Aug 24, 2005

சபிக்கப்பட்ட பூமி - சபித்தது யார்? 24 Aug 05

"கஞ்சி குடிப்பதற்கிலார் - அதற்கு காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்" - பீஹாரின் மௌனப் பெரும்பான்மையினர் பற்றி இதைவிடச் சுருக்கமாக விவரிக்க இயலாது.

கனிம வளம் நிறைந்த மாநிலம் - நிலக்கரி இன்னும் 200 ஆண்டுகளுக்கு அள்ள அள்ளக் குறையாது, பாக்ஸைட் (அலுமினியம்), மேக்னடைட் (இரும்பு) என்று திரும்பும் இடமெல்லாம் டைட்(நன்றி: சுஜாதா). இரும்பு, அலுமினியம் உருக்காலைகள், நிலக்கரி பதப்படுத்தும் வாஷரிகள். மண்ணில் போட்டால் பொன்னாய்த் திரும்பும் நில வளம், நீர் வளம். அழகான மலை வாசஸ்தலங்கள், ஏரிகள், 2000 வருடங்களுக்கும் மேற்பட்ட சரித்திரம் கூறும் பாடலிபுத்திரம், புத்த கயா போன்ற சுற்றுலாக் கவர்ச்சிகள் - இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றில் எல்லாம் கால்பங்கு கூட இல்லாத தமிழகம் போன்ற மாநிலங்கள் அடையாத வீழ்ச்சியை பீஹார் கண்டது ஏன்?

எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தையும் பீஹாரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்:

கல்வி: நாராயண் கூறுவது உண்மைதான் - பீஹாரிலிருந்துதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் உருவாகின்றனர். ஆனால், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தந்தையும் ஒரு ஐ.ஏ.எஸ்ஸாகத்தான் இருப்பார் - அல்லது எஞ்சினியர் அல்லது டாக்டர்-- படிப்பதற்கு படித்த வம்சத்தில் பிறந்திருப்பது மிக அவசியம்!

இது இந்தியா முழுமைக்குமான பிரச்சினை என்றாலும், தமிழகத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளையும் காண இயலும் - பீஹாரில் மிக அரிது.

கோல்-இந்தியா வின் எஞ்சினியர்கள் தங்கள் மகன்களை ஷிமோகாவிற்கும், சென்னைக்கும் அனுப்பி பொறியியல் படிக்க வைக்க, தொழிலாளிகளின் மகன்களின் வாழ்நாள் ஆதர்சம் பத்தாவது வகுப்பு முடித்து விட்டு 940-ல் ஹெல்ப்பராக பணி அமர்வதாகவே இருந்தது (940 - நிலம் கொடுத்தோர்க்கு வேலை கொடுக்கும் கோல்-இந்தியா சட்ட எண்)

அவர்களைக் குறை கூற முடியாது. 10000 பேர் வேலை செய்யும் ஒரு நகரியத்துக்கு அருகில் இருப்பது ஒரே ஒரு கல்லூரி, அதில் 300 இடங்கள், அதிலும் 100 நிரப்பப் படாமல் உள்ளன.

அண்ணப் பல்கலைக்கழகத் துணைவேந்தார் கூறுகிறார் - இந்தியா முழுமைக்குமான பொறியாளர்கள் தேவையில் தென்னிந்தியாவில் இருந்து 75 சதம் தயாராகிறார்கள் என்று.

எங்கே குறைபாடு? ஏன் பீஹாரில் சொல்லிக்கொள்ளும்படியான பொறியியல் கல்லூரிகள் இல்லையா? B I T - ராஞ்சி, ஜம்ஷெட்பூர், ரூர்கேலா என்று மிக அருகிலேயே தரம் வாய்ந்த கல்லூரிகள் இருந்தாலும் அவற்றில் இடம் பெறுவதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து போட்டி இருப்பதால் பீஹாரிகளால் உள்ளே நுழையக்கூட முடிவதில்லை. அரசாங்கமும், லஞ்சத்துக்கு அஞ்சும் தனியார்களும் புதுக்கல்லூரிகள் திறப்பதைப் பற்றி எண்ணுவதில்லை.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது பீஹாரைப் பொறுத்தவரை உண்மையே. அரசாங்கம் என்று ஒன்று இருப்பதைக் கூட அறியாமல் தெற்கு பீஹார் வாழ்ந்துகொண்டிருக்க, நடக்கும் ஒரு சில நலத்திட்டங்களும், உட்கட்டுமானப்பணிகளும் வடக்கு பீஹாரில் மட்டுமே நடந்தன, (இது 1999க்கு முன் இருந்த நிலைமை - அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை)

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற இயக்கங்கள் இதற்கு எதிராக பல காலம் போராடி வந்தும், சீட்டுக் கணக்கு அரசியலில் குறைவான தொகுதிகளையே கொண்ட தெற்கின் குரல், சட்டமன்றத்தில் எடுபடவும் இல்லை.

மக்களின் அரசியல் அறிவு, தமிழகத்தை ஒப்பிடுகையில் பீஹாரில் மிகவும் குறைவு. தமிழ்நாட்டின் மூலையில் உள்ள சிற்றூரில் கூட, காலை வேலையில் டீக்கடையில் தினத்தந்தி வாசிப்பதைப் பார்க்க முடியும். நான் இருந்த ஊரில், கிடைக்கும் செய்தித்தாள்கள் "த டெலிக்ராஃப்", "ஆனந்த பஸார் பத்திரிக்கா" - இரண்டுமே கொல்கொத்தா பத்திரிக்கைகள் - வட்டாரச் செய்திகளோ, பீஹார் அரசியலோ இவற்றில் பார்க்க முடியாது. இவையும் இரண்டு நாள் கழித்துத்தான் கிடைக்கும். நியூஸ்பேப்பர் போடுபவர் காலையில் ட்ரெயின் பிடித்து 100 கி.மீ சென்று எடுத்து வர வேண்டும், அவர் கொஞ்சம் தூங்கி ட்ரெயினைத் தவற விட்டால் மூன்று அல்லது நான்கு நாள் பழைய செய்தியே கிடைக்கும். அதற்கும் யாரும் கவலைப்பட்டுப் பார்த்ததில்லை!

இது ஒரு Vicious Circle . படிப்பறிவு குறைவு, எனவே பத்திரிக்கை விற்பனை குறைவு. பத்திரிக்கை குறைவு எனவே அரசின் செயல்பாடுகள் மக்களைச் சென்றடைவது குறைவு. அரசு கவலைப்படுவதில்லை எனவே நலத்திட்டங்களும் குறைவு.. இப்படியே சென்றுகொண்டிருக்கிறது.

--தொடர்வேன்....

4 பின்னூட்டங்கள்:

shoe_luver2000 said...
This comment has been removed by a blog administrator.
NambikkaiRAMA said...

தொடருங்கள் காத்திருக்கிறேன். அருமையாக உள்ளது.

தருமி said...

அடுத்த ஒரு மாநிலம் நம்மைவிட ஏதோ ஒரு விதயத்தில் முன்னேறியது என்று படித்தால் மனதில் ஒரு சின்ன நெருடல் ஏற்படுகிறதே. எப்படி ஒட்டு மொத்தமாக ஒரு மாநிலம் இத்தனை காலம் தூங்க முடிகிறது?

பினாத்தல் சுரேஷ் said...

Thanks Positiverama

Dharumi,

the keyword in your comment is "படித்தால்" -- prachnaiye angethan!

 

blogger templates | Make Money Online