தீபாவளி- 1978
என்னப்பா பத்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கியிருக்கே? கோபி வீட்டிலே நூறு ரூபாய்க்கு வாங்கி இருக்காங்களாம் தெரியுமா?ஒரு பாக்கெட் கூட ராக்கெட், ட்ரெயின் இல்லையே - எல்லாம் நமுத்துப்போன ஒத்த வெடியா இருக்கு?
அய்யோ தூறல் போடுது - காய வெச்ச பட்டாசெல்லாம் நனைஞ்சிடும் - ஒடு..
அவன் தான்மா நான் பாக்காத நேரத்திலே லக்ஷ்மி வெடி வெச்சுட்டான். புதுச்சட்டை வீணாப்போச்சு, விரலை மடக்கவே முடியலை அம்மாஆஆஆஅ!
தீபாவளி - 1986
ஏன்டா தீபாவளியும் அதுவுமா தியேட்டர் வாசல்லே தேவுடு காக்கறீங்க?
அதுசரி - நாளைக்குப் பார்த்தா உனக்கும் எனக்கும் (ரசிகனுக்கும்) என்ன வித்தியாசம்?
பட்டாசு வெடிக்கலையா?
அதெல்லாம் கார்த்திகை தீபத்துக்கு பார்த்துக்கலாம். தலைவர் படம் பேரெல்லாம் சேர்த்து ஒரு கவிதை(?!) எழுதித் தரச் சொன்னேனே - செஞ்சியா?
தீபாவளி - 1994
இங்க பாரு -When I say no, it is NO! சைட்லே இருக்கறதே நீ ஒரு ஆளு. உனக்கு 10 நாள் லீவு எல்லாம் கொடுக்க முடியாது.
நான் தீபாவளிக்கா சார் லீவு கேக்கறேன்? என் பாட்டி ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க சார். அவங்களுக்கு என் மேலே உயிர்! நான் போகலேன்ன ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க சார்.
கஸ்டமர் கிட்டே எல்லாம் சொல்லிட்டேன் சார். எல்லா மெஷினும் இப்போ கண்டிஷன்லேதான் இருக்கு. எதாவது ப்ராப்ளம் ஆனாலும், மேட்டரை பெரிசா ஆக்க மாட்டாங்க சார். ப்ளீஈஈஈஈஈஸ் சார்!
தீபாவளி - 1999
ஏண்டி ஒரு மனுஷன் எவ்வளவுதான் ஸ்வீட் சாப்புடுவான்? ஒரு சோதனைச் சுண்டெலி மாட்டினா போதுமே? ஊர்லே எல்லார்கிட்டே இருந்து வந்த பட்சணத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணிடுவீங்களே!
இதப்பாரு, நான் சரம் மட்டும்தான் வெடிப்பேன் - இந்த புஸ்வாணம், சக்கரம் எல்லாம் லேடீஸ் மேட்டர்.
நிச்சயமா முடியாது. தீபாவளி அன்னிக்கு சினிமா போறதில்லைன்னு ஒரு பிரின்சிப்பிள்ளே வச்சிருக்கேன். அடுத்த வாரம் ட்ரை பன்னறேன் - உறுதியா சொல்ல முடியாது.
தீபாவளி - 2005
சரியாப்போச்சு போ! தீபாவளி அன்னிக்கு எனக்கு க்ளாஸ் இருக்கு. புது ட்ரெஸ் எல்லாம் போட முடியாது. யூனிஃபார்ம் நிச்சயம் போட்டே ஆகணும்.
பட்டாசா? எந்த ஊர்லே இருக்கே தெரியுமா? ஜெயில்லதான் தீபாவளி கொண்டாடறதுன்னு முடிவு பண்ணிட்டயா? நீயும் பொங்கல் ரிலீஸ்தான் ஞாபகம் வெச்சுக்க!
சாஸ்திரத்துக்கு ஒரு ஸ்வீட் பண்ணு போதும். சுகர் எற்கனவே கச்சா முச்சான்னு இருக்கு!
Oct 27, 2005
என் பரிணாம வளர்ச்சியில் தீபாவளி
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 23 பின்னூட்டங்கள்
Oct 24, 2005
சோளகர் தொட்டி - ச பாலமுருகன் (24Oct05)
ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கத்தைப் படித்து முடித்தவுடன் ஏற்படும் மனநிலை மாற்றமே என்னைப் பொறுத்தவரை அதன் தரத்தின் அளவுகோலாக இருந்தது - நேற்று வரை.
கடைசிப்பக்கத்துக்காக ஆவலுடன் காத்திருந்து, முடிந்தவுடன் "அப்பாடா" என்று விரல்களுக்கு விடுதலை கொடுக்க வைக்கும் சாதாரண நாவல்கள்..
பக்கங்கள் தீர்ந்தவுடன், முடிந்துவிட்டதே என வருந்தவைத்து, கடைசி சில பக்கங்களை திரும்பப் படிக்கத் தூண்டும் சில புத்தகங்கள்.
