Aug 7, 2005

மேக்கிங் ஆஃப் இந்த வார நட்சத்திரம் 07 Aug 05

"உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் வலைப்பதிவர்"-களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தமிழ்மணத்தார், தவறுதலாக என்னைத் தேர்ந்தெடுத்துவிட, எங்கே தவறைப் புரிந்துகொண்டு திருத்திக்கொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் உடனடியாக ஒத்துக்கொண்டுவிட்டேன்.

இந்த வாரப் பதிவுகளால் நான் அடைந்த நன்மைகள் மிக அதிகம். ஒரு முடிவில்லாத கன்வேயர் பெல்ட்டைப் போல (உதாரணம் நன்றி - அலைகள்) ஊர்ந்துகொண்டு, ஐந்து-ஆறு மணிநேரத்துக்கு மேல் சாஸ்வதமில்லாமல் போகும் பதிவுகளில் ஒன்றாக இருந்து, அதற்கு மேல் உயிர் பெற வைக்க பின்னூட்டங்களையும் மதிப்பீட்டு நட்சத்திரங்களையும் நம்பி இருந்த பினாத்தல்கள், கடந்த வாரத்தில், பக்கத்தின் மேல் பாதியில் நிலை பெற்று, ஒவ்வொரு பதிவும் 24 மணி நேர கவனிப்பைப் பெற்றது.

அதிக கவனம் பெறும், அதிக வாசிப்பைப் பெறும் என்ற 'Peer Pressure'னாலேயே நல்ல பதிவுகளைத் தர நானும் முயற்சித்தேன்.

ஒரு நாளுக்கு ஒரு பதிவு - என முடிவு செய்து, ஒவ்வொரு நாளும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்தேன்.

பீஹார் அனுபவங்களைப் பற்றிய முதல் பதிவை என் சொந்தக்கதையையும், பீஹார் முரண்பாடுகளையும் போட்டுக் குழப்பிவிட்டாலும், நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ச்சியாக நான் எழுத உள்ள 'சபிக்கப்பட்ட பூமி - சபித்தது யார்' என்னும் பதிவை எழுதவதற்கு ஊக்கமாகவும் பின்னூட்டங்கள் அமைந்தன.

சில மாதங்களாக நான் என் வகுப்புகளில் உபயோகப் படுத்திவரும் ஃப்ளாஷ் மென்பொருளின் சக்தியை அல்வாசிட்டி விஜய் நன்கு காட்டி வந்தார். அவரிடம் ஃப்ளாஷ்-ஐ ப்ளாக்கில் உபயோகிப்பது எப்படி என தொழில்நுட்ப உதவி பெற்று, கண்ணும் கண்ணும் நோக்கியா பதிவைச் செய்தேன். இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்றாலும், சூப்பர் ஹிட் செல்லக்கிளி தான்! இந்த இரண்டு பதிவுகளும் பெற்ற வரவேற்பு, நகைச்சுவை நக்கல் மற்றும் நையாண்டிக்கு என்றுமே மவுசு குறையாது என உணர்த்தின.

ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டது திருவாசகம் பதிவிற்குத்தான். திருவாசகம் இசை என்னை எந்த அளவிற்கு ஈர்த்ததோ, அதே அளவுக்கு அதைப் பற்றி வெளிவந்த நியாயமற்ற விமர்சனங்கல்மேல் வெறுப்பும் வந்தது. புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் வடிவில் விமர்சனங்களுக்குப் பதில் எழுதலாம் என்று முனைந்தால், இறண்டு பாக்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. அப்புறம்தான் வாராது வந்த மாமணியாய் - கிடைத்தது ஞாநியின் விமர்சனம் - எனக்கு ஆறு பாக்கள் எழுத விஷயம் கிடைத்து விட்டது!

எல்லாரும் பிறந்தகப் பெருமை எழுத, வேலூர்க்காரர்கள் (வேலூருக்கு ஒரு இழுக்கு என்றால் அது அருகே உள்ள சித்தூருக்கும் அல்லவா? சித்தூர்க்காரர்கள் கவனிக்க) தங்கள் ஊரைப்பற்றி மௌனம் சாதிப்பது பொறுக்காமல் நேற்றைய வேலூர் பதிவு.

நன்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம் -

தமிழில் எழுத, இணையத்தில் பதிக்க ஆர்வத்தை உண்டு செய்து , ப்ளாக்கர் கணக்கு தொடங்கி வலைப்பூ காணும்வரை எளிய தமிழில் விளக்கிய "தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள்" கட்டுரைகளுக்கு நன்றி.

