Jan 28, 2008

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 11

 
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் - 11
 
கார்த்திக்கின் புகைப்படம் அமெரிக்கா சுரேஷின் உள்ளத்துக்குள் ஆயிரம் நினைவலைகளைக் கொண்டு வந்தது.
 
"டேய் சின்னப்பையனாடா நீ?"
 
"இல்லீங்க.. இருந்தாலும் இதெல்லாம் வேணாம்னு.."
 
"தப்பா நெனைக்காதே.. இதெல்லாம் இங்கே சகஜம்"
 
"வேணாங்க.. பழக்கமில்லீங்க"
 
வற்புறுத்தல் என்று தெரியாமலேயே அவனை கொஞ்சம் கொஞ்சமாகக் குட்டிச்சுவர் ஆக்கியது ஞாபகம் வந்தது.
 
"என்ன ஆச்சு சார் கார்த்திக்குக்கு?" நடுக்கம் தெரியாமல் சமாளிக்க பெரும்பாடு பட்டுவிட்டான்!.
 
"யாருக்குத் தெரியும்?  திடுதிப்புனு ஒரு நாள் ஒரு லெட்டர் எழுதி வச்சுட்டுத் தொங்கிட்டான் - என்னையும் அன்னிலே இருந்து நடைப்பிணமாக்கிட்டான்!" ப்ரொபஸரின் குரல் உடைந்து..
 
"லெட்டர்லே என்ன எழுதியிருந்தான்"
 
"சார் போலீஸ்லே நீங்க இன்பார்ம் பண்ணீங்களா?" ராகவன் காக்கிச்சட்டையை மறக்கவில்லை.
 
"போனவன் போயிட்டான். தற்கொலைன்னு தெளிவாத் தெரியுது.. எதுக்கு போஸ்ட் மார்ட்டம் அது இதுன்னு .. கமுக்கமா முடிச்சுட்டோம்.. எங்களுக்கும் அதிக உறவினர்கள் கிடையாது இல்லையா?"
 
"என்ன சார் படிச்சவரு- கதை எழுதறவரு-- மனோதத்துவ நிபுணர் -- நீங்களே இப்படிப்பண்ணா எப்படி சார்? இது கிரிமினல் அபென்ஸ் - உங்களுக்குத் தெரியாதா சார்?"
 
"வாஸ்தவம் தான் ராகவன்.. அப்புறம் அந்த டெசிஷனை பலமுறை யோசிச்சுப் பாத்தேன். நான் பண்ணது தப்புன்னு தெளிவாத் தெரியுது.. இப்ப வேணா ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துடட்டுமா?"
 
"சரி அதை அப்புறம் பாக்கலாம், லெட்டர்லே என்ன எழுதியிருந்தது?"
 
"அந்த லெட்டரே வச்சுருக்கேன்.. பாக்கறீங்களா?"
 
A5 சைஸுக்கு வெட்டப்பட்டு மக்கி யிருந்தது அந்தக்காகிதம்.
 
"சுரேஷின் இந்த முடிவுக்கு சுரேஷே காரணம். வேறு யாரைப் பொறுப்பாக்க முடியும்? - கார்த்திக் சுரேஷ்"  இவ்வளவுதான் எழுதியிருந்தது.
 
ராகவன் போலிஸ்காரப்பார்வையுடன் தடயத்தைப் பார்த்தவண்ணம் கேட்டான். "இது அவன் கையெழுத்துதானா? உறுதியாத் தெரியுமா?"
 
"அதில சந்தேகமில்லை"
 
"வழக்கமா என் முடிவுக்குன்னு தானே எழுதுவாங்க.. இதென்ன பேரைப்போட்டு எழுதியிருக்கான்?"
 