வெகு சில புத்தகங்கள் மனதிலிருந்து வெளியேறாமல் அழிச்சாட்டியம் செய்து முதலில் இருந்தே மீண்டும் படிக்க வைக்கும். இந்த லிஸ்ட் மிகவும் சிறியது..Gone with the wind, to kill a mocking bird, குருதிப்புனல், ஒரு புளியமரத்தின் கதை என ஒரு கைவிரல்களுக்குள் அடங்கிவிடக்கூடியனதான்.
சோளகர் தொட்டி இது எந்த வகையிலும் அடங்காத புது வகையாக இருந்தது. கடைசி வரியைப் படித்தவுடன் வேகமாக மூடினேன். புத்தகத்தை உடனே கைக்கெட்டாத தொலைவிலும் வைத்தேன்.
காரணம் நிச்சயமாக முதல் வகை சாதாரணப் புத்தகம் என்பதால் அல்ல. கடைசி சில பக்கங்களையோ, முதலில் இருந்தேவோ மீண்டும் படிக்க மனம் துணியாததுதான். -ஏன்? பிறகு கூறுகிறேன்.
கதையை எழுதியவர் மனித உரிமையாளர், வீரப்பனைப் பிடிக்க வந்த அதிரடிப்படையினால் ஒரு மலைக்கிராமத்துக்கு ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியது என்பதெல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரிந்துவிட்டதால், கதை அதிரடிப்படையினருக்கு எதிராகவும், வீரப்பனுக்கு ஆதரவாகவும்தான் இருக்கும் என ஒரு முன்முடிவு ஏற்படுவது தவிர்க்க இயலாதது. படித்த பின்னரே தெரிகிறது, "Beware of Preconceived notions" என்று "Failure Analysis"-இல் கூறுவது எவ்வளவு சரியானது என்று.
சோளகர் என்னும் பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் (தொட்டி), சில தலைமுறைகளுக்கு முன்னரும் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இல்லை - மதம் பிடித்த ஒற்றை யானைகளையும், பெருநரி (புலி)களையும் எதிர்த்து, மழை பெய்தால் விதைத்து, பெருந்தனக்காரர்களின் ஏமாற்றுக்குப் பலியாகி பழக்கப்பட்டவர்கள்தாம்.
ஆனால், பிறகு இவர்கள் சந்தித்த எதிரிகள் வேறு வகையானவர்கள். எப்போதோ ஒருமுறை கண்ணில் பட்ட சந்தனக் கடத்தல் கும்பலைப்பற்றி தாழ்ந்த குரலில் பயந்தபடி கிசுகிசுத்துக்கொள்ளும் சோளகர்களை, வீரப்பனுக்கு உணவு கடத்தும் கும்பல் எனச் சந்தேகிக்கும் அதிரடிப்படையினரை சந்திக்க நேரும்போது, அதிகாரபலம், ஆயுதபலம், ஆள்பலம் ஆகியவற்றின் பொருந்தாச் சமன்பாட்டால் சிதறிப்போகிறார்கள்.
"வீரப்பன் கொடியவன், கொலைகாரன், அதிரடிப்படை அவனை சூரசம்ஹாரம் செய்தது சரியான ஒரு முடிவே" என்னும் என் முந்தைய கருத்தை இந்த நூல் மாற்றிவிட வில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயங்களில் ஆசிரியர் எந்தக் கருத்தையும் கூறவும் இல்லை.
நகர நாகரீகத்தையும், அது தரும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மட்டுமே அனுபவிக்கும் மக்களுக்கு அதிரடிப்படையைப் பற்றிய குறைகளும், குற்றச்சாட்டுகளும் Blasphemy ஆகத்தான் தோன்றும் - அப்படித்தான் எனக்கும் தோன்றியது.
ஆனால், இந்நூலில் இருக்கும் Authenticity நடந்தது இதுதான் என வெளிச்சம் போடும்போது, அதை மறுக்க முடிவதில்லை. என் மனத்தளவில் இந்த நடவடிக்கைக்கு நானும் அளித்த ஆதரவும், இந்தக்கொடுமைகளைத் தடுக்க இயலமையும் என் மனத்தில் ஏற்படுத்திய குற்ற உணர்வுதான் இன்னொரு முறை படிக்காமல் தடுத்திருக்கிறது.
நீங்களும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
Oct 20, 2005
பெட்டிக்கடை
"என்ன கடைக்காரரே, பாத்து ரொம்ப நாளாகுது?"
"அது ஒண்ணும் இல்லே சார், வீடு மாத்தினேனா அதுலே கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சி"
"புதுசு புதுசா நெறய புத்தகம் தொங்க விட்டிருக்கியே - முன்னே எல்லாம் ஒரு நாலோ அஞ்சோதான இருக்கும்?"
"அதை ஏன் கேக்குறீங்க சார், ஏஜென்ட்டுங்க வரானுங்க, புது பொஸ்தவத்த குடுத்து இங்கே தொங்கவிடு, நாலு பேரு பாக்கட்டும்னு சொல்லிட்டு போயிர்ரானுங்க! பொஸ்தவம் வித்தா காசு அவனுக்கு, விக்காட்டி ரிட்டன்! எனக்கு இதிலே லாபமும் இல்லே நஷ்டமும் இல்லே. அதான் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டிருக்கேன்."
