May 31, 2007

சிவாஜி முழுப்படம் டவுன்லோடு லின்க்

இந்தப்பதிவு இன்னும் 1 மணிநேரம் மட்டுமே இருக்கும். அதன்பிறகு தூக்கப்படும். ஏன் அவ்வாறு செய்கிறேன் என்பது உங்களுக்குப்புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
 
சிவாஜி படம் ரிலீஸ் ஆக இன்னும் 15 நாள் உள்ள வேளையில், என் நண்பர் இந்த லின்க்கை எனக்கு அளித்திருக்கிறார். இதில் கொத்தனார் உப்புமா செய்வது பற்றிய பதிவை எழுதியிருக்கிறார் :-)))))))))))))))))))))))))))))
 
வெள்ளை எழுத்துக்களாலும், 160ஐக்கடந்த பின்னூட்டங்களாலும், அதில் நான் கொடுத்த உப்புமாக்குறிப்புகள் அடியில் போய்விடக்கூடாதே என்று தனிப்பதிவாக ஆக்கியிருக்கிறேன்.
 
**********************************************************************************************
இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!!
 
தேவையான பொருள்கள்:
 
  1. கணினி -1
  2. மானிட்டர்- 1
  3. கீபோர்டு - 1
  4. இ கலப்பை - 1
  5. லதா எழுத்துரு - 1
  6. இணைய இணைப்பு - குறைந்தது 256 KBPs
  7. ப்ரவுஸர் - 1
  8. நையாண்டி - தேவையான அளவு
  9. கிண்டல் - தேவையான அளவு
  10. அறிவுபூர்வமான அணுகல் - 0.000000%
 
செய்முறை:
 
  1. தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்
  2. அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.
  3. திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்
  4. இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்
  5. பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.
  6. பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப்பார்க்கவும்.
  7. பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது!
  8. மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்
  9. இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்
 
ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!
**************************************************************************************** 
 
இப்போ பாருங்க, இந்த இடுகை உப்புமா விதிகளை முழுமையா மதிச்சு எழுதப்பட்டிருக்கு. இன்னிக்கு ஹாட் டாபிக் சிவாஜி, டவுன்லோடு லின்க் எனத் தேடப்போறவங்க ஏராளம். முதல் 255 கேரக்டர்களைப்பாருங்க.. எதாவது கிவ் அவே இருக்கா? ஆனா அத்தனையும் மீறி, பினாத்தல் ன்றதால நம்பிக்கை இல்லாமத்தான் நுழைஞ்சுருப்பீங்க.. அதுக்கு காரணம், இந்த மாதிரி மேட்டர்லே நான் உப்புமா தவிர வேற எதும் கிண்டறதில்லைன்ற எக்ஸ்பீரியன்ஸ்தான்.
 
நம்பகமான உப்புமா செய்யணும்னா, ஒன்னு ரெண்டு முறை நீங்க நம்பகமான பதிவுகளைப் போடணும். உப்புமா நல்ல உணவுதான், ஆனா அதுவே டயட் ஆகிட்டா, விளையாட்டுக்குக்கூட யாரும் உங்க பதிவு பக்கம் ஒதுங்க மாட்டாங்க.
 
எனவே, இப்பவும் வந்தவர்களை ஏமாத்தக்கூடாது என்பதற்காக டவுன்லோடு லின்க் தரேன்.
 
2 தொழில்நுடபக்கலைஞர்களின் 4 மணிநேர உழைப்பில், 5 திர்ஹம்கள் செலவில் தயாரிக்கப்பட்ட ஒளிப்படம் சிவாஜியின் டவுன்லோடு லிங்குகள்:
 
 
 
 

May 28, 2007

கலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ் (28 May 2007)

கலைஞர் டிவி ஆகஸ்ட்டில் தொடங்குகிறதாம். நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகிறதாம். எல்லாத் தேர்வுகளுக்கும் கோனார் நோட்ஸ் இருக்கும் இக்காலத்தில், டிவியில் பணிபுரிவோருக்கு மட்டும் இல்லாதது பினாத்தலாரை உறுத்த, அவர் தயார் செய்தேவிட்டார், முதல் பகுதியை.

எப்படிப்பட்ட கேள்விகளை எதிர்பார்க்கலாம், அவற்றுக்கு எப்படிப்பட்ட பதில்கள் பொருத்தமாக அமையும் என்ற இந்த நோட்ஸைப்படித்து தேர்வைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம்.

கேள்விகள்:

1. இவற்றுள் எதை தலைப்புச் செய்தியாகப் போடலாம்?

1. தமிழ்நாட்டில் பெருமழை
2. தமிழ்நாட்டில் சாதிக்கலவரம்
3. தமிழ்நாட்டிற்கு புதுத்திட்டங்கள் அறிவிப்பு
4. உதகையில் மலர்க்கண்காட்சி.

பதில்:

நான்குமே தலைப்புச் செய்தியாகப்போட தகுதி வாய்ந்ததுதான்.

1. தமிழ்நாட்டில் பெருமழை, நமது கட்சி ஆளுங்கட்சியாக இருந்தால் - விவசாயிகள் மகிழ்ச்சி என்று உபசெய்தி தரலாம். எதிர்க்கட்சியாக இருந்தால், சாலைகள் பழுதானது, மக்கள் அவதி என உபசெய்தி தரலாம்.

2. தமிழ்நாட்டில் சாதிக்கலவரம் - நமது கட்சி எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டுமே போடலாம். ஆளுங்கட்சியாக இருந்தால், 4 - உதகையில் மலர்க்கண்காட்சி தலைப்புச் செய்தியாக போடலாம்.

3. புதுத்திட்டங்கள் அறிவிப்பு, இது நமது கட்சி தமிழகத்தில் மட்டும் ஆளுங்கட்சியா, மத்தியிலும் ஆளும் கூட்டணியா என்பதைப்பொறுத்தது. இரண்டில் ஏதாவது ஒன்றாக இருந்தாலும் போடலாம். ஆனால், எப்படிப்பட்ட புதுத்திட்டங்கள் என்பதைப் பொறுத்தும் அமையும்.

4. பதில் 2-ஐப்பார்க்கவும்.

2. இவற்றுள் எந்தத் தொடரை எப்போது ஒளிபரப்பலாம்?

1. பாசப்பிணைப்பு
2. கலையரசி
3. உடுக்கையாத்தா
4. அறிவியல் அறிவோம்

பதில்:

1. பாசப்பிணைப்பு என்ற தொடர், 7 பெண் கதாபாத்திரங்களைக்கொண்டது, அனைவருக்கும் ஒரு காதல், அது தோல்வியடைந்து வேறொருவனைக் கைபிடித்தால் அவனுடைய காதலி / தாய் இவர்களை டார்ச்சர் செய்கிறார் என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்டது, பிரபல நிறுவனம் தயாரித்து, மார்க்கெட் இல்லாத முன்னாள் நடிகைகளால் நடிக்கப்படுகிறது. இதன் சரியான ஒளிபரப்பு நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 1030 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை உள்ள நான் - ப்ரைம் ஸ்லாட். குடும்ப ஸ்திரீக்கள் பார்க்கும் நேரம்.

2. கலையரசி - அரசியலிலும் பிரபலமாக உள்ள கலைக்குடும்ப வாரிசு தயாரிக்கும் தொடர். திடுக்கிடும் திருப்பங்களைக்கொண்டது - எனவே, இயக்குநர் உள்பட யாருக்கும் என்ன கதை என்றே தெரியாது. பாஸ்ட் பீட்டில் டைட்டில் சாங், மாதாமாதம் மாறும் இயக்குநர்கள் கொண்டது. வேறு வழியில்லை, இதற்கு இரவு 9 மணிக்கு ப்ரைம் ஸ்லாட்தான் தந்தாகவேண்டும். குடும்ப ஸ்திரீக்கள் மட்டுமன்றி, வேலை செல்லும் ஸ்திரீக்களும் வீட்டில் வந்து செட்டிலாகிவிடும் நேரம்.

