Apr 30, 2005

சச்சின் - கங்குலி!

நல்ல படமாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்பைத் தூண்டக்கூடிய பல காரணிகள் சச்சின் படத்துக்கு இருந்தன.

1. தமிழ் சினிமாவின் பிதாமகன்களில் முக்கியமான மகேந்திரனைப் பிதாவாகக் கொண்ட மகனின் இயக்கம்.

2. அதிரடி அதிகம் இல்லாத, மென்மையான காதல் கதை என்ற முன்னோட்டங்கள். (காதலுக்கு மரியாதை பிராண்டு)

3. தனக்கு ஓரளவு நடிக்கவும் தெரியும் என்று ஒன்றிரண்டு படங்களில் நிரூபித்த விஜய்..

4. சந்திரமுகியின் முதல் பாதியைத் தாங்கிப்பிடித்த வடிவேலு.. (சந்திரமுகி விமர்சனம் கண்டிப்பாக எழுதமாட்டேன் - அனைவரும் அலசி பிழிந்து காயப்போட்டுவிட்டார்கள்!)

5. 'பாய்ஸ்'-இல் அழகுடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்திய ஹரிணி ( அவருடைய ஒரிஜினல் பெயர் என் தட்டச்சு வேகத்தில் ஐந்து நாள் பிடிக்கும்)

இத்தனை நல்ல மைதானம் இருந்தும் படம் மகா மெகா சொதப்பல்!

கதை என்று ஒரு எழவும் இல்லை. (பிபாஷா பாசுவின் சதை மற்றும் பார்ட்-டைம் வில்லன்களுக்கு கொடுக்கப்படும் உதை ஆகிய பாடபேதங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை).

முப்பதாண்டு பாரம்பரியம் கொண்ட 'முப்பது நாட்களில் காதல்" சவால்.. ஈகோ பிடித்த நாயகி (எவ்வளவு கொழுப்பு பாருங்கள் - ஹீரோவை லவ் செய்ய மாட்டாளாமே?) பொறாமை காரணமாக (பிபாஷா நாயகனின் மீது விழுந்து புரள்வதைப் பார்த்த பொறாமை!) காதல் வசப்பட்டு விட்டாலும் அதை தெரிவிப்பதை ஒரு நாள் தள்ளிப்போட, அந்த நேரத்தில் புருனே சுல்தானுக்கு கடன் கொடுக்கும் அந்தஸ்து கொண்ட ரகுவரன் அம்மாவின் திதி என்று மெஸேஜ் கொடுக்க பிள்ளை விஜயைத் தேடிவர, அய்யோ என்னைப் பணத்தாசை பிடித்தவள் என்று நாயகன் நினத்து விடுவானே என்பதால் காதலை மனதுக்குள் அழுத்தி சுக்குக் கஷாயம் சாப்பிடுகிறார் ஹீரோயின். அடுத்த ஐந்தே நிமிடங்களில் ஹீரோ அதைக் கண்டு பிடிக்க, சுபம்!

திரைக்கதையில் பல பார்த்த படங்களின் சாயல் - குஷி, ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி.

அலுக்கவைக்கும் அளவிற்கு ஒரே மாதிரியான கல்லூரிக்காட்சிகள் - மருந்துக்குக்கூட வகுப்பையோ, வேறு கல்லூரி நிகழ்ச்சிகளையோ காட்டாமல், எப்போதும் பனிபடர்ந்த கல்லூரி வளாகம்(பனி மேல் என்னதான் அப்செஷனோ அந்த ஒளிப்பதிவாளருக்கு- ஏர்போர்ட்கூட பனி படர்ந்தே காட்சி அளிக்கிறது!)மாணவர்கள் (வடிவேலு வயசான மாணவர்கள்!) கலாய்ச்சல்கள்..

வடிவேலு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார், பல காட்சிகளில் சிந்திக்க வைக்கிறார் (எந்தப் படத்தில் இந்த ஜோக் முன்பே வந்தது என்று!)

ஹரிணிக்கு நடிக்க வரவில்லை என்பது beyond reasonable doubt நிரூபிக்கப்பட்டுள்ளது

விஜய் உள்பட யாருக்கும் நடிக்க வாய்ப்பில்லை என்பது வேறு விஷயம்!

அப்பா பேரைக் கெடுத்த பிள்ளைகளில் முதலிடம் ஜானுக்கு தாராளமாகத் தரலாம்.

சன் டிவி விமர்சனப்பாணியில்:சச்சின் - கங்குலி!

பி.கு 1: விகடன் விமர்சனத்தில் இதற்கு ஏப்ரல் ரிலீஸ் படங்களில் முதலிடம்! என்ன மாயமோ தெரியவில்லை.

பி.கு 2: 16 வயதான என் அக்கா மகன் "படம் நல்லாதானே இருக்கு, இதுக்கென்ன குறைச்சல்" என்கிறான் - Generation Gap!

Apr 12, 2005

சாபமா.. வரமா?

கங்கூலிக்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடத்தடை!

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணத்தை செயலாக்கிய ஐ சி சி க்கு நன்றி.. நன்றி.. நன்றி..

Apr 6, 2005

பார்ப்பனிய விழுமங்களும் பாலஸ்தீன எதிர்ப்பும்

தமிழ்மணத்தில் இந்த சர்ச்சையைப்பார்க்கும்போது, இந்த விஷயங்களைப்பற்றி மிகவும் அறிந்த நான் கருத்துகூறாமல் இருப்பது முறை ஆகாது என்று தோன்றியது.

டோண்டுவின் பதிவுகளும் ரோசாவஸந்தின் பதிவுகளும் பெறுகின்ற ஹிட்டையும், பின்னூட்டங்களையும் கொஞ்சம் இங்கே வந்தும் போடுங்கள்.
மற்றபடி இந்த தலைப்பு மற்றும் முதல் மூன்று வரிகள் சும்மா -- தமாஷ். (தமிழ்மணத்தில் முதல் மூன்று வரிகள் தெரிவதால்)

உங்களை வரவெச்சுட்டேன் பார்த்தீங்களா?

 

blogger templates | Make Money Online