"அது சரிதான்பா, இதெயெல்லாம் தொங்க விட்டா பழைய புத்தகம் எல்லாம் தெரியாம மறைக்குது பார்."
"அதுக்கென்ன பண்ணறது சார். ஒவ்வொரு வாரமும் ஒரு நாலஞ்சு புது பொஸ்தவம் வருது, பழசப் படிக்கரவன் தேடியாவது படிப்பான் இல்ல? புதுசத்தான் தெரியறாப்பல வைக்கணும்."
"நீ பாட்டுக்கு புதுசு புதுசா தொங்கவிடு. நேத்திக்கு நம்ம வாத்தியார் வந்திருந்தார் - அவர் என்னா சொல்றாரு தெரியுமா?"
"நம்ம வாத்தியாரா? நல்ல மனுசனாச்சே - என்ன ஆச்சு சார்?"
"இங்கே தொங்கற புத்தகத்திலே எதோ அசிங்க அசிங்கமா எழுதி இருக்காம் - படிக்கர சின்னப் பசங்க கெட்டுப் போயிடுவாங்களாம்."
"அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்? அவன் பொழப்புக்கு ஏதொ எழுதி காசு பாக்கறான்."
"இருந்தாலும் விக்கிறது நீதான? அதுனாலதான் வாத்தியாருக்கு உன்மேல கோவம்!"
"நாந்தான் சொல்லிட்டேனே சார், இதுனால எனக்கு காலணா வருமானம் கெடையாதுன்னு.."
"அப்படி சொல்லி நீ தப்பிக்க முடியுமா? உன்னாலேதான் ஊர் கெட்டுப்போச்சுன்றாங்க எல்லாரும்!"
"அய்யய்யோ எனக்கு எதுக்கு சார் ஊர் பொல்லாப்பு. அந்த ஏஜென்டு கிட்டெ சொல்லிடறேன் - எல்லா பொஸ்தவத்தையும் ரிட்டன் எடுத்துகிட்டு போன்னு.."
"அப்படி சொன்னா எப்படி? எல்லா புக்குமா மோசம்? சிலதுதான் மோசம்."
"சரி சார். இதுவரிக்கும் என்ன பொஸ்தவம்னே பாக்கலே. இப்போ பாக்கறேன், எது எனக்கு பிடிக்கலையோ அத ரிட்டன் பண்ணிடறேன். சரியா?"
"அந்த ஏஜெண்டு கோவிச்சுக்கிட்டான்னா?"
"கடை என்னுது சார். என் கடையிலே நான் எனக்கு பிடிச்சதுதான் வைப்பேன். வேணும்னா அவன் வேற கடை தொறக்கட்டுமே, யாரு வேணாமுன்னாங்க?"
"சரி, படிச்சு பழகிப்போன மக்கள், நீ வேணாம்னு சொன்ன புக்கே வேணும்னு கேட்டாங்கன்னா?"
"இல்லேன்னு சொல்ல வேண்டியதுதான் - இருக்கறதப் படிங்கன்னு சொல்ல வேண்டியதுதான்.."
" ஆக, ஊர் மக்கள் எதப் படிக்கலாம், எதப் படிக்கக் கூடாதுன்னு நீ மட்டும் முடிவெடுக்கப் போறே!"
"இதுக்கு நான் வேற யாரை சார் கேக்க முடியும்? யாரையும்தான் எதுக்கு கேக்கணும்?"
"சரியான அராஜகப் பேர்வழிப்பா நீ!"
"என்ன சார், நீங்களே பிரச்சினய ஆரம்பிச்சுட்டு நீங்களே எனக்கு பட்டம் கட்டறீங்க ! ஹூம், நான் வாங்கி வந்த வரம் அது!"
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்
வகை புனைவு
Oct 17, 2005
சந்திரமுகி - அதிர்ச்சி வெற்றி!
சந்திரமுகி - வெள்ளி விழா கொண்டாடி விட்டது. இனிமேல் என் விமர்சனத்தால் படத்தின் வெற்றி வாய்ப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. (டேய்! அடங்க மாட்டே?)
இருந்தாலும், படம் பார்த்த புதிதில் தமிழ்மணமே சந்திரமுகி விமர்சனங்களால் நிரப்பப் பட்டிருந்தது. "ஒரு ரஜினி படம் கூட பார்க்க முடியாத" வர்களைப்பற்றிய கருத்துகளும், படம் பார்த்த போது ரசிகர் அடித்த விசில்கள், அமெரிக்காவிலும் ஸ்டார் கட்டிய செய்திகள் - இவையே பிரதானமாக இருந்தன. சுரேஷ் கண்ணனின் "சந்திரமுகியும் சாகடிக்கப்பட்ட யதார்த்தங்களும்" பொறாமைப் பார்வையாகத் திரிக்கப்பட்டது. தீவிர ரசிகரே ரிஸ்க் அனாலிஸிஸ் செய்தாலும் "தமிழணங்கி"ல் மாட்டிக்கொண்டார்.
இப்படிப்பட்ட சூழலில் பினாத்தல்களின் கருத்துக்கா மதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என அமைதியாய் இருந்துவிட்டேன்.
