Apr 26, 2008

இரண்டும் ஒன்றும்

மூன்று வருஷக் காத்திருப்புக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தது ரயில். இறங்கியதும் ரகுவின் கலைந்த தலையும் மூன்று நாள் தாடியும் சிந்துவுக்கு போதை ஏற்றியது.. அவளுக்கே அவள் மீது கோபம் வந்தது. அப்படியென்ன அலைச்சல் என் உடம்பே?
 
சாதாரணமாக, "வா சிந்து.. எப்படி இருக்கே?" என்று கேட்டவன் மீது கோபம் வந்தது. கூட்டத்தின் நடுவில் கட்டியணைப்பான் என்று இடம்பொருள் தெரியாமல் எதிர்பார்த்தது தப்புதான். இருந்தாலும் இவன் என்ன மறந்துவிட்டானா? முகத்தில் எந்த ஆர்வமும் காட்டாமல் "இதான் நாராயண், என் பிரண்டு"
 
கூட்டத்தை விட்டு எப்போது வீட்டுக்குப் போய்ச் சேர்வோம்.. அவள் அவசரம் புரியாமல் ஊர்ந்துகொண்டிருந்தனர்.
 
பெரிய ட்ரங்க் பெட்டியை டிக்கட் பரிசோதகர் திறந்துவைத்த சின்னப் பாதையில் நுழைக்கச் சிரமப்பட்டான் ரகு. மிலிட்டரி என்றதும் வெறுப்பு கலந்த அலட்சியத்துடன் பரிசோதகர் வெளியே விட, "டாக்ஸியிலே போயிடலாமா?" என்றாள் சிந்து.
 
"ஜி எச் பக்கமா போயிட்டா ஆட்டோக்காரன் சீப்பா வருவான்"
 
"இந்தப் பொட்டியத் தூக்கிட்டு சப்வேயில இறங்கி ஏறறதுக்குள்ளே"
 
"பழக்கமாயிட்டுது. வெயிட்டைத் தூக்கிக்கிட்டு ஓடறதுதானே தினசரி பயிற்சியே!"
 
"லேட் ஆயிடுமே" இதைவிடத் தெளிவாகத் தன் நிலைமையைச் சொல்ல முடியுமா? இவனுக்கு ஏன் புரியவில்லை?
 
ஆட்டோக்காரன் பெட்டியை ஏற்ற மறுத்து, பஸ் பிடித்து ஏறுமுன் சிந்துவின் செல் அடித்தது.
 
"ஆமாம்.. இங்கேதான், பக்கத்துலதான் இருக்கார்"
 
"நாராயண்.. இந்த நம்பர் அவருக்கு எப்படித் தெரியும்? இப்பதானே பாத்தோம்.. அதுக்குள்ள என்ன?"
 
"நான் தான் கொடுத்தேன்.. சொல்லு நரேன்"
 
"சரி.."
 
"சரி.."
 
"ஓக்கே.. அப்ப நாளைக்கு சாயங்காலம்?!"
 
"ம்"
 
"யெப்பா.. அதெல்லாம் இப்ப ஏன்? சொல்றன் இல்ல? எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம்"
 
போனை வைத்த ரகுவை ஆச்சரியமாகப் பார்த்தாள் சிந்து.
 
"நாளைக்குச் சாயங்காலமே ப்ரோகிராமா? எங்க?"
 
"மீட்டிங், ராத்திரி தண்ணி பார்ட்டின்னு ப்ரோக்ராம் போடறான்.. அவனுக்கு இந்த ஊர்லே யாரும் இல்லை."
 
"வீட்டுக்கே கூட்டிவந்திருக்கலாமே?"
 
"வீட்டுல உன்னைத் தனியாப்பாக்கணுமே" அப்பாடா! அவனுக்கும் உணர்ச்சி இருக்கிறது!
 
"சீ.. அதைத் தவிர வேற நினைப்பே கிடையாதா?" சிந்துவுக்கும் அதைத் தவிர வேறு நினைப்பு இல்லைதான்..
 
தெருமுனையில் தெரிந்தவர் "வாப்பா ரகு.. எந்த ஊர்லே போஸ்டிங் இப்ப? அங்கேயெல்லாம் வெறும் ரொட்டிதானா? பகல்பூர்னா ராஜஸ்தான் பக்கம்தானே?"
 
"இந்தக் கேள்விகளுக்கு ஸ்டாண்டர்டா பதில் தயார் செஞ்சு வச்சுக்கங்க! தேவைப்படும்.. உங்க அவசரம் தெரியாம போரடிக்கிறாங்க பாருங்க!" காதோரத்தில் கிசுகிசுத்தாள்.
 
வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தும் காபி டிபன் என்ற கடமைகள் எல்லாம் முடிய நேரம் ஆனது.. பிறகும்..
 
"என்னங்க ஆச்சு?"
 
"தெரியலைடி.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை"
 
"சரி விடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.. பயணக்களைப்போ என்னவோ" அவள் கண்களிலும் ஏமாற்றம்.
 
இரவுக்குள் ஏமாற்றம் தொடர்கதை ஆனதை சிந்துவால் தாங்க முடியவில்லை.
 
"எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்.. முழுசா மூணு வருஷம் கழிச்சுப் பொண்டாட்டியைப் பாக்க்றீங்க.. இப்பவும் முடியலன்னா எப்படி?"
 
".."
 
"உங்களுக்கு என்னவோ நடந்திருக்கு.. அதை உண்மையாச் சொல்லுங்க"
 
".."
 
"நான் உங்க தாலி கட்டின பொண்டாட்டி.. என்கிட்ட என்ன பயம்.. சொல்லுங்க"
 
"நாராயண்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன ரகுவால் சிந்துவின் கண்களைப் பார்க்க முடியவில்லை.
 
"செண்ட்ரல்ல காட்டினீங்களே அந்த ஆளா? அவருக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?"
 
