May 20, 2014

வலி - சிறுகதை

வலி

 

கத்தியால் அடிவயிற்றில் செருகியதுபோல் இருந்தது ஆனந்திக்கு. "அலைமறி பாப்புப் பொருள்கோள் என்பது.. என்பது.. " வாக்கியத்தை முடிக்க முடியாமல் சுருண்டு தரையில் விழுந்தாள்.

 

மயக்கமாகவும் இல்லாமல் தெளிவாகவும் இல்லாமல் இருந்த நொடிகளில் டீச்சர் "அவளுக்கு என்னாச்சு பாருங்கடி".. அவளைச் சுற்றிப் பதட்டம் ஏறியது. "வாட்ச்மேனைக் கூட்டி வாடி மல்லிகா" "அடிக்கடி இப்படி ஆகுமா இவளுக்கு" "இல்லை டீச்சர்.. காலையில இருந்தே எதோ வலின்னு சொல்லிகிட்டே இருந்தா" யாரோ அவளைக் கைத்தாங்கலாக எழுப்பி நடக்கவைத்தது, ஆட்டோவில் ஏறியது, ஆஸ்பத்திரி உடனடி சிகிச்சைப்பிரிவில் பெஞ்ச்சில் அமர்ந்தது.. எல்லாம் மங்கலாகவே தெரிந்தது.

 

"ஐயோ ஆனந்தி என்னாச்சுடி" அம்மாவின் கூக்குரல் கேட்டுதான் கொஞ்சம் தெளிவானது போல் இருந்தது.

 

உடலில் வலிமை இல்லாமல் டாக்டர் சீட்டுக்கு நடப்பதற்குள் தடுமாறியது.

 

டாக்டர் இவள் வந்து அமர்ந்ததைக் கவனிக்காமல் "அந்தாளுக்கு எக்ஸ்ரே எடுக்கச் சொல்லு.. பெரியவர் ரவுண்ட்ஸ் வந்துட்டாரா?" என்றார். ஆனந்திக்குக் கலவரம் அதிகமானது. பெண் டாக்டராக இருந்தாலும் தன் பிரச்சினையைச் சொல்லி இருக்கலாம்.

 

டாக்டர் மூக்குநுனியில் இருந்த கண்ணாடியை மேலேற்றிக்கொண்டு டேபிளில் இருந்த பழைய ஃபைல்களை ஓரம் தள்ளிவிட்டு இவளைப் பார்த்தார். "ஆனந்தி! என்ன வயசாகுதும்மா?"

 

"தர்ட்டீன் டாக்டர்"

 

"என்ன பண்ணுது"

 

"அடிவயித்துல ஒரே வலி டாக்டர்"

 

"எப்ப இருந்து? சாப்பிட்டியா?"

 

"காலைல சேமியா உப்புமா சாப்டா டாக்டர்.பேர் பண்ணா.. அவ்ளோதான்"

 

டாக்டர் அம்மாவை முறைத்துவிட்டு "அந்தப் பொண்ணு சொல்லட்டும்.. பேசமுடியுது இல்ல?" ஆனந்திக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

 

"வழக்கமாவே அவ்ளோதான் சாப்பிடுவேன் டாக்டர்"

 

"வெளிய போறதெல்லாம் ஒழுங்கா இருக்கில்ல?" ஆனந்தி தலையசைத்தாள்.

 

"பீரியட்ஸ் டைமா? பெரியமனுஷி ஆயிட்ட இல்ல?" இதையெல்லாம் ஒரு ஆணிடம் பேசவேண்டி இருக்கிறதே. ஆனந்தி இதற்கும் வெறுமனே தலையசைத்தாள்.

 

நர்ஸ் உள்ளே நுழைந்து "பெரியவர் வர நேரம் ஆயிருச்சு.. நீங்க வார்டுக்குப் போகணும்"

 

"இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?"

