Sep 30, 2007

திரைப்படங்கள் விமர்சனம், சிவாஜி உள்பட!

நிறைய சினிமா பாத்தாச்சு, நம்ம கருத்தை தமிழ்கூறும் நல்லுலகம் ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இந்த நேரத்திலே, லேட்டா வந்து, அதிலும் லேட்டஸ்டா (Superlativeக்கெல்லாம் ஒரு பெருமை!) ஒவ்வொரு படமா விமர்சனம் எழுதினா பினாத்தல் சினிமா மாதம் கொண்டாட வேண்டி வரும் என்பதால, எல்லாப்படத்தையும் ஒரே பதிவுல போட்டு கும்மிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
 
முதல்ல நல்ல படங்கள் - பார்த்தே ஆகணும்னு நான் பரிந்துரைக்கும் படங்கள்.
 
இந்த கேட்டகிரியில நான் பாத்த படங்கள் ரெண்டு.
 
1. ஹோட்டல் ருவாண்டா: ருவாண்டா நாட்டில் இனக்கலவரம் நடக்கும் நேரத்தில் ஹோட்டல் மேனேஜராக இருக்கும் ஹீரோ, சாதாரணமான ஆள். பெரிய இடங்களோடு பரிச்சயம் இருப்பதால் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருப்பதால், தன் குடும்பத்தை (மட்டும்) பாதுகாத்துக்கொள்ள திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர். ஆனால் இனக்கலவரங்களைத் தனி ஆள் முன்கூட்டி யூகிக்க முடியுமா என்ன? அதுவும் பல நாடுகள் சம்மந்தப்பட்ட விஷயம் வேறு.. விதி திடுதிப்பென ஹோட்டலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவரைப் பொறுப்பாக்கி விடுகிறது.. தன் சுயநலம் தாண்டியும் சிந்திக்க வேண்டிய சூழலில் இயல்பாகத் தள்ளப்பட்டு ஹீரோவாகிறார்.
 
இரண்டு வரியில் கதை சொன்னால் இந்தப்படத்தைப் பற்றியெல்லாம் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. படத்தைப் பாருங்கள், அனுபவியுங்கள்.
 
பார்த்தே ஆகவேண்டிய படம்!
 
2. சென்னை 600028 - டென்னிஸ் பந்து கிரிக்கெட், ஆடும் இளைஞர்கள், ஒரு டோர்னமெண்ட் கனவு, அணிமாற்றங்கள், காதல்கள், தோல்விகள், துரோகங்கள் - எல்லாவற்றையும் ஒரு புத்தம்புது பார்மட்டில், இளமைத் துள்ளலோடு, அங்கங்கே எள்ளலோடும் எடுக்கப்பட்ட டைம்பாஸ்!
 
கிண்டல் சுலபமாக வருகிறது இந்த இயக்குநருக்கு.. காபி ஷாப் மேனேஜரை செண்டியாகப் பேசி கண்கலங்கவைக்கும் காட்சியில் பின்னணி இசையாக லாலலா! அவ்வப்போது வரும் என்ன கொடுமை சார்!  மார்வாடி வீட்டு விசேஷத்தில் இந்திப்பாட்டுப்பாடி கொடுமைப்படுத்தும் நேரத்தில் "ஏழுமலை" சொன்ன சரோஜா சாமான் நிக்காலோ"!  சின்னப்பசங்களோடு மேட்சில் தோற்று பேட்டுக்குப் பிரியாவிடை கொடுக்கையில் அபூர்வ சகோதரர்கள் தீம் ம்யூஸிக்! ஹீரோ எண்ட்ரியில் "வாராண்டா" என பஞ்ச் பாடல் (யுவன் இந்தப்பாட்டை வேறு படத்துக்காக சேமித்து வைத்திருக்கலாம் :-)) மண்வாசனை பாண்டியனை செமையாக நக்கலடிக்கும் கெட்டப்பில் பொத்திவச்ச மல்லிகை மொட்டு ரீமிக்ஸ்!!
 
நல்ல கலகலப்பான ரெண்டு மணிநேரம் உத்தரவாதம்.
 
அடுத்து நாம பாக்கப்போறது, சராசரிப்படங்கள். ஒரு முறை பாத்தா ஒண்ணும் பெரிய தப்பில்லை!
 
1. பள்ளிக்கூடம் - படித்த பள்ளிக்கூடத்தை புனர்நிர்மாணிக்க உதவும் பழைய மாணவர்கள் என்ற கான்சப்ட் நன்றாகவே இருந்தாலும் எக்ஸிக்யூஷனில் தோற்றுவிட்டது. அழகியை ஞாபகப்படுத்தும் நரேன் சினேகா காதல், ஏன்தான் டென்ஷனாகிறாரோ என்று தெரியாமல் எல்லா நேரமும் கோபமாகவே இருக்கும் (அதிலும் நடிக்கத்தெரியாத )ஹீரோ , நாணமோ பாடலை தேவையில்லாமல் முழுநீளம் ரீமிக்ஸ் செய்து வெறுப்பேற்றும் கானா உலகநாதன் (இது பல பாடல்களின் Medley ஆக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்), பள்ளிப்பருவத்தில் சைட்டடிக்க அலைந்த ஷ்ரேயா ரெட்டியை வயசானதும் தாய் மாதிரிப் பார்க்கும் ஓவர் செண்டி..சொதப்பல்கள் ஆயிரம்.
 
படத்தின் ஒரு உருப்படியான சீன் படம் முடிகையில் ஒழுங்காகப் படிக்காததை நினைத்து தங்கர் பச்சான் வருத்தப்படும் காட்சி. ஆனால் அதுவரை பார்க்க பொறுமை வேண்டுமே!
 
2. கிரீடம் - மலையாளத்தில் சூப்பர்ஹிட்டாம். மலையாளப்படங்களின் மசாலா விகிதம் சற்று மாறுபட்டதுதானே ஒழிய மசாலாவே இல்லாமல் இல்லை என்ற என் செல்லச் சித்தாந்தம் மீண்டும் உறுதிபெற்றது. போலீசில் சேரவிரும்பும் இளைஞனுக்குத்தான் எத்தனை தடைகளை உருவாகிவைத்திருக்கிரது இந்தச் சமுதாயம் (திரையுலகம் எனப்படிக்கவும்). நான் பார்த்த ஊரில் க்ளைமாக்ஸை மாற்றிவிட்டார்கள். (முன்னால் ஹிட், க்ளைமாக்ஸ் மாற்றிய பிறகு சூப்பர்ஹிட் என்று எகத்தாளமாக போஸ்டர் வேறு!).. இந்தக்கதையின் ப்ரொக்ரஷனுக்கு லாஜிக்கலாக ஒத்துவரக்கூடிய ஒரே முடிவு நாயகன் போலீஸ் ஆக முடியாமல் போவதுதான். அதையும் ரசிகர்களின் கூச்சலுக்கிணங்க மாற்றிவிட்டார்களாம்.. அடப்போங்கடா! கடைசிச் சண்டையில் வில்லனைக் கொன்றபிறகு அஜீத் காட்டும் முகபாவங்களையும் நடிக்கச்செய்யும் முயற்சிகளுக்கும் பிறகு எப்படியும் தியேட்டரில் யாரும் இருக்கப்போவதில்லை, க்ளைமாக்ஸ் எப்படி இருந்தால்தான் என்ன?
 