இப்போதோ படம் வெள்ளிவிழா கொண்டாடிவிட்டது. உலக சினிமாத் தர வரிசையில் அழிக்க முடியாத 23 ஆம் இடம் பெற்றுவிட்டது (இல்லைன்னு சொன்னா என்ன ஆவீங்க தெரியுமா?)
படத்தைப் பார்த்து, புகழ்ந்து விமர்சித்த அனைவரையும், படத்தை மறுபடி பார்க்க வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் விமர்சனத்தையும் மறுபடி ஒருமுறை படியுங்கள்:-)
எனக்கு பல காட்சிகளில், ஏன் அந்தப் பெரியவரை இப்படி வீணாகக் கஷ்டப் படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றியது. குறிப்பாக கொஞ்ச நேரம் பாடல்! நாயகியுடன் ரொமான்டிக்காக காட்சிகள் அமைக்க முடியாத (நல்ல வேளை!) தோஷத்தால் துர்காவை தர்கா என அழைக்கும் நகைச்சுவை! ஏன் தான் இப்படிப் பட்ட ஒரு இசை ஞானி (அத்திந்தோம் புகழ்) இசையை வெறுப்பவராக சித்தரிக்கப்படுகிறார்? அமெரிக்காவின் பிரபல நம்பர் ஒன் மனோதத்துவ நிபுணரின் குருவை மிஞ்சிய சீடன் ஏன் அவ்வளவு அவமானத்தையும் தாங்க வேண்டும்? சாதாரணமாகவே சிரிக்க வைக்கக்கூடிய வடிவேலுவும், பல படங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்த ரஜினியும் சேர்ந்து ஏன் இரட்டை அர்த்த நகைச்சுவையை நம்ப வேண்டும்?
படம் வந்த புதிதில், ப்லரும் வியந்த விஷயம் ரஜினி பாத்திரம் கதையைச் சுற்றி அமைக்கப் பட்டிருப்பது. எனக்கு கதையே எதைச் சுற்றி அமைக்கப்பட்டது எனத் தெரியவில்லை! கொக்கை பறக்க வைத்து, கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு, அண்ணனோட பாட்டையும் பாடி முடித்தபிந்தான் இயக்குநருக்கு ஐயையோ இன்னும் 15 நிமிடம் தான் இருக்கிறது என உறைத்து கதை பக்கம் பார்வையை செலுத்தியுள்ளார். அதற்கு முன், ஒவ்வொரு அஞ்சு நிமிஷத்துக்கும் ஒருமுறை அந்த அரண்மனையை ஐந்து ஆங்கிளில் பலத்த BGM உடன் காட்டுவதே கதைக்கு திரைக்கதாசிரியரின் கடமை!
ஜோதிகாவின் நடிப்பும் பெரிதாக சிலாகிக்கப் பட்டது! மறுக்கவில்லை. ஆனால், அதற்கு கொடுக்கப்பட்டதே 10 நிமிடங்கள்தானே!
எனக்குத் தெரிந்தவரை, சந்திரமுகியின் மாபெரும் வெற்றி, என்னைவிட, ரஜினிக்கும், வாசுவிற்கும், பிரபுவிற்கும் ஏன் ரஜினி ரசிகர்களுக்குமே பெருத்த அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள்
Oct 15, 2005
பசுவய்யா என்னும் கவிஞன் 15 Oct 2005
சுந்தர ராமசாமி என்னும் கதை சொல்லியின் இழப்பு பெரியதுதான்.
அதைவிடப் பெரிய இழப்பாக பசுவய்யா என்னும் கவிஞனின் மறைவு எனக்குப் படுகிறது.
தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் ஆரம்ப காலத் தூண்களில் முக்கியமானவர்; தமிழின் மிகச் சிறந்த புதுக்கவிதைகளில் சிலவற்றை கொடுத்தவர்; பல நாட்டுக் கவிதைகளையும் மொழி பெயர்த்து கவிச்சுவை குறையாமல் கொடுத்தவர்;
அந்த மகா கவிஞனுக்கு நம் அஞ்சலி!
பசுவய்யாவின் "எனது தேவைகள்"
கொஞ்சம் முகம் பார்த்து தலை சீவ ஒரு சந்திரன்
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று அசை போட ஒரு லாயம்
என் கையெழுத்துப்பிரதியில் கண்ணோட
முகங்கொள்ளும் ஆனந்தச் சலனங்கள்
நான் காண ஒரு பெண்
சிந்திக்கையில் கோத ஒரு வெண் தாடி
சாந்த சூரியன்
லேசான குளிர்
அடி மனத்தில் கவிதையின் நீரோடை.
