Mar 24, 2007

கிரிக்கெட்!

ஏன் இந்த ஒப்பாரி? பெர்முடாஸ் பங்களாதேஷைத் தோக்கடிச்சு ரன்ரேட்ல இந்தியா சூப்பர் 8க்குள்ளே வர முடியாதா? அப்புறம் டெண்டுல்கர் கங்குலி ட்ராவிட் சேவக் தோனி போன்ற நம் வீரர்கள் முனைப்பா இருந்து வேர்ல்டு கப்பு கொண்டுதான் வரமுடியாதா? வேர்ல்டு கப் ஜெயிக்கறதுக்கு இந்த டீமை விட்டா வேற எந்த டீமால முடியும்?
 
ஆனா, இந்த டீம் சூப்பர் 8 போனா, ரஜினி சொன்னா மாதிரி ஆண்டவனாலகூட கிரிக்கெட்ட காப்பாத்த முடியாது!
 
வேர்ல்டு க்ளாஸ் பேட்டிங், 9ஆம் நம்பர் வரைக்கும் லைன் - அப், சாதகமான ஆடுகளம் எல்லா எழவும் இருந்து இப்படிக் கேவலமா தோத்ததைப் பார்க்கும்போது என் மேலேயே எனக்குக் கோபம் வருது!
 
மாஸ்டர் ப்ளாஸ்டர், யாராலயும் தாண்டமுடியாத ரெக்கார்டுகளுக்குச் சொந்தக்காரர், காமிக் ஹீரோ, ப்ராண்டு அம்பாஸடர்!!! ஸ்ட்ரெய்ட்டா வர பாலை டிபண்ட் பண்ண முடியாம க்ளீன் போல்டு ஆவறாருன்னா யாரைத் திட்டறது? கொண்டாடின நம்மையா? குழிபறிச்ச அவரையா?
 
பங்களாதேஷ்கிட்டயும் பெர்முடாகிட்டயும் வெறுத்துப்போற அளவுக்கு கட்டைபோட்ட கங்குலிக்கு 24ஆவது பால்லேயே ப்ரஸ்ட்ரேஷன் - 5 க்கு பக்கத்தில ஆஸ்கிங் ரேட் இருக்கும்போது - ஏன் வருது? ரெண்டு பிப்டி அடிச்சா டீம்லே இடம் உத்தரவாதம்ன்ற தெனாவட்டுதானே?
 
ஸ்லிப்புலே ஆள்வைக்கிறேன், பாத்துக்கப்பான்னு சொல்லிட்டு அரவுண்ட் த விக்கெட் வந்து முரளி போட்டா, உன் ஆசையக் கெடுப்பானேன்னு அழகா அவர் ஆசைக்கு ஏத்த மாதிரி லாலிபாப் கேட்ச் கொடுத்து அவுட் ஆனவருக்கு கேப்டன் சிபாரிசாம்!
 
4 விக்கட் போயிடுச்சு, ரன் முக்கியமில்ல, விக்கட்டைக் காப்பாத்தறதுதான் முக்கியம்ன்ற நேரத்துல ரெண்டு வயசுக்குழந்தைக்குக் கூட தெரியும் ரன் அவுட் ஆகக்கூடாதுன்றது. அப்படி ரன் ஆவறவரு இன் ஃபார்ம் பேட்ஸ்மேனாம்!
 
எதிராளிங்க பயப்படுவானுங்களாம், பீல்டு செட் பண்ணவே முடியாதாம்.. முதல் பால்லே எல்பிடபிள்யூ ஆவறவருக்கு இவ்ளோ பில்ட் அப்பு!
 
மட்டமா ஆடினாங்கன்றது அண்டர் ஸ்டேட்மண்டு! வண்டை வண்டையா வாயில வருது. எழுத்துன்றதால கஷ்டப்பட்டு அடக்கிகிட்டு இருக்கேன்!
 
இந்தியாவின் இத்தனை வருஷ பர்பார்மன்ஸோட ஒரு க்ராஸ் செக்ஷன் இந்த வேர்ல்டு கப் மேட்சுங்க!
 