 

"அது இருக்காங்க.. பத்துப் பதினஞ்சு பேரு. வந்து பாத்துக்கலாம்"

 

ஆனந்தியை டாக்டர் பார்த்தார். "சரி.. இந்தப்பொண்ணுக்கு பிபி பார்த்துட்டு ரெண்டு யூனிட் சலைன் ஏத்தச் சொல்லு. கைனி அம்மா வந்துருக்காங்களா?"

 

"அவங்க ரெண்டு மணிக்குதான் டாக்டர் வருவாங்க"

 

"அவங்களை ஒருமுறை பாத்துரச்சொல்லு" கிளம்பிவிட்டார்.

 

வராந்தாவில் ஒரு பாயைப் போட்டுப் படுக்கச்சொல்லி சலைன் ஏறிக்கொண்டிருந்தபோதுதான் அம்மா கேட்டாள் "எப்படிடீ திடீர்னு வலி? போனவாரம்தானே உக்காந்தே?"

 

"நேத்து ராத்திரிலே இருந்தே இருக்கும்மா"

 

"என்ன எழவோ தெரியல. வழக்கம்போலதான் சாப்பிடறே போறே வரே.."

 

வழக்கமாகத்தான் ஆகிவிட்டிருக்கிறது. ஆனந்திக்கு அழுகை பொங்கியது.

 

"சரிசரி. அழாதே. வந்துட்டா பாத்துதானே ஆகணும். கையில காசுவேற இல்லை."

 

அம்மாவிடம் சொல்லிவிடத்தான் வேண்டும். ஆனந்தி தைரியத்தை வரவழைத்துக்கொள்ள முயற்சித்தாள்.

 

"அம்மா..அது வந்து.." என்று ஆரம்பிக்கும்போதே வராந்தா நுழைவாயிலில் சந்துருமாமாவின் சத்தம் கேட்டது. "என்னய்யா இது.. இப்படியா வழியில வச்சு சலைன் ஏத்துவாங்க? ஒரு பெட் இல்லை?"

 

"இல்லை சார்.. எல்லாம் ஃபுல்லாயிருச்சு" வார்ட்பாயின் குரலும் நெருங்கியது.

 

"அதெல்லாம் எனக்குத் தெரியாது,. நீதான் எதாவது பார்த்துச் செய்யணும்" வார்ட்பாய் காசைப் பின்பாக்கெட்டில் மறைப்பதை ஆனந்தி பார்த்தாள்.

 

"என்னாச்சு கண்ணு?" ஆனந்தி பதில் சொல்லவில்லை.

 

"என்னமோ தெரியலைடா.. கைனகாலஜிஸ்ட் வந்து பார்க்கணும்ன்றாங்க.. ஒரு செக்கும் பண்ணாம நேரா சலைன் ஏத்திகிட்டிருக்காங்க.."

 

"கவலைப்படாதேக்கா.. நாம ஆஸ்பத்திரி மாத்திரலாம். நான் வந்துட்டேனில்ல"

 

வார்ட்பாய் வந்து "மூணாவது வார்ட்லே ஒரு பெட்டு காலியாயிருச்சாம். மாத்திரலாமா சார்?"

 

"அக்கா..நீ போய்ப் பார்த்திட்டு வா. நான் இவளைப்பாத்துக்கறேன்"

 

அம்மா வராந்தாமுனையில் திரும்பும்வரை காத்திருந்து மாமா குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டார் "என்னாச்சு?"

 

ஆனந்தி ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. கண்ணில் குரோதத்துடன் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.

 

"சும்மா சும்மா என்மேலேயே பழிபோடாதே. நீ ஒழுங்கா வந்திருந்தா அப்படி ஆயிருக்குமா?" மாமாவின் குரல் உயரவில்லை. ஆனால் அதில் அதிகாரம் தெரிந்தது.

