
--

வேலூர்

Image hosted by TinyPic.com

மொட்டை மலைகளுக்கும், நீர் இல்லாத ஆற்றுக்கும் (இன்று பெரும்பாலான தமிழக நதிகளில் இதே நிலைமைதான்), மன்னன் இல்லாக் கோட்டைக்கும் (மன்னராட்சி ஒழிக்கப்பட்ட இந்நாளில்) அதிகாரம் இல்லாக் காவலர்களுக்கும் (காவலர் பயிற்சிப்பள்ளி உள்ளதால்) நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

1980-ல் கோவிலில் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது.

தைரியம் இல்லாத ஆண்கள்? சிப்பாய்க்கலகத்தின் முதல் வேர்கள் 1802-ல் ஊன்றப்பட்ட ஊரிலா?

அழகு இல்லாத பெண்கள்? மீனாக்ஷி சேஷாத்ரியை இந்தியாவுக்கு அளித்த ஊரிலா?

இருந்த போதும், இந்த அவதூறுகளை எல்லாம் மறுதளிக்காமல், அவற்றை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டதே எங்கள் சகிப்புத்தன்மைக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் ஆதாரம்.

வேலூர் என்பதே வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாததாக இந்தப் "பெருமை"கள் செய்துவிட்டிருக்க, நான் படித்த கல்லூரியின் அமைவிடம் இன்னுமே கவலைக்கிடம் !

ஒரு புறம் - வேலூரின் புகழ்பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலக் காப்பகம் (பைத்தியக்கார ஆஸ்பத்திரி சார்!)

மறுபுறம் - வேலூரின் இன்னொரு புகழ் - மத்திய சிறைச்சாலை!

கல்லூரியில் அனுமதி கிடைத்தவுடனே மகனின் (மகளின்) எதிர்காலம் இந்த இரண்டு புறக்காரணிகளாலும் பாதிக்கப் படாமல் இருக்கவேண்டுமே என்று ஏழுமலையான் முதல் எல்லை அம்மன் வரை அனைத்துக் கடவுள்களிடமும் நேர்ந்துகொள்வர் பெற்றோர்!

ஒரு அவசரத்துக்கு (?!) கட் அடித்துவிட்டு சினிமா செல்ல முடியாத தொலைவு. அருகில் உள்ள தியேட்டர்களின் (?!) திரை வண்ணப்படங்களைக் காணாத சபதம் பூண்டவை!

இருந்தாலும், அரசுக்கல்லூரி என்பதால் உள்கட்டுமானத்தில் எந்தக்குறையும் இல்லை, பெரும்பான்மை ஆசிரியர்களும் தொழில்பக்தி கொண்டவர்கள் என்பதால் கல்வித்தரத்திலும் குறை சொல்ல முடியாது.

எங்களின் முதன்மையான குணமான நகைச்சுவைக்கு அங்கே தீனிக்கும் குறைவே இல்லை.

இன்றும் கூட நினைவிருக்கும் சில சம்பவங்கள்:

புதிதாக (எங்கள் பேட்சிலிருந்துதான் ஆரம்பம்) பெண்களை அனுமதிக்க ஆரம்பித்ததால், முதல் ஆண்டு மற்றும் கடைசி ஆண்டு மாணவர்கள் ஒரே சிட்டுக்களை சைட் அடிக்கும் இழிநிலை! ஃபர்ஸ்ட் இயர் ஃபிகர் ஃபர்ஸ்ட் இயருக்கே என உரிமைப் போராட்டங்கள், கோஷங்கள்!

நடனப்போட்டி என்பது குத்து பாட்டுக்கள் ஆடுவதற்கே என்னும் ஆதார விதியை ஆட்டிப்பார்க்க நினைத்து, பரத நாட்டியம் ஆடத்துணிந்த பெண்ணை போகும் போதும் வரும் போதும் ஜதி சொல்லியே ஜகா வாங்க வைத்த இளைஞர்கள்!

காதல் வசப்பட்டு, கவிதைகள் எழுதிக்குவித்து காதலிக்கு அர்ப்பணித்ததும் அவள். கல்வி கற்க வேண்டிய நேரத்தில் கனவு காணக்கூடாது எனக் கருத்து சொல்ல, தாத்தாவுக்கு கொடுத்த ட்ராங்குவலைஸர்களை 30 விழுங்கி, 3 நாள் தூங்க மட்டுமே செய்து "பிழைத்த"பின், காதல் தோல்விக்கு அடிப்படை அம்சமான தாடி வளராததைக் குறித்து மட்டுமே கவலையில் ஆழ்ந்த நண்பன்!

கல்லூரித் தேர்தலுக்கு அரசியலில் ஊறிப்போன மாணவர்கள் பெயர் போட்டு போஸ்டர் தயார் செய்து, கல்லூரிக்கு எதிரே உள்ள மொட்டை மலையில் இடம் பிடித்து தயாராக இருந்த நேரத்தில், "அரியர்ஸ் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது" என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்த முதல்வர்! (தேர்தலில் நிற்கும் தகுதியே மூன்று நான்கு மாணவர்களுக்குத்தான் இருந்தது!)

இன்றைய பினாத்தல்களின் முன்னோட்டமாக, நாற்காலிகளின் மேலேறி "அன்பே.... இன்பம்" எனப் பாடி, உயர்ந்த காதல் காட்சிகள் என சினிமா ட்ரெயிலர் விட்ட உங்கள் உண்மையுள்ள! (yours truly!)

சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும், இந்த கலாட்டா நிகழ்ச்சியை மட்டும் கூறி முடித்துக் கொள்கிறேன்..