"கல்யாணம் ஆன ஒரு மாசத்துல பாரக்குக்கு போயிட்டேன். அதுக்கு அப்புறம் அவன் தான் இதுக்கு"
 
"சீச்சீ என்ன சொல்றீங்க!"
 
"கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு இந்தப் பழக்கம் இருந்தது.. சீரியஸ்னு நினைக்கலை.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் இது தொடரவேதான் தப்புப் பண்ணிட்டேன்னு புரிஞ்சுது"
 
"விளையாடாதீங்க! கல்யாணம் முடிஞ்ச முதல் மாசத்துல நீங்க இப்படி இல்லையே?"
 
"அதான் எனக்கும் தெரியல. அப்ப வேற மாதிரி எக்ஸைட்மெண்ட்!"
 
"ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே!"
 
"வேணும்னு ஏமாத்தலை.. எங்க அப்பா வற்புறுத்திதான்.."
 
சிந்துவுக்கு ஏமாற்றமும் இந்தப்புதுக்கதையும் தாங்காமல் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
 
காலையில் குளித்துவிட்டு ஷேவ் செய்துகொண்டிருந்தான் ரகு.
 
"எங்க கிளம்பிட்டீங்க?"
 
"டாக்டரைப் பாக்க.. இதுக்கு எதாச்சும் செய்ய முடியுமான்னு.."
 
"இது பொறவியிலேயே வர்றது.. இதுக்கு டாக்டர் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு படிச்சிருக்கேன்"
 
"அப்ப என்ன பண்ணலாம்ன்றே?"
 
எதிர்காலம் இருண்டுதான் தெரிகிறது. ராத்திரி பூரா விட்டத்தைப் பார்த்து அழுததில் கண்கள் கனத்தது. ஆயாசத்தில் எடுத்த வாந்தியில் உடல் பலவீனமாய்த் தெரிந்தது. இருந்தாலும் முடிவெடுக்க வேண்டும்.
 
"போங்க! அந்தச் சக்களத்தி நாராயண் கிட்ட!" அடங்கியிருந்த கண்களிலிருந்து புதிதாய்க் கரித்த உப்பு.
 
*************************
 
வ வா ச போட்டிக்கு எழுதப்பட்ட கதை. நகைச்சுவைதான் வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே?

Apr 22, 2008

இதென்ன கலாட்டா?

தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - காலை 11 மணிக்கு
 
1. கடலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி வேலூருக்கும் வேலூர் எஸ் பி கடலூருக்கும் மாற்றம்.
 
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 19 ஆம் தேதி தொடக்கம்.
 
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 3000 உதவித்தொகை
 
4. தமிழ்ப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் பெயர் தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
 
தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - மாலை 6 மணிக்கு
 
1. வேலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி கடலூருக்கும் கடலூர் எஸ் பி வேலூருக்கும் மாற்றம்.
 
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 18 ஆம் தேதி தொடக்கம்.
 
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 5000 உதவித்தொகை.
 
4. தமிழ்ப்படங்களில் பேசப்படும் வசனங்களில் ஏதேனும் ஒருவரி தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
 
நடிகர் சங்க அறிக்கை - காலை 11:30க்கு
 
வரும் 28 ஆம் தேதி வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
நடிகர் சங்க அறிக்கை -மாலை 6:30க்கு
 
வரும் 27 ஆம் தேதியும் வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
முதலமைச்சர் அறிக்கை - காலை
 
கர்நாடக முதல்வர் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அவர் பேச மறுப்பதில் சற்றும் நியாயம் இல்லை. முடிவெடுப்பதை ஒத்திப்போட்டிருக்கிறேன்.
 
முதலமைச்சர் அறிக்கை - மாலை
 
கர்நாடக முதல்வருடன் பேசிவிட்டேன். அவர் பேசுவதில் சற்றும் நியாயமில்லை. பிரச்சினையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறேன்.
 
முதலமைச்சர் பேட்டி - காலை
 
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. என்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியை ஆதரிக்கின்றனர்.
 
அதே சமயத்தில் போக்குவரத்துத் துறையில் நடைபெறும் ஊழலால் நாடே தத்தளிக்கிறது. கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்.
 
முதலமைச்சர் பேட்டி - மாலை
 
தமிழ்நாட்டில் வாகன வசதி மிகவும் அற்புதமாக உள்ளதை உலகவங்கியே வியந்து பாராட்டுகிறது. கல்வியில் குறுகிய காலத்தில் சிறந்துவிட்ட தமிழ்நாட்டைப்பற்றி முனைவர்கள் ஆராய்ச்சி செய்கின்றார்கள்.
 
ஆனால், அளவுக்கதிகமாக உயர்ந்துவிட்ட விலைவாசியைப்பற்றியும், தாறுமாறாகக் கெட்டுக்கிடக்கும் சட்டம் ஒழுங்கைப்பற்றியும் மக்கள் தெரிவிக்கும் கவலையில் நானும் பங்கேற்கிறேன். அடுத்தமாதம் விலைவாசி உயர்வை எதிர்த்து பிரம்மாண்டப் பேரணி நடத்துவோம்.
*****
 
என்னடா இது கலாட்டான்னு பாக்கறீங்களா? தமிழ்நாட்டோட சோகம் எல்லாம் முதலமைச்சரா இல்லாதப்ப மட்டும்தான் அம்மாவுக்கும் சரி, கலைஞருக்கும் சரி - கண்ணுல படுது. இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை நேர முதல்வராவும், இன்னொருத்தரை மாலை நேர முதல்வராவும் முதலமைச்சராக ஆக்கிட்டா? 
 

Apr 13, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!