"அதைக்கூட யோசிக்காம இருப்பேனா? அவன் என்கிட்டே சின்ன வயசிலிருந்தே பேசும்போது நான்னு சொல்லமாட்டான்.. சுரேஷ்னுதான் தன்னை சொல்லிக்குவான்"
 
"ஒரு நிமிஷம்.. வீட்டுல பென்சில் இருக்கா?" பென்சில் வந்தவுடன் அதன் கிராபைட்டை பொடியாக்கி அந்த லெட்டரின் பின்புறம் தூவினான். "வேற பேப்பர்லே எழுதும்போது இதைக் கீழே வச்சு எழுதியிருந்தான்னா அதிர்ஷ்டவசமா சில எழுத்துக்கள் தெரியலாம் - அட.. இதைப்பாருங்க!"
 
புதிதாக சில எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தன..
 
ஆர்க்குட் வெப்ஸைட்.. யூஸர்: AAMBAL, pw: suresh.......................... கூடவே பெரிய கோபமான எழுத்துக்களில்..
 
KILL SURESH..............
*********************************
ஆம்பல்

மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006

 
புகைப்படத்தின் மீது கொஞ்சம் க்ளீனிங் லிக்விடைப் போட்டுத் துடைத்துக்கொண்டிருந்தான் அவன்.
 
"கவலைப்படாதேம்மா.. நம்ம ப்ளான் எல்லாம் கரெக்டா வொர்க் அவுட் ஆகுது.. ஒவ்வொருத்தனா வரானுங்க.. அவளுங்களும் வந்துட்டாளுங்கன்னா மொத்தமா போட்டுத் தள்ளிடலாம். எப்படியும் உன் பிறந்த நாளுக்குள்ள பழி தீத்துடுவேன்"
 
கிழிந்த உடை.. நீண்ட தாடி.. அடையாளமே தெரியாமல் இருந்தவனின் கண்களில் பனித்திருக்கும் நீர்த்துளிகளை ஒதுக்கிவிட்டுப்பாருங்கள் -- கார்த்திக் தெரிவான்!
***************************
 
பி கு: ஆளாளுக்கு கொத்துப் பரோட்டா போட்டுவிட்டு கதையை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு சரியான முறையில் தண்டனை கொடுப்பது எப்படி?  அவர்கள் ஆரம்பித்து எங்கெங்கோ வளர்ந்துவிட்ட கதையையும் கதாபாத்திரங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, "இந்தா டாமேஜையெல்லாம் சரி பண்ணு"ன்னு கொடுப்பதை விடச் சரியான தண்டனை இருக்கிறதா? எனவே, இப்போதுமுதல் இந்தக் கதை ரிவர்ஸ் கியரில் செல்லும். நான் வாங்கிய குத்துப்பாட்டையும் குமரன் பாட்டாகப் பார்க்கும் ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவிஷங்கரிடம் இந்த ஜோதியைத் திரும்பக்கொடுக்கிறேன், இனி அவர் பாடு. ஏற்கனவே இதை எழுதிய நண்பர்கள் உஷார்!

Jan 24, 2008

பொங்கல்தான் புத்தாண்டா?

ஏப்ரல் 14 ஆம் தேதி வரும் புத்தாண்டு புதிய சமஸ்கிருத ஆண்டையே துவக்கி வைக்கிறது, அதற்கும் தமிழுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது என்பதால் தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்ற கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

சொல்லப்போனால் எந்த நாளையுமே புத்தாண்டாகக் கொண்டாடலாமே.. எங்கோ படித்தேன், வருடத்தின் 365 நாளையுமே புத்தாண்டாக உலகின் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு பிரிவினர் கொண்டாடி வருகின்றனர் - என்று!

புத்தாண்டு என்பதை ஒவ்வொரு மதமும் தனித்தனியாக வகுத்தாலும், புத்தாண்டுக்கொண்டாட்டங்களின் ஆரம்பம் எங்கே துவங்கி இருக்கும்? ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே.