ஞான ரதம் டிசம்பர் 1973
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 0 பின்னூட்டங்கள்
Oct 13, 2005
மழைக்காலம் 13 Oct 2005
கழுவப்பட்ட மரங்களில்
என் உலுக்கலுக்கான
செயற்கை மழை சேமிப்பு
முழுக்க நனைந்தபின்னே
நினைவு வரும் அம்மாவின் கண்டிப்பு
சேற்றின் ஊடே நான் மட்டும் அறிந்த விரைவுப்பாதை
தேங்கும் நீரின் அளவில்
விடுமுறை கணிக்கும் விஞ்ஞான நண்பன்
வீட்டுள் அடைக்கும்
மின் தடை பிறப்பிக்கும்
விநோத விளையாட்டுக்கள்
*****
நினைவெலாம் அழித்து
கார்மேகக் கூட்டத்தையும்
தூறலின் சுவட்டையும்
வியப்பாக்கிக் காட்டும்
பாலை வாழ்க்கை.
நுனிப்புல்லின் இந்தப் பதிவு உருவாக்கிய நோஸ்டால்ஜியா!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
வகை புனைவு
புது விளையாட்டு 13 Oct 05
ஒரு திருத்தம் (ஃப்ளாஷில்) செய்துவிட்டு ப்ளாக்கருடன் நெடிய போருக்குப் பின் வெற்றி!
ஃப்ளாஷ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் முதல் அமைச்சர் ஆகிவிடலாம்னு நெறய பேர் நெனைக்கிறாங்க. ஆனா அது எவ்வளவு கஷ்டம், எத்தனை தடைக்கற்களை எடைக்கற்களாக (ஓ ..படிக்கற்களாகவா.. சரி சரி.)மாத்தணும், எப்படி படிப்படியா காய் நகத்தணும்-ங்கறது பல பேருக்குத் தெரியறதில்லை.
எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும் விளையாட்ட சொல்லிக் கொடுத்தா கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது என்பது பினாத்தலின் அனுபவப் பாடம்.
இந்தப் பரம பதம் ஒரிஜினல் பரமபதம் போல இல்லை பாம்பு, ஏணி எல்லாம் கிடையாது. கொஞ்சம் மாடிஃபைடு! எப்படின்னா, சொக்கட்டானை உருட்டி, நீங்களே கால்குலேட் பண்ணி, சரியான கட்டத்துக்கு மேலே போயி க்ளிக் செய்யனும். அங்கே அந்தக் கட்டத்துக்கான நிகழ்வும் பலனும் இருக்கும். அதுக்குத் தகுந்தாப்போல, காய மேலேயும் கீழேயும் நகத்தணும்.
ஆடிப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க. இதே ஃபார்மட்லே வேறே சில விஷயங்களும் போடலாம்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 0 பின்னூட்டங்கள்
புது விளையாட்டு 12 Oct 05
ஒரு சின்ன திருத்தத்துடன் மீண்டும்:
ஃப்ளாஷ் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் முதல் அமைச்சர் ஆகிவிடலாம்னு நெறய பேர் நெனைக்கிறாங்க. ஆனா அது எவ்வளவு கஷ்டம், எத்தனை தடைக்கற்களை எடைக்கற்களாக (ஓ ..படிக்கற்களாகவா.. சரி சரி.)மாத்தணும், எப்படி படிப்படியா காய் நகத்தணும்-ங்கறது பல பேருக்குத் தெரியறதில்லை.
எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும் விளையாட்ட சொல்லிக் கொடுத்தா கஷ்டம் கஷ்டமாகவே இருக்காது என்பது பினாத்தலின் அனுபவப் பாடம்.
இந்தப் பரம பதம் ஒரிஜினல் பரமபதம் போல இல்லை பாம்பு, ஏணி எல்லாம் கிடையாது. கொஞ்சம் மாடிஃபைடு! எப்படின்னா, சொக்கட்டானை உருட்டி, நீங்களே கால்குலேட் பண்ணி, சரியான கட்டத்துக்கு மேலே போயி க்ளிக் செய்யனும். அங்கே அந்தக் கட்டத்துக்கான நிகழ்வும் பலனும் இருக்கும். அதுக்குத் தகுந்தாப்போல, காய மேலேயும் கீழேயும் நகத்தணும்.
ஆடிப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க. இதே ஃபார்மட்லே வேறே சில விஷயங்களும் போடலாம்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
Oct 11, 2005
கருத்துக் கணிப்பு முடிவுகள் 11 Oct 05
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் "பயிற்சி வகுப்பு நடத்துவது எப்படி?" என்னும் விரிவுரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான அம்சம் - "கேள்விகள் கேட்பது எப்படி?" அல்லது "கேள்விகளை எப்படி கேட்கக் கூடாது?".
தேர்ந்தெடுத்து பதில் சொல்ல வேண்டிய கேள்விகளில் முக்கியமான அம்சம், பதில்களில் கொடுக்கப் படும் விடைத்தெரிவுகள். சரியான பதில் என்பது இதற்குள்தான் இருக்கிறது என்று பதிலளிப்பவர்க்கு கேட்போர் விதிக்கின்ற கட்டுப்பாடு. பல சமயங்களில் இது சரியான முறையாக இருந்தாலும், சில நேரங்களில் பதிலளிப்போரின் சரியான எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியாமல் போகக் கூடிய சாத்தியக்கூறும் இதில் உண்டு.
ரொம்பக் குழப்பி விட்டேனா? சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பினாத்தல்களைப் பற்றிய தங்கள் மேலான கருத்து? இது கேள்வி.
