Jan 20, 2014

கரும்புனல் - Pre-Production விமர்சனங்கள்

இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபோதே பார்த்துக்கொண்டிருந்த இவர்கள் விமர்சிக்கிறார்கள். இவர்களால் நாவலில் சில மாறுதல்கள் நடந்தனதான். ஆனாலும் பல நல்லவிஷயங்களை இவர்கள் சொல்லியும் என் கனத்தமண்டை ஏற்கவில்லை :-)

இலவசக் கொத்தனார்:

இது பெனாத்தலின் முதல் நாவல் அல்ல. ஆனால் அவன் இது வரை எழுதியவைகளில் இந்தக் கதை கொஞ்சம் ஆத்மார்த்தமானது. ஏனென்றால் அவன் வாழ்க்கையின் பல சம்பவங்கள் இக்கதையிலும் வருவதுதான் காரணம். 

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவன் சித்திரிக்கும் அதன் இந்த முகம் நான் அறியாத ஒன்று. சினிமா, மென்பொருள் எனத் தெரிந்த துறைகள் சார்ந்த புத்தகங்கள் சில தமிழில் வந்திருக்கின்றன. பெரும்பாலும் மேலோட்டமாக, பொதுவான கருத்துகளுக்கு பங்கம் வராதபடி எழுதப்பட்டவை என்றே தோன்றக் கூடிய புத்தகங்கள். ஆனால் நிலக்கரிச் சுரங்கங்களை பின்புலமாக வைத்துக் கொண்டு இவன் பின்னி இருக்கும் கதையும் சரி, அந்தக் களனும் சரி, தமிழுக்குப் புதிதே.

உபிச என்ற தகுதியால் எழுதிய உடனே, எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே என்று கூட சொல்லலாம், படித்துவிட்டேன். துறை சார்ந்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்லி இருக்கலாம் என்ற ஒன்று மட்டுமே என் விமர்சனம். அது கதையின் போக்கை தேங்கச் செய்யும் என்பதுதான் பதில் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் விந்திய மலைப்பகுதியில் மருந்து விற்கும் நாஞ்சிலின் ஹீரோ திடீரென்று புறநானூற்று மேற்கோள் காட்டவில்லையா? அதைப் போல இன்னும் பல தகவல்கள் சேர்த்திருக்கலாம்.

கதைக்களனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விறுவிறுவெனப் படிக்கக்கூடிய நாவல். எழுதியவன் என்னவன் என்பதையும் தாண்டி வாங்கிப் படிக்க என் சிபாரிசு இந்தப் புத்தகம்.

Suresh Babu புத்தகக்கண்காட்சியில் பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்டா!



என். சொக்கன்:

எஞ்சினியரிங்கில் நான் படித்ததும் (கிட்டத்தட்ட) மெக்கானிக்கல் நுட்பங்கள்தான். ஆனால் நான் சரியான மக்கானிக்கலாக இருந்தபடியால், வன்மையற்ற மென்பொருள் துறைக் கரையில் ஒதுங்கிவிட்டேன்.

(பெனாத்தல்) சுரேஷ் அப்படியில்லை. தைரியசாலி. வன்பொறுப்புகள் பலவற்றை ஏற்றுத் தாண்டி முன்னுக்கு வந்தவர்.

அவருடைய அனுபவங்களை அவ்வப்போது சொல்வார். சிலது காமெடியாக இருக்கும், பலது நம்பமுடியாமல் இருக்கும். ‘நல்லா ரீல் விடறார்’ என்று நினைத்தபடி, ‘சூப்பரா எழுதறீங்க’ என்போம்.

பின்னர் ஒருநாள், த்ரில்லர் நாவல்கள் இரண்டு எழுதினார். விறுவிறுப்புக்குக் குறைவில்லாத நல்ல பல்ப்புகளாக அவை இருந்தன. ரசித்துப் படித்தேன்.