எனவே, ஏப்ரல் 14 ஐத் தமிழ்ப் புத்தாண்டாக பல வருடங்களாகக் கொண்டாடி வரும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீதும் எனக்குக் கேள்விகள் இல்லை.

ஏன், எனக்கு வேலை கிடைத்த நாளைக்கூட நான் வருடாவருடம் புத்தாண்டாகக் கொண்டாடலாம்!

ஆனால் பிரச்சினை அதுபற்றி அல்ல. கவர்னர் உரையில் பொங்கலைப் புத்தாண்டாக "அரசாங்கம்" அறிவித்திருப்பது பற்றியது.

இதில் கிளம்பும் கிளைக்கேள்விகள் ஆயிரம்.


1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

2. இனி சித்திரை முதல் தேதியைக் கொண்டாடக்கூடாதா? அப்படிக் கொண்டாடுபவர்கள் (பிறந்த நாள் கொண்டாடும் சன் டிவி, தமிழ் சினிமா ரிலீஸ்காரர்கள் உள்பட) தமிழ்த் துரோகியாக "அரசால்" அடையாளம் காட்டப்படுவார்களா?

3. தமிழ் மாதங்கள் சித்திரை வைகாசி எனத் தொடங்குமா? தை மாசி எனத் தொடங்குமா? பாடப்புத்தகங்கள் மாற்றப்படுமா? அடுத்த அரசாங்கம் இதை மாற்றாமல் இருக்குமா?

4. மேற்படி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் முந்தைய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தகவல் வித்தியாசம் இருக்குமே?

5. திமுக என்னும் கட்சியின் இந்தச் சித்தாந்தம் (அதுவும்கூட காலம் காலமாக வந்த சித்தாந்தமாகத் தெரியவில்லை) மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டதா? மக்களின் ஒருமித்த கருத்து அறிய எதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

6. இதே போல தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளும் அரசால் மாற்றி அமைக்கப்படுமா?

7. இவ்வாறு மாற்றி அமைப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி எதேனும் ஆராயப்பட்டதா?

8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
 
தமிழ் பேரைச் சொன்னால் மேல்கேள்வி கேட்கக்கூடாது, இந்துமத சடங்குகள் அசிங்கமானவை - அவற்றைக் கொண்டாடுவது தமிழனுக்கு இழுக்கு -- என்றெல்லாம் பலர் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தே இப்பதிவை இடுகிறேன். உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதைக் கொண்டாடு இதைக் கொண்டாடக்கூடாது என்றெல்லாம் சொல்ல அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். திமுக கட்சி இப்படி ஒரு பிரசாரம் செய்து அதன்மூலம் மக்களே சித்திரை முதல் தேதிக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் விட்டாலோ, பொங்கலன்று புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டாலோ யாருக்கும் எந்த ஆட்சேபமும் இருக்கப்போவதில்லை. ஆனால் அதையே அரசாங்கம் வற்புறுத்தினால் அது சர்வாதிகாரம்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

Jan 17, 2008

காமா சோமா பீமா!

பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ -- நீண்ட நாட்களுக்குப் பிறகு! ஆனால் என்னவோ தனிப்பட்ட பிரிவியூ மாதிரிதான் இருந்தது கூட்டம் - வேலை நாள் மதியம் என்பதாலும் வரலாறு காணாத மழை துபாய் ஷார்ஜாவை ஆட்டி இப்போதுதான் அடங்கியதால் கூட இருக்கலாம்.
 
கதையா? உப்புமாதான் கிண்டி இருக்காங்க!
 
