வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடியது கார். ஆறு சாரிகள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை நேரான சாலை, கண்ணுக்கழகாய் இரண்டு பக்கமும் மஞ்சள் பூப்பூத்த மரங்கள். இந்தியாவைவிட்டு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் ஒப்பிடுதலை இன்னும்கூட தவிர்க்க முடிவதில்லை.
எக்ஸிட் 164தானே சொன்னான்? 164 கண்ணில் பட்டதும் படிப்படியாக வல்து எல்லைக்கு வந்து குறுஞ்சாலைக்குள் புகுந்ததில் "Geoffrey Smith" பலகை கண்ணில் பட, வீட்டுச்சாலைக்குள் திருப்பினேன்.
ஜெஃப்பின் வீட்டுக்கு முதல் முறையாகப் போகிறேன். வாழ்கிறான் மனுஷன்! நகரத்தில் இருந்து இருபதே நிமிட ட்ரைவில் விஸ்தாரமான பெண்ட் ஹவுஸ். ஆள் படை அம்பு! காரை பார்க் செய்து உள்ளே நுழைந்தவுடன் பட்லர் வந்து வரவேற்பரைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான். "நீங்கள் எதிர்பார்க்கப் படுகிறீர்கள். இன்னும் சில நிமிடங்களில் திரு ஜெப்ரி ஸ்மித் உங்களுடன் பேசுவார்". அதெப்படி ரெகார்டட் செய்தி போலவே நேரில் உள்ளவரிடமும் இவனால் பேச முடிகிறது?
விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை. ஜோக்குகளில் வருவது போல நல்ல செய்தி கெட்ட செய்தி எது வேண்டும் என ஆரம்பிக்கலாமா? எனக்கு விஷயத்தைச் சொன்ன ஃப்ரான்ஸிஸ் அப்படித்தானே ஆரம்பித்தான்..
"பாஸ் ஒரு செய்தி.. நல்லதா கெட்டதா எது முதலில் வேண்டும்?"
"கெட்டதையே சொல்லு" அப்போதுதான் நல்லது வரும்போது மனசுக்கு ஆறுதலாய் இருக்கும்.
"போர்ட்டிலிருந்து மேக் போன் செய்தான். எப்படியும் நம்ம கன்ஸைன்மெண்ட் கிளியர் ஆக ஒரு வாரம் ஆகிவிடுமாம்."
"என்ன விளையாடுகிறார்களா? ஒரு வாரம்! போர்ட் அதிகாரிகளுக்குத் தெரியாதா நம்ம கன்ஸைன்மெண்ட் பெரிஷபிள் கூட்ஸ் என்று. ஒரு வாரத்துக்குள் எல்லாம் நாசமாப் போயிடுமே.. என்ன பண்றான் மேக்? இதைக் கூட கன்வின்ஸ் பண்ண முடியாதாமா அவனால்?"
"மேக் எவ்வளவோ ட்ரை பண்ணான். போர்ட் ஸ்ட்ரைக்லே மாட்டியிருக்கு. கஸ்டம்ஸ் ஆளுங்க ஹெல்ப் பண்ணலாம். ஆனா அவங்க நாம போன முறை பண்ண அண்டர் வேல்யூ தில்லுமுல்லுலே ரொம்பக் கடுப்பா இருக்கானுங்களாம்."
20 மில்லியன் டாலர் சரக்கு! எக்ஸ்பயரி தேதி தாண்டிவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது. கடலில் கரைக்கலாம்.
"ப்ராடக்ட் டீடெயில்ஸ் இருக்கா?" எதையாவது விற்க முடியுமா பார்க்கலாம்.
"எல்லாமே சீஸ் மட்டும்தான்."
"சரியாப்போச்சு! ஒண்ணுமே பண்ண முடியாது! இன்ஷ்யூரன்ஸ்?"
"வழக்கம்போல அண்டர் வேல்யூதான். 20% கூட கிடைக்காது"
"பெண்டிங் ஆர்டர் எதாவது இருக்கா?"