பொங்கல்தான் புத்தாண்டா என்று ஒரு பதிவு போட்டிருந்தேன், அதில் பெரிய விவாதமெல்லாம் நடந்தது. அதில் இருந்து சில துளிகள்:
 
நான் கேட்டிருந்த கேள்வி:
இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
கல்வெட்டு இப்படிச் சொல்லி இருந்தார்:
=>தமிழ் நாட்டில், பொங்கல் ஆண்டு முதல் நாளாக அறிவிப்பதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றால் உலக இந்துக்கள் அனைவரும் "பொங்கல்" கொண்டாடவேண்டும். இது தமிழர் திருநாள், தமிழர் அறுவடைத் திருநாள்,தமிழர் நன்றித் திருநாள்.

பல மதத்தினர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களின் மத ஆண்டாக எதை வேண்டுமானலும் கொள்ளலாம் அதற்காக சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ் ஆண்டாக இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி? நாளை இஸ்லாமும்,கிறித்துவமும் அவர்கள் ஆண்டை தமிழ் ஆண்டாக வைக்க வலியுருத்தினால் ?

நிச்சயம் "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒரு பொதுவான ஒரு தேதியை இந்தியா முழுக்க பயன்படும் வண்ணம் யராவது அறிவிக்கலாம்.

"இந்து" தமிழ் நாட்டில் மட்டும் இல்லை அல்லவா?

அப்படி அகில உலக "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒன்று அனைவராலும் ஏற்கப்படும்போது தமிழ்நாட்டில், அந்த மத மக்களுக்காக அதை விடுமுறையாக அறிவிக்கலாம்.
மதம் என்பது தனிப்பட்ட உரிமை. தனிமனித விருப்பம். புத்தாடை உடுத்துவது, கோவில்களுக்கு செல்வது என்பதை தவிர சித்திரைப் புத்தாண்டில் என்னவிதமான சடங்குகள் கொண்டாடப்படுகின்றன என்பதை சொன்னால் அறிந்து கொள்வேன். தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்ததால் அவையெல்லாம் தடைபடும் என்று சொன்னால் அவர்களின் மத நம்பிக்கை என்பதை போலித்தனமானது என்றே சொல்வேன்.
இப்படியும் ஒருத்தர் சொல்லி இருந்தார்:
புத்தாண்டை இடம் மாற்றுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ? உங்களை யாரும் சித்திரையை தவிர்க்கச் சொல்லவில்லையே. அப்படி சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை, பிறகு ஏன் தேவை இல்லாது கவலைப்படுகிறீர்கள் ?
விவாதங்களின் விளைவாக என் புரிதலாக:
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

சித்திரை முதல் நாளுக்கும் விடுமுறை இருக்கும் - இந்து என்போருக்கான சிறப்பு நாளாக அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை - ஆனால் தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறப்படக்கூடாது.
 
8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?

அரசாங்கம் யாரையும் தடுக்கவில்லை, பெயரை மட்டும்தான் மாற்றி இருக்கிறது..
ஆக, இந்த அறிவிப்பு செய்யப்பட்டபோது, இதை ஆதரித்தவர்களும் கூட, இதனால் நம்பிக்கை சார்ந்த சடங்குகள் செய்யப்படுவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்றே நம்பினார்கள்.
 
ஆனால், என்ன நடக்கிறது? அரசு ஆணை அனுப்பியதாம் கோயில்களுக்கு, சிறப்பு வழிபாடுகள் - புத்தாண்டு என்ற பெயரில் கூடாது என்று. பஞ்சாங்கம் படிப்பது என்ற வழக்கத்துக்குத் தடையாம்.
 
அரசாங்கம் கொண்டாடப்பட்டு வந்த ஒரு விழாநாளை இடம் பெயர்த்தபோது, அதற்கு மதரீதியான காரணங்கள் இல்லை, தமிழ் இன ரீதியாகத்தான் என்று சொல்லப்பட்டது, பிற்பாடு, இந்துசமய  அறநிலையத்துறை மூலம் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது,
 
அரசின் எதேச்சாதிகாரமான போக்கு, இதைத் துவேஷம் என்று சொல்வதில் தவறில்லை என்பதோடு, பெரும்பான்மையின் வெறுப்பைச் சம்பாதிக்க முனைந்து செய்யப்படும் வேலை - இது இந்துத்துவாவுக்கு அவல் போடும் சாத்தியக்கூறை மறுக்க முடியாது.
 
அப்போதைய விவாதங்களில் கருத்து ஓரளவு மாறி இருந்தாலும், இப்படி ஒரு அறிவிப்பு, அரசாணை - எனக்கு மட்டுமல்ல, அன்று ஆதரித்தவர்களும் சேர்த்தே அதிர்ச்சியை அளித்திருக்கும், அளித்திருக்க வேண்டும்.
 
திமுக அரசுக்கு என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில்:
 
இது மிக வெளிப்படையாகவே தெரியும் கலைஞரின் வழக்கமான திசை திருப்பும் உக்தி - ஒகேனக்கல் பிரச்சினையில் இருந்து முக்கியச் செய்திகளை வேறுபக்கம் திருப்பும் நோக்கம் என்றும் நான் நம்புவதால்,
 
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! என்று விட்டுச் செல்கிறேன்.
 
பி கு: தயாராக இருக்கும் கேள்வியாளர்களுக்காக: நான் இன்று வழக்கம் போல அலுவலகம் வந்திருக்கிறேன், எந்தச் சடங்கும் புத்தாண்டுக்காக கொண்டாடும் வழக்கம் இருந்ததும் இல்லை, இன்றும் இல்லை.

Apr 9, 2008

நாடாட ஓட்டாட.. 2

வெல்கம் பேக் ஆப்டர் தி ப்ரேக்..
 
நம்ம நிகழ்ச்சியோட அடுத்த கண்டெஸ்டண்ட்.. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே..
 
யெஸ்.. யூ கெஸ்ட் இட் ரைட்.. இட் இஸ் நன் அதர் தன்...
 
வாட்டாள் நாகராஜ்!
 
அதிரடியாகவே உள்ளே நுழைகிறார்.. 