சத்யா (ஹிந்தி) படத்தின் திரைக்கதையை அப்படியே சுட்டு, அதில் கொஞ்சம் தளபதி, கொஞ்சம் புதுப்பேட்டை அதன் மேல் கொஞ்சம் தாராளமாக நாயகன் அள்ளித்தெளித்து, தீபாவளி சரவெடி மாதிரி எந்நேரமும் துப்பாக்கி சப்தம் போட்டு தாளித்து (துப்பாக்கி இல்லாத வேளைகளில் கத்தியும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் - ஆனால் ரத்தம் முக்கியம்) ரௌடிக் கதைகளாக வரும் நேரத்தில் இறக்கி இருக்கவேண்டிய படம், இறக்கும் நேரம் தவறிவிட்டதால் சூடு ஆறிப்போய் பரிமாறி இருக்கிறார்கள்.
 
சத்யா கதைக்கும் பீமா கதைக்கும் ஒரே வித்தியாசம்தான். அதில் நாயகன் வேறு வழியில்லாமல் ரௌடி ஆவான். இதில் கம்பெனியின் க்ரெடின்ஷியல் எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, வாக் இன் இண்டர்வியூ போல ரௌடிக் கும்பலுக்குத் தேவையான ஆளை பேக் செய்து வேலையில் சேர்கிறான்! கஷ்டம்! விக்ரமின் உழைப்பும் நடிப்பும் அனாவசியத்துக்கு வீணாகி இருக்கின்றன!
 
நாயகிக்கு நாயகன் மேல் காதல் ஏற்பட ஒரே காரணம் அவன் கூரையைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததுதான். ஏன் வில்லன்களுக்கு இப்படிப்பட்ட டெக்னிக் தெரிவதில்லை? டூயட் நேரத்துக்கு கடனாக வந்து அழகாகப் போகிறார் திரிஷா.. சும்மா சொல்லக்கூடாது, பேட்டிகளில் மறக்காமல் சொல்லும் கெமிஸ்ட்ரி (அதை ஏன் வரலாறு புவியியல் என்றெல்லாம் சொல்வதில்லை?) நன்றாகத்தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 
 
பிரகாஷ்ராஜ் நல்ல ரௌடியாம், ரகுவரன் கெட்ட ரௌடியாம். ரெண்டு கூட்டமுமே யாரையாவது சுட்டுக்கொண்டும் வெட்டிக்கொண்டும்தான் திரிகிறது.. என்ன நல்லதோ கெட்டதோ!
 
லிங்குசாமியின் முந்தைய படங்களில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் இடைவேளைக்குச் சற்றுமுன் வரும்.. இந்தப்படத்தில் அது காத்திருந்து காத்திருந்து கிளம்பப்போகும் வேளையில் படம் முடிய 5 நிமிஷத்துக்கு முன் மட்டுமே வருகிறது.. பொறுமை செத்துப் போய்விடுகிறது!
 
நல்ல விஷயங்கள் ஒரு கைவிரலைத் தாண்டவில்லை - பிரகாஷ்ராஜ் நடிப்பு, விக்ரமின் உழைப்பு, திரிஷாவின் அழகு..பல பழைய பாடல்களை நினைவுபடுத்தினாலும், காதைப் படுத்தாத பாடல்கள்..அப்புறம்.. அப்புறம்.. ஒன்றுமில்லை!
 
கடைசி 5 நிமிஷம் நன்றாகத்தான் இருக்கிறது-- அதற்காக 2 மணி 55 நிமிஷத்தைப் பொறுத்துக்கொள்ள விரும்பினால் தாராளமாகப் பார்க்கலாம்.

Jan 16, 2008

மொக்கை - பின்நவீனத்துவ பாட்காஸ்ட்!

முதல்லேயே சொல்லிடறேன் - இந்த மொக்கைக்கு க்ரெடிட் எனக்கு கிடையாது!

நான் எந்த வயசிலே தங்குதடையில்லாம படிக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகம் இல்லை.. எப்படியும் 12 - 13 வயசாவது இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆனா இன்னிக்கு பாடத்திட்டத்தில 5வயசில படிக்கச் சொல்றாங்க.. என் மகள்கள் ராத்திரியில் தூங்கறதுக்கு முன்னால என்கூடச் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 10-15 நிமிடமாவது படிக்காமல் தூங்குவதில்லை என்பது மகிழ்ச்சியைத் தந்தாலும்..