"அங்கேதான் நான் சொன்ன குட் நியூஸ் வருது. வால்மார்ட்டிலே இருந்து மார்மலேடுக்கு ஒரு பெரிய ஆர்டர் இருக்கு. டெலிவரி இன்னும் ஒரு வாரம் கழிச்சு. ஒரு அவசர் பேக்கேஜிங் பண்ணி, மார்மலேடோட இந்த சீஸையும் இலவச இணைப்பா பண்ணிட்டா என்ன? FDA ரூல்ஸ்படி மெயின் ஐட்டத்துக்கு மட்டும்தான் எக்ஸ்பயரி பாப்பாங்க. இதைப் பிரமோஷனா ஆக்கிட்டோமுன்னா டேக்ஸ் ரிபேட்லே ஒரு 50%கிட்டே சால்வேஜ் பண்ணிடலாம் இல்லையா?"
"நாட் அ பேட் ஐடியா! பிகர்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் பண்ணிட்டயா?"
"இதோ இங்கே இருக்கு. ஆனா ஒரு சிக்கல்!"
"என்ன?"
"அக்கவுண்ட்ஸ்லே சொல்றாங்க, பெரியவர் அப்ரூவல் இல்லாம இதைச் செய்ய முடியாதாம். வேல்யூ 5M க்கு மேலே போகுதே."
"பெரியவர் எங்கே இருக்கார்? இப்பல்லாம் ஆபீஸுக்கு வர்றதே இல்லையே"
"அவர் பெண்ட் ஹவுஸிலேதான் இருப்பார். நீங்க நேரிலே போனா கன்வின்ஸ் பண்ணிடலாம்."
எனவே, நான் இங்கே இருக்கிறேன்.
ஸ்மித் வந்துகொண்டிருந்தார்.
"ஹாய் ப்ரேஸத்! ஹவ் டூ யூ டூ?" மரபை மீறாத பிரிட்டிஷ் வரவேற்பு.
"உங்களுடன் 20 வருடமாக இருக்கிறேன். என் பெயர் பிரஸாத் என்று உங்களால் இன்னும் சொல்ல முடியவில்லை" என்றேன் சிரித்துக்கொண்டே.
"உன் பெயரை உச்சரிக்கத் தெரிந்துவிட்டால் உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவேன்"
"உடம்பு எப்படி இருக்கிறது? என்ன ஆயிற்று?"
"என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. அம்மாவுக்குத் தான் ரொம்ப மோசமாகிவிட்டது. கடைசி நாட்கள் நெருங்கிவிட்டது. இப்போது கூட இருந்தால்தான் உண்டு."
"என்ன அம்மாவுக்கு?"
"வா, நீயே பாரேன்"
படுக்கையறை ஒரு ஆஸ்பத்திரியின் சுத்தத்தோடும் நாற்றத்தோடும் இருந்தது. மலர்க்கொத்துகள், ராஜாராணி படுக்கை, பளிச்சிடும் வெள்ளைச் சுவர்கள் - இந்த அலங்காரங்களுக்குச் சம்மந்தமில்லாமல் வீல்சேரில் குப்பைபோல அமர்ந்திருந்த ஸ்மித்தின் அம்மா.
"ஹலோ" என்றேன் தயக்கத்தோடு.
குரல் வந்த திசையை நோக்கி கண்கள் மட்டும் திரும்பின. ஸ்மித் சொன்னது சரிதான். உயிர் வெளியேறிவிட்ட வெளிறிய கண்கள். திரும்பியதோடு சரி. ஒரு புது ஜீவன் வந்திருப்பதை வேறெந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை.
"கேட்கிறதா?" ஸ்மித்தைப் பார்த்துக் கேட்டேன்.
"கேட்கிறது என்றுதான் டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால்தான் உன்னைத் தைரியமாக உள்ளே அழைத்துவந்தேன்."
குழப்பமாகப் பார்த்தேன்.
"இரண்டு வாரங்களுக்கு முன்புகூட உணர்வு இருந்தது. அப்போது நீ உள்ளே வந்திருந்தாயானால், கையில் கிடைப்பதை உன்மேல் தூக்கி வீசி எறிந்திருப்பாள். ரொம்ப வயலெண்டாக நடந்துகொண்டிருப்பாள். காயங்களுடன் தான் நீ திரும்பியிருப்பாய்"
"ஏன்? ...." கேள்வியை வடிவமைக்க முடியாமல் திணறினேன்.
"ஆம். அவளுக்கு ஷிசோப்ரினியா... என்னுடைய காயங்களுக்கு இப்போது அர்த்தம் புரிந்ததா?"
அலுவலகத்தில் ஸ்மித்தின் காயங்கள் ஒரு தொடர் வதந்தி. குடித்துவிட்டு ரோடில் கவிழ்ந்திருப்பார், எந்தப் பெண்ணையாவது வம்பிழுத்திருப்பார் எனப் பல ஹேஷ்யங்கள் உலாவின.