ஒரு பெண்ணை மட்டம் தட்டக் காத்திருந்த மாணவன், விழா ஒன்றில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினான்.

கூட ஒரு தோழனை போர்வை போர்த்தி மேடைக்கு அழைத்து சென்று, "டியர் ஸ்டூடன்ட்ஸ், இது என் மனைவி"

"சமீபத்துலே இவளுக்கு தேமல் வந்து,அம்மை போட்டதோட மட்டும் இல்லாம, ஸ்கின் ப்ராப்ளம் என்ன என்ன உண்டோ அத்தனையும் வந்துடுச்சி!"

"அதனால இவள் முகம் ரொம்ப குரூரமாவும் ஆயிடிச்சி - எந்த அளவுக்கு குரூரம்னா, பாக்கறவங்க அத்தனை பேரும் உடனே மயக்கம் போட்டு விழுந்துடறாங்க"

அதனாலே இவளை நான் எங்கே கூட்டிப் போனாலும், போர்வை போத்தியே கூட்டிட்டுப் போறேன். இவளுக்கும் இதனால தன்னம்பிக்கை குறைஞ்சு போய், கஷ்டப்படுறா.

டாக்டர் கிட்டே கேட்டதற்கு, யாராவது ஒருத்தராச்சும் இவளைப் பாத்து மயங்காமல் இருந்தாலும், இவளோட தன்னம்பிக்கை திரும்பிடும்ன்றாரு.

யாராவது எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்!" என்றான்.

தொடர்ந்து சொல்லி வைக்கப்பட்ட தோழர்கள் வரிசையாக வந்து போர்வையை விலக்கி மயங்கி விழுந்தார்கள்!

"ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் -- நீங்க வர முடியுமா ப்ளீஸ்" என்றான் மேற்படி பெண்ணை நோக்கி..

அவள் வந்து போர்வையை விலக்கிய நொடியில்,

--
--
--
--
--
--
போர்வைக்குள் இருந்த தோழன் மயங்கி விழுந்தான்!

11 பின்னூட்டங்கள்:

Anand V said...

சுரேஷ் எந்த காலேஜ் ?
நான் தந்தை பெரியாரில் தான் படித்தேன். ( 91-95 )

பினாத்தல் சுரேஷ் said...

நானும் தந்தை பெரியார்தான் - ஆனால் பாலிடெக்னிக்.

நீங்கள் நுழைவதற்கு நான்கு வருடங்கள் முன்பே நான் வெளியேறிவிட்டேன்.

அதுசரி, நீங்களாவது புறக்காரணிகள் பாதிக்காமல் வெளியேறினீர்களா?:-)

Anand V said...

நீங்க சொன்னது எல்லாம் நான் படிச்சபவும் இருந்தது . பாகாயம் CMC மெஸ், 1,2, பஸ், எல்லாம் ஞாபகம் வர வெச்சிடீங்க

Ramya Nageswaran said...

http://www.indiatogether.org/photo/2004/env-greenhill.htm

சுரேஷ், இனிமே மொட்டை மலைன்னும் சொல்ல வேண்டாம். மேலே இருக்கிற லிங்கைப் பாருங்க. வேலூர் ஸ்ரீநிவாசன் ஒரு வியக்க வைக்கும் இளைஞர். சென்னையிலே அவரை சந்திச்சு இந்த மலைகள் பச்சை ஆகிற ஃபொட்டோக்கள் பார்த்திருக்கேன்.

பரணீ said...

சுரேஷ், அந்த படத்தோட பெரிய அளவு இருக்கா.
படம் ரொம்ப அழகா இருக்கு.

பத்மா அர்விந்த் said...

I remeber vellore as the place for CMC. One of the best medical schools in TN

ஏஜண்ட் NJ said...

ஒரு கட்சியின் தலைமையை ஏற்று நடத்துவதற்கான பிறப்புரிமை கொண்ட 'பெனாத்தல்' அவர்களே, இன்னும் எதற்கு தயக்கம், தாமதம் ;-)

எதைக் குறிவைத்துக் கேள்வி கேட்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்வதுதான் ஒரு சிறந்த தலைவனுக்கான ஆரம்பப்பாடம்!


p.s. தங்களுக்கு 'சிறைகொண்டான்' என்று பட்டம் அளிக்கலாமா என்பதைப்பற்றி என்னுடைய ரகசிய ஏஜெண்டுகள் விசாரணை நடத்திக்கொண்டுள்ளார்கள் என்பதை பகிங்கரமாகவே அறிவிக்கிறேன்.!!

+++
Suresh, if time permits, please make your comment available here
+++

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பரணீ, நானே நெட்டிலிருந்துதான் சுட்டேன். நாளைக்கு லின்க்கு தர்ரேன்,

நன்றி தேன் துளி - CMC தான் பாப்புலர் வட இந்தியாவுலே. ஆனா தமிழ்னாட்டுக்குள்ளே ஜெயில்தான் பாப்புலர்.

நன்றி ஞான பீடம். அந்த லின்க்குக்கு போயி நாளைக்கு கருத்து போடறேன்.

வெங்கி / Venki said...

Suresh, Congratulations for having won the first place in the Nambikkai potti.I liked it very much and I thought that you will win the first prize. Good. Keep it up. Expecting more kavithai's from you.

Kaps said...

Suresh,

kavithaip poattiyil vendramaikku enadhu ulam kanindha vaazhtukkal

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி வெங்கி மற்றும் காப்ஸ்.

 

blogger templates | Make Money Online