மூணு மேட்ச் ஆடி ரெண்டுல கேவலமா தோத்தாலும், மிச்சம் ஒரு மேட்சில டோட்டல் ரெக்கார்டு என்ன, சிக்ஸர் ரெக்கார்டு என்ன, தனிப்பட்ட ரெக்கார்டு என்ன!! இதையேதான் இத்தனை வருஷமா பண்ணி பேப்பர் புலிங்களா உலாவிகிட்டு ஊரை ஏமாத்திகிட்டு திரியறானுங்க!
 
ஆனா, பல நல்லது நடந்திருக்கு!
 
பல ஸ்பான்ஸர்களுக்கு கோடிக்கணக்குல நஷ்டம்! இனி இவனுங்க கிட்ட வரதுக்கு யோசிப்பானுங்க..
 
படிக்கற புள்ளைங்க ஒழுங்கா படிப்பைப்பாக்க போவாங்க!
 
டிவிகாரன், பெட்டிங் பார்ட்டிங்க எல்லாருக்கும் பெரிய அடி! தேவைதான்.
 
கிரிக்கெட் எங்க ரிலிஜன், டெண்டுல்கர் எங்க கடவுள்னு பேனர் காமிச்ச முட்டாள் இப்ப நாஸ்திகனாயிருப்பான்!
 
 
 
 
 

Mar 18, 2007

சர்வேசன் போட்டிக்கதை :-)

"எழுந்திருடா"

"இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சி எழுப்பேண்டா"

"பஸ் விட்டுடுவோம்.. கிளம்புடா"

"என்னடா டீ இது.. பூனை மூத்திரம் மாதிரி? சூடா கொடுக்க மாட்டானா அந்த
லூஸு? மூணு ரூபா வாங்கறானில்ல? சும்மா விடப்போறதில்லை அவனை! ஏறர ஏறுலே
அவன் ஆப் ஆயிடணும் இன்னிக்கு"

"சரிதான். அவன் டீ கொண்டுவந்துவச்சு 30 நிமிஷம் ஆச்சு. சூடாவே
இருக்கறதுக்கு பிளாஸ்க்கா வாங்கிக் கொடுத்த?"

******

"எட்டு அஞ்சுதானடா ஆச்சு? அதுக்குள்ளே கிளப்பிட்டான்.. அவனுக்கு கொழுப்பு
அதிகமாப் போச்சு. இன்னிக்கு ஆபீஸ் போனவுடனே பெர்சனல்லே போட்டுக் கொடுத்து
அவன் சீட்டைக் கிழிச்சாதாண்டா என் மனசு ஆறும்."

"உன் வாட்ச முதல்ல ரைட் டைமுக்கு செட் பண்ணு. எட்டேகால் ஆச்சு!
போட்டுக்கொடுத்தே.. உன் சீட்டுதான் கிழியும்"

*******

"லேட்டா வந்ததுக்கு என்னை மட்டும் பிடிச்சு ஏறறான் அந்த மேனேஜன். நேத்து
விக்கி எத்தனை மணிக்கு வந்தான் தெரியுமா? பதினொண்ணரை! அவனை மட்டும்
சும்மா விட்டுட்டான். அவனுக்கு இன்னிக்கு ஆப்பு வைக்கிறேன்."

"விக்கிக்கா? நேத்து அவன் ஆப் டே லீவு. லெட்டர் முந்தாநேத்தே
கொடுத்துட்டான். வேலை சீக்கிரமா முடிஞ்சு பதினொண்ணரைக்கே வந்ததுக்கு அவனை
பாராட்டதான் செய்வாங்க!"