அதாண்டா இதாண்டா வாட்டாளு நான் தாண்டா
அந்தத் தமிழ் ஆளுங்க அனைவருக்கும் எனிமிடா..
எடியூரப்பா ஆரம்பிச்சாண்டா.. நாகராஜு தொடர்ந்திடுவாண்டா..
 
நான் ஆறைப் பங்கு போட விடுவதில்லைடா..
அதிலும் தமிழு பேசும் ஆளை விடுவதில்லைடா.. ஆ ஆ அதாண்டா
!

 கொஞ்சம் கூல்டவுன் ஆகி, ஒரு மெலடியைப் போட்டுத் தாக்குகிறார். 

என்ன விட.. இங்க கன்னடத்தை காக்கறதுக்கு யாரும் இல்லை எவனும் இல்ல..
என்ன விட.. இங்க கலவரத்தை கிளப்பறதுக்கு யாரும் இல்ல.. எவனும் இல்ல..
 
ஆத்துத்தண்ணி குடிச்சா ஒழிப்பேண்டி..
டிவியில தமிழ அழிப்பேண்டி..
பாதி ஊரு எல்லாம் எமக்கேடி..
மீதி ஊரு நாளைக்குக் கேப்பேண்டி..
 
என்ன விட...

முடிக்கும் விதமாக ஒரு குத்துப்பாட்டைப் போட்டு முடிக்கிறார்:

ஏய்.. தாத்தா.. ஆத்தோரமா வாரியா..
நான் பாத்தா.. பம்மிகிட்டே போறியா!
 
அட எங்க பக்கம் நியாயம் இல்ல..
ஆமா அருவி கேட்டா உனக்கு தொல்ல...
 
ஏய்ய்!!
 
அடேங்கப்பா.. இவரு பாடி முடிக்கிற வரைக்கும் எல்லாரும் குலை நடுங்கிகிட்டே தான் உக்காந்திருந்தோம். எதைச்சொன்னா அதை வச்சுக் கலவரம் கிளப்புவாரோன்னு ஒரே பயம்.. ஜட்ஜஸ் உங்களுக்கு?
 
நடுவர் 1: பின்ன? இவரு கான்சப்ட் இல்லாமயே கம்பு சுத்துவாரு. இப்படி ஒரு மேட்டர் கிடைச்சா.. முதல்ல கலவரத்தைக் கிளப்பிட்டுதான் காரணமே கேப்பாரு.. இவருக்கு, வேற வழியில்ல, 10!
 
நடுவர் 2: நான் இதுக்கெல்லாம் பயப்படாது. ஆனா சினிமாவ நிறுத்திடுவாரோன்னுதான் பயப்படுது. சோ, என் மார்க் 8!
 
நடுவர் 3: முதல் அக்கா சொன்னதுகூட சேந்துக்கறேன். ஏன்னா, எனக்கும் பயம்.
 
அடுத்து வரப்போற இந்த ஜோடி காம்படிஷன்லே இல்லாட்டியும், ஒரு பாட்டு மட்டும் பாடி நம்மை மகிழ்விக்கிறதுக்காக வராங்க - எ ஸ்பெஷல் ரீமிக்ஸ் பர்பார்மன்ஸ் ப்ரம் தேசியக்கட்சிகள்!

டூயட் ரீமிக்ஸ்.. கர்நாடக பாஜக, காங்கிரஸ் ஒரு கட்சியாவும், தமிழக காங்கிரஸ் பாஜக இன்னொரு கட்சியாவும்..

நாடொன்று கண்டேன், நியாயம் காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
ஓட்டொன்று கண்டேன், உண்மை காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் வாங்கும் ஓட்டு நீ பார்ப்பதில்லை, நீ வாங்கும் ஓட்டு நான் பார்ப்பதில்லை..
நான் பார்க்கும் ரீஜன் உன் ரீஜன் இல்லை, என்னோட வோட்பேங்க் உன் பேங்கு இல்லை..
எல்லையிலே கொள்கையில்லை.. ஒற்றுமையில் நாட்டமில்லை..
ஓட்டோடு உறவாடும் கட்சி எங்கள் கட்சியல்லவோ..

நின்றேன்.. ம்ஹூம்.. வென்றேன்.. ம்ஹூம்.. சுருட்டினேன்..

காம்படிஷன்லேயே இல்லாட்டியும் சும்மா கிளப்பிட்டாய்ங்க இல்ல பீதிய!
 
நிக்ழ்ச்சியோட அடுத்த.. அதாவது கடைசியான ஜோடி வரப்போறாங்க! லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்! ஆமாம்.. வி வெல்கம் ஆன் ஸ்டேஜ்.. தெ கிரேட் கலைஞர் கருணாநிதி அண்ட்.. ஹிஸ் உட் பி கர்நாடகா கவுண்டர்பார்ட்.. மிஸ்டர் எஸ் எம் கிருஷ்ணா!
 
டூயட் பாட்டில், கலைஞர் தொடங்குகிறார்:

ஏலே.. ஏலேலே லே..
ஹொகெனக்கல் ஓரத்துல
பாத்திகட்டி பத்திரமா
தண்ணியத்தான் ஊத்தித்தரேன்
தாகமெல்லாம் தீத்துத்தரேன்
வாடி .. நீ வாடி..
 
பத்துவருசம் முன்னாலியே
எல்லாரையும் கேட்டுப்பிட்டேன்
பாச்சலோட ஓடிவாரேன்
எலும்பொடிஞ்சா
கவலையில்ல
வாடி.. நீ வாடி..
 
ஏலே ஏலே லே லே..
 
எல்லைதாண்டி வாராம் பாரு..
அவனைச் சிறையெடுக்கப் போறேன் வாடி..

எஸ் எம் கிருஷ்ணா:

அய்யய்யோ.. என் ஓட்டுக்குள்ளே கைய வச்சான் அய்யய்யோ..
அய்யய்யோ.. என் ஊருக்குள்ளே தண்ணி மொண்டான் அய்யய்யோ..

