ஸோனி டிவியில் ஒரு நிகழ்ச்சி - இந்தியன் ஐடல் - சிலர் பார்த்திருக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், இது சன் டிவியின் சப்த ஸ்வரங்கள் போலத்தான்.
ஆனால், நிகழ்ச்சியின் வடிவமைப்பு, அரங்கங்கள், நடுவர்கள், பார்வையாளரின் பங்களிப்பு ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி காட்டிய பிரம்மாண்டம், தவறிப்போய் சேனலைத்திருப்பியவர்கள் கூட தொடர்ந்த பார்வையாளர்களாய் மாற்றக்கூடிய திறன் படைத்தது.
வெறுமனே பாடும் திறத்தை மட்டும் மதிப்பிடாமல், குரலின் தனித்தன்மை, வழங்கும் முறை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து, பார்வையாளர்களின் குறுஞ்செய்தி வாக்குகளின் படி வாரம் ஒருவரை கழித்துக்கட்டி, கடைசியாக அதிக வாக்குகள் பெற்றவரை இந்தியன் ஐடல் ஆக தெரிமானம் செய்தார்கள்.
கடைசி நிகழ்ச்சிக்கு வந்த வாக்குகள் மொத்தம் 3.1 கோடி (உத்தரப்பிரதேச சட்ட சபைத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிகம்)
ஸ்டார் டிவியின் கோன் பனேகா க்ரோர்பதியின் வெற்றியும் உலகப்பிரசித்தம்.
இந்த நிகழ்ச்சிகளோடு போட்டி போடும் வகையில் தமிழில் ஒரு நிகழ்ச்சி கூட இல்லாதது ஏன்?
இப்போது இருக்கும் சில நிகழ்ச்சிகளும் பங்குபெறுவோர் மற்றும் பார்வையாளர்களை ஒருசேர அவமானப்படுத்துவதாகவே உள்ளன.
உதாரணம் "கமலஹாஸன் நடித்த விருமாண்டி படத்தின் கதாநாயகன் யார்?" போன்ற அறிவு பூர்வமான கேள்விகள்!
ஜாக்பாட் -(ஜெயா டிவி) - மக்களிடம் எடுக்கப்ப்பட்ட(?) ஒரு சாம்பிள் சர்வே முடிவு:
போலிஸ்காரரிடம் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? - நிறுத்தாமல் சென்று விடுவேன் (45%), லஞ்சம் கொடுப்பேன் (35%)
இதில் அறிவுபூர்வமாகக் கேள்விகள் கேட்கப்படும் ஒரு சுற்றில், பதில் அளித்து முன்னேறுபவர்களை விட, அடுத்தவர் பதில் அளிக்கமாட்டார் என சவால் விட்டு ஜெயித்து முன்னேறுபவர்களே அதிகம். இத்தனைக்கும் கேள்விகள் பத்தாம் வகுப்பு தரம்தான்!
(இந்த லட்சணத்தில் இது பெண்களுக்கு மட்டுமான நிகழ்ச்சியாம்! பென்களை அவமானப்படுத்துவதற்கு வேறு வழி தெரியவில்லையா?)
சில காலம் முன்னால் வரை கூட, தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல நல்ல கேம் ஷொக்கள் இருந்து வந்தது - சொல் இல்லை செல், வார்த்தை விளையாட்டு, வினாடி வினா, கோடீஸ்வரன் (ரி), லட்சாதிபதி.. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளையும் துரத்திவிட்டு கண்ணீர்த்தொடர்களே இன்று ஆக்கிரமிக்கின்றன.
எனக்கு விடை தெரியாத கேள்வி என்னவென்றால், தமிழர்களுக்கு கேம் ஷோ நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லையா அல்லது தயாரிப்பு - ஆராய்ச்சி செலவுகளினால் கட்டுப்படி ஆவதில்லையா?
பதில் இரண்டாவதாகத்தான் இருக்கும் என நம்ப விரும்புகிறேன்.
சினிமாவையும், தொடர்களையும் விட்டு வெளியே வந்து தரமான வினாடி வினா, மூளைக்கு வேலை நிகழ்ச்சிகள் தமிழுக்கு, தமிழர்களுக்கு தேவை.
எப்போ வருமோ?
Mar 13, 2005
தமிழில் Game Show நிகழ்ச்சிகள் -- எப்போ வருமோ?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 3 பின்னூட்டங்கள்
Mar 9, 2005
மொழி போர் - பின்னூட்டங்களுக்கு மரியாதை!