தமிழ் எழுத்துரு முதல் கலப்பை உபயோகித்தல், யூனிகோடின் தாத்பர்யம், எந்தப் படம் குறைவான அளவெடுக்கும் என்னும்படியான டிப்ஸ், எப்படி வார்ப்புருவை மேம்படுத்துவது, எப்படி படங்களை உள்ளிடுவது போன்ற தொழில்னுட்ப விளக்கங்களை அள்ளிக்கொடுத்த பல பதிவுகளுக்கு நன்றி (ஒவ்வொன்றையும் தேடி சுட்டி கொடுக்க ஆசைதான் - ஆனால் நேரமில்லை)

புதிய பதிவர்களைத் தேடி, படித்து, அவர்களுக்கு ஊக்கமூட்டிய வலைப்பூக்கள் - எனக்கு நவன் கொடுத்த அறிமுகமும், அதைத் தொடர்ந்த பதிவுக்கு கோபி கொடுத்த விமர்சனமும்தான் என்னையும் சிலர் படிக்கிறார்கள் என்ற எண்ணத்தை உண்டுபண்ணி தொடர்ந்து பதிய ஊக்கமாகவும் இருந்தது- அவற்றுக்கு என் நன்றி.

விமர்சனங்கள் இல்லாத எந்தக் கலைவடிவும் வளர்ச்சி அடைவதில்லை. குழந்தைகள் படிக்கறதுதானே என்று விமர்சனங்கள் செய்யப் படாததாலேயே 'அம்புலி மாமா" நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து வருகிறது. மெகாத் தொடர்கள் விமர்சகர்களால் ஒதுக்கி வைக்கப் பட்டதாலேயே மட்டமான தொடர்களே 24 மணி நேரமும் தொடர்கின்றன.

ஆனால், வலைப்பூக்களுக்கு இந்த நிலை ஏற்படாது. பதிந்த பத்தாவது நிமிடத்திலிருந்தே விமர்சனங்கள், முதுகு சொறிபவையாக இல்லாமல், ஊக்கப்படுத்துபவையாக. கழித்துக்கட்டுபவையாக இல்லாமல் சுட்டிக்காட்டுபவையாக. ஆபாசப் பின்னூட்டங்கள் என்ற ஒரு ஆபத்து இருந்தாலும் அவை உடனடியாக அடையாளம் காணப்பட்டுவிடுவதால் பெரும்தொல்லை கிடையாது.

என்னை ஊக்கிய மற்றும் செதுக்கிய விமர்சனங்களுக்கும் நன்றி.

இதை முழுக்கப் படித்தவர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

இந்த வாரம் எப்படி இருந்தது என வாரப்பதிவுகளில் பின்னூட்டமிட்டிருந்தாலும், இடாவிட்டாலும், இந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் கொடுத்து வருங்காலத்தில் என் பதிவுகள் எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் - வாழிய பாரத மணித்திரு நாடு.

பி கு

55 டிகிரி வெய்யிலில் ஆரம்பித்த இந்த வாரம், 0-வுக்கும் குறைவான உறைநிலையில் முடிவடைந்திருக்கிறது.

மகிழ்ச்சியின் உச்சத்தில் நான்!

நாராயணன் வெங்கிட்டு வின் முயற்சி நிச்சயமாக நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருக்கிறது, இதுபோன்ற போட்டிகள் அதிகமாக வேண்டும் என்பது என் அவா.

நம்பிக்கை என்ற தலைப்பே எழுதத் தூண்டுவதாக இருந்தது, அருணின் நம்பிக்கைக் கவிதைக்கும், அவர் காட்டிய வழிக்கும் நன்றி.

எழுதியது முதலே ஊக்கப்படுத்திய சக வலைப்பதிவாளர்களுக்கு நன்றி.

வெற்றி பெற்ற ராஜ்குமார் மற்றும் காப்ஸ் க்கு வாழ்த்து.

பரிசுக்குத் தெரிவு செய்த வாதூலன் அவர்களுக்கும் தொடர்ந்து வாழ்த்தி வரும் தோழர்களுக்கும் வந்தனம்.

11 பின்னூட்டங்கள்:

-L-L-D-a-s-u said...

'பிரமாதம்' சுரேஷ்

துளசி கோபால் said...

சுரேஷ்,

உங்க வாரம் 'சூப்பர்'வாரமா இருந்தது!!!!
நாங்க எல்லோருமே ரசிச்சுப் படிச்சோம்.

நல்லா இருங்க.

வாழ்த்துக்கள்!

பீஹார் கதைகளைத் தொடர்ந்து எழுதுங்க.

என்றும் அன்புடன்,
துளசி.

முகமூடி said...