கலைஞர்:

திண்டாடி நான் தேடித் தேடி..
நானும் கொண்டாந்தது இந்தத் தண்ணி..

 கிருஷ்ணா:

நீ போனாக்கூட குத்தம் இல்லை..
நல்லா ஆட்சி பாக்கும் இந்தப் புள்ள! அய்யய்யோ!

அடடா.. அணுகுண்டை அக்குள்லே சொருகிகிட்டோமோ ன்னு கலைஞர் கொஞ்சம் மாடரேட் பண்றாரு..

உன்னைத்தானே.. பஞ்சம் என்று தண்ணீர் கேட்டேன் நானே
உயிர் போகிறது.. திட்டம் போடவிடு..
குடிநீர் கொடுத்து கொஞ்சம் வாழவிடு!

 விடாம சண்டித்தனம் பண்றாரு கிருஷ்ணா

என்னைத்தானே.. தானமாகத் தண்ணீர் கேட்டாய் நீயே..
ஓட்டு போகிறது.. ஆட்சி போகிறது
நியாயம் பேசிவிட்.. இது நேரமில்லை..

 சோகத்தின் உச்சத்தில் தொடர்கிறார் கலைஞர்:

ஓடும் கட்சிகளே..
ஒருசொல் கேளீரோ..
ஆடும் ஆட்சியிலே
ஆதரவு தாரீரோ..
 
நாடாளும் சட்டசபையில்
மைனாரிட்டிக்கு நான் தலைவன்,,
கூட உள்ள கட்சிகளின்
தலைமைக்கு நீ தோழன்..
 
தண்ணீரிலே உன் ஓட்டு..
பிஜேபி போட்ட ரூட்டு
பிரச்சினையில் என் கூட்டு.
 
இதில் நான் அந்த ப்ளான்
பற்றிப் பாடுவதெங்கே பாட்டு!

அரங்கம் ஒளிரத்தொடங்க, எல்லாரும் அவசரமாக கண்ணைத்துடைக்க கர்சீப் தேடுகிறார்கள்.
 
ஆஹா.. நவரசமும் கலந்த கான்சப்ட்.. ஜாலியா டூயட் பாடினாலும் கடைசியில எல்லாரையும் அழவைச்சுட்டாங்க! நடுவர்கள் உடனே எதுவும் சொல்ல முடியாத நிலைமையில இருக்காங்க.. ஜட்ஜஸ், கண்ணைத் தொடச்சுக்கிட்டு கமெண்ட் சொல்லுங்க..
 
நடுவர் 1: என்னன்னு சொல்லுவேன்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி பர்பார்மன்ஸ். வேற எங்க இருந்து வராட்டியும், கண்ணுல இருந்து தண்ணி வரதை நிறுத்தவே முடியல.. என் மார்க் 10!

நடுவர் 2: ஆமாக்கா.. வழக்கமா நாமதான் இவர் முன்னாடி ஆடுவோம், இப்ப நம்ம முன்னாடி இவர் ஆடுறாரேன்றதப் பாத்ததும் கண்ணுலேயே அருவி.. அது என்னோட எல்லைக்குள்ளதான் இருக்கு! நானும் 10!

நடுவர் 3: நீங்க ரெண்டு பேரும் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு.. (விசும்பியபடி) நானும் 10 மார்க்தான்.

வாவ்.. புல் மார்க் எடுத்து போட்டியிலே பரிசைத் தட்டிக்கிட்டுப் போறாங்க கலைஞர்-கிருஷ்ணா ஜோடி.. அவங்களோட சூப்பர் பர்பார்மன்ஸ் இப்படியே கண்டின்யூ ஆனாதான் எடியூரப்பா அண்ட் கோ தோக்க முடியும்..

நாம நிகழ்ச்சியோட சோகமான கட்டத்துக்கு வந்துட்டோம். (எல்லாருக்கும் கிளிசரின் சப்ளை பண்ணியாச்சாப்பா?) இன்னிக்கு எலிமினேட் ஆகப்போற டீம் யாருன்னு பார்க்கப்போறோம்! யார் அந்த பாவப்பட்ட டீம்?

அழாதீங்க.. இன்னிக்கு இல்லாட்டியும் அடுத்த சான்ஸுல நீங்க உள்ள வர வாய்ப்பு இருக்கு..

இல்ல மேடம்.. இதுவரைக்கும் எந்த காம்படிஷன்லேயும் ஜெயிச்சதே இல்லை..

உங்க பர்பார்மன்ஸை இம்ப்ரூவ் பண்ணனும்.. ஆனா நம்பிக்கையத் தளர விடாதீங்க!

பொதுமக்கள் டீம் அழுதுகொண்டே விலக க்ரெடிட் டைட்டில்ஸ் ஓட ஆரம்பிக்கிறது.

Apr 7, 2008

நாடாட.. ஓட்டாட!

"ஹாய் வியூவர்ஸ்!  தமிழ் தொலைக்காட்சிகளிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி - நாடாட ஓட்டாட.. அற்புதமான நிகழ்ச்சின்னு நாமே சொல்லிக்கக் கூடாதுன்றதுக்காக, நம்ம நடுவர்களைச் சொல்ல வைக்கலாமா? வீ வெல்கம் அவர் நடுவர்ஸ் ஆன் த ஸ்டேஜ் ப்ளீஸ்"
 
நடுவர் 1: இது ஒரு எக்ஸலண்ட் ப்ரொக்ராம். இதைப் பார்த்த பிறகுதான் நான் எவ்வளோ நல்லா நொட்டை சொல்வேன் னு எனக்கே தெரிஞ்சுது.
 
நடுவர் 2: ஆமாம் நடுவரக்கா.. இந்த ப்ரொகிராம் பாக்கச் சொன்னவுடனே என் பசங்க எல்லாம் டிவிய ஆப் பண்ணிட்டு படிக்கப் போயிடறாங்க. இன்பார்மேட்டிவ் ப்ரொகிராம்.
 
