பத்தொன்பது வயதிலே நீங்கள் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்?
படிப்பின் இடையிலே கட்டடித்து சினிமா போயிருப்பீர்களா?பஸ் ஸ்டாப்பில்
குயில் வரும் நேரங்களைக் கணக்கெடுத்திருப்பீர்களா?
உங்கள் முதல் காதல் கவிதையை எழுதி இருப்பீர்களா?
கும்பல் கூடி "பழம்"களை கிண்டல் அடித்திருப்பீர்களா?
சபிக்கப்பட்ட என்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்:
அப்போதைய பீஹாரில், ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், நிலக்கரிச் சுரங்கங்களுக்கும் அனல்மின் நிலையத்தின் பறக்கும் சாம்பல்களுக்கும் இடையில், தொலைக்காட்சி, தொலைபேசி,பெண்வாடை எதுவும் இல்லாத ஒரு நகரியத்தில் என் ஆறு வருடங்கள் கழிந்தன.
இறந்தாலும், இருந்தாலும் ஊருக்கு நாலு நாள் கழித்துத்தான் தெரியும்.
தற்காலிக நிரந்தரமாக (semi-permanent-ஐ தமிழில் எப்படிச் சொல்வது?) எனது நிறுவனத்தால் கோல் இந்தியா விற்கு தத்துக் கொடுக்கப்பட்டு, Caterpillar தயாரித்த ராட்சத இயந்திரங்களைப் பராமரித்து, பாகம் பிரித்து பழுது பார்த்து, பஞ்சர் ஒட்டி பாடாய்ப் படும் வேலை. பிரச்சினை பெரிதாகாத வரையில் இருக்கிறேனா செத்தேனா என்று கவலைப்படாது என் நிர்வாகம். கோல் இந்தியா அதிகாரிகளுக்கும் இயந்திரங்கள் ஓடும் வரை என்னைப்பற்றிய கவலை இருக்காது.
கவலை இல்லாத, வேலைகள் இல்லாத, பொழுதுபோக்கற்ற தனிமை எவ்வளவு பெரிய கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்.
நான் பார்த்த வரையில், பீஹார் ஒரு முரண்பாடுகளின் மூட்டை.
வெள்ள நிவாரண நிதிக்கு சம்பளத்தில் இருந்து நூறு ரூபாய் பிடிப்பதை "நான் ஏன் கொடுக்க வேண்டும்" என் எதிர்த்த ஒரு தொழிலாளி, நான் கண்டதைத் தின்று டீ-ஹைட்ரேஷன் ஆகி ஆஸ்பத்திரியில் இருந்தபோது மூன்று நாட்கள் கூட இருந்து பணிவிடை செய்தான்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - எல்லாம் சும்மா! பீஹாரில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் 90% எஞ்சினியர்கள் உ.பி, மேற்கு வங்காள்த்திலிருந்து - 90% உழைப்பாளிகள் பீஹாரில்- இருந்து! இருப்பினும், அந்த பத்து சத பீஹாரி எஞ்சினியர்களுக்கு ஜாதீயக் காரணங்களுக்காக தொழிலாளிகள் மதிப்பதில்லை! ஆனால் வெளி மாநிலத்தாருக்கு மரியாதையே தனிதான் (எந்த ஜாதியாக இருப்பினும்)
எழுதப் படிக்கத்தெரியாதவன் டிரெயினில் செல்லும்போது டிக்கெட் எடுத்துவிட, எல்லாம் படித்த மேதைகள் டிக்கெட் எடுக்கமாட்டார்கள் - டிக்கெட் செக்கர் வந்தால் நான் ஸ்டுடன்ட், நான் எஞ்சினியர் என்று காரணம் சொல்வார்கள், அல்லது இரண்டு ரூபாய் கொடுத்து செக்கர் வாயை அடைப்பார்கள்.
வாரம் ஒருமுறை ஏதாவது காரணம் சொல்லி வேலை நிறுத்தமும் சாலை மறியலும் செய்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நேரத்தில், தமிழர்களுக்கு எதிராக புறப்பட்ட கும்பலை அடக்கி பிரச்சினை பெரிதாகாமல் அடக்கியது. (நான் நாலு நாள் வீட்டை விட்டு வெளியேறவில்லை!)