3. கொஞ்ச நாள் மார்க்கெட்டில் இருந்த பழைய நடிகை நோன்பும் விரதமும் இருந்து நடிக்கும் அம்மன் சீரியல். பல வித்தியாசமான குணம் உள்ள அம்மன்களையும் (கோடு போட்டால் தாண்டமாட்டார், பச்சைப்புடவை கட்டினால் அருள்பாலிக்க மாட்டார், ஒரு ஊரைத்தவிர மற்றொரு ஊரைப்பார்க்கமாட்டார்), அதைவிட வித்தியாசமான குணங்களைக் கொண்ட கதாநாயகிகளையும் (அம்மன் பக்தி இருந்தாலும் அடிக்கடி கோவித்துக்கொள்வார்), உலகையே ஆள எண்ணும் வில்லன்களையும் கொண்ட பக்தித் தொடர்(?!). இதற்குச் சரியான நேரம் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம். இளவட்டங்கள் சினிமா பார்க்கப்போய்விட்டதால் பெரிசுகள் மட்டுமே வீட்டில் இருக்கும் நேரம்.

4. இப்படி ஒரு தொடரை ஒளிபரப்பவேண்டிய அவசியம் என்ன? சரி, தலைமை உறுதியாக சொல்லும் பட்சத்தில், பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 1 மணியிலிருந்து 1.10 வரை ஒளிபரப்பலாம்.

3. புதுப்பொலிவுடன் என்றால் அர்த்தம் என்ன?

பதில்:

பல அர்த்தங்கள் உண்டு. டி ஆர் பியில் விழுந்துவிட்ட சீரியலை ஸ்பான்சரோ, டைரக்டரோ நடிகர்களையோ மாற்றி, இப்பவாவது பாருங்களேன் எனச் சொல்லவைக்கும் முயற்சி.

4. ஒரு ஹிட்டான தமிழ் சினிமாவை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?

பதில்:

என்னென்னவோ செய்யலாம். கொத்துக்கறி போட்டு, இப்படி பல நிகழ்ச்சிகள் நடத்தலாம்:

1.பாடல் காட்சிகளை வைத்து - புதுப்பாடல், மனதில் நின்ற ராகம், ---இசையமைப்பாளரின் ராகங்கள், __ பாடகரின் and / or பாடகியின் பாடல்கள், ___நடன இயக்குநரின் கைவண்ணங்கள், நீங்கள் கேட்ட பாடல், போன்மூலம் கேட்ட பாடல், லெட்டர் எழுதிக்கேட்ட பாடல் என்று ஒரு 100 ஆப்ஷன் இருக்கிறது.

2.நகைச்சுவைக்காட்சிகளை வைத்து - காமடி ப்ரோக்ராம், நகைச்சுவைக்காட்சி, என்றும் சிரிப்பு, மறுபடியும் சிரிப்பு, சிரிப்போ சிரிப்பு என ஒரு 100 ஆப்ஷன்.

3. சண்டைக்காட்சிகளை வைத்து சூப்பர் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், ______ சண்டைக்காட்சி நிபுணரின் பேட்டி என பல ஆப்ஷன்கள்

4. செண்டிமெண்ட் காட்சிகளை வைத்து சூப்பர் காட்சிகள், படப்பார்வை, திரைக்கண்ணோட்டம் என பல ஆப்ஷன்கள்.

5. எல்லாக்காட்சிகளையும் வைத்து டாப் டென் பாடல், டாப் டென் படங்கள், டாப் டென் சண்டை, டாப் டென் காமெடி, டாம் டென் செண்டிமெண்ட் என விளம்பரம்.

6. ஆடி அடங்கியபின், தொலைக்காட்சியிலேயே முதல் முறையாய் என இதுவரை காட்டி இராத 2ஏ சீன்களையும் சேர்த்து முழுப்படம்.

7. விடுமுறை இல்லாத வார இறுதிகளில் மீண்டும் இதே படத்தை மீண்டும் மீண்டும் காட்டலாம்.

இவ்வாறாக, இரண்டரை மணிநேரப்படத்தை வைத்து, 2500 மணிநேரம் ஏர்டைம் செலவழிக்க முடியும்.

5. மக்கள் பேச்சு அரங்கம் நடத்த வேண்டியவரின் தகுதிகள் யாவை?

பதில்:

1. பேசினால் சிரிப்பு வருமோ இல்லையோ, பார்த்தாலே சிரிப்பு வரவேண்டிய ஆளாக இருத்தல் அவசியம்.

2. சோகமான நிகழ்வுகளைப்பார்த்தால் மூன்று மில்லிசெகண்டுகளுக்குள் கண்ணிலிருந்து நீர் வரவேண்டும்.

3. உண்டி குலுக்கிய அனுபவம் இன்றியமையாதது.

4. சார் சார் என்று கூப்பிடுவோரை ஊக்குவித்தல், பழைய சினிமாப்பாட்டுக்களை பாடுவோரை ஊக்குவித்தல், விவாகரத்து ஜீவனாம்சம் பற்றிப்பேசும் நான்கு வயதுக்குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல், அரைலாஜிக் அழகேசன்களுக்கு தனியிடம் கொடுத்தல் ஆகியவற்றைத் திறம்படச் செய்தல் அவசியம்.

5. உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், இயற்கைச்சூழல்களால் பாதிக்கப்பட்டோர், இவற்றில் யாருக்கு முன்னுரிமை கொடுத்து அழுவது என்பதில் தெளிவு வேண்டும்.

-----------------------------------------------------------------------------

இப்போதைக்கு இவ்வளவுதான். அடுத்த பகுதி எழுதும் அளவுக்கு விஷயம் சேர்ந்தால் வரும்.

May 24, 2007

உங்கள் இடுகைகளைச் சூடாக்க வேண்டுமா? (24 May 07)

ஒவ்வொரு வேலைக்குமே ஒரு தொழில் நுணுக்கம் உண்டு. அந்தத் தொழில் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் விளக்கினாலும், நம்முடைய தொடர்ந்த பயிற்சியினால் எதையும் சாதிக்கலாம்.
 
இப்போது தலைப்பில் உள்ளது போல சூடான இருகைகளைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாமா?
 
கைகள் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
 
பிறகு வலதுகைச் சுண்டுவிரலோடு இடதுகைச் சுண்டுவிரலை இணையுங்கள்.
 
அதேபோல் வலதுகைப்பெருவிரலோடு இடதுகைப் பெருவிரலையும் இணையுங்கள்.
 
மற்ற விரல்களையும் இணையுங்கள்.
 
இப்போது பரபரவென்று தேயுங்கள்.
 
சிறிது நேரம் அவ்வாறு தேய்த்தவுடன் இரு கைகள் சூடாகி இருப்பதைக் காணலாம்.
 
********************
 
பி கு 1: இந்த தட்டச்சுப்பலகையில் Rஉம்  Tயும் அருகருகே இருப்பதால் நேர்ந்த எழுத்துப்பிழைதான் தலைப்பு. கொத்தனார் ஏற்கனவே புலம்பிட்டார் இதைப்பற்றி.
 
பி கு 2: கஷ்டப்பட்டு போட்டு ரெண்டே நாளிலே சிவாஜி விமர்சன சாப்ட்வேர் பார்ப்பவர் இன்றி தூங்குகிறது. அதைப்பார்த்து கருத்து சொல்லுங்கள்.
 
பி கு 3: மேட்டர் இல்லாதவனுக்கு உப்புமாவே கைகண்ட மருந்து.

May 21, 2007

சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!! (21 May 2007)

1024 என்றால் என்ன என்று கேட்டிருந்தேனே, இதோ அதற்கு விளக்கம்.

விமர்சனம் எழுதுவதற்கு படம் வெளியாகியிருக்கத் தேவையில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. நம்முடைய முந்தைய முடிவுகளும், விருப்பு வெறுப்புகளும்தான் விமர்சனமாக வெளிவருகிறது எனும்போது,
அப்படி ஒரு விமர்சனம் எழுத ஒரு பில்டர் (Builder)செய்யத்துணிந்தேன்.

இந்த ப்ளாஷை 5 நாள் முன்பே தயாரித்துவிட்டிருந்தாலும், படம் வெளிவரை வெறும் டீஸர் மட்டும் கொடுக்கலாம் என்றே ரிஸர்வில் வைத்திருந்தேன். ஆனால், படம் வெளிவருவதில் அரசியல் உள்பட பல சிக்கல்கள் - அவர்களுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக நான் ரிலீஸ் செய்துவிடுகிறேன் :-)

உங்கள் முன்கருத்துக்களைத் தெரிவு செய்தால், உங்கள் விருப்புக்கேற்ற சிவாஜி விமர்சனம் திரையில் வரும், அதை காபி பேஸ்ட் செய்துகொள்ளவேண்டியதுதான்.

விமர்சனம் மட்டுமல்ல, மதிப்பெண் போட்டு, விமர்சன பஞ்ச் லைனும் கொடுக்கும் என் சாப்ட்வேர்.