அடுத்து, அதற்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு நாவல் எழுதினார். இதிலும் விறுவிறுப்பு இருந்தது. ஆனால் அவர் சொன்ன அந்த ‘வன்’ அனுபவங்கள் இதில் ஏராளமாக இடம் பெற்றிருந்தன. ஒரு புதிய களம், வித்தியாசமான மனிதர்கள், அவர்களுடைய உணர்வுகள் என்று கலவையாக இருந்தது. இவர் சொன்னதெல்லாம் நிஜம்தானோ என்று நினைக்கும்படி எழுத்து.

அப்போதுதான் அவரிடம் கேட்டேன், ‘என்னய்யா, இலக்கியவாதி ஆகற உத்தேசமா?’

‘ஏன்? அவ்ளோ மோசமாவா இருக்கு நாவல்?’ என்றார் சட்டென்று.

நல்லவேளை, அவர் ஒழுங்காகதான் இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். கொஞ்சம் அசந்தாலும் வறட்சி தாக்கிவிடக்கூடிய ஒரு சப்ஜெக்டை வாசிக்கும் சுவையோடு தருவது சாதாரண விஷயமில்லை. சுரேஷ் அதைச் சாதித்திருக்கிறார் இந்த நாவலில்.

இதற்குமேல் பேசினால் கதையைச் சொல்லிவிடுவேன், சொன்னாலும் பிரச்னையில்லை என்பது வேறு விஷயம், இந்த நாவலின் பலம் எழுத்தில்தான், முடிச்சில் அல்ல.

ஆகவே நண்பர்காள், பெனாத்தல் சுரேஷ் என்று நீங்கள் அறிந்த ராம்சுரேஷின் நாவல், ”வம்சி” பதிப்பக வெளியீடாக வந்துள்ள ’கரும்புன’லை நீங்கள் நம்பிக் குடிக்கலாம், ஐ மீன், படிக்கலாம். (மனப்) ப்ரீத்திக்கு நான் கேரண்டி.



டைனோபாய்:

கரும்புனல் (நாவல்):

ஒரு நாவல் எழுதும்போதே படித்து பார்ப்பது தனி சுவை! ஒரு எழுத்தாளர் அடுத்து தன் பாத்திரங்களை எங்கே செலுத்துகிறார், எப்படி காட்சிகள் மாற்றி சுவாரஸ்யங்களை கூட்டுவார் என்று ஒரு காத்திருப்பு நமக்குள் தொற்றிக்கொள்ளும். இதனாலேயே வார பத்திரிக்கைகளில் வந்த பல கதைகள் சென்ற தலைமுறையினரை தீவிர வாசகர்களாக மாற்றி இருந்தது என்றே எண்ணுகிறேன். தோசைக்கல்லில் அடுத்த தோசை வார்க்கும் போதே அவசரமாய் சாப்பிட்டுவிட்டு அடுப்பையும் அம்மா முகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சுவாரஸ்யத்தை வழங்கிய (பெனாத்தல்) (ராம்)சுரேஷுக்கு நன்றி!

சுரேஷின் முந்தைய நாவல்களிலும் கதைகளிலும் இல்லாத முக்கியமான விஷயம் கதையின் டீட்டெயிலிங். புதிய களனில் பேருந்துகளில்புகைவண்டிகளில் புகை கக்கிக் கொண்டிருக்கும் ஆலைகளுக்குள் நம்மை அழைத்து செல்கிறார்! அங்கு ரத்தமும் சதையுமாய் வாழும் மனிதர்களையும் அவர்களின் இயந்திர அழுக்குப்படிந்த இதயங்களையும் அங்கங்கே பூதக்கண்ணாடியில் அருகில் காட்டி அச்சுறுத்துகிறார்! இது ஏதோ வட இந்தியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் நடைபெறுவது மட்டுமல்ல. நம் அலுவலகங்களில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அழுக்குகளைத்தான் பெரிதாக்கி நம் முன்னே கொண்டுவருகிறது கரும்புனல். களம் புதிது, பாத்திரங்கள் புதிது என்றெல்லாம் பல நற்குணாதியங்கள் இருந்தாலும் நம்முள் இருக்கும் மனச்சாய்வுகளை விளக்கும் போது முகத்தில் அறைந்தாற் போன்ற உணர்வே ஏற்படுகிறது!