வேலை செய்யும் போது அடிபட்ட ஒரு தொழிலாளிக்கு ரத்தம் கொடுக்க நூறு பேர் முன்வந்தார்கள். ஆறு மாதம் கழித்து நடந்த மதக் கலவரத்தில் முன்பு அடிபட்ட தொழிலளியின் மகனை - மாற்று மதம் என்ற ஒரே காரணத்துக்காக - அதே தொழிலாளிகள் - நடு சாலையில் வெட்டிப் போட்டார்கள்!
எல்லாவற்றுக்கும் சிகரமாக, ஒரு நாள் என் வீட்டில் உணவு உண்ண வந்திருந்த ஒரு தொழிலாளி, "அய்யய்யோ உங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டேனே - தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள்" என்றான்.
ஏன் எனக் கேட்ட எனக்கு அவன் அளித்த விளக்கம், தமிழ்நாட்டில் நான் கேள்வி மட்டுமே பட்டிருந்த தீண்டாமைக் கொடுமையின் முழு வீச்சையும் உணர வைத்தது.
பல்வேறு மாநிலத்து மக்களும் வாழும் நகரியக் கலாசாரத்துக்குள்ளேயும் ஊடுருவி இருந்த ஜாதிக் கட்டமைப்பு அருவருக்க வைத்தது.
இன்றும் செய்தித்தாளில் பீஹார் - ஜாதிக்கலவரங்கள் - மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை - அரசியலும் ஆதிக்க வெறியும் அடங்கும் வரை.
Aug 2, 2005
Bihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அரசியல், நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
13 பின்னூட்டங்கள்:
very interesting!
ம். அப்புறம் என்ன ஆச்சு? சீக்கிரம் எழுதுங்க.
நண்பரே,
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.
பீகாரின் முகங்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
அன்புடன்
ராஜ்குமார்
இன்னும் எழுதுங்கள்
பீகாரைப் பற்றி உங்கள் தகவல்கள் சுவையாக இருக்கிறது.
//வேலை செய்யும் போது அடிபட்ட ஒரு தொழிலாளிக்கு ரத்தம் கொடுக்க நூறு பேர் முன்வந்தார்கள். ஆறு மாதம் கழித்து நடந்த மதக் கலவரத்தில் முன்பு அடிபட்ட தொழிலளியின் மகனை - மாற்று மதம் என்ற ஒரே காரணத்துக்காக - அதே தொழிலாளிகள் - நடு சாலையில் வெட்டிப் போட்டார்கள்!//
Doppler's Effect காரணமாக இருக்கும்.
சீட்டுக்கட்டுகள் (அல்லது) செம்மறி ஆடுகள்.
பீகார் மாநில எல்லை வரை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிற்கும் எக்ஸ்பிரஸ் வண்டிகள் கூட,பீகார் காற்று பட்டதும் பாசெஞ்சர் வண்டிகளாக மாறி நம்ம ஊர் மினி பஸ் போல் கை காட்டப்படும் இடம் எல்லாம் நின்று செல்லுமாமே??
இது நிசமா???
பீகார் தான் நாட்டிலியே அதிக IAS அதிகாரிகளை உற்பத்தி செய்கிறது என்று படித்திருக்கிறேன்.இருந்தும் சமூகத்திலுள்ள இடைவெளியைக் குறைக்க அவர்கள் எந்த முயற்சி செய்ததாகத் தெரியவில்லை.
இந்தியாவின் மிகப்பழைமையான நகரம்(பாடலிபுத்திரம்-பாட்னா),புத்தர் ஞானம் பெற்ற இடம்(கயா)என்று சங்கிலித்தொடர் போலப் பெருமை பேசத்தகுந்த விஷயங்கள் இருந்தாலும் லாலூ&கோ இருக்கும் வரை யாராலும் பிகார் முன்னேறுவது கடினமே.