பாருங்க, பாருங்க பாத்துகிட்டே இருங்க. உங்களுக்கு கிடைத்த முடிவையும் மதிப்பெண்ணையும் பின்னூட்டமாகப் போட்டுவிடுங்கள்.

May 19, 2007

லக்கிலுக்கின் பாசிசவெறியும் 1024ம்.

லக்கிலுக் என்ற பதிவரின் பாசிச வெறி வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அவரை
விமர்சித்து நான் போட்ட பின்னூட்டத்தை இன்னும் அனுமதிக்காமல் இருப்பதன்
மூலம் தன் பாசிச வெறியைக் காட்டிவிட்டார்.

அனானி ஆட்டம் போடும் பதிவுகள் என்ன, வாரிசு, ஆட்சி செயல்பாட்டிலிருந்து
எல்லாவற்றையும் விவாதிக்கும் களம் என்ன என்று பதிவுகள் பக்கமேதான்
இருக்கிறார் - இருந்தாலும் என் பின்னூட்டம் மட்டும் வெளியிடப்படவில்லை!

அப்படி நான் போட்ட பின்னூட்டம்தான் என்ன?

அவருடைய சிவாஜி விமர்சனத்தில்தான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்:

**************
தம்பி லக்கிலுக்,

நல்ல முயற்சி.

ஆனால் 1 பெரிதா 1024 பெரிதா என்ற கேள்வியைக் கேட்க பினாத்தலார் தயாராகிவிட்டார்.

1024 என்பது என்ன?

2 பவர் 10-ஆ
4 பவர் 5 ஆ
ஒரு கிலோபைட்டில் உள்ள பைட்டுகளா?

பொறுத்திருங்கள் - இன்னும் மூன்று நாட்கள்.

(விளம்பரத்துறையில் பணிபுரிவதால் இந்த டீஸரை அனுமதிக்கத் தயங்கமாட்டாய்
என்றே நம்புகிறேன்.
*************

ஆனால் நடந்தது என்ன?

பின்னூட்டம் எழுதி சுமார் 10 மணிநேரத்துக்கு மேலாகியும் இன்னும்
அனுமதிக்கப்படவில்லை.இது தூங்கும் நேரம், வார இறுதி, கணினிக்கு அருகில்
செல்லவில்லை என்ற சப்பைக்கட்டுகளை பினாத்தல் குழு ஏற்காது!

ஏன் இந்தப் பாசிச வெறி?

எனக்கும் ஒரு வலைப்பூ உண்டு, அதில் இந்த விளம்பரத்தைப் போட்டுக்கொள்வேன்
- அடக்கிவிடமுடியாது என்பது தெரியாதா?

உப்புமா கிண்டியது போதும், இப்ப யோசிங்க!

1024 என்றால் என்ன? இங்கே பாருங்கள்!

May 15, 2007

நம்பிக்கை - சிறுகதை (15 May 2007)

சட்டைப்பையில் இருந்த செல்போன் முனகி நான் இருக்கிறேன் எனக் காட்டியது.
எடுத்துப்பார்த்தால் பேட்டரி பவர் குறைவாம். இந்த சனியன் பிடித்த போனை
முதலில் தலைமுழுக வேண்டும். அவனவன் கேமரா MP3 என ஜிகினா
காண்பித்துக்கொண்டிருக்க என் கையில் மட்டும் ஆதிகால செல்போன்.
கருப்பு-வெள்ளையில் ஆறுமாதம் மட்டுமே ஓடும் பேட்டரி. பேசினால் ரெண்டு
புள்ளி குறைந்துவிடும்.

இதில் மிஸ்டு கால் வேறு. ரம்யாதான். வேறு யார் எனக்கு மிஸ்டு கால்
கொடுக்கப்போகிறார்கள்? சார்ஜரில் போனைச் சொருகி ரம்யாவை அழைத்தேன்.

"யப்பா! 2 மணிநேரம் கழிச்சு கால் பண்றியே" என்றாள்.

"நீ பேசியே இருக்கலாமில்ல? நான் கொஞ்சம் வேலை பார்த்துகிட்டிருந்தேன்.
இப்பதான் மிஸ்டு கால் பாத்தேன்"

"நான் எப்படி பேச முடியும்? என் வீட்டு நிலைமை தெரியுமில்ல?"

"எல்லாம் சரிதான். எனக்கு மட்டும் என்ன கோடிகோடியாவா கிடைக்குது?"

"பணம் பேச்சு எடுக்காத! அப்புறம் நீ டல்லா ஆயிடுவே, எதுவும் பேச முடியாது"

"சொல்லு. வேற என்ன விஷயம்?"

"நேத்து எதிர்வீட்டு ராமசாமி நம்மளைப் பார்த்திருப்பானோன்னு பயந்தோம்
இல்ல? அவன் பாக்கலை போலிருக்கு. இன்னிக்கு அப்பாகிட்ட 2 மணிநேரம்
கதையடிச்சுகிட்டிருந்தான், இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லல. பாத்திருந்தா லீவு
போட்டு வந்து போட்டுக்கொடுத்திருப்பான். அவங்கபேசும்போது எனக்கு திக்கு
திக்குனு இருந்திச்சு"

"அந்த சோடாபாட்டிலா? அவனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது. அவனப் பாத்து
ஏன் பயப்படறே?"

"எவ்ளோ நாள்தான் கோபி இப்படியே ஓட்ட முடியும்? அப்பாகிட்டே வந்து பேசு!"

"இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. இப்ப மூணு அப்ளிகேஷன் போட்டிருக்கேன்.
எதாவது ஒண்ணு க்ளிக் ஆனா உடனே வந்துடறேன்"

ஞாபகம் இருக்கும்போதே போன் செய்துவிடலாம். அப்ளிகேஷன் போட்டால் மட்டும்
போதாது. பாலோ-அப்பும் செய்யவேண்டும்.

"ஹலோ, மிஸ்டர் சிவப்பிரகாசம் இருக்காருங்களா?"

"நான் தான் பேசறேன். கோபிதானே?"

"ஆமாம் சார்"

"உன் ஞாபகம் எனக்கு இருக்குப்பா. நீ போன் பண்ணவேண்டிய அவசியமே இல்லை. ஒரு
சின்ன ப்ராப்ளம், அதான் உன் வேலை முடியாம இழுத்தடிக்குது"

"ப்ராப்ளமா சார்?"

"பெரிசா ஒண்ணும் இல்லை, இப்ப என் கம்பெனியில ஓவர்ஸ்டாப்னு சொல்லி
ரெக்ரூட்மெண்ட் நிறுத்தி வச்சுருக்காங்க. எச் ஆர் கிட்ட பேசி ஸ்பெஷல்
பர்மிஷன் வாங்கணுமாம். அந்த ஆள் வெளிநாடு போயிருக்கான். வந்தவுடனே
முடிச்சுடறேன். உனக்கு வேலை நிச்சயம், கவலைப்படாதே"

"எப்ப சார் அவர் திரும்பி வருவார்?"

"இன்னும் ரெண்டு வாரத்தில வந்துடுவார்"

ரெண்டு வாரம் ஒத்திப்போட்டுவிட்டார். அதுவரை இவரிடமும் பேசமுடியாது.

சரி கொஞ்சம் வேலையாவது பார்க்கலாம்.

"முத்து, இங்கே ஒரு டவுட்டுப்பா.. தகராறுக்கு எந்த ர முதல்லே வரும்?"

"சின்னத் தகராறுன்னா சின்ன ர போடு, பெரிய தகறார்னா பெரிய ற போடு"

"கடிக்காதே. நீதானே இங்கே தமிழ்ப்புலவர்"

"ஐஸெல்லாம் வேணாம். சின்ன ர முதல்லே அடுத்து பெரிய று."

காபிக்கான இடைவேளை நேரம் வரை வேலை முழுங்கியது. நேரத்தை நினைவுபடுத்தியது
அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு.

"தம்பி, தரகர் வந்திருந்தாருப்பா"

"என்ன சொல்றாங்களாம்?"

"15க்கு குறைவா ஒத்துக்கமாட்டாங்களாம். இவர் எவ்வளவோ பேசிப்பாத்துட்டாராம்"

"15ஆ! தங்கம் விக்கிற விலையிலே 10க்கே நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு
உனக்குத் தெரியாதாம்மா?"

"5 பவுனுக்காக பாக்கவேணாமுன்னு சொல்றாருப்பா இவரு. இதைவிட நல்ல வரன்
கிடைக்கறது கஷ்டம்!"