******
"பசிவேளைலே இவ்வ்ளோ பெரிய க்யூவில சாவடிக்கிறாங்க! ஒரு ப்ளேட் வெஜ்
பிரியாணி கொடுப்பா"

"சார், பிரியாணிக்கு அந்த க்யூவில நிக்கணும். இந்தக் க்யூ தோசை சப்பாத்தி
மட்டும்தான்"

"ஏன்யா, இவ்ளோ நேரம் நிந்தவன் என்ன லூஸா? எந்த க்யூ எதுக்குன்னு
எழுதிவைக்க மாட்டீங்க? கம்ப்ளெயிண்ட் புக் எடுப்பா, உங்களைச் சும்மா
விடறதில்ல!"

"சார், அங்க தெளிவா எழுதி ஒட்டியிருக்கே, படிக்கத் தெரியாதா? வந்துட்டாரு
கம்ப்ளெயிண்ட் எழுதறதுக்கு!"

******

"சார் எழுந்துருங்க"

"ஏன் சார் தூங்கறவனை எழுப்பறீங்க? ரிட்டன் பஸ்லே தூங்கறதுகூட தேசத் துரோகமா?

"லேடீஸ் சீட்லே உக்காந்திருக்கீங்க சார். நிர்மலா மேடம் உக்கார இடமில்லாம
நிக்கறாங்க, நீங்க பின்சீட்டுக்குப் போயிடுங்க."

"ஏன் அவங்க பின் சீட்லே உக்கார மாட்டாங்களாமா?"

"பின்சீட்லே ஏற்கனவே ரெண்டுபேர் இருக்காங்க சார். நீங்கதான் அட்ஜஸ்ட் பண்ணனும்"

******

"சினிமாவாடா இது? திராபை! அந்த டைரக்டர் மட்டும் என்கையில மாட்டினான்"

"என்னடா காலைலேருந்து எவன்கூடவாவது சண்டைக்கே அலைஞ்சுகிட்டு இருக்கே?"

"பின்ன என்னடா.. ராத்திரி மூணுமணி வரை முழிச்சி மேட்ச் பாத்தா
பன்னிப்பசங்க தோத்துட்டு நிக்கறாங்க! அவனுங்க மேல இருந்த கோபத்தை
எங்கயாவது இறக்கலாம்னு பாத்தா இன்னிக்குன்னு ஒரு பய மாட்லேடா!"

"சரி நிம்மதியா தூங்கு. நாளைக்கு மேட்ச்லே ஜெயிச்சுடுவாங்க"
****

Mar 5, 2007

ஆமாங்க - நீங்க கேள்விப்பட்டது உண்மைதான் (05 Mar 2007)

நான் இல்லை என்று வாதாடியிருக்கலாம். ஆனால் உண்மை சொல்ல முடிவெடுத்துவிட்டேன்!

வேறு ஒரு பதிவில் நான் எழுதியவற்றைப் படித்து மன உளைச்சல் அடைந்திருக்கும் சக வலைப்பதிவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆமாம். சென்னைக் கச்சேரி பதிவில், வலைக்கிரிக்கெட் அணியைப் பற்றி இகழ்ச்சியாக எழுதியிருந்தது, வலைப்பதிவர்கள் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை என்ன உப்புக்கருவாடு கூட வெல்ல முடியாது என்று எழுதியது நானேதான். என் மெயில் எனப்போடப்பட்டிருந்ததை நான் மறுத்திருக்க முடியும்.. ஆனால் உண்மை சொல்ல வேண்டுமே!

ஏன் அப்படி எழுதினேன்? வலைப்பதிவர்களை விடுத்து வேறு பிரபலங்களை அணியில் சேர்த்தால் காமெடிக்கு வசதியாக இருக்கும் என்பதால்தான். பதிவுலகில் நீங்களெல்லாம் சூப்பர் ஸ்டார்கள்தான். ஆனால் கோப்பை வெல்ல இன்னும் சிலத் தகுதிகள் தேவையாக இருப்பதாக கருதியதால் பிரபலங்களை அழைத்து வர நேரிட்டது.

அப்பதிவின் (இப்பதிவுக்கும்) நோக்கம் நகைச்சுவை மட்டுமே என்பதால் என்னை மன்னித்து விடுவீர்கள் தானே?

 

blogger templates | Make Money Online