இது சுரேஷின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களில் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார். அப்படியென்றால் அலுவலகத்தில் மறைந்திருந்தது அவர்தானா? அந்தத் தருணங்களை விளக்கும் போது நமக்கு வியர்க்கிறது! தப்பி ஓடும் இடங்களில் நம் இருதயமும் படபட்ப்புடன் பதைபதைக்கிறது. உயிர்கள் துண்டாடும் போது கண்ணெதிரே உதிரம் கொட்டுவதைப்போல முதுகுதண்டு சில்லிடுகிறது! இப்படி வாசகனையும் தன்னோடு சேர்த்து பயணிக்கவைப்பதுதான் எழுத்தாளரின் வெற்றி!

இந்த கதையை அவர் எழுதிய போதே இதை ஒரு திரைக்கதையாக எழுதச்சொன்னேன்! ஏனோ அது நடக்கவில்லை! ஒரு நல்ல திரைக்கதைக்குரிய அனைத்து மூலகங்களும் இந்த நாவலில் இருக்கிறது! சில பாத்திரங்களின் பின்கதையையும் ஆலையினைப்பற்றியும் சில கதாபாத்திரங்களின் விவரணைகளையும் இன்னும் செழுமை படுத்தி இருக்கலாம் என்றே எண்ணுகிறேன்! இந்த நாவலுக்காய் பல விஷயங்களை தேடி தன் எழுத்தை செழுமைப்படுத்தினார்! வெளிநாட்டில் இருந்து மண்ணின் மணம்கமழும் ஒரு நாவலை படைப்பது கடினமானதுதான்.

ஆனால் இந்த ஒரு நாவல் நமக்கு ஒரு புதிய சுரேஷை காட்டி இருக்கிறது! சுரேஷின் பலம் இத்தகைய கதைகளில்தான் இருக்கிறது! இது அவருக்கு ஒரு புதிய கதவுகளை திறக்கும் திறவுகோலாவே பார்க்கிறேன்! தன் அடுத்த நாவல்களிலும் படைப்புகளிலும் மேலும் செம்மையான படைப்புகளை வழங்கலாம்!

நடந்து கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் கரும்புனல் எந்தவித பெரும் விளம்பரமும் இன்றி நல்ல விற்பனையை ஈட்டி இருக்கிறது! நாவலின் நம்பகத்தன்மையும் சுரேஷின் நடையுமே இதற்கு முக்கிய காரணம்.

***

படம் நன்றி டைனோ + - http://media2.artspace.com/media/sebastiao_salgado/coal_mining_dhanbad_bihar_india/sebastiao_salgado_coal_mining_dhanbad_bihar_india_1024x768.jpg

Jan 13, 2014

கரும்புனல் - விமர்சனம் - சித்தார்த்

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என நினைத்த கட்டுரைக்கான குறிப்புகள் இவை. இனியும் இதை தள்ளிப்போட வேண்டாமென குறிப்புகளாகவே பகிர்கிறேன்… [சுரேஷ் மன்னிப்பாராக]


கங்குல் வெள்ளம் : கரும்புனல் குறித்து.

* இது மிக சம்பிரதாயமான, தேய்வழக்கான ஒரு வரியாக தோணலாம். ஆனால் உண்மையிலேயே, கரும்புனல் நாவலை வாசித்த இரவு சரியாக தூக்கம் பிடிக்கவில்லை. அப்படி ஒரு அலைகழிப்பு மனதில். மனித மனதின் ஆகக்கரிய பகுதி ஒன்றை சந்தித்துவிட்டு திரும்பிய அயற்சி. 

* நாவலில் அத்தனை களங்களுமே எனக்கு புதியது. ஆனால் மிக எளிமையாக, அதிக அந்நியத்தன்மை தோன்றாதவாறு அவற்றை அறிமுகம் செய்கிறார் சுரேஷ்.