சிவப்பிரகாசம் கம்பெனியில் வேலைகிடைத்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம்.

"சரி பாக்கறேன். வேற எதுவும்?"

"சின்னவன் ஸ்கூலுக்கு வரச்சொல்லியிருக்காங்க, முடியுமா?"

"மறுபடியும் வம்பு வலிச்சிருக்கானா? இதுக்காக எல்லாம் கிராமத்துக்கு
வரமுடியாதும்மா. சனிக்கிழமை வர்றதே சந்தேகம்"

"சரி நான் பாத்துக்கறேன். நீயும் உடம்பைப் பாத்துக்கப்பா"

சலிப்பாக இருந்தது. எத்தனை கவலைகளைத்தான் தாங்குவேன்? ரம்யா வீட்டுக்கு
போகவேண்டும் என்ற நினைப்பே பயமுறுத்தியது. இதில் தங்கை தம்பி
பிரச்சினைகள்.

ஆனால், நம்பிக்கை இருக்கிறது. சிவப்பிரகாசமோ அல்லது மிச்சம் ரெண்டு பேரோ
யாராவது கண்திறந்தால் எல்லாம் சரியாகிவிடும். கவலையைப் புறம் தள்ளினேன்.

"முத்து, கேண்டீன் வர்றயா?"

ஏசிக்காக அடைத்திருந்த கதவைத் திறந்தபிறகுதான் ஏதோ தீயும் வாசனை மூக்கை
அடைந்தது. வெளியே சத்தமும் அமளியும். பெரிய ற வாகத்தான் தெரிந்தது. எதோ
பிரச்சினை. ஓடிவிடலாமா என்ற யோசனை பூர்த்தி அடைவதற்குள் பத்து குண்டர்கள்
உள்ளே நுழைந்தார்கள்.

"என் தலைவனையா கேவலப்படுத்தறீங்க?" என்று குண்டாந்தடியை ஓங்க,

நான் பார்த்த கடைசிக்காட்சி அதுதான்.

May 14, 2007

தமிழக அரசியல் - அவசரக்கோலங்கள் (14 May 2007)

தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்கியது தவறு என்பதே என் கருத்து.

கருத்துக்கணிப்பில் ஆரம்பித்து, இன்று வரை நடந்துள்ள அனைத்துச்
சம்பவங்களுமே அள்ளித் தெளித்த அவசரக்கோலமாகவே நடந்து வந்திருக்கிறது.

முதிர்ச்சி என்பதை எங்கேயும் பார்க்கமுடியவில்லை.

அவசர அவசரமாக இப்படி ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டு, ஆட்டத்திலேயே
இல்லாத கனிமொழியையும் அழகிரியையும் வெறுப்பேற்றியது முதல்
முதிர்ச்சியின்மை.

அடுத்தது மதுரை வெறியாட்டம் - கட்சி ரீதியாக முடிவெடுத்து,
அமுக்கப்பட்டிருக்கவேண்டிய விஷயத்தை பெட்ரோல் பாம் வரை கொண்டு சென்று
பிரம்மாண்டமான விஷயமாக்கி, திரும்பப்பெறமுடியாத விளைவுகளை உண்டாக்கியது -
இரண்டாவது முதிர்ச்சியின்மை. நாளையோ மறுநாளோ மாறன் குடும்பமும் கலைஞர்
குடும்பமும் சமாதானமாகிவிடலாம் - அரசியலில் இது நடக்காது என்று சொல்ல
யாரால் முடியும்? ஆனால் அந்த மூன்று உயிர்கள்? சேதமான பொது,
தனிச்சொத்துக்கள்? யார் பொறுப்பு அதற்கு? ஏற்கனவே இந்த விவகாரத்தில் சன்
அடக்கி வாசிக்க ஆரம்பித்து அவர்களுக்கு நீதி முக்கியமில்லை, அரசியல்
நிலைதான் முக்கியம் என்று தெளிவாக்கிவிட்டது.

மூன்றாவது சிறுபிள்ளைத்தனம் தயாநிதி மாறனுடையது - பிரச்சினைகள் வரும்
போகும். கட்சியின், அரசின், தலைவரின் ஒரு முக்கியமான விழாவுக்கு அண்ணனைத்
திட்டியதால் போகாமல் இருந்தது. இன்னும் அதிகமாக இதில் பிரச்சினையைக்
கிளறிவிட்டது விமான நிலைய வரவேற்பு. அமைச்சர் என்ற ஹோதாவில் விமானநிலையம்
சென்று பிரதம மந்திரியை வரவேற்பாராம், ஆனால் கட்சி / அரசு விழாவில்
பங்கேற்க அழைப்பு எதிர்பார்ப்பாராம்!

அடுத்தது 50 ஆண்டு சட்டசபை அனுபவம் வாய்ந்த தலைவரின் குழந்தைத்தனம் -
தயாநிதி மாறனை மந்திரியாக்க நினைத்தபோது எண்ணித் துணியாததால், இப்போது
விளைவுகள் ஏற்பட்டு துணிந்தபின் எண்ணி, உடன்பிறப்புக்களின், மகன்களின்
சொல்கேட்டு தயாநிதியை நீக்க முடிவு செய்த மூடத்தனம். வேறெந்தப்
பிரச்சினையின்போதும் இல்லாத அளவுக்கு மதுரையில் வெறியாட்டம் நடக்கும்போதே
யார் காரணம் என்பது பொதுமக்களுக்குத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்ட
நிலையில், சன் டிவிமீதும் தயாநிதி மாறன்மீதும் நடவடிக்கை எடுப்பது அவரின்
பிள்ளைப்பாசத்தைத் தெள்ளெனக்காட்டும், மடிந்த மூன்று உயிர்கள் மீது
அவருக்குத் துளியும் அக்கறையில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் என்பதெல்லாம்
அவருக்குத் தெரியாதா? இருந்தாலும், முதிர்ச்சியற்ற முடிவை கேட்பார்
பேச்சைக் கேட்டு எடுக்கிறார்.

இப்படிப்போனால், தயாநிதி அதிமுகவில் இணையும் அடுத்த சிறுபிள்ளைத்தனமான
நிகழ்வும் நடக்க வாய்ப்பில்லை எனச் சொல்லமுடியுமா? ஷார்ட் டெர்ம்
கெயினுக்காக அதையும் செய்யக்கூடியவர்கள்தான் நம் அரசியல்வாதிகள்.

அதிமுகவில் இணைகிறார் தயாநிதி?

இதை ஒரு பெரிய அதிர்ச்சித் தலைப்பாகத்தான் யோசித்தேன். இந்தப்பதிவுக்கு
இதைத் தலைப்பாக வைத்து, வழக்கமான ஏமாற்றுவேலை செய்து மக்களை வரவைக்கலாம்
என்றும் யோசித்தேன்.

பிறகு சில நண்பர்களிடம் பேசும்போதுதான் தயாநிதியின் ஊட்டி பயணத்தையும்,
ஊட்டியில் அதிமுக தலைமை இருப்பது பற்றியும் அறிந்தேன். நடக்கவே
சாத்தியமற்ற ஒன்று என நான் நினைத்தது நடக்க எல்லா சாத்தியக்கூறுகளும்
இருக்கிறது என்று தெரிந்ததால்..

நெஞ்சு பொறுக்குதில்லையே--இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்!!!!!!!!!!!!!!!!!!!!!

May 13, 2007

சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06) republish

ஓராண்டுக்கும் முன் எழுதிய பதிவு, இன்றைக்கும் பல இடங்களில் பொருத்தமாய்
இருப்பதால் இந்த மீள்பதிவு.

சன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா? (05 Mar 06)

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சந்தேகத்துக்கு இடமின்றி முதலிடம்.
எப்படிப்பெற்றது என்பதற்கு தூர்தர்ஷனின் அரசாங்க
சோம்பேறித்தனத்திலிருந்து சுமங்கலி கேபிள் விஷனின் அத்துமீறிய உதவிகள்,
தொலைத்தொடர்புத்துறையின் நெருங்கிய தொடர்புகள் என எந்தக்காரணம்
இருந்தாலும் முதலிடம்தான், அதை மறுக்க முடியாது.

பெற்ற முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஊடகங்களின் அடைபட்ட சுழற்சியில்
சுலபமே. (நிறைய பேர் பார்க்கிறார்கள் - அதிக விளம்பர வருவாய் - அதிக
செலவில் நிகழ்ச்சிகள் - நிறைய பேர் பார்க்கிறார்கள்--)

சாதாரண நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, செய்திகளில் கூட தமிழ்த்
தொலைக்காட்சிகளில் சன்டிவியே அதிகப் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது (TRP).