ரோசா வசந்த், வாய்ஸ் ஆன் விங்க்ஸ், சத்யராஜ்குமார், டோண்டு மற்றும் சங்கரபாண்டி ஆகியோரின் கருத்துக்களுக்கு நன்றி.
நான் நினைத்தது (பயந்தது) போலவே விவாதம் பழக்கப்பட்ட பாதையிலேயே சென்றுகொண்டுள்ளது.ஹிந்தி பேசும் காய்கரிக்காரியில் தொடங்கி ஐ.டி புரட்சி வரை எல்லாவற்றையும் தொட்டுச் செல்கின்றன பின்னூட்டங்கள்.
என் கருத்துக்கள்:
ரோசா, வட இந்தியர்கள் நங்க நல்லூரில் காய்கரிக்காரியிடம் ஹிந்தி பேசுவதில் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை. (நானும் நங்கநல்லூரில் இருந்த நான்கு ஆண்டுகளில் இப்படி கவனித்ததில்லை)
நான் குஜராத்திற்கோ, ஒரிஸ்ஸாவிற்கோ போகும்போது யாரிடமும் முதலில் ஹிந்தியில் தான் பேச ஆரம்பிப்பேன். அவர்களுக்கு மொழி புரியாத போதுதான் வேறு மொழிகளை (சைகை மொழி உள்பட) முயற்சிப்பேன்.
ஆங்கிலம் உலக மொழி என்ற கற்பிதத்தோடு ஸ்பெயினில் ஒரு ஹோட்டலைத்தேட மூன்று மணிநேரம் சுற்றியதும் உண்டு!
ஆனால், எனக்கு பழக்கப்பட்ட ஒரு மொழி, எதிராளிக்கும் பழக்கப்பட்டதாக இருக்குமோ என முயற்சிப்பதில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை.
ஒரிஸ்ஸாவில் ஹிந்தி பேசியதாலோ, ஸ்பெயினில் ஆங்கிலம் பேசியதாலோ நான் எந்த மொழித் திணிப்பும் செய்துவிட்டதாக உணரவும் இல்லை.
வாய்ஸ் ஆன் விங்க்ஸ்-இன் கருத்துக்களுடன் நான் பெரும்பாலும் உடன்பட்டாலும், நம் காய்கறிக்காரியின் மொழிப்புலமையை வைத்துத்தான் காஸ்மோபாலிடன் அந்தஸ்து நமக்குக் கிட்டும் என நிச்சயமாகக் கருதவில்லை.
எனக்கு இயல்பாக வருவது என் தாய்மொழியே. வெளியூர்க்காரர்கள் வரக்கூடும் என்பதற்காக நான் ஒரு கூடுதல் மொழியைக் கற்க வேண்டும் என்பது திணிப்புத்தான்!
மேலும், பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கப்படுவதால் மட்டுமே காய்கரிக்கரியும் ஆட்டோக்காரனும் ஹிந்திப்புலமை பெற்று, வந்தாரை மொழிக்கஷ்டப்படாமல் தடுத்து விட முடியும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி என் ஊரை வளமானதாக மாற்றிவிட முடியும் என்றும் நான் நம்பவில்லை.
அதே நேரத்தில் என் தாய்மொழி தெரியாதவனிடம் நீ என் நாட்டுக்கு வந்திருக்கிறாய், எனவே என் மொழியைக் கற்றுக்கொள் என்பதும் ஒருவகைத் திணிப்புதானே?
இப்படி இந்த வாதங்களில், இரு புறமுமே சிந்தனைக்குறிய கருத்துக்கள் இருக்கின்றன.
இதனாலேதான், எனக்கு மொழித்திணிப்பு குறித்து ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்கள் இல்லை என கூறியிருந்தேன்.
சத்யராஜ் குமார் கூருவதுபோல, இயல்பாக தேவைப்படும் மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். சட்டங்களோ, எதிர்ப்புக்களோ இப்படிப்பட்ட மாற்றங்களை நிகழ்த்திவிடவும் முடியாது, நிறுத்திவிடவும் முடியாது.
