Dec 28, 2004

திகில் நிமிடங்கள்

நம் பயாலாஜிகல் க்ளாக்கிற்கு எப்படித்தான் தெரிகிறதோ தெரியவில்லை,ஞாயிற்றுக்கிழமை சோம்பேறித்தனம் உடம்பில் வழிகிறது.

தூக்கத்தின் நடுவிலேயே ஒடிக்கொன்டிருந்த டிவியில் ஏதொ இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சென்னையில் மக்கள் பீதி என பயமுறுத்திக்கொண்டிருந்தது அரைகுறையாக காதில் விழுந்தது. இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா? மக்கள் எதற்கு பயந்தாலும் இவர்களுக்குத் தான் ஓட்டுப்போடுவார்கள் என்ற எண்ணமா?

சரி எழுந்தாகிவிட்டது, முதல் கடமையை முடிப்போம்.

"காபி எங்கேடி?"

"அதோ டிவிமேலே இருக்கு" - சமையல் அறையிலிருந்து மனையாளின் குரல். இவளுக்கு சண்டே மண்டே எல்லாம் ஒரே மாதிரிதான். குழந்தைக்கு தோசை வார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

காபியையும் நியூஸ்பேப்பரையும் எடுத்துக்கொண்டு, வாசல் ஈஸிசேரில் கடலைப் பார்த்து அமர்ந்தேன்.

தினமும் பார்க்கிற கடல்தான், இன்று ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே- கொஞம் ரஃப் -ஆக இருக்கிறதோ? கடலின் நீலநிறம் இல்லாமல் அழுக்குப் படர்ந்த பழுப்பாக இருக்கிறதே? இன்று அமாவாசை பவுர்ணமியும் இல்லையே? அலைகளின் சீற்றமும் மிக அருகில் இருப்பது போல் தோன்றுகிறதே!

திடீரென்று உறைத்தது - நிச்சயமாக கடல் இவ்வளவு அருகில் இருந்ததில்லை. கடல் தடுப்புச்சுவரைத் தாண்டிவிட்டது - இன்னும் ரோட்டை நோகி நகர்ந்து கொன்டிருக்கிறது. உடம்பில் உள்ள அத்தனை செல்களும் சோம்பேறித்தனத்தை உதறி "அய்யோ கடல் டௌன்ஷிப்புக்குள்ளே வருது - எல்லாரும் ஓடுங்க" என்ரு ஒரு சத்தம் போட்டு வீட்டுக்குள் ஓடினேன்.

"க்ரைஸிஸ்" - இந்த நேரத்தில் பதற்றமற்ற ஆனால் விரைவான வழியைத்தேட வேண்டும். அலைகள் வரும் வேகத்தை தாண்டி, ரோட்டில் ஓடுவது- அதுவும் தூங்கும் குழந்தையை தோளில் தாங்கி - முட்டாள்தனமாகும்.

"நித்யா குழந்தையை தூக்கிக்கோ!" யோசி கண்ணா யோசி! திங்க் ஃபாஸ்ட்!

கடல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகிறது. வீட்டின் கதவுகள் தெற்கு வடக்காக இருக்கிறது. கதவை மூடினால், அலையின் வேகம் இல்லாமல் பக்கவாட்டு வேகம்தான் தாக்கும். கதவுகளை இருக்க மூடினேன். ஜன்னல்களை மூட அவகாசம் இல்லை. டைனிங் டேபிளில் இருந்த அனைத்தையும்கீழே தள்ளி அதன் மேல் முதலில் மனைவியையும் குழந்தையையும் ஏற்றினேன்.

எனக்கு கிடைத்த நேரம் 5 வினாடிகள்தான். ஆனால் 5 வினாடிகள் என்பது எவ்வளவு அதிக நேரம் என்பது அப்போதுதான் தெரிந்தது.