பெரும்பான்மைத் தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கும் செய்திகளும் வழங்குவதால்,
அரசிய்லிலும் மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்க வேண்டிய சன் டிவி, திமுக
கூட்டணிக்கு பெரிய பலவீனமே என்றே நான் கருதுகிறேன்.

சன்டிவி திமுக கட்சியின் பிரச்சார பீரங்கியா? இதை ஒரு அடிமட்ட திமுக
தொண்டன் ஒத்துக்கொள்வானா? கலைஞர் தவிர்த்து சன்டிவியில் காட்டப்படும்
திமுக (இரண்டாம் நிலை) தலைவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
மு க ஸ்டாலினையே எப்போதாவதுதான் கண்டுகொள்கிறார்கள் எனும்போது,
துரைமுருகனும், பொன்முடியும் புலம்பிப் பிரயோஜனமில்லை.

தயாநிதி மாறனின் அனைத்து நிகழ்ச்சிகளும் காட்டப்படும்போது கலைஞர்
பங்குபெறாத மாநில மாநாடுகளும் ஒருவரிச்செய்தியாகவும் இடம்பெறாமல் போவதை
திமுக தொண்டர்கள் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற
நிகழ்வுகள், திமுக ஒரு குடும்பக்கட்சி மட்டும்தான் என்ற தோற்றத்தை
கடைநிலைத் தொண்டனுக்கும் ஏற்படுத்தி விடுவதால், கட்சி உணர்வு குறையத்தான்
செய்யுமே அன்றி கூடப்போவதில்லை.

கூட்டணிக்கட்சிகளைப் பொறுத்தவரை, சன்டிவி வைகோ மனத்தில் ஒரு ஆறாத
வடுவாகவே இருந்து வந்திருக்கிறது. அணி மாறிய நேற்றைய செய்திகளில் வைகோ
2002-இல் பேசியது, 2004-இல் பேசியது என்று அடுக்கி 15 நிமிஷம்
காண்பித்தையெல்லாம், அந்த 2002இலும் 2004-இலும் அரை நிமிஷம்
காட்டியிருந்தால் கூட அவரைத் திருப்தி செய்திருக்க முடியும். (கூட்டணி
மாற்றம் இதனால்தான் என நான் கூற வரவில்லை)

பா ம க வின் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சந்தித்த, சந்திக்கும் மிகப்பெரிய
கேள்வி - சன்டிவியை மட்டும் ஏன் தார் பூசாமல் விட்டுவைத்திருக்கிறீர்கள்
- நிச்சயம் அவர்களுக்கு சன்டிவியால் தர்மசங்கடம்தான்; அவர்களின்
கொள்கைக்கு பின்னடைவுதான்.

சன் செய்திகளுக்கு, விளையாட்டுச் செய்திகள் என்றாலே சச்சின் மட்டும்தான்
(சமீப காலமாக சானியா மிர்ஸா). அதேபோல, ஜெயலலிதாவைத் திட்டாத வரையில்
காங்கிரஸ் என்றால் சோனியா மட்டும்தான். அதுசரி, காங்கிரஸில் வேறு யார்
பெயரைத் தெரிந்துவைத்டுத்தான் என்ன ஆகப்போகிறது?

சரி கட்சிகளை விட்டுவிடுவோம், சாதாரண, கட்சி சாராத பொது மக்களைப்
பார்ப்போம். (என்னைப்போன்ற ஒரு ஜந்து). மதுரை மாவட்டத்தில் டி
கல்லுப்பட்டிக்கு அருகிலிருக்கும் சிற்றுரில் தண்ணீருக்காக மக்கள்
(சுமார் 5 பேர்) திடீரென (சன் காமெராவைப்பார்த்ததும்) சாலை மறியலில்
ஈடுபட்டதை செய்தி என்றே வைத்துக்கொள்வோம்.. இதனால் மதுரை மாவட்டம்
முழுவதும் பரபரப்பு நிலவியது எனும்போது, அந்த ஊருக்கு அருகிலேயே
இருக்கும் எனக்கு ஏன் பரபரபரப்பு வரவில்லை என்ற கேள்வி என் மனத்தில்
எழாதா? நிஜமான போராட்டத்துக்கும் நிஜமான பரபரப்புக்கும் மரியாதை
குறைந்ததுதான் மிச்சம்.

கலைஞர் கைது விவகாரம் நிச்சயமாக ஒரு அனுதாப அலையாக உருவெடுத்திருக்க
வேண்டிய விஷயம். ஆனால் அந்த 2 நிமிட ஒளித்துணுக்கை இதுவரை குறைந்தபட்சம்
2000 முறையாவது ஒளிபரப்பி செய்திகளுக்கு முன் காண்பிக்கப்படும் கடிகாரம்
ரேஞ்சில் ரிபீட் செய்து அந்த அஸ்திரத்தைப் பயனிழக்கச் செய்ததுதான்
நடந்தது.

மொத்தத்தில், ஒரு பிரம்மாஸ்திரமாக இருந்திருக்கவேண்டிய சன்டிவி, முனை
மழுங்கிய குண்டூசியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

உங்கள் கருத்து?

May 11, 2007

சற்று பின் செய்திகள் flash on flash news (11 May 2007)

இப்போது எம்பெட் செய்தாகிவிட்டது. பார்த்து கருத்து சொல்லுங்கள்.

கொஞ்சம் ஊகப்பிசாசுக்கு வேலைகொடுத்து ஊடகங்கள் என்ன செய்யும் என்று
நினைத்து செய்த ப்ளாஷ்:

May 9, 2007

மாறன்ஸ் சொந்த செலவில் சூன்யம்?

கருத்துக்கணிப்புகளுக்கு பெரிய ஆதரவில்லை என்பது ஏற்கனவே தெரிந்த
விஷயம்தான். Lies, Bigger Lies and Statistics என்பதும் பெரும்பாலான
படித்தவர்களுக்கு புதிய விஷயமும் அல்ல.

எத்தனை பேர், எந்தச் சூழலில் எந்த இடத்தில் யாரால் கேள்வி
கேட்கப்பட்டார்கள்,கேள்வி கேட்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் பலநிலைகளிலும்
கட்சிகளிலும் உள்ளவர்களா? கேள்வித்தாள் எத்தகையது, leading & loaded
கேள்விகள் நிறைந்தனவா? என்பதைப்பற்றி இந்த கருத்துக்கணிப்புகள் மூச்சு
விடவில்லை. பிறகு அது உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாய் இருந்தால்தான் என்ன,
பினாத்தலார் ஸ்டைல் கருத்துக்கணிப்பாக இருந்தால்தான் என்ன?
நம்பத்தகுந்தது கிடையாது - அவ்வளவுதான்.

ஆனால் சன் குழுமம் தொடங்கிவைத்துள்ள மக்கள் மனசு, இப்படிப்பட்ட
விஷயங்களெல்லாம் தெரிந்தவர்களைக் குறிவைத்து அல்ல, gullible பொதுமக்களை
நோக்கித்தான் எனும்போது, குறைந்தபட்சம் சில மனங்களையாவது மாற்றக்கூடிய
சக்தி வாய்ந்ததே.

வெற்றி பெற்றிருக்கும், கொஞ்சம் .. ஏன், நிறையவே அவசரப்பட்டுவிட்டதால்
கருத்துக்கணிப்பு சொ செ சூ வாக முடிந்திருக்கிறது.

மத்திய மந்திரிகளில் சிறந்தவர் என்ற கருத்துக் கட்டமைப்பை இன்னும்
கொஞ்சநாள் கழித்து, பாமக வெளிப்படையாக முறைத்துக்கொண்டு போனபிறகு,
செய்திருக்கலாம். அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் தயாநிதியைக் காட்ட
விரும்பியதால் அன்புமணியைக் குறைகூற வேண்டி வந்திருந்தாலும் அப்போது
பிரச்சினையாக ஆகியிருக்காது. திமுக கூட்டணியிலேயே ராஜா, வேலு போன்ற
மந்திரிகளை யாருக்கும் தெரியாது என்று நிரூபித்தாவது சுயபிரதாபம் தேவையா?
இப்போது டாக்டர் முறைத்துக்கொண்டு நிற்கிறார். ஏற்கனவே இருக்கும்
பிரச்சினைகளுக்கு நடுவில் இந்த எரியும் தீயில் எண்ணெய் தேவைதானா?