 

"இப்படி ஒண்ணும் பேசாம குத்துக்கல்லாட்டம் இருந்தா நீ நல்லவளாயிருவியா? பேசாம சலைனை ஏத்திகிட்டு வீடு போய்ச் சேரற வழியைப் பாரு. தேவையில்லாம எதையாச்சும் பேசின.. உன் வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறிடும் ஜாக்கிரதை"

 

ஆனந்திக்கு வழக்கமான அடிவயிற்றுக்கலவரம் ஆரம்பித்துவிட்டது. இப்படித்தானே ஒவ்வொருநாளும் ஆரம்பிப்பார் இந்த மாமா. "நீ எத்தனை மார்க்‌ஷீட்டை உங்கம்மாகிட்ட கொடுக்காம ஏமாத்தி இருக்கே.. நான் எதாச்சும் கேட்டேனா? அதேபோலத்தான். இதையெல்லாம் கேக்கக்கூடாது. ஒரே புழுக்கமா இல்ல? எப்படித்தான் இவ்ளோ தடிமனா ஒரு ட்ரெஸ்ஸைப் போட்டிருக்கியோ"

 

"ரொம்ப வலிக்குது மாமா" ஆனந்திக்கு அவரிடம் பேசுவதற்கு அருவருப்பாக இருந்ததுதான். இருந்தாலும் பேசத்தானே வேண்டியிருக்கிறது.

 

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஒருமுறை பேதிக்குச் சாப்பிடு. எல்லாம் கிளியராயிரும்."

 

"நேத்திக்கு எத்தனையோமுறை வேண்டாம் வேண்டாம்னு சொன்னேனே.."

 

"அட.. அதுனால எல்லாம் வலிக்குமா என்ன? வீடியோ காட்டினேனில்ல? அதுல என்ன அவ அழவா செஞ்சா?"

 

அம்மா வந்துவிட்டாள். கேட்டிருப்பாளோ? இல்லை. அவள் முகத்தில் தம்பியைப் பார்க்கும்போது தெரியும் வழக்கமான வாஞ்சைதான் இருந்தது. "அந்த வார்டு நல்லாதாண்டா இருக்கு. போயிடலாம்".

 

பேக்கட்டிலிருந்து கட்டாக நூறுரூபாய்களை எடுத்தார் மாமா. "இதுல எட்டாயிரம் இருக்கும்க்கா.. இது போதும்னு நினைக்கறேன்"

 

"எவ்ளோதாண்டா கொடுப்பே.. ஏற்கனவே ஆனந்திஅப்பா போனதுல இருந்து நீதான் பாத்துக்கறே.. உன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா உன்னைப்படுத்தி எடுத்துருவாளேடா"

 

"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்க்கா.. அவ ஊர்ல இருந்து வர இன்னும் 2 மாசம் ஆயிரும். அதுக்குள்ள எப்படியாவது சமாளிச்சிருவேன்"

 

"நீ இல்லைன்னா நாங்க நடுத்தெருவிலதான் நிக்கணும்"

 

சந்துரு ஆனந்தியைப் பார்த்துக்கொண்டே "ஏன்க்கா.. என் முறைப்பொண்ணை நடுத்தெருவில நிக்கவிட்டிருவேனாக்கா?"

 

"ஆமாண்டா.. 35 வயசு வித்தியாசத்துல முறைப்பொண்ணு வாழுது"

 

மூன்றாவது வார்ட் கொஞ்சம் சுத்தமாக இருந்தது. டெட்டால் வாசனை மூக்கைத் துளைத்தாலும் கழிவறைக்கு அருகில் பெட் இருந்ததால் வாசனையும் நாற்றமும் போட்டி போட்டன. பச்சைக்கலர் பெட்ஷீட்டைக் கையில் கொண்டுவந்த நர்ஸ் "கொஞ்சம் ஒதுங்கும்மா" என்று தூசி பறக்கத் தட்டி பெட்மேலே போட்டால். ஆனந்தி கையிலேயே வைத்துக்கொண்டிருந்த சலைன் பாட்டிலை உயரத்தில் தொங்கவிட்டு "படுத்துக்க" என்றாள். பக்கத்து பெட்டில் இருந்த பெண்ணுக்கும் இவள் வயதுதான் இருக்கும். முகத்தில் ஏழெட்டு பேண்டேஜ்கள், காலில் மாவுக்கட்டு போட்டு தூக்கிக் கட்டியிருந்தார்கள்.