ஜன்னல் வழியாக சீறியது கடல் - விட்டுக்குள் டேபிள் மேல் நிற்கும் என் முழங்கால் வரை நீர் - டிவி ஸ்டேண்ட் நிலை தடுமாறி டேபிள் மேல் விழுகிறது- டேபிள் ஆட, அவளையும், குழந்தையும் ஸீலிங் ஃபேனை பிடித்து ஆடுகிறேன். இது ரொம்ப நேரம் தாங்காது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து ஃப்ரிட்ஜ் ஆடி கீழே விழ - சரி முடிந்தது கதை. "வாழிய செந்தமிழ் - வாழ்க நற்றமிழர்! வந்தே மாதரம்" மனசுக்குள் ஓடியது. வாசல் வழியாக தெரிந்த காட்சிகள் - பக்கத்து வீட்டு ஸ்கூட்டர் அலை மேலே டேன்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறது. அது என்ன புடவையா? பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டேன். கண்களை மூடிக்கொண்டதற்கு இன்னொரு காரணம் - குழந்தை கலவரத்தை எப்படியோ உணர்ந்துஇதுநாள்வரை நான் பார்த்திராத் ஒரு வீரியத்தோடு அழுதுகொண்டிருந்தான் - feeling absolutely helpless!

கண்ணைத்திறக்கும் போதெல்லாம் ஒரு ஆச்சரியம் - எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறோம்!

எப்படியாவது கூறைக்கு மேல் ஏற முடிந்தால் பரவாயில்லை. கூறை எப்படியும் 15 - 20 அடி உயரம் இருக்கும் - இன்னும் கொஞ்ச நேரம் தாங்கும்.

15 நிமிடங்கள்! குறைந்தது ஒரு நூறு முறையேனும் மரணத்துக்கு மிக மிக அருகில் சென்று வந்த 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரின் அளவு சற்றே வடியத் தொடங்கியது.

உடனே குதித்து, ஏணியை எடுத்து கதவைத்திறந்தேன் - மேலும் தண்ணீர் உள்வர, இப்போது இடுப்பளவு ஆழம் - ஆனால் வேகம் குறைவே. இப்போது கூரை மேல் ஏற முடியாவிட்டால் எப்போதுமே ஏற முடியாது. ஏணியை கூரை மேல் சாய்த்து, குழந்தையை வாங்கிமேலே ஏறினோம்.

ஏறியபின் தான் தெரிந்தது, இது அவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு அல்ல என்பது.
பத்து அடிக்கு குறைவில்லாத அலைகள், ஒவ்வொன்றும் கூரையின் தளத்தை தொட்டு, எங்கள் கால்கலுக்கு மிக அருகில்! ஆடும் அலைகளின் குழிப்பகுதியில் கடல் தடுப்புச்சுவர் தெளிவாக தெரிகிறது.
இன்னும் ஒரு முப்பது நிமிடங்கள் - இப்பொது அலைகளின் சீற்றத்தை நேரடியாக காண முடிகிறது. ஏற்கனவே கூரை மேலுள்ள நண்பர்கள் - அலை இரைச்சலையும் மீறி கத்தியதில் என் அதிர்ஷ்டம் தெரிகிறது. ஆனால் இன்னும் எவ்வளவு நேரம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்? இந்த அலையோ- அடுத்த அலையோ என்பதுதானே நிதர்சனம்? குழந்தை அழுகை சற்றும் குறையவே இல்லை. என் முகத்தை பார்த்து இவளுக்கும் நிலைமையின் விபரீதம் புரிந்திருக்கிறது. அவள் வாய் எதையொ முணுமுணுக்கிறது - கவசமாக இருக்கலாம். தேவையில்லாமல் ஒரு சிந்தனை - கீழே இருந்திருந்தால் டிவி பார்த்து அப்டேட் ஆகியிருக்கலாமே?

நரகத்தின் வாசலில் முப்பது நிமிடங்கள் கழிந்தபிறகு என் வீட்டு வாசல் தரை தெரிந்தது. அடுத்த அலைகள் வீசும் முன்னெ இறங்கி தெருவில் ஓடினோம். நண்பன் வீடு மூன்று மாடித்தளத்தில்.

அங்கே சென்று அமர்ந்த பிறகுதான் நிலைமையின் முழு வீரியமும் புரிந்தது. நான் பார்த்தது பல காலமாக படித்த ட்சுனாமி, கல்பாக்கத்தில் சர்ச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது - பலபேர் பலி- இங்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரையையே சூறையாடி இருக்கிறது என்பதெல்லாம்!

இப்போது சொன்னால் போலியாகத் தெரியலாம்- எங்களைக் காப்பாற்றியது அந்தக் கவசம் தான்!

பின்குறிப்பு - 1:
இந்த அனுபவம் கல்பாக்கத்தில் பணியாற்றும் என் என் அண்ணனுடையது. 2 நாள் கழித்து சென்னை வந்து தொலை பேசினான்.