அதைவிட சூப்பர் சொ செ சூ இன்றைய கலைஞருக்குப் பிறகு யார்!

மு க ஸ்டாலின் 70%, மற்றவர்கள் - 20%, கருத்தில்லை -6%, கனிமொழி - 2%,
அழகிரி -2% ஆம்! அதிலும் சென்னை மக்களில் கருத்தில்லாதவர்களே இல்லை,
ஆனால் மு க ஸ்டாலின் 68%, மற்றவர்கள் -இங்கே டிவி பார்ப்பவர்கள்
அதிகமாச்சே 31%, கனிமொழிக்கு போனா போகுது 2% அழகிரியைச் சுழிச்சாச்சு!

இந்த மற்றவர்கள் -- யாராக இருக்கும் என்பதை ஊகிப்பவர்க்ளுக்கு
எந்தப்பரிசும் கிடையாது :-)

இதைவிட சிறந்த சொ செ சூ இருக்கவே முடியாது. இந்தக் கணிப்பை நமது எம்ஜிஆர்
செய்திருந்தால் (ஒருவேளை அதை மக்கள் படித்தும் இருந்தால் :-), இதைச்
சிறந்த பிரித்தாளும் சூழ்ச்சி எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் சன் குழுமமே
செய்ததால் இதை சொ செ சூ தவிர வேறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

மருந்துக்குக் கூட குடும்பம் சாராதவர்கள் யாரும் இல்லை என்பதை திமுக
தொண்டன் கவனிக்க மாட்டானா?

வேறு யாரையும் தேர்ந்தெடுக்க உதவுமாறு கேள்விகளே இல்லையா - மல்டிப்பிள்
சாய்ஸ் தேர்ந்தெடு ரேஞ்சில் வைத்துவிட்டார்களா?

குடும்ப அரசியலைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்ட ஆட்சி மைனாரிட்டியாக
இருக்கும் நேரமா பார்க்கவேண்டும்?

இதைவிடப் பெரிய கூத்து மதுரையில் நடப்பது! இதை இக்னோர் செய்துவிட்டு,
அல்லது கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுக்கவைத்து இக்கணிப்பை மக்கள்
மறந்துபோகும்படி செய்யாமல், பெரிய விஷயம் ஆக்கி, குண்டு எறிதல், கண்ணாடி
உடைப்பு, கொலை என்றெல்லாம் செய்வது கட்சிக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை
உண்டுசெய்யும் என்பது அழகிரிக்குதான் தெரியாதா? அல்லது ஆத்திரம் கண்ணை
மறைக்கிறதா?

பாமக இதை டீல் செய்த விதம் எளிமையாகவே இருந்தது -
"இந்தக்கருத்துக்கணிப்பை நம்பமுடியாது, உள்நோக்கம் கொண்டது,
பத்திரிக்கையைக் கிழிக்கிறோம் ஆனால் ஆட்சிக்கு ஆதரவு நிச்சயம் தருவோம்" -
இந்த அணுகுமுறையில் பாமகவுக்கு ஆதரவும் கிடைத்தது, எந்த நஷ்டமும்
இல்லாமல், அதே நேரத்தில் கணிப்புக்கும் பெரிய விளம்பரம் கிடைக்கவில்லை!

இன்றிரவு அல்லது நாளை சன் டிவியில் நான் எதிர்பார்க்கும் செய்தி -- தா
கிருட்டிணன் கொலைவழக்கு -- ஒரு மீள்பார்வை ;-)

May 7, 2007

அறுக்கப்போவது யாரு? (07 May 07)

சன் டிவியின் அமைப்பில் தரமான நகைச்சுவை சாத்தியமில்லை என ஏற்கனவே
ஒருமுறை சொல்லியிருந்த ஞாபகம். இந்த வாரம் அசத்தப்போவது யாரு பார்த்தபின்
மேலும் உறுதிப்பட்டது இந்த எண்ணம்.

ரெக்கார்ட் செய்து பார்த்ததில் ஒரு மணிநேர ப்ரோக்ராமை - நம்புங்கள் -20
நிமிடத்தில் பார்த்துவிட முடிந்தது. வெளிப்படையான விளம்பரங்கள், இந்தியத்
தொலைக்காட்சியில் முதல்முறை உசத்தி கண்ணா உசத்தி நம்பர் 1
நியூஸ்பேப்பர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் தள்ள முடிந்த்து. ஆனால்
நிகழ்ச்சிக்குள்ளே வரும் விளபரங்களைத் தள்ள முடியவில்லை.

இதே நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்த்தபோது இதே காமெடியன்கள் எப்படி
நடந்துகொண்டார்கள் என்று ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. நேரடியாகவே
பாண்டியராஜனையும் சின்னி ஜெயந்த் சடகோபன் ரமேஷையும் கிண்டலடிப்பார்கள்,
நிகழ்ச்சியை உடனே துவக்குவார்கள்.

இங்கேயோ, பள்ளிப்பேச்சுப்போட்டியில் ஆரம்பிப்பார்களே "ஆன்றோரே சான்றோரே
என்னைப்போன்றோரே .. தாமரைத் தடாகத்தின் நடுவில் அமர்ந்திருக்கும் தலைவர்
அவர்களே (அவர் ஒரு காலுடைந்த ஸ்டீல் நாற்காலியில் பேன் காற்று போதாமல்
விசிறி வீசிக்கொண்டிருப்பார்:-))" ரேஞ்சுக்கு,

சன் டிவி எங்களுக்கு வாழ்வளித்தது, சிட்டிபாபுவும் மதன்பாபுவும்தான்
உலகத்திலேயே சிறந்த காமெடியன்கள், அழகென்ற சொல்லுக்கு சந்தியா, நேரில்
இறங்கிவந்த கட்வுள் இன்றைய நடுவர் (அது எவனா இருந்தாலும் சரி) என்று
ஐந்து நிமிடம் புகழ்பாடி நிகழ்ச்சியை அரை நிமிடத்தில் முடிக்கிறார்கள்.

பத்து செகண்ட் டைமில் கான்சப்டுக்கு காமெடி செய்கிறார்களாம்.. அவள்விகடன்
வாசகர் கடிதத்திலேயே இந்த போலித்தனத்தை கிண்டலடிக்கிறார்கள்! டைம்
கொடுத்து நகைச்சுவை வருமா? முதல்ல விட்டொழிங்கப்பா இந்த கேனத்தனத்தை!

இதோடு முடிந்ததா? அவர்கள் பிட்டை முடித்தவுடன் இந்த சிறப்பு நடுவருடைய
பந்தா மற்றும் விளம்பரம் - இந்தத் திறமைகள் எல்லாம் எங்கெங்கோ கொட்டிக்
கிடந்ததை சன் டிவி சேகரித்துத் தந்து பெரும் சேவை செய்கிறது என்ற
ரேஞ்சில்!

எங்கெங்கோ எல்லாம் கொட்டிக்கிடக்கவில்லை - விஜய் டிவியில் இருந்து
அப்படியே லம்ப்பாக அள்ளிக் கொண்டு வந்தது என்பது கூடத் தெரியாத
குழந்தைகளா இந்த நடுவர்கள்? ஒரு ஆள் கூட புதிதாகச் சேர்க்கப்படவில்லை!
தரம் நீர்த்தது மட்டும்தான் சன் டிவியின் சாதனை!

இந்த விளம்பரம் எல்லாம் போதாது என்று நிகழ்ச்சிக்குள்ளேயேகூட சுய
முதுகுசொறிதல் ஜகஜ்ஜோதியாக ஆரம்பித்துவிட்டது!

தயாநிதி மாறனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பது என்றிலிருந்து
நகைச்சுவை ஆனது? எந்த மிமிக்ரி முயற்சியும் இல்லாமல், செயல்களையோ
பாவனைகளையோ மிகைப்படுத்தி நகைச்சுவை ஆக்கும் முயற்சி ஏதுமின்றி விளம்பர
பாணியில் ஒரு பாட்டு -- வேறு அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்வது,
மிமிக்ரி செய்வது எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது போல! விளம்பரம்
மட்டும்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது!