அடுத்து வரப்போற படங்கள், மோசம்! இந்தப்படங்கள் ஓடும் இடத்துக்குப் பக்கத்தில் வீடு இருந்தால், வீட்டை மாற்றவும்!
 
1. ஆர்யா - எத்தனையோ படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப்படத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று இன்னும் என்னை நொந்துகொண்டிருக்கிறேன். அகலத்தில் பெரிய நடிகராகிக்கொண்டிருக்கும் மாதவன், ப்ரின்ஸிபால் வேடத்துக்குத்தான் ஒத்துவருவார் - இதில் மாணவனாக! பால்மணம் மாறாத பாவனாவுக்கு வில்லத்தனமான வேடம், சொதப்பல் திரைக்கதையில் வாங்கிய காசுக்கு வேண்டா வெறுப்பாக பிரகாஷ்ராஜ், காலி பெருங்காய டப்பாவாக வடிவேலு - சொல்ல ஒன்றுமே இல்லாத மூன்று மணிநேர சொதப்பல்!
 
2. மாயக்குகையில் மந்திரமோகினி - ஏக்கத்தில் அவள் (படம் பேரு சத்தியமா இதாங்க) - காந்தி-மை பாதர், சக்தே இந்தியா என்ற படங்களுக்குப்போக முயற்சித்து எதற்கும் டிக்கட் கிடைக்காமல், அண்ணன் ஜாக்கிசானின் ரஷ் ஹவர்3 ஓடுகிறது என்று விளம்பரித்திருந்த கேகேநகர் விஜயாவில் டிக்கட் வாங்கி உள்ளே அமர்ந்தபிறகுதான் தெரிந்தது, இரவுக்காட்சிக்கு மட்டும் இந்தப்படம் என்று! (மீண்டும் படம் பேர் டைப்படிக்க முடியாது). 80களின் ஆரம்பத்தில் வந்த ஹிந்தி லோ பட்ஜட் திகில் படத்தின் மோசமான தமிழாக்கம். (வெளியே வந்து படம் பெயர் பார்த்து மனப்பாடம் செய்துகொண்டேன்) பிட்டு போடக்கூடிய படம் என்ற ஒரு ஆவலோடே பார்த்தாலும், தியேட்டருக்கு அழையா விருந்தாளிகளாக உள்ளே வந்துவிட்ட இரு காக்கிச்சட்டைகள் அந்த ஆவலிலும் மண்ணைப்போட்டன! பயங்கர திகில் - சட்டைக்குள் ஏறிவிட்ட மூட்டைப்பூச்சி என்ன செய்யுமோ என!
 
சிவாஜி விமர்சனமும் சேர்த்து எனச் சொல்லியிருந்தேன் இல்லையா? மாயக்குகையில் மந்திர மோகினி படம், சிவாஜியை விடத் தேவலாம்!

Sep 25, 2007

20-20 நுணுக்கமான கிரிக்கெட்டுக்கு சாவுமணியா?

ஆமாம்! சந்தேகமேயில்லை.
 
பேட்ஸ்மேனின் குறைகளை சில ஓவர்களில் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பீல்ட் செட் செய்து, உடலைவிட மூளையால் ஆடும் பவுலர்கள் இனி வர வாய்ப்பில்லை. 4 ஓவரில் என்னத்தை பேட்ஸ்மேனைக் கணிப்பது? பீல்ட் செட் செய்ய ஆயிரம் விதிகள், பவுன்ஸரும் பீமரும் கொலைக்குற்றங்கள், லெக் சைடில் அரை இஞ்ச் போனாலே வைட்,  பவுலர் வாழ்க்கை சிரமம்தான்.
 
பேட்ஸ்மேனுக்கு மட்டும்? ஒரு பந்தை லீவ் அலோன் செய்தால் அடுத்த ஆட்டத்துக்கு தன்னையே லீவ் அலோன் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் எந்த லைன் லெங்த்தில் பால் வந்தாலும் ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்புவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, கவர் ட்ரைவ், லேட் கட் போன்ற சாஸ்திரோக்தமான ஷாட்களைக் கைவிட்டு, ரிவர்ஸ் ஸ்வீப்பிலும் ஹூக் புல்லிலுமே  திருப்தியடைய வேண்டும்! தடுத்தாடி, பவுலருடன் மூளைப்போரில் ஈடுபடுதல் எல்லாம் பழங்காலம்!
 
ஐந்து நாள் போட்டிகளின் நுணுக்கமான ஆட்டத்துக்கு ஒரு சாவுமணி அடித்தது ஒருநாள் போட்டிகள், ஒருநாள் போட்டிக்கே ஆப்பு வைக்கின்றன இந்த 20-20.
 
இப்படியெல்லாம் அடுக்குவாங்க, டெஸ்ட் போட்டி பாத்து பழக்கப்பட்ட பெரிசுங்க!
 
அதையெல்லாம் கண்டுக்காதீங்க!
 
கையில காசு வாயில தோசை மாதிரி 20 ஓவர்லே முடிஞ்ச வரைக்கும் அடிச்சுக் கிழிச்சோமா, அடுத்த டீமை எடுக்கவிடாம தடுத்தோமா.. 3 மணிநேரத்தில கப்பை வாங்கிகிட்டு ஊருக்கு வந்தோமான்னு அவசர கதியிலேயே ஓடுது பாருங்க! அதான் டாப்!
 
5 நாள் கொடுத்துட்டோம்பா, 10 விக்கட்.. மகனே உன் சமத்துன்னு சொன்னா, விக்கட்டை போற்றிப் பாதுகாக்கத்தானே தோணும்! அதே 50 ஓவருக்குதான் உன் 10 விக்கட் செல்லும்னா, ஒருத்தன் 5 ஓவர் ஆடினாலே போதும்னு விக்கட் மேலே ஆசை குறையுது, அதுவும் இந்த 2020லே மவனே நீ கவாஸ்கரா இருக்கலாம் ( ரெக்கார்டு 174 பந்தில் 36 ரன்), ஆனா கமெண்டரி பாக்ஸுக்குதான் லாயக்கு. 2 ஓவர்தான் தரமுடியும்.. அதுக்குள்ளே சிக்ஸர் அடிப்பயா? அப்ப உள்ளே வா! 7 ஸ்லிப் வைச்சு பொதுக்கூட்டம் நடத்தற பாஸ்ட் பவுலரா இருக்கலாம்.. மிஸ் பண்ணா கில்லியை பேர்ப்பயா? அப்பதான் உள்ள வர முடியும்!
 
4 ஓவர்தான் போடறான் பவுலர், மிஞ்சிப்போனா 20 ஓவர்தான் ஆடறான் பேட்ஸ்மேன்.. ஸ்டாமினா போயிடுச்சி, ஜல்ப் பிடிச்சுகிச்சு, சுண்டுவிரல் சுளுக்கிகிச்சுன்னு எந்தத் தொந்தரவும் இல்லை! புல் பவர்லே பவுலிங், புல் பவர்லே பேட்டிங்! மிட் ஆனுக்கு போனாலும் ரன்னு, காட்சு விட்டா ரெண்டு ரன்னு.. மாட்டிச்சுன்னா ஆறு சிக்ஸர், மாட்டலைன்னா மிடில் ஸ்டம்ப்பு.. போனால் போகட்டும் போடான்னு எல்லாருமே ஆடறாங்க பாருங்க! இப்பதான் கிரிக்கெட்காரங்க பாக்கறவங்க டைமையும் மதிக்க ஆரம்பிச்சுருக்காங்க!
 