நடுவர் 3: நடுவர் அக்கா சொல்லிச்சு, இன்னொரு நடுவர் அக்காவும் ஷொன்னாப்போல, சூப்பர் நிகல்ச்சி.
 
இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியிலே, மெட்லீ ரவுண்ட்.. ஒவ்வொரு காண்டெஸ்டண்டும் ரெண்டு மூணு பாட்டை ரீ மிக்ஸ் பண்ணி கலக்கப் போறாங்க.. முதலாவதா ஆட வராரு.. ஏமாந்த சோணகிரின்னு எதிர்பாத்தவங்களை எல்லாம் ஏமாத்தின எடியூரப்பா!
 
மேடை இருளடைகிறது.. பேத்தாஸ் ஒலியுடன் ஆரம்பிக்கிறது பாட்டு..
 
"தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களை
தண்ணீரை நிறுத்தவைத்தான்..
கரைமேல் பிறக்கவைத்தான் - உங்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்.."
 
படகோட்டி கெட்டப்பில் பாடியவண்ணம் நுழைகிறார் எடியூரப்பா.
 
டக்கென்று இசை மாறுகிறது.. பீட் அதிகரித்து குத்துப் பாட்டு பாட ஆரம்பிக்கிறார்..
 
புகையடிக்குது புகையடிக்குது
ஹோகெனக்கல் புகையடிக்குது..
எங்க ஜனம் பார்த்தடிக்குது..
எல்லா வோட்டும் சேத்தடிக்குது..
கூட்டு போட்டும் எலெக்ட் ஆவலாம்.. (தமிழனுக்கு)
வேட்டு வச்சும் எலெக்ட் ஆவலாம்..
 
இசை மறுபடி மாறுகிறது..
 
பரிசல ஓட்டி எல்லைக்கு ஓடு..
பஸ்ஸை நிறுத்தி எல்லைய மாத்து..........................
 
என் பேரு எடியப்பா..
தண்ணியெல்லாம் எனக்கப்பா..
எங்களுக்கு மிஞ்சிப்போனா
நீயும் கொஞ்சம் குடியப்பா.. குடியப்பா
 
நெஞ்சில் ஆறா வடுவப்பா..
குமாரசாமி ஆப்பப்பா..
அதிக சீட்டு வேணுமுன்னா
தண்ணி மேட்டர் எடுவப்பா..எடு அப்பா..
 
"வாவ்.. கலக்கிட்டீங்க எடியூரப்பா.. அந்தக்காலத்துல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் எல்லாப்பாட்டையும் போட்டுக் கலக்கிட்டீங்க! ஜட்ஜஸ் என்ன சொல்றாங்கன்னு கேக்கலாமா?"
 
நடுவர் 1: கான்சப்ட் ரொம்பப் புதுமையா யோசிச்சிருக்காரு.. ஓட்டு வாங்கணும்னா எந்த எல்லைக்கும் போகத்தயார்ன்றத அழகா வெளிப்படுத்தினாரு.. ஆனா.. ஆட்டம் கொஞ்சம் - இல்லை, ரொம்பவே அதிகம்தான். தன்னோட ஸ்டேஜ்லே மட்டும் ஆடாம, அடுத்த ஸ்டேஜுக்கும் போயி ஆடினார் பாருங்க.. அது ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட்.. என் மார்க்ஸ் : 7
 
நடுவர் 2: ஆமாம். ஆட்டம் அதிகமாத்தான் போச்சு. கூட்டு போட்டும் எலக்ட் ஆவலாம்னு பாடணவரு அதை ஏன் செலக்ட் பண்ணல? என் மார்க்ஸ்: 6
 
நடுவர் 3: அவங்க சொன்னா மாதிரிதான்.
 
நம்ம நிகழ்ச்சியில அடுத்ததா வந்து கலக்கப் போறவங்க - நடிகர் சங்கம்!
 
எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பிக்கிறார் சத்யராஜ்.
 
ஆடுங்கடா என்னச்சுத்தி
நான் பெரியாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் மண்ணைப்பத்தி
கேளுங்கடா வாயப்பொத்தி..
 
தமிழ்ச்சாமிய கும்பிட்டா தமிழனோட சங்கமடா..
திருப்பதிய கும்பிட்டா கொல்டியோட சங்கமடா..
 
பொறாமை எரிச்சல் கெட்ட வார்த்தை சேர்த்துப் போட்டா நடிகர் சங்கம்..
அவனை இவனை திட்டிப்போட்டு தமிழைக் கொஞ்சம் கலந்து வச்சா நடிகர் சங்கம்!
 
ட்யூன் மாறித் தொடர்கிறார் ரஜினி..
 
வாட்டாளென்ன முட்டாளென்ன தண்ணியென்ன வெந்நியென்ன சொல்லடா சொல்லடா பதிலை..
எந்த ஊரு எந்தன் ஊரு எந்தப்பக்கம் எந்தன்பக்கம் சொல்லடா எனக்கு பதிலை..
 
நம்பிநம்பி எடுத்துவச்ச சினிமாவெல்லாம் நிறுத்திப்புட்டா சோறு எதுக்கு போடா.. 
இங்க விரதத்துக்கு எதுக்கு பீடா? 
 
நம்பிநம்பி எடுத்துவச்ச சினிமாவெல்லாம் நிறுத்திப்புட்டா சோறு எதுக்கு போடா.. 
இங்க விரதத்துக்கு எதுக்கு பீடா? 
 
உடனே ட்யூனெல்லாம் நிற்கிறது.. கமல் பேஸ் வாய்சில் கிருஷ்ணர் கெட்டப்பில் போகஸ் லைட் அடிக்க, தொடர்கிறார்.
 
"இன்று அருவி உன்னுடையது.. விட்டுவிட்டால் நாளை அவனுடையது.
 