நிறைய ஃபேரி டேல்ஸை அடுத்தடுத்துப் படித்ததால் குழம்பியதாலோ, எழுத்தாளரின்(?!) மகளாக இருந்து கொண்டு பழைய கதையைச் சொல்வது தகுதிக் குறைவு என்று நினைத்ததாலோ..

இப்படி ஒரு கலந்துகட்டி கதையைச் சொல்லியிருக்கிறாள். இதில் கதாபாத்திரங்கள் யாவர், கதையின் நீதி ஆகியவற்றை பின் நவீனத்துவமாகவும் சொல்லி என் சிந்தனையைக் கிளறிவிட்டாள்!

கதையை இங்கே க்ளிக்கிக் கேளுங்கள்!

இந்தக்கதையின் நீதி புரிந்தவர்கள் எனக்குத் தனி அஞ்சலிலும், மற்ற சாதா மக்கள் பின்னூட்டத்திலும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Jan 15, 2008

எழுதியதில் பிடித்தது - பாஸ்டன் பாலா அழைப்பேற்று

ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.

- எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு


இப்படி சர்வேசன் ஆரம்பித்த விளையாட்டு, பாஸ்டனார் மூலமாக என்னிடம் வந்திருக்கிறது.

2007 ல் 76 பதிவுகள் போட்டிருக்கிறேன் - எனக்குப் பிடிக்காத பதிவுகளை நான் வெளியிடவே மாட்டேன்.

பினாத்தல்களை டயரிக்குறிப்புகளாக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு பதிவு எழுதும்போதும், சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறேன்:

தப்பித் தவறி உள்ளே நுழையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டும், அதற்கு பலரகமாகவும் பதிவுகள் போடவேண்டும், ஒரு கட்டுக்குள் நுழைந்துகொண்டு - இதுதாண்டா இருக்கும் பினாத்தல்லே - என்ற முன் தீர்மானத்துக்கு யாரும் வந்துவிடக்கூடாது - கரடுமுரடான சொற்களை உபயோகித்து யாருக்கும் அன்னியம் ஆகிவிடக்கூடாது, ஒரு பக்கச் சார்பு சிந்தனையின் வீச்சை குறைத்துவிடும், நண்பர்களைவிட எதிரிகளையே அதிகம் உற்பத்திக்கும் - என் ஈகோ எஞ்சினாய் இருப்பதை விட வாசகர்களின் ஆர்வத்தை அதிகம் மதிக்கவேண்டும்-- வலைப்பதிவுகளில் இல்லாதோர் படித்தாலும் புரியக்கூடியவையாய், படித்தோமே என்று வருந்தவைக்காமல் இருக்கவேண்டும் -- அதே நேரத்தில், என் கருத்துக்களை சமரசம் செய்துகொள்ளவும் கூடாது..