இதற்கு விடைத் தெரிவுகளாக:
1. சுமார்
2. பரவாயில்லை
3. நன்றாக இருக்கிறது
4. சூப்பர்
5. அதி அற்புதம்
எனக் கொடுத்தால், பினாத்தல்களை முற்றும் வெறுக்கின்ற நபரும், "சுமார்" ஐத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.
இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதால், கருத்துக் கணிப்பு என்பது ஒரு வகை விளம்பர உத்தியாகவும் செயல்படும். நீங்களும் இப்படிப்பட்ட சில விளம்பரக் கணிப்புகளைச் சந்தித்திருக்கலாம்.
அல்லது,விடைத்தெரிவுகளை இப்படியும் அமைக்கலாம்.
1.சுமார்
2.குப்பை
3.தாங்க முடியவில்லை
4.திராபை
5.தேறாது
இப்படி அமைத்தால், விரும்புகிற நபரும் சுமார்-ஐத்தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். விளம்பரத்தில் போட்டி தயாரிப்பைப் பற்றிய கேள்விகள் இப்படி வடிவமைக்கப் படும்!
எனக்கு விளம்பரம் செய்யும் நோக்கம் இல்லாததால் இந்த இரு அதீதங்களும் இல்லாமல் என் கேள்விகளைத் தயாரிக்க முயற்சித்தேன்.
72 பேர் பங்கு பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இப்போது கேள்வி வாரியான கருத்துகளைப் பார்ப்போம்.
1. பினாத்தல்களைப் பற்றிய தங்கள் மேலான கருத்து?
இதன் முடிவாக "போக வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப இருக்கு" என்பதைத்தான் எடுத்துக் கொள்கிறேன். அதற்காக உழைக்கிறேன்.
தேறாது எனத் தெரிவு செய்த 4% அன்பர்கள், காரண்த்தையும் எழுதி இருக்கலாம்.
2.பினாத்தல்களில் தங்களுக்குப் பிடித்த பதிவு வகை?
நான் நினைத்த படியே நையாண்டிக்குத் தான் மவுசு! இங்கேயும், எதுவுமே பிடிக்கலை என்ற 7% அன்பர்கள் ஏன் பிடிக்கவில்லை எனக் கூறி இருக்கலாம்.
3. பினாத்தல்களைப் பற்றித் தாங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள்?
அனாவசியமான கேள்வி. இருந்தாலும், எனது போன்ற வலைப்பதிவுகளுக்கு தமிழ்மணம் செய்யும் சேவை இதன் மூலம் தெளிவாக எல்லாருக்கும் தெரியட்டும்.
4. பினாத்தல்கள் எவ்வாறு தொடர வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?
என் அனுபவப் பதிவுகளுக்கும் வரவேற்பு இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கூடிய விரைவில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயல்கிறேன். இதிலும், தொடரத்தான் வேண்டுமா என 2% வேறு காரணங்கள் கூறாமல் தெரிவு செய்திருக்கின்றனர்.
பங்கு கொண்ட 72 பேருக்கும், ஆரம்பித்து முடிக்காமல் போன 35 பேருக்கும் பார்க்க மட்டுமே செய்த 32 பேருக்கும் நன்றி!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 1 பின்னூட்டங்கள்
Oct 9, 2005
பினாத்தல் - வருடம் ஒன்று
ஒரு வருடமாகிறது.. நான் எழுதியவையையும் பதிக்க ஒரு தளம், படிக்க சில மனிதர்கள், உதவிட, ஊக்கிட, வாழ்த்திட பல நெஞ்சங்களின் அறிமுகம், தொலை பேசி இலக்கியம் கதைக்கும் அளவிற்கு சில நண்பர்கள், என் வாழ்வின் முதல் முறையாக அடுத்தடுத்து இரு போட்டிகளில் முதல் பரிசுகள், நட்சத்திர அந்தஸ்து ஒரு வாரத்திற்கு, என் வாழ்வின் முதல் பல ஆண்டுகள் சாதிக்காதவற்றை இந்த ஒரு ஆண்டில் சாதித்ததாக ஒரு பிரமை!
என்னை மேம்படுத்த இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
சிலருக்கு( குழலி ஆனந்த் பின்னூட்டத்திலேயே கூறியபடி) காரணமாக இந்த கருத்துக் கணிப்பு சரிவரத் தெரியாததால், பதிவுக்குள்ளே இருந்த கருத்துக் கணிப்பை வெளியே தள்ளி விட்டேன்.
இப்போது, இங்கே க்ளிக்கினால், நீங்கள் கருத்துக் கணிப்பில் பங்கு பெற இயலும்.
Click Here to take the survey
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள்
Oct 8, 2005
எங்கள் வீட்டுக் கொலு
நாங்களும் இந்த முறை கொலு வைத்திருக்கிறோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
கொலுவிற்கு முன்னேற்பாடாக ஊரிலிருந்து பொம்மையே கொண்டு வராத காரணத்தால், இங்கேயே கிடைத்த சைனா பொம்மைகளை வைத்து மூன்று படி ஒப்பேற்றி இருக்கிறோம்.