* இந்நாவலின் அடிப்படை கட்டுமானத்தை coming of age வகையாக கொள்ளலாம். அனுகுண்டே வெடித்தாலும் அரை வரிக்கு மேல் உணர்ச்சிவசப்படாத (நன்றி : ஜெயமோகன்) இளைஞன் வெடித்தழும் இடத்தில் நாவல் முடிகிறது. இந்த பயணமே நாவல் என்று தோன்றியது. 

* நாவலை எழுதிய சுரேஷுக்குமே மேற்சொன்ன பயணத்தை போட்டு பார்க்கலாம். எழுத்தின் மீதான பிடியை தளர்த்தாமலேயே நாவலை நகர்த்துகிறார். எங்கும் ஒரு கச்சிதத்தன்மையும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாதென்ற கட்டுப்பாடும் தெரிகிறது. காதல், சதியாலோசனை, சாதீய கீழ்மைகள், சுரண்டல்கள், அறச்சீற்றம், தற்காலிக வெற்றி, கலவர பதட்டம் என அனைத்தையும் மிகுந்த கட்டுபாடுடைய மொழியில் தான் சொல்கிறார். ஆனால் நாவலின் உச்சக்கட்டம் நெருங்க நெருங்க.. அந்த பிடி தளர்கிறது. அவரையும் மீறி நாவல் பயணிக்கும் இடம் அந்த முடிவு தான் என்று தோன்றியது. 

* சாதீயம் என்பதை சட்டென உணர்ச்சிவசப்படும் கிராமத்து மனிதர்களின் பின்னணியிலேயே பார்த்த எனக்கு இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் படித்தவர்களின் உயர்மட்ட அதிகாரிகளின் நுட்பமான, கோரமான சாதீயமுகம் அதிர்ச்சியளித்தது. 

* இந்நாவலில் சாதிமேன்மையை விட ஊழலே ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறதென்றாலும், இதன் சாதீய முகமே மீண்டும் மீண்டும் மனதை அலைகழித்தது. ஏன் என்று சரியாக சொல்லத்தெரியவில்லை. May be because while corruption merely shows indifference, casteism cares enough to kill. 

* ஒரு குறுந்தொகை வரி மீண்டும் மீண்டும் மனதில் வந்துகொண்டே இருந்தது. கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே…. இரவெனும் நீர்பரப்பு கடலை விட பெரியது… அந்த மக்கள் இரவினும் கரிய கடலைத்தான் நீந்திக்கடக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்… 

* நான் வாசிக்கும் பொழுது சுரேஷ் இந்த நாவலுக்கு பெயரிட்டிருக்கவில்லை. கங்குல் வெள்ளமே இந்நாவலுக்கான சரியான தலைப்பாக இருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் சுரேஷின் பெயர் தேர்வு இன்னும் கச்சிதம். சுரேஷுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… 
சித்தார்த்

விரிவான விமர்சனத்துக்கு நன்றி சித்தார்த்.

Jan 11, 2014

கரும்புனல் - முன்னுரை - வெங்கடேஷ்

புத்தகக் கண்காட்சியில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் “கரும்புனல்” நாவலுக்கு கல்கி ஆசிரியர் நேசமுடன் வெங்கடேஷ் எழுதித்தந்த முன்னுரை.


தொடரும் வலி!

தமிழில் சூழலியல் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த நாவல்கள் வெகுகுறைவு. தனிமனிதர்களின் மனப் பிரச்னைகளே பெரும்பாலும் கற்பனாவாத இலக்கியமாகப் பேசப்படும் நிலையில், பல்வேறு களங்களில் நாவல்கள் படைக்கப்படுவது அவசியம். குறிப்பாக சமகாலப் பிரச்னைகள். இன்றைய தமிழகமும் இந்தியாவும் எண்ணற்ற புதிய சிக்கல்களால் நிரம்பியிருக்கிறது. நவீன மனிதன் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் புதுவிதமான குழப்பங்களையும் சிதைவுகளையும் தொடர்ந்து இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திவருகின்றன. தமிழகத்துக்குள்ளேயே பல முக்கிய பிரச்னைகள் புனைகதையில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் வெளிமாநிலங்களின் பிரச்னைகள் வெகு அரிதாகவே தமிழ் படைப்புக்களில் தொடப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் வாழும் எழுத்தாளர்கள் எழுதினாலும் தமிழகத்தைப் பற்றியும் தம் இளமைக்கால பொற்கணங்களையும் நினைவுகளையுமே அதிகம் எழுதியிருக்கின்றனர். தாம் வாழநேர்ந்த பகுதியின் வரலாற்றையும் அரசியலையும் உள்வாங்கிக்கொண்டு தரமான படைப்புகள் தந்தவர்கள் வெகுசிலரே. இந்திரா பார்த்தசாரதியின் தில்லி; அசோகமித்திரன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரின் ஹைதராபாத் ஆகியவை இந்த வகையில் முன்னோடிகள். 