 

ஆனந்திக்கு இருந்த களைப்பில் தூக்கமும் நினைவும் மாறி மாறி வந்துகொண்டிருந்தன. கனவில் அம்மாவிடம் மாமா பற்றிச் சொன்னாள். அம்மா கோபப்பட்டு வெந்நீரை அவள்மேல் கொட்ட வந்தாள்."ஆனந்தி" என்று அதிகாரமாகக் குரல்கேட்க திடுக்கிட்டு எழுந்தாள். குண்டான டாக்டரம்மாள் நெற்றியில் ஒருரூபாய் சைஸ் குங்குமத்துடன் "என்ன ப்ராப்ளம்" மிரட்டலாகக் கேட்டார்.

 

ஆனந்திக்குத் தன் பிரச்சினையை இவரிடமும் பேசமுடியுமெனத் தோன்றவில்லை. அம்மாவும் மாமாவும் அருகிலேயே பதட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.

 

"வயித்துவலி டாக்டர்"

 

"சரி எல்லாரும் வெளிய போங்க.." தற்காலிகமாக ஒரு திரை அமைக்கப்பட்டு டாக்டர் பரிசோதனை செய்தார்.

 

"நான் நினைச்சதுதான். என்ன வயசு ஆகுது உனக்கு?"

 

"பதிமூணு டாக்டர்"

 

"அதுக்குள்ள ஆம்பள சகவாசமா? எங்கடி போகுது உங்களுக்கெல்லாம் புத்தி?" கோபமாகப் பேசினாலும் குரல் உயரவில்லை. அம்மாவுக்குக் கேட்டிருக்காது. அதைவிட முக்கியமாக மாமாவுக்குக் கேட்டிருக்காது. கேட்கும்படிப் பேசியிருந்திருக்கலாம். எப்படியாவது அம்மாவுக்குத் தெரியவைத்திருக்கலாம்.

 

"அது வந்து டாக்டர்.."

 

"சரி எக்கேடோ போங்க. எனக்கென்ன வந்தது. ஆயின்மெண்ட் தரச்சொல்றேன். வாங்கி வலிக்கும்போது தடவிக்க." திரையை விலக்கி நர்ஸிடம் "இந்த பாட்டில் முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிரச்சொல்லு.. எங்க இவங்க அம்மா?"

 

"வெளிய இருக்காங்க"

 

அம்மாவிடம் "ஒண்ணுமில்ல. நல்லா சாப்பிடச் சொல்லுங்க. சாதா வலிதான். ஒழுக்கமா இருந்தாலே பாதி உபாதை கிடையாது" பொதுவாகச் சொல்லிவிட்டு அடுத்த ஆளைப் பார்க்க நகர்ந்துவிட்டாள். ஆரம்பித்துவைத்திருந்தால் போதுமே டாக்டர். அடிவாங்கினாலும் மிச்சத்தை நான் சொல்லி இருப்பேனே. ஆனந்திக்கு அழுகை வந்தது.

 

நர்ஸ் மாமாவைப் பார்த்து "இன்னும் 2 ஹவர்ஸ்லே கிளம்பிடலாம் சார். வெள்ளைச்சாமி கிட்ட ஏன்சார் காசு கொடுத்தீங்க.. இந்த வார்டுக்கு அவனா தருவான்?"

 

பெரிதாக ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் அம்மா சுவாதீனமாகி மாமாவிடம் பழங்கதை பேச ஆரம்பித்தாள். "அந்த மனுஷன் குடிச்சுக்குடிச்சே நாசமாகாம இருந்திருந்தா" அவள் எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பாள்..