இந்த டோர்னமெண்டுலே இந்தியா ஆடி, ஜெயிச்ச அத்தனை மேட்சையும், வேலைக்குத் தொந்தரவில்லாம எல்லா பாலையும் பாக்க முடிஞ்சது.
 
இந்த மாதிரி ஒரு போட்டியிலே, சாத்தியமே இல்லாத மெய்டன் விக்கட் எடுத்த பத்தான் பவுலிங் என்ன! அப்பாலே டை ஆகி, பெனால்டி மாதிரி பவுல் அவுட்டுன்னு ஒரு முடிவு கொடுத்த பார்மட்தான் என்ன!
 
 
பிட்ச் பழைய ஞாபகத்துல கொஞ்சம் பவுலிங்குக்கு உதவி செஞ்சாலும் கவலைப்படாம 50 அடிச்ச புதுப்பையன் ரோஹித் ஷர்மாவோட பொறுமை என்ன? நீ அடிச்சா நான் காலி, நான் அடிச்சா நீ காலின்னு இருந்தாலும் ஒழுங்கா பவுலிங் போட்ட ஆர் பி சிங்கோட லைன் லெங்த் என்ன!
 
ஆஸ்திரேலியா சேம்பியனா? அது போன மாசம்.. வாங்கடா இந்த மாசத்துக்குன்னு மறுபடி ஒரு காட்டு காட்டிய யுவ்ராஜ், ஆடாத மாதிரியே இருந்தாலும் 200 ஸ்ட்ரைக் ரேட் வச்ச தலை தோனிதான் என்ன? கில்லிக்கு கில்லி எகிறவச்ச கோபக்கார மச்சான் ஸ்ரீசாந்த்தான் என்ன? (பாவம், ஒவ்வொரு மேட்சிலேயும் யாரையாவது முறைச்சுகிட்டு மேட்ச் பீஸை அபராதமாக்கட்டி தர்மத்துக்கே ஆடிட்டுப்போவுது இந்தப்புள்ள.. கோபத்தைக் குறைப்பா!)
 
நானும் சூப்பர்8 வரலே, நீயும் வரலே.. அதனாலே என்ன, இப்ப வரயா ஒண்டிக்கு ஒண்டின்னு போட்டாங்க பாருங்க ஒரு பைனல்!
 
ப்ளோ ஹாட் ப்ளோ கோல்டுன்ற மாதிரி, 40 ஓவரிலும் ஒரு ஓவர் பாகிஸ்தான் கையும், ஒரு ஓவர் இந்தியா கையும் மாறி மாறி ஓங்கி (உதாரணம் - முதல் ஓவர் 4-1. ரெண்டாவது ஓவர் 21 ரன்!, 18ஆவது ஓவர் 15 ரன், 19ஆவது ஓவர் 7-1) நாடி நரம்பையெல்லாம் முறுக்கி தளர்த்தி.. எப்பா! இப்பக்கூட படபடக்குது.. மிஸ்பாவோட  டைமிங் அந்த பாலுக்கு ஒத்து வந்திருந்தாலோ, ஸ்ரீசாந்த் கேட்சை விட்டிருந்தாலோ, ஏன், இன்னும் ஒரு விக்கட் கையிலே இருந்திருந்தாலோ குதிச்சிருக்கப்போறது பாகிஸ்தான் ரசிகர்கள்!
 
ஆனா, தோனி சொன்னா மாதிரி, அந்தக்கடைசி ஓவர்லே தோத்திருந்தாலும், நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆட்டம்னா இதான்யா ஆட்டம்!
 
சந்தேகமே இல்லை - இதான் கிரிக்கெட்டோட ப்யூச்சர்! 3 மணிநேரம்னாலும் நெறைய ஸ்பான்ஸர் கிடைப்பாங்க, குறைந்தபட்சம் 100 அட்வர்டைஸ்மெண்ட் ஸ்லாட் இருக்கும். பாக்கறவங்க அதிகமா ஆவாங்க..
 
வாழ்க 20-20, வளர்க 20-20 என்று கூறி, என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.
 
பி கு: ஷோயப் மாலிக் சொன்ன வார்த்தைகள் " First of all I want to say something over here. I want to thank you back home Pakistan and where the Muslim lives all over the world. " எனக்கும் pinching ஆகத்தான் இருந்தது. கொத்ஸ் என் கருத்தோட ஒத்துப்போயி பதிவாவே போட்டதால, இங்க அதைப்பத்தி பேசலே!
 
 
 
 

Sep 23, 2007

எல்லாப்பக்கமும் நாறும் ராமர் பாலம்!

இயற்கையான மணல்திட்டுக்களோ, இறைவன் உருவாக்கிய பாலமோ.. இன்று எல்லாப்பக்கமும் நாறத்தான் செய்கிறது.
 
சேது சமுத்திரத்திட்டம், எல்லா அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கு இணையாகவே கொள்கைகளும் கொள்கை மாற்றங்களும் கொண்ட வலைப்பதிவாளர்களுக்கும் பத்துநாளுக்கு மட்டும் சாஸ்வதம் கொண்ட நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.
 
ராமர் இருந்தாரா, பாலம் கட்டினாரா, பொறியியல் படித்தாரா, பொறியல் தின்றாரா எனக் கேள்வி கேட்க, திமுக தலைவருக்குத் தகுதி இல்லைதான். டாவின்ஸி கோட் என்ற உப்புப் பெறாத திரைப்படத்தை "மத நம்பிக்கைகள் புண்படக்கூடாது" என்பதற்காகத் தடை செய்த கட்சித் தலைமை, வெளிப்படையாக, தன்னிச்சையாக மத நம்பிக்கைகள் புண்படுமாறு பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
 
ஆனால், அதே நேரத்தில், புழங்குவதில்லை, தொழுகை நடைபெறுவதில்லை, பல நூற்றாண்டுக்கு முன் கோயிலாக இருந்தது என்று காரணம் காட்டி பாபர் மசூதியை இடித்த மதவாதிகளுக்கும், இப்போது யாரும் புழங்காத, பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படும். எந்த பூஜையும் நடைபெறாத ராமர் பாலத்தைக் காக்கும் ஆர்வம் திடீரென வருவதென்ன நியாயம்?
 
ஒரு ப்ளான்கூட போடப்படாமலா வரைவுத்திட்டம் வாஜ்பாய் அரசால் முன்மொழியப்பட்டது? அப்போது தெரியாதா இது ராமர் பாலம் என்று?
 
காங்கிரஸுக்கோ புலிவால் பிடிக்க பயம். திமுக போன்ற தைரியம் அதற்கு இல்லை. எதை எதையோ சொல்லி, பிரச்சனை தங்கள் தலைமேல் விழாமல், ராமர்பாலம் இடித்த தோஷம் தங்கள் மேல் வராமல் இருந்தாலே போதும் என்று அம்பிகா சோனியை காவுகொடுக்கவும் தயாராகிவிட்டது. சும்மாவா? திமுக போல இந்துத்துவ எதிர்ப்பால் பாதிப்பு வராது என்ற நிலைமையா இருக்கிறது? கொஞ்சம் கேப் விட்டால் பாஜக புகுந்து புறப்பட்டு விடுமே..
 