விஷன் ஸ்டேட்மெண்ட் படிக்கிற மாதிரி இருக்கா.. முழுமையாக இவற்றைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெருமளவு முயற்சிக்கிறேன். ஆனால் சிலசமயங்களில் அவசரத்தில் உப்புமா போட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால், இப்போதெல்லாம் எனக்கே பிடித்திருந்தாலும்கூட, சில நண்பர்களிடமாவது முன்கூட்டியே ஒரு சிறு குறிப்பாவது சொல்லாமல், அவர்கள் கருத்தறியாமல் வெளியிடுவதில்லை என்ற ஒரு சுயதீர்மானம் - மே மாதம் உப்புமாப்பதிவுகளால் நிரப்பிய நேரத்தில் ஒரு அனானி பின்னூட்டத்தால் தூண்டப்பட்டு எடுத்தேன். 7 மாசமா உப்புமா போடறதில்லை. (இதுக்கெல்லாம் யாரும் பாராட்டு விழா நடத்தமாட்டீங்களாப்பா?)
சரி முதுகு சொறிந்துகொண்டது போதும். நான் எழுதியதில் எனக்கே பிடித்த பதிவு என்று ஒரு வகையைத் தேர்ந்தெடுப்பது மற்ற வகைகளுக்குச் செய்யும் துரோகமாக நான் நினைக்கிறேன். எனவே, வகைக்கொன்றாக எனக்குப் பிடித்ததை தேர்வு செய்கிறேன், மொத்தத்தில் எது உங்களுக்குப் பிடித்தது என்பதை பின்னூட்டமாகப் போடுங்களேன்.
நகைச்சுவை வகையில் - டிவி நிகழ்ச்சிகளைக் கிண்டலடித்த பதிவு, Wifeology Series, சக பதிவர்களைக் கிண்டலடித்த தமிழ்மணம் முகப்பு எல்லாம் இருந்தாலும், என் முதல் தெரிவு கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம்தான்.
ப்ளாஷ் - எனக்கு செல்லம். கற்றுக்கொள்ளும் போதே, இதில் இப்படி ஒரு வசதி இருக்கிறதே, இதை வைத்து இப்படி நககச்சுவை செய்யலாமே, இண்டராக்டிவ் ஆக ஆக்கலாமே - என்ற சாத்தியக்கூறுகள் மனதில் வர வர உடனடியாகச் செய்துவிடுவதால் அதில் தொழில்நுட்பக்குறைகளும் நிறைய இருக்கும் - என்றாலும் தொழில் நேர்த்தி அதிகரிக்க பின்னூட்டங்கள் உதவி செய்வதால் எனக்கு ப்ளாஷ் செல்லம். ப்ளாஷ் செய்வது எப்படி என்று விக்கிப்பசங்களாய் வகுப்பெடுத்தது, பட்டறையில் தொடர்ந்த சோதனை இவற்றையெல்லாம் ப்ளாஷ் ஆக ஏற்க மாட்டேன்.
மற்றபடி இந்த ஆண்டில் நிறைய ப்ளாஷ் போடவே இல்லை. சற்றுபின் செய்திகள், இல்லறத்தியலில் வந்த சைட் அடிக்கும் விளையாட்டு இவற்றை விஞ்சி முதலிடம் பிடிப்பது சிவாஜிக்கு 1024 விமர்சனம் கொடுத்த ப்ளாஷ். பொதுவாக விமர்சனங்களையும், குறிப்பாக சிவாஜியையும், பத்திரிக்கை விமர்சனங்களின் க்ளிஷே வார்த்தைகள் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்திருந்தேன்.
அரசியல் பற்றி நான் எழுதுவதை விட மற்றவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் காட்டுகிறேன்.
அனுபவம் -இலும் பெரும்பாலும் சுயதம்பட்டங்களே இருப்பதால் அதிகம் கவரவில்லை.
சினிமா விமர்சனங்கள் - படங்களின் தரமே விமர்சனங்களின் தரத்தைத் தீர்மானிக்கின்றது - ஆண்டு இறுதியில் பார்த்து, மிக பாதிக்கப்பட்டு எழுதிய தாரே ஜமீன் பர் விமர்சனம் எனக்குப்பிடித்ததாக இருப்பதற்குக் காரணம் படத்தின் தரம்தான்!
புனைவு.. தேன்கூடு போட்டிகள் இருந்தவரை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த கதைகள் ஏறத்தாழ நின்றே போய்விட்டன - சர்வேசன் போட்டி வைக்கும்வரை. அந்தப்போட்டிக்காக எழுதிய மூன்று கதைகளுமே மூன்று வகையில் எனக்குப் பிடித்தவை - காமத்திற்கும் கண் உண்டு -- உரையாடல்களை ஒதுக்கி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் முயற்சித்த முதல் கதை என்பதால், கடன் அட்டை - சம்பவங்களை மையமாக வைத்து ஓட்டியதால் (ஆனால் சிறுகதை என்பதே ஒரு சம்பவத்துக்குமேல் போகக்கூடாது என்ற ஆதாரவிதியை மீறிய கதைதான் - ஒருவேளை அதனால்தான் தோற்றதோ?), காட்டுவழி போற... புத்திசாலித்தனமான கதை என்பதால்..
ஆனால் இவை எல்லாமே கலந்து 10 நிமிடத்தில் எழுதப்பட்ட நம்பிக்கை சிறுகதை - மதுரை தினகரன் எரிப்புச் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டது - என் கணிப்பில் சிறந்தது, ஆமாம் என்ன ஆச்சு CBI விசாரணை? அநியாயம்! மக்கள் ஞாபகம் எவ்வளவு தேசல்?
சுயதம்பட்டத்துக்கு வாய்ப்பளித்த பாபாவுக்கு நன்றி கூறி, தேவ், உஷா, இராமநாதன் (டாக்டர் - உமக்கு 2007 கட்டுப்பாடு கிடையாது.. 2006, 2005 லே பல சூப்பர் பதிவு போட்டிருக்கே!) ஆகியோரை வரவேற்கிறேன்.