 

ஆனந்தி மறுபடி தூங்க ஆரம்பித்தாள், கனவில் ஏனோ காரணம் தெரியாமலே அழுதுகொண்டே இருந்தாள். அழுகைச் சத்தம் உச்சமாகி எழுந்தபோது வெளியிலும் அதே அழுகை இருந்தது.

 

"ஐயோ ஐயோ என் பொண்ணு இப்படி நாசமாப் போயிட்டாளே" அம்மாவுக்குதான் விஷயம் தெரிந்துவிட்டதா?

 

"கொஞ்சம் ஆம்பளைங்க எல்லாம் வெளிய போங்க" ஆனந்திக்கு இப்போதுதான் புரிந்தது. பக்கத்து பெட் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது.

 

தலையைக் கொஞ்சம் சாய்த்துப் பார்க்கையில் ஆனந்திக்குத் தூக்கிவாரிப்போட்டது. டாக்டர்கள் கூடி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். திரை கொஞ்சம் விலகியபோது பெட்ஷீட் முழுக்க ரத்தம் தெரிந்தது.

 

"இங்க கூட்டம் போடாதீங்க.. டாக்டருங்க பாத்துகிட்டிருக்காங்க இல்ல.. எல்லாரும் வெளிய போங்க"

 

கைனகாலஜி டாக்டரம்மாள் திரையை விலக்கினார். அவர் கண்ணில் நீர் திரையிட்டிருந்தது.

 

"ஐசியூவுக்குக் கொண்டுபோகச் சொல்லும்மா.. வீ வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட். கூட வந்தவங்ககிட்ட சொல்லிடுங்க. சான்ஸ் ரொம்பக் கம்மிதான். கிராதகனுங்க. அவனுங்க மாட்டினாங்களா?" கொஞ்சநேரத்துக்குமுன் ஆனந்தி கேட்ட அதிகார மிரட்டல் தொனி முழுவதுமாக விலகி, குரல் மிகவும் கம்மலாகத்தான் கேட்டது.

 

வெளியே அந்தப்பெண்ணின் உறவுக்காரர்கள் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார்கள்.

 

"போலீஸ் எதுவும் பண்ணலையா?" மாமாவின் குரல் வெளியிருந்து கேட்டது.

 

"என்ன பெரிய போலீஸ்? கம்ப்ளெயிண்ட் கொடுத்து 3 நாளாச்சு. அந்தப் படுபாவிங்க அதுக்குள்ள அறியாப்பொண்ணைச் சீரழிச்சு விளையாடி இருக்கானுங்க.. இப்ப வெறுமன அரெஸ்ட் பண்ணிக் கூட்டிப்போயிருக்காங்க.. ரெண்டு நாள்ல ஜாமீன்ல வந்துருவானுங்க. போலீஸும் உள்கை.."

 

"அவனுங்களை என்னை பண்ணித்தான் என்ன.. எங்க பொண்ணு பொழச்சாலுமா சாதாரணமா வாழமுடியுமா?" அழுகையினூடே ஒருகுரல்.

 

"அதனால? இவனுங்களைச் சும்மா விடமுடியுமா? இந்தப் பொண்ணுக்கு வந்த வலி அந்தக் கிராதகனுங்களுக்கும் தெரியணும். இவனுங்களை எல்லாம் கல்லால அடிச்சுக் கொல்லணும்"

 

ஆனந்தி தடுமாறி எழுந்தாள். கையில் இருந்த ஊசியைப் பிய்த்துப் போட்டு சலைன்மாட்டும் இரும்புக்கம்பியுடன் வெளியே வந்தாள்.

 

"ஆமாம் மாமா.. நீ சொல்றதுதான் சரி. அந்தக் கிராதகனுங்களுக்கும் வலி தெரியணும்"

 

 

blogger templates | Make Money Online