பின்குறிப்பு - 2:
கல்பாக்கத்தில் கடல் சீற்றம் வெளியே ஓடிய மனித உயிர்களையும் உடமைகளையும் பாதித்த அளவிற்கு கட்டடங்களை பாதித்ததாகத் தெரியவில்லை- அந்த சர்ச் தவிர.

பின்குறிப்பு - 3:
என் அண்ணனின் ஆப்டிமிஸம் இந்த நிகழ்வால் பாதிக்கப்படவில்லை - கல்பாக்கத்தில் கடலில் இருந்து முதல் கட்டிடம் பள்ளிக்கூடம். ஞாயிரன்று இது நிகழ்ந்ததால் பெரும் அளவு குழந்தைகள் சேதம் நிகழாமல் தப்பித்திருக்கிறது. மேலும் அதிகாலை வேளையிலோ இரவிலோ நடந்திருந்தால் பலர் பிழைத்திருக்க முடியாது என்றும் அவன் கூறுகிறான்.

Dec 21, 2004

அதிசயம் ஆக்குவீர் என் வீட்டை!

என் வீடு தமிழ்நாட்டிலே ஒரு சிற்றூரில் ஆயிரம் சதுர அடிப் பரப்பளவிலே கொத்தனாரைக் கொண்டு மிக அழகாகக் கட்டப்பட்ட வீடு.

பெரும் பொருட்செலவிலே கட்டப்பட்ட இந்த வீட்டில், தமிழ் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு திண்ணையும் இருக்கிறது.

பக்தி வளர்க்க ஒரு பூஜை அறை உள்ளது. இந்த அரைக்குள்ளே ஆண்டவன் ப்ரத்யட்சமாக இருக்கிறான் என்பது கோடிக்கணக்கான என் விருந்தினர்களின் திண்ணமான எண்ணம்.

நாங்களும் விருந்தினர்களும் உறங்குவதற்கென்றே கட்டப்பட்ட இரு படுக்கை அறைகளும் தூக்கதை உடனடியாக வரவழைக்கும் விதத்தில் அமைந்துள்ளது ஒரு அதிசயமே.

இந்த இல்லத்தில் ஹால் எனப்படும் அரை மிக விசாலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 2000த்துக்கு முன்னதாக கட்டப்பட்ட இந்த அதிசயம், இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்கும் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை.

கூடிய விரைவில், இந்த அதிசயத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாஸன், ஜோதிகா, சிம்ரன், வடிவேலு, ஷகீலா ஆகியோர் ஆதரிக்க உள்ளனர்.

எனவே நீங்களும் உடனடியாக இதை ஆதரிக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது : www.sevenblunders.com என்ற இணைய தளத்தில் நுழைந்து உங்கள் கடன் அட்டை எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளிட்டு "allow unlimited access " என்னும் பொத்தானை அமுக்க வெண்டும் - அவ்வளவுதான்

Dec 7, 2004

கொடுமை தொடரும்! மன்மதன் இரண்டாம் பாகம்!!

தினமலரில் அறிஞர் சிம்புவின் பேட்டி பார்த்ததும் தோன்றியது: என் பூர்வ ஜென்ம புண்ணியம் கொஞ்சம் மிச்சமிருப்பதால் இன்னும் மன்மதன் படம் பார்க்காமல் தப்பித்து வந்திருக்கிறேன்!

இந்தப் படம் இந்திய ஜனநாயகம் போல.. எப்படி ஓடுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை- ஆனாலும் ஓடுகிறது.

திரை விமர்சனம் மற்றும் விளம்பரங்களில் நான் காணப்பெற்ற சில காட்சிகள் இந்தப்படம் ஒரு Hyperlink படம் என்பதே!

உதாரணமாக:

"சாரி- சாரி" என்று மன்னிப்புக் கேட்கும் ஜோதிகாவிடம் சிம்பு - "குஷி" படத்தில் இருந்து இன்னும் திருந்தவே இல்லையே - என ஒரு வசனம்

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது - ஆனாலும் என் மனைவி அவள் வீட்டில் இருக்கிறாள் - அலை பாயுதே போல - என இன்னொரு வசனம்.

நீ பாதி சிவப்பு ரோஜாக்கள் போல, பாதி குணா போல - என இன்னொரு வசனம்.

என் ஆசை மைதிலியே - ரீ மிக்ஸ் வேறு!