சுரேஷ்.. நீங்க இந்த வாரம் ஜொலிச்சதுக்கு தலைவரோட அன்பும் ஆசிர்வாதமும்தான் காரணம்னு ஒரு அறிக்கை விடுவீங்கன்னு பாத்தேன். இலக்கிய அணித்தலைவர் ஆனதுலேந்து உங்க நடவடிக்கை ஒரு மார்க்கமாத்தான் இருக்கு...

சரி கவிதைப்போட்டி முடிஞ்சது... அது தந்த உற்சாகத்தில் நானும் ஒரு போட்டி அறிவிச்சிறுக்கேன்.. மேல் விபரம் இங்கே... கீபோர்ட தட்ட ஆரம்பிங்க...

Suresh said...

சுரேஷ்,

கடந்த வாரத்தில், உங்கள் அனைத்து பதிவுகளுமே அருமையாக இருந்தன. இனிமேல் உங்களிடம் எங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.

தொடர்ந்து இதே போல் எழுதுங்கள்.

கவிதைபோட்டியில் முதல் பரிசு பெற்று நம் பெயரை காப்பாற்றியதற்கு வாழ்த்துக்கள்.

-சுரேஷ் பாபு

Suresh said...

:-))) போட மறந்து விட்டேன்.

-சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி எல்-எல்-தாஸு, துளசி அக்கா, சுரேஷ் & hold at 9000 (?!)

தலைவர் முகமூடி அவர்களே, உங்கள் கருணை உள்ளத்தால்தானே நான் எழுதவே தொடங்கினேன், உங்கள் ஆசீர்வாதம் இருப்பதை இதில்மா காட்ட வேண்டும் என்றே நான் குறிப்பிடவில்லை (அந்த வாரியப் பதவி எனக்குத்தானே?)

சுரேஷ் இன் யூ.கே - நீங்களும் சுரேஷ் பாபுவா? நானும்தான்!

ஏஜண்ட் NJ said...

நல்லதொரு Lux சோப்பின் மணம் வீசுது இங்கே !!!

enRenRum-anbudan.BALA said...

அன்பில் சுரேஷ்,
நீங்கள் "நம்பிக்கை" கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி !!! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
!!
உங்களது கடைசி இரண்டு பதிவுகளில் நான் பின்னூட்டமிடவில்லையே தவிர, மற்றபடி, தங்களது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும் படித்து ரசித்தேன் !!! நிஜமாகவே கலக்கிட்டீங்க (எதிர்பார்க்காத அளவுக்கு!!!) !!! பக்கத்துக்கு பக்கம், SORRY, பதிவுக்கு பதிவு வித்தியாசம் :) Please keep the good work up !!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: உங்களது "பழம்பெரும் வாசகன்" என்ற முறையில் என் பெயரையும் இப்பதிவில் குறிப்பிட்டிருக்க வேண்டும் ;-)

தகடூர் கோபி(Gopi) said...

உங்கள் நட்சத்திர வாரப் படைப்புகள் அனைத்தும் மிக அருமை!

// வருங்காலத்தில் என் பதிவுகள் எந்தத் திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

உங்களின் கேள்விக்கான பதில் உங்களிடமே!

//இந்த இரண்டு பதிவுகளும் பெற்ற வரவேற்பு, நகைச்சுவை நக்கல் மற்றும் நையாண்டிக்கு என்றுமே மவுசு குறையாது என உணர்த்தின.//

:-)

தகடூர் கோபி(Gopi) said...

சொல்ல மறந்தது!

நம்பிக்கை கவிதைப் போட்டி வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

பினாத்தல் சுரேஷ் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி - ஞானபீடம், பாலா, கோபி மற்றும் அட! நம்ம ஸ்வாதி!

ஞானபீடம் - உள்கட்சி பிரச்சினையில், சோப்புப் போடுவதில் ப ம க எந்தக் கட்சிக்கும் நிகரானது மட்டுமல்ல, அதையும் தாண்டி நாறிப்போனது... நாறிப்போனது.. நாறிப்போனது.

பாலா - என் வலைப்பதிவுகளைப் படித்து தொடர்ந்து நீங்கள் எனக்குக் கொடுக்கும் ஊக்கம் -taken for granted ஆகவே மாறிப்போய் விட்டது. எனவேதான் தனியாகக் குறிப்பிடவில்லை, (BTW -உங்கள் 1981 லவ் ஸ்டோரி யில் இன்னும் முடிவை அறிவிக்காமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது, நான் மாட்டுக்கண்ணை அடித்துவிட்டேன்(hit the bulls eye:-) என்று)

கோபி - மிக்க நன்றி, ஆமாம், எனக்கும் அந்த ரூட் தான் சரி வரும்!

ஸ்வாதி - படிக்கிற காலத்தில் பினாத்தல் எல்லாம் படிச்சு கெட்டுப் போவாதே:-)

 

blogger templates | Make Money Online