எதை நீ குடித்து வைத்தாய்? அதை நீ வாந்தி எடுப்பதற்கு?
 
எது நடந்ததோ அது மோசமாகவே நடந்தது..
 
எது நடக்கிறதோ அது பசியோடே நடக்கிறது..
 
எது நடக்க இருக்கிறதோ அது கள்ள ஓட்டோடே நடக்கும்"
 
அபாரமான சைலன்ஸ் மட்டும்! குழப்பத்தோடு அரங்கம் ஒளிர்கிறது.
 
"வாவ்.. நடிகர்கள் எல்லாம் பின்னிட்டீங்க!.. ஜட்ஜஸ்?"
 
நடுவர் 1: இன்னும் நான் ஆச்சரியத்துல இருந்து விலகல.. ஆனா, இவங்களோட கான்சப்ட் என்னன்னுதான் புரியவே இல்ல. சினிமா போடணுமா, தண்ணி விடணுமா? அந்தக் குழப்பம் இருந்ததாலேயும், கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகாததாலேயும் என் மார்க் 6.
 
நடுவர் 2: டிஸ்ஸப்பாயிண்ட் பண்ணிட்டீங்க நடிகர்களே.. கெமிஸ்ட்ரியும் இல்லை.. அந்த ஜோஷ் உம் இல்லை.. ஆனா, சூப்பர் கான்சப்ட்.. எனக்கே பசி வந்துதுன்னா பாத்துக்கங்க.. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. (விசிலடித்துவிட்டு).. என் மார்க் 8!
 
நடுவர் 3: (இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசி குழப்பிட்டீங்களே.. ஒரே மாதிரி பேசி இருந்தா காபி அடிச்சிருப்பேன்.. சரி.. )நல்லாவும் இருந்துது - சில இடங்கள்லே இன்னும் கொஞ்சம் பெப் போட ஜோஷ் கலந்து கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆயிருந்தா (எல்லா வார்த்தையும் சொல்லிட்டனா?) நல்லா இருக்கும்..
 
நேயர்களே.. இன்னும் கலைஞர், எஸ் எம் கிருஷ்ணா, டாக்டர் ராமதாஸ் எல்லாம் ஆட வராங்க.. அதுக்கு முன்னாலே ஒரு சின்ன ப்ரேக்!!!!!!!!!!!!!!

Apr 5, 2008

ஹொகேனக்கல் - நீர் மட்டுமா வீழ்ச்சி அடைகிறது?

கலைஞர் லாஜிக் வியக்க வைக்கிறது!

அவர் பேச்சு கேட்கக்கூடிய மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில ஆட்சியுடனான பிரச்சினையை - இன்னும் சொல்லப்போனால் ஒரு நான் இஷ்யூவை - தீர்க்க, தேர்தல் முடியும்வரை ஒத்திப்போட்டுள்ளது - இதனால் யாருக்குதான் லாபம் என யோசிக்கவைக்கிறது! எலும்புகள் நொறுங்கினாலும் தவிர்க்கமாட்டேன் என்ற திட்டம் எது நொறுங்குவதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது?

தண்ணீர் திறந்தும் விடமாட்டோம், வெள்ளம் வந்து திறந்தே விட்டாலும் அதை நீங்கள் குடிக்கக்கூடாது, குடித்தால் உங்கள் ஊர் சேனலை நிறுத்துவோம், திரைப்படங்களைக் கிழிப்போம், பஸ்ஸை நிறுத்துவோம் என்று ரௌடித்தனமாகச் செயல்படும் கன்னட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசை, தான் பங்கேற்கும் - தன் வழிகாட்டுதல்படி செயல்படும் - மத்திய அரசைக் கேள்வி கேட்காமல் வன்முறை ஏற்பட்டுவிடும் என்ற அறிவு இப்போதுதான் வந்தது போல ஒரு முடிவெடுக்க என்ன அவசியம்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தடையில்லாச் சான்றிதழ் வாங்கப்பட்டுவிட்ட திட்டத்தை நிறைவேற்ற யாருக்காக காத்திருக்கவேண்டும்?

வெளிப்படையாகவே சவால் விடுகிறார் கிருஷ்ணா - திமுக விலகினாலும் பெரும்பான்மை இருக்குமாம்! இருந்தால் மட்டும்? (பிஜேபியின் எடியூரப்பா கிளப்பியதால் இதை தமிழகம் Vs பாஜக ஆக்கப்பார்க்கும் ஒரு சிறு கும்பலுக்கு இதெல்லாம் கண்ணில் படாது போலும்! கர்நாடகாவில் எந்தக்கட்சி ஹொகேனக்கல் பிரச்சினை தேவையற்றது என்று சொல்லி இருக்கிறது? (கம்யூனிஸ்டுகள் அங்கே என்ன சொல்கிறார்கள்?) எனக்கு பாஜகவின் மீது எந்த எழவு சாப்ட் கார்னரும் கிடையாது - எல்லாக்கொள்ளியும் ஒரே மாதிரிதான் எரிகிறது.)

சொல்லப்போனால், இதைவிட, இந்தப்பிரச்சினையை முளையிலேயே கிள்ள எந்த வாய்ப்பும் கிடையாது. ஆனால்!

மத்திய அரசு இதில் தலையிடுவது என்றால் ஒரே முடிவுக்குதான் வாய்ப்பு இருக்கிறது.. எடியூரப்பாக்களுக்கும் வாட்டாள் நாகராஜுக்கும் தோன்றிவிட்டது என்பதால் ஹொகேனக்கல் கர்நாடகாவைச் சேர்ந்து விடுமா? வரைவு, ஒப்புதல், தடையில்லாச் சான்றிதழ் என்று ஆயிரம் கடல்மலைதாண்டி வந்த திட்டம் வேலையத்த ரௌடிகள் சொன்னதால் நிறுத்திவைக்கப்படுமா என்ன?