இப்படித் தெளிவாகவே நான் ஒன்றும் புதுப்படம் கொடுக்கப் போவதில்லை என்ற அறிவிப்பு இருந்தாலும் எப்படி இந்தப்படம் ஓடுகிறது?

இந்த மசாலா மிக்ஸில், ஒரு உருப்படாத கதை.

காதலில் ஏமாற்றும் பெண்களை களை எடுக்கிறானாம்! (அவர்களை அனுபவித்தபின்?!. இது நியாயம்தான் என்ற ஜஸ்டிஃபிகேஷன் வேறு!

இன்று திரைப்படத்தை தியேட்டருக்குப் போய் பார்க்கும் ஒரே கூட்டமான விடலைகளுக்கு பிடித்த "பெண்களை நம்பாதே" எனும் செல்லச் சித்தாந்தத்தை முன்வைத்தது மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கும். (நம் மக்கள்தான் 'சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாத" கூட்டம் ஆயிற்றே!)

ரோஸா வஸந்த்தின் ஆதங்கம் மிக நியாயமானதே! பாய்ஸ், நியூ படங்களுக்கு - ஏன் ஹமாம் மின்டோஃப்ரெஷ் விளம்பரங்களுக்கு வெளிப்பட்ட எதிர்ப்பில் ஒரு சிறு பங்கு கூட இந்தப்படத்திற்கு ஏற்படாதது முன்பு எதிர்த்தவர்களின் நோக்கத்தின் தோல்வியே!

சிம்புவின் பேட்டிகள் மூலம் கிடைத்த நல்முத்துக்கள்:
1. இந்தப்படத்தின் வெற்றிக்கு கதை - திரைக்கதை (!)தான் காரணம்

2. வன்முறை - ஆபாசப்படங்களைத்தான் ரசிகர்கள் விரும்பிகிறார்கள்
3. எனக்கு 20 வருட திரை அனுபவம் உள்ளது - கவுண்டமணிக்கு திரை உலகத்தின் நடைமுறை தெரியவில்லை!

சிம்பு போன்றவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையென்றால் பிற்காலத்தில் இவர்கள் எஸ்.ஜே.சூர்யா போல "பார்க்கிறவர்களுக்குத்தான் வக்கிரபுத்தி" என லாஜிக் பேசுவார்கள்.

Nov 17, 2004

சூப்பர்- 10.. ஆபாசம் கண்ணா ஆபாசம்!

சன் டிவி நிகழ்ச்சிகளிலே எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி இது. பழைய புதிய திரைப்படங்களைப்பற்றி நக்கலும் நையாண்டியுமாக satirical -ஆக விமர்சிக்கும்.

நேற்றைய நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருக்கும் என முன்கூட்டியே எதிர்பார்க்க முடிந்தது - காரணம் அளவுக்கு மீறிய விளம்பரம். இந்த நிகழ்ச்சியின் விளம்பரம் பொதுவாக கிண்டலடிக்கப்படும் படத்தின் ஒரு பாடல் வரியாகவே இருக்கும் - ஆனால் இந்த வார விளம்பரத்தில் பல வசனங்களும் இடம் பெற்றது. சரிதான்- சன் டிவிக்காரன் குசும்பை ஆரம்பிச்சுட்டான் என புரிந்துகொள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் தேவையில்லை.

நிகழ்ச்சி அபாரம். ஆபாசத்துக்கு ஒரு அவார்ட் கொடுத்தால் இதற்கு முதல் இடம் கொடுக்கலாம்.

வெள்ளைப்பன்னி, மாமாப்பயல், கழுத்துக்கு கீழே தொப்பை ஆரம்பிக்குது, காசு கொடுத்தால் எந்த கட்சியையும் ஆதரிப்பான், சேலத்தில் பொம்பளை கிட்ட அடி வாங்கியவன், சிங்கப்பூரில் பிசினெஸ் செய்தான் என்று மிகவும் நாகரீகமாக வசை பாடினார்கள். சன்கிட்டே வச்சுக்காதே- பின்னாலே கஷ்டப்படுவே என்று பன்ச் வேறு!

எதிர் அணியில் இருப்பவர்களை தரக்குறைவாக தாக்குவது தி.மு.க வினருக்கு புதியதல்ல என்றாலும், டிவி நிகழ்ச்சியில் நேரடியாக மூன்றாந்தர அர்ச்சனை எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை.