நம் லோக்கல் அரசியல்வாதிகள் நிலைமை தமாஷாக இருக்கிறது.
 
சேது சமுத்திரத்திட்டத்தால் வோட்டு வரும்போல இருக்கிறதே.. ஆதரிப்போம்..
அட.. அது திமுகவுக்கு சாதகமாக ஆகும் போலிருக்கிறதே.. மீனவர்கள் நலம் நாசம் என கொடி பிடிப்போம்..
நாசா படம் வெளியிட்டிருக்கிறதே.. ஆமாம் ராமர்தான் கட்டினார் அதை.. மத உணர்ச்சிக்குத் தூபம் போடுவோம்..
 
இதுதான் அதிமுக நிலைமை! நேரில் மடக்கி.. இப்ப என்னதாங்க சொல்றீங்க, "சேது சமுத்திரம் வேணுமா வேணாமா" என்று கேட்டால் பதில் வராது!
 
ஆதரவு எதிர்ப்பு இரண்டும் இல்லாமல் ஒரு வழவழா கொழகொழா நிலையும் இருக்கிறது, அது புதுக்கட்சிக்காரர்களுக்கு.
 
மாற்றுப்பாதையில் ராமர்பாலத்தை இடிக்காமல் போடட்டுமே! அடப்பாவிகளா.. மாற்றுப்பாதை சுற்றுவழியாக இருக்கிறது என்பதால்தானே இந்த வழியே போடுகிறார்கள்!
 
ராமர் பாலத்தை மறுக்கும், அதே நேரத்தில் சேது சமுத்திரத்தையும் எதிர்க்கும் ஒரு கோஷ்டியும் நடுவில் உலாவுகிரது. இந்தக் குழு பரவாயில்லை, அடிக்கடி கொள்கையை மாற்றிக்கொள்வதில்லை, கொஞ்சம் நம்பலாம். சுற்றுச்சூழல், கனிமவளம் போன்ற காரணங்களால் எதிர்க்கிறது.
 
திமுக இப்போது தனித்துவிடப் பட்டிருக்கிறது. டெல்லி காங்கிரஸ் கைகழுவிவிட்டது.
 
ஆனால், இந்த அரசியல் நிலைப்பாடுகள் எல்லா விஷயத்துக்கும் பொது, எதுவும் புதிதில்லை, இந்த நாற்றம் மூக்குக்குப் பழகிவிட்டது!
 
பெரும் நாற்றம் அறிக்கைப்போரினால்!
 
வெளிப்படையாக ஒரு மத நம்பிக்கையைக் குறைபேசும் முதல்வர் பிரச்சனையை ஆரம்பித்துவைக்க,
 
அவர் தலைக்கு ஒரு விலை வைக்கும் மதவாதம்! எவ்வளவு கேவலம்! உங்கள் வீடியோவைப்பார்த்து எத்தனையோ பேர் உங்கள் தலைக்கு விலை வைக்கலாமே! நீங்கள் இடிக்காத மதநம்பிக்கைகளா?
 
ராமரின் சர்ட்டிபிகேட் கேட்கும் திமுக, திருவள்ளுவரின் சர்ட்டிபிகேட்டை பார்த்திருக்கிறார்களா என்று நியாயமான கேள்வி கேட்ட விஜயகாந்தின் பூர்வீகம் அவசர அவசரமாக ஆராயப்படுகிறது! அவர் தலைக்கு விலைவைக்கும் ஆவல் தெரிகிறது!
 
மொத்தத்தில், ஒரு சாதாரண பொருளாதார முன்னேற்ற திட்டம், படிப்படியாக உணர்ச்சிகளின் கூடாரமாக்கப்படுகிறது! இதற்குள் இதற்கு 300 கோடி ரூபாய் செலவும் ஆகிவிட்டிருக்கிறதாம். (ஜூவி செய்தி)!
 
என் கருத்தா? சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!
 
பெரிய ஆசைகள் -- இன்றைய நாற்றமெடுத்த சூழலில்! 

Sep 19, 2007

கலைஞர் டிவி-பொன்னியின் செல்வன் - EXCLUSIVE PREVIEW - இயக்குநர் பேட்டி

இயக்குநர் நாகாவுடன் சில சந்தர்ப்பங்களில் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருந்திருக்கிறேன், சிதம்பர ரகசியத்துக்கு எழுதிய விமர்சனத்தைத் தொடர்ந்து. கலைஞர் தொ.காவிற்காக பொன்னியின் செல்வன் படமாக்கப்படுகிறது என்று வந்த செய்தியைக்கண்டதும் மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டேன், உண்மையா எனக்கேட்டு. அவர் ஒப்புக்கொண்டதும், படப்பிடிப்பைக்காண வரலாமா எனக்கேட்டிருந்தேன்.

காரைக்குடியை அடுத்துள்ள பள்ளத்தூரில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்ற தகவலுடன் அவர் வரவேற்றார். இரவு எட்டு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருக்க ஏழு மணிக்கு தம்பதி சமேதராக படப்பிடிப்பு நடைபெறும் வீட்டிற்கு சென்று காத்திருந்தோம்.

எப்படி, எப்போது வந்தார் என்று தெரியாமல், "பினாத்தல் சுரேஷ்?" என்று கேட்டுக்கொண்டு நீட்டிய கைகளோடு அறிமுகமானார் இயக்குநர் நாகா. விமர்சனங்களை வெளிப்படையாக வரவேற்று, திட்டங்களைப் பகிர்ந்துகொண்டு, டென்ஷன் என்பதே தெரியாமல் மிக இயல்பாகப் பலகால நண்பர்கள் போல பழகினார். அவருடன் பேட்டி வடிவில் பேசவில்லை எனினும், கேட்ட கேள்விகளையும் பதில்களையும் பேட்டி போலத் தொகுத்திருக்கிறேன்.

கே: தமிழ் நாவல்களில் Magnum Opus பொன்னியின் செல்வன். இதைத் தொடராக ஆக்குவதின் சிரமங்கள் என்ன?

ப: ஒன்றல்ல, நூற்றுக்கு மேல். முதலில், மிகவும் பெரிய அளவில் படிக்கப்பட்ட, படிக்கப்பட்டுவரும் நாவல் பொ செ. படிக்கும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வந்தியத்தேவன் இருக்கிறான், குந்தவை நந்தினி என்ற கற்பனைகள் இருக்கின்றன. அந்தக் கற்பனைகளுக்கு ஈடு செய்ய முடியாவிடில் அவனைத் தொடரைப் பார்க்கவைப்பது சிரமம்.

கே: அப்படிப்பார்த்தால் நூற்றுக்கணக்கான வந்தியத்தேவன்களை உலவவிடவேண்டுமே?

ப: அதனால்தான் அந்த முயற்சியைச் செய்யவில்லை. என் மனதுக்குள் இருந்த பாத்திரங்களையும் ஒதுக்கிவிட்டு, தொடர்கதையாக வந்தபோது மணியம் வரைந்த ஓவியங்களை மட்டுமே மையமாக வைத்து பாத்திரத் தேர்வில் ஈடுபட்டேன். அந்த ஓவியங்கள் போல ஒப்பனை செய்யப்பட்டபின், ஒத்துப்போன நடிகர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய மடிக்கணினியில் தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்களையும், மணியம்மின் ஓவியங்களையும் ஒப்பிட்டுக் காட்டினார். எனக்கு தேர்வு சரியானதாகவே பட்டது.