இதுவரை இந்த பிரச்சினையை உணர்வு பூர்வமாகவே ஆராய்ந்து வந்துள்ளோம். இப்போதாவது, உணர்சிகளுக்கு விடுமுறை அளித்து, அறிவு பூர்வமாக ஆராய்வோம். வேற்று மொழி கற்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா - இந்த நன்மை தீமைகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையாலும், புழங்கும் இடத்தாலும், கல்வி நிலையாலும் மாறக்கூடும் என்பதை நாம் மறந்துவிடவேண்டாம். அவரவர்க்கு அவரவர் முடிவே சரியானதாக அமையும்.
கவலைக்குறிய விஷயம் என்னவென்றால், தமிழன் தமிழனோடு தமிழில் பேசுவது பாவம் - ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேசுவதுதான் கௌரவம் எனக்கருதும் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவி வருவதுதான். இதை சட்டங்கள் போட்டோ, தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதின் மூலமோ சீர்திருத்திவிட முடியாது.
இந்த நிலைமையை சீர்திருத்துவதற்கு ஆவன செய்வதுதான் தமிழ் ஆர்வலர்கள் செய்யவேண்டிய முதல் பணி.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள்
Mar 6, 2005
மொழி Bore!
தற்போதைய சூடான பேசுபொருளான மொழி விவகாரத்தில், என் அனுபவங்களும் கருத்துக்களும்:
என் முதல் வேலையில், நான் ஹிந்தி கல்லாமல் பீஹாரின் உட்புற நிலக்கரி சுரங்கங்களில் ஏழாண்டு சிறைவாசம் அனுபவித்தேன்.
ஆனால், முதல் இரு மாதங்களிலேயே , கடைக்காரர்களிடம் 'பைஸா பாத் மே!" (பணக்கஷ்டம் வேறு!) என்னும் அளவிற்கும், சக தொழிலாளிகளிடம் "இஸ்கோ கோலோ - உஸ்கோ லகாவ்" என்னும் அளவிற்கும் பாண்டித்தியம் பெற்று விட்டேன். மேலும் ஆறு மாதங்களில் எந்த ப்ரவீனுக்கும், விஷாரத்துக்கும் சவால் விடும் அளவிற்கு மொழிப்புலமை பெற்றுவிட்டேன். (பேசுவதில், புரிந்துகொள்வதில்)
எனவே, என் சொந்த அனுபவப்படி, ஹிந்தி கற்காததால், நான் எந்த பாதிப்பிற்கும் உள்ளாக வில்லை என்பது நிஜம்.
நான் மட்டுமல்ல, இப்போது வட இந்தியாவில் இருக்கும், பல தமிழர்கள்,ஒரு ஹிந்தி வார்த்தையுமே தெரியாமல் ஜி.டி எக்ஸ்பிரஸ் ஏறியவர்கள் என்பதும் நிஜமே.
பள்ளியில் நான் படித்த ஆங்கிலம் எந்த அளவிற்கு எனக்கு ஆங்கிலத்தில் உரையாட உதவி செய்தது? பேசிப் பேசி அனுபவத்தால் மட்டுமே தடையற்ற ஆங்கிலம் சாத்தியமாயிற்று.
பள்ளியில் பயிற்றுவிப்பதால் மட்டுமே ஆங்கிலம் எனக்கு வந்துவிடவில்லை, பள்ளியில் பயிலாததால் மட்டுமே ஹிந்தி என்னை கை விட்டுவிடவும் இல்லை.
வேறு வழியே இல்லை எனும்போது, மொழி சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. (வளைகுடாவிற்கு வந்து மூன்று ஆண்டு ஆகியும் அரபி மொழியில் சில வார்த்தைகள் கூடத் தெரியாமல் இருப்பதற்கு முதல் காரணம் ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் வைத்துக்கொண்டு குப்பை கொட்ட முடிவதுதான்)
இதனாலேயே, தமிழகப் பள்ளிகளில் மூன்றாம் மொழியாக ஹிந்தி என்பதற்கு என்னிடம் ஆதரவு / எதிர்ப்பு கருத்துக்கள் இல்லை.
ஆனால், அரசியல் வாதிகள் இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு ஆடும் கும்மிகள் தாங்க முடிவதில்லை. ஒருவர் ஹிந்தி அரக்கியை வதம் செய்த மாவீரர்! இன்னொருவர் வழலைக்கட்டிப் பேரறிஞர்!
தமிழ்வளர்ச்சிக்கு இந்த அரசியலார் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - விட்டு விடுங்கள் - தமிழ் பிழைத்துப் போகட்டும்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 15 பின்னூட்டங்கள்