அதேபோல், நமக்குச் சூழலியலும் நகரமயமாதலும் அதன் அரசியல், சமூக கலாசார சரிவுகளும் அதிகம் அறிமுகமில்லை. நவீன நுகர்வுகலாசாரத்தின் குழந்தைகள் நாம். நம்மைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கேள்விகள் கேட்கும் துணிவு தொலைத்தவர்கள் நாம். சூழலியல் பிரச்னைகள் பேசப்பட்ட அளவில், சா.கந்தசாமியின் ‘சாயாவனம்,’ விட்டல்ராவின் ‘போக்கிடம்’ ஆகியவை முன்னோடிகள். ஆனால், தமிழ் எழுத்துப்பரப்பில் வடகிழக்கு இந்தியப் பகுதிகள் அதிகம் வந்ததே இல்லை. பி.ஏ.கிருஷ்ணனின் ‘கலங்கிய நதி’தான் இதில் ஆரம்பம்.

ராம்சுரேஷின் கரும்புனல், அதன் வளமான தொடர்ச்சி. இதில் பழைய பீகார் (ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்புள்ள பீகார்)தான் களம். அங்கே நிலக்கரி தோண்டுவதற்குத் தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்த வரும் சந்திரசேகரன் என்ற வழக்குரைஞரின் பார்வையில், அங்குள்ள அரசியல் ரீதியான, சாதி ரீதியான ஒடுக்குமுறைகளும் ஏமாற்றல்களும் சுரண்டல்களும் வெகு அழகாக முன்வைக்கப்படுகின்றன. மோசமான ஊழல் விளையாட்டில், எப்படி ஒவ்வொருவரும் பகடைக்காய்களாக மாற்றப்படுகிறார்கள் என்ற வலிநிரம்பிய உண்மை வெளிவருகிறது. 

இன்றைக்கு நாடெங்கும் பேசப்படும் நிலக்கரிச் சுரங்க ஊழல் என்பதன் ஆரம்ப காலகட்டத்தை இந்நாவலில் தெரிந்துகொள்ளலாம். மனிதர்களின் பேராசையினால், நமது வளங்கள் கொள்ளை போகின்றன. ஒவ்வொரு அதிகாரியும் எப்படியெல்லாம் நிலங்களை தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளலாம், ஏழை எளியோர்களான கிராம மக்களைச் சுரண்டலாம், நடுத்தெருவில் நிற்கவைக்கலாம் என்று திட்டம் போட்டே பணியாற்றுகின்றனர். விளைவு, வேறு வழியில்லாமல் அவர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய துர்நிலை. 

இந்நாவலில் வரும் சின்னச் சின்னப் பாத்திரங்கள் மனத்தைத் தைக்கின்றன. பொக்காரோ ஸ்டீல் ப்ளான்ட்டுக்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு நடுக்காட்டில் டீக்கடை நடத்தும் கிழவர், எதிர்ப்பைத் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று மோதும் லோபோ, கையாலாகாத டர்க்கி என்று புனையப்பட்டுள்ள பாத்திரங்கள், நாவலின் பாதிப்பைக் கூட்டுகின்றன. 