கே: படமும் பாத்திரத் தேர்வும் பெருமளவில் ஒத்துப்போகின்றன. இவற்றை விளம்பரத்தின் போது மார்பிங் செய்து போடலாமே..

ப: அப்படித்தான் திட்டம். மணியம்மின் படங்களை வண்ணத்தில் மணியம் செல்வன் மெருகேற்றித் தரப்போகிறார். (இப்போது அவர் பார்த்த பார்வையில்.. உனக்கே இது தோணுதே, எனக்குத் தோணாமலா போகும்:-))

கே: இருபரிமாணப்படங்களில் அவர்களின் நிறம், குணாதிசயங்கள் வெளிப்படாதே?

ப: கதையை முழுக்க உள்வாங்கி நிறத்தை முடிவு செய்திருக்கிறோம். சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அடர்ந்த நிறத்தோடும் (Dark Complexion) பாண்டிய சேர நாட்டைச் சேர்ந்தவர்களை வெளிர் நிறத்தோடும் தேர்வு செய்திருக்கிறோம். குணாதிசயங்கள் அவரவர் பாத்திரப்படைப்பிலேயே வந்துவிடும் அல்லவா?

கே: என்ன தமிழ் பேசுவார்கள் பொ செ வின் பாத்திரங்கள் - நாக்குடைக்கும் செந்தமிழா அல்லது மணிப்பிரவாளமா?

ப: கதையில் வரும் வசனங்கள் அனைத்தும் கல்கி எழுதிய அதே வசனங்கள்தான். அவற்றை செயற்கை கலக்காமல் இயல்பாகப் பேசவிட்டிருக்கிறோம். அவர் தமிழ் நாக்குடைக்கும் தமிழ் அல்ல, இயல்புக்கு பங்கம் வராது..

கே: ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் வசனம் இல்லையே..

ப: ஆம். வர்ணனையாகச் சொல்லப்படும் காட்சிகள், பாத்திரங்கள் தங்களுக்குள்ளே எண்ணும் எண்ணங்கள் ஆகியவற்றை அதே கல்கியின் நடையோடு சொல்லவைக்கப்போகிறோம்.

கே: நிறைய க்ராபிக் செய்ய்வேண்டியிருக்குமே..

ப: ஆமாம். இந்த செட்டிலேயே பார்த்தீர்கள் என்றால், ஒரு பக்கம் முழுக்க நீலப்படுதாவைத் தொங்க விட்டிருக்கிறோம். ப்ளூ மேட்டில் அந்த நீல நிறத்தை இயற்கைக் காட்சியாகவும் நந்தவனமாகவும் மாற்றிவிடுவோம்.

கே: பிற்பகுதியில் வர இருக்கும் கடல் காட்சிகள், சுனாமி?

ப: இரண்டொரு ஆண்டுகளுக்கு முன் அவற்றை நினைத்து பயந்துகொண்டுதான் இருந்தோம். பலர் இதே கதையை தொடராக்க நினைத்தும் தொடராமல் விட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் க்ராபிக் நுட்பங்களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அவற்றை சாத்தியமாக்கி இருக்கின்றன. குறிப்பாக, லார்ட் ஆப் த ரிங்ஸ் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு எதுவும் சாத்தியம் என்ற நிலை வந்திருக்கிறது. நன்றாகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கே: விமர்சனங்கள் மிக அதிகமாக வரக்கூடும் அல்லவா?

ப: மற்ற தொடர்களுக்கு இல்லாத பெரிய சவால் இத்தொடருக்கு உண்டு. மற்றவற்றில் தொடர் நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற கேள்விதான் எழும். இதிலோ கதையுடன் ஒப்பிட்டுப்பார்த்து சரியாக வந்திருக்கிறதா என ஒரு பார்வையாளர் வட்டமும் (கதை படித்தவர்கள்), சுவாரஸ்யமாக இருக்கிறதா இல்லையா என இன்னொரு வட்டமும் (தொடர் பார்வையாளர்கள்) கழுகுக்கண்ணோடு இருப்பார்கள் என்பது ஒரு மிகப்பெரிய சவால்.

மேலும், என் கதையாக இருந்தால் இருக்கக்கூடிய சுதந்திரமும் இதில் இல்லை. ஒரு ஷாட் கூட மாற்றி எடுக்க முடியாது.

கே: எப்போது வரப்போகிறது? தினத்தொடரா, வாரம் ஒருமுறையா?

ப: இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிச்சூழலில் தினங்கள் தங்கள் முகத்தை இழந்துவிட்டன. முன்பு புதன்கிழமை ருத்ரவீணை, வியாழன் உங்கள் சாய்ஸ் என்று நினைவு வைத்திருந்த ரசிகர்கள், இப்போது 7 மணி தொடர் இது, 8 மணித் தொடர் இது என்றே நினைவு வைத்துக்கொள்கிறார்கள். இச்சூழல் மாறலாம். ஆனால் இப்போது இதுதான் நிலை.

மேலும், 300க்கு மேல் பாகங்கள் இருப்பதால் தினத்தொடர்தான் ஒரே தீர்வு.

கே: அப்போது தினமும் ஒரு எபிசோட் தயாராக வேண்டும் அல்லவா?

ப: அதில்தான் பிரச்சினை இருக்கிறது. படப்பிடிப்பு ஒரு நாளில் ஒரு எபிசோட் எடுக்க முடிந்தாலும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் - எடிட்டிங், க்ராபிக், டப்பிங் - 3 முதல் 4 நாட்கள் எடுக்கின்றது. குழுக்களை அதிகப்படுத்தவேண்டும்.. 80 எபிசோட் தயாரானதும் தொடர் வரத் தொடங்கும்.


இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக, 21ஆம் நூற்றாண்டு காரைக்குடி வீடு, 10ஆம் நூற்றாண்டு கடம்பூர் சம்புவரையர் அரண்மனையாக உருவெடுக்கத் தொடங்கியது. மழவரையரும் இதர சிற்றரசர்களும் ஒப்பனை செய்துகொண்டிருக்க பெரிய பழுவேட்டரையருக்குக் கூந்தல் அலங்காரம் தொடங்கியது. விளக்குகள் பொருத்தப்பட்டு பல்லக்கு அலங்கரிக்கப்பட்டது. காமராவுக்கு ட்ராலி பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

இயக்குநரும் இந்த வேலைகளுக்குள் இழுக்கப்பட்டார்.

1 மணிநேர ஒப்பனைக்குப் பிறகு பெரிய பழுவேட்டரையர் வந்தார்.

கடம்பூர் சம்புவரையர் மாளிகை மந்திராலோசனை தொடங்கியது.

மழவரையர் "இந்த நிலை மிகவும் மோசமாக அல்லவா இருக்கிறது? மன்னரிடம் நீங்கள் கேட்டுப்பார்க்கலாமே" என்றார் பழுவேட்டரையரிடம்.

"கேட்காமல் என்ன? பலமுறை கேட்டாகிவிட்டது" என்று 2 பக்க வசனத்தை பழுவேட்டரையர் பேச..