சூப்பர் 10 என்ற இன்னொரு நிகழ்ச்சி விளம்பரக்கருவி ஆகி பல நாள் ஆகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு ஆள் நடிகனாக ஆசைப்பட்டு ராசிக்கல்காரனிடம்
வருகிறானாம் (இது அப்படியே விவேக்கின் பாளையத்தம்மன் கான்சப்ட் - என்ன,
அதில் சிரிப்பு வரும் - அது ஒன்றுதான் வித்தியாசம்!) ராசிக்கல்காரன்
சொல்கிறான் - சின்னி ஜெயந்திடம் போ.. பாரதிராஜா என்று சொல்ல வந்த
வசனகர்த்தா இந்த வாரத் திரைப்படம் "கண்களால் கைது செய்" பார்த்து அலர்ட்
ஆகி ஆளை மாற்றிவிட்டார் போல!

ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஒவ்வொரு வசனத்திலும் அரசியலோ விளம்பரமோ கலக்காமல்
இருப்பதில்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது படைப்பாளியின் சுதந்திரம்.
விளைவு குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுதல்.

இன்னொரு நிகழ்ச்சி பார்த்தேன், எஸ் பி பாலசுப்பிரமணியம் வழங்கும்
"என்னோடு பாட்டுப் பாடுங்கள்" - ஜெயா டிவியில்.

நல்ல குரல்கள், வித்தியாசமான பாடல்கள் என்று பங்களிப்போரின் ஒத்துழைப்பு
ஒரு பக்கம் இருந்தாலும், தொகுத்து வழங்குவது எப்படி என்பதற்கு பாடமாக
அமைகிறது எஸ் பி பியின் வழங்கும் விதம்.

மெல்லிய நகைச்சுவையோடு அழைப்பதாக இருக்கட்டும், ஒரு சின்ன வரியையோ,
பின்னணி இசையையோ பாடிக்காட்டுவதாக இருக்கட்டும், நன்றாகப்பாடியவரை
வாழ்த்துவதாக இருக்கட்டும், நன்றாகப் பாடாதவரை சுட்டிக்காட்டுவதாக
இருக்கட்டும் (நாங்கள்லாம் ஹைதர் காலம்மா - நானம் இல்லை நாணம்.. சொல்லு
நாணம்), பாடல் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாக இருக்கட்டும்
(ஜோசப் கிருஷ்ணாதான் இந்தப்பாட்டுக்கு பியானோ வாசிச்சாரு, முதல் முறை
நானும் சி-மைனர் ஸ்ருதி எடுக்கலை, ரெண்டாவது டேக்லேதான் ஓக்கே ஆச்சு),
முடிவில் "வெற்றியை நம்பமுடியவில்லை" என்ற பெண்ணிடம், "நம்பும்மா,
நாந்தான் பாலு, யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்" என்று கலாய்ப்பதாக
இருக்கட்டும் -- Wholesome entertainer!

ஒரு இடம் தவிர வேறெப்போதும் ஜெயா டிவி பிரதாபம் பாடி அறுக்கவில்லை,
யாரையும் குறை சொல்லும்போதுகூட வலிக்காமல் சொன்ன விதம், கர்வம் என்பதை
முற்றிலுமாக அறியாதவர் என்பதைத் தெளிவாகக் காட்டியது! 36000 பாட்டுக்கள்
பாடியவர் தன் தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை -
இருந்தாலும் புதுப்பாடகர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக அதையும் செய்கிறார்!

பிறரைப் பாராட்டுவதற்கு தனி ஸ்டைலே வைத்திருக்கிறார் - தன்னனான.. என்று
ரசித்து மயங்கி ஆலாபனை செய்துகொண்டே ராட்சசன்மா இந்த இளையராஜா! பாடு
பாடும்போது ஒரு மாதிரி இருந்தது, படமாப் பாத்தப்போ படம்
எடுத்தப்புறம்தான் பாடினேனா தோணற அளவுக்கு நடிச்சு வைச்சுருந்தான் அந்தப்
படுபாவி கமலஹாசன்! இப்படிப்பட்ட உள்ளத்தில் இருந்து வரும் பாராட்டுகளோடு
அசத்தப்போவதுவின் பாராட்டுக்கள் உதட்டளவில் என்று தெளிவாகவே தெரிகிறது!

என்னதான் இருந்தாலும், சன் டிவிதான் மேக்ஸிமம் வியூவர்ஷிப்! நம்ம
விதியைத்தான் நொந்துகொள்ளவேண்டும்!

May 2, 2007

சிறுகதை - மந்தைச் சிங்கம்

டிஸ்கி: வேறு எந்தக் காரணமும் இல்லை மக்களே, ரொம்ப நாளாச்சு சிறுகதை
எழுதின்னுதான் எழுதியிருக்கேன். உள்குத்து, வெளிக்குத்து சைட்குத்து
எதையும் தேடி ஏமாறாதீங்க :-)

**************************************
சிறுகதை - மந்தைச் சிங்கம்
__________________________________________


"வரலாமா சார்?" பாதிக்கதவைத் திறந்துகொண்டு நின்றான் ரமேஷ்.

"வா, உட்கார்" என்றேன். இவனிடம் எப்படி பேச்சு ஆரம்பிக்க என்று
தெரியவில்லை. அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நேற்று மாலை போன் செய்து
வரச் சொன்னதை என்னவென்று எடுத்துக்கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.
ஆப்டர்ஷேவின் மணம் கொஞ்சம் தூக்கலாகவே வீசியது. புதிய சட்டை, டிசைனர் டை
-- இன்றைய சந்திப்புக்காக விசேஷ கவனம் எடுத்து அலங்கரித்துக்
கொண்டிருக்கிறான். விஷயம் தெரிந்தால்!

"காபி?" என்றேன் போனை எடுத்துக்கொண்டே.

"ஓகே சார்" சீட் நுனியில் அமர்ந்திருக்கிறான். எதற்காக
அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாத மெல்லிய பதட்டம்.

"இப்கான்லே இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு" இதுதான் சரியான ஆரம்பம்.
பழியைத் தூக்கி கன்ஸல்டண்ட் சர்வீஸ் மேலே போட்டுவிடலாம்.

"என்னவாம் சார்?"

"என்னத்தை சொல்ல.. ஆளுங்க அதிகமா இருக்காம். குறைக்கறதுக்கு சிபாரிசு
பண்ணியிருக்காங்க"

"இருக்கற ஆளே போதலைன்றதுதான் உண்மை சார். டெய்லி வீட்டுக்கு கிளம்ப பத்து
மணி ஆயிடுது"

"அதைச் சொன்னா, நம்ம டிப்ளாய்மெண்ட் சரியில்லைன்றாங்க! மேலிடத்துல
ரிப்போர்ட்டை அப்ரூவ் பண்ணிட்டாங்க. ஆக்ஷன் ப்ளான் கேக்கறாங்க"

"நான் என்ன பண்ணனும் சார்" எனக்குத் தேவையில்லாத விஷயங்களை, என்
கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை ஏன் என்னிடம் சொல்கிறாய் என்பது போல
பார்த்தான். விஷயம் இருக்குது தம்பி! எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.
தேவையில்லாமல் கண்ணாடியின் வெனிஷியன் ப்ளைண்டுகளைத் திறந்து
போக்குவரத்தைக் கவனித்தேன். தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.

கதவு திறந்தது, காபி வந்தது.

"குடி, சொல்றேன்" ஒரு சின்ன ஒத்திப்போடல்.

அவசரமாகக் குடித்துவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"நம்ம டிப்பார்ட்மெண்டிலே இருந்து ஒரு ஆளைக் குறைக்கணுமாம்."

ஒன்றும் பேசாமல் கவனித்தான்.

"நான் ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். உன்னைத் தவிர வேற
யாரையும் என்னால அசைக்க முடியாது"

"என்னையா சார்!" அதிர்ச்சி முழுமையாகத் தாக்கி குரல் கம்மியிருந்தது.
உள்ளே நுழைந்தபோது இருந்த தன்னம்பிக்கையான குரல் இப்போது குறைந்த
டெஸிபல்லாகிவிட்டது.

"ஆமாம், ஐ ஆம் ஸாரி டு சே திஸ், ஆனா நீ இந்த டிப்பார்ட்மெண்டிலே முழுமையா
பிட் ஆகவே இல்ல"

"சார் நான் நுழைஞ்சே ஆறு மாசம்தானே ஆச்சு, நீங்கதானே இன்டர்
டிபார்ட்மெண்ட் இன்டர்வியூவிலே என்னை செலக்ட் செஞ்சீங்க?"