எத்தனையோ நேரடியான எதிரிகள் இருக்க, எஸ்.வி.சேகரைப் பெரிய ஆள் ஆக்க சன் டிவி முனைந்திருப்பதேன்? யாருக்கும் விவரம் தெரியுமா? பின்னூட்டம் அளியுங்களேன்!

பி.கு: மாயவரத்தான் சூப்பர் ஃபாஸ்ட். ப்ரோக்ராம் முடிஞ்ச 15-ஆவது நிமிடம் அவரது ப்ளாக்கில் இந்த விஷயம்!

ஆனால் மாயவரம்ஸ், அவர்கள் இது விளம்பரதாரர் நிகழ்ச்சி என ஜகா வாங்க முடியாது.

ஏற்கனவே ரஜினி படங்களை விமர்சிப்பதை தேர்தல் முடியும் வரை தள்ளிப்போட்டதன் மூலம் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை (சந்தர்ப்பவாதத்தை)உறுதி படுத்தியவர்கள்தாம் இந்த சூப்பர் 10 தயாரிப்பாளர்கள் - நினைவிருக்கிரதுதானே?

Nov 8, 2004

தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3

5. கிரிவலம்

கதை திரைக்கதை வசனம் டைரக் ஷன் நடிப்பு - ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் நாயகன் புதுப்பட வேலைகளிலும் கல்யாண வேலைகளிலும் பிஸி ஆகி விட்டதால் படம் பாதி வரை மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது.

நண்பர்களும் பகைவர்களும் கூட்டு சேர்ந்து விட, நாயகனுக்கு யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்தில் ஒரு அரைகுறை வாய்ஸ் விடுகிறார். எதிரிகளின் "பூர்வ ஜென்ம புண்ணியத்"தில் அந்த வாய்ஸ் பிசுபிசுக்க, எதிரிகள் நாட்டியம் ஆடுகிறார்கள்.

இதற்கிடையே நாயகனின் உடன் வேலை செய்யும் சிலரும் ஆளாளுக்கு வாய்ஸ் விடத் தொடங்குகிறார்கள்.

மேலும் குழப்பமாக, நாயகனின் ஐஸ்வர்யத்தின் மீதும் சில மன்மத ராசாக்கள் கண் வைக்க, "இடைவேளை"

நாயகன் மீண்டும் கிரிவலம் செல்லத் துவங்குவாரா? அல்லது கோட்டையை நோக்குவாரா? பார்ட் 2 வில் பதில் கிடைக்கும்.

இப்போதைக்கு இந்தப் படம் ஒரு குழப்ப சங்கமம் மட்டுமே!

6. ட்ரீம்ஸ்

கதை வசனம் டைரக் ஷன் - விதி
நடிகர்கள் - பொதுஜனம்.

நல்ல ஆட்சி கிடைக்காதா என்ற பொது மக்களின் கனவுகளே இந்த ட்ரீம்ஸ்.

"கனவு காணுங்கள்" என ஜனாதிபதியே கூறிவிட்டதால் மக்கள் தூக்கத்தில் ஆழ்கின்றனர்.

அவர்கள் விழிப்புணர்ச்சி பெற்றுவிடக் கூடாது என அனைத்து அரசியல்வாதிகளும் முயற்சி எடுக்கின்றனர்.

படத்தின் முடிவில் அரசியல்வாதிகளே வெற்றி அடைகிறார்கள்.

சோக முடிவாக இருந்தாலும் யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம்.

தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2

3. மன்மதன் (மெகா சீரியல்)

கதை வசனம் டைரக் ஷன் - மீடியா
கதா நாயகிகள் - ஜீவஜோதி, செரினா மற்றும் ஜெயலக்ஷ்மி.

நாட்டில் உலாவும் பல மன்மதர்களைப்பற்றிய சீரியல் இது.

கதை மனதில் ஒட்டாமல் போனதற்க்கு காரணம் கதையில் வரும் கணக்கில்லாத கதாபாத்திரங்களே.

தொடரின் ஆரம்பத்தில் "மன்மதன்"-ஆக வரும் டாக்டர் ப்ரகாஷ், ஸ்வாமி பிரேமானந்தா ஆகியோர் பிற்பகுதியில் காணாமல் போய்விடுகிறார்கள்.