"சரி சார், நாங்க கிளம்பறோம், மணி இரவு 12:30 ஆகிவிட்டது"

"நன்றி சுரேஷ். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. எம் ஜி ஆர் முதல் மணிரத்னம் வரை பல பேர் தொட்டுப் பார்த்த ப்ராஜக்ட்"

"எனக்குப் பார்த்த வரை நம்பிக்கை இருக்கு சார், ஆல் த பெஸ்ட்"

Sep 12, 2007

கலவர பூமியில் காத்து வாங்கின கதை!

ஊருக்குப் போனதும், எதாவது ஒரு மெகா ட்ரிப் அடிப்பது வழக்கமாகிவிட்டது. மெகா ட்ரிப் என்பது நாட்களின் கணக்கல்ல, ஆட்களின் கணக்கு. என் குடும்பம் கொஞ்சம் பெரிசு. 3 அக்காக்கள், 2 அண்ணன்களுடன் பிறந்த கடைக்குட்டி நான். அனைவரும் இந்திய ஜனத்தொகைக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து இருப்பதால் 20 - 25 டிக்கட் சேர்ந்துவிடும். எல்லாரும் சேர்ந்து செல்லத் தேர்வு செய்த இடம் குற்றாலம்.
 
செங்கல்பட்டிலிருந்து புகைவண்டி (தொடர்வண்டியோ?) தென்காசி வரை என்றும், அங்கே வேன் வைத்து லோக்கலாக எல்லா இடங்களுக்குச் செல்லவும் முடிவெடுத்து புக்கிங் எல்லாம் முடித்து, பயணத்துக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கும் வேளையில்தான் சன் நியூஸில் தென்காசியில் மதக்கலவரம், பற்றி எரிகிறது, தென் தமிழ்நாட்டில் பரபரப்பு என்றெல்லாம் செய்தி. சன் நியூஸின் பரபரப்பு தெரிந்த விஷயம்தான் என்றாலும், குஞ்சு குளுவான்களுடன் கலவர பூமிக்குச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு யாருக்கும் என் அளவுக்கு இல்லை. (அவர்கள் கலவரம் பார்த்ததில்லை) மைனாரிட்டி ஆட்சியில் கூட்டணி பேச்சு கேட்டு மூட்டையைக் கட்டியாகிவிட்டது.
 
தென்காசியில் ஓட்டலுக்குச் செல்லும்போது கொஞ்சம் பயம் எல்லாருக்குமே வந்தது. ஜனாதிபதி விஸிட் போல 10 அடிக்கு ஒரு போலீஸ், 30 அடிக்கு ஒரு ரையட் கண்ட்ரோல் வாகனம்.
 
பயப்பட்டது தேவையில்லை என சிறிது நேரத்திலேயே தெளிவாகிவிட்டது. நட்பாகிவிட்ட ஒரு போலீஸ்காரர் Matter-of-fact ஆகச் சொன்னார்.. "ரெண்டு பக்கமும் மூணு மூணுன்னு விழுந்ததிலே பேலன்ஸ் ஆயாச்சு. கொஞ்சம் கூடக்குறைச்சல் இருந்திருந்தா இன்னும் தொடர்ந்திருக்கும்! 40 பேரை அர்ரெஸ்ட் செஞ்சிருக்கோம்.. எல்லாம் 20-25 வயசுப் பையனுங்க! ஏன் தான் புத்தி இப்படிப் போவுதோ!"
 
டீக்கடை வாசலில் பிச்சை எடுக்கும் ஒரு ஊமை சொன்னார், "இங்கதான்.. இந்தச் சந்துலதான் வெட்டிப்போட்டானுங்க! எவ்ளோ ரத்தம்! ஒரு துளி ரத்தம் ஊற எவ்வளவு செலவாகுது!" ஊமை என்றுதானே சொன்னேன்? அவர் உடல்பாஷையிலும் ராகத்தோடும் சொன்னது இவ்வளவு தெளிவாகப்புரிந்தது!
 
கலவர பயத்தை மூட்டை கட்டிவிட்டு தென்காசியின் தென்றலை அனுபவிக்க ஆரம்பித்தோம். இந்தப்பயணத்தில் நான் தொட்ட, நீங்களும் நிச்சயம் தவறவிடக்கூடாத இடங்கள் என்று நான் பரிந்துரைக்கும் இடங்கள்:
 
1. தென்காசி விஸ்வநாதர் கோவில்: பிரம்மாண்டம். கோபுரத்திலிருந்து கோவிலுக்குள் செல்லும்போது காற்று திசைமாறுகிறது, கோவிலுக்குள் அழைக்கிறது என்று கோபுர அதிசயமாகச் சொல்கிறார்கள், எழுதிவைத்திருக்கிறார்கள். அதிசயமோ இல்லையோ அற்புதமான சுத்தமான காற்றும் சூழ்நிலையும் பக்தியைக் கூட்டிவிடுகிறது! அருமையான அனுபவம்.
 
2. புளியரை என்று ஒரு ஊர்.. தென்காசியிலிருந்து ஏறத்தாழ 20 கிலோமீட்டரில். தக்ஷிணாமூர்த்தி கோவில்தான் இந்த ஊருக்கு முகவரி கொடுக்கிறது என்றாலும், ஏரியும் இல்லாமல், நதியும் இல்லாமல்  ஒருபக்கம் படித்துறையும், மறுபக்கம் நதிநீர்வரத்தும், நடுவே தாமரை அல்லி, மொத்தத்தில் ஓட்டம் இல்லாத குளம். குளிக்க முடியாத நேரத்தில் இங்கே சென்றது மிகப்பெரிய வருத்தம். கோவில் ஒரு 50 அடிக்குன்று. இருபக்கமும் இயற்கையும் விவசாயமும் சேர்ந்து செய்திருக்கும் பச்சை மாயம்.. பார்த்தால்தான் தெரியும். அங்கேயே இருந்துவிடலாம் போல இருந்தாலும், மாலை மங்க குளிர் தொடங்க, மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டது அந்தப்பொழுதுக்கே ஒரு பேண்டஸித்தன்மையைக் கொடுத்தது!
 
3. பாபநாசம் அப்பர் டேம், பாணதீர்த்தம் - வேன் செல்ல முடியாது என்று சதி செய்து 3 கிலோமீட்டருக்கு மேல் நடக்கவிட்டார்கள்! வழிக்களைப்புக்கு நாகப்பழமும், சீவல்போல வெட்டப்பட்ட மாங்காய்த்துண்டுகளும்! முடிவில் தெரிவது ஒரு விஷுவல் ட்ரீட்!  நான்குபுறமும் மலையால் சூழப்பட்ட நீர்த்தேக்கம், கூட ஒரு அணை! அங்கிருந்து படகில் 5 கிமீ சென்று மேலே ஏறினால் வரவேற்கிறது பாணதீர்த்தம் அருவி.தமிழில் முதல் சிறுகதை எழுதிய வ வே சு அய்யர் இங்கே இருந்துதான் விழுந்து தற்கொலை செய்துகொண்டாராம் என்ற என் ட்ரிவியாவை விற்க ஆள் தேடினால் யாரும் இல்லை. 40 அடி உயரத்திலிருந்து கோபமாகக் கொட்டும் அருவியின் அடிவாங்க அத்தனை பேரும் ஓடிவிட்டார்கள்! யப்பா! என்ன அடி.. எனக்குத் தெரிந்த பிஸிக்ஸில் கணக்குப்போட்டுப் பார்த்தால் ஏறத்தாழ 50 கிமீ வேகத்தில் அரைகிறது தண்ணீர்.. ஆனால் வலிக்கவில்லையே.. சுகமாகத்தானே இருக்கிறது!
 