பிகார் பற்றி இன்னும் பற்பல சுவையான தகவல்களை எதிர்பார்க்கிறோம்,இந்த வார நட்சத்திரமே..
பீகாரில் driving licence பற்றி எனக்கு வந்த மெயிலின் சுட்டி இதோ. படித்துவிட்டு உண்மையிலேயே வயிறு குழுங்க சிரித்தேன்.
http://recycledjunk.blogspot.com/2005/05/bihar-driving-license.html
Suresh,
I have never gone to Bihar (been to many places in the North, though).
Your 'Bihar data' will tend to make readers sit up and think !!!
//
பீகார் தான் நாட்டிலியே அதிக IAS அதிகாரிகளை .....//
உண்மை சென்னையிலேயே, பீஹாரி இ.ஆ.ப அதிகாரிகளை பார்க்கமுடியும். ஆனால் கேட்டால், கிடைக்கும் பதில் Who will go to that god forsaken place. பீஹார் இந்திய தேசத்தில் கனிம வளங்கள் அடங்கிய ஒரு பூமி.
சுரேஷ், பீஹார் பற்றிப் பேசிவிட்டு, லல்லு பற்றி பேசாமல் போனால் எப்படி, எழுதுங்கள்.
கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.
பீஹார் பற்றி இன்னும் சில பதிவுகள் எழுத எண்ணியுள்ளேன். முதலில், உங்கள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விளக்கமாக ஒரு மறு பதிவு செய்கின்றேன், இன்னும் இரண்டு நாட்களில்.
நல்ல பதிவு சுரேஷ், பீகார் பற்றி ஊடகங்களில் வருவதை எத்தனை அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை, முன்னேறாமல் இருப்பதற்கு லல்லுவிலிருந்து இன்னும் ஏதேதோ காரணங்கள் கூறினாலும் என்னால் அதை முழுமையாக நம்பமுடியவில்லை, யாரேனும் அங்கே இருந்தவர்கள் அனுபவப் பூர்வமாக நடுநிலையாக எழுதினால் மட்டுமே உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள முடியும்...
//ஏன் எனக் கேட்ட எனக்கு அவன் அளித்த விளக்கம், தமிழ்நாட்டில் நான் கேள்வி மட்டுமே பட்டிருந்த தீண்டாமைக் கொடுமையின் முழு வீச்சையும் உணர வைத்தது.
//
பீகாரைச் சேர்ந்த என் முந்தைய அலுவலகத்தின் தோழி ஒருவர் மதிய உணவின் போது சாப்பிட்ட கையால் ஒரு சப்பாத்தியை எடுத்து தன் தட்டில் வைத்தார், இது போன்று சாப்பிடும்போது யாரேனும் சாப்பிட்ட கையால் எடுத்து வைத்து எனக்கு பழக்கமில்லாததால் தயவு செய்து எடுத்துவிடு நான் சாப்பிடமாட்டேன் என்றேன்(இப்போது அதெல்லாம் இல்லை, பழகிவிட்டது எந்த தட்டிலிருந்தும் எடுத்து சாப்பிடுவேன்) அதற்கு அவர் தந்த பதில் எந்த அளவிற்கு அங்கே சாதிவெறி புரையோடியுள்ளது என தெரிந்தது. அப்படி என்ன சொன்னார் என்கின்றீரா? நான் **** தான் அதனால் நீ தாராளமாக சாப்பிடலாம் ஒன்றுமில்லை என்றார், நான் சாதிக்காக சொல்லவில்லை, சாப்பிட்ட கையால் எடுத்து வைத்ததற்காக என்று விளக்கினேன்.
//
பீகார் தான் நாட்டிலியே அதிக ஈஆஸ் அதிகாரிகளை .....//
//
அது மட்டுமல்ல பெரும்பாலான வருடங்கள் IIT-JEE முதல் மாணவர்களாக வருவோரும் பாட்னாவை சார்ந்தோராய் உள்ளது பெரும் புதிர்தான் .. ராஞ்சி பகுதி மிகவும் பின்தங்கியது என நினைக்கிறேன்
Post a Comment