அண்ணாச்சி கதாபாத்திரம் ஜீவஜோதியால் பழிவாங்கப்பட்டு ஜெயிலுக்கு போகும் அதே நேரத்தில், பழிவாங்கப்பட்ட அபலையாக அறிமுகம் ஆகிறார் செரினா. கொஞ்ச நேரத்தில் இவரும் காணாமல் போகிறார்.

கதையின் பிற்பகுதியில் இன்ட்ரோ கொடுக்கும் ஜெயலக்ஷ்மியால் போலிஸ் டிபார்ட்மென்டே ஆடிப்போகிறது.

பார்க்கும் போது ஒவ்வொரு நாளும் பரபரப்பு!

4. சத்ரபதி

கதை வசனம் டைரக் ஷன் - சோனியா காந்தி
கதை வசனம் டைரக் ஷன் உதவி (உபத்திரவம்)- கூட்டணிக் கட்சிகள்
நடிப்பு - மன் மோகன் சிங்

ஏழு பதிகளுக்கு வாழ்க்கைப்பட்டு நினைத்தது எதையும் செய்ய முடியாமல் கஷ்டப்படும் ஒரு அபலையாக மன் மோகன் சிங் வாழ்ந்து காட்டி உள்ளார்.

இவர் ஒரு டம்மி என்று ஆரம்ப காட்சிகளிலேயே இலாகா ஒதுக்கீட்டில் தோலுரித்து காட்டி விடுகிறார் ஒரு பதி.

நான் என் இஷ்டப்படி தான் ரயில் ஓட்டுவேன் என திரிகிறார் இன்னொரு பதி. (படத்தின் காமெடியனும் இவரே)

எனக்கு முதல் மந்திரி பதவி அல்லது அட் லீஸ்ட் கிரிக்கெட் வாரியம் - இல்லையென்றால் மறுபடி அன்னியள் கோஷம் என்கிறார் இன்னொரு பதி.

விலை ஏற்ற விடமாட்டோம் - அன்னிய பிரதமர் ஓகே ஆனால் அன்னிய அட்வைஸ் கூடாது எனக் குழப்பும் ஒரு பதி

இவர்களுக்கு இடையே குடும்பத்தை சந்தி சிரிக்க விடாமல் நடத்துகிறாள் இந்த அபலை.

கண்ணீர்க் காட்சிகள் நிறைந்தது.

தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 1

1. நெறஞ்ச மனசு

கதை வசனம் டைரக் ஷன் - ஜெ. ஜெயலலிதா
கதா நாயகன் - விஜயகுமார்
வில்லன் - வீரப்பன்

பெயர்க்காரணம் - வில்லனை ஒழித்ததால் டைரக்டருக்கு மனசு நெறயுது.

காட்டிலே இருக்கும் வில்லனை தீர்த்துக் கட்டும் போலிஸ் அதிகாரியாக விஜயகுமார் வெளுத்து வாங்கியுள்ளார். ஆனால் வில்லனை கொல்லும் காட்சியில் லாஜிக் உதைப்பதாக கூறும் மனித உரிமை குழுவிற்கு கதா நாயகனோ, டைரக்டரோ சரியான விடை கூறவில்லை என்பது ஒரு குறையே!

இந்த படத்தின் வெற்றிக்கு கெஸ்ட் ரோல் செய்த கர்னாடக அதிரடிப்படையும் காரணம் என்று கலைஞர் பாராட்டி உள்ளார். மேலும் இதே படத்தை அவர் இயக்கிய போது சோக முடிவு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

பத்திரிக்கைகளின் கருத்து இந்தப்படத்தை பொறுத்தவரை தெளிவாக இல்லை. சில சமயம் அவர்கள் வில்லனின் பாய்ன்ட் ஆஃப் வியூவில் கொன்றது தவறு, உயிரோடு பிடித்திருக்க வேண்டும் என்றும் சில சமயம் கதை திரைக்கதையை வியந்து பாராட்டியும் குழப்புகிறார்கள்.

மொத்தத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகி மிகுந்த விளம்பரத்துடன் வெளியாகி உள்ள படம்.