4. பாலருவி.. குஷியில் ஜோதிகா குளித்த இடம் என்று சொல்லித்தான் மார்க்கட்டிங் செய்கிறார்கள். பாடல் பெற்ற திருத்தலம் (மேகம் கருக்குது ஜகஜக்க ஜகுஜிக்) என்ற போதிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. இங்கு ஒரு 60 அடி உயரத்திலிருந்து ஆக்ரோஷமாக விழும் அருவி, ஒரு சிறு ஸ்விம்மிங் பூலையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அடிவாங்கிக் கஷ்டப்பட்டவர்கள் நீந்திக்கொண்டு இளைப்பாறலாம். சில்லென்ற நீரும், மூலிகை கலந்த காற்றும் நம்பமுடியாத பரவசம்!  தென்காசியிலிருந்து 40 கிமீ போகும் மலைப்பாதை பார்க்க ரம்யமாக இருக்கிறது, ஆனால் ஒழுங்காக எதையும் தெளிவாகப் பார்க்கவிடாமல் தூக்கித் தூக்கிப் போடும் ரோடு! ஏன் இவ்வளவு மோசமான ஒரு சாலையோ.. இத்தனைக்கும் இரு மானிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை!
 
இந்த லிஸ்ட்டில் குற்றாலத்து அருவிகளைச் சேர்க்கப்போவதில்லை. அருவிகளுக்கு ஒரு குறையும் இல்லை, தண்ணீரும் தாராளமாகவே இருந்தது. ஆனால் பிரச்சனை அதன் பிரபலம். நடிகர்களுக்கு மாலீஷ் போட்ட புகைப்படங்களைக் கடையில் வைத்து எண்ணெய் தேய்க்கும் வீரர்கள், ஊருக்கும் தெருவுக்கும் அருகாமையில் இருப்பதால் ஏறும் கூட்டம்.. இத்தனைக்கும் வார இறுதிகூட இல்லை. 200க்கு மேற்பட்டவர் குளித்தால்தான் ஒழுங்குசெய்வோம் என்று 199 பேர் இருக்கும் இடத்துக்கு நெருங்காத போலீஸார். வலிமையே வாழும் (குளிக்கும்) என எண்ணெயை குளித்து வெளியே வருபவன் மேல் தேய்த்தவண்ணம் செல்லும் மக்கள்..உள்ளே சென்றால் வெளியே வரக்கூடாது என்ற திண்ணிய எண்ணம் கொண்டு, எண்ணிய முடிபவர்கள்.. உள்ளே நுழைந்தவுடன் எப்போது வெளியேறப்போகிறோம் என்ற ஆர்வத்தை உண்டு செய்துவிட்டது.
 
என் பலத்தைக்கொண்டு உள்ளே போகமுடியாமல் அடிபட்டு, மிதிபட்டு எப்படியோ சிலமீட்டர்கள் உள்ளே சென்றவுடன் வந்த ஆத்திரத்தில் பக்கத்தில் முட்டிக்கொண்டு நின்ற சிறுவனின் காலில் ஓங்கி ஒரு மிதிவிட்டேன். (பெரியவர்களைத் தொடவா முடியும்?).. குளித்து வெளியே வந்தால் அக்கா பையன் சோகமாக நின்றுகொண்டிருந்தான்..
 
"என்னடா ஆச்சு?"
 
"எவனோ ஒரு ஸ்டுப்பிட் காலை ஓங்கி மிதிச்சுட்டான் மாமா!"
 
பி கு: கேமரா எடுத்துச் செல்பவர்கள் பேட்டரியும் பேட்டரி சார்ஜரும் எடுத்துச் செல்லவும்.
 
பி பி கு: இந்த அழகையெல்லாம் கேமராவில் சிறைப்படுத்துவது இயலாது என்பதால் மட்டுமே நான் போட்டோ எடுக்கவில்லையே தவிர, முதல் பி கு காரணம் அல்ல :-)

Sep 10, 2007

பட்டறையும் பினாத்தலாரும்

அம்னீஷியாவில் இருந்து முழிச்ச மாதிரி இருக்கு வலைப்பதிவுகளைப் பாத்தா.. பட்டறை பட்டறைன்னு சூடு கிளம்பிகிட்டு இருந்த நேரத்துல கிளம்பி ஊருக்குப்போயி, 30 நாள் அப்ஸ்காண்டு ஆகி, திரும்பி வந்து பாத்தா... மாலன் சண்டை, போலி சண்டைன்னு ரொம்பவே அட்வான்ஸ்ட் ஆகி இருக்கு. ஆனா அம்னீஷியான்றதாலயோ என்னவோ தெரியல, எல்லாம் மறு ஒளிபரப்பு மாதிரி தெரியுது!  எதைப்பத்தியும் எதுவும் சொல்ற மாதிரி இல்லை!
 
ஆகஸ்ட் 5 ஆம்தேதியே இதை எழுதிப்போட்டுடலாம்னு பாத்தா.. நெட்டைக்கண்டா கலப்பையைக்காணோம்.. நம்ம குகைக்கு வந்தாத்தான் எழுதவே ஒரு மூட் வருது.
 
பட்டறை ஏற்கனவே பலர் சொல்லிட்ட மாதிரி பிரமாதமா நடந்தது. நான் என் உறவு-நண்பருடன் சென்றிருந்தேன். தெரிந்த தெரியாத பல முகங்களைச் சந்தித்தேன். கொத்துக் கொத்தாக குழு அமைத்துப் பேசிக்கொண்டிருந்த எல்லாக்குழுவிலும் உள்ளே நுழைந்து என் உபதொழிலைச் செய்தேன்.  மூத்த வலைப்பதிவாளர்கள் கூட்டம் (பழைய வலைப்பதிவாளர்கள்னு சொல்லுங்க.. மூத்த - ன்னா கூச்சமா இருக்கு - ஐகாரஸ் பிரகாஷ்), மாடிக்கும் கீழுக்கும் ஓடிக்கொண்டிருந்த தன்னார்வலர்கள், தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே இத்துறைக்கு கணிசமான பங்காற்றி, பட்டறையில் பேச வந்த பதிவர்கள்-மென்பொருளாளர்கள், கேப் கிடைச்சா ஆள் மாற்றி அறிமுகம் செய்துகொள்ளும் சங்கத்து சிங்கங்கள், கொஞ்ச நேரம் வந்தாலும் வருகையைத் தீர்க்கமாகப் பதிவு செய்தவர்கள், ஒதுக்குப்புறமாக நின்று பொறுமையாக கவனித்துக் கொண்டு மட்டும் இருந்தவர்கள் - பல கொத்துக்கள் - ஒருவரை விடவில்லை.
 