ஆனால், இப்போது தலையிட்டால் அது காங்கிரஸ் செய்த தமிழ் - ஆதரவு - நிகழ்வாக பார்க்கப்பட்டுவிடுமோ என்ற பயம், அது தேர்தல் முடிவைப் பாதித்து விடுமோ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் பயம் தவிர கலைஞரின் இந்த முடிவுக்கு வேறெந்தக் காரணமும் தெரியவில்லை!

அதனாலேயே லாஜிக்கைவிட அவருடைய டைமிங் அருவருக்கவைக்கிறது! போராடிய அனைத்து தரப்பினரையும் முட்டாளடித்து விட்டார்! காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக எதை காவு கொடுத்திருக்கிறார் என்பதை யோசித்தால்தான்!!

Apr 1, 2008

ஒகேனக்கல்லும் கட்டாயத் தமிழ்க்கல்வியும்

பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.
 
வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறது. புதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையே.  கபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத வேளைகளில் ஒகேனக்கல் காய்ந்த குட்டைதானே? அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன? எந்த வகையில் இது கர்நாடக மக்களைப் பாதிக்கப் போகிறது? யோசிக்கவிடுவதில்லை கிருஷ்ணாக்களும் எடியூரப்பாக்களும். தமிழன் மீதான தங்கள் மேல்நிலையை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு ஆயுதமாகத் தான் இதையும் பார்க்கின்றார்கள். அப்படியே ஒகேனக்கல் அவர்களின் வாழ்வாதாரத்தின் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டாலும், அதற்கும், தமிழ்சினிமா திரையிடும் அரங்குகளுக்கும் என்ன சம்மந்தம்? அவற்றை ஏன் சூறையாட வேண்டும்?
 
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், பெங்களூருவின் கோபம் தமிழர்கள் மேல் மட்டும் அல்ல என்பது புரியும்.  சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம் என்ற பதிவில் எழுதியிருந்தேன்:
 
10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான். சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான். 
 
 
இந்த மாற்றம் பெங்களூருவில் கொஞ்சம் முன்னாலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. கணினி சாராத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து கடந்த 20 வருடங்களில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது.
 
பொருளாதார ஏற்றத்தாழ்வை, ஒரு சாதாரண பெங்களூர்வாசி எப்படிப்பார்க்கிறான்? கன்னடம் பேசி உயர்வாக வாழ்ந்துகொண்டிருந்தவன், கன்னடம் பேசாதவர்களால் தாழ்வாக்கப்படுவதாக உணர்கிறான். பொருளாதாரத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். வேறு மொழி பேசுபவர்களை எதிரியாகக் கருதத் தொடங்குகிறான்.
 
பொருளாதாரச் சமச்சீரின்மை, கோபத்தை உருவாக்குகிறது. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது மட்டும் குழப்பமாக இருக்கும் வேளையில், வருகிறார்கள் அரசியல்வாதிகள்.
 
காவிரி ஆற்று நீர் பிரச்சினை, இரு மாநில விவசாயிகளை மட்டுமே நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சினை. காவிரி தீரத்தில் இல்லாத பெங்களூரில் ஏன் கலவரம் வெடிக்கிறது?  என்கிட்டே பணம் காசு கம்மியா இருக்கலாம் - ஆனா, நான் விட்டாத்தான் உனக்குத் தண்ணி என்று பெங்களூர்காரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறது. தமிழர்களுக்குப் படியளக்கும் பெருமை தங்களிடம் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. இந்தப் பெருமை, அவர்களின் மற்ற குறைபாடுகளை மறக்கடிக்கிறது.
 
இந்தப் பெருமை, வேறு மாநிலத்தவர்களிடம் செல்லுபடியாவதில்லை. தமிழனுக்குத் தண்ணீர் தருகின்ற அன்னதாதாக்களாகத் தான் இருப்பதாக நினைக்கிறான். அடிபணிந்து இருக்கவேண்டிய தமிழர்கள் தங்கள் ஊரில் தன்னை விட வசதியாக வாழ்வதாக எண்ணிப் பொறுமுகிறான்
 
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. எந்தச் சமரசத்துக்கும் உடன்படமாட்டோம் எனச் சொல்லும் அரசியல்வாதி ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறான். சமரசத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிக்கு அது சாவுமணியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதை முயற்சிப்பதில்லை.
 
எல்லாத்தரப்புக்கும் இழப்பை மட்டுமே தரக்கூடிய இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்றுதான் தீரும்?
 
இன்றைய தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டுமின்றி - நாளைய வளமான சமுதாயத்தைப்  பற்றியும் கவலைப்படும்  அரசியல்வாதிகள்
இன்றைய பரபரப்பை மட்டுமே நினைக்காமல், பொறுப்புணர்வோடு உண்மைநிலையைக் காட்டும் ஊடகங்கள்
நிஜமான, எல்லாத்தரப்புக்கும் கிடைக்கும் பொருளாதார சுபிட்சம்
 
பெரிய கனவுகள்!
 
ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும், ஏறத்தாழ இதே போன்றதுதான். மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் மீதான இயலாமை, மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.
 
நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான், பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான். பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள் - கவனிக்கவும், தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லை - தேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி  படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்கு, தமிழ் படித்தவன் - படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக்  கட்டமைப்பதும், ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.
 
அது சாத்தியப்படக்கூடாது, அப்படிப்பட்ட சில்லறைப் பிரிவினைவாதிகள் ஏற்படக்கூடாது என்றால், எல்லாரும் மொழிரீதியாகச் சமமாக இருத்தல் அவசியம். இந்தக்காரணத்தினாலும், நான் கட்டாயத் தமிழ்க்கல்வியை ஆதரிக்கிறேன் - சென்ற பதிவில் இந்தக் காரணங்களை விளக்க முடியவில்லை, எனவே இப்பதிவு!

 

blogger templates | Make Money Online