Jan 7, 2008

இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளே!

எச்சரிக்கை: இந்தப்பதிவைப் படிப்பது பெண்களின் மனநலத்துக்குக் கேடு

பொம்பளைங்களுக்கு என்ன தெரியும்? சும்மா படிச்சுட்டாப்பல ஆச்சா? எப்பப்ப ஆம்பளைங்களோட உணர்ச்சி தூண்டப்படும்னு தெரியுமா? கலாச்சாரத்தை அவங்களால தனியா காப்பாத்த முடியுமா? முதல்ல கலாச்சாரம்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியுமா?

பேதைப் பெண்கள்னு சும்மாவா சொன்னாங்க?

நியூ இயர் கொண்டாட்டம்னா என்னாங்க? நாம ஒரு பொது இடத்துல கூடுவோம், நம்ம பைக்க எடுத்துகிட்டு வருவோம். 9 மணியில இருந்து நல்லா கும்முன்னு சரக்கை ஏத்திக்கணும், 12 மணி ஆனதும் இல்லாத கலாட்டா எல்லாம் பண்ணிட்டு அப்பால காலியா இருக்க ரோட்டுல வரலாறு காணாத ஸ்பீட்ல பறக்கணும், எப்ப வீட்டுக்கு வந்து விழுந்தோம்னே தெரியாம வந்து விழணும். அட.. ரோட்லேயே எவன் மேலேயாவது இடிச்சாலும் சரி.. எலும்பு முறிஞ்சாலும் சரி எவனாச்சும் செத்தாலுமே சரி.. இது நம்ம கலாச்சாரம் ஆச்சே, விட்டுக் கொடுக்க முடியுமா?

சரி, நாம ஆம்பளைங்க நம்ம கலாச்சாரப்படி நடக்கும்போது இந்தப் பொம்பளைங்களுக்கு என்ன வந்துச்சு கேடு? அவங்க புத்தி ஏன் இப்படிப் போகணும்? எல்லாரையும் சொல்ல வரலை.. ஒண்ணு ரெண்டு பொம்பளைங்க இதே கலாச்சாரத்துல புகுந்து விளையாடறதுக்கு ஆசைப்பட்டா, என்ன வேணா நடக்கும்னு தெரிஞ்சும் வராங்கன்னா, அதுக்குத் தயாராத்தானே வரணும்? அதுதானே மேல்நாட்டுக் கலாச்சாரம்?