படி வாரி விவரங்கள்
முதல் படி - சாமிகளும் ஆசாமிகளும் - அம்மன் கலசம், நேயர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான வினாயகர், ஒட்டகம் மேய்த்த களைப்பாறும் பெடோ, நமது சின்னம் "வாத்து"க்கள்
இரண்டாம் படி - உலகம் பெரியது -கரடிகள், சைனப் பேரழகி, ஈஃபில் டவர், உலக உருண்டை
மூன்றாம் படி - வயிற்றுக்கும் சிறிது - பழங்களும் சில மிருகங்களும்..
இந்தப் படத்தில் அதிகப்படியாக உள்ள இரு பொம்மைகளின் விருப்பத்திற்காகவே கொலு!
பி கு சில நாட்களாகவே என் பதிவுக்கு வழக்கமான அளவிற்கு பின்னூட்டங்கள் வருவதில்லை. ப்ளாக்கர் பின்னூட்டத்தில் ஏதும் பிரச்சினை இருந்தால் உங்கள் கருத்துக்களை sudamini at gmail dot com க்கு எழுதவும்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
வகை அனுபவம்
Oct 6, 2005
ப ம க வின் போராட்ட அறிவிப்பு 06 oct 05
துபாய், 06 அக்டோபர் 2005
ப ம க
வலைப்பதிவு மக்களின் முன்னேற்றத்தைக் காரணம் காட்டி வெகு வேகமாக வளர்ந்து வரும் கட்சி பச்சோந்தி மக்கள் கட்சி. இதுவரை எந்தத் தேர்தலிலும் பங்கு பெறவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான அறிக்கைகள் வெளியிட்டு, உலகளாவிய முறையில் பல தொண்டர்களையும் பெற்று வரும் கட்சி இது.
போராட்டம்
இதன் மூத்த இணை துணைப் பொதுச் செயலாளர், அஞ்சாசிங்கம், புரட்சிப்பினாத்தலார் அவர்கள் நமது பத்திரிக்கைக்கு அளித்த சிறப்புப் பேட்டி பின் வருமாறு:
கே:நீங்கள் ஏன் திடீரென போராட்டத்தில் குதிக்கிறீர்கள்?ப: ப ம க கொண்ட கொள்கைக்காக உயிர்விடக் கூடிய கோடானு கோடித் தொண்டர்கள் கொண்ட கட்சி என்றாலும், அறவழியிலேயே கட்சி நடாத்தி வந்திருக்கிறோம்.
என்றபோதிலும், நடுநிலையற்ற ஏடுகளும் தொலைக்காட்சிகளும் எங்கள் கட்சியைக் குறித்து செய்திகள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.
மயிலிறகை வைத்து மார்ச் மாத சூரியனை மறைத்துவிட முடியுமா?கோழிகள் கூடி கோவிலின் புனிதத்தை குறைத்துவிட முடியுமா?
தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் காக்க எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க சித்தமாக இருக்கிறோம் என்பதை இந்த உலகிற்கு வெளிக்காட்டவே போராட்டத்தில் குதிக்கிறோம்.
போராட்டம்
கே: எதற்காக இந்தப் போராட்டம்?
ப: தமிழுணர்வு உள்ள எவனும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிடத் துணிந்திட மாட்டான். நீங்கள் ஆங்கிலப் பத்திரிக்கையிலிருந்து வருவதால் விளக்கமாகச் சொல்கிறேன்.
இற்றைத் தினம், சூரியத் தொலைக்காட்சியிலே கோலங்கள் என்ற பெயரிலே ஒரு மெகாத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதில், தீபா வெங்கட் எனும் நடிகை ஏற்கும் கதாபாத்திரம், தன் திருமணத்திற்கு முன்பாகவே சூலுற்றிருப்பதாக கதை சொல்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நாம் கண்டோ கேட்டோ இராத அசிங்கங்கள் இத்தொடர் மூலமாக அள்ளித் தெளிக்கப்படுகின்றன என்றால் அது மிகை ஆகாது.
ஒருத்திக்கு ஒருவன் (கவனிக்கவும் - ஒருவனுக்கு ஒருத்தி அல்ல), கற்புடைப் பெண்டிரைக் கோவிலாகவே கருதி வரும் தமிழ்நாட்டில் இப்படிப் பட்ட அவலங்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?
கோரிக்கைகள்
கே: போராட்டத்தின் கோரிக்கைகள் யாது?
ப: 1. கோலங்கள் தொடரின் பெயரை அலங்கோலங்கள் என மாற்றிவைக்க வேண்டும்.
2. அந்தக் கதாபாத்திரம் இந்தி பேசுவதாக மாற்றவேண்டும்.
3. இன்னும் சில பாகங்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரத்தை உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி அந்தப் பகுதியை முடித்து வைக்க வேண்டும்.
கொடும்பாவி
கே: இந்தப் போராட்டத்தை எவ்வாறு நடத்தப் போகிறீர்கள்?
ப: முதலில் கொடும்பாவி எரித்தல், இந்தியாவின் எல்லா மூலைகளிலும் உள்ள 275 நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்தல் என அறவழியில் நடத்தவே முயற்சிப்போம்.