"எவ்வளவு நாளாக இப்படி?"
"1960இலிருந்து"
"அப்படியென்றால்!"
"எனக்கு ஐந்து வயதிலிருந்து. இவளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் நான் பேச்சிலராகவே தொடர்கிறேன்." தொண்டை கரகரக்கிறது. மனிதர் உள்ளே உடைந்து போயிருக்கிறார். துக்கத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாள் ரகசியங்கள் வெளியேறுவதைப்பற்றிய கவலைகளைத் துரத்தி விட்டிருக்கிறது.
"எப்படி ஆயிற்று?"
"என் தந்தை! காதல் மனைவி மார்னிங் சிக்னஸில் தவிப்பதைப் பொறுக்க முடியாத தந்தை!" வார்த்தைகள் உடைந்து உடைந்துதான் வெளியேறுகிறது.
"அவர் ஒரு மெடிகல் சேல்ஸ்மேன். புது மருந்துக்குக் கிடைத்த இலவச சாம்பிள்களை மனைவி மீதே பிரயோகித்தார். "முழுக்கப் பரிசோதனை செய்யப்பட்டது" என்ற கம்பெனியின் வார்த்தைகளை நம்பினார்."
"அம்மாவுக்கு பெண் குழந்தை ஆசை. பிறந்தது! ஒரு வெஜிடபிளாக."
"தாலிடோமைட்?*"
"ஆம்! அம்மா அப்பாவை மன்னிக்கவேயில்லை. அந்தக் குழந்தையையும் காப்பாற்றப் போராடினாள். ஒரு வருடம் உயிரோடு .. வெறும் உயிரோடு மட்டும் இருந்து இறந்தாள் என் தங்கை. அப்பா தற்கொலை செய்து கொண்டார். அம்மா இப்படி ஆகிவிட்டாள்" இப்போது குரலில் அழுகை தெளிவாகவே தெரிந்தது.
டாக்டர் உள்ளே நுழைவதைக் கவனித்தவுடன் சுதாரித்துக் கொண்டார்.
குறிப்பறிந்து "நான் வரவேற்பரையில் இருக்கிறேன்" என்றேன்.
ஐந்து நிமிடங்களில் டாக்டரும் அவரும் ஒன்றாக வெளியே வந்தபோது இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.
"ப்ரேஸத்.. நீ வந்த விஷயம் என்ன?"
"அது வந்து... நம்முடைய சீஸ் கன்ஸைன்மெண்ட் ஒன்று போர்ட்டிலிருந்து கிளியர் ஆகவில்லை. ஸ்ட்ரைக்கில் மாட்டிக்கொண்டுவிட்டது. எக்ஸ்பயரி டேட் தாண்டிவிடும்போல் தோன்றுகிறது."
"என்ன செய்வதாக உத்தேசம்?"
ஒரு முடிவுக்கு வந்தேன். தொடர்ந்தேன்.
"அண்டர் வேல்யூக்குதான் இன்ஷ்யூர் பண்ணியிருக்கோம். அதனால, நஷ்டத்தை ஏற்க வேண்டியதுதான்"
_______________________
குறிப்பு * :மசக்கைத் தொல்லை (Morning Sickness) ஐ குறைக்க என்று விளம்பரப்படுத்தப்பட்ட Thalidomide 1950 - 60 களில் ஏராளமான அமெரிக்கப்பெண்களால் உபயோகப்படுத்தப்பட்ட மருந்து.
FDA - (Foods & Drugs Agency) வாலும் மருந்துக்கம்பெனியாலும் முழுமையாகச் சோதிக்கப்படாமலேயே அறிமுகமான இம்மருந்து கொடிய பல பக்கவிளைவுகளை - குறிப்பாக கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுத்தி மருந்து வரலாற்றில் ஒரு கரும்பக்கமாகவே விளங்குகிறது.
கருச்சிதைவு, உணர்வற்ற குழந்தைகள், இந்தக்கதையில் வருவது போல் பைத்தியம் பிடித்த தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் என ஒரு கோரத்தாண்டவம் ஆடிய மருந்து இது. கர்ப்பிணிப்பெண்களுக்கு எந்த மருந்துமே தரக்கூடாது என்ற கொள்கைக்கும் சில டாக்டர்கள் வந்ததற்கான காரணம் இது.