"ஆமாம்பா, உன்னோட டெக்னிகல் ஸ்கில் இங்கே சேல்ஸ்லே யூஸ் ஆகும்னு
நெனச்சுதான் செலக்ட் செஞ்சேன், ஆனா, உன்னால டார்கெட் அசீவ் பண்ண
முடியலையே?"

"போன மாசம்தானே புதுசுன்றதால இப்படி ஹிக்கப்ஸ் வர்றது சகஜம்,
கவலைப்படாதேன்னு சொன்னீங்க?"

"சொன்னேன் தான்ப்பா, அப்ப நிலைமை வேற, இப்ப வேற"

சொல்வதற்கு பாயிண்டுகள் அவன் மனதில் அலைமோதிக்கொண்டிருந்தது. வாக்கியமாக
அமைக்க அவன் உதடுகள் முயற்சி செய்துகொண்டிருந்தன.

"இப்பவும் சொல்றேன், உன்னோட டெக்னிகல் ஸ்கில்ஸ் இந்த
டிப்பார்ட்மெண்டுக்குத் தேவைதான். ஆனா மத்தவங்க யாரையாவது தூக்கிணா அவங்க
கஸ்டமர் பேஸும் நமக்கு லாஸ். உனக்கு இன்னும் பெரிசா கஸ்டமர் பேஸ்
உருவாகவே இல்லை"

"அதுக்கு ஆறு மாசம் போதுமா சார்"

"போதாதுதான். ஆனா, இப்பதானே இந்த சூழ்நிலை உருவாகியிருக்கு?"

"அந்த ஸ்டேடியம் காண்ட்ராக்டுலே நான் கொடுத்த ப்ரஸண்டேஷன்னால தானே சார்
டீல் பைனலைஸ் ஆச்சு?"

"நீ அதேமாதிர் ஹெல்ப்பை டி எஸ்லே இருந்திருந்தாலும் செஞ்சிருப்பே.
உண்மையா சொல்லப்போனா, நீ டிஎஸ்லே இருந்தப்ப கொடுத்த பாயிண்ட்ஸ்னால தானே
இம்ப்ரஸ் ஆகி உன்னை செலக்டே செஞ்சேன்?"

"நான் டெக்னிகல் சப்போர்ட்லேயே இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்காதில்லையா?"

"ஆனா, நீதானே சேல்ஸ் வேணும்னு டிபார்ட்மெண்டல் இன்டர்வியூக்கு அப்ளை
பண்ணே? உனக்கு டிஎஸ்ஸைவிட சேல்ஸ் கவர்ச்சிகரமா இருந்ததாலேதானே? இங்க
கிடைக்கிற சேல்ஸ் இன்சண்டிவ், பணம் அதிகம்ன்றதாலேதானே?"

"ஒரு மண்ணும் தெரியாம இங்கே எத்தனை பேரு குப்பை கொட்டிகிட்டிருக்காங்க
தெரியுமா சார்? ஆகாஷ், குமாருக்கெல்லாம் டெக்னிகலா என்ன தெரியும்?"

"ஆனா ஆகாஷும் குமாரும் கூட டார்கெட்டை சுலபமா அச்சீவ் பண்றாங்களே?
அவங்களுக்கு கஸ்டமர்ஸ்கூட நல்ல ரிலேஷன் இருக்கே"

"எனக்கு டைம் கொடுக்கக் கூடாதா சார்? ஐ ஆம் ஷ்யூர் ஐ கேன் அச்சீவ் டூ"

"எனக்கும்கூட அந்த நம்பிக்கை இருக்குப்பா! ஆனா இப்பத்திய நிலைமைலே என்னால
ஒண்ணும் பெரிசா பண்ண முடியாது."

கைகள் நடுங்க தண்ணீர் க்ளாஸ்மேல் வைத்திருந்த அட்டையை எடுத்தான், தண்ணீர்
சிதறியது. குடிக்கும்போது சட்டை நனைந்தது.

"அப்படின்னா இதான் முடிவா சார்? கொஞ்சம் அதிகக் காசுக்கு ஆசைப்பட்டு
லைனைச் சேஞ்ச் பண்னதுதான் நான் செஞ்ச மாபெரும் குற்றமா?"

"நீ செஞ்சது குற்றமோ, மாபெரும் தப்போ கிடையாது. ஆனா, ஒரு ஸ்ட்ரேடஜிக்
மூவ், பேக்பயர் ஆயிடுச்சு"

"அடுத்து என்ன?"

"டென்மினேஷன்னு இல்லாம, ரெஸிக்னேஷனா கொடுத்துடு. எல்லா பேப்பர்ஸையும்
பாஸ்ட்டா மூவ் பண்ணிடலாம். உன் கேரியருக்கு இந்த மாற்றத்தாலே எந்த
பாதிப்பும் வராது"

"ம்ஹூம்" வறட்சியாகப் புன்னகைத்தான்.

"அதுக்காக பெரிசா கவலைப்படாதே. ஐ ஆம் நாட் கமிட்டிங் எனிதிங் ஆனா நான்
நம்ம டீலர்கிட்டே பேசியிருக்கேன். ஷர்மாதானே அங்கே ஜி எம்? அவர்
சொன்னார், ஸ்டோர்ஸ்லே ஒரு எக்ஸிகியூடிவ் போஸ்ட் வேகன்ஸி இருக்காம். யூ
கேன் ஜாயின் அல்மோஸ்ட் இம்மீடியட்லி. இதே ரேஞ்சுக்கு பேக்கேஜ் இருக்கும்"

"டீலர் கம்பெனியா?"

"ஏன் அதனால என்ன?"

"இல்லை சார், வேணாம். இவ்வளோ நாள் ப்ரின்சிப்பள் கிட்ட இருந்துட்டு
டீலர்கிட்ட போகணுமா? டீலர் கிட்ட போகணுமுன்னா இந்த பேக்கேஜ் பத்தாது.
அட்லீஸ்ட் 20% ஹைக் இருக்கணும்!"

"சரி நான் பேசிப்பாக்கறேன், பட் ஐ நாட் சோ ஷ்யூர்"

"நான் வரேன் சார்."

கிளம்பிவிட்டான். வேறு வேலை கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் அவன் சோகத்தைக்
கொஞ்சம் குறைத்திருக்கிறது.

ஒரு கஷ்டமான வேலையை முடித்துவிட்டேன். அடுத்தது? பத்து நிமிடம் யோசித்து,
தயக்கத்தோடு போனை எடுத்து ஷர்மாவுக்கு போட்டேன்.

"ஷர்மா?"

"சொல்லுங்க சார்"

"நேத்து ஒரு பையனைப்பத்தி சொன்னேனில்லை?"

"ஆமாம் சார், வேற வழியில்லைன்னு எடுக்கறேன்னு சொன்னீங்களே "

"அவனை கன்ஸிடர் பண்ண வேண்டாம்"

"என்ன சார் திடுதிப்புனு மாத்தறீங்க?"

"இல்லை, ஐ ஹேவ் மை ரீஸன்ஸ்"

கதவு மறுபடி தட்டப்பட்டது

"சரி நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன்"

ரமேஷ் உள்ளே நுழைந்தான்.

"சார், அந்த ஸ்டோர்ஸ் வேகன்ஸி சொன்னீங்க இல்லை, அது எனக்கு வேண்டாம் சார்"

"ஏன்பா?"

"மறுபடி புது டிப்பார்ட்மெண்ட், மறுபடி புது விஷயங்களைக் கத்துக்கணும்.
ஒருவேளை அங்கேயும் இங்க நடந்த மாதிரி நடந்துட்டா? என்னோட ஸ்ட்ரெங்த் என்
டெக்னிகல் நாலெட்ஜ். அதுக்கேத்த வேலை எங்கே கிடைக்குதோ அங்கே போவேன்
சார். உலகம் ஒண்ணும் அவ்வளவு சின்னது இல்லை! எப்படியும் ஒரு
மாசத்துக்குள்ள புதுவேலை கிடைச்சு உக்காந்துருவேன். கான்பிடன்ஸ் இருக்கு.
நீங்க கஷ்டப்படாதீங்க!"

நான் சிரித்தேன்.

"குட் டெசிஷன். இப்பதான் ஒழுங்கா சிந்திக்கறே, ஆக்சுவலா ஷர்மாகிட்ட
இருக்க வேகன்ஸி ஸ்டோர்ஸ்லே இல்லை, டெக்னிகல் சப்போர்ட்தான். இப்ப போன்
பண்ணி சொல்லிடறேன்"

இப்போது தயக்கமே இல்லாமல் போனிடம் போனேன்.

 

blogger templates | Make Money Online