அவ்வாறு முடியாத நிலையில், ஸ்பானர்கள், சுத்தி, ஸ்க்ரூ ட்ரைவர்கள் ஆகியவற்றை விகடன் தொலைக் காட்சி நிறுவனத்தின் முன் காட்டி பணியவைப்போம்.
உதிர்வது நாமாக இருப்பினும் வளர்வது தமிழ்ப் பண்பாடாக இருக்கட்டும்.
தலைவர்
கே: போராட்டத்திற்கு தலைவரின் ஒப்புதல் இருக்கிறதா?ப: தலைவருக்கு இப்போராட்டத்தைப் பற்றி இன்னும் தெரியாத நிலையிலும், இதற்கு எதிராகக் கருத்து கூறும் அளவிற்கு தமிழ் உணர்வு இல்லாதவர் அல்ல எங்கள் தலைவர்.
இவ்வாறு புரட்சிப் பினாத்தலார் அறிவித்தார்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
Oct 4, 2005
First.. கண்ணா.. First - republished
அம்ருதாஞ்சன், டார்டாய்ஸ் போன்ற பொருள்களின் பெட்டிக்குள்ளே 22 மொழிகளில் ஒரு செயல் விளக்கம் இருக்கும்.. தீவிர புத்தக நேசர்களே தவிர்க்கும் அந்த அச்சடித்த காகிதத்தின் சர்குலேஷன் அம்ருதாஞ்சன் விற்பனைக்கு சமம்!
Fair & Lovely, sachet shampoo போன்ற உள்ளிட்ட பல பொருள்களின் உதவியோடும் சன் TVயின் இடையறாத விளம்பரங்கள் -- சாதித்துவிட்டது - ஒரு மில்லியன் சர்குலேஷன்..
நான் குங்குமம் வாங்கி படித்த யாரையும் நேரில் பார்த்ததில்லை.. நீங்கள் பார்த்ததுண்டா?
தொடரட்டும்-- இவர்களின் இலக்கிய (?!) சேவை!
அடுத்த வாரம் குங்குமம் - Preview:
டாப் டென் ட்ராலி பாய்ஸ் - அவர்கள் வாங்கும் சம்பள விவரம்.
ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பா?
கலைஞர் எழுதும் "மஞ்சள் துண்டு" காவியம்.
குங்குமம் - போயிங் இணைந்து வழங்கும் வாரம் ஒரு எலிகாப்டர்.
இது மட்டுமல்ல-- அரை கிலோ சர்ஃப், சக்தி மசாலா வழங்கும் கங்காரு கறி மசாலா, மற்றும் விண்டோஸ் 3.1 Installation Diskette.
தாங்க முடியலடா சாமி!
*******************************************************************
இந்தப் பதிவு, நான் வலை உலகிற்கு வந்த புதிதில் (20 Oct 2004) பதிந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பா?
யாருக்கும் தோன்றும் முன்னரே, தெரியும் முன்னரே தன் ஞானக்கண்ணால் கிசுகிசுக்களை அறியும் திறன் படைத்த பி. சுரேஷ் பற்றி தங்கள் கருத்து யாது?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
வகை நக்கல்
Oct 2, 2005
சத்திய சோதனை 02 Oct 05
சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் மறுக்கப்படும்போதுதான் தெரியவரும் என்கிறது தமிழ் வட்டத்தின் இந்தப் பதிவு.
சில நாடுகளில் இன்னும் இரண்டாம் நிலைக் குடிமகன்களாகவே மதிக்கப் படுகிறோம் என்ற எண்ணம் நம்மில் பலருக்குண்டு. குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் குடியுரிமை பெற்றோருக்கும், முதல் தலைமுறை புலம் பெயர்ந்தோருக்கும் உள்ள சட்ட ரீதியிலான இடைவெளியை சந்திக்க நேரும்போதெல்லாம் கேட்க நேரும் வார்த்தைகள் இவை,
இருப்பினும், 1895 - 1900 காலகட்டத்து இங்கிலாந்து ஆளுகைக்குட்பட்ட இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் நிலைமையை சத்திய சோதனை மூலமாக அறிந்துகொள்ளும் போதுதான் இன்றைய நிலைமையின், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தம் புரிகிறது. தலைப்பாகை கட்டுவதிலிருந்து, தெருவில் நடப்பது, முதலாம் வகுப்பில் பயணம் செய்வது, வேலைக்கு தலைவரி கட்டவேண்டியது என எல்லா நிலைகளிலும் காட்டப்பட்ட ஆளுமை வெறி, நிற வெறி ஆகியவற்றைப் படிக்கும்போதே கடந்த ஒரு நூற்றாண்டில் மனிதகுலம் எவ்வளவோ சாதித்திருக்கிறது என்பது தெரிகிறது.
இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கலாம் - ஆனால் அதையும் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் மனதுள் துளிர்க்கிறது.
என் மனதில் பட்டதை எந்தத் தயக்கமும் இல்லாமல் கூற வாய்ப்பளித்தோரில் முக்கியரான மஹாத்மா காந்திக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 2 பின்னூட்டங்கள்