2. அட்டகாசம்

கதை திரைக்கதை டைரக் ஷன் - சன் டிவி
கதா நாயகன் - சன் டிவி

மக்கள் நம்மை மட்டுமே கவனிக்கிறார்கள் என்பதால் கதா நாயகன் போடும் ஆட்டமே இந்த அட்டகாசம்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய சென்டிமென்ட் காட்சிகள்-

தாத்தா சென்டிமென்ட் - 12 மணி நேரம் தொடர்ந்து அய்யோ கொல்றாங்களே - இதை எலெக்ஷன் வரும் போதெல்லாம் ஃப்ளாஷ்பேக்க்காக காண்பித்து வோட்டை அறுவடை செய்வது ஒரு நல்ல உத்தி.

தங்கச்சி சென்டிமென்ட் - பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை தங்கச்சிக்காக "புதுசு கண்ணா" என்ற பாடல் இடம் பெறுவதால் தங்கச்சி மானிலத்தில் முதலாக வரும் காட்சி நம்ப முடியவில்லை என்றாலும் நல்ல காட்சி அமைப்பு.

படத்தில் பல நல்ல நடிகர்கள் (உம் - வைகோ, வாசன்) இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிந்தாலும், அவை உறவினர் சென்டிமென்ட்டுக்காக நீக்கப்பட்டவை

தாத்தா எட்டு மணிக்கு மூட நம்பிக்கை கூடாது என்று சொல்வதை தொடர்ந்து வரும் க்ராஃபிக் சாமிக்காட்சிகள் நல்ல டைரக்டோரியல் டச்.

Nov 2, 2004

செய்தியை உடைக்கிறேன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் ஜாயேத் பின் சுல்தான் அல் நய்யான் காலமானார்.


அவரது குடும்பம் மற்றும் நாட்டு மக்களுக்கு நம் அனுதாபங்கள் உரித்தாகுக!
a

Oct 23, 2004

வீரப்பனுக்கு சில இரங்கல் கவிதைகள்

எல்லாரும் வீரப்பனை கொன்றது பற்றி ப்ளாக்கித் தள்ளிவிட்டார்கள். என் பங்குக்கு சில பிரபல கவிஞர்களிடமிருந்து இரங்கல் கவிதைகளை வாங்கி இங்கே பிரசுரிக்கிறேன்.

முன்னாள் அ(று)ரசவைக் கவிஞர் கோலி:

அடைந்திருக்கலாமே நீ சரண்-
உன் மேல் இருந்த வழக்கு எல்லாம்
ஏறி இருக்குமேபரண்.

சுடப்பட்டதாலே நீ
வீணப்பன்..பிழைத்திருந்தால் தின்றிருக்கலாமே
மைசூர் கார பன்.

நீ செய்ததோ நூறே கொலை-
உன் உயிரா அதற்கு விலை?

கொன்றவரும் அடித்தார் மொட்டை--
விட்டிருந்தால் காடே மொட்டை!

நீ நிறுத்திவிட்டாய் உன் ஆட்டத்தை--
நானும் நிறுத்துகிறேன் என் பாட்டத்தை.

கவிச் சர்வாதிகாரி தங்கப் பவழம்:

நீ கண் திறந்தால் ஆனைகள் அதிரும் -
பொறை உன் கண் மூடியதால் அன்றோ
பூனைகளும் புது வீரம் கண்டன?

உன் ராஜராஜாங்கத்தில் சிறு நரிகளையும்
உலவ விட்டதனால் அன்றோ
எலிகளும் இன்று ஏரியல்-வ்யூ பார்க்கின்றன?

நீ கைமுஷ்டிக்குள் புயலை அடக்குபவன்..
வெறும் தென்றலா உன்னை புரட்டிப் போட்டது?

நீ காட்டையே கட்கத்தில் அடக்கியவன் -
சிறு செடியா உன்னை இடறி விட்டது?

யாரும் அடிக்க வர்றதுக்கு முன்னாடி வுடு ஜூட்!

Oct 17, 2004

வணக்கம்..

முதல் முறையாக வலைப்பதிவுக்கு வந்துள்ளேன்.

எனக்கு எழுத வராது. ஆனாலும் எழுதுவேன்.

(ஒரு பழைய ஜோக்:
என் மாப்பிள்ளைக்கு சீட்டாட வராது, ரேஸ் ஆட வராது..

பரவாயில்லையே! நல்ல விஷயம் தானெ!

அவருக்கு ஆட வராதுன்னு தான் சொன்னேன். ஆட மாட்டாருன்னா சொன்னேன்?)

முயற்சி செய்கிறேன்.. நன்றாக கிறுக்குவதற்கு!

 

blogger templates | Make Money Online