எதுவும் எழுதத் தோன்றவில்லை - மனம் வெறுமையாக இருக்கிறது.
பத்தாவது வகுப்பு படிக்கும்போது குமுதத்தில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள் - சுஜாதாவின் தொடரின் ஒரு பகுதிக்குள் அவர் நடை அல்லாத வேறு ஒரு பத்தி இருப்பதாகவும் அதை அடையாளம் கண்டுபிடிப்போர்க்கு பரிசு என்றும்.
மெலோட்ராமாத்தனமான அந்தப்பத்தியைக் கண்டுபிடிப்பது யாருக்குமே பெரிய விஷயமில்லை - தமிழில் கொஞ்சமாவது கதைகள் படித்த யாருக்குமே! (அந்தப்போட்டியில் நான் முதல் பரிசு பெற்றது வேறு விஷயம்). அந்தத் துடிப்பான நடையில் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் வரும் இவை வராது என வரையறுத்துவிட முடியாது என்றாலும் அந்த எழுத்துக்கும், அன்று அவருடைய சக எழுத்தாளர்களாகக் கோலோச்சிக்கொண்டிருந்த எழுத்து பேக்டரிகளுக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்.
புத்திசாலித்தனமான துப்பறியும் கதைகள் ஆகட்டும் (நிர்வாண நகரம்), ஆசிரியர் உரத்துப் பேசாமலே உணர்ச்சிகளைக் கொட்டவைக்கும் சமகாலக் கதைகளாகட்டும் (குருபிரசாத்), மாய உலகைச் சிருஷ்டித்து எதிர்காலத்தை நினைத்து பயப்படவைக்கும் அறிபுனைகளாகட்டும் (சொர்க்கத் தீவு), சரி அதையும்தான் விடுவானேன் என்ற வரலாறாகட்டும் (ரத்தம் ஒரே நிறம்) ஓ ஹென்றித்தனமாக கடைசிவரித் திருப்பங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய சிறுகதைகளாகட்டும் (விபா!) அல்லது இன்றைய வலைப்பதிவுகளின் வடிவுக்கு அன்றே கட்டியம் சொன்ன கடைசிப்பக்கங்கள் ஆகட்டும்- எந்த வகையையும் விட்டதில்லை - ஆனால் இவைகளினால் சுஜாதா எனக்கு ஆதர்சம் இல்லை.
ஒரு தேர்ந்த குருவைப் போல, இதெல்லாம் கூட இருக்குதப்பா தமிழில் என்று கைபிடித்துதான் எனக்கு கணையாழியை அறிமுகப் படுத்தினார். கவிதை என்பது செய்யுள் மட்டுமல்ல, கல்யாண்ஜியும் ஆத்மாநாமும் இப்படியெல்லாம் மரபுடைக்கிறார்கள் என்று ஹைப்பர்லிங்க் போட்டது சுஜாதாதான். பழமலய் அ கே ராமானுஜன் போன்ற பெயர்களைப் பரிச்சயப்படுத்தியது அவர் கதைகளூடாகத் தான். ஜேஜே சில குறிப்புகள், தோட்டியின் கதை என்ற பேரில் எல்லாம் கூட கதை எழுதுகிறார்கள் என்று அறிந்தது அவர் குறிப்புகள் மூலமாகத்தான்.
சிறுபத்திரிக்கைகளுக்கும் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கும் பாலமாக அவர் செயல்பட்டது யாருக்கு உபயோகமோ தெரியவில்லை, அவர் எழுத்துக்களைப் படிக்காமல் இருந்திருந்தால் எனக்கு இவை தெரிந்திருக்காது, விகடன் கல்கி குங்குமத்தைத் தாண்டியும் சில பத்திரிக்கைகள் இருப்பதையோ, ராஜேஷ்குமார் சிவசங்கரியை விடவும் சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதையோ உணர்ந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
இன்றைக்கு இன்னும் கொஞ்சம் படித்து, சுஜாதா கதைகளில் அது தெரிகிறது இது தெரிகிறது என்று சட்டமாக விமர்சித்தாலும், வந்த வழி நிச்சயம் சுஜாதா வழிதான். இது எனக்குமட்டுமல்ல - எனக்குத் தெரிந்தே பலருக்குப் பொருந்தும்.
கற்றதும் பெற்றதும் வரை கூட எனக்குப் பிடித்த கவிதைகளையும் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதற்கு அசாத்திய ஆர்வமும், தான் படித்ததை மற்றவரும் படிக்கச் செய்யும் ஆவலும், மற்றவர்களைப் போட்டியாக நினைக்காத தன்னம்பிக்கையும் வேண்டும்.
எல்லா விதங்களிலும் சுஜாதாவுக்குச் சமமான இன்னொரு தமிழ் எழுத்தாளரை நான் இன்னும் படிக்கவில்லை.
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் கூட சந்திக்கத் துடித்த ஒரே பிரபலமாக இருந்தவர் - சமீப காலங்களில் அந்த அளவு வெறி இல்லாவிட்டாலும், இனி ஆசைப்பட்டாலும் முடியாது என்பது வருத்தத்தை அதிகரிக்கிறது.
அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக!!
Feb 27, 2008
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்!!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 19 பின்னூட்டங்கள்
Feb 18, 2008
அவியல் - 18 Feb 08
ஞாநி குமுதத்தில் எழுதுவது எந்த விதத்தில் தவறு எனத் தெரியவில்லை. குமுதம், உரிமை பிரசுரிப்பாளருக்கே என்று சொன்னபோது எழுதிய வார்த்தைகள் இப்போதும் செல்லுபடியாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
குமுதத்தில் பிரசுரமான சுஜாதா கதைகள் புத்தகமாக வந்தபோது உரிமை எழுத்தாளருக்கே என்று பார்த்திருக்கிறேன்.
குமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா? - ஆம் எனில் ஞாநி குமுதத்தில் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை, தன் குத்திக்காட்டுதல் வெற்றி கொண்டதாகவே கொள்ளலாம் அவர். ஒருவேளை குமுதம் சுஜாதா ஞாநி போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால் ஞாநி குமுதத்தில் எழுதுவது தவறே! யாரேனும் விஷயம் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?
*******
ராஜ் தாக்கரே வாட்டாள் நாகராஜின் மராட்டி பதிப்பு போல இருக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் இது போன்ற ஆட்களுக்கு எந்த தயவுதாட்சண்யமும் கூடாது. அமிதாப்பை ராஜ் தாக்கரே தாக்கியதன் பின்புலத்தில் அபிஷேக்-ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு ராஜ் தாக்கரே அழைக்கப்படாததுதான் காரணம் என்று எங்கோ படித்தேன். (Investigative Journalism) அமிதாப்பும் ராஜ் தாக்கரேவும் நாளை கூடிக் குலாவிக்கொள்ளலாம்.. ஆனால் வேலையையும் வீட்டையும் விட்டு வெளியே துரத்தப்பட்ட பீஹாரிகள் - உபிக்காரர்கள்?
கலவரத்தைக் கிளப்புவது பெங்களூருவில்தான் மிகச்சுலபம் என்று நினைத்தேன். மொழி, மதம், வருமானம் என உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடுவது, சமச்சீரற்ற எந்த ஊரிலுமே சுலபம்தான் என்று நிரூபித்திருக்கிறது மஹாராஷ்ட்ரா. ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது - அரசியல் அனாதைகளாக்கப்பட வேண்டும். மஹாராஷ்டிரத்தின் மற்ற அரசியல் கட்சிகள் ராஜ் தாக்கரேவின் கட்சியோடு எந்த நாளும் கூட்டு வைக்கமாட்டோம் என அறிவிக்கவேண்டும். கலவரம் எவ்வளவு பெரியதோ அதைக் கிளப்பினவன் அவ்வளவு பெரிய ஆள் என்று நினைக்கும் நம் நாட்டில் சாத்தியப்படாத கனவுகள்!
******
ராஜ் தாக்கரே செய்ததற்கும் விகடன் செய்து கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை - என்ன, விகடன் கொஞ்சம் நாசூக்காகச் செய்கிறது!
ஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் கிண்டலாக சிவாஜி எம்ஜிஆர் பற்றி எழுதியிருப்பது தனிநபர் தாக்குதலா, அங்கதமா என்ற பிரச்சினையே வேண்டாம். தன் வலைப்பூவில் எதையும் வெளியிட அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் விகடன் அதை ஸ்ட்ராடஜிக் காபி பேஸ்ட் செய்து, கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருப்பது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயலே. விகடனையே சிலர் எரித்தார்கள் என்பது, அவர்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அட்வாண்டேஜ்காக ஜெயமோகனை பலியாடாக்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கவேண்டிய செயல்.
******
பொல்லாதவன் படம் ரொம்ப லேட்டாக பார்த்தேன். பாட்டுக்கள் (எங்கேயும் எப்போதும் தவிர்த்து) படத்தில் ஒட்டவில்லை, தனுஷ் 10 பேரைப் பந்தாடுவது நம்பமுடியவில்லை போன்ற சில்லறைக் குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல படம் என்றே சொல்வேன். சுர்ரென்று பத்திக்கொள்ளும் திரைக்கதை, நாயகன் / வில்லன் பார்வையில் மாறி மாறிச் சொன்னாலும் குழப்பாத காட்சிகள், குறிப்பாக டேனியல் பாலாஜியின் நடிப்பு, மிக இயல்பான சென்னைத் தமிழ் வசனங்கள் - நல்ல படம்.
*******
எங்களூர் நாராயணி பீடத்துக்குச் சென்று எதோ உதவி வாங்கி வந்திருக்கிறாராம் கலைஞர். அதில் ஒன்றும் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆன்மீகம், அறிவியல் இரட்டைக் குழந்தைகள் என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. நாத்திக இயக்கத்தின் அடிநாதத்தையே சமரசம் செய்கிறதே இந்தப்பேச்சு - அவருக்கு ஆதரவாக இருப்பவர்களை தர்மசங்கடப்படுத்துவதைத் தவிர இந்த மாதிரி பேச்சினால் வேறு உபயோகம் இருப்பதாகத் தெரியவில்லை.
*******
ரங்கமணி முன்னேற்றக் கழகத்தில் இன்று ஒரு புதிய ஆள் சேர்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்.
*****