பீகாருக்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி அரசியல், எவ்வளவு தூரம் வன்மமமாக மாறி, ஒரு கிராமத்தையே அழிக்கத் துணைசெய்கிறது என்பதைப் படிக்கும்போது, அச்சம் அடிவயிற்றில். இத்தகைய சூழ்நிலைகளில் எவ்வளவுதான் நல்லவனாக ஒருவன் இருந்தாலும் என்னவிதமான நல்ல பலன்களை மக்களிடம் ஏற்படுத்த முயன்றாலும், அவை அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம். துளி பலனும் கிட்டுவதில்லை. மேன்மேலும் வெறுப்பும் எரிச்சலும் வன்மமுமே பெருக்கெடுக்கின்றன. 

இக்கதை நடப்பது 1995 காலகட்டம். அன்றைய சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் பெருமளவில் மாறிவிடவில்லை என்பதை பீகார் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து பின்பற்றுவோர் புரிந்துகொள்ளலாம். சாதி அரசியல் இன்று அடைந்திருக்கும் அவலம், சொல்லில் எழுத வழங்காது. இவையெல்லாம் மக்களின் பெயரால், மக்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று நினைக்கும்போதே, கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கடைசியில் நேர்மையாளர்கள் என்று யாருமே இருக்கமுடியாது, நடுநிலைமை என்ற ஒரு நிலைப்பாடு இருக்கவே முடியாது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

இந்நாவல், பல விஷயங்களை விவாதிப்பதற்கான களத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இதில் எழுதப்பட்டதைவிட, வெளியே இருக்கும் செய்திகளும் வலிகளும் அதிகம். அதைப் பற்றி யோசிக்கவும் பேசவும் இன்றைக்கு அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது.  நீரோட்டம் போன்ற நடை, பெரும்பாலான விஷயங்களை உரையாடல்களின் மூலமே இந்நாவல் எடுத்துச் சொல்கிறது. அடுத்து, அடுத்து என்று வேகமும் விறுவிறுப்பும் இந்நாவலின் அணிகலன்கள். 

பழைய பீகாரைத் தமிழில் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த ராம்சுரேஷுக்கு வாழ்த்துக்கள்.

நேசமுடன்
ஆர்.வெங்கடேஷ்
rvrv30@gmail.com
30.12.2013

வெங்கடேஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி!

Jan 8, 2014

கரியும் கசடுகளும் கொஞ்சம் கண்ணீரும் - கரும்புனலின் கதை

May you live in interesting times என்று ஒரு சீனத்துச் சாபம் ஒன்று உண்டாம். சிலபல வருடங்களுக்குப் பிறகு கதையாகச் சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும் பல விஷயங்கள் வாழும்போது கொடுமையாகத்தான் இருக்கின்றன. 

ராஜீவ் காந்தி கொலையானபொழுது பீஹாரின் ஒரு மூலையில் இருந்தேன். என் தலைவர் தமிழர்களால் கொல்லப்பட்டார், எனவே நாம் தமிழர்களைக் கொல்வோம் என்பதற்கு மேல் வேலை செய்யாத மூளைக்காரர்களால் நிரம்பிய ஊர். இத்தனை வருடம் கழித்து பூட்டிய அறைக்குள் கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டு பயந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக மிச்சமிருந்தாலும்,  உண்மையா பொய்யா என்று தெரியாத வதந்திகளால் வெளியே நடந்த கலவரத்தைவிட உள்ளுக்குள் நடந்த கலவரத்தை வாழும்போது interesting ஆகத்தெரியவில்லை. 

ரயிலி ஏறி, ஜன்னலோர சீட் பார்த்து அமர்ந்தவனை எழுப்பி பளாரெனக் கன்னத்தில் அறைந்து பர்ஸைப்பிடுங்கிக்கொண்டு சென்ற கதை, இப்போது மட்டும்தான் Interesting.