மேல்நாட்டுல என்ன நடக்குது? ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம எல்லாரும் தண்ணி அடிப்பாங்க, எல்லாரும் ஒண்ணா கூத்தடிப்பாங்க.. இங்க அப்படியா? நம்ம ஊர்லே அன்னிக்கு வெளிய வர பொம்பளைங்களோட ரேஷியோ கம்மி ஆச்சே.. அது தெரிய வாணாம்? எல்லாரும் நம்மையேதான் பாத்துக்கிட்டு இருப்பாங்கன்ற ஒணக்கை வாணாம்? அதுக்கேத்த மாதிரி ட்ரஸ் பண்ணிக்கிட்டு வரவாணாம்?

முழுசா பர்தா போட்டுக்கிட்டு வெளிய வந்தாலே கைவிரல் தெரியுதே, அது எவ்வளோ செக்ஸியா இருக்குன்னு கற்பனைய வளக்கிற ஆளுங்க நாம. நாம போதையில இருக்க நேரத்துல வெளிய நடமாடறது எவ்வளோ பெரிய குத்தம்?

பொம்பளைங்க நம்ம கலாச்சாரப்படி புடவை கட்டி, முழுசா போத்திகிட்டு வந்தா எதோ நூத்துல ஒன்னு ரெண்டு கற்பழிப்புதான் நடக்கும். மேல்நாட்டுக் கலாச்சாரம்னு கண்டபடி ட்ரெஸ் பண்ணிகிட்டு வந்து, நம்மளுக்கு ஆசையக் கிளப்பிவிட்டா.. தப்பு யார் பேருல சொல்லுங்க? சரிகா ஷா மாதிரி பொண்ணுங்க சுரிதார்தான் போட்டாங்க.. ஆனா துப்பட்டா காத்துல ஆடிச்சே.. அதைப்பாத்துதானே நம்மாளுக்கு ஆசை வந்தது? காத்தைக் குத்தம் சொல்லாம நம்மாளை அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டிருக்காங்க.. எவ்வளோ ஓரவஞ்சனை இந்தப் போலீஸுக்கு?

சரி சொல்ல வந்ததை விட்டுட்டு கச்சாமுச்சான்னு மேலே பேசிகிட்டே போறேன்..

நம்ம ஊர்லே இன்னும் கலாச்சாரம், பண்பாடு, கற்பு எல்லாம் ப்ரெஷ்னெஸ் குறையாம இருக்கறதுக்காக ஸ்ட்ராங்கா ப்ரிட்ஜுல வச்சு பூட்டி வச்சிருக்கோம். அதை மீறி ஒண்ணு ரெண்டு பேர் மேல்நாட்டுக் கலாச்சாரம் அது இதுன்னு ஆடிட்டு அப்புறம் நம்மளைக் குற்றம் சொல்லி ஒரு யூஸும் இல்லை.

மேல்நாட்டுக் கலாச்சாரம் இப்போதைக்கு Maleநாட்டுக் கலாச்சாரம்தான். இன்னும் பொம்பளைங்களுக்கு அதுக்கெல்லாம் தகுதி வரலை. நாம எல்லாம் பாத்துட்டு எப்ப பொம்பளைங்க மாடர்னா ட்ரெஸ் எல்லாம் போடலாம், ராத்திரி எத்தனை மணிக்கு வெளிய வரலாம், வரும்போது என்ன பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் தேவைன்னு பாத்துட்டு ஒரு அறிக்கை விடுவோம், அப்பால அவங்க அதுபடி செஞ்சுக்கலாம். அவங்களா எதாச்சும் முடிவெடுத்தா அப்புறம் விளைவுகளுக்கு நாம பொறுப்பில்லை.

அப்படி ஒரு விரிவான அறிக்கை வரவரைக்கும், எங்க தலைவர் பாட்டு கேட்டாவது திருந்துங்க பொம்பளைங்களே!

இப்படித்தான் இருக்கவேணும் பொம்ப்ளை
இங்கிலீஷு படிச்சாலும் இன்பத் தமிழ்நாட்டிலே
இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளே!

 

blogger templates | Make Money Online