மாடியில் இரண்டு அறைகளும், கீழே ஒரு மேடையோடு ஆடிட்டோரியமும் அமைத்து ஒரே நேரத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்ததில் யாரும் எல்லாவற்றிலும் இருந்திருக்க முடியாது. பட்டறையில் எனக்கு பெரிய வருத்தம் இதுவே. பதிய ஆர்வம் உள்ள புதியவர் எங்கே அமர்வது எனக் கஷ்டப்பட்டிருப்பார். தொழில்நுட்ப வகுப்புகள் நடக்கும் மாடியிலா, பதிவுசார்ந்த விவாதங்கள் நடந்த ஆடிட்டோரியத்திலா என.
 
மாலன் பேசியதைத் தொடர்ந்து பிரச்சினை பெரிதாகி பல பதிவுகள் தொடர்ந்தன என்பதைப் பின்னால் அறிந்தேன். அந்தப்பேச்சின்போது அங்கே இருந்தவன் என்ற முறையில் சில வார்த்தைகள். மாலன் அந்த பாஸ்போர்ட் விவகாரத்தை ஒரு உதாரணமாகத்தான் சொன்னார். பேசுபொருளாக அதைச் சொல்லவில்லை. எனவே, பட்டறைக்குழுவினருக்கு பேச்சின் வரைவு கிடைத்திருந்தாலும், அந்த வரைவில் பிரச்சினைக்குறிய விவாதப்பொருள் இருந்திருக்காது என்பது என் முடிபு. மேலும், மாலனுடைய கருத்து இப்படிப்பட்ட விஷயங்களில் என்ன என்பது ஏற்கனவே எல்லாருக்கும் தெரிந்துள்ள நிலையில், ஒரு Unconference-இல் அவரைப்பேசவிடாமல் தடுத்திருக்கமுடியுமா.. முடியுமா என்பதைவிட, வேண்டுமா என்பதையும் கேட்டுப்பார்த்துக் கொண்டிருந்தால் பதிவுச் சண்டைகளைத் தவிர்த்திருக்கலாம்.
 
இந்தச் சண்டையில் எனக்குப் பிடிக்காத ஒரு பதிவு, பட்டறைக் குழுவினரின் மன்னிப்பு. ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அப்படிக் கேட்க வேண்டுமாயின், விவாதத்தின்போது எதிர்க்கருத்து சொன்ன அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கேட்கவேண்டுமே!  பட்டறைக்குழுவுக்கு என ஒரு அஜெண்டா இருப்பதாகவோ, சில கருத்துக்கள் வெளிப்படுத்துவதே தவறு என்றோ தெளிவுபடுத்தப்படாத நிலையில், மாலன் கருத்தை அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டது பெரும் பாதகமாகச் சித்தரிக்கப்பட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர் கூறியதில் எனக்கு ஏற்பு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். இர்ரெலவண்டாக அன்று பேசியது மாலன் மட்டும்தானா (உதாரணமாகக் கூறினார் என்பதால் அது இர்ரெலவண்டும் கிடையாது!), பிறகேன் மாலன் பேச்சுக்கு மட்டும் மன்னிப்பு கேட்கவேண்டும்?
 
சரி விடுங்கள்.. வேற மேட்டருக்குப் போவோம். தரைத்தளத்தில் நடந்த பல விவாதங்களை பதிவு வடிவிலேயே படித்துவிட்டதாலும், ராப்பூரா முழித்துக்கொண்டு விமானத்தில் வந்ததாலும் தூக்கம் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்தது. நாயர் சாப்தான் அவ்வப்போது டீ கொடுத்து விழிப்புணர்வு உண்டாக்கினார்.
 
மதியம் 3:45க்கு என்று திட்டமிடப்பட்டிருந்தது என் ப்ளாஷ் வகுப்பு. அதற்கு சற்றுமுன்னாவது ஏதேனும் ஒரு மடிக்கணினியில் கொண்டு வந்திருந்த மென்பொருளை ஏற்றிவிட கொஞ்சம் அலைந்தேன்.
 
"துன்றதுக்கு" என்று கொடுத்த டோக்கனைத் தொலைத்துவிட்டு, யாராச்சும் ரெக்கமண்டு பண்ணுவாங்களான்னு வெயிட் செய்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. ஆனால் தயிர்சாதம்! எனக்கு மட்டும் இருந்தால் பரவாயில்லை, என் வகுப்புக்கு வர இருப்பவர்களுக்கும்.. ஏற்கனவே மதியம் 3:45 ஒரு மோசமான நேரம். சாதாரணமாகவே எல்லாருக்கும் தூக்கம் வரும் நேரம். அதில் இந்த தயிர்சாத அனஸ்தீஷியாவும் சேர்ந்தால்!
 
இந்த வகுப்பு எடுப்பதில் இது மட்டுமில்லாமல், மேலும் பலவித சோதனைகளும் இருந்தன. பொதுவாக, 30 நிமிட வகுப்பில், ஆசிரியர் அறிமுகம் என்பது ஒரு நிமிடத்துக்கு மேல் போகக்கூடாது. ஆனால் இங்கேயோ, என்னைத் தெரியாதவர்கள் 98% மக்கள்! அது மட்டுமல்ல, இருக்கும் மாணவர்கள் (ஆமா, முன்னால உக்காந்துட்டா வைஸ் சான்சலர்கூட மாணவர்தான்) எத்தரப்பட்டவர்கள் என்பது தெரியாது. ஏபிசிடியில் ஆரம்பிப்பதா கோடிங்கில் ஆரம்பிப்பதா என்ற குழப்பம். 30 நிமிடம் திடீரென 60 நிமிடமாகிவிட, அவ்வளவு நேரம் எல்லாரின் கவனத்தையும் ஈர்த்துவைக்க முடியுமா என்ற கலக்கம்.. வேறு துறைகளில் இருக்கும் தமிழி, செந்தழல் ரவி, கோபி போன்றோர் கலக்கிக்கொண்டிருக்க, ஆசிரியர் என வலைப்பூவிலேயே பெருமையடித்துக்கொண்டிருக்கும் நான் சொதப்பிவிடக்கூடாது என்ற ஈகோ கலந்த பயம், இன்னும் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் அவைநடுக்கம்!!
 
ஆனால், ஆரம்பித்த சில நொடிகளிலேயே எல்லாக் கலக்கங்களும் விடைபெற்றுக்கொண்டன. எனக்கும் ஒன்றும் தெரியாது என்று லெவல் செய்துகொண்டுதான் தொடங்கினேன். ஆனால் என் பழைய ப்ளாஷ்களைத் திறந்துகாட்டி பவர்பாங்க் அக்கவுண்டை அதிகப்படுத்திக்கொண்டு, எளிமையான ப்ளாஷ் செய்வது, ஆக்ஷன்ஸ்க்ரிப்ட் கோட் எழுதுவது, பப்ளிஷ் செய்வது, வலைப்பூவில் அதைக் கோப்பது என்று எல்லாவற்றையும் மேம்போக்காகத் தொட்டுவிட்டேன். 60பேர் இருந்த வகுப்பறையில் 10பேருக்காவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட அவையில் இது ஒரு நல்ல பர்சண்டேஜ்தான்.
 
மொத்தத்தில், பட்டறை ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும் - பல புதிய பதிவர்களை உள்ளுக்குக் கொண்டுவந்திருக்கும். மிக நிறைவான ஒரு நிகழ்வு. 
 
 

 

blogger templates | Make Money Online