டிசம்பர் ஆறாம்தேதி எதோ எங்கேயோ கலவரம் என்று அரைகுறைத் தகவல்களோடு அயோத்திக்கு மிகப்பக்கமாக ரயிலில் செல்லும்போது எரியும் குடிசைகளைப்பார்த்தது, சுரங்கச் சாலையைக் கடக்கும்போது காரணம் சொல்லாமல் போலீஸால் கைது செய்யப்பட்டது, ஆற்றில் குளிக்கும்போது சாம்பல் உள்ளே சென்று வாந்தியாக வெளியே வந்து 3 நாட்கள் சலைன் உதவியோடு மட்டுமே வாழ நேர்ந்தது,  பீஹாரைப் பிரிக்க ஜார்க்கண்ட்காரர்கள் கலவரம் செய்ய நடுத்தெருவில் ராத்திரியில் நின்றது, ஓட்டிச்சென்ற ஜீப் ஆளரவமில்லாத அதலபாதாளத்தில் உயிரைவிட்டது..

அமோகமாகவே சபிக்கப்பட்டிருக்கிறேன், Interesting காலங்களில் வாழ.

கரும்புனல் அட்டை
வீடு, குறுகிய நட்புவட்டம், கல்லூரி என்று “பழம்” வாழ்க்கை வாழ்ந்துவந்த எனக்கு, நிலக்கரிச் சுரங்க நகரியங்களில் தனியாக வாழ நேர்ந்தபோது ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி கொஞ்சநஞ்சமானது இல்லை. ஊழலை எப்படியெல்லாம் விஞ்ஞானமாக்கலாம் என்றே ஏகதேசம் சிந்திக்கும் மேலதிகாரிகள்;  நுனிநாக்கு ஆங்கிலம் நாகரிகமான தோற்றம் உள்ளே சாக்கடையான மனது கொண்ட எஞ்சினியர்கள்; கழட்டும் எஞ்சினை ஒருவேளை கீழ்ஜாதிக்காரன் தொட்டிருப்பானோ என்றெல்லாம் யோசிக்கும் சுரங்க ஊழியர்கள்; விவசாயம் செய்வதையும் கலவரத்தில் எதிர்மதக்காரனைப் போட்டுத்தள்ளுவதையும் ஒன்றேபோல நினைக்கக்கூடிய மக்கள்... எந்தக்கல்லூரியும் சொல்லித்தராத வாழும் கலையை எனக்குச் சொல்லித்தந்தது பீஹார்.

ஆனால், அந்தக்காலம் மட்டும் அல்ல.. எழுதிப்பழக்கமில்லா என்னை ஒவ்வொரு எழுத்தாக அன்பாகவும் அடித்தும் திருத்திவரும் நண்பர் குழாம் அமைந்திருக்கும் இந்தக்காலமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நாம ஒண்ணை எழுதினா அது ஒழுங்காத்தான் இருக்கணும் - என்று குழுவாகச் செயல்பட்டு ஊக்குவிக்கும் உடன்பிறவா சகோதரர்கள் இலவசக்கொத்தனார், டைனோபாய்; நீளமாக எழுதவே சோம்பேறித்தனப்பட்ட என்னை விர்ச்சுவல் பிரம்பால் அடித்து முதல் நாவல் எழுத வைத்த பா.ராகவன்; எவ்வளவு வேலை இருந்தாலும் நான் அனுப்பியதைப்படித்து உடன் திருத்தம் சொல்லும் சொக்கன்; தன்னைத் திட்டியே எழுதினாலும் புன்சிரிப்போடு கடக்கும் என் இல்லாள்..இதுவும் சுவாரஸ்யமான காலம்தான். ஆனால் கொடுமைகள் இல்லாத, சுகமான சுவாரஸ்யம்.

இந்த நாவலை எழுத எந்தப் பிரயத்தனமும் தேவைப்படவில்லை. பெரும்பாலும் நடந்த சம்பவங்களை ஒரு கதைச் சரட்டில் கோப்பதைத் தவிர.  

--கரும்புனல் நாவலில் பதிந்திருக்கும் என்னுரை.
--சில பழங்கதைகளுக்கான லிங்க் கொடுத்திருக்கிறேன்.
--வம்சி பதிப்பக ஸ்டாலில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் 

 

blogger templates | Make Money Online