Mar 15, 2008

கட்டாயத் தமிழ்க் கல்வி?


முனைவர் வா குழந்தைசாமி பேட்டியை முன்வைத்து இலவசக்கொத்தனார் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடை இல்லை - ஆனால் கருத்து இருக்கிறது. (அது என்னிக்குதான் இல்லாம இருந்தது?)

தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பட்டம் வரை பெறும் நிலை ஒன்றும் பயப்படும் அளவுக்கு இல்லை என்கிறார் மு வா கு. அதில் நிச்சயமாக எனக்கு ஒப்புதல் இல்லை. நான் படித்த பள்ளிக்கு மிக அருகிலேயே கூட தெலுங்குமுறைக் கல்வி (தமிழ்நாடு பாடத்திட்டத்தில்) இருந்திருக்கிறது, இருக்கிறது, அத்தகைய பள்ளிகளைப் பற்றிக் கவலை இல்லை, அதன் சதவீதம் குறைவாயே இருக்கும். தவறு அவர் எடுத்துக்கொண்ட அளவுகோலில் இருக்கிறது - மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளை மட்டும் எடுத்துக்கொண்டது அவர் தவறு.

நான் படிக்கும் காலத்தில், 10ஆம் வகுப்பு வரை படித்தவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் மாநிலக் கல்வி இயக்ககம் மூலமாகவே படிக்க, மாற்று முறைகளில் படித்தவர் சதவீதம் மிகக்குறைவாக இருந்தது. ஆனால், இன்றோ நிலை மாறிவிட்டது. மையக்கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த நிலை மாறி, மாநிலக்கல்வி இயக்ககப் பள்ளிகளுக்குச் சமமாக, ஏன் நகரங்களைப்பொறுத்தவரை அதிகமாகவே இருக்கின்றன இந்த மாற்று முறைப் பள்ளிகள்.

பிரச்சினை தமிழை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பதைக் கட்டாயமாக்குவதுதானே, தமிழ்வழியிலேயே மற்ற பாடங்களைப் படிப்பதைக் கட்டாயமாக்குவது இல்லையே? மற்ற பாடங்களை எந்த மொழியில் படிக்கவேண்டும் என்பதை அரசாணை கட்டாயப்படுத்தும் என்றால் நிச்சயம் நானும் எதிர்ப்பேன்.

தமிழை ஒரு மொழியாகப் படிப்பதில், கட்டாயப்படுத்துவதில் என்ன தவறு இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை. உபயோகம் சார்ந்த காரணமா?

சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றியும், அமீபாவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், வெட்டுக்கணங்கள் பற்றியும் ஏறத்தாழ அனைவருமே படித்திருக்கிறோம். அவற்றில் எவ்வளவு பேர் வாழ்க்கைக்கு அதை உபயோகப் படுத்துகின்றார்கள்?

நான் பள்ளியில் படித்ததில் இன்றும் எனக்குச் சோற்றுக்கு உபயோகமாக இருப்பது எஞ்சின்கள் பற்றிய இரண்டு பக்கப் பாடம் மட்டுமே. அதையும் அன்றைக்கு ரொம்ப சுவாரஸ்யமாக எல்லாம் படித்ததாக ஞாபகம் இல்லை.

இல்லை கட்டாயப்படுத்துவது தவறா?

அதுவும் எனக்குத் தவறெனப் படவில்லை. கட்டாயப்படுத்தாவிட்டால் பெரும்பாலானோர் பள்ளிக்கே போகமாட்டார்கள். அதுவும் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்கள் - அந்தக் கட்டாயத்தைத் தவறு என யாரேனும் சொல்வார்களா?

அதுவும் இதுவும் ஒன்றல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?

தமிழ்நாட்டில் மாற்றுக்கல்விகள் எதுவுமே இலவசம் இல்லை. அவற்றுக்குக் கொடுக்கப்படும் மாதாந்திர கல்வித் தொகை மாநிலக் கல்விக்குச் செலவிடப்படும் தொகையைவிட கணிசமாக அதிகமே. எனவே, மாற்றுமுறை உபயோகப்படுத்தும் மாணவர்கள், பொருளாதார ரீதியில் சற்றேனும் மேம்பட்டவர்களாக இருக்கவேண்டும். குறைந்த செலவான மாநிலக்கல்வியைவிட்டு மாற்றுமுறைக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில், அடுத்தடுத்த பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற ஆலோசனை பெற்றவர்களாக இருக்கவேண்டும்..

இப்படிப்பட்டவர்கள், தாங்கள் என்னென்ன படிக்கவேண்டும் என எல்லாவற்றையும் தேர்வு செய்யும் நிலை இருக்கிறதா?

ஆங்கிலப் பாடத்தை யாராலேனும் தவிர்க்க முடிகிறதா? நான் பொறியியல் படிக்கப்போகிறேன், எனக்குப் புவியியல் தேவையில்லை எனத் தவிர்க்க முடியுமா? அங்கே புவியியல் கட்டாயப்பாடம் ஆகிவிடுகிறதே?

ஆனால், தமிழைத் தவிர்க்க முடியும் - கட்டாயமாக இல்லாமல் இருக்கும் தற்போதைய நிலையில் - அவ்வாறே பலர் செய்துவருவதையும் அறிவேன்.

கட்டாயம் இல்லை என்ற பட்சத்தில் தமிழை ஒதுக்கி, பாடங்கள் படித்து, வயதானபிறகு தமிழின் அரிச்சுவடி படித்தால் ஏறுமா?

கட்டாயம் இல்லை என்று விட்டுவிட்டால், கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும், பாரதியும் தாசனும் கவிதை படைத்ததும், சுஜாதா ராஜேஷ்குமார் கதைகள் புனைந்ததும், முன்னாலும் பின்னாலும் நவீனத்துவம் கண்ட சிற்றிதழ்கள் தழைத்ததும், அன்ன யாவும் அறிந்திலர் ஆக ஒரு குழு வளரும். ஒரு தலைமுறைக்குப் பின், தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத தமிழர்கள் என்று ஒரு குழு உருவாகிவிடும். (ஏற்கனவே உருவாகி வருகிறது)

தமிழில் மட்டுமே எல்லா அறிவிப்புகளும் செய்யப்பட்டுவரும் இடங்களில் அவர்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்வார்கள். ஏற்கனவே இருக்கும் குழுக்கள் போதாது என இன்னொரு குழுவும் உருவாகும். தொலைக்காட்சிகளில் தமிழாகவும் இல்லாத ஆங்கிலமாகவும் இல்லாத நிகழ்ச்சிகளின் பெருக்கம் அதிகமாகும். இரண்டு மட்டத்தையும் யாராலும் திருப்தி செய்ய முடியாத நிலை உருவாகும். தமிழ்சார் ஊடகங்களின் வளர்ச்சி கணிசமாகக் குறையும். (வலைப்பதிவுகள் உள்பட:-)) இரண்டு மட்டங்களின் இடையே சமச்சீர் கெடும் - சுருங்கச் சொன்னால் மெல்லத் தமிழினிச் சாகும்.

தமிழைக் கட்டாயப்படுத்தாததை ஒரு தலைமுறைக்குப் பின் குறையாகவும், பிழையாகவும் சொல்ல நேரிட்டாலும் நேரிடும். அதைத் தவிர்க்க இப்போதே செயல்படுவது - ஏன் சற்று முன்பாகவே செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதே சரி.

என்னைப் பொறுத்தவரை தமிழ் கட்டாயமாகச் செய்யப்பட்டது, காலதாமதமாகவேனும் செய்யப்பட்ட நல்ல செயல்!

